January

January

நடிகர் திலகம் ரகுராமின் ராஜினாமா நாடகம் முடிவுக்கு வந்தது – தமிழோ சிங்களமோ அதிகாரம் நன்றாக நாடகம் போடும் !

நடிகர் திலகம் ரகுராமின் ராஜினாமா நாடகம் முடிவுக்கு வந்தது – தமிழோ சிங்களமோ அதிகாரம் நன்றாக நாடகம் போடும் !
பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரகுராமின் பதவி விலகல் நாடகம் முடிவுக்கு வந்துள்ளது. தேசம்நெற்றில் குறிப்பிட்டது போலவேஇ மீண்டும் ரகுராம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடாதிபதியாக தொடரவுள்ளார். கலைத்துறையின் காமுகப் பேராசிரியர்களுக்கு இருந்த பதட்டங்கள் தணிந்தது. பீடாதிபதி ரகுராம் இருக்கும் வரை அவர்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை. கடந்த காலங்களில் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக மாணவர்கள் மேற்கொண்ட போராட்டங்கள் எடுபடவில்லை. பல லட்சம் சம்பளத்தோடு அதிகார மையங்களாக இவர்கள் மாணவியரிடம் பாலியல் லஞ்சம் கோரி முகர்ந்து எறிந்துவிடுகின்றார்கள். பல பெண்கள் தற்போதைய நிலையால் அச்சமடைந்து போயுள்ளனர். முத்தையா யோகேஸ்வரி வலிந்து காணாமலாக்கப்பட்டது போல் தங்களுக்கும் நிகழுமோ என அஞ்சுகின்றன.
மாணவர்கள் சிலருக்கு விதிக்கப்பட்டிருந்த வகுப்புத்தடையை பேரவை நீக்கியதையடுத்து பேரவையின் முடிவில் தாம் அதிருப்தியுறுவதாக தெரிவித்து ரகுராம் பதவி விலகியிருந்தார். கலைப்பீடாதிபதி ரகுராமுக்கும் கலைப்பீடத்தில்லிருந்த எஸ் சிவகஜன் அணிக்கும் இருந்த முரண்பாடு போதைவஸ்து எதிரான ரகுராமின் முயற்சிகளுக்கான தடையாக மாற்றப்பட்டு பல்கலைக்கழக காமுகர்களின் செல்வாக்கினால் ஆசிரியர் சங்கம் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்தது. ரகுராமுக்கு சார்பான கலைப்பீட மாணவர் ஒன்றியமும் தனது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தது.
இதையடுத்து இந்த விவகாரத்தில் கல்வி அமைச்சு தலையிட்டு மாணவர்களுடைய கல்விச் செயற்பாடுகளை சிதைக்க வேண்டாம் எனச் சுட்டிக்காட்டி வேலைநிறுத்தத்தை கைவிடுமாறும் கலந்துரையாடல் மூலம் தீர்வு காணப்படும் என்றும் அறிவித்திருந்தது. சம்பவம் தொடர்பிலான அறிக்கையொன்றையும் கல்வி அமைச்சு கோரியிருந்தது.
சம்பவம் தொடர்பான அறிக்கை கல்வி அமைச்சுக்கு அனுப்பிவைக்கபட்டுள்ளது என்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனவும் துணைவேந்தர் சிறிசற்குணராஜா தனியார் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். விரிவுரையாளர்கள் பேராசிரியர்கள் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்கிறார்கள் என்று வெளிப்படையாகக் குற்றம்சாட்டிய துணைவேந்தர் சிவக்கொழுந்து சற்குணராஜாவால் கூட யாழ் பல்கலைக்கழகத்தின் காமுகர்களுக்கு எதிராகச் செயற்பட முடியவில்லை.
