January

January

whatsapp மூலம் அவதூறு பரப்பிய பெண்ணுக்கு தூக்கு தண்டனை – பாகிஸ்தானில் சம்பவம் !

பாகிஸ்தானை சேர்ந்த அனீகா ஆதிக் என்ற பெண் தனது ‘வட்ஸ்-அப்’ ஸ்டேட்டசில் அவதூறு குறுஞ்செய்தியையும் மற்றும் கேலி சித்திரத்தையும் வெளியிட்டதாக கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக அனீகா ஆதிக்குக்கு பாகிஸ்தான் ராவல்பிண்டி கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

சாகும் வரை அவரை தூக்கிலிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அரசியலில் இருந்து ஓரங்கட்டப்படுகிறாரா கமலா ஹாரிஸ் . ? – ஜோ பைடன் பதில் என்ன.. !

அமெரிக்காவில் துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவி வகித்து வருகிறார். இவர் சமீப காலமாக ஓரங்கட்டப்படுவதாக செய்திகள் பரவின.

கடந்த மாதம் கமலா ஹாரீஸ் அளித்த பேட்டியில் 2024-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் ஜோ பைடன் போட்டியிடுவாரா? என்று கேட்டதற்கு, நான் அதைப் பற்றி நினைக்கவில்லை. நாங்களும் இது தொடர்பாக எதுவும் பேசவில்லை என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் நிருபர்கள் அதிபர் தேர்தலில் உங்களுக்கு போட்டியாக கமலா ஹாரீஸ் வருவாரா? என கேட்டனர். அதுபற்றி ஜோபைடன் கூறும்போது, கமலா ஹாரீஸ் தனது வேலையை சிறப்பாக செய்து வருகிறார் என நினைக்கிறேன்.

அதிபர் தேர்தலில் எனக்கு அவர் போட்டியாக இருப்பார் என நினைக்கிறேன். ஆனால் இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார்.

கொரோனா முகக்கவசங்களுக்கு goodbye சொல்கிறது இங்கிலாந்து !

சுமார் 2 வருடங்களாக கொரோனா உலகை முழுமையாக உலுக்கி வருகின்ற நிலையில் அதனுடைய வீரியம் குறைந்தபாடில்லை. எனினும் வளர்ச்சியடைந்த நாடுகள் முறையாக இதனை ஒரளவு கட்டுப்படுத்தியுள்ளன. முக்கியமாக கொரானா கட்டுப்படுத்தப்பட்டமை தொடர்பில் இங்கிலாந்து அரசு அந்நாட்டு பிரஜைகளுக்கு மகிழ்வான செய்தி ஒன்றை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிவித்துள்ள இங்கிலாந்தின் பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் “இங்கிலாந்தின் பிளான் பி நடவடிக்கைகள் அடுத்த வியாழன் முதல் நிறைவுக்கு வருமென தெரிவித்துள்ளார்.

இதன்படி, பொது இடங்களில் கட்டாயமாக முகக்கவசம் அணிவது மற்றும் கொவிட் கடவுச்சீட்டு இரண்டும் கைவிடப்படும்.

மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்ற ஆலோசனையை அரசாங்கம் உடனடியாக கைவிடும் என்றும் பிரதமர் கூறினார்.

பூஸ்டர் தடுப்பூசிகள் காரணமாக இங்கிலாந்து ‘பிளான் -ஏ’க்கு திரும்புகிறது மற்றும் மக்கள் பிளான் பி நடவடிக்கைகளை எவ்வாறு பின்பற்றினார்கள் என்று பிரதமர் விளக்கினார்.

ஓமிக்ரோன் அலை தேசிய அளவில் உச்சத்தை எட்டியுள்ளதாக விஞ்ஞானிகள் நம்புவதாக அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறினார்.

டவுனிங் ஸ்ட்ரீட் ஊடக சந்திப்பில், சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் ‘இது நாம் அனைவரும் பெருமைப்படக்கூடிய தருணம். நாம் அனைவரும் ஒன்றாக வேலை செய்யும் போது இந்த நாடு என்ன சாதிக்க முடியும் என்பதை இது நினைவூட்டுகிறது’ என கூறினார்.

