2025

2025

காஷ்மீர் கிராமத்தில் நீர்நிலைகள் விஷமானதால் 17 பேர் மரணம் ! யாழில் கிளிநொச்சியில் யாருக்குத் தெரியும் ?

காஷ்மீர் கிராமத்தில் நீர்நிலைகள் விஷமானதால் 17 பேர் மரணம் ! யாழில் கிளிநொச்சியில் யாருக்குத் தெரியும் ?

இந்தியாவின் காஷ்மீரின் மலைக் கிராமமான பதாலில் சமீபத்தில் ஒன்றரை மாத காலப் பகுதிக்குள் 17 பேர் அநியாயமாக உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் 3 தொடக்கம் 15 வயது வரையிலான சிறுவர்கள் ஆகும். உயிரிழந்தவர்களின் உடற்கூறாய்வு முடிவுகள் படி, இறந்தவர்கள் நரம்பு மண்டலத்தை பாதிக்க கூடிய ஒருவகை விஷத்தினால் பாதிக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் தெரியவருவதாவது பதால் மலைக் கிராமத்தின் நீருற்றின் தண்ணீரில் ஒருவகையான பூச்சி கொல்லி கலந்திருந்தமை தெரியவந்துள்ளது. விசாரணைகள் தொடர்கின்றன.

இப்படியான திடீர் மரணங்கள் நீர் விஷமாவதால் நிகழாமல் இருக்க வேண்டும் என்பதே சமூகநலன் விரும்பிகளின் அவாவாகும். யாழ்ப்பாணதில் நிலத்தடி நீர் விரைவாக விஷமாகிக் கொண்டு வருவதை கடந்த பல ஆண்டுகளாக சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாண நிலத்தடி நீரில் மலசல கூட கழிவு நீர் கலந்து வருவதற்கான ஏது நிலைகள் இருக்கின்றமையும் நீர்ப் பாதுகாவலர்களால் எடுத்தியம்பப்பட்டுள்ளது. இது தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கூட ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம். யாழ்ப்பாணத்தில் மத்திய கழிவகற்றல் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும். இரணைமடு தண்ணீர் விவகாரத்தை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தேசம்நெற் வலியுறுத்துகிறது. வரும் முன் காப்போம்.

நாய்க்கு தூக்கு தண்டனை கொடுத்தது இணக்க சபையா..? முல்லைத்தீவில் நடந்த கொடூரம் !

நாய்க்கு தூக்கு தண்டனை கொடுத்தது இணக்க சபையா..? முல்லைத்தீவில் நடந்த கொடூரம் !

ஆட்டை கடித்த நாய் ஒன்றை பெண் ஒருவர் தூக்கிலிட்டு கொலைசெய்த சம்பவமொன்று முல்லைத்தீவில் பதிவாகியுள்ளது. அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.

சம்பவம் தொடர்பில் தேசம்நெட் அப்பகுதி சமூக செயற்பாட்டாளர் ஒருவருடன் தொடர்பு கொண்ட போது, முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியிலுள்ள பெண் ஒருவருக்குச் சொந்தமான ஆட்டை, அயல்வீட்டு நாய் கடித்துள்ளது. இது தொடர்பில் அயல்வீட்டாருடன் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு குறித்த பிரச்சினை அப்பகுதி மத்தியஸ்த சபைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

நாயை வளர்க்கும் பெண்ணின் வறுமையை கவனத்தில் கொண்டு இணக்க சபையினர், இறந்த ஆட்டுக்கான இழப்பீட்டை அந்தப் பெண்ணால் முடியாது என தெரிவித்துள்ளனர். இழப்பீட்டுக்கு பதிலாக குறித்த நாயை வழங்குமாறு ஆட்டின் உரிமையாளர் கோரியிருந்துள்ளார்.

இணக்கசபையினரும் நாயை வழங்குமாறு கூறிய நிலையில் நாயை பெற்றுக்கொண்ட பெண் அதனை சுருக்கிட்டு கொலை செய்துள்ளார். அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அறிய முடிகிறது.

இதேவேளை சில சமூக வலைத்தள கணக்குகளில் இணக்கசபையினர் நாயை தூக்கிட்டு கொலை செய்யுமாறு கட்டளையிட்டதாக தகவல்கள் பரப்பப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகிறது.

இது பற்றி கருத்துப் பதிவு செய்துள்ள சமூக அரசியல் செயற்பாட்டளர் தம்பையா சோதிலிங்கம், “சமூகத்தின் சிந்தனை முறையில் வன்முறை – எதிர்ப்பு – வெறுப்பு எவ்வளவு வெறுப்பு வேரூன்றியிருக்கின்றது என்பதை இச்செயல் எடுத்துக் காட்டுகின்றது” எனப் பதிவிட்டுள்ளார்.

லண்டனில் நடைபெற்ற கண்காட்சியொன்றில் குதிரை தூக்கில் தொங்குவது காட்சிப்படுத்தப்பட்டது. அது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளது. ஆனால் உயிரோடு இருந்த வாய்பேச முடியாத பிராணியை தூக்கிட்ட மனநிலை பலரையும் தூக்கிவாரிப் போட்டுள்ளது. வடக்கில் மாதம் 3 படுகொலைகள் நிகழ்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான சகிப்புத்தன்மையற்ற மனநிலை படுகொலைகளை நோக்கியே மனிதர்களை நகர்த்துகிறது.

உள்ளூராட்சி தேர்தல்கள் ஏப்ரலில் !

உள்ளூராட்சி தேர்தல்கள் ஏப்ரலில் !

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பான சிறப்பு ஏற்பாடுகள் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னரே தேர்தல்கள் தொடர்பான முடிவுகள் சாத்தியமாகும் என குறிப்பிட்ட தேர்தல் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, தேர்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் ஒன்றை நிறுவ வேண்டியதன் அவசியம் குறித்து தெரிவித்துள்ளார்.

 

டெய்சி ஆச்சியின் காணியை ஆட்டையைப் போட்ட யோஷித ராஜபக்ச கைது ! ஞானா முனசிங்க ஆச்சியின் காணியை ஆட்டையைப் போட்ட குடும்பி ஜெயேந்திரன் கைதாவது எப்போது?

டெய்சி ஆச்சியின் காணியை ஆட்டையைப் போட்ட யோஷித ராஜபக்ச கைது ! ஞானா முனசிங்க ஆச்சியின் காணியை ஆட்டையைப் போட்ட குடும்பி ஜெயேந்திரன் கைதாவது எப்போது?

காணி மோசடிக்காக, பண மோசடி சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ச ஜனவரி 25 கைது செய்யப்பட்டுள்ளார். கைதான யோஷித ஜனவரி 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தன்னுடைய பாட்டியான டெய்சி பாரஸ்ட்க்குச் சொந்தமான ரத்மலானை, கெகட்டிய மாவத்தையிலுள்ள 4 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணியை முறைகேடாக வாங்கியது தொடர்பாக இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. யோஷித ராஜபக்சவை சந்தேக நபராகப் பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபரால் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்தே அவர் கைதாகியுள்ளார்.

இக் கைதுக்கு பின்னால் ராஜபக்சக்களை அரசியல் பழிவாங்கும் சதித்திட்டம் இருப்பதாக அவர்களது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தேசிய மக்கள் சக்தியினர் வழங்கிய வாக்குறுதியின்படி , 2015 ஆம் ஆண்டு நல்லாட்சிக் காலத்தில் இடம்பெற்ற மத்திய வங்கி கொள்ளையுடன் தொடர்புடையவர்களான ரவி கருணாநாயக்கா மற்றும் ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்யவில்லை எனக் கேள்வி எழுப்புகின்றனர். இக் குற்றச்சாட்டுக்களை மறுக்கும் என்பிபி அமைச்சர் நளிந்த ஜெயசிங்க பதிலளிக்கும் யோஷித மகிந்த ராஜபக்ச மகன் என்பதால் கைது செய்யப்படவில்லை என்கிறார். மேலும் அவர் கூறும் போது யாராக இருந்தாலும் சட்டவிரோதமாக அல்லது சந்தேகத்திற்கிடமான முறையில் நிலங்கள் அல்லது சொத்துக்களை வாங்கியிருந்தாலும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்கிறார்.

இதே நடைமுறையை முன்னாள் இராஜதந்திரி மங்கள முனசிங்கவின் மனைவியின் காணி அபகரிப்பு மோசடி வழக்கிலும் என்பிபி அரசாங்கம் பின்பற்றுவார்களா என பாதிக்கப்பட்டவர்கள் தேசம் நெற்றிடம் முறையிடுகிறார்கள். முன்னால் இராஜதந்திரியான மறைந்த அரசியல்வாதியான மங்கள முனசிங்கவின் மனைவியான ஞானா முனசிங்கவின் நல்லூரில் அமைந்துள்ள காணியை ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் குடும்பி வெற்றிவேலு ஜெயேந்திரன் கையெழுத்து மோசடி செய்து அபகரித்துள்ளார். அக்காணியின் உரிமையாளரான ஞானா முனசிங்கவின் சகோதரியான மீனா இரட்ணம் இந்தியாவில் சாய்பாவா கோயில் அமைந்துள்ள புட்பர்த்தியிலிருந்து தனது சகோகதரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ள கையொப்பத்தைப் பயன்படுத்தி மோசடியாக காணி அபகரிக்கப்பட்டுள்ளது.

இந்த காணி மோசடியில் கள்ள உறுதி எழுதும் சில சட்டத்தரணிகளும், அரசியல் வாதிகளும் மற்றும் முதலீட்டாளர்கள் என்ற வகையில் பிரான்ஸ் மற்றும் கனடா வாழ் புலம்பெயர் தமிழர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே இடம்பெற்ற இந்த காணி மோசடி வழக்கில் அரசியல் தலையீடு காரணமாக லக்ஸ் கோட்டல் முதலாளியும் ஐக்கிய மக்கள் கட்சியின் யாழ் அமைப்பாளரும் தற்போது வரை தப்பியுள்ளனர். இவ்வழக்கை மீள எடுத்து என்பிபி விசாரணை செய்ய வேண்டும். வெற்றிவேலு ஜெயேந்திரனும் கூட்டாக மோசடி செய்தவர்களும் கைது செய்யப்பட வேண்டும் என காலஞ்சென்ற மங்கள முனசிங்கவின் நண்பர்கள் கோருகின்றனர்.

ஜனவரி 25 தமிழ் தேசியத்தின் மாற்றத்திற்கான ஆரம்பம் என்று கஜா சொன்னது: சிவிகே சிவஞானத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பதா ?

ஜனவரி 25 தமிழ் தேசியத்தின் மாற்றத்திற்கான ஆரம்பம் என்று கஜா சொன்னது: சிவிகே சிவஞானத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பதா ?

புதிய அரசியலமைப்பு மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் நாடாளுமன்றில் கூட்டாக செயற்படுவது தொடர்பான கலந்துரையாடலுக்கு இலங்கை தமிழரசு கட்சிக்கும் உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 25இல் தமிழ் தேசியத்தின் தலைவிதியை மாற்றப் போவதாக பத்திரிகையாளர் மாநாட்டைக் குப்பிட்டு பொன்னம்பலம் கஜேந்திரகுமார் சொன்னது இந்த கூட்டத்திற்கு வரச்சொல்லி அமைப்பிதழ் கொடுப்பதையா? எனப் பலரும் புரவங்களை உயர்த்துகின்றனர்.

அந்தவகையில் எழுத்து மூலமான அழைப்பு கடிதத்தை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் நேற்றையதினம் வழங்கியுள்ளார்.

நாடாளுமன்றில் 8 ஆசனங்களைக் கொண்டிருக்கின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியும், தலா ஒவ்வொரு ஆசனத்தைப் பெற்றுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் ஒரு புள்ளியில் சந்திப்பதன் மூலம் தமிழர் தாயகத்தில் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறுதிப் பெரும்பான்மையான 10 ஆசனங்களை நாடாளுமன்றில் உறுதிப்படுத்துவதற்குரிய ஒரு முயற்சியை மேற்கொள்கின்ற வகையிலேயே இந்த முயற்சி அமைந்துள்ளது என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் தமிழரசுக்கட்சிக்கு முறையான அழைப்பு எதுவும் விடுக்கப்பட்டால் மாத்திரமே நாம் அது தொடர்பில் நாம் பரிசீலிப்போம் என சீ.வி.கே சிவஞானம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று இந்த கடிதத்தை பா.உ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கையளித்துள்ளார்.

 யாழ் மத்திய கல்லூரி அதிபர் மீது கஜா பாய்ச்சல் ! மீண்டும் சாதிய முழக்கமா ?

யாழ் மத்திய கல்லூரி அதிபர் மீது கஜா பாய்ச்சல் ! மீண்டும் சாதிய முழக்கமா ?

‘யாழ்ப்பாண மத்திய கல்லூரியின் அதிபர் அதற்குத் தகுதியில்லாதவர். இன்னமும் பதவியில் இருக்கின்றார்’ என்ற தொனிப்பட யாழ் பா உ உறுப்பினர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் பாராளுமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளார். தற்போது அப்பாடசாலையின் அதிபராக உள்ளவர், அப்பாடசாலையின் அதிபராகச் செயற்பட முடியாதவர் என்ற பொருள்படவும் கஜேந்திரகுமார் குற்றம்சாட்டியிருந்தார். இக்குற்றச்சாட்டுக்கள் ஜனவரி 22இல் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

தற்போதைய அதிபர் எஸ் இந்திரகுமாரை, ஏன் பிரதமர் ஹரிணி அமரசூரிய இதுவரை கலைக்கவில்லை. டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டினால் கொண்டுவரப்பட்டவரே எஸ் இந்திரகுமார் எனக் குற்றம்சாட்டியிருந்தார், தமிழ் தேசியய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்.

“முன்னைய பாராளுமன்றத்தில் ஹரினி அமரசூரிய எனக்குப் பின்னால் இருந்தவர்’ என்றும் ‘அன்று யாழ் மத்திய கல்லூரி தொடர்பில் ஒரு பிரச்சினையை எழுப்பி இருந்ததார், என்றும் சுட்டிக்காட்டினார் கஜேந்திரகுமார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், “ஹரினி அமரசூரிய இப்போது கல்வி அமைச்சராக, அரசாங்கத்தில் சக்திவாய்ந்த ஒரு நபராக இருக்கின்றார். ஆட்சிக்கு வந்து 100 நாட்களாகிவிட்டது. யாழ் மத்திய கல்லூரியின் தற்போதைய அதிபர் எஸ் இந்திரகுமாரை ஏன் இன்னமும் மாற்றி அமைக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். இப்பதவி நியமனம் போன்ற, முறையற்ற செயற்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் கஜேந்திரகுமார் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பில் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் ஒருவரைத் தொடர்புகொண்டு கேட்டபோது. “சோலியன் குடுமி சும்மா ஆடுமா ? பொன்னம்பலம் கஜேந்திரகுமார் ஏன் யாழ் மத்திய கல்லூரியைப் பற்றி இப்ப கதைக்க வேண்டி வந்தது ?” என்று கேள்வி எழுப்பிய அவர், “எஸ் இந்திரகுமார் சோனல் டிரைக்டராக இருந்து அதிபராக வந்தவர். அவருடைய தலைமையில் யாழ் மத்திய கல்லூரி பாரிய வளர்ச்சியைக் கண்டு கொண்டுள்ளது. அவர் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அதிபர். ஆனால் அவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சாதியைச் சேர்ந்தவரல்ல. அதனால் தான் கஜேந்திரகுமார் பாராளுமன்றத்தில் கூடுதல் நேரம் கேட்டு தன் சாதியத் திமிரைக் காட்டுகின்றார்” என்று குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட யாழ் மத்திய கல்லூரியின் பழைய மாணவரான அனஸ்லி ரட்ணசிங்கம் தற்போது ஜேர்மனியில் வாழ்கின்றார், அவர் இது பற்றிக் குறிப்பிடுகையில் “தற்போதைய அதிபர் எஸ் இந்திரகுமார் கல்லூரியின் ஒரு சொத்து. அவருடைய தலைமைத்துவத்தில் கல்லூரி வெகுவான முன்னேறி வருகின்றது. ஹரினி முன்னர் இது தொடர்பில் கேள்வி எழுப்பி இருந்தாலும், அதற்குப் பின் மக்கள் அவருக்கு கையொப்பமிட்டு கடிதங்களை அனுப்பி வைத்து, விளக்கமளித்ததைத் தொடர்ந்து அவர் மேற்கொண்டு இவ்விடயத்தில் தலையீடு செய்யவில்லை” எனத் தெரிவித்தார்.

இதுதொடர்பில் கேள்வி எழுப்பிய மற்றுமொரு யாழ் மத்திய கல்லூரி மாணவன் லண்டனில் வாழும் ரங்கநாதன் ரமணன், “அதிபராகத் தகுதியில்லாத, அதிபர் தரத்தைப் பெற்றிராத ஆறு திருமுருகன் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியை குட்டிச்சுவராக்கிய போது, யாழ் பல்கலைக்கழத்தின் பேரவையில் இருந்து பல்கலைக்கழத்தை குட்டிச்சுவராக்கிய போது, இந்த கஜாக்களுக்கு அவர்களை விமர்சிக்க சாதிய விசுவாசம் விடவில்லையோ” எனக் கேள்வி எழுப்பினார். “ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த ஒருவர் யாழ் நகரின் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றை நிர்வகிக்கின்றார். அதிலும் அதனை மிகத் திறம்பட நிர்வகிப்பதாக அங்கு கற்கும் மாணவர்களின் பெற்றோர்களே பாராட்டுகின்ற போது, கொழும்புக்கு ஓடிப்போய் பாராளுமன்றத்தில் முறையிட்டு ஒரு நல்ல தகுதியான அதிபரை விரட்டியடிக்க நினைப்பது என்ன மனநிலை” என்றும் கேள்வி எழுப்பினார்.

பொன்னம்பலம் கஜேந்திரகுமார், தற்போது யாழ் மாவட்ட மக்களை மிகவும் பாதிக்கின்ற குடி தண்ணீர் பிரச்சினை அதனால் ஏற்படுகின்ற சுகாதாரப் பிரச்சினை, யாழ் மீனவர்கள் எதிர்கொள்கினற வாழ்வாதாரப் பிரச்சினை என்று பல பிரச்சினைகள் இருந்த போதும் அவை பற்றியெல்லாம் பாராளுமன்றத்தில் வாய் திறப்பதில்லை. இல்லாத பிரச்சினையை வெறும் சாதிய நலன்களுக்காக முன்வைக்கின்றார் என்றே பழைய மாணவர்களும் தற்போதைய கல்விச்சமூகமும் உணர்கின்றது.

முன்னைய அதிபர் ஓய்வுபெற்றுச் சென்றபோது அங்கு உப அதிபராக இருந்தவர் நியமிக்கப்பட்டார். ஆண்கள் பாடசாலைக்கு பெண் அதிபர் வேண்டாம் என்ற போராட்டமும் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து தகுதிகள் பலவுடைய தற்போதைய அதிபர் எஸ் இந்திரகுமார் நியமிக்கப்பட்டார். அதன் பின்னால் அப்போது அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தாவின் அழுத்தங்கள் இருந்ததாகச் சொல்லப்பட்டது. எது எவ்வாறாக இருந்தாலும் தற்போதைய அதபர் எஸ் இந்திரகுமார் மக்களால் வரவேற்கப்படுகின்றார் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபருக்கான தகுதியில்லாமல் ஆறுதிருமுருகன் யாழ் ஸ்கந்தவரோதாயாக் கல்லூரியில் நியமிக்கப்பட்டார். யாழ் பல்கலையில் பேரவையிலும் நியமிக்கப்பட்டார். இவர் இப்பதவிகளைப் பெற முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசு இருந்தது. தான் போன கல்வி நிறுவனங்களைச் சீரழித்தார் ஆறுதிருமுருகன். ஆனால் யாரும் ஆறு திருமுருகன் மீது கேள்வி எழுப்பவில்லை. ஏனெனில் அவர் ஆதிக்க சாதி, ஆளப் பிறந்தசாதி, பொன்னம்பலம் கஜேந்திரகுமாரின் சாதி என்பதைத்தவிர வேறு காரணங்கள் இல்லை.

பிரதமரின் அறிவிப்பை மீறிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !

பிரதமரின் அறிவிப்பை மீறிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் !

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற மாணவர் கௌரவிப்பு நிகழ்வு ஒன்றில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்து கொண்டமை சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர், கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய முன்னதாக பாடசாலைகள் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக பயன்படுத்தப்படுவதை ஏற்க முடியாது என் றும் அரசியல்வாதிகள் பாடசாலை விழாக்களில் கலந்துகொள்ளக்கூடாது என்றும் தடை விதித்திருந்தார்.

இந்தநிலையில் கல்வி அமைச்சரின் அறிவிப்பையும் மீறி அமைச்சர் சந்திரசேகர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளமை தொடர்பில் பலரும் அதிருப்தி வெளியிடப்பட்டு வருகின்றனர்.

கட்டியவனே உடைத்த கல்லாசனங்கள் – கலைப் பீடாதிபதி ரகுராமிற்கு எதிராக கலைப்பீட மாணவர்கள் போராட்டம் !

கட்டியவனே உடைத்த கல்லாசனங்கள் – கலைப் பீடாதிபதி ரகுராமிற்கு எதிராக கலைப்பீட மாணவர்கள் போராட்டம் !

யாழ்ப்பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது தமது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து அடக்குமுறையை பிரயோகிக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக பல்கலைக்கழக முன்றலில் நேற்றைய தினம் ஜனவரி 24 மாணவர் ஒன்றியத்தினால் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. கலைப்பீடாதிபதி ரகுராமிற்கும் அவருக்கு வாக்களித்த காமுக விரிவுரையாளர்களுக்கும் எதிராக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் 4 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து தமது போராட்டத்தை முன்னெடுத்தனர். குறிப்பாக கேள்வி கேட்டதற்காக 9 மாணவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வகுப்புத்தடைகளை நீக்க வேண்டும் என்பதும் அதில் உள்ளடங்கும்.

இப்போராட்டத்தின் பின்னணி தொடர்பில் ஊடகங்களுக்கு மாணவர்கள் ஒன்றிய பிரதிநிதிகள் விளக்கங்களை கொடுத்துள்ளனர். அதன்படி கடந்த வருடம் மேமாதம் விஞ்ஞான பீடமாணவர்கள் விரிவுரை மண்டபத்தில் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது வேண்டுமென்றே விரிவுரையாளர் ஒருவர் மண்டபத்தை வெளியிலிருந்து பூட்டியுள்ளார். பின்னர் விஞ்ஞான பீட மாணவர் ஒன்றிய தலைவர் பூட்டை உடைத்து மாணவர்களை மீட்க வேண்டியேற்பட்டது. விரிவுரையாளர் மண்டபத்தை பூட்டிய சமயம் தீவிபத்து ஏற்பட்டிருந்தால் எவ்வளவு ஒரு பெரிய அனர்த்தம் ஏற்பட்டிருக்கும். இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட விரிவுரையாளரை விசாரணைக்கு உட்படுத்துவதற்குப் பதில் பூட்டை உடைத்து காப்பாற்றிய மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் புதுமுக மாணவர்களுடைய வட்ஸ் அப் குழு உரையாடல்களை சட்டத்திற்குப் புறம்பாக ஒட்டுக் கேட்டதோடு நிற்காமல் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கும் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுமுக மாணவர்கள் தாம் கற்க விரும்பும் பாடங்களை கற்க பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதிக்காதபட்சத்தில் போராட்டங்கள் மூலம் தமது கோரிக்கைளை முன்வைப்போம் என்று தமக்கிடையே வட்ஸ் அப் குழுவில் கலந்துரையாடியுள்ளனர். யாழ் பல்கலைக்கழகத்தில் போராட்டங்கள் ஒன்றும் புதிதல்ல. பேராசிரியர் கணேசலிங்கம் போன்ற பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மாணவர்களை தமது அரசியல் சுயலாபங்களுக்கு பொங்கு தமிழ் போன்ற போராட்டங்களுக்கு அணிதிரட்டியவர்கள் . அப்படியிருக்க கடந்த 20 ஆம் திகதி ஆரம்பமான முதல் நாள் விரிவுரைகளுக்கு சமூகமளிக்காதபடி மாணவர்களுக்கு தடை விதிப்பது அதிகார துஸ்பிரயோகம்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் பல்கலைக்கழகத்தினுள் இருந்த 5 கல்லாசனங்களை கலைப்பீடாதிபதி ரகுராம் உடைத்தெறிந்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் ரகுராம் தரப்பில் கூறப்படுவதாவது அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட இறுதியாண்டு மாணவர்கள் சிலர் இரவில் போதையில் கல்லாசனத்திலிருந்து வேண்டத்தகாத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அவ்வேளை அங்கு வந்த கலைப்பீடாதி ரகுராம் மாணவர்களின் செயலால் கோபமடைந்து சினிமா பாணியில் கல்லாசனத்தை உடைத்துள்ளார். இது தொடர்பில் கலைப்பீட பீடாதிபதியிடம் கேள்வி எழுப்பிய மாணவர்கள் ஐவருக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல மாதங்களாக நீடிக்கும் இப்பிரச்சினைகளில் மாணவர்கள் நலன்சார்ந்து பேச வேண்டிய மூத்தவை மற்றும் பேரவை என்பன மௌனமாகவுள்ளன. ஊழலும், முறைகேடுகளும் மலிந்து போயுள்ள வினைத்திறன் அற்ற யாழ்ப்பல்கலைக்கழக நிர்வாகத்தை தட்டிக் கேட்கவே மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர் எனக் கூறுகின்றனர். கடந்த வருடம் ஒக்டோபரிலேயே 10 கல்லாசனங்கள் கலைப்பீடாதிபதியின் அனுசரனையில் பொருத்தப்பட்டதாக கலைப்பீட மாணவர்கள் ஒன்றிய முகநூலில் பதியப்பட்டுள்ளது.

அந்தவகையில் பின்வரும் நான்கு பிரதான கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஓன்று: விதிகளுக்குப் புறம்பாக நடைபெறும், நடைபெற்ற மாணவர்கள் மீதான விசாரணைகளை உடன் நிறுத்த வேண்டும்.
இரண்டு: போராடுதல் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட மாணவர்களின் அடிப்படை உரிமைகள் உறுதிசெய்யப்பட வேண்டும்.
மூன்று: விரிவுரையாளர்கள் மீதான முறைகேடுகள் பாரபட்சமின்றி விசாரணை செய்யப்பட வேண்டும்
நான்கு: மாணவர்களின் கற்றலிற்கான சுதந்திரத்தை உறுதி செய்யப்பட வேண்டும்.

பத்து ஆண்டுகள் நீடிக்கும் அநுர ஆட்சி முன்னாள் யுஎன்பி எம்பி ஆருடம்

பத்து ஆண்டுகள் நீடிக்கும் அநுர ஆட்சி முன்னாள் யுஎன்பி எம்பி ஆருடம்

அநுர தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தின் நற்பணிகளை ஆதரிப்பதாக முன்னாள் யுஎன்பி எம்பி டொக்டர் ஆஷூ மாரசிங்க கூறுகிறார். அவர் மேலும் கூறுகையில், எந்த கொமிஷனும் இல்லாமல் பாதுகாப்பாக இலங்கையில் முதலீடு செய்வதற்கு10 வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வாய்பளித்தால், அவர்களைப் பார்த்து 100 பேர் வருவார்கள் என்கிறார். இதுவரையான என்பிபியின் ஆட்சிக் காலத்தில் எத்த தவறுகளும் நடக்கவில்லை என கூறும் மாரசிங்க அநுர இன்னும் 10 வருடங்கள் இலங்கையை ஆளுவார் என கட்டியம் கூறுகிறார்.

 

கிளி கண்டாவளையில் 2 சதவிகிதம் பேருக்கு சிறுநீரக நோய் ! யாழில் ஆய்வுகள் வேண்டும் !

கிளி கண்டாவளையில் 2 சதவிகிதம் பேருக்கு சிறுநீரக நோய் ! யாழில் ஆய்வுகள் வேண்டும் !

கிளிநொச்சி கண்டாவளைப் பகுதியில் 2 சதவீதமானவர்களுக்கு சிறுநீரக நோய் இருப்பதாக சூழலியல் ஊடகவியலாளர் முருகையா தமிழ்செல்வன் தெரிவிக்கின்றார். கண்டாவளை மட்டுமல்லாமல் கிளிநொச்சி மாவட்டத்தின் வேறு கிராமங்களிலும் யாழ் மாவட்டத்திலும் குடி நீரால் வருகின்ற பிரச்சினை காரணமாக சிறுநீரகக் கோளாறு ஏற்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் கள்ள மண் தொடர்பிலும் கண்டாவளையின் பெயர் அடிக்கடி செய்திகளில் இடம்பிடிக்கின்றது. கண்டாவளை பா உ சிறிதரனின் வாக்கு வங்கிகளில் ஒன்று. நெடுந்தீவைப் பூர்விகமாகக் கொண்ட சிவஞானம் சிறிதரன் வட்டக்கட்சியில் வாழ்ந்தவர். கண்டாவளையில் மணம் முடித்தவர். தற்போது யாழ் நகருக்கு புலம்பெயர்ந்து வாழ்கின்றார்.

யாழ் மற்றும் கிளி மாவட்டங்களில் குடிநீர் பாரிய பிரச்சினையாகி வருகின்றது. அதனால் மக்கள் பாராதூரமான நோய்களுக்கு சிறுநீரகக் கோளாறுகளுக்கு இலக்காகியும் வருகின்றனர். இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட தனபாலன் ரவி, “என்னுடைய சகோதரி வட்டக்கட்சியில் சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு தனது 20வது வயதில் மிகத்துன்பப்பட்டு காலமானார். சில ஆண்டுகளுக்கு முன் எனது இன்னுமொரு சகோதரியின் கணவர் சிறுநீராக நோயினால் வட்டுக்கோட்டையில் காலமானார். தற்போது அவருடைய மகளுக்கு 30வது வயதில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு மாற்றுச் சிறுநீரக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உயிர்பிழைத்துள்ளார்” எனத் தெரிவித்தார். இதைவிடவும் எனது உறவுகளுக்குள்ளும் நண்பர்களுக்குள்ளும் இவ்வாறு பாதிக்கப்பட்ட பலரும் உள்ளனர். மாற்றுச் சிறுநீரக சிகிச்சையை மேற்கொள்ள ஒரு கோடி 50 லட்சம் வரை செலவாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் இரசாயன உரங்கள் மற்றும் கிருமிநாசினிகள் நிலத்தடி நீரோடு கலந்து கிணறுகளை வந்தடைகிறது. யாழில் உள்ள சுண்ணாம்புக்கற் கொறைகளினூடாக மலசல மற்றும் கழிவுகளும் கிணற்று நீரை அடைகின்றது. நீரால் ஏற்படுகின்ற சிறுநீரகக் கோளாறு மற்றும் பல்வேறு நீர் சம்பந்தமான நோய்களுக்கும் இதுவே காரணமாகின்றது.

இதன் காரணமாகவே குழாய் மூலமாக குடிநீரை வழங்க ஆசிய அபிவிருப்பி வங்கி இருபது ஆண்டுகளுக்கு முன்னரேயே நிதியை வழங்கி அதற்கான திட்டங்களை ஆரம்பிக்க உதவியது. துரதிஸ்டவசமாக ஊழல் மோசடி யாழ் – கிளி அரசியல் வாதிகளாலும் அதிகாரிகளாலும் பணத்தை வாரிக் கொண்டு சென்றதைத்தவிர குடிதண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு வைக்கப்பட வில்லை.

தற்போது பாராளுமன்றம் சென்றுள்ள உறுப்பினர்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் இதற்கான தீர்வொன்றை வைக்க வேண்டும். இவர்கள் யாழ் – கிளி குடிநீர்ப்பிரச்சினையை எவ்வாறு தீர்க்கப் போகின்றார்கள் எனபதைத் தெரியப்படுத்த வேண்டும். வரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழக் கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்பட்டு மக்களுக்கு தங்களுடைய திட்டத்தை அறிவிக்க வேண்டும்.