ஆசிரியர் சங்கம் வேலைநிறுத்தத்தை கைவிட்டுள்ளதாகவும் துணைவேந்தரை பதவியிலிருந்து நீக்கும் முயற்சிகள் வெற்றிகரமாக மாணவர் ஒன்றியத்தால் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்த சிவகஜன் தனது முகநூலில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் நீதிமன்ற நடவடிக்கைகளை நோக்கி நகரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கலைப்பீட மாணவர் ஒன்றியத்திலிருந்து அதன் செயலாளர் ச. ரிசிவரன் மற்றும் பொருளாளர் ச. கிருத்திகன் விலகியுள்ளனர். கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் ம.சோமபாலன் ரகுராமுக்கு ஆதரவாக நடத்திய ஊடகசந்திப்பில் வெளியிட்டுள்ள கலைப்பீடத்தின் அனைத்து அணி மாணவர்களும் தகவல்களை மறுப்பதாகவும், அதற்கு எதிர்ப்பினையும் கண்டனங்களையும் வெளியிடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் மாணவர்கள் போடும் குழாயடிச் சண்டையில் அவர்களது வண்டவாளங்கள் எல்லாம் வெளிவர ஆரம்பித்துள்ளன. ரகுராமுக்கு ஆதரவு தெரிவித்த சோமபாலன் சக மாணவர்களுக்கு போதைப்பாக்கு வாங்கி கொடுத்தே பதவிக்கு வந்துள்ளதாகவும் சக மாணவர் ஒருவர் முகநூலில் தெரிவித்துள்ளார். மேலும் சோமபாலன் கலைப்பீடாதிபதி ரகுராமிடம் மதுப் போத்தல்களுடன் கையும்களவுமாக பிடிபட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
வெளிவிவருகின்ற தகவல்கள் எல்லாம் கலைப்பீடம் எந்தளவு தூரம் சீரழிந்துபோயுள்ளது என்பதையே வெளிப்படுத்துகின்றன. மாணவர்களை வழிப்படுத்த வேண்டியவர்களும் அதிகாரத்திலிருப்பவர்களும் பாலியல் குற்றவாளிகளாகவும், ஊழல்வாதிகளாகவும், சமூகப் பொறுப்பற்றவர்களாகவும் இருந்தமையால் மாணவர்களின் குற்றங்களை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.
என்.பி.பி அரசாங்கம் கிளீன் சிறிலங்காவின் ஒரு அங்கமாக கிளீன் யப்னா (Clean Jaffna) யுனிவெசிற்றி என்ற திட்டத்தை அமுல்படுத்தி ஒட்டுமொத்த பல்கலைக்கழகத்தையும் திருத்தி எடுக்க வேண்டும். ஒரு பெண் ஹரிணி அமரசூரிய பிரதமராகவும் உயர் கல்வி அமைச்சராகவும் உள்ள இந்த சூழலில் யாழ் பல்கலைக்கழகத்தில் பெண்கள் எவ்வித ஆபத்தும் இல்லாமல பாலியல் லஞ்சம் கேட்டு கொடுமைப்படுத்தப்படாமல் போதைப் பொருள் பயமற்ற ஒரு கல்வி மையமாக யாழ் பல்கலைக்கழகம் மாற்றப்பட வேண்டும். அதற்கு பல்கலைக்கழகத்தில் பாலியல் லஞ்சம் கேட்ட விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், பீடாதிபதிகள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட வேண்டும். வாய்மையைப் பொய்மை என்றென்றும் வெல்லலமோ ? பாதிக்கப்பட்ட பெண்களின் பாவம் பீடாதிபதி ரகுராமை விடாது துரத்தும்

அர்ச்சுனாவின் முதலமைச்சர் கனவு ! போராட்டங்களுக்குத் தடை ! ஜனாதிபதி யாழ் வருகின்றார் ! – குடி நீர் பிரச்சினை பேசப்படுமா ?

அர்ச்சுனாவின் முதலமைச்சர் கனவு ! போராட்டங்களுக்குத் தடை ! ஜனாதிபதி யாழ் வருகின்றார் ! – குடி நீர் பிரச்சினை பேசப்படுமா ?

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பொதுமக்கள் சந்திப்பு போன்ற நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நாளை வருகை தரவுள்ளார். இதன்போது யாழ் மாவட்டத்தின் எதிர்காலத்தைப் பாதிக்கின்ற குடி தண்ணீர் பிரச்சினை பேசப்படுமா என யாழ் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். என்பிபி பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் இது தொடர்பில் உறுதியான தீர்வு ஒன்றை முன்வைக்க வேண்டும். மேலும் இந்தக் குடி தண்ணீர் மோசடி மற்றும் யாழ் நகரின் மத்திய கழிவகற்றல் பொறிமுறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி மோசடிகள் பற்றியும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பேசப்பட வேண்டும்.

ஜனாதிபதியின் வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் உள்ளிட்டவை அழைப்பு விடுத்திருந்தன.

இந்த நிலையில் போராட்டம் நடத்துவதை தடை செய்யக்கோரி காவல்துறையினர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத் தலைவர், ஆர்ப்பாட்டக் குழுவின் யாழ் மாவட்ட தலைவர், தற்காலிக சுகாதார உத்தியோகத்தர் சங்க தலைவர், குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் ஆகிய ஐவரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்புக் கட்டளை அனுப்புவதற்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே அனுராதபுரம் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல் வற்புறுத்தல் மற்றும் கடமைக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டு நேற்று இரவு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த கைதானது அநுராதபுரம் பொலிஸாரால் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகராட்சி மன்றத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளை தனக்கு எதிரான விடயங்களை முன்நிறுத்தி முதலமைச்சராகிவிடலாம் என்ற எண்ணத்தில் சிறகடித்துப் பறக்கின்றார் பா உ அர்ச்சுனா. தான் முதலமைச்சரானால் முதலாவது வேலையாக கலாச்சார மண்டபத்தின் பெயரை ‘யாழ்ப்பாணத் தமிழர் கலாச்சார மையம்’ எனப் பெயர்மாற்றுவேன் எனச் சூளுரைத்துள்ளார். ரென்ட்டுக்கு ஏற்றமாதிரி கொள்கை விளக்கம் வைக்கின்ற பா உ அர்ச்சுனா முதலமைச்சர் என்பது யாழ் குடாநாட்டுக்குள் என்பது போலவும் யாழ்ப்பாணத் தமிழனுக்கு மட்டும்தான் கலாச்சாரம் இருப்பது போலவும் கருத்துக்களை முன்வைத்த வருகின்றார். மேலும் புலித்தோல் போர்த்திய தமிழ் தேசியவாதிகள் போல் தன்னுடைய வாக்கு வங்கியை நிரப்ப ‘தேசியத் தலைவரையும், மாவீரர்களையும் துணைக்கு அழைக்கின்றார். இதில் எந்தப் புலிக்குட்டி உண்மையான புலிக்குட்டி என்ற குழப்பத்தில் மக்கள் 2009 முதல் இருக்கின்றனர். இப்ப இன்னுமொரு புலிக்குட்டியும் முதலமைச்சர் கனவோடு களமிறங்கி உள்ளது. ‘அப்ப தலைவர் கனவில வந்து எலெக்சனும் மண்ணாங்கட்டியும் எல்லோரும் பகிஸ்கரியுங்கோ என்று சொன்னா கேட்பினமோ?’

ஜனாதிபதி அனுராவின் வருகையைத் தொடர்ந்து, பாதை திறப்புக்கள், காணி விடுவிப்புக்கள், யாழ் குடிநீர்ப் பிரச்சினை, மீனவர்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் நல்ல செய்திகளை யாழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பரிஸ் லாகூர்னே சிவன் கோயில் உரிமையாளர், ஜக்கிய மக்கள் சக்தி குடும்பி ஜெயேந்திரனுக்கு பிடியாணை – யாழ் நீதிமன்றம் !

பரிஸ் லாகூர்னே சிவன் கோயில் உரிமையாளர், ஜக்கிய மக்கள் சக்தி குடும்பி ஜெயேந்திரனுக்கு பிடியாணை – யாழ் நீதிமன்றம் !

நல்லூர் லக்ஸ் விடுதி உரிமையாளரும் ஐக்கிய மக்கள் சக்தி யாழ்மாவட்ட பிரதம அமைப்பாளருமான வெற்றிவேலு ஜெயேந்திரனுக்கு பிடிவிராந்து நேற்றைய தினம் யாழ்ப்பாண நீதவானால் வழங்கப்பட்டுள்ளது. வெற்றிவேலு ஜெயேந்திரன் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற வேட்பாளரான உமாச் சந்திரப்பிரகாஷின் மைத்துனருமாவார்.

வெற்றிவேலு ஜெயேந்திரன் யாழ்ப்பாண சிவில் சமூக தலைவரான அருண் சித்தார்த் மற்றும் அவரது குடும்பத்தினர் தனது லக்ஸ் விடுதியையும் தன்னையும் தாக்கினார்கள் என பொலிஸ்சில் முறைப்பாடு செய்திருந்தார். இந்த வழக்கில் யாழில் இடம்பெற்று வரும் நிலையில், முறைப்பாட்டாளர் வழக்கு விசாரணைகளுக்கு சமூகமளிக்காது தொடர்ச்சியாக நீதிமன்றத்தின் நேரத்தை வீண்டித்து வந்தார். இதனால் கோபமடைந்த நீதவான் வெற்றிவேலு ஜெயேந்திரனை கைது செய்து வழக்கு விசாரணைக்கு கொண்டு வரும்படி உத்தரவிட்டுள்ளார்.

அருண் சித்தார்த்தின் மைத்துனியான தங்கதுரை தர்சினியை பத்து வருடங்களாக திருமணம் முடித்து வாழ்ந்தவர். தற்சமயம் வெற்றிவேலு ஜெயேந்திரன் தங்கதுரை தர்சினியை ஒரு பெண் குழந்தையுடன் கைவிட்டு விட்டு பெறாமகளுடன் குடும்பம் நடத்துகிறார். வெற்றிவேலு ஜெயேந்திரன் மீது ஆள் அடையாள மாறாட்ட வழக்கு, காணி மோசடி என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

வெற்றிவேலு ஜெயேந்திரனுக்கு சொந்தமான பிரான்ஸ்சில் லார்க்கூர்னேயில் அமைந்துள்ள சிவன் கோயிலும் வருமானவரி மற்றும் கவாலாத் தடுப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டு கணக்காளர் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஏனைய வழக்குகளிலும் வெற்றிவேலு ஜெயேந்திரன் கைது செய்யப்படும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லண்டன் நோர்தஹொல்ற்றில் விதி விளையாடியது – ஈழத்தமிழர் மரணம் ! 

லண்டன் நோர்தஹொல்ற்றில் விதி விளையாடியது – ஈழத்தமிழர் மரணம் !

ஜனவரி 27 இல் லண்டன் நோத்ஹால்ட்டில் (NORTHOLT) பகுதியில் இடம்பெற்றா விபத்தில் 47 வயதான ரஞ்சன் எனும் இலங்கை தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதி வேகமாக சாலைகளில் பயணித்த காரொன்றை துரத்திச் சென்ற பொலிஸார் றைசிலிப் என்ற வீதியில் வைத்து குறுக்கே மறித்த போது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த காருடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் சம்பந்தப்பட்ட இரு இளைஞர்கள் பின்பக்க இருக்கையில் இருந்து குதித்து ஓடி தப்பிவிட்டதாகவும் தெரிக்கப்படுகிறது. இருவர் கைதாகியுள்ளனர். அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கிய மற்றைய நபரான ஈழத்தமிழர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த கார் துரத்தல் தொடர்பில் வெளிநாட்டவர்களின் போதைப்பொருள் கடத்தல் குற்றப்பின்னணி இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸாரின் கிடுக்குப்பிடி விசாரணைகள் தொடர்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை இலக்கு வைக்கும் பா.உ அர்ச்சுனா !

உள்ளூராட்சி தேர்தலை இலக்கு வைக்கும் பா.உ அர்ச்சுனா !

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனது கட்சியில் இணைந்து போட்டியிடுவதற்கு, யாழ் மாவட்ட சுயேச்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர், தனது கட்சியில் இணைய விரும்புபவர்களுக்கு படிவமொன்றையும் வெளியிட்டுள்ளார்.

குறித்த படிவத்தை நிரப்பி அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ள அவர், உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிட விரும்பினால் தனது கட்சியில் இணைந்து கொண்டு போட்டியிட முடியுமென்றும் தெரிவித்துள்ளார்

என்.பி.பி பயணிக்கும் பாதை சில மாதங்களில் அனைவருக்கும் தெரியும் – நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார !

என்.பி.பி பயணிக்கும் பாதை சில மாதங்களில் அனைவருக்கும் தெரியும் – நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார !

யோஷித்த ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கியதன் மூலம் அவர் வழக்கில் இருந்து விடுதலையாகியதாக கருத முடியாது. நாங்கள் என்ன செய்வது என இன்னும் ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் பொறுத்திருந்து பாருங்கள். அதன் பின்னர், தேசிய மக்கள் சக்தி பயணிப்பது புதிய பாதையிலா அல்லது கடந்த அரசாங்கங்கள் பயணித்த பாதையிலா என்பதை மக்களுக்கு தெரிந்துகொள்ள முடியும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். யோஷித்த ராஜபக்ஷவுக்கு நீதிமன்ற பிணை வழங்கப்பட்டிருப்பது தொடர்பில் சமூகவலைத்தலங்களில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

ஒருசில நடவடிக்கைகளை அடிப்படையாகக்கொண்டு இந்த அரசாங்கமும் பழைய அரசாங்கங்கள் சென்ற வழியிலேயே செல்கிறதா என சிலர் சந்தேகிக்கின்றனர் என தெரிவித்த நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார, யாரையும் சிறையில் அடைத்து பழிவாங்குவதற்கு எங்களுக்கு எந்த தேவையும் இல்லை. அதனால் தீர்மானம் எடுப்பதற்கு அவசரப்பட வேண்டாம். என தெரிவித்துள்ளார்.

இலங்கைக் கடற்படை துப்பாக்கிப் பிரயோகம் எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் காயப்பட்டனர் – இந்தியா கண்டனம்!

இலங்கைக் கடற்படை துப்பாக்கிப் பிரயோகம் எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் காயப்பட்டனர் – இந்தியா கண்டனம்!

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்ட தமிழக மீனவர்கள் மீது கடற்படையினர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியமைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது .

நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்த 13 இந்திய மீனவர்களை நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கைது செய்ய முற்பட்ட போது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளனர் .

இதன்போது , இருவர் படுகாயமடைந்ததுடன் மூவருக்கு சிறு காயங்களும் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . இந்திய துணைத்தூதவர் சாய் முரளி காயமடைந்த மீனவர்களை வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் புதுடெல்லியில் உள்ள இலங்கையின் பதில் உயர்ஸ்தானிகரை நேரில் அழைத்து இந்திய வெளிவிவகார அமைச்சு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயமும் இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சிடம் இந்த விடயம் தொடர்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது . எந்த ஒரு சூழ்நிலையிலும் இத்தகைய தாக்குதல்களை நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்விடயத்தில் இரு அரசாங்கங்களுக்குமிடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என இந்தியா தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் விளக்கமளித்துள்ள இலங்கை கடற்படையினர், மீனவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்த போது, உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியாமல், இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டுள்ளனர். இதனால் படகில் சில கடற்படையினர் இறங்க முற்பட்டபோது அவர்களது கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆக்ரோஷமாகவும் ஒழுக்கமின்றியும் நடந்து கொண்டனர். இதனாலேயே தாம் தாக்குதல் நடாத்தவேண்டியேற்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.

சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுத்து வடக்கு கடல் பிராந்தியத்தில் கடல் வளத்தையும் மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் தாம் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மீனவர்களை என்.பி.பி பாராளுமன்ற உறுப்பினரும் வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டுள்ளார்.

ஜனாதிபதி அனுர காலத்தில், நீதியை பெற்றுக்கொள்ள முடியும் என தமிழர்கள் நம்புகிறார்கள் – வடக்கு ஆளுநர் வேதநாயகன் !

ஜனாதிபதி அனுர காலத்தில், நீதியை பெற்றுக்கொள்ள முடியும் என தமிழர்கள் நம்புகிறார்கள் – வடக்கு ஆளுநர் வேதநாயகன் !

ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் பாரபட்சமாக நடத்தாது என்றும், இந்த அரசாங்கத்தின் காலத்தில் தமக்கான நீதியைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் வடக்கு மக்கள் நம்புகின்றனர் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நியூஸிலாந்துத் தூதுவர் டேவிட் பின்னியிடம் சுட்டிக்காட்டினார்.

வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள், பொருளாதார மேம்பாடு தொடர்பிலும் குறிப்பாக சுற்றுலாத்துறை தொடர்பிலும் வடக்கு மாகாண ஆளுநரிடம், தூதுவர் கேட்டறிந்து கொண்டார்.

பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடு தொடர்பாகவும் அதன் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாகவும், கொழும்புக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான உள்ளூர் விமான சேவைகளை அதிகரிப்பதற்கு கவனம் செலுத்துவது தொடர்பிலும், நியூஸிலாந்துத் தூதுவருக்குத் தெரியப்படுத்தினார்.

பொருளாதார நெருக்கடியின் தாக்கம் வடக்கு மாகாணத்தில் எவ்வாறு இருக்கின்றது என்பது தொடர்பிலும், வடக்கில் அதிகரித்துள்ள உயிர்கொல்லி போதைப் பொருள் பாவனை மற்றும் அதனது தாக்கங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், வடக்கு மக்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டியதன் அவசியம், மீள்குடியேற்றம், உள்கட்டுமான அபிவிருத்தி தொடர்பிலும் ஆளுநர், தூதுக் குழுவினருக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்.

சிறுவர்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக இலங்கை – ஒன்பதாயிரம் சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் ! 

சிறுவர்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக இலங்கை – ஒன்பதாயிரம் சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் !

தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபையின் அறிக்கைக்கு அமைவாக, 2024 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை, 580 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பதிவாகி உள்ளன. ஏனைய சிறுவர் தொடர்பான 8746 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது. இதில் அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகளாக 2,746 முறைப்பாடுகள் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக கிடைக்கப்பெற்றுள்ளது.

சிறுவர்கள் மீதான சித்திரவதை தொடர்பாக 1,950 முறைப்பாடுகளும், சிறுவர்கள் யாசகம் பெறுவது தொடர்பாக 229 முறைப்பாடுகளும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக 42 முறைப்பாடுகளும், பாலியல் செயல்களுக்கு சிறுவர்களை தூண்டுவது தொடர்பாக 25 முறைப்பாடுகளும், குழந்தை திருமணங்கள் தொடர்பாக 14 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

குறிப்பாக யாழ் பல்கலைக்கழகத்தில் முத்தையா யோகேஸ்வரி என்ற சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்ட யாழ் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி ரகுராமின் நண்பர், பேராசிரியர் ரி கணேசலிங்கம் பற்றி பெண்ணிய வாதியும் மனித உரிமை வாதியுமான ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் வருமாறு கூறுகிறார்.

புலம்பெயர்ந்த தமிழருக்காக அநுர வீட்டைப் பறித்துவிட்டார் – மகிந்த ராஜபக்ச புலம்பல்

புலம்பெயர்ந்த தமிழருக்காக அநுர வீட்டைப் பறித்துவிட்டார் – மகிந்த ராஜபக்ச புலம்பல்

 

இல்லம் பறிக்கப்படுமென்றும் எனது பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் நீக்கப்படுவார்களென்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறியது, தேர்தலில் அவர்களுக்கு உதவிய தமிழ் புலம்பெயர்ந்தோரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் உட்பட ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதைத் தடுத்தது எனது அரசாங்கம்தான் என்று கூறிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த , நாட்டின் அச்சுறுத்தலை எதிர்கொண்ட அரச தலைவரின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் பாதுகாப்பை இழந்ததற்கு பொதுமக்களின் எதிர்வினையை வரவிருக்கும் தேர்தல்களில் அரசாங்கம் அறிய முடியும் என்றும் பாதுகாப்பு அல்லது உத்தியோகபூர்வ இல்லம் குறித்து ஒருபோதும் புகார் செய்ய மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தற்போது செய்வதற்கு எதுவுமறியாது முன்னுக்குப் பின் முரணாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். கடைசியில் இனவாதச் சீட்டையும் வைத்து ஆட்டத்தை ஆட நினைக்கின்றார். சிங்கள, தமிழ் அரசியல் தலைமைகள் இனவாதத்தை கக்கி உணர்ச்சி பொங்கப் பேசி வாக்கு வங்கியைத் தக்க வைக்க முடியும் என்ற பழைய சமன்பாட்டை கைவிட்டு மக்களோடு நின்றால் மட்டும் தான் மக்கள் ஆதரிப்பார்கள் என்ற உண்மையை புரிந்துகொள்ள வேண்டும்.