அமெரிக்காவில் 5G தொழில்நுட்பம் – விமான நிறுவன அதிகாரிகள் அச்சம் !

அமெரிக்காவில் தொலைபேசி நிறுவனங்கள் அறிமுகப்படுத்தும் 5 G தொழில்நுட்பத்தால் விமான சேவைகள் பாதிக்கும் என்று விமான நிறுவன அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 5 G தொழில்நுட்ப சிக்னல்களால் விமானத்தின் ஆல்டிமீட்டர் போன்ற கருவிகள் செயல்படுவது பாதிக்கப்படும் என்று அவர்கள் ஐயம் தெரிவித்துள்ளனர்.

5 G அலைக்கற்றையின் ஊடுருவலால் கருவிகள் பாதிக்கப்பட்டால் விமானங்களை இயக்க முடியாத நிலை ஏற்படும் என்றும் விமான நிறுவன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

செயற்கை நிலவை உருவாக்கி சீனா சாதனை !

மின் செலவை குறைப்பதற்காக செயற்கை சூரியனை சீனா அண்மையில் உருவாக்கி உலக நாடுகளை பிரமிப்பில் ஆழ்த்தியிருந்தது.  இந்த நிலையில் உலகில் முதன் முறையாக  செயற்கை நிலவை சீனா உருவாக்கி சீனா இன்னும் புதிய பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த திட்டத்தின் தலைவரும், சீன சுரங்கம் மற்றும் தொழில்நுட்ப பல்கலை விஞ்ஞானியுமான லி ருய்லின் தெரிவித்த போது,

நிலவைப் போலவே செயற்கை நிலவை உருவாக்கியுள்ளோம். நிலவில் ஈர்ப்பு விசை இல்லை என பலர் நினைக்கின்றனர். அது தவறு.

புவியீர்ப்பு விசையில் ஆறில் ஒரு பங்கு  நிலவில் உள்ளது. இதற்கு அங்கு நிலவும் காந்த அலைகள் தான் காரணம். இத்தகைய குறைந்த ஈர்ப்பு விசையை விமான சோதனையில் தற்காலிகமாக உருவாக்க முடியும்.

ஆனால் செயற்கை நிலவில் இத்தகைய ஈர்ப்பு விசையை நாம் விரும்பும் காலம் வரை நீட்டித்துக் கொள்ளலாம். இதனால் சீனா, பிற நாடுகளைப் போல ஈர்ப்பு விசையற்ற விமானங்களில் விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்காமல் ஆய்வுகளை சுலபமாக மேற்கொள்ளலாம். மேலும், 2 அடி விட்டமுள்ள இந்த சிறிய செயற்கை நிலவில், இயற்கை நிலவில் உள்ளது போன்ற எடை குறைந்த மணல், கற்கள் துாசிகள் நிரப்பப்பட்டுள்ளன .

இதில் மேற்கொள்ளப்படும் சில சோதனைகளில், முடிவுகள் சில வினாடிகளில் தெரிந்து விடும். அதேவேளை ஒரு சிலவற்றின் முடிவுகளை அறிய பல நாட்கள் ஆகும் என தெரிவித்துள்ளார்.

 

சீனாவில் பிறப்பு விகிதம் ஐந்தாவது ஆண்டாகவும் சரிவு !

உலகிலேயே அதிக மக்கள்தொகையைக் கொண்டுள்ள நாடு சீனா. ஆனால், அங்கு சமீபகாலமாக குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இதை சரிக்கட்ட சீன தம்பதிகள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதற்கு இருந்த கட்டுப்பாட்டை நீக்கி, இனி 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என அந்நாட்டு அரசு கடந்த கடந்த ஆகஸ்டு மாதம் அறிவித்தது.
மேலும், சீன தம்பதிகள் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு மானியங்கள், வரிக்குறைப்பு, பேறுகால விடுமுறை உள்ளிட்ட சலுகைகளை மாகாண அரசுகள் அறிவித்துள்ளன.
இந்நிலையில், சீனாவில் 2021-ம் ஆண்டு மக்கள் தொகை அறிக்கையை அந்நாட்டின் தேசிய புள்ளிவிவரத் துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:
கடந்த 2021-ல் சீனாவின் மக்கள் தொகை 141 கோடியே 26 லட்சமாக உயர்ந்துள்ளது. இது, 2020ல் 141 கோடியே 20 லட்சமாக இருந்தது. இதன்படி கடந்த ஒரு ஆண்டில் மக்கள் தொகை ஆறு லட்சம் அதிகரித்துள்ளது. இதே காலத்தில் குழந்தை பிறப்பு விகிதம் ஒரு கோடியே ஆறு லட்சமாகக் குறைந்துள்ளது. தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது என தெரிவித்துள்ளது.
சீனாவில் பிறப்பு விகிதம் சரிந்து வருவது பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும். வேலை செய்யும் திறன் உள்ளோர் மற்றும் ஓய்வூதியம் பெறுவோரின் விகிதாச்சாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

ஐ.நா. வின் ‘கோவேக்ஸ்’ திட்டம் – ஏழை நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகள் விநியோகம் !

கொரோனா நோய் தொற்று தொடங்கிய பிறகு பல ஏழை நாடுகள் அதற்கான தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நாடுகளுக்கு உதவும் வகையில் ஐ.நா. சபை ‘கோவேக்ஸ்’ என்ற உலகளாவிய தடுப்பூசி  திட்டத்தை கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது.

வளர்ந்த மற்றும் பணக்கார நாடுகள் இந்த திட்டத்தின் கீழ் நன்கொடையாக அளித்த தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு வழங்கி வருகிறது. தடுப்பூசிகள் வினியோகத்தில் சமத்துவமின்மை நிலவுவதாக நீண்ட நாட்களாக குற்றம்சாட்டி வரும் உலக சுகாதார அமைப்பு, பிற நாடுகளும் கோவேக்ஸ் திட்டத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

கடந்த 13-ந்திகதி நிலவரப்படி 194 உறுப்பு நாடுகளில் 36 நாடுகள் 10 சதவீதத்துக்கு குறைவாகவும், 88 நாடுகள் 40 சதவீதத்துக்கு குறைவாகவும் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கடந்த மாதம் கூறுகையில்,

‘‘வருகிற ஜூலைக்குள் அனைத்து நாடுகளும் 70 சதவீதம் தடுப்பூசி செலுத்திக் கொள்வதாக இலக்கு நிர்ணயித்து புத்தாண்டு தீர்மானமாக எடுத்துக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

இந்தநிலையில் ஐ.நா. சபை மூலம் ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் இதுவரை 100 கோடி டோஸ் தடுப்பூசிகள் வழங்கி சாதனை படைத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு நேற்று தெரிவித்தது.

ருவாண்டாவுக்கு கடந்த 15-ந்திகதி 11 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் இந்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 100 கோடியை எட்டியுள்ளது.

அபுதாபி விமான நிலையத்தில் டிரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல் !

ஐக்கிய அரபு அமீரக தலைநகரான அபிதாபி விமான நிலையம் அருகே டிரோன் மூலம் வெடிக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  டிரோன் தாக்குதலில் விமானநிலையத்தில் இருந்த 3 எரிப்பொருள் டேங்கர்கள் சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டுமான பகுதியில் டிரோன் மூலம் வெடிக்குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. அபிதாபி டிரோன் தாக்குதலுக்கு ஏமனை சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

அபுதாபியில் மூன்று எண்ணெய் டேங்கர்களில் ட்ரோன்கள் வெடித்திருக்கலாம் மற்றும் அபுதாபியின் முக்கிய சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கத்திற்காக கட்டுப்பட்டு வரும் கட்டுமான இடத்தில் நடந்ததாகக் காவல்துறை அறிக்கை கூறியுள்ளது. அபுதாபியின் அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனமான ADNOC இன் சேமிப்புக் கிடங்கு அருகே மூன்று பெட்ரோலியம் டேங்கர்களில் தனித்தனியாக வெடிப்பு ஏற்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் ட்ரோன்களுக்கு சொந்தமான சிறிய பறக்கும் பொருட்கள் இரு பகுதிகளில் விழுந்து வெடிப்பு மற்றும் தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அபுதாபி போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த வெடிக்குண்டு தாக்குதலில் குறிப்பிடத்தக்க சேதம் எதுவும் இல்லை என்று அவர்கள் தெரிவித்தாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு இத்தாக்குதலை நடத்தியதற்கு போறுப்பேற்றுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் யேமனில் 2015 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து போரில் ஈடுபட்டுள்ளது. மேலும் ஏமனின் தலைநகரைக் கைப்பற்றி அங்குள்ள சர்வதேச ஆதரவுடைய அரசாங்கத்தை வெளியேற்றியது. பின்னர் ஈரானிய ஆதரவு ஹூதிகளுக்கு எதிராக தாக்குதல்களை நடத்திய சவுதி தலைமையிலான கூட்டணியின் முக்கிய உறுப்பினராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளரின் இசைக்கருவிகளை பிடுங்கி நடு வீதியில் தீயிட்டு எரிக்கும் தலிபான்கள்- வைரலாகும் கலைஞரின் கண்ணீர் !

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதையடுத்து அந்நாட்டில் பல்வேறு சமூக, கலாச்சார கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றாக இசையும் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.
வாகனங்களில் செல்வோர் இசை கேட்கவும், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் இசை வாத்தியங்களை ஒலிக்கவும் தலிபான்கள்  தடை விதித்திருந்தனர். இந்நிலையில் தற்போது உள்ளூர் இசையமைப்பாளர் ஒருவரின் இசைக்கருவிகளை பிடுங்கி நடு வீதியில் தீயிட்டு எரிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் பாக்தியா மாகாணத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் இசையமையாளர் ஒருவரிடம் இருந்து இசைக்கருவி பிடுங்கப்பட்டு, நடுரோட்டில் தீயிட்டு எரிக்கப்படுகிறது. இதை கண்டு அந்த இசையமைப்பாளர் அழுகிறார். ஆனால் தலிபான்கள் அவரின் அவல நிலையை கண்டு சிரிக்கின்றனர்.
https://twitter.com/AbdulhaqOmeri/status/1482222803906617347?s=20
இந்த வீடியோவை ஆப்கானிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

பிரிடிஸ் இளவரசராக இருந்தால் என்ன பிரதமரக இருந்தால் என்ன எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியுமா!!!

               Photo by Nils Jorgensen/REX 

வழமைபோல் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தனது தைப்பொங்கள் வாழ்த்துக்களை ‘வணக்கம்’ என்று ஆரம்பித்து ‘நன்றி’ என்று கூறி முடித்தார். அவருடைய 100 செக்கன்கள் கொண்ட வாழ்த்துச் செய்தியில் பெரும்பாகம் கோவிட் கால நடைமுறைகளை மீள ஞாபகப்படுத்தி அதன்படி தைப்பொங்கலை கொண்டாடும்படி கேட்டுக்கொண்டார். தமிழர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் கோவிட் நடைமுறைகளை அடிக்கடி ஞாபகப்படுத்தும் பிதரமர் தனக்கென்று வரும்போது அவற்றை மறந்துவிடுகின்றார். இந்த தமிழ் புதுவருடமோ ஆங்கிலப் புதுவருடமோ நமக்கெல்லாம் எப்படி அமையப் போகிறதோ இல்லையோ பிரதமர் பொறிஸ்க்கும் பிரித்தானிய மகாராணி எலிசபத்தின் செல்ல மகன் அன்ரூவுக்கும் அட்டமத்தில் சனி ஆரம்பித்துவிட்டது.

பிரதமர் பொறிஸ் ஒரு கவர்ச்சிகரமான அரசியல்வாதி. வாயாலேயே சுடச்சுட வடை சுட்டுத்தரும் வல்லமை அவருக்கு உண்டு. அவருடைய தேர்தல் பிரச்சாரத்தில் பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே ‘அவுன் ரெடி’ டீல் இருப்பதாக மக்களை ஏமாற்றியவர். பதவிக்கு வந்து இவ்வளவு காலமாகிவிட்டது இன்னமும் அந்த இழுபறி முடிந்தபாடில்லை. பொதுவாகவே பிரித்தானிய பிரதமர் நாட்டு மக்களோடு கதைக்கின்ற போதோ அல்லது நாட்டு தலைவர்களோடு கதைக்கின்ற போதோ கூட உள்ளடக்கம் இல்லாமல் நுனிப்புல் மேயும் போக்கிலேயே பேசுவார். அவருடைய உரைகளில் உள்ளடக்கம் மட்டுமல்ல உண்மையும் இருப்பதில்லை என்பது பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆனால் அவரது பதவியை பாதிக்காத விடயமாக இதுவரை இருந்தது. இவர் தமிழ் மக்களுக்கு தலைவராகவோ அல்லது ஆசிய நாடுகள் ஒன்றின் தலைவராகவோ இருந்திருந்தால் அவருடைய மரணம் வரை அவர் தலைவராக இருந்திருப்பார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். நிறம் மட்டும் திராவிட நிறமாக இருந்திருந்தால் பொறிஸ் தமிழர்களுக்கே தலைவராகி இருக்க முடியும்.

துரதிஸ்டவசமாக பொறிஸ் பிரித்தானிய பிரதமராக இருப்பதால் அவருடைய அண்மைய எதிர்காலம் அவ்வளவு இலகுவானதாக இருக்கப் போவதில்லை. மக்கள் பிரித்தானியாவின் பின்னடைவுக்கு ஐரோப்பிய ஒன்றியமே காரணம் என நம்பவைக்கப்பட்டனர். ஆரம்பத்தில் மதில் மேல் பூனையாக நின்ற அன்றைய பொறிஸ் பின்னர் பிரதமர் பதவிக்கு வருவதற்கு கொன்சவேடிவ் கட்சியின் அடிப்படைவாதத்தை ஏற்றுக்கொள்வதே சரியெனத் தெரிவுசெய்து, ஐரோப்பாவில் இருந்து பிரித்தானியா வெளியேறினால் சுபீட்சம் வந்துவிடும் என்று பிரச்சாரம் செய்து, 2016 கருத்துக்கணிப்பில் வெற்றி பெற்று, பின் 2019இல் பிரதமரும் ஆனார்.

அவர் பிரதமராகி ஓராண்டுக்கு உள்ளாக கோவிட் தலைவிரித்தாடியது. ஏற்கனவே குறிப்பிட்டது போல் பிரதமர் பொறிஸ் ஒரு காத்திரமான தலைவர் அல்ல. அவருக்கு மக்களைக் கவர்ந்து அவர்களது வாக்குகளைக் கவர்ந்து ஆட்சிக்கு வர முடியுமேயொழிய ஆட்சியை திறம்பட நடத்தும் ஆற்றலும் பொறுப்புணர்வும் இருக்கவில்லை.

அவருடைய பொறுப்பற்ற முடிவுகளால் குறிப்பாக மிக்க காலதாமதமாக முதலாவது லொக்டவுன் கொண்டுவரப்பட்டது முதல் பல அடுத்தடுத்த தவறுகளால் முதல் ஆண்டில் பிரித்தானியாவிலேயே அதன் மக்கள் தொகைக்கு கூடுதலான மக்கள் கோவிட்-19 இல் கொல்லப்பட்டனர். இந்த கோவிட் காலத்தில் பிரித்தானிய பெற்றுக்கொண்ட கடன் தொகை 200 பில்லியன் பவுண்கள். பிரதமர் பொறிஸின் நட்பு வட்டங்களில் இருந்த நிறுவனங்கள் கோவிட் பாதுகாப்பு அங்கிகளை இறக்குமதி செய்வதற்கு அங்கிகாரம் வழங்கி, அதற்கு செலுத்தப்பட்ட லஞ்சம், வாங்கப்பட்ட கடனில் 10 வீதம் 20 பில்லியன் பவுண்கள்.

இவையெல்லாம் போதாது என்று 2021 ஏப்ரலில் புதிய பிரளயம். பிரதமர் பொறிஸ் தனது வீட்டை அழகுபடுத்துவதற்கு கட்சிக்கு நன்கொடை வழங்கும் ஒருவர், அவர் பிரபுக்கள் சபைக்கு தெரிவானவர், அதற்கான செலவு 200,000 பவுண்களை செலுத்தி இருந்தார். அதனை அந்த நபர் இலவசமாகச் செய்யவில்லை. அதற்கு பிரதியுபகாரமாக மற்றுமொரு கொன்ராக் பேசப்பட்டுள்ளது. இந்தப் பொட்டுக்கேடுகளெல்லாம் வெளிச்சத்திற்கு வர பொறிஸ் ஓடிப்போய் தானே திருத்தச் செலவின்கான நிதியைச் செலுத்தினார்.

இதற்கு முன்னரே பிரதமரின் விசேட ஆலோசகர் டொமினிக் கம்மிங்ஸ் கோவிட்-19 விதிகளை மீறியது தொடர்பில் சிக்கலில் இருந்தவர். இவரே அன்றைய நாட்களில் ஆட்சியை நடத்திக்கொண்டிருந்தவர் என கொன்சவேடிவ் கட்சிக்குள்ளேயே பெரும் புகை கிளம்பிக்கொண்டிருந்தது. இறுதியில் 2020 நவம்பரில் கட்சி அவரை பிரதமரின் நம்பர் 10 உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இருந்து கலைத்துவிட்டது.

அன்று டொமினிக் கம்மிங் கோவிட் -19 விதிகளை மீறியதாகக் குறம்சுமத்தப்பட்டது. கடந்த சில வாரங்களாக நம்பர் 10 இல் நடந்த குடியும் கும்மாளங்களும் அம்பலத்துக்கு வந்துள்ளது. 2020 முதலாம் இரண்டாம் லொக்டவுன்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலகட்டம் அரசு அனைவரையும் தனிமைப்படுத்தச் சொல்லிவிட்டு அந்த விதியை உருவாக்கிய அரசின் மைய அலுவலகத்திலேயே குடியும் குத்துப்பாட்டு கும்மாளங்களும் இடம்பெற்றுள்ளது.

இதில் ஒரு கும்மாளத்தில் பிரதமர் பொறிஸ் 25 நிமிடங்கள் கலந்துகொண்டுள்ளார். அவர் அடிக்கடி வந்து பார்ட்டியில் கலந்துகொண்டு அம்பலப்படாமல் இருக்க அவரை கீழே பார்ட்டிக்கு வரவிடாமல் தடுக்க கதிரைகளை அடுக்கி அவரை கீழே வரவிடாமல் வேறு செய்துள்ளனர். கிட்டத்தட்ட குழந்தைப் பிள்ளைகளுக்கு சைல்ட் லொக் (chilf-lock) போடுவது போல் என இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த அதிரடி நடவடிக்கைக்கு வைக்கப்பட்ட பெயர் ‘protect the top wild dog‘. இவையெல்லாம் அம்பலமாகி வரும் வேகத்தைப் பார்த்தால் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அடுத்த தேர்தல் வரை தாக்குப் பிடிப்பாரா என்ற சந்தேகம் பரவலாக எழுந்து வருகின்றது.

இதுவரை பிரதமர் தப்பிக்கொண்டதற்கு காரணம் கொன்சவேடிவ் கட்சிக்குள் பிரதமர் பொறிஸ்க்கு எதிரான காத்திரமான தலைமைகள் இல்லாததே அல்லது இருந்தும் யார் பூனைக்கு மணி கட்டுவது என்ற பிரச்சினையாகவும் இருக்கலாம். அடுத்த தலைமைக்கு தயாராக இருப்பவர்களில் முக்கியமானவர்கள் மைக்கல் கோவ், ரிஷி சுனாக், சஜித் ஜாவட், ஜெரிமி ஹன்ட். ப்ரித்தி பட்டேலும் அதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளார்.

தற்போது கொன்சவேடிவ் கட்சியில் 360 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 54 உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே பொறிஸ்க்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முடுக்கிவிட முடியும். இப்போது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வெறும் 22 உறுப்பினர்களே உள்ளனர். ஆனால் தற்போது நம்பர் 10 இல் இடம்பெற்ற பார்டிகள் பற்றி தனக்கு பெரிதாக எதுவும் தெரியாது என்றும் அவை வெறும் வேலை நேர அல்லது வேலையுடனான கூட்டே என பிரதமர் தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றார்.

பிரதமரின் நம்பர் 10 கார்டின் 24 மணி நேர சிசிரிவி பொருத்தப்பட்டு அது பொலிஸாரின் கண்காணிப்பிலும் இருந்து வந்தது. இந்தப் பார்ட்டியை சிசிரிவி யில் பார்த்தும் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் இதையே மாணவர்கள் செய்த போது பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். அபராதம் வித்தித்தனர். தமிழ் திருமணங்களில் கலந்துகொண்ட பலருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. அதிகாரமும் பணமும் உள்ளவர்களுக்கு ஒரு சட்டம். இல்லாதவர்களுக்கு இன்னொரு சட்டம்.

பல்வேறு அழுத்தங்கள் காரணமாகவும் தற்போது சூ க்ரேவ் என்பவர் தலைமையிலான விசாரணைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. சூ க்ரேவ் இன் அறிக்கையிலேயே பிரதமர் பொறிஸ்ஸின் எதிர்காலம் ஊசலாடுகின்றது. சூ க்ரேவ் ஓரளவு நேர்மையுடன் செயற்படுவார் எனவே பலரும் எதிர்பார்க்கின்றனர். அவரை பிரதமரே நியமித்தும் உள்ளார். பிரதமரே சர்ச்சைக்குள்ளான ஒருவராக இந்த விசாரணையில் இருக்கின்ற போது அவரால் நியமிக்கப்பட்டவர் எப்படி பிரதமருக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டை விசாரிக்க முடியும் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகின்றது. சூ க்ரேவ் உண்மையில் நம்பர் 10 இல் என்ன நடந்தது என்பதையே ஆராய்கின்றார்.

பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் எதிர்காலத்தை கொன்சவேடிவ் கட்சியும் பாராளுமன்றமுமே தீர்மானிக்கும். அடுத்த வாரம் வரவேண்டிய அறிக்கை இன்று வெளியான புதிய தகவல்களை ஆராய மேலும் ஒருவாரம் நீடிக்கப்பட்டு இருக்கின்றது. இன்றைய தகவலின் படி நம்பர் 10 இல் குடிவகைகளை ஸ்ரோர் பண்ணுவதற்கு குளிரூட்டி ஒன்று கொண்டுவரப்பட்டு, அதில் குடிபானங்கள் நிரப்பப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து அருகில் உள்ள வெயிற்ரோஸ் சுப்பர்மார்க்கற்றுக்கு சூட்கேஸ் கொண்டு சென்று குடிபானங்களை வாங்கி கையிருப்பிலும் வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.

ஜெப்ரி எப்ஸ் ரீன் தொடர்ச்சியாக பாலியல் குற்றங்கள் புரிந்து வந்த ஒரு செல்வந்தர். முதலீட்டாளர். அமெரிக்கர். இவர் இளம் பெண்களை ஆசை வார்த்தைகளைக் காட்டி மயக்கி தனதும் தன்னைச் சார்ந்தவர்களது பாலியல் இச்சைக்கும் வழங்கி வருபவர். ஜெப்ரி எப்ஸ் ரீன் இந்த மாமா வேலைக்கு உடந்தையாக அவருடைய மிகச் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்த க்ளைன் மகஸ்வெல் இருந்துள்ளார். இவ்வாறான கிரிமனல் சிந்தனையுடையவர்களுக்கு வின்சர் அரண்மனையில் மகாராண எலிசபத்தின் செல்ல மகன் அன்ரூ விருந்துபசாரம் செய்துள்ளார். ஜெப்ரி எப்ஸ் ரீனின் விடுமுறை வாஸஸ்தலங்களில் அன்ரூ சென்று தங்கியும் வந்துள்ளார். அதனை அவர் ஏற்றுக்கொண்டும் உள்ளார்.

பல பாலியல் குற்றங்களுக்காக 2019 யூலை 6 ஜெப்ரி எப்ஸ் ரீன் கைது செய்யப்பட்டு பிணை மறுக்கப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். சில வாரங்களில் 2019 யூலை 23 இல் அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்ததாக அறிவிக்கப்பட்டது, 84 வீதமான அமெரிக்கர்கள் ஜெப்ரி எப்ஸ் ரீன் தற்கொலை செய்துகொண்டதை நம்ப மறுக்கின்றனர். 45 வீதத்தினர் அவர் கொலை செய்யப்பட்டதாகவே நம்புகின்றனர். அந்த வழக்கு நீதி மன்றத்துக்கு வந்திருந்தால் ஜெப்ரி எப்ஸ் ரீன் யாருக்கு யாருக்கு எல்லாம் இளம் பெண்களை வழங்கி இருந்தார் என்பது அம்பலமாகி இருக்கும்.

பிரித்தானியா உட்பட மேற்கு நாடுகளில் மதுக்குடில்களில் (தவறணைகளில்) இளம்பெண்களை அரைநிர்வாண நடனங்களில் ஆட வைப்பதும் இதன் பின் அவர்களை இச்சைகொள்வதும் போதைவஸ்து பாவனையும் கண்டும் காணாமல் நடைபெறும் வியாபாரங்கள். தவறணை உரிமையாளர்களின் முக்கிய வருமானங்கள் இவ்வாறுதான் வரும்.

இந்த இச்சைக்கு பிரித்தானிய மகாராணியன் செல்ல மகன் அன்ரூவும் மயங்கி வேர்ஜினியா கிவ் என்ற பதின்ம வயதுப் பெண்ணை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார். வேர்ஜினியா கிவ் இன் இடுப்பை இளவரசர் அன்ரூ பற்றி நிற்பதும் அருகில் க்ளைன் மக்வெல் நிற்கும் படமும் பிரித்தானிய சம்ராஜ்யத்தின் மையத்தை தற்போது ஆட்டம்காண வைத்துக் கொண்டிருக்கின்றது. ஒரு பொய்யை மறைக்க இன்னுமொரு பொய் என்று இளவரசர் வேர்ஜினியா கிவ் என்பவரை தனக்கு தெரியவே தெரியாது என்று மறுத்து வருகின்றார். ஆனால் இவருடைய லீலைகள் பொதுவாக எல்லோராலும் அறியப்பட்ட விடயங்களாக இருந்தது. இளவரசர் அன்ரூ பிரித்தானிய இராணுவ பட்டங்கள் அதிகாரங்கள் உடைய பொறுப்பில் இருந்தவர்.

கடந்த வருட இறுதியில் க்ளைன் மகஸ்வெல் அமெரிக்காவில் குற்றவாளியாகக் காணப்பட்டதுடன் இவ்வாரம் இளவரசர் அன்ரூவ்க்கு எதிரான சிவில் வழக்கை ஆரம்பிப்பதற்கான வழியையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து இளவரசர் அன்ரூவின் எதிர்காலம் சிக்கலானது. நேற்று தைப்பொங்கலன்று இளவரசர் அன்ரூவின் பதவிகளை பறிக்க வேண்டும் அவருக்கு வழங்கப்பட்ட பதங்கங்களை நீக்க வேண்டும் என பிரித்தானிய இராணுவ தலைமைகள் மகாராணியை கேட்டுக்கொண்டதற்கு இணங்க இளவரசர் அன்ரூவின் பதவியும் பதக்கங்களும் பறிக்கப்பட்டு அவர் அரண்மனையின் உத்தியோகபுர்வ பங்குபற்றுதல்களில் இருந்தும் நீக்கப்பட்டார். இனிமேல் அவருக்கு மரணம் வரை இவை மீளளிக்கப்பட மாட்டாது. ஆனால் தொடர்ந்தும் இளவரசர் என்றே அழைக்கப்படுவார். பதவியும் பதக்கமும் ஆடை ஆபரணங்களும் இல்லாவிட்டாலும் இளவரசர்.

செல்வத்திலும் அதிகாரத்திலும் அதன் உச்சியில் இருந்தாலும் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது.