January

January

“அற்ப அறிவுடையவர்களிடம் ஆயதங்களை ஒப்படைக்கக் கூடாது” கழுதை சுமந்த கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வில் ராஜா நித்தியானந்தன்

“அற்ப அறிவுடையவர்களிடம் ஆயதங்களை ஒப்படைக்கக் கூடாது” என கழுதை சுமந்த கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வில் நிகழ்விற்குத் தலைமை தாங்கிய ராஜா நித்தியானந்தன் தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றிய தனது கருத்தை வெளிப்படுத்தி இருந்தார். நூலாசிரியர் க பிரேம்சங்கர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் போராளி. யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவன். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தைவிட்டு வெளியேறிய போதும் அவர் கழக விசுவாசத்தை விட்டுக்கொடுக்காதவர். அந்த வகையில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சமூக விஞ்ஞானக் கல்லூரியை T3S (Tamileelam School of Social Science) ஆரம்பித்த ராஜ நித்தியானந்தன் தலைமையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்வில் இக்கல்லூரியில் கற்ற நூலாசிரியர் க பிரேம்சங்கர் முன்னணியில் திகழ்ந்ததையும் அவரை ஏனைய மாணவர்களுக்கு விளக்கும் ரியுரராக நியமித்ததையும் ராஜ நித்தியானந்தன் நினைவு கூர்ந்தார்.

உலகின் முன்னணி பொருளியல் கற்கைக்கான பல்கலைக்கழகமான லண்டன் ஸ்கூல் ஓப் எக்கொனொமிக்ஸ் பல்கலைக்கழகத்தின் கோடைவிடுமுறைப் பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு சென்னையில் உருவாக்கப்பட்ட தமிழீழ சமூக விஞ்ஞானக் கல்லூரி – T3S உருவாக்கப்பட்டதாக ராஜ நித்தியானந்தன் அதன் வரலாற்றை சுருக்கமாகக் குறிப்பிட்டார். இக்கல்லூரியில் முதலாளித்துவக் கொள்கையின் தத்துவாசிரியரான அடம் சிமித், கொம்யுனிசக் கொள்கையின் தத்துவாசிரியரான கார்ள் மார்க்ஸ் ஆகியோர்களின் தத்துவார்த்த கோட்பாடுகள் பற்றிய அரசியல் பொருளாதாரம் மாணவர்களுக்கு புகட்டப்பட்டதாகத் தெரிவித்தார். கலை இலக்கியங்களைக் கொண்ட மேற்கட்டுமானம், பொருளாதார உற்பத்தி முறை பற்றிய கீழ்கட்டுமானம் என்று ஆழமான புரிதலை ஏற்படுத்தும் பாடத்திட்டங்கள் அங்கு கற்பிக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இவற்றைக் கற்பிப்பதற்கு தமிழக பல்கலைக்கழகங்களில் இருந்து இந்த கம்யுனிஸ்ட் கட்சியில் இருந்து விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

இதன் தொடர்ச்சியாகவே “அற்ப அறிவுடையவர்களிடம் ஆயதங்களை ஒப்படைக்கக் கூடாது” என்பதைக் குறிப்பிட்டு தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றிய தனது கருத்தை முன்வைத்தார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நடத்திய அமைப்புகளிடையே அரசியல் அறிவின்மையையும் அவ்வாறானவர்களிடம் ஆயதங்கள் ஒப்படைக்கப்பட்டதன் இன்றைய நிலையையும் அவர் நாசுக்காகச் சுட்டிக்காட்டினார். தனது குறுகிய நேர உரையில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் உமா மகேஸ்வரனை குறைந்தது மூன்று தடவைகளாவது விதந்துரைத்திருந்தார். ஆனால் சமூக விஞ்ஞானக் கல்லூரியை உருவாக்கிய உமா மகேஸ்வரனும் கூட அற்ப அறிவுடையவர்களிடமே ஆயதங்களை ஒப்படைத்திருந்ததும் அவர்கள் படுகொலையாளர்களாக மாறியதும் வரலாறு.

மேலும் தமிழீழ சமூக விஞ்ஞானக் கல்லூரி கடவுள் கொள்கையை மறுத்திருந்தபோதும் அதனை உருவாக்கிய ராஜா நித்தியானந்தன் அங்கு கற்ற மாணவர்கள் சிலரும் இன்று ஆன்மீகத்தில் தடம் பதித்திருப்பது இன்னுமொரு முரண்நகை. ஐயப்பன் ஆலயத்தின் குரசாமி கிரிசாமியின் ஆசிஉரையுடள் நூல்வெயீட்டு நிகழ்வு ஆரம்பமானது.

இந்தக் கழுதை சுமந்த கவிதை அம்புலிமாமா கதைப்புத்தகம் போன்று அழகாக வடிவமைக்ப்பட்டு இருந்ததை மெச்சினார் வெளியீட்டுரையை வழங்கிய மாதவி சிவலீலன். காதலில் திளைத்தும் விடுதலைப் போராட்டம் என்று சென்று வந்து மார்க்ஸிஸக் கருத்துக்களை உதிர்த்தும் கவிதைகளை பல்வேறு தளங்களில் வடித்திருப்பதாக குறிப்பிட்ட மாதவி சிவலீலன், இக்கவிதைத் தொகுப்பு நவீன ஜனரஞ்சக இலக்கிய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்திருந்ததாகத் தெரிவித்தார். யதாரத்தவாதி வெகுஜன விரோதியாகி விடுவது போல் சில கவிதைகள் அவருக்கு விரோதத்தை சம்பாதிக்கலாம் என்பதையும் மாதவி சிவலீலன் சுட்டிக்காட்டிச் சென்றார்.

நூலின் தலைப்பையும் அதில் சொல்லப்படும் பிராணியையும் வரலாற்று ரீதியாக ஆய்வுக்கு உட்படுத்தி ஆய்வாளர் மு நித்தியானந்தன் சகல சமூகங்களிலுமே கழுதை ஒரு கேவலமான பிராணியாகவே கடந்த 2000 ஆண்டுகளாக அதே கழுதை என்ற பெயருடன் சித்தரிக்கப்பட்டு வருவதாகக் கூறி தமிழில் கழுதையை இழிவுபடுத்தும் வகையில் அமைந்த பழமொழிகள் பலவற்றைச் சுட்டிக்காட்டினார். கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசணை. கழுதை கட்டெறும்பானது, … என பல உதாரணங்களைச் சுட்டிக்காட்டினார். கழுதை அவ்வளவு கேவலமான பிராணி அல்ல என்று குறிப்பிட்ட மு நித்தியானந்தன் கழுதை சுமந்த கவிதையின் அர்த்தத்தை வினவினார்? கழுதையை நூலாசிரியர் கேவலமாகக் கருதுகிறாhரா என்ற கேள்வி மு நித்தியானந்தனின் ஆய்வில் தொக்கி நின்றது. மன்னாரில் கழுதைக் காப்பகம் அமைக்கப்படுவதையும் அண்மையில் இந்தியாவில் காணாமல் போன கழுதைகளைத் தேடும் சர்ச்சையையும் சுட்டிக்காட்டி அந்தக் கழுதைகள் போல் நாங்கள் எல்லோரும் எதையோ சுமக்கின்றோம் என்பதைச் சுட்டிக்காட்டினார். இந்த சுமைகளை அறிவுகளை இல்லாமல் வாழ்க்கையை நாளாந்தம் சுதந்திரமாக அனுபவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். நாங்கள் வெற்றுப் பாத்திரத்தில் எதையும் ஊற்றிக் குடிக்க வேண்டுமே ஒழிய ஏற்கனவே அதற்குள் உள்ள ஏதோ ஒன்றுக்குள் ஊற்றி அருந்துவது போல் வாழ்க்கை அமையக் கூடாது எனத் தெரிவித்தார்.

க பிரேம்சங்கரின் கவிதைத் தொகுப்பில் 25 வீதமான கவிதைகள் காதலைச் சொல்வதைச் சுட்டிக்காட்டிய ஆய்வாளர் மு நித்தியானந்தன் தனக்கு அவருடைய சங்ககாலக் காதலில் உடன்பாடில்லை என்றார். புலியை வேட்டையாடி அதன் பல்லைக் கொண்டுவந்து காதலிக்கு அணிவித்து தான் காதலை வெளிப்படுத்த வேண்டுமானால் நாங்கள் யாருமே காதலிக்க முடியாது என நகைச்சுவையாகத் தெரிவித்தார். இக்கவிதைத் தொகுப்பில் மாட்டுப் பொங்கலுக்கூடாக மிருகவதை பற்றி படைப்பாளியின் சிந்தனையைச் சுட்டிக்காட்டிய மு நித்தியானந்தன் மலையக மக்கள் பற்றிய கவிதையையும் விதந்துரைத்தார்.

