2025

2025

ஆட்சிக்கு வந்தததும் என்.பி.பியினர் மாறி விட்டார்கள் – எம்.ஏ.சுமந்திரன்

ஆட்சிக்கு வந்தததும் என்.பி.பியினர் மாறி விட்டார்கள் – எம்.ஏ.சுமந்திரன்

வடக்கு மக்களது ஆணை எங்களிடத்தில் இருக்கிறது என கொக்கரிக்கின்ற ஆட்சியாளருக்கு நாம் சரியான செய்தியை சொல்ல வேண்டும். இறைமையை உபயோகிக்கின்ற போது கவனமாக உபயோகிக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், உள்ளுராட்சி சபைக்கான தமிழரசுக் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்டிருந்த சுமந்திரன், இலங்கை தமிழரசுக் கட்சி எமது இனத்தின் விடுதலைக்காக உருவாக்கப்பட்ட கட்சி. அதை நாங்கள் செய்கின்றோம். அதை நாங்கள் சொல்கின்றோம். ஆட்சி அதிகாரங்கள் எமது கைகளில் வந்து சேர வேண்டும். தமிழ் மக்களின் கைகளில் வர வேண்டும் என 75 வருடமாக உழைக்கின்ற, முயற்சி செய்கின்ற ஒரு கட்சி.

பொறுப்பு கூறல் சம்மந்தமாக பல சர்வதேச தலைவர்களுடன் பேசி, பல விதமான பொறிமுறைகள் ஊடாக அழுத்தங்களை நாம் கொடுத்திருக்கின்ற போது, தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் அந்தக் காலத்தில் பேசாமல் இருந்தார்கள். 2016, 2017 ஆம் ஆண்டுகளில் காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தை அமைக்க பாராளுமன்றத்தில் நாம் செயற்பட்ட போது எங்களுக்கு ஆதரவாக செயற்பட்டார்கள். அது குறித்து பேசினார்கள். நிலம் விடுவிக்கப்பட வேண்டும் என்றார்கள். பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்பதில் எங்களை விட கூடுதலாக சொன்னார்கள்.

அந்த நிலைமைகள் 6 மாத காலத்திற்குள் தலைகீழாக மாறி விட்டது. எதிர்கட்சியில் இருந்ததைப் போல் அவர்கள் இப்போது இல்லை. வடக்கு மக்களது ஆணை எங்களிடத்தில் இருக்கிறது என கொக்கரிக்கின்ற ஆட்சியாளருக்கு நாம் சரியான செய்தியை சொல்ல வேண்டும். மாநகர சபையின் ஆட்சி அதிகாரம் முக்கியமானவை. அதன் சொல்லிலேயே ஒரு அடையாளம் இருக்கிறது. அது எமது கைகளில் இருக்க வேண்டும். அதற்காக அனைவரும் உழைக்க வேண்டும்” எனத் தெரிவிததார்.

வெள்ளைக்கார அடேல் அன்ரிக்கு; அடேல் பிரித்தானியாவுக்கு முதல் நானே விசாரணையை தொடங்கினேன் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா !

வெள்ளைக்கார அடேல் அன்ரிக்கு; அடேல் பிரித்தானியாவுக்கு முதல் நானே விசாரணையை தொடங்கினேன் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா !

 

இராணுவத் தளபதிகளுக்கு தடையுத்தரவு கொண்டு வந்தது போல் வெள்ளைக்கார அடேல் பாலசிங்கத்துக்கும் தடையுத்தரவு வழங்கப்பட வேண்டும் என பெரும்பான்மைச் சமூகப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். பிரித்தானியாவின் தடையுத்தரவு இலங்கையில் தங்களால் மேற்கொள்ளப்படும் இன நல்லிணக்க முயற்சிகளைப் பலவீனப்படுத்தும் என தேசிய மக்கள் சக்தி மட்டத்தில் கருத்துக்கள் வெளிப்பட்டுள்ளன.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தால் இராணுவத்தினராக இருந்தாலும் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதிகள் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள பயணத்தடை குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போது வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் பொன்சேகா மேலும் கருத்து வெளியிட்ட போது, ஜகத் ஜயசூரிய, வசந்த கரண்ணாகொட ஆகியோர் போர்க்களத்தின் முன்வரிசையில் நின்று போரிட்டவர்கள் அல்லர். பின்வரிசையில் நின்றவர்கள். போர்க்களத்தின் பின்வரிசையில் ஏதேனும் தவறுகள் நிகழ்ந்திருந்தால் அதனை விசாரிக்க வேண்டும். நான் இராணுவத் தளபதியாக இருந்த காலத்திலேயே ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்திருந்தேன். நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் இவர்களில் இருவரைப் பற்றி நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் விமர்சித்துள்ளேன். அதே​போன்றே போர்க்களத்தின் முன்னரங்கில் நின்று போரிட்ட சவேந்திர சில்வா எதுவித தவறும் செய்யவில்லை என்று உறுதிபட என்னால் கூறமுடியும் என தெரிவித்தார்.

இதற்கிடையே கிழக்கு தமிழ் கூட்டணி அமைக்கப்பட்டதன் தாக்கத்தினாலேயே பிரித்தானியா தனக்கு எதிராக தடையுத்தரவைப் பிறப்பித்ததாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதியான கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.

தடையுத்தரவை பெற்ற இராணுவத்தளபதிகள் சார்பில் கருத்து வெளியிட்டவர்கள் பிரித்தானியா காஸாவில் பெண்களையும் குழந்தைகளையும் வகைதொகையில்லாமல் கொன்று குவித்துவிட்டு இலங்கையில் நாடகம் போடுகின்றார்கள் எனத் தெரிவித்துள்ளனர். இராணுவத் தளபதிகளுக்கு எதிரான பிரித்தானியாவின் தடைகளைப் பயன்படுத்தி சிங்கள – தமிழ் அமைப்புகன் இனவாதத்தைத் தூண்டிவிட்டு ஜேவிபி இன் ஆட்சியைக் கவிழ்க்கலாம் உள்ளுராட்சித் தேர்தலில் வெற்றி பெறலாம் எனக் கணிக்கின்றன.

தமிழ்தேசியவாதமும் பெண் அடிமைத்தனமும்

தமிழ்தேசியவாதமும் பெண் அடிமைத்தனமும்

அரசியல் சமூக செயற்பாட்டாளர் யோகன் கண்ணமுத்துவுடனான நேர்காணல் !

 

யாழில் 75 கிலோ கஞ்சா மீட்பு !

யாழில் 75 கிலோ கஞ்சா மீட்பு !

யாழ். வல்வெட்டித்துறை பகுதியில் இராணுவப் புலனாய்வுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் பெருந் தொகையான கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட 75 கிலோ கிராமிற்கும் அதிகமான போதைப்பொருள் வல்வெட்டித்துறை காவல்துறையிடம் கையளிக்கப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் வல்வெட்டித்துறை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு  பிரதானிகள் மீது பிரித்தானியா பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு !

பாதுகாப்பு  பிரதானிகள் மீது பிரித்தானியா பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு !

 

தமிழ் இனவாதிகளின் வாக்குகளை இலக்காகக் கொண்டு இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு பிரதானிகள் மூவருக்கு எதிராக பிரித்தானியா தடைவிதித்துள்ளது. இராணுவ பிரதானிகள் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை பாரதூரமானதுடன், நாட்டுக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்தின் நிலைப்பாடு அதிருப்திக்குரியததென பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

உதய கம்மன்பில மேலும் தெரிவிக்கையில், முப்படைகளின் தளபதியான நிறைவேற்றுத்துறை அதிகாரமிக்க ஜனாதிபதியின் கட்டளையின் பிரகாரம் நாட்டுக்காகவே இராணுவத்தினர் யுத்தக் களத்துக்கு சென்றார்கள். எவரும் தமது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்காக செல்லவில்லை. ஆகவே இராணுவத்தினரை என்றும் பாதுகாக்கும் கடப்பாடு இலங்கை அரசுக்கு உண்டு. இவ்விடயத்தில் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு என்னவென்பது எமக்கும்,உலகத்துக்கும் அவசியமற்றது.

பிரித்தானியா விதித்துள்ள தடையில் முன்னாள் இராணுவ தளபதி இருவர் மற்றும் கடற்படைத் தளபதி ஒருவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.இது மிகவும் பாரதூரமானதுடன்,நாட்டின் கௌரவத்துக்கும் களங்கம் ஏற்படுத்தும். தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகவே இந்த தடையினை விதித்துள்ளதாக பிரித்தானியா அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாகவே தமிழ் பிரிவினைவாதிகளின் அழுத்தம் என்று குறிப்பிடுகிறோம். பிரித்தானியாவில் பலம் உள்ள தமிழ் பிரிவினைவாதிகள் தான் அரசாங்கத்தை தீர்மானிக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளிலும் இந்நிலைமையே காணப்படுகிறது என்றார்.

எம்பி சாமர சம்பத் விளக்கமறியலில் ! 

எம்பி சாமர சம்பத் விளக்கமறியலில் !

மூன்று வழக்குகள் தொடர்பாக நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு, இரண்டு வழக்குகளில் பிணை கிடைக்கப்பெற்ற போதிலும், மற்றொரு வழக்கிற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அதன்படி, சாமர சம்பத் தசநாயக்கவை ஏப்ரல் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊழல் குற்றச் சாட்டிலேயே சாமர கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு அரச வங்கிகளில் இருந்து

இரண்டரை மில்லியன் ரூபா நிதியை ஊவா மாகாண சபைக்காக பெற்றுக்கொண்டு அந்த நிதியை சாமர சம்பத் தசநாயக்க தனது நிதியத்தின் கணக்கில் வைப்பீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேநேரம் மற்றுமொரு வங்கியிடம் ஊவா மாகாண சபைக்காக பெறப்பட்ட ஒரு மில்லியன் ரூபாவை முதலமைச்சராக இருந்த சாமர சம்பத் தசநாயக்கவே வங்கிக்கிளையில் நேரடியாகவே பெற்றுக்கொண்டது.

மேலும் அரச வங்கியொன்றில் தனிப்பட்ட நிதியை கோரியபோது அதனை வழங்க மறுத்த வங்கி முகாமையாளருடன் முரண்பட்டுக்கொண்டு அந்த வங்கியில் ஊவா மாகாண சபை பேணி வந்த பல்வேறு நிலையான வங்கிக்கணக்குகளை நீக்கிக்கொண்டதன் மூலம் அரசாங்கத்திற்கு 23 மில்லியன் ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியமையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்துறை, தொழில்துறை மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு முக்கியம் ஆளுநர் வலியுறுத்து !

கல்வித்துறை, தொழில்துறை மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு முக்கியம் ஆளுநர் வலியுறுத்து !

 

வடமாகாணத்தை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தால் வளர்ச்சி செய்ய கல்வித்துறை, தொழில்துறை மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மிக முக்கியமானது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தூய சக்தி மற்றும் சுகாதார பயன்பாடுகளுக்கான ‘நனோ’ (நுண்ணணு தொழில்நுட்பம்) திரவியங்கள் மற்றும் தொழில்நுட்பம் குறித்த சர்வதேச மாநாடு – 2025 மாநாட்டில் தெரிவித்தார்.

அங்கு மேலும் உரையாற்றிய ஆளுநர், வட மாகாணம் கடந்த காலங்களில் பல்வேறு தடைகளை எதிர்கொண்டு மீண்டும் வளர்ச்சிக்கான பாதையில் பயணிக்கிறது. எனினும், தூய்மை ஆற்றல் மற்றும் சுகாதாரம் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் இன்னும் பல முன்னேற்றங்கள் தேவை. நம்பகமான மற்றும் குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்காமையால் பொருளாதார வளர்ச்சிக்கு அது தடையாக உள்ளது. கிராமப்புற சமூகங்கள் பெரும்பாலும் மின்சாரப் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன. இது கைத்தொழில், விவசாயம் மற்றும் அத்தியாவசிய சேவைகளை பாதிக்கிறது. சூரிய சக்தி, காற்றாலை மற்றும் உயிரி ஆற்றல் உள்ளிட்ட இயற்கை எரிசக்தி மூலம் பெற்றுக்கொள்ளப்படும் தீர்வுகளின் முன்னேற்றம், மேற்படி சவால்களை எதிர்கொண்டு வெற்றிகரமாக பயணிப்பதற்கு உதவும் என்றார்.

 

பாலஸ்தீனத்தில் சிறுவர்களை கொல்லும் இஸ்ரேலுக்கு உதவும் பிரித்தானியா இலங்கைக்கு தடை !

பாலஸ்தீனத்தில் சிறுவர்களை கொல்லும் இஸ்ரேலுக்கு உதவும் பிரித்தானியா இலங்கைக்கு தடை !

 

இலங்கையில் இடம்பெற்ற 30 ஆண்டு கால கொடூர யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்த, முன்னாள் படை வீரர்களுக்கு எதிராக பிரித்தானியா தடை விதித்துள்ளது. ஆனால் அப்பாவி பாலஸ்தீனியர்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல் இராணுவத்துக்கு பிரித்தானியா ஆதரவளித்து வருகிறது. அவ்வாறெனில் இலங்கை இராணுவத்துக்கொரு நீதி, இஸ்ரேல் இராணுவத்துக்கொரு நீதியா ? என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கேள்வியெழுப்பியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட போது, இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதென்றால், காசாவிலுள்ள அப்பாவி மக்களை இஸ்ரேல் கொன்று குவிப்பது மனித உரிமை மீறல் இல்லையா என்று பிரித்தானியாவிடம் கேட்கின்றேன். இஸ்ரேல் படை வீரர்களுக்கும் அரச தலைவர்களுக்கும் எதிராக எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? காசாவில் சுமார் 50 000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 70 சதவீதமானோர் பெண்கள் மற்றும் சிறுவர்களாவர். இவ்வாறு அராஜகத்தில் ஈடுபடும் இஸ்ரேல் இராணுவத்துக்காக பிரித்தானியா ஒரு பில்லியனுக்கும் அதிக உதவிகளை வழங்கியிருக்கிறது. இஸ்ரேல் இராணுவத்துக்கு எதிராக விதிக்கப்படாத தடை எதற்காக இலங்கை இராணுவத்துக்கு மாத்திரம் விதிக்கப்பட வேண்டும்? பக்க சார்பாக செயற்படும் பிரித்தானிவின் செயற்பாட்டை கடுமையாகக் கண்டிக்கின்றோம் என்றார்.

எப்படியாயினும் இலங்கையில் இடம்பெற்ற இனமோதலில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு எப்படி நியாயம் கிடைக்க வேண்டுமோ அவ்வாறே இனப்படுகொலைக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும். இனப்படுகொலையில் ஈடுபடும் நெத்தன்யாகு தலைமையிலான இஸ்ரேல் அரசாங்கம் தண்டிக்கப்பட வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் வலியுறுத்துகின்றன.

உள்ளூராட்சி சபைத்தேர்தலில் ஒரு வாக்காளருக்கு செலவிடக்கூடிய அதிகபட்சத் தொகை 160 ரூபா !

உள்ளூராட்சி சபைத்தேர்தலில் ஒரு வாக்காளருக்கு செலவிடக்கூடிய அதிகபட்சத் தொகை 160 ரூபா !

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு அமைவாக ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்குச் செலவிடக்கூடிய அதிகபட்சத் தொகை 74 ரூபா முதல் 160 ரூபாவிற்கும் இடைப்பட்ட தொகை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் நடைபெறவுள்ள 336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் இந்தத் தொகை தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு அமைவாக ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்குச் செலவிடக்கூடிய மிகக் குறைந்த தொகையான 74 ரூபா, மன்னார் உள்ளூராட்சி மன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகபட்ச தொகையான 160 ரூபா லஹுகல உள்ளூராட்சி மன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இந்திய மீனவர்களை மனிதாபிமானமாக நடத்த வெளியுறவுமைச்சர் ஜெய்சங்கர் கோரிக்கை! 

இலங்கை இந்திய மீனவர்களை மனிதாபிமானமாக நடத்த வெளியுறவுமைச்சர் ஜெய்சங்கர் கோரிக்கை!

 

தமிழக கடற்றொழிலாளர்கள் அத்துமீறும் விவகாரத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு கடந்த 1974 மற்றும் 1976 ல் எடுக்கப்பட்ட முடிவுகளே மூலகாரணம் ” என இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

கடற்றொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக இந்திய பாராளுமன்றில் கருத்து தெரிவித்துள்ள கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இலங்கை சிறைகளில் 97 இந்திய கடற்றொழிலாளர்கள்உள்ளனர்.

இதனை கையாள்வது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. 1974 ல் அப்போது மத்தியில் இருந்த அரசு, மாநில அரசுடன் ஆலோசித்து சர்வதேச கடல் எல்லையை வரையறுத்த போது தான் இந்த பிரச்னை தொடங்கியது. பிறகு 1976 ல் மீன்பிடிப்பது தொடர்பாக எல்லை வரையறை தொடர்பான கடித பரிமாற்றம் நடந்தது. எனவே 1974 மற்றும் 1976 ல் எடுக்கப்பட்ட முடிவுகளே தற்போது நிலவும் பிரச்சனைகளுக்கு மூல காரணமாக உள்ளது.

இந்திய கடற்றொழிலாளர்கள் விவகாரத்தை மனிதாபிமான அடிப்படையில் கையாள வேண்டும் என இலங்கை அரசை வலியுறுத்தி வருகிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 26 ஆம் திகதி வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 40 வரையான இந்திய மீனவர்களை இந்திய மீனவ சங்க பிரதிநிதிகள் பார்வையட்டு கலந்துரையாடினர்.

இதேவேளை அத்துமீறும் மீனவர்களின் கைது மற்றும் வடக்கின் கடல் வளம் அழிக்கப்படுவது தொடர்பாக தமிழக – இலங்கை வடமாகாண மீனவர்கள் இடையான சந்திப்பு ஒன்று வவுனியாவில் நடைபெற்றிருந்தததும் குறிப்பிடத்தக்கது.