2025

2025

“நாமல் ராஜபக்ச தொடங்கி யார் மீதும் நாம் அரசியல் பழிவாங்கல் நோக்கில் நடவடிக்கை எடுக்கவில்லை – எடுக்கவும் மாட்டோம்” – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு !

நாமல் ராஜபக்ச தொடங்கி யார் மீதும் நாம் அரசியல் பழிவாங்கல் நோக்கில் நடவடிக்கை எடுக்கவில்லை – எடுக்கவும் மாட்டோம்” – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு !

 

நாட்டில் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த நாம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.

 

நாம் அரசியல் பழிவாங்கலை மேற்கொள்ளவில்லை. எதிர்காலத்திலும் அது இடம்பெறாது.விசாரணை நடவடிக்கைகள் அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படவில்லை. எனவே தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமையவே அதன் தொடர்புடைய தரப்பினர் அழைக்கப்படுகிறார்கள். இதில் பெரிதாக அலட்டிக் கொள்ள ஒன்றுமில்லை.இது தொடர்ச்சியாக இடம்பெறும்.அரசியல் நோக்கத்தை கொண்ட அந்த பழைய அரசியல் முறைமை இங்கு இருக்காது.அது நாமல் ராஜபக்ஷவோ அல்லது வேறு ஒருவராக கூட இருக்கலாம். பொலிஸார் தமது கடமைகளை நிறைவேற்றுவர்.

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது.அதனை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம். போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். இதன் பின்னணியில் அரசியல்வாதிகள் இருப்பார்களாயின் அது தொடர்பில் நாம் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுப்போம் என்றார்.

தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்படும் தமிழ் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ! 

தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்படும் தமிழ் மனித உரிமை செயற்பாட்டாளர்கள்

 

இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பணிபுரியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தொடர் வன்முறைகள் மற்றும் கண்காணிப்புக்கு உள்ளாவதுடன் தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்படுவதாக மனித உரிமைகள் பாதுகாவலர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர் மேரி லோலரின் சுட்டிக்காட்டியுள்ளார். அதேநேரம் சுவிஸ் அரசாங்கம் மனத் உரிமைச் செயற்பாட்டாளர் மரியதாஸ் பொஸ்கோவை ஆள்கடத்தல் முகவர் என முத்திரை குத்துகிறது.

மேலும், பல பெண் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் அரசுக்கு எதிரானவர்கள் என முத்திரை குத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், அவர்கள் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுக்கும்போது தாக்குதலுக்கு உள்ளாவதாகவும், சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுவதாகவும் விசனம் வெளியிட்டுள்ளார்.

உலகளாவிய ரீதியில் மனித உரிமைகள் பாதுகாவலர்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்பட்டுவரும் ஒடுக்குமுறைகள் மற்றும் மீறல்கள் பற்றிய விபரங்களை உள்ளடக்கிய மனித உரிமைகள் பாதுகாவலர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர் மேரி லோலரின் அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. திறந்த வெளிச் சிறச்சாலையான ஹாசாவில் நாற்பதினாயிரத்துக்கு மேற்பட்ட சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட்ட பாலஸ்தீனமக்கள் இனப்படுகொலை செய்யப்படுகின்ற போது அதனை தடுக்க முடியாத காலாவதியாகிப் போன அமைப்பு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பு. ஈழத்தமிழர்கள் இனியும் இந்த அமைப்பை நம்புவதில் கால விரயமே. உபாயங்களை மாற்றிக் கொண்டு உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

என்.பி.பியின் வரவுசெலவு திட்டத்திற்கு ரெலோ ஆதரவு  – விளக்கம் தருகிறார் பா.உ செல்வம் அடைக்கலநாதன் !

என்.பி.பியின் வரவுசெலவு திட்டத்திற்கு ரெலோ ஆதரவு

கட்சி அரசியலுக்கு அப்பால் தமிழ்மக்களுக்கு சாதகமான பல விடயங்கள் உள்ளதால் வரவு, செலவுத்திட்டத்துக்கு ஆதரவளித்ததாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

பா.உ செல்வம் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவளித்தமை விமர்சனத்துக்குள்ளானது. இதையடுத்து இது தொடர்பில் அவர் தனது தெளிவுபடுத்தலை வழங்கியுள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவித்த போது,

நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்ற கோசத்துடன் மக்களின் ஆணையைக் கோரிய ஜனாதிபதி அநுரவின் முதலாவது வரவு, செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கையில் அவர்கள் வடக்குக்கு அதிக ஒதுக்கீடுகளைச் செய்துள்ளார். அதனைவிடவும், சாதாரண மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில் வரவு, செலவுத்திட்டத்தின் முன்மொழிவுகள் அமைந்திருக்கின்றன என்பதை கட்சி அரசியலுக்கு அப்பால் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த வகையில், அவர்களின் முன்மொழிவுகள் உரிய வகையில் செயற்படுத்தப்பட்டு நடைமுறைச்சாத்தியமாக வேண்டும் என்பது எனது வலியுறுத்தலாக இருக்கின்றது. கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த அரசுகள் முன்மொழிவுகளை கவர்ச்சிகரமாக முன்வைத்தாலும் அவற்றை செயற்படுத்துவதில்லை.

பொருளாதாரரீதியாக வரவு,செலவுத்திட்டம் முன்னேற்றகரமாக இருந்தாலும் அவற்றை செயற்படுவதில் அரசாங்கம் அதீதமான முனைப்பினைக் காண்பிக்க வேண்டியுள்ளது. அதேநேரம், அரசாங்கமானது, தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற நீண்டகால பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண வேண்டியது அவசியம். இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்களையும் தாமதமன்றி முன்னெடுக்க வேண்டும் என்றார்.

ஞானசார தேரர் சிறைச்சாலைக்கு சுற்றுலாச் செல்லவில்லை 

ஞானசார தேரர் சிறைச்சாலைக்கு சுற்றுலாச் செல்லவில்லை
கடந்த காலங்களைப்போல் வீட்டுச் சாப்பாடு சிறையில் கிடைக்கவில்லை குமுறிய ஞானசார தேரர்.
சிறையில் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதாகவும் வைத்தியர்கள் பரிந்துரைத்தும், வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை எனவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றஞ்சாடியுள்ளார்.
இதற்கு முன்னர் 4 சந்தர்ப்பங்களில் சிறை தண்டனை அனுபவித்த போது நான் இவ்வாறு நடத்தப்படவில்லை. உண்மையில் இது அரசாங்கத்தின் முடிவா அல்லது சிறை அதிகாரிகளின் தன்னிச்சையான செயலா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று சமூக வலைத்தளங்களை அதிகமாக உபயோகப்படுத்துவோர் செல்வாக்கு மிக்கவர்களாகவுள்ளனர். அவ்வாறானவர்களது அழுத்தங்கள் காரணமாகவே எனக்கான மருத்துவ தேவைகள் கூட புறக்கணிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டுப்பயணங்களும் அரசியல் இலஞ்சமாக இருந்தன  !

வெளிநாட்டுப்பயணங்களும் அரசியல் இலஞ்சமாக இருந்தன !

 

ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் வெளிநாட்டு பயணங்களுக்காக செலவிட்ட தொகையை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் நேற்று வெளியிட்டார்.

இதன்படி, 2010 -2014 வரையான காலப்பகுதியில் மஹிந்த ராஜபச்ச 3,572 மில்லியன் ரூபாவும், 2015-2019 வரையான காலப்பகுதியில் மைத்திரிபால சிறிசேன 384 மில்லியன் ரூபாவும், 2020-2022 வரையான காலப்பகுதியில் கோட்டபய ராஜபக்ச 126 மில்லியன் ரூபாவும், 2023-2024 வரையான காலப்பகுதியில் ரணில் விக்கிரமசிங்க 533 மில்லியன் ரூபாவும் வெளிநாட்டுப் பயணங்களுக்காக செலவிட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

2024.09.21 முதல் 2025 பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வெளிநாட்டு பயணங்களுக்காக 1.8 மில்லியன் ரூபாய் மாத்திரமே செலவிடப்பட்டுள்ளது எனவும் மக்களுக்கு சுமையாக இருக்காமல், செலவுகளை இயலுமான வகையில் குறைத்துக் கொண்டுள்ளோம் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டுள்ள 33 பயணங்களில் எதிர்க்கட்சியினர் உட்பட மொத்தமாக 154 பேர் பங்குப்பற்றியுள்ளனர் எனத் தெரிவித்துள்ள பிரதமர் இதுவும் அரசியல் இலஞ்சம் எனவும் சிறப்புரிமைகள் முறைகேடான வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை அனுரவில் வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவுகள் யதார்த்தத்துக்கு புறம்பானவை என பாராளுமன்ற உறுப்பினர் டிலித் ஜெயவீர தெரிவித்துள்ளார். வெறும் 1.8 மில்லியன் ரூபாயில் மூன்று நாடுகளுக்கு எவ்வாறு ஜனாதிபதியால் பயணம் செய்ய முடிந்தது என்றும் மிதிபலகையில் நின்று பயணம் செய்தாலும் இவ்வளவு குறைந்த தொகையுடன் மூன்று நாடுகளுக்கு அவர் எப்படி பயணம் செய்தார் என்றும் அவர் சந்தேகம் வெளியிட்டார்.

எம்பி அர்ச்சுனா கைவிடப்பட்ட ஹபரண சைவக் கோயிலுக்கு தீபம் காட்ட அழைக்கிறார் 

எம்பி அர்ச்சுனா கைவிடப்பட்ட ஹபரண சைவக் கோயிலுக்கு தீபம் காட்ட அழைக்கிறார்

 

அநுராதபுர மாவட்டத்தில் திருகோணமலை பிரதான வீதியில் அமைந்துள்ள ஹபரண பகுதியில் உள்ள பழமையான கோயில் ஒன்றினுடைய முன்பகுதி உடைக்கப்பட்டு பேரூந்து தரிப்பிடம் கட்டப்பட்டுள்ளதாக பத்திரிகைகளிலும் – சமூக வலைத்தளங்களிலும் செய்தி வெளியாகியிருந்தது. இத்தகவல் பலவாறு திரிபுபடுத்தப்பட்டு தமிழ் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டது. தையிட்டி விகாரை உடைப்பை நியாயப்படுத்த ஹபரண பேரூந்து தரிப்பிடம் கையாளப்பட்டது. சைவ கோயிலை உடைத்து பேரூந்து நிலையம் கட்டியது தவறு எனவும் இது இனவாத நாடு எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குழுவினர் பெரும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பரப்பப்பட்ட படங்களில் சைவக் கோயில் இடிபாடுகளுடன் கைவிடப்பட்ட நிலையிலேயே காணப்பட்டது. கிட்டத்தட்ட இந்தக் கோயில் பல ஆண்டுகளுக்கு முன்பே வழிபாடுகள் இடம்பெறாமல் கைவிடப்பட்டுள்ளதாகவே கருதமுடியும். அக்கோயில் பிள்ளையார் கோயில் எனவும் அம்மன் கோயில் எனவும் மாறுபட்ட கருத்துக்களே வெளிவருகின்றன. கோயிலின் தல வரலாறே தெரியாத நிலமை தான் காணப்படுகின்றது. அவ்வாறு அழிவடைந்துள்ள ஒரு கோயிலை இடித்து ஏன் பேரூந்து நிலையம் கட்ட வேண்டும். பகுத்தறிவுள்ளவர்கள் கேட்க வேண்டிய கேள்வி ஹபறணையில் உள்ள சைவக் கோயில் ஏன் அழிவடைந்துள்ளது. ஏன் கைவிடப்பட்டுள்ளது. இந்துசமய காவலர்கள் என கூச்சலிடும் சிவசேனா அமைப்பினர் கண்களில் இது ஏன் படவில்லை. அடிப்படைவாத இந்து அமைப்பான சிவசேனா தையிட்டியில் அரசியல் செய்து சமூகங்களில் பிளவுகளை ஏற்படுத்த விரும்புகின்றது.

சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள தையிட்டி விகாரையை உடைப்பது இனவாத பிரிவினைகளை ஊக்குவிக்கும் என பா.உ இராமநாதன் அர்ச்சுனா குறிப்பிட்டிருந்ததையும் மேற்கோள்காட்டி ஹபரண கோயில் இடிக்கப்பட்டது தொடர்பாக உங்களுடைய நிலைப்பாடு என்ன என அர்ச்சுனாவின் போட்டி அரசியல்வாதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இப்படியிருக்க பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நேற்றுமுன்தினம் ஹபரணையில் உள்ள இடிக்கப்பட்டதாக கூறப்பட்ட கோயிலுக்கு நேரடியாக கள விஜயம் செய்து தகவல்களை தனது யூடியூப் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, அப்பகுதியில் தமிழர்கள் யாருமே இல்லாமையால் கோயில் உடைக்கப்பட்டுள்ளது. எனினும் கோயில் உடைக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது தொடர்பில் கட்டாயம் பாராளுமன்றத்தில் பேசுவேன். சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களையும் துணைக்கு அழைத்து கோயிலை இடித்து அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தை அகற்றி மீளவும் அப்பகுதியில் கோயிலை அமைக்க என்னாலான நடவடிக்கைகளை எடுப்பேன் என தெரிவித்துள்ளார். வழிபாடு செய்ய யாரும் இல்லாவிடில் கோயிலை மீளக் கட்டி என்ன பலன். அதற்கு பதிலாக அந்த இடத்தில் ஒரு பாடசாலையை அல்லது ஒரு சனசமூக நிலையத்தை கட்டலாம். ஆளில்லா தேநீர்க்கடையில் தேநீர் ஆற்றி என்ன பலன்? . ஹபறணையில் மட்டுமல்ல வடக்கு கிழக்கிலும் பல கோயில்கள் கைவிடப்பட்டுள்ளன.

அர்ச்சுனா கோயில் கட்ட முதல் ஹபறணயில் இந்துமக்கள் வாழ்கிறார்களா என அறிய வேண்டும். யாழ்ப்பாணத்தில் புலம்பெயர் தமிழர்களால் கோடிகளை கொட்டி கட்டப்படும் புனருத்தாரணம் செய்யப்படும் கோயில்களில் மாடுகள் தான் படுத்துறங்குகின்றன. எம்பி அர்ச்சுனாவுக்கு இன்னுமொரு தார்மீக கடமை உண்டு. வடக்கு கிழக்கில் உள்ள சகல இந்து ஆலயங்களுக்கும் கள விஜயம் செய்து கிளீன் செய்ய வேண்டும். முக்கியமாக 25 கோடி செலவில் புங்குடுதீவில் மாடுகள் படுத்துறங்க கட்டிய இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்கு விஜயம் செய்ய வேண்டும் . உணர்ச்சி அரசியல் நீடித்த சமாதானத்தை கொண்டு வராது. புத்திசாலித்தனமான அரசியலே தமிழ்மக்களுக்கு உரிமைகளை பெற்றுக் கொடுக்கும். ஹபறண கோயில் வருடக்கணக்காக யார் கவனத்தையும் ஈர்க்கவில்லை. இப்போது அந்த இடத்தில் மக்கள் நிழலில் நின்று பயணம் செய்வது கண்ணை குத்துகிறது.

அர்ச்சுனா போல் கஜேந்திரகுமார், செல்வம் ஆகியோரும் உதிரிகள், தமிழரசுக் கட்சியும் தேசிய மக்கள் சக்தியும் மட்டுமே வடக்கு கிழக்கில் இரு கட்சிகள் !

அர்ச்சுனா போல் கஜேந்திரகுமார், செல்வம் ஆகியோரும் உதிரிகள், தமிழரசுக் கட்சியும் தேசிய மக்கள் சக்தியும் மட்டுமே வடக்கு கிழக்கில் இரு கட்சிகள் !

 

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரு கட்சிகளே உள்ளது என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தேசிய மக்கள் சக்தியும் மட்டுமே தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் ஆய்வாளர் வி சிவலிங்கம் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் பா உ இராமநாதன் அர்ச்சுனா போல் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரும், செல்வம் அடைக்கலநாதனும் கூட உதிரிகள் தான். இவர்களை கட்சி என்ற அடையாளத்துக்குள் கொண்டுவர முடியாது. இதே போல் ஒன்பது கட்சிக் கூட்டணியில் உள்ளவர்கள் கூட கட்சி என்று வரையறைப்படுத்த முடியாது எனத் தெரிவித்தார். ஆய்வாளர் வி சிவலிங்கம்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியை மட்டுமே தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்கும் கட்சியாகக் கொள்ள முடியும் என்று தெரிவித்தார். அதற்கு விளக்கமளித்த வி சிவலிங்கம் தமிழரசுக் கட்சி மட்டுமே வடக்கு கிழக்கின் அனைத்து பிரதேசங்களிலும் கட்சிக் கட்டமைப்பை வைத்துள்ளது என்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அவர்களுக்கு வாக்கு வங்கியுள்ளது என்றும் தெரிவித்தார். அந்த அடிப்படையில் தமிழரசுக் கட்சி மட்டுமே வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் தேசிய நலன்களை முன்னெடுப்பதாகவும் ஆய்வாளர் வி சிவலிங்கம் சுட்டிக்காட்டினார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஏனைய உதிரிகளும் கட்சிகளுமல்ல அவர்கள் யாழ் மக்களின் நலன்களைக் கூட முன்னெடுக்கவில்லை, அவர்கள் சில தொகுதிகளில் மட்டும் செல்வாக்கைக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் முஸ்லீம் மக்களுக்கு எதிர், மலையகத் தமிழர்களுக்கு எதிர், ஓடுக்கப்பட்ட சாதிகளுக்கு எதிர் என்று இருக்கின்ற போது, இவர்கள் எப்படி தமிழ் தேசியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்று கேள்வி எழுப்பும் ஆய்வாளர் வி சிவலிங்கம், இவர்கள் குறும் தேசியவாத வலதுசாரிப் பிற்போக்குசக்திகள் என்றும் இவர்கள் பற்றி தமிழ் மக்கள் விழப்பாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

உள்ளுராட்சித் தேர்தல் கூட்டணி பா உ சிறிதரனை எதிர்பார்க்கின்றது ! சிறிதரன் இக்கூட்டணிக்குள் வந்தால் சந்திரகுமார் தமிழரசுக் கட்சிக்குள் போய்விடுவார் !

உள்ளூராட்சித் தேர்தல் கூட்டணி பா உ சிறிதரனை எதிர்பார்க்கின்றது ! சிறிதரன் இக்கூட்டணிக்குள் வந்தால் சந்திரகுமார் தமிழரசுக் கட்சிக்குள் போய்விடுவார் !

 

ஒன்பது கட்சிகள் இணைந்த உள்ளுராட்சி கூட்டணி, முதல் கோணல் முற்றும் கோணல் என்ற நிலையில் உள்ளது. இந்த ஒன்பது கட்சி கூட்டணியில் சமத்துவக் கட்சி இணைந்து கொள்வதை பெயரில் மட்டும் பசுமையைக் கொண்டுள்ள காய்ந்து சருகான கட்சியின் பொன் ஐங்கரநேசனும் காமுகச் சாமியாரைக் கும்பிட்டுவரும் விக்கினேஸ்வரனின் கட்சியைச் சேர்ந்த மணிவண்ணனும் இந்தப் பழம் புளிக்கும் என்ற தோரணையில் தாங்கள் ஒரே சங்கு சின்னத்தில் போட்டியிடுவது பற்றி மீளச் சிந்திக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி தேசம்நெற்க்குத் தெரியவருவதாவது, இக்கட்சிகள் பா உ சிறிதரன் இந்த ஒன்பது கட்சிக் கூட்டுக்குள் வந்து இணைவார் என்ற நம்பிக்கையில் இருப்பதாகவும் அதன் மூலம் கூட்டணிக்கு வாக்கு வங்கியை எடுக்கலாம் என்றும் கணக்குப் போட்டுள்ளனர். ஆனால் தமிழரசுக் கட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளது. அப்படி பா உ சிறிதரன் ஒன்பது கட்சிக் கூட்டுக்குள் வருவதாக இருந்தால் தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேறி வர வேண்டும் இல்லையேல் தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். இதில் எது நடந்தாலும் சமத்துவக் கட்சியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு சந்திரகுமார் தமிழரசுக் கட்சிக்குள் உள்வாங்கப்பட்டுவிடுவார். இவ்விடயம் இந்த ஒன்பது கட்சிக் கூட்டணிக்குள் பேசப்பட்டது என தேசம்நெற்றின் யாழ் நிருபர் தெரிவிக்கின்றார்.

சமத்துவக் கட்சியும் அதன் தலைவர் மு சந்திரகுமாரும் தமிழ் அரசியல் தரப்பில் ஏனைய தமிழ் கட்சிகள் மீதோ அல்லது அரசியல்வாதிகள் மீதோ பெரும்பாலும் விமர்சனங்களை வைப்பதில்லை. விதிவிலக்காக பா உ எஸ் சிறிதரன் மீது அவர்கள் மிகக் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளனர். கீரியும் பாம்பும் என்ற நிலையிலேயே இவர்கள் உள்ளனர்.

கடந்த மாவீரர் நிகழ்வில் மூன்று போராளிகளின் தாய், மு சந்திரகுமாரின் விழாவில் ஏற்கனவே கேட்டுக்கொண்டமைக்கு அமைய விளக்கேற்றி விட்டார் என்பதற்காக பா உ சிறிதரன் அவரை மாவீரர் துயிலும் இல்லத்தில் விளக்கேற்ற விடாமல் தடுத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.

தற்போது பா உ சிறிதரனின் வலதுகரமும் கரைச்சி பிரதேச சபைத் தவிசாளருமான வேழமாளிதனும் பா உ சிறிதரனும் அடிக்கும் கூத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குங்கள் – சுமந்திரனும் வலியுறுத்தல் !

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குங்கள் – சுமந்திரனும் வலியுறுத்தல் !

பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதாக வாக்குறுதியளித்து ஆட்சிபீடமேறிய தற்போதைய அரசாங்கம், அவ்வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வெள்ளவத்தை தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் வலியுறுத்தினார்.

தற்போதைய அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 15 பேரில் இருவர் மட்டுமே தமிழர்கள். ஆனால் தமிழ் தேசியம் பேசுபவர்கள் தமிழர்களுக்கு எதிராக மட்டும் பயங்கரவாதத் தடைச்சட்டம் மேற்கொள்ளப்படுகின்றபோது கூட் இவ்வளவு ஆக்ரோசமாக அதனை நீக்கச் சொல்லிக் கேட்கவில்லை. ஆனால் தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டம் பெருமளவில் பாதாள குழுக்களுக்கு எதிராகப் பாய்ந்துகொண்டிருக்கின்ற இந்நேரத்தில் தமிழ் தேசியம் பேசுபவர்கள் பெரும் கொள்கைப் பிடிப்போடு பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோருகின்றனர்.

சில தினங்களுக்கு முன் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குங்கள் எங்களுடைய சகோதரர்கள் உங்களுக்குப் பிச்சை போடுவார்கள் என்று பா உ அர்ச்சுனா முழங்கினார். பொன்னம்பலம் கஜேந்திர குமார் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கினால் வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருப்போம் என்று தெரிவித்திருந்தார். பாதாள குழுக்களின் மனித உரிமைகள் மீது தமிழ் தேசியத்துக்கு ரொம்பவும் கருணைதான் என்கிறார் ஆய்வாளர் வி சிவலிங்கம்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த சுமந்திரன், இச்சட்டம் நடைமுறையிலிருந்த காலப்பகுதியில் பாரதி ஊடகவியலாளராகப் பணிபுரிந்ததுடன், இச்சட்டத்தின் கீழ் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களை நாம் பார்த்திருக்கிறோம். தற்போதைய ஆட்சியாளர்கள் ஏற்கனவே வாக்குறுதியளித்ததைப் போல் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும்.

அதேவேளை இச்சட்டத்தைப் பிறிதொரு சட்டத்தினால் பதிலீடு செய்யாமல், முழுமையாக நீக்க வேண்டியது மிகமிக அவசியமானதாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 

மத்திய வங்கி மோசடி அர்ஜுன மகேந்திரனை அழைத்து வர வேண்டிய பொறுப்பு ரணிலுக்கு உள்ளது – ஆளும் தரப்பு !

மத்திய வங்கி மோசடி அர்ஜுன மகேந்திரனை அழைத்து வர வேண்டிய பொறுப்பு ரணிலுக்கு உள்ளது – ஆளும் தரப்பு !

 

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பிலான விசாரணைகளுக்கு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை அழைத்து வருவதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜதிஸ்ஸ தெரிவித்தார்.

அவரை இலங்கைக்கு நாடு கடத்த அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தெரிவித்த அமைச்சர், அவர் மீதான வழக்கு அவர் முன்னிலையிலோ அல்லது இல்லாமலோ தொடரும் என்றும் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதாகக் கூறி அர்ஜுன மகேந்திரன் நாட்டைவிட்டு வெளியேறியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னர் பாராளுமன்றத்தில் கூறியதாகக் கூறிய அமைச்சர், மகேந்திரன் மீண்டும் நாடு திரும்புவதை உறுதி செய்வது முன்னாள் ஜனாதிபதியின் கடமை என்றும் கூறினார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி நடைபெற்று பெப்ரவரி மாதத்துடன் 10 ஆண்டுகள் நிறைவடைவதும் கவனிக்கத்தக்கது.