போராடுவதற்காக தம்மை அர்ப்பணித்த அப்போராட்டம் சறுக்கிய போது வெளிநாட்டுக்கு வந்து வீழ்ந்த இந்தப் படைப்பாளியைப் போன்றவர்களால் இந்த மண்ணில் ஒட்ட முடியவில்லை. வேற்றுலக மனிதர்களாகவே வாழ்கின்றனர். சகோதரப்படுகொலைகளைக் கடந்து வந்த இவர்களின் காலத்திலேயே போடுதல், போட்டுத் தள்ளுதல், தகடு வைத்தல் போன்ற சொற்பதங்கள் எமது சமூகத்தில் உருவாகிறது. தந்தையொருவர் தனது மகனைத் தேடிச்சென்று முகாமில் விசாரிக்கின்ற போது, அவரைத் போட்டுட்டாங்கள் என்று சொல்லப்பட்ட போது அந்த தந்தைக்கு அது விளங்கவேயில்லை என்பதை மு நித்தியானந்தன் அங்கு சுட்டிக்காட்டினார்.

இத்தொகுப்பில் கவிதைகள் ஒழுங்குமறையில் தொகுக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய நித்தியானந்தன் நூல் பற்றிய விபரங்கள் ஆங்கிலத்தில் வருவதன் அவசியத்தையும் விளக்கினார். அவ்வாறு நூல்விபரம் ஆங்கிலத்திலும் இருந்தாலேயே இலங்கையிலோ இலங்கைக்கு வெளியிலோ நூலகங்களில் இந்நூல் பதிவுக்கு உட்படுத்தப்படக் கூடியதாக இருக்கும் என்றார். மேலும் நூலில் ஓவியங்கள் காத்திரமானவையாக உள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர் அவ்வோவியங்களை வரைந்தவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மேற்கு லண்டன் தமிழ் பள்ளியின் அதிபர் செல்வராஜா உரையாற்றுகையில் மனிதவதை பற்றி மிக இறுக்கமாகக் குறிப்பிடும் படைப்பாளர் திபாவளியைக் கொண்டாடுங்கள் ஆனால் கொன்று கொண்டாடாதீர்கள் என்று வேண்டிக்கொள்வதைச் சுட்டிக்காட்டினார். இலக்கியச்சுவை காதல்சுவை காமச்சுவை நகைச்சுவை நிறையவே இருக்கின்றது ஆனால் ஆங்கிலப் பதங்களை சொற்பிழைகளைத் தவிர்த்திருக்கலாம் எனத் தெரிவித்தார்.

நாடகக் கலைஞர் சரத் சந்திரன் கவிநயத்தோடு பேசுகையில் வாசித்து வாசித்து கவிதை கொண்டு தன் தேடலுக்கு அணை கட்டியதாகத் தெரிவித்தார். வாழ்வின் பல பக்கங்களையும் படைப்பாளர் தட்டியதைச் சுட்டிக்காட்டிய சரத் சந்திரன் வடிவமைப்பின் கவர்ச்சியும் அதற்கான ஓவியங்களும் சொற்களின் வீரியத்தைக் குறைத்து விடுமோ என்று எண்ணத் தோண்றியதாகக் குறிப்பிட்டார்.

கிங்ஸ்ரன் கொன்சவேடிவ் கட்சி கவுன்சிலர் நந்தா பரம் கவிதை; தொகுப்பு பேசுகின்ற அரசியலுக்குள் சற்று ஆழமாகவே ஊடுருவிச் சென்றார். கொன்சவேடிவ் கட்சியின் கவுன்சிலராக இருந்த போதும் அவருடைய அரசியல் பார்வை முற்றிலும் அதன் கருத்தியல் நிலைப்பாட்டுக்கு முரணாணதாக இருந்தது. “கருத்தை கருத்தால் எடுத்தியம்ப வேண்டும் கசையடியாலல்ல…” என்ற கவிதையை மேற்கோள் காட்டிய நந்தா பரம் பிரேம்சங்கர் ஏன் உண்மையை மறைக்கிறார். அங்கு கசையடியா நடந்தது. உண்மையில் என்ன நடந்தது. ஆனந்தராஜா, ராஜினி ஆகியோரை இழந்திருக்க தேவையில்லை என்றார். தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட கல்விமான்களான அதிபர் ஆனந்தராஜா, யாழ் பல்கலைக்கழக மருத்துவ உடற்கூற்றியல் சிரேஸ்ட்ட விரிவுரையாளர் ராஜினி திரணகம ஆகியோரையே கவுன்சிலர் நத்தா பரம் அவ்விடத்தில் சுட்டிக்காட்டி இருந்தார்.

படைப்பாளியின் மாட்டுப்பொங்கல் பற்றிய கவிதையை இன்றைய முதலாளித்துவ சமூகத்தோடு ஒப்பிட்டு நந்தா பரம் வழங்கிய மதிப்பீடு அசத்தலாக அமைந்தது. வருடம் முழுவதும் மாட்டை சுரண்டி உழைக்கும் மனிதன் மாடு கன்று ஈன்றபின்னும் கன்றை மாட்டுக்கருகில் கட்டி வைத்து பால்சுரக்க வைத்து அதனையும் கறந்துவிடுகின்றான். அதற்காக வருடத்தில் ஒருநாள் மாட்டுக்கு பொங்கல் வைத்து மாட்டையும் ஏமாற்றி விடுகின்றான். இதே போல் தான் முதலாளி வர்க்கமும் தொழிலாளியைச் சுரண்டி அவன் உழைப்பை கறந்துவிட்டு போனஸ் கொடுத்து ஏமாற்றி விடுகின்றான் என்று நந்தா பரம் சுட்டிக்காட்டி கவிதைத் தொகுப்பை விதந்துரைத்தார். படைப்பாளியின் ஜீவராசிகள் மீதான காருண்யத்தையும் கவுன்சிலர் நந்தா பரம் தன்னுரையில் கோடிட்டுக் காட்டினார்.

ஆழகானவை எல்லாம் மனதுக்கு பிடிப்பதில்லை ஆனால் மனதுக்கு பிடித்தமானவை எல்லாம் அழகாகத் தோன்றும் என கழுதை சுமந்த கவிதைத் தொகுப்புப் பற்றி குறிப்பிட்டவர், மாற்றுக் கருத்துக்கு மரணமோ தீர்வு! என்ற படைப்பாளியின் ஆதங்கத்தை பொறுப்புடன் குறிப்பிட்டார். இவ்வாறான போர்க்கால வீரியம் மிகு கவிதைகள் ஈழத்திலேயே சாத்தியம் எனவும் குறிப்பிட்டார்.

வாசிப்பவர்களை பழைய நினைவுகளுக்கே கொண்டு செல்லும் இக்கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகளுக்கு ஒரு உள்ளடக்கம் வைத்திருக்க வேண்டும் என்று சொல்லி தன்னுரையை நிறைவு செய்தார் நிவஜோதி யோகரட்ணம்.

“இந்தக் கழுதையை அது சுமந்த கவிதையை அதன் கனவுகளை எல்லாம் எனக்கு நன்கு தெரியும்” என்று கவிநயத்தோடு தன்னுரையை ஆரம்பித்தார் படைபாளனின் பள்ளித் தோழன் ஜெகத் லக்ஷன். 1979இல் யாழ் இந்துக் கல்லூரியில் உருவான நட்பு நாற்பது ஆண்டுகளக் கடந்தும் பயணிக்கின்ற கதையை “கழுதை சுமந்த கவிதை” விமர்சனத்தினூடாக இன்னொரு கழுதையாக பயணித்த கதையை லக்ஸ்மன் தன்னுரையினூடாகக் கொண்டு வந்தார். தம்பையா மாஸ்ரரின் பின் வரிசைப் பிரமுகர்களில் ஒருவரான இந்தப் படைப்பாளிக்கு கம்பராமாயணம் மிகத் தெளிவாகத் தெரிந்தாலும் ‘கொங்கை’ க்கு விளக்கம் தெரியாமல் தவித்து, பிறகு பார்த்தால் மட்ராஸில் சமூக விஞ்ஞான கல்வி படித்ததாகக் கேள்விப்பட்டேன் என அன்றைய வாழ்க்கை போராட்டமானதைச் சுட்டிக்காட்டினார். அங்கு போராட்ட இலங்கியங்கள் படித்து சிவப்புப் புத்தகங்கள் படித்தது தான் மிச்சம் கப்பல் கடைசிவரை வரவில்லை என்றவர் எந்தக் கப்பல் வரவில்லை என்று கடைசிவரை குறிப்பிடவில்லை.

மீண்டும் 1991 இல் லண்டனில் தன் நண்பரைச் சந்தித்ததை நினைவுகூர்ந்த லக்ஷன் 1995இல் கவிதைத்தொகுப்பை வெளியிட எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. வாடகை வீடுகள் மாறியதில் கவிதைகளும் தொலைத்த சோகக் கதையைக் கூறினார். அதன் பின்னும் ஒரு கட்டுக்கவிதைகளோடு வந்து நின்றபோது வெளியிட தன்னால் முடியவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியவர் ஏன் என்பதை தொக்கில் விட்டுவிட்டார். தற்போது வெளிவந்துள்ள கவிதைத் தொகுப்பில் தன்னிடம் தந்த கவிதைக்கட்டில்லிருந்த ஒரேயொரு கவிதையே இதில் உள்ளது என்பதை அழுத்தம் திருத்தமாக லக்ஷன் குறிப்பிட்டார்.

பிக்பொஸ் பார்க்க நிறைய நேரம் செலவழிக்கும் நாம் பிக்பொஸ்ஸாக யோசிக்க மாட்டோம் என்கிறோம் என மனவருத்தப்பட்டுக்கொண்ட லக்ஷன், மேலும் மேலும் படைப்புகள் எம்மத்தியில் இருந்து வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டு தன்னுரையை நிறைவு செய்தார்.

பேனா நண்பராக ஏற்பட்ட நட்பு சமூக விஞ்ஞானக் கல்லூரியில் சந்தித்து லண்டனில் இன்று வரை தொடர்வதை தயாமயூரன் நினைவு கூர்ந்தார். சமகாலத்தில் விடுதலைக்காகப் புறப்பட்ட தாங்கள்; மனிதநேயம் உயிர் நேயம் கொண்டு துன்பங்கள் துயரங்கள் கடந்து பயணத்தைத் தொடர்வதை தயாமயூரன் நினைவுகூர்ந்தார். தயாமயூரனும் சிறந்த முறையில் கவிதை புனைபவர் என்று குறிப்பிட்ட ராஜா நித்தியானந்தன் அவரும் தனது கவிதை நூலைக் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இப்போது எம்மோடு இல்லாத எனது சகோதரன் வசந், பிரேம்சங்கர், தயாமயூரன் ஆகியோர் சமகாலத்தில் தமிழீழ சமூக விஞ்ஞானக் கல்லூரியில் பயின்றவர்கள். இந்த நூல் வெளியீட்டுக்கு என்னை அழைத்தபோதும் எனது சகோதரனின் சார்பாக என்னை வரும்படியே பிரேம்சங்கர் அழைத்து இருந்தார். நட்பு இரத்த உறவுகளுக்கும் மேலானதாக அமைந்துவிடுகின்றது. அதுவும் போராட்ட அமைப்புகளில் கருக்கொள்ளும் நட்புகள் இரத்தமும் சதையுமாகிவிடுகின்றது. இக்கவிதைத் தொகுப்பு நிகழ்விலும் அதனைக் காணமுடிந்தது.

இறுதியாக உரையாற்றிய வேணுகோபால் இந்நட்பை விதந்துரைத்திருந்தார். நல்ல நண்பர்கள் அமைவதன் அவசியத்தை வலியுறுத்தி இருந்தார். “கவிக்கூத்தன் பிரேம் ஒரு கம்பன் கவிதை எழுதுவதில் அவன் ஒரு வம்பன்” என்று குறிப்பிட்ட வேணுகோபால், “அடைந்தால் மகாதேவி இல்லாவிட்டால் மரணதேவி அல்ல அடுத்த தேவி” என்ற கவிதையைச் சுட்டிக்காட்டி கவிஞ்ஞனுக்கு பொய்யும் அழகு என்று குறிப்பிட்டு தன்னுரையை முடித்துகொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஜெஸ்ரீ என்பவர் “கழுதை சுமந்த கவிதை” க்கு ஒரு கவிதை தந்தார்.

இறுதியாக ஏற்புரை வழங்கிய கவிக்கூத்தன் பிரேம்சங்கர் இலங்கையின் இலக்கிய வரலாற்றில் இடம்பிடிக்க வேண்டும் என்ற ஆவால் இப்போது தனக்கு ஏற்பட்டு இருப்பதாகவும் இனிமேல் இன்னும் தரமாக கவிதைகளை தர வேண்டும் என்ற பொறுப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். நாம் மட்டும் அல்ல எமது பிள்ளைகளையும் அவர்களுக்கு பரீட்சயமான மொழியிலேயே எழுதத் தூண்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு நிகழ்வை நிறைவுக்கு கொண்டுவந்தார்.

150 பேருக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட மண்டபம் நிறைந்த கவிக்கூத்தன் க பிரேம்சங்கரின் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு ஹரோ ஐயப்பன் ஆலயத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. கலை, இலக்கிய, அரசியல் ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்ட நிகழ்வு கோவிட் கால முடக்கத்திற்குப் பின் இடம்பெற்ற மிகச்சிறப்பான கலை, இலக்கிய, அரசியல் நிகழ்வாக அமைந்தது. முரண்பட்ட கருத்துக்கள் கொண்ட பல்தரப்பினரும் கலந்து நிகழ்வைச் சிறப்பித்தனர். மேலும் புதிய பேச்சாளர்கள் பலரும் கலந்துகொண்டு கவிதைத்தொகுப்பு வெளியீட்டை கவித்துவத்தோடு நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் வரலாற்றில் உச்சநீதிமன்றத்தில் ஒரு பெண் நீதிபதியாக நியமனம் !

பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக ஆயிஷா மாலிக் நியமிக்கப்பட்டுள்ளாா். பாகிஸ்தானின் வரலாற்றில் உச்சநீதிமன்றத்தில் ஒரு பெண் நீதிபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
இதுகுறித்து பாகிஸ்தான் நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசு அரசமைப்புச் சட்டத்தின் 177-ஆவது பிரிவின்படி, லாகூா் உயா்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் ஆயிஷா மாலிக், பாகிஸ்தான் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார். இதற்கான நியமனத்தில் அதிபா் ஆரிஃப் ஆல்வி ஒப்புதல் அளித்துள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஆயிஷா மாலிக், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். 20 ஆண்டுகள் வரை லாகூர் உயர்நீதிமன்ற நீதிபதியாக செயல்பட்டு வந்தார். சொத்துக் குவிப்பு வழக்கு மற்றும், விவாசாயிகள் பிரச்சனையில் சிறப்பான தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார்.
ஆயிஷா மாலிக்கை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்குமாறு பாகிஸ்தான் நீதித் துறை ஆணையம் கடந்த மாதம் பரிந்துரை செய்தது. இதையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களுக்கான நாடாளுமன்ற குழு இதை பரிசீலித்தது.
லாகூா் உயா்நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கான தேர்வில் 4-வது  இடத்தில் ஆயிஷா மாலிக் இருந்தார் . ஆனாலும், பணி மூப்பை கருத்தில் கொள்ளாமல் ஆயிஷா மாலிக்கைத் தோ்வு செய்து, அதிபரின் ஒப்புதலுக்கு அந்தக் குழு அனுப்பி வைத்தது. இதை தொடா்ந்து, ஆயிஷா மாலிக்கை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க அதிபா் ஒப்புதல் அளித்தார்.

நியூசிலாந்தில் அதிகரிக்கும் கொரோனா – மக்களுக்காக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா செய்த செயல் !

கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்ட தலைவர் என்ற பெருமையை நியூசிலாந்து நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் பெற்றார். அங்கு இதுவரை அந்நாட்டில் மொத்தமாக 15,550 கொரோனா தொற்று மட்டுமே பதிவாகியுள்ளது. 52 பேர் மட்டுமே பலியாகி உள்ளனர், 1,096 பேர் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்னுக்கும் அவரது நீண்ட கால நண்பரான கிளார்க் கேஃபோர்ட்டுக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்னா் நிச்சயதாா்த்தம் ஆனது.
வரும் பெப்ரவரி மாதம் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாக ஜெசிந்தா அறிவித்தார். அதற்கான ஏற்பாடுகளும் தற்போது செய்யப்பட்டு வந்தன. அந்நாட்டு மக்களும் தங்கள் பிரதமரின் திருமணத்திற்காக காத்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது ஒமிக்ரோன் வைரஸ் நியூசிலாந்தில் பரவ தொடங்கியுள்ளது. இதனால் தினசரி தொற்று அந்நாட்டில் 70-ஐ தாண்டியுள்ளது.  இதனால் அங்கு மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. பிப்ரவரி இறுதிவரை அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து தன் திருமணத்தை நிறுத்தப்போவதாக ஜெசிந்தா ஆர்டர்ன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
என் திருமணம் இப்போதைக்கு நடைபெறபோவதில்லை. இது தான் வாழ்க்கை. நாம் எதிர்பார்ப்பது எப்போதும் நடைபெறும் என்று சொல்ல முடியாது. எனக்கும் கொரோனாவால் வாடும் நியூசிலாந்து பொது மக்களுக்கும் வித்தியாசம் இல்லை.
பலர் கொரோனா காரணமாக வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். பலர் தாங்கள் விரும்பும் நபர்களிடம் பக்கத்தில் இருக்கும் வாய்ப்பு கூட இல்லாமல் இருக்கின்றனர். அவர்களிடம் நாம் அன்பு செலுத்த வேண்டும். மீண்டும் நாம் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். அதன்பின் திருமணம் பற்றி யோசிப்பேன்.” இவ்வாறு ஜெசிந்தா ஆர்டர்ன் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்சில் கட்டாயப்படுத்தப்பட்டது தடுப்பூசி அட்டை – அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் !

பொது இடங்களுக்கு பிரவேசிப்பதற்கு தடுப்பூசி அட்டை கட்டாயம் என்ற பிரான்ஸ் அரசாங்கத்தின் உத்தரவுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அங்கு 3 ஆவது கொவிட் அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், 4 ஆவது கொவிட் அலை எந்த நேரத்திலும் உருவாகலாம் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அந்நாட்டு அரசாங்கம் நாடு முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்தி வருகின்றது. கொவிட் பரவலுக்கு எதிராக தடுப்பூசி மிக சிறந்த முறையில் செயற்படுவதாக உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசி திட்டத்தை விரைவுப்படுத்தி வருகின்றதுடன், பிரான்ஸில் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இந்த கட்டுப்பாடுகள் தங்களின் சுதந்திரத்தை பறிப்பதாக கூறி அந்த நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

16 வயதிற்கு மேற்பட்டவர்கள் நாளை (24) முதல் பொது இடங்களுக்கு பிரவேசிக்கும் போது கட்டயாமாக தடுப்பூசி அட்டையை கொண்டு செல்ல வேண்டும் என அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவுக்கு எதிராக பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

யேமன் மீது சவுதி தலைமையிலான கூட்டுப்படை நடத்திய வான்வழி தாக்குதல் – 100பேர் வரை உயிரிழப்பு !

வடக்கு யேமனில் உள்ள தடுப்பு முகாம் மீது சவுதி தலைமையிலான கூட்டுப்படை நடத்திய வான்வழி தாக்குதலில் குறைந்தது 100பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 138பேர் காயமடைந்தனர்.

ஹெளதி கிளர்ச்சியாளர்களின் கோட்டையான சாதாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நாட்டின் வடக்கைக் கட்டுப்படுத்தும் ஹெளதி அரசாங்கத்தின் சுகாதார அமைச்சர் தாஹா அல்-மோட்டவாகல், இதனை உறுதிப்படுத்தினார். காயமடைந்தவர்களில் பலர் படுகாயமடைந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகம் மீது ஹெளதிகள் முன்னோடியில்லாத தாக்குதலை நடத்தி, சவுதி நகரங்களில் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை ஏவிய பின்னர், ஹெளதி கிளர்ச்சி இயக்கத்துடன் தொடர்புடைய இராணுவ இலக்குகள் என்று சந்தேகிக்கும் நிலைகள் மீது சவுதி தலைமையிலான இராணுவக் கூட்டணி தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

மேலும், தெற்கே முக்கிய துறைமுக நகரமான ஹொடைடாவில், ஹெளதிகளால் வெளியிடப்பட்ட காணொளி இடிபாடுகளில் இருந்த உடல்களைக் காட்டியது மற்றும் சவுதி தலைமையிலான கூட்டணி ஒரு தொலைத்தொடர்பு மையத்தை தாக்கியது. யேமன் நாடு தழுவிய இணைய முடக்கத்தை சந்தித்தது.

தென்மேற்கு ஆசிய நாடான யேமனில், சன்னி பிரிவைச் சேர்ந்த ஜனாதிபதி மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹெளதி கிளர்ச்சிப் படைக்கும் இடையே 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

இதில் ஜனாதிபதி மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் செயற்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

யேமனில் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. யேமன் போரில் இதுவரை குழந்தைகள் உட்பட 10,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். மில்லியன் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் மற்றும் பெரும்பாலான மக்கள் பஞ்சத்தின் விளிம்பில் நிற்கின்றனர்.

இந்நிலையில், யேமன் மீது சவுதி விமான தாக்குதல் நடத்தியதற்கு ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஏமன் நாட்டுப் பொதுமக்கள் மீது குண்டுமழை பொழிவதை ஏற்கமுடியாது என சவுதி அரேபியாவிற்கு கண்டனம் தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களின் கல்விநிலை ‘பாஸ் பண்ண வேண்டும் என்றால் படுக்க கேட்கும் பேராசிரியர்கள்!’ – தென்கிழக்கு – யாழ் மற்றும் பல்கலைக்கழகங்கள்

கடந்த அரசாங்கத்தில் உயர் கல்வி அமைச்சராகப் பதவி வகித்த விஜேதாஸ ராஜபக்ஷ, 2018ஆம் ஆண்டு நாடாளுமன்றில் ஒரு தடவை பேசும்போது; “தென்கிழககுப் பல்கலைக்கழகத்திலுள்ள சில விரிவுரையாளர்களுக்கு, அங்குள்ள மாணவிகள் பாலியல் லஞ்சம் கொடுக்காமல், சில பாடங்களில் தேர்ச்சியடைய முடியாது” என்று, பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். இதனை அப்போது ஊடகங்கள் பெரிதாக பேசியிருந்தாலும் கூட தொடர்ச்சியான அவதானிப்புக்களை மேற்கொள்ள மறுத்துவிட்டன. ஆன போதும் இலங்கையின் பல பல்கலைகழகங்களில் சிறப்புத்தேர்ச்சியை பெற பாலியல் லஞ்சம் கோருவது தொடர்கதையாகிவிட்டது. விரிவுரையாளர்களின் பாலியல் அத்துமீறல்களுக்கு சம்மதித்து இணங்கினால் மட்டுமே பல்கலைகழகத்தில் நன்றாக படிக்கலாம் – அடுத்தகட்ட அனுமதிகளை பெறலாம் என்றவாறாக மாணவர்கள் பயமுறுத்தப்படுகின்ற அவலம் தொடர்கின்றது. அண்மையில் நடைபெற்ற சம்பவம் கூட இதே மாதிரியானதே.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அறபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தில் அரசியல் விஞ்ஞானம் கற்பிக்கும் விரிவுரையாளர் ஒருவர், அங்குள்ள முதலாமாண்டு மாணவி ஒருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், குறித்த விரிவுரையாளரின் விருப்பத்துக்கு இணங்காத அந்த மாணவி – பல்கலைக்கழக விடுதியிலிருந்து வெளியேறியுள்ளார்.

இந்த நிலையில், மேற்படி விரிவுரையாளரால் தனக்கு ஏற்பட்ட துன்புறுத்தல் பற்றி, அந்த மாணவி தனது குடும்பத்தாருக்குத் தெரியப்படுத்தியதோடு, பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் எழுத்து மூலம் முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து இவ்விவகாரத்தில் கவனம் செலுத்திய பல்கலைக்கழக உபவேந்தர், அந்தப் பல்கலைக்கழத்தின் பேரவையைக் கூட்டி – விடயத்தைத் தெரியப்படுத்தியிருந்தார். அதனையடுத்து, ஆரம்ப கட்ட நடவடிக்கையாக, குறித்த விரிவுரையாளரை – பல்கலைக்கழகப் பேரவை, பணி இடைநீக்கம் செய்துள்ளதோடு, அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பேரவை உறுப்பினர் ஒருவரையும் நியமித்துள்ளது.

இந் நடவடிக்கைகளுக்கு முன்னர், குறித்த மாணவியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சம்பந்தப்பட்ட விரிவுரையாளர், தான் தவறாக நடந்து கொண்டமையை வெளிப்படுத்த வேண்டாம் எனக் கேட்டு, அழுது – மன்னிப்புக் கோரியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பில் மாணவிக்கும் – விரிவுரையாளருக்கும் இடையே இடம்பெற்ற உரையாடல் சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகியிருந்தது.

(குறித்த தொலைபேசி உரையாடல் https://www.facebook.com/100053082310310/videos/678356666665554/ )
குறித்த உரையாடலுடன் கூடிய காணொளியில் இணைக்கப்பட்டிருந்த படம்)
No description available.

இது இவ்வாறிருக்க, பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் மாணவி, சம்பந்தப்பட்ட விரிவுரையாளருக்கு எதிராக செய்த முறைப்பாட்டை வாபஸ் பெற்றுக் கொள்வதாக, தற்போது பல்கலைக்கழகத்துக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார். இதனை பல்கலைக்கழகத்தின் நிருவாகம் உறுதிப்படுத்தியது.

பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவி மற்றும் அவரின் குடும்பத்தினரை குற்றஞ்சாட்டப்பட்டுள்ள விரிவுரையாளர் சார்பாகச் சந்தித்த ஒரு தரப்பினர், கருணை அடிப்படையில் கேட்டுக் கொண்டமைக்கு அமைவாக, அந்த மாணவி தனது முறைப்பாட்டை வாபஸ் பெறுவதற்கான கடிதத்தை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பியுள்ளதாக தெரியவருகிறது.

இந்த விடயமும் வழமைபோல பெரிய பூதாகரமாக பேசப்பட்டு நாளடைவில் மறந்து போய்விடக்கூடிய விடயமாக தென்படுகின்றது. குறித்த பிரச்சினையிலிருந்து தப்பிக்க விரிவுரையாளர் அரசியல் பிரமுகர்களை நாடியுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

பிரச்சினைகள் இவ்வாறு இருக்க குறித்த மாணவி தொடர்பில் இஸ்லாமிய கலாச்சார காவலர்கள் என்ற பெயரில் பலர் முன்வைக்கின்ற விமர்சனங்கள் குறித்த சமூகத்து பெண்களின் எதிர்காலம் தொடர்பிலும் – அவர்கள் வாழக்கூடிய சூழல் தொடர்பிலான அச்சத்தையும் ஏற்படுத்துகின்றது.

பல்கலைகழக மட்டத்தில் இது வெளிப்படையாக தெரிந்த ஒரு பிரச்சினை . இது போல தெரியாத பல விடயங்கள் இன்னமும் ஆழமாக உள்ளன. இது போன்றதான நிலை பல்கலைகழகங்கள் தொடர்பில் மேலும் அச்சமான சூழலை ஏற்படுத்துகின்றன. விரைந்து விசாரிக்கப்பட்டு தீர்வு எடுக்கப்பட வேண்டிய பிரச்சினை வழமை போல இழுபட ஆரம்பித்துள்ளது.

இது போன்ற பாலியல் சீண்டல்களை பல பெண்கள் சமூகத்துக்கு பயந்தோ – கல்வி தடைப்பட்டு விடுமோ என்ற அச்சத்தினாலோ – சமூகத்தின் கேலிக்கு உள்ளாக வேண்டி வருமோ என்றோ வெளியில் சொல்லாத நிலை தான் அதிகம் காணப்படுகின்றது. இந்த நிலையில் படுக்கைக்கு அழைத்த விரிவுரையாளர் தொடர்பில் முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த மாணவி பகிரங்கப்படுத்தியது மிகப்பெரிய வரவேற்க வேண்டிய விடயம். அந்த மாணவியின் துணிவான முடிவால் பல மாணவிகளின் எதிர்காலம் பாதுகாக்கப்படக்கூடிய சூழலே உருவாகியுள்ளது.

கடந்த காலங்களில் கூட தென்னிந்தியாவில் பிரபல பாடலாசிரியர் வைரமுத்து பாலியல் தொல்லை வழங்கியதாக பாடகி சின்மயி பொதுவெளியில் பேசியதை தொடர்ந்து மீ டூ என்ற பெயரில் பல பெண்கள் தங்கள் மீதான பாலியல் சுரண்டல்கள் – தொல்லைகள் தொடர்பில் பொதுவெளியில் பேச முன்வந்திருந்தனர். அது போல ஆரோக்கியமான ஒரு தளத்தை பல்கலைகழக மாணவிகளின் விடயத்தில் இந்த பிரச்சினை உருவாக்கி தந்துள்ளது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சார்பாக கருத்துக்களை முன்வைத்து – அந்த பெண்ணுக்கு நாங்கள் இருக்கிறோம் என்ற நம்பிக்கையை வழங்க வேண்டியது நம் ஒவ்வொருவருடைய பொறுப்புமாகும். ஆனால் அதை விடுத்து குறித்த சமூகத்தை சார்ந்த சமூக காவலர்களாக தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஆணாதிக்க சிந்தனையாளர்கள் கொஞ்சம் கூட மனிதாபிமானமில்லாத வகையில் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். முக்கியமாக உண்மையான முஸ்லீமாக குறித்த மாணவி இருந்திருந்தால் இந்த பிரச்சினையை பொதுவெளியில் சொல்லியிருக்க மாட்டாள், மீனை மூடாமல் விட்டுவிட்டு அவள் பூனையை குற்றம் சொல்கிறாள், அல்லாவுக்காக இந்த பிழையை மறைத்து இனத்தின் மானத்தை காப்பாற்றியிருக்க வேண்டும், என்றவாறாக பல கருத்துக்களை காணமுடிந்தது. முக்கியமாக குறித்த மாணவியின் நடத்தை தொடர்பாக கேலியான பதிவுகளும் குறித்த இனத்தை சாரந்தவர்களால் பகிரப்பட்டுள்ளது இன்னும் வேதனையான விடயம்.

இப்படியான பிற்போக்குத்தனமான மனோநிலையில் இவர்கள் இருப்பது குறித்த சமூகத்தின் பெண்களின் நிலை சார்ந்தும் இன்னும் யோசிக் வைக்கின்றது. பெண்கள் உலகின் பல பகுதிகளிலும் அடுப்படியை விட்டு சுதந்திரமாக வெளியே வந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் அவர்களுடைய உரிமைகள் இன்னும் பாதுகாப்பு செய்யப்பட வேண்டுமே தவிர மதம் – குல மானம் என்ற பெயரில் அவர்கள் இன்னும் நோகடிக்கப்படக்கூடாது.

இங்கு குறித்த பெண்ணை நோக்கி கேள்வி எழுப்பிய யாருமே தவறு செய்த செய்த விரிவுரையாளரை கண்டிக்க திராணியற்ற ஆணாதிக்கவாதிகளாவே இருக்கின்றனர். அரசு எங்களை அடக்குகின்றது . இஸ்லாமியர்கள் அடக்கப்படுகிறார்கள் என கூறி விட்டு பெண்கள் மீது இவ்வளவு வக்கிரத்தனமான இஅடக்குமுறைகளை திணித்துக்கொண்டிருக்கிற சமூகத்தில் நாமத் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
முன் எப்போதும் இல்லாத வகையில் பாலியல் சேட்டைகளும் – பாலியல் சுரண்டல்களும் அதிகரித்து வருகின்ற இந்த நேரத்தில் இது போன்ற விசமத்தனமான கருத்துக்களை நாம் பொதுவெளியில் பகிர்வதும் – பேசுவதும் தங்கள் மீது நடக்கும் பாலியல் தொல்லைகளை பல பெண்கள் வெளிக்கொண்டுவர தடையக அமைவதுடன் – பாலியல் சேட்டைகளிலும் – துஸ்பிரயோகங்களிலும் ஈடுபடுவோருக்கு வாய்ப்பாக அமைந்துவிடும்.

இந்த நிலை மாற வேண்டும். இன்னமும் பெண்களின் கால்களுக்கிடையில் கற்பையும் – தங்கள் தங்களுடைய இன – குல மானங்களையும் வைத்திரப்போர் கொஞ்சமாவது மாற முற்பட வேண்டும். இன்று யாரோ பெண்ணுக்கு நடந்தது நாளை உங்கள் வீடுகளிலுள்ள பெண்களுக்கும் கூட நடக்கலாம். எனவே பெண் அடக்குமுறை – பெண் மீதான பாலியல் சுரண்டல்கள்தொடர்பில் துணிந்து – எதிர்த்து குரல் கொடுங்கள். இன்னும் பழமையை பற்றிப்பிடித்து வாழ்ந்து கொண்டிருக்காது ஆரோக்கியமான ஒரு தலைமுறையை உருவாக்க இது தனித்து ஒரு சமூகத்தை தாக்குவதற்கான நோக்கத்துடன் எழுதப்பட்டது அல்ல. இந்த பிரச்சினை எல்லா இடங்களிலும் உள்ளதே. இது மாற்றப்பட்டு ஆரோக்கியமான ஒரு தலைமுறை உருவாக வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.

இவ்வாறான பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மட்டும் தான் நடக்கின்றது என்றில்லை. இதே மாதிரியான பல சம்பவங்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் கடந்த இரு தசாப்தங்களாக நடைபெற்று வருகின்றது. லண்டன் குரல், தேசம்நெற் ஆகிய ஊடகங்களில் இவை விரிவாக எழுதப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வந்தது. யாழ் பல்கலைக்கழகத்தின் சில பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டமை நீதிமன்றம் வரை சென்றதும் அவர்களுடைய பெயர்கள் அம்பலப்படுத்தப்பட்டதும் தெரிந்ததே. இந்நிலைமைகளில் இன்னமும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படவில்லை. அதற்குக் காரணம் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் எவ்வாறு தவறிழைத்தவர் மீண்டும் பல்கலைக்கழகத்தில் மீள நியமிக்கப்பட்டாரோ அவ்வாறே யாழ் பல்கலைக்கழகத்திலும் தவறிழைத்தவர்கள் தொடர்ந்தும் பணியில் உள்ளனர். அவர்கள் தொடர்ந்தும் தங்கள் பாலியல் இச்சைகளைத் தொடர அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இன்றும் யாழ் பல்கலைகழகத்தில் புதிய நியமனங்களை தெரிவு செய்யும் குழுக்களில் இவ்வாறான பாலியல் இச்சைகொண்டவர்களே உள்ளனர். அதனால் கடந்த இரு தசாப்தங்களாக யாழ் பல்கலைக்கழகம் சிறந்த பட்டதாரிகளை உருவாக்குவதில் தகுதியானவர்களை நியமிப்பதில் தவறிழைத்து வருகின்றது. அதனால் இன்று வடக்கின் கல்வி நிர்வாகம் மிகச் சீரழிந்துள்ளது. இதற்கான மிகப்பெரும் பொறுப்பு யாழ் பல்கலைக்கழகத்தையே சாரும்.

No description available.No description available.
No description available.No description available.

சமூக விஞ்ஞானக் கல்லூரி (T3S) மாணவனும் முன்னாள் போராளியுமான க பிரேம்சங்கரின் ‘கழுதை சுமந்த கவிதை’ நூல் வெளியீடு

தனது பள்ளிப் பராயக் கனவை நனவாக்கும் வகையில் தனது வாழ்க்கை அனுபவங்களை சிறு கவிதைகளாக தொகுத்து ‘கழுதை சுமந்த கவிதை’ என்ற தலைப்பில் வெளியிடுகின்றார் கவிக்கூத்தன் க பிரேம்சங்கர். இளம் பிராயம் முதல் அவர் கிறுக்கிய கவிதைகளை அவர் தனது பதின்ம வயதிலேயே வெளியிட ஆசைப்பட்டாலும் இப்போது தான் அது சாத்தியமாகியுள்ளது. “தொலைக்கப்பட்ட எழுத்துக்களை தோண்டி எடுக்கிறேன் நெஞ்சு வலிகளோடு வருகின்றது…” என்று அவர் இந்நூல் பற்றிய குறிப்பில் பதிவு செய்கின்றார்.

நூல் வெளியீடு பற்றிய விபரம்:
காலம்: January 23, 2022
நேரம்: மாலை 4:00 மணி முதல் 7 மணி வரை
இடம்: London Ayyappan Temple Hall, 36 Masons Avenue, Harrow, HA3 5AR

யாழ் சுன்னாகம் நாகேஸ்வரி வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியும் பின் யாழ் இந்துக் கல்லூரியில் உயர்கல்வியும் கற்ற கவிக்கூத்தன் பிரேம்சங்கர் எண்பதுக்களில் எழுச்சி பெற்ற விடுதலையுணர்வால் உந்தப்பட்டு தமிழ் மக்களின் விடுதலைக்காக தங்களை அர்ப்பணிக்க முன் வந்த ஆயிரம் ஆயிரம் இளைஞர்களில் ஒருவர். தமிழ் மக்களுக்கு விடுதலை வேண்டி தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இணைந்து கொண்ட க பிரேம்சங்கர், சென்னையில் உருவாக்கப்பட்ட சமூக விஞ்ஞான கல்லூரியில் சமூக அரசியல் பொருளாதாரம் கற்றவர்.

அனுவம் என்பதே அறிவு. அந்த வகையில் க பிரேம்சங்கரின் வாழ்க்கை அனுபவம் என்பதும் ஒரு அருமையான புத்தகமாக அமையும். அதனை சிறு கவிதைகளாக தொகுத்து இருப்பது அவருடைய வாழ்வின் பிரதிபலிப்பாக அமையும் என்பதில் ஐயம்மில்லை. “பல இளமைக்காலக் கவிதைகள் தொலைந்தாலும்… முதுமையில் மீண்டும் முத்துக்குளித்திருக்கிறேன்” என்று இந்நூல் உள்ளடக்கம் பற்றி குறிப்பிடுகின்றார். “கற்பனை, நிசம் அனுபவமாகின்றது! இங்கு வரிகளாகிறது” என்று குறிப்பிடும் அவர் “நரை விழுந்த காலம் என்றாலும் உரைக்கிறது எழுதுகோல்” என்று தான் இந்நூலை கொண்டுவந்ததன் பின்னணியைக் குறிப்பிடுகின்றார்.

கவிக்கூத்தன் க பிரேம்சஞ்கரும் எனது சகோதரனும் சமூக விஞ்ஞானக் கல்லூரியில் – Thamileelam Social Science School (T3S) ஒன்றாகக் கற்றவர்கள். உற்ற நண்பர்கள். அதனால் நான் லண்டன் வருவதற்கு முன்னரே குடும்ப நண்பரானவர். லண்டன் வந்தபின் அந்த சகோதரத்துவமும் நட்பும் இன்றும் நிலைக்கின்றது.

கவிக்கூத்தன் க பிரேம்சஞ்கரின் வாழ்க்கை அனுபவம் என்பது பன்முகப்பட்டது. படைப்புகள் ஆக்க இலக்கியங்கள் அக்காலத்தினை பிரதிபலிக்கக் கூடிய கண்ணாடிகள். அந்த வகையில் இந்தக் ‘கழுதை சுமந்த கவிதை’ நூல் எமது வரலாற்றின் ஒரு கூறைச் சுமந்து வரும் என்ற ஆவலோடு இந்நூல் வெளியீட்டில் கலந்துகொள்ள உள்ளேன். கவிக்கூத்தன் க பிரேசம்சங்கர் வெவ்வேறு படிநிலைகளில் தன் வாழ்வைக் கடந்து செல்கின்றார். ஒரு துடிப்புள்ள இளைஞனாக போராளியாக பிற்காலத்தில் ஆன்மீகத்தின் வழித்தடங்களில் என்று அவருடைய பயணம் தொடர்கின்றது. நிச்சயமாக ‘கழுதை சுமந்த கவிதை’ எம்மைச் சிந்திக்க வைக்கும்.

நூல் வெளியீடு பற்றிய விபரம்:
காலம்: January 23, 2022
நேரம்: மாலை 4:00 மணி முதல் 7 மணி வரை
இடம்: London Ayyappan Temple Hall, 36 Masons Avenue, Harrow, HA3 5AR

 

 

போலந்தில் தடுப்பூசி போட்டால் மட்டுமே சாப்பாடு !

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போலந்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30,000 ஐத் தாண்டியுள்ளது.    தொற்றுநோய்கள் அதிகரித்து வரும் நிலையில் போலாந்து அரசு கடும் கட்டுப்பாடுகளை விதிக்காதது கடும் விமர்சனங்களை எழுப்பி உள்ளது. இதனால் கொரோனா தொற்று  தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமருக்கு ஆலோசனை வழங்கும் போலந்து மருத்துவக் கவுன்சிலின் 17 உறுப்பினர்களில் 13 பேர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
போலந்தில் சுமார் 56 சதவிதம் பேர்களுக்கே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளன. இது ஐரோப்பிய ஒன்றிய அளவில் சராசரியை விட மிகக் குறைவாக கருதப்படுகிறது. மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவானவர்கள் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி பெற்றுள்ளனர். இந்நிலையில், தடுப்பூசி போட்டுள்ள வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிப்பதன் மூலம் தனது ஊழியர்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளை வோர்சோ நகர உணவங்கள் மேற்கொண்டுள்ளன. இது மிகவும் முக்கிய முடிவு என்றும் எதிர்ப்புகள் எழுந்தாலும்  வழக்கமான வாடிக்கையாளர்கள் அதை ஏற்றுக் கொண்டதாக உணவு உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர்கள் தங்கள் தடுப்பூசி சான்றிதழ்களை உணவகங்கள் மற்றும் பிற இடங்களில் காட்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இதுபோன்ற நடவடிக்கை தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கையை 10 சதவிகிதம் அதிகரிக்கும் என்று மருத்துவக்குழு ஆலோசகரான பேராசிரியர் ராபர்ட் ஃபிளிசியாக் தெரிவித்துள்ளார்.

உட்கட்சிப் போராட்டத்துக்காக தள கொமிட்டி பயணம்! பின்தளத்தில் பரந்தன் ராஜன் வெளியேற்றம்!!! – பாகம் 25:

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!: தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 25 (ஒளிப்பதிவு செய்யப்பட்ட திகதி 12.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 25

தேசம்: தளத்தில் மாநாடு முடிந்து நீங்கள் 17 பேர் போறதுக்கு தெரிவு செய்யப்படுகிறீர்கள். என்ன மாதிரி அந்தப் பயணம் அமைந்தது? எப்படி போனீர்கள் எல்லாரும்? எல்லாரும் ஒன்றாக போனீர்களா அல்லது வெவ்வேறு படகுகளில் …

அசோக்: எல்லோரும் ஒன்றாகவே பயணம் செய்தோம் தளக் கமிட்டி 17 பேர், சென்றல் கமிட்டீ நாலு பேரில் தோழர் முரளி எங்களோடு வரவில்லை. அவருக்கு தனிப்பட்ட சில அலுவல்கள் இருந்ததால அதை முடித்துக் கொண்டு பின் தளம் வருவதாக சொல்லி இருந்தார். மற்ற படைத்துறைச் செயலாளர் கண்ணன், டெலோ பொபி, சந்திரன் பாதுகாப்புக்கு இரண்டு பேர். அதில் ஒருவர் டேவிட்.

தேசம்: டேவிட் கிருஷ்ணன்

அசோக்: ஓம். அவர்தான்.

தேசம்: டேவிட் கிருஷ்ணன் எந்த ஊரைச் சேர்ந்தவர்.

அசோக்: அது தெரியல எனக்கு. பின் தளத்தில்தான் இருந்தவர். இப்ப இங்க பிரான்சில்தான் இருக்கிறார். பயிற்சி பெற்றதற்கு பிறகு புதுக்கோட்டை பயிற்சி முகாமில் நிர்வாகப் பொறுப்பாளராக இருந்தவர் என்று நினைக்கிறேன். பின் தளத்தில் நடந்த நிறைய விஷயங்கள் அவருக்கு தெரியும். ஏனென்றால் நிறைய பேருடன் உறவு வைத்திருந்தவர்.

தேசம்: இந்தக் காலகட்டத்திலும் நிறைய பேருடன் தொடர்பில் இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

அசோக்: புதுக்கோட்டை பயிற்சி முகாமில் 2 பேர் இருந்தவர்கள். இவர் ஒன்று மற்றது அகஸ்டின் ஜெபமாலை என்று சொல்லி ஜீவா. அவர் பயிற்சி பொறுப்பாக இருந்தவர். அவர் இப்ப ஜெர்மனியில் இருக்கிறார்.

தேசம்: அகஸ்டின் ஜெபமாலை?

அசோக்: அவரும் அம்பாறை மாவட்டபுளொட் பொறுப்பாளராக நான் இருந்த காலத்தில் தளத்தில் இருந்தவர்.

தேசம்: இந்தப் பயணம் என்ன மாதிரி போயிட்டு. எல்லாரும் ஒன்றாக போகிறீர்களா? என்ன மாதிரி?

அசோக்: இது ஒரு மோசமான பயணம். மன்னாரில் இருந்து நாங்கள் ஸ்பீட் போட்டில் போறது என்றுதான் முடிவெடுத்தது. ஸ்பீட் போட் கிடைக்கவில்லை எங்களுக்கு. மாதகலிலிருந்து போற பயணங்கள் ஒரு அளவுக்கு பாதுகாப்பானது. ஸ்பீடு போட்டில் போயிடலாம். மன்னாரில் ஸ்பீட்போட் கிடைக்காதபடியால் ரெண்டு மூன்று நாள் அங்கு தங்கிட்டம். ஸ்பீட் போட் தேடிக்கொண்டு. அந்த நேரம் புளொட் பெருசா அதிலே இண்ட்ரஸ்ட் காட்டேல எங்களுக்கு போட் தாறதில. பிறகு தனியார் படகு ஒன்று எடுத்து ரோலர் எடுத்துதான் நாங்கள் மன்னாரிலிருந்து கிளம்புறோம்.

தேசம்: 17 பேரும் ஒன்றாக தான் போகிறீர்கள் எத்தனை பேர் எல்லாமாக பாதுகாப்புக்கு வந்தவர்கள்…

அசோக்: எல்லோருமாகச் சேர்ந்து 25 பேர் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். பெரிய ரோலர் மீன்பிடி ரோலர் தெரியும் தானே. ஆனா ஸ்பீடா போகாது. மிக ஸ்லோவாக தான் போகும். பெரிய ஆபத்தான பயணம் இது. ஏனென்றால் எங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. ரெண்டே ரெண்டு துப்பாக்கிகளோடுதான் அங்க பாதுகாப்புக்கு வந்தவங்க என்று நினைக்கிறேன். அடுத்தது பகல் நேரப்பயணம். ஆபத்தானது.

தேசம்: கடற்படை வழிமறிச்சா சிக்கல் தான் என?

அசோக்: நேவியின் அந்த அந்த ஸ்பீடுக்கு இவங்களால ஓட இயலாது. ரெண்டு மணிக்கு கிளம்பினாங்க .ரோலர் ஓடியோடி போய் இரவு பட்டபின் சேர்ந்து விட்டோம். அதிர்ஷ்டவசமாக போய் சேர்ந்து விட்டோம்

தேசம்: இவ்வாறு தான் இந்த பயணங்கள் அமைகிறதா? 25 பேர் ஒரே நேரத்தில போறது என்பது…

அசோக்: அப்படி ரோலரில் போறது முட்டாள்தனமான வேலை. யாழ்ப்பாணத்திலிருந்து தோழர்களை பயிற்சிக்கு அனுப்பும்போது ஸ்பீட் போட்டில்தான் அனுப்புவோம். அந்த நேரத்தில் யாழ்ப்பாண கரையோரங்கள் டெலோ – எல் ரீ ரீ ஈ பிரச்சனைகளால் புலிகளின்ற கண்காணிப்பு இருந்தது. டெலோ தோழர்களை கொண்டு பயணம் செய்வது ஆபத்தானது. அத்தோட நாங்களும் தனியப்பயணம் செய்ய தயங்கினோம். புலிகள் ஏதும் செய்வார்கள் என்ற பயம் இருந்தது.

தேசம்: ஏன் அந்த காலகட்டத்தில் உங்களுக்கு ஸ்பீட்போட் எடுக்க முடியாமல் போனது?

அசோக்: அந்த நேரத்தில் மன்னாரில் புளொட்டிலும் பெரிய ஸ்பீட் போட் இல்லை என்று நினைக்கிறேன். புளொட்டில் கேட்டபோது அந்த நேரத்தில் தங்களிடம் ஸ்பீட்போட் இல்லை என்று சொல்லி விட்டார்கள். அடுத்தது நாங்கள் உட்கட்சிப் போராட்டம் நடத்த, பின் தள மாநாடு நடத்த பின் தளம் போகிறோம். அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

தேசம்: ஆனால் கண்ணனும் வந்தது அதில். கண்ணனுக்காகவாது பாதுகாப்பு கொடுக்குற முயற்சியை அந்த நேரம் மேற்கொண்டிருக்கலாம். ஒன்றுமே இல்லை. கண்ணன் தானே படைத்துறைச் செயலாளர்?

அசோக்: கண்ணன் படைத்துறைச் செயலாளர் அவருக்கே இந்த நிலை என்றால்…

தேசம்: அப்போ அவ்வளவு மோசமான போக்கு ஒன்று இருந்திருக்கு. என்ன சொல்லுறது …

அசோக்: ஒரு சுவாரசியமான விடயம் சொல்ல வேண்டும். நாங்கள் தளமாநாட்டில் பின்தள படுகொலைகள் பற்றி பின்தள செயற்பாடுகள் பற்றி குற்றச்சாட்டுக்களை முன்வைத்தோம் தானே, அப்போ கண்ணன் கொலைகளுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று சொல்லியும் எங்களுடைய எல்லாத் தீர்மானங்களையும் ஏற்றுக் கொண்டவர்.

தேசம்: அதற்கு பின்பு வருவோம் நாங்கள். இப்ப போட்ல போய்ச் சேர்ந்துவிட்டீர்கள். போய் சேர்ந்தா எப்ப மாநாடு நடக்குது? போட்டுக்குள்ள ஏதாவது கருத்து பரிமாற்றங்கள்?

அசோக்: அந்தப் பயணம் மோசமான பயணம் என்றாலும் மிகவும் கலகலப்பான பயணம். எல்லோரும் ஒத்த கருத்துக் கொண்ட தோழர்கள்தானே. கண்ணனும் கூட எங்களோடு உடன்பாடு கொண்டவராகத்தான் இருந்தார். தள மாநாட்டில் எங்களுடைய கருத்துடன் முழுக்க முழுக்க உடன்படுகிறார். புளொட்டுக்குள்ள படுகொலை நடந்தது என்று சொல்லியும் படுகொலைக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று சொல்லியும் அதற்கு முழுக்க முழுக்க உமா மகேஸ்வரனும் உளவுத்துறையும் சங்கிலியும் தான் பொறுப்பு என்று சொல்லியும் ஒத்துக்கொண்டார்.

தேசம்: அவர் ஒத்துக் கொண்டது படகுக்குள்ள நடந்த உரையாடலிலா?

அசோக்: இல்லை இல்லை தளமாநாட்டில் பப்ளிக்கா. தள மாநாட்டில் நாங்கள் வைத்த குற்றச்சாட்டுகள் இருக்குதானே தலைமை மீது. அதற்கு முகாமில் நடந்த கொலைகளுக்கு தனக்கு தொடர்பில்லை என்று சொல்லிட்டார். தனக்கு தொடர்பு இல்லை என்று சொல்லியும் கட்டாயம் நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லியும், பின் தளத்தில் ஒரு மாநாடு நடத்தப்பட வேண்டும் என்ற எங்க நிலைப்பாட்டிக்கு ஆதரவு கொடுத்தவர்.

தேசம்: அப்போ அவர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அவர் படைத்துறைச் செயலாளர் தானே…

அசோக்: அவருக்கு எந்த அதிகாரமும் பின் தளத்தில் இல்லை.

தேசம்: அவர் வெளியேறியவர்கள் பற்றி என்ன அபிப்பிராயம் வைத்திருந்தவர்?

அசோக்: நாங்க வெளியேறினதற்குப் பிறகு, பின் தளத்தில் நிறையத் தடவைகள் நான் சந்தித்திருக்கிறேன் கண்ணனை. இயக்கம் தொடர்பாக முழுக்க முழுக்க அதிருப்தியோடு தான் இருந்தவர். நாங்க வெளியேறியது தொடர்பாக அவருக்கு மனவருத்தமும் விமர்சனங்க களும் இருந்தன.

ரகுமான் ஜான், கேசவன் நாங்கள் எல்லோரும் ஒன்றாக இருந்திருந்தால் ஒரு ஆரோக்கியமான போராட்டத்தை ஆரம்பித்து நடத்தி இருந்தால் இயக்கத்தை சரியான வழிக்கு கொண்டு வந்திருக்கலாம் என்ற அபிப்பிராயம் அவரிடம் இருந்தது.

தேசம்: உண்மையிலேயே ஆரோக்கியமான சக்திகள் நிறைய பேர் இருந்தும் அந்த ஆரோக்கியமான சக்திகளுக்கு இடையில் ஒரு…

அசோக்: ஒருங்கிணைப்பு இல்லை. உரையாடலும் நடக்கலை. ஏனென்றால் கண்ணன் நிறைய அதிருப்தியோடு இருந்தது எனக்கு தெரியும். தனிப்பட்டமுறையில் என்னோடு கதைப்பார். ஆனால் வெளிப்படையாக கதைக்க மாட்டார். தன்னுடைய படைத்துறைச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு தானும் கொலைசெய்யப்படலாம் என்ற பயம் இருந்தது. பின் தளத்தைப் பொறுத்தவரை உங்களுடைய பதவி என்பது வெறும் பொம்மை. படைத்துறை செயலாளராக இருந்தால் என்ன, அரசியல் துறைச் செயலாளராக இருந்தால் என்ன முகுந்தனும் அவருடைய உளவுத்துறையும் நினைத்தால் யாரையும் கொலை செய்யலாம். அங்க அதிகாரம் என்பது உளவுத் துறைக்கும் முகுந்தனுக்குமானது தான்.

தேசம்: இல்லை பொதுவாக இந்த ராணுவ கட்டமைப்புகளை பார்த்தீர்கள் என்றால் இப்படியான இந்த அதிகாரங்கள் வந்து குவியுறது குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு தான் நடக்கும். ஒரு அமைப்பு வந்து மெது மெதுவாக வளர்ச்சியடைந்து பெரிய அமைப்பாக வரேக்க சில ஆண்டுகளுக்குப் பிறகு அது கொலை இயந்திரமாக மாறும். இது நீங்கள் ஐந்து பேர் சேர்ந்து தொடங்குகிறீர்கள். அது பார்த்தா ஆறு மாதத்திலேயோ ஏழு மாதத்திலேயோ நீங்கள் கொலைஞர்களாக மாறுகின்றீர்கள் என்றால் இது ஒரு பெரிய கால இடைவெளி இல்லை தானே.

அசோக்: கால இடைவெளி என்றால்…

தேசம்: 83 க்கு பிறகு தானே இது எல்லாம் ஆரம்பிக்குது.

அசோக்: எண்பத்தி நான்கு நடுப்பகுதி…

தேசம்: எண்பத்தி நான்கு நடுப்பகுதி என்றால் கிட்டத்தட்ட ஆறு, ஏழு மாதத்திற்குள்ளேயே இந்தப் பிரச்சினை வருது. இத்தனைக்கும் புளொட்டுக்குள்ள ஆயுதமும் இருக்கேல. ஆயுதம் வந்து ஒரு கொஞ்ச காலம் தான். மற்றது இதுக்குள்ள இருந்த ஆட்கள் எல்லாம் ஏதோவொரு வகையில் பயிற்சி எடுத்தவர்கள் ஒத்த சிந்தனையோடு இருந்தவர்கள். இவர்களுடைய அக்கறையின்மையா இத்தனைக்கும் காரணம்?

அசோக்: நீங்கள் சொல்லுவது சரி. முழுவதும் ஏற்றுக் கொள்கிறேன். ஆரம்ப காலத்திலேயே சின்ன சின்ன அதிருப்திகள் முரண்பாடுகள் பிரச்சனைகள் வரேக்கையே பேசித் தீர்த்திருக்க வேண்டும். நான் முதலே சொல்லிருக்கிறேன் முரண்பாடுகளை தீர்ப்பதற்கு ஆரோக்கியமான உரையாடல் அவசியம். அந்த உரையாடல் இருக்கல. முரண்பட்ட உடனே முரண்பாடு கூர்மையடைந்து கொண்டு போனதேயொழிய தீர்ப்பதற்கான எந்த வழியும் இல்லை .ஏனென்றால் முரண்பாட்டுக்கு ஊடாக குழு வாதம் உருவாகிவிட்டது. அந்தக் குழு வாதம் எங்க உருவாகுதோ அங்க முரண்பாடுகள் பெரிதாகும்.

முதல்ல எல்லா பேரும் ஒரு சினேகபூர்வமாக வாற முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான உரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள் என்றால் அங்க இந்த உளவுத்துறையினுடைய அதிகாரம், நடவடிக்கைகளை எல்லாத்தையும் கட்டுப்படுத்தி இருக்கலாம். இந்த உரையாடலில் இதைப்பற்றி முன்னமே நிறைய கதைச்சிருக்கம்.

தேசம்: இந்த பிரச்சனைக்காக தானே பிரபாகரனில் இருந்து இவர்கள் வெளியில வாறினம்.

அசோக்: பிரபாகரன் மீது அதாவது புதிய புலிகள் பிறகு புதிய பாதை பிறகு விடுதலை புலிகள் பிறகு புளொட் இந்த வரலாற்றை பார்த்தீர்களென்றால் எல்லாம் ஒரு வரலாற்றுப் பின்னணியோடு தான் வருது. அரசியலற்ற ஒரு தனிநபர் பயங்கரவாத கண்ணோட்டத்தில் தான் உருவாக்கம் பெறுகிறது. இந்த தனிநபர் பயங்கரவாதத்தை யார் முன்னெடுத்து செய்றது, யாரிடம் அந்த அந்த அதிகாரம் இருக்கு என்பதுதான் பிரச்சனையேயொழிய எல்லா வகையிலும் நாங்கள் வரலாற்றை பின்னோக்கி பார்த்தோமென்றால் எங்களுடைய போராட்டம் என்பது தனிநபர் பயங்கரவாதத்தின் ஊடாகத்தான் தொடர்ந்து வந்து கொண்டிருக்கு. எந்த அரசியலும் இல்லை. எந்தவொரு ஜனநாய அமைப்பு வடிவங்களும் இருக்கவில்லை.

தேசம்: ஏனென்றால் புளொட்டில் இருந்த இந்த தலைமைