2025

2025

லசந்தவின் படுகொலைக்கு நீதி பெற்றுக்கொடுக்க முற்படும் அனுர தரப்பு ஊடகவியலாளர் இசைப்பிரியா கொலைக்கும் நீதி வழங்க வேண்டும் !

லசந்தவின் படுகொலைக்கு நீதி பெற்றுக்கொடுக்க முற்படும் அனுர தரப்பு ஊடகவியலாளர் இசைப்பிரியா கொலைக்கும் நீதி வழங்க வேண்டும் !

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதியளித்ததை போல நிமலராஜன் தொடக்கம் இசைப்பிரியா வரையான அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நீதியையும் பெற்றுக் கொடுக்க உறுதியளிக்க வேண்டும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ள சபா குகதாஸ்,

ஊடகத்துறையில் பணியாற்றியதுடன் கலைத்துறையிலும் சிறப்பான படைப்புக்களை வழங்கிய இசைப்பிரியா இறுதிப் போரில் முள்ளிவாய்க்கால் பகுதியில் மே17ஆம் திகதி வட்டுவாகலில் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் எவ்வாறு படுகொலை செய்யப்பட்டார் என்பதற்கு சனல் 4 ஊடகத்தின் ஊடாக ஆதாரங்கள் வெளிவந்தன. அதன் அடிப்படையில் சரணடைந்த ஊடகவியலாளன் படுகொலை செய்யப்பட்ட முறை மனித குலமே வெட்கித் தலை குனியும் அளவுக்கு அசிங்கமானது.

எனவே பிரதமர் அவர்களே நீங்களும் பெண் என்ற வகையில் இசைப்பிரியாவுக்கான நீதியை பெற்றுக் கொடுங்கள். இறுதிப் போரில் இசைப்பிரியாவின் கணவன் சிறிராம் கொல்லப்பட்டதுடன் அவரது மகள் அகல்யா பிறந்து இரண்டு மாதங்களில் மருத்துவ வசதியும் பால்மாவும் இல்லாமையால் புதுமாத்தளனில் இறந்தார். அத்தனை துயரங்களையும் சுமந்து கொண்டு சரணடைந்த இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையிலேயே இவருக்கான நீதி கிடைக்குமா? என குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்

பல்கலைக்கழக வெளிவாரிப் பேரவை உறுப்பினர்களை பதவி விலக பணிப்பு

பல்கலைக்கழக வெளிவாரிப் பேரவை உறுப்பினர்களை பதவி விலக பணிப்பு

நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் வெளிவாரிப் பேரவை உறுப்பினர்கள், எதிர்வரும் 13ம் திகதிக்கு முன்பாக தமது பதவி விலகல் கடிதங்களைச் சமர்ப்பிக்குமாறு பல்கலைக்கழகங்கள் மாணியங்கள் ஆணைக்குழுவால் கோரப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் முதலாவது கூட்டம் கடந்த வருடம் நவம்பர் மாதம் 7ம் திகதி இடம்பெற்றது. இதன்போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடாதிபதியால் அண்மையில் ஏற்பட்ட குழப்பத்தையடுத்து பேரவையின் அனைத்து வெளிவாரி உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரியிருந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக்தில் தற்போது பல்கலைக்கழகங்கள் மாணியங்கள் ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்ட 15வெளிவாரி உறுப்பினர்கள் உள்ளனர்.

உதவிக் கல்விப் பணிப்பாளர் பஞ்சநாதன் சுதர்சன், சட்டத்தரணி பத்திநாதர் அன்ரன் புனிதநாயகம், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் யாழ். மாவட்டப் பணிப்பாளர் தில்லையம்பலவாணர் விமலன், சப்ரகமுவா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வாழ்நாள் பேராசிரியர் மகிந்த எஸ் ரூபசிங்க, வாழ்நாள் பேராசிரியர் குமுது விஜேவர்த்தன, ஓய்வுபெற்ற வணக்கத்துக்குரிய பேராசிரியர் ஜி.பிலேந்திரன், சட்டத்தரணி டி.ரெங்கன், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதவான் திருமதி ஶ்ரீநிதி நந்தசேகரன், ஏந்திரி ரி. சாந்தாதேவி, வடக்கு உணவு நிறுவனத்தின் ஸ்தாபகரும் பணிப்பாளருமான கபிலன் கருணானந்தன், யாழ். ஆயர் இல்லத்தைச் சேர்ந்த வண. கலாநிதி பி.ஜே. ஜெபரட்ணம், லங்கா சஸ்ரெயினபிள் வென்ஜஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் குலேந்திரன் சிவராம், ஓய்வுபெற்ற பணிப்பாளர் நாயகம் வி.கனகசபாபதி, தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானம் மற்றும் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு.திருமுருகன் மற்றும் மனோகரி ராமநாதன் ஆகியோர் உள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோரது நியமனங்கள் அரசியல் மற்றும் ஆன்மீக சிபாரிசுகளின் அடிப்படையில் அமைந்தவை. நீண்டகாலமாகவே இவர் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. வினைதிறனற்றோர் இவ்வாறான பொறுப்புகளில் இருப்பதால் பல்கலைக்கழகத்தின் முன்னேற்றம் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது. எனவே எதிர்வரும் காலங்களிலாவது அரசியல் தலையீடுகள் அற்ற, பல்கலைக்கழகத்தை உலகத் தரத்திற்கு கொண்டுவருவதற்கு துணைநிற்கக்கூடிய உறுப்பினர்களை அரசு பேரவைக்கு நியமிக்க வேண்டும்.

தையிட்டி விகாரையை அனுமதித்த நல்லாட்சி அரசின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தையிட்டி இடிப்பில் கைகோர்த்தார் !

தையிட்டி விகாரையை அனுமதித்த நல்லாட்சி அரசின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தையிட்டி இடிப்பில் கைகோர்த்தார் !

தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் காணி உரிமையாளர்கள் நடத்தவுள்ள அமைதி வழிப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

தையிட்டிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை என்பது சட்ட ரீதியான அனுமதிகள் எவையும் பெற்றுக் கொள்ளப்படாமல், எமது மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த தனியார் காணிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் பூர்வீக நிலங்களை இழந்துள்ள மக்கள் தங்களுடைய காணிகளை மீட்பதற்கு தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆட்சிக் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பை நிறைவற்றுவதற்கான முயற்சிகள் எம்மால் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மக்களுடைய காணிகள் மக்களுக்கே சொந்தம் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். திஸ்ஸ விகாரை அமைந்துள்ள பகுதி மாத்திரமன்றி கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் அனைத்து காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எமது திடமான நிலைப்பாடாக இருக்கின்றது. அந்த அடிப்படையில், காணி உரிமையாளர்களின் அமைதி வழிப் போராட்டத்திற்கு பூரண ஆதரவளிக்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தையிட்டி திஸ்ஸ விகாரை அமைப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பினர் ஆகியோர் அங்கத்துவம் வகித்து ஆட்சிக்கு கொண்டு வந்த நல்லாட்சி அரசு காலத்திலேயே மேற்கொள்ளப்பட்டது. நல்லாட்சி அரசில் பிரதமராக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க தலைமையில் அறிவிக்கப்பட்ட ஆயிரம் விகாரை திட்டத்தை முன்னோக்கி நகர்த்தியவர் அப்போதைய புத்தசாசன அமைச்சரும் தற்போதைய எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச ஆவார். இந்த ஆயிரம் விகாரை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போது இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்தேசிய கூட்டமைப்பு நல்லாட்சி அரசுக்கான ஆதரவை வழங்கியதுடன் குறித்த நல்லாட்சியில் தையிட்டி விகாரையை இடிக்க வேண்டும் என குறிப்பிட்ட பா.உ சிறிதரனும் கைகோர்த்திருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தான் நல்லாட்சி அரசில் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்து சமய விவகார அமைச்சராக செயலாற்றிய டக்ளஸ் தேவானந்தா அடுத்து பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ச அரசிலும் அமைச்சராக பணியாற்றினார். எனினும் அண்மையில் ஏற்பட்ட என்.பி.பி அலையில் காணாமலாக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தா மீண்டும் தனது கட்சியின் அரசியலை நிலைநாட்ட திடீரென தூக்கத்தில் இருந்து எழுந்தவர் போல தையிட்டி விகாரையை இடிக்கும் பேரணியில் கைகோர்ப்பதாக அறிவித்துள்ளதாக அவதானிகள் தெரிவித்து வருகின்றனர்.

தலைவர் பிரபாகரன் அடுத்த தலைவரை காட்டாமல் விட்டது தவறு !தலைவர் இருக்கும் போதே சீமானைக் கழுவி ஊத்திவிட்டார்.

தலைவர் பிரபாகரன் அடுத்த தலைவரை காட்டாமல் விட்டது தவறு !தலைவர் இருக்கும் போதே சீமானைக் கழுவி ஊத்திவிட்டார்.

சீமான் – தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடனான தொடர்பின் உண்மைத்தன்மை, தமிழகம் உண்மையிலேயே ஈழத்தமிழர்களை அணைக்கிறதா..? ஈழத்தின் தமிழ்தேசியம் பெரியாரையும் உள்வாங்கியிருந்தததா..? சீமான் ஈழத்தில் பேசியது என்ன..? உள்ளிட்ட போராட்ட கால வரலாற்றின் வடுக்களையும், தடயங்களையும் தேசம் திரையுடன் மீள ஒரு தடவை பகிர்ந்து கொள்கிறார் தலைவர் பிரபாகரனோடு உரையாடிய பெண் ஆளுமை மாவீரர்களின் தாய், ஒரு போராளி – தமிழ்கவி அம்மா

அரகலயவை பயன்படுத்தி இழப்பீடு பெற்ற பா.உக்கள் – விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ள என்.பி.பி !

அரகலயவை பயன்படுத்தி இழப்பீடு பெற்ற பா.உக்கள் – விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ள என்.பி.பி !

கடந்த 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரகலய போராட்டத்தின் போது தங்களது வீடுகள் சேதமாக்கப்பட்டதாக கூறி அரசாங்கத்திடமிருந்து பாரியளவில் இழப்பீட்டை பெற்றுக் கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கடந்த காலங்களில் இழப்பீடுகளை பெற்றுக்கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான தகவல்கள் தற்போது கிடைத்துள்ள நிலையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அத்துடன், குறித்த மக்கள் பிரதிநிதிகள் தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பாக நாடாளுமன்றத்திற்குத் தகவல் வழங்கியுள்ளனரா என்பது தொடர்பில் கண்டறியப்பட வேண்டும்.

கொழும்பு துறைமுக மனிதப்புதைகுழி – இரு சிறுவர்கள் உட்பட கொன்று புதைக்கப்பட்ட 16பேரின் எலும்புக்கூடுகள் மீட்பு !

கொழும்பு துறைமுக மனிதப்புதைகுழி – இரு சிறுவர்கள் உட்பட கொன்று புதைக்கப்பட்ட 16பேரின் எலும்புக்கூடுகள் மீட்பு !

கொழும்பு துறைமுகப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியில் இதுவரை 16 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அகழ்வாராய்ச்சியை மேற்பார்வையிடும் ஆலோசகரான சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார். இவற்றில் இரு சிறுவர்களது எலும்புக்கூடுகளும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளாவது, இதுவரை 13 முழுமையான எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. கணிசமான எண்ணிக்கையில் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் மேலும் மூவரின் எலும்புக்கூடும் அடையாளம் காணப்படவுள்ளன. சடலங்கள் புதைக்கப்பட்ட விதம் அவர்கள் கொலை செய்யப்பட்டதைக் காட்டுகின்றது. உயிரிழந்த காலகட்டம் விஞ்ஞானரீதியிலான ஆய்வுக்குப் பிறகு தீர்மானிக்க முடியும். நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களின்படி அறிக்கைகள் வழங்கப்படும் என்றார் பேராசிரியர் ராஜ் சோமதேவ.

கடந்த ஆண்டு ஜூலை 13ம் திகதி கொழும்பு துறைமுகத்திற்குச் செல்லும் புதிய அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளுக்காக நிலத்தை தோண்டும் போது கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள பழைய செயலக வளாகத்தில் முதன்முறையாக மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது இதன் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுகள் இடம்பெறுகின்றன.

கொழும்பு துறைமுகம் பல நூற்றாண்டுகளாக போர்த்துகீசியம், டச்சு மற்றும் பிரித்தானியரின் காலனித்துவ ஆட்சியின் போது ஒரு முக்கிய வர்த்தக மையமாக விளங்கியது. சிலர் குறிதத்த புதைகுழி காலனித்துவ கால மோதல்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள், சிலர் இவர்கள் இலங்கை உள்நாட்டு யுத்தத்தின்போதான வன்முறைகளின் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடுகின்றனர்.

ஹெலிகாப்டர் இருக்குது எதற்காக ஆறு மணி நேரத்தை வீதியில் செலவழிக்க வேண்டும்? – எம்.பி ரவி கருணாநாயக்க

ஹெலிகாப்டர் இருக்குது எதற்காக ஆறு மணி நேரத்தை வீதியில் செலவழிக்க வேண்டும்? – எம்.பி ரவி கருணாநாயக்க

யாழ்ப்பாண விஜயத்தின்போது எதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க 12 மணிநேரத்தை வீதியில் வீணாக்கினார் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (07.02.25) கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி என்பவர் ஒட்டுமொத்த நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். ஹெலிகாப்டர் இருக்கும்போது எதற்காக அவர் ஆறு மணி நேரத்தை வீதியில் செலவழிக்க வேண்டும்? இது நவீன உலகம். நான் பிரதமருக்கும் அதையே பரிந்துரைக்கின்றேன். தனிப்பட்ட ரீதியில் ஹரிணி அமரசூரிய என்று இல்லாமல் நாட்டின் பிரதமர் என்ற பதவியில் இருக்கும் போது ஏன் நீங்கள் இதை பாவிக்கின்றீர்கள் இல்லை? இது ஒரு இழப்பு இல்லை. நீங்கள் ஆறு மணி நேரத்தை வீதியில் செலவழித்து இழக்கும் பணமே நாட்டுக்கு வீண்விரயமானது. எதிர்க்கட்சியாக நான் இதை முன்மொழிகிறேன். இவ்வாறானவை தேவையற்ற செலவீனங்கள் இல்லை. இதுதான் நீங்கள் நாட்டை முன்னேற்றும் வழி” என்றார்.

ரவி கருணாநாயக்கவின் கருத்தை பலரும் சமூகவலைத்தளங்களில் வரவேற்றுள்ளனர். ஜனாதிபதி உட்பட்ட முக்கியமான பொறுப்பில் உள்ளவர்கள் தம்முடைய நேரம் தொடர்பில் அதீத கவனம் எடுக்க வேண்டும் என அவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதேவேளை இன்னொரு சாரார் வான்வழியால் பயணித்தால் நாட்டின் தலைவரால் மக்களின் நிறைகுறைகளை அறியமுடியாது என்றும், இவ்வாறான பயணங்களின் ஊடாக அனுர சாமான்ய மக்களின் நிலையை அவதானிக்க முடியும் என்றும் தெரிவிக்கின்றனர்.

குளத்தின் நடுவே ஒன்றல்ல இரு தடவைகள் மைதானம் கட்ட நிதி ஒதுக்கிய சாணக்கியன் – மோசடி !

குளத்தின் நடுவே ஒன்றல்ல இரு தடவைகள் மைதானம் கட்ட நிதி ஒதுக்கிய சாணக்கியன் – மோசடி !

மட்டக்களப்பு மாவட்டத்திற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட 400 மில்லியன் ரூபாவில் இல்லாத விளையாட்டு மைதானம் ஒன்றிற்கு 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் கிருஸ்ணபிள்ளை வதனகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

குளத்தின் நடுவே உள்ள மைதானத்துக்கு இரண்டு தடவைகள் நிதி ஒதுக்கப்பட்டு பாரிய மோசடி இடம்பெற்றுள்ளமை தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த கிருஸ்ணபிள்ளை வதனகுமார், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட 400 மில்லியன் ரூபாவில் பல மோசடிகள் இடம்பெற்றுள்ளதுடன், அதன் அடிப்படையில் களுவாஞ்சிக்குடி எருவில் கிழக்கில் மைதானம் ஒன்றிற்கு 50 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் அறியும் சட்டம் ஊடாக தகவலை பெற்றோம், இருந்த போதும் அவ்வாறு இல்லாத மைதானத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை கண்டறிந்தோம்.

அந்த நிதி அவர்களது ஆதரவாளர்கள் மூலம் பிரச்சார வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், மக்களுடைய வரிப்பணம் மிக மோசமாக பயன்படுத்தப்பட்டுள்ளது

இவ்வாறானவர்களை மக்கள் தெரிவு செய்வதால் எமது பிரதேசத்தில் இன்றும் மக்கள் ஏழைகளாகவும் அடிமைகளாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த மோசடி தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவுக்கு முறைப்பாடு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்றார்

மாகாண சபை தேர்தல்கள் குறித்து சகல கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும் – தேர்தல் ஆணைக்குழு 

மாகாண சபை தேர்தல்கள் குறித்து சகல கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும் – தேர்தல் ஆணைக்குழு

“மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம்” என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

அண்மைய தேர்தல்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், “உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு தற்போது அவை விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பு திகதியை நிர்ணயிக்க முடியும்.

மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் காணப்படும் சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு பாராளுமன்றத்துக்கு உண்டு என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தியுள்ளோம். தேர்தல் முறைமை தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக்குழுக்களில் கலப்புத் தேர்தல் முறைமை குறித்து பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம்.

காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு கண்டு மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கும், பாராளுமன்றத்துக்கும் உண்டு” என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்

 “ஒருசில தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விரும்புவதில்லை – எதிர்க்கட்சியின் ஹேஷா விதானகே !

“ஒருசில தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விரும்புவதில்லை – எதிர்க்கட்சியின் ஹேஷா விதானகே !

“ஒருசில தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விரும்புவதில்லை. பிரச்சினைகளை வளர்த்தெடுக்கவே பார்க்கிறார்கள். இதனால் தான் நிரந்தர தீர்வு எடுக்கவில்லை” என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் மேலும் இதுதொடர்பாக பேசிய அவர், புதிய அரசாங்கத்தில் மலையக பெண் பிரதிநிதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன். பெருந்தோட்ட மக்களுக்கு தற்காலிக தீர்வு வழங்காமல், நிரந்தர தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை எதிர்காலத்திலும் அரசியலுக்கு பயன்படுத்துவதை இனியேனும் நிறுத்த வேண்டும்.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை அரசியல் பொம்மைகளாக்கி அதனூடாக ஆட்சியை கைப்பற்றும் செயற்பாடுகள் மாத்திரமே இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் ஆதரவு இருந்தால் வெற்றிப் பெற முடியும் என்று குறிப்பிட்டுக் கொண்டு அவர்களுக்கு பிரத்தியேக கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அமைச்சுக்களும் ஸ்தாபிக்கப்பட்டன. ஆனால் உறுதியான தீர்வு கிடைக்கவில்லை.

பெருந்தோட்ட மக்களை லயன் அறையில் இருந்து வெளிக்கொண்டு வந்து அவர்களை முழுமையான சுதந்திரத்துடன் வாழ வைக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்தால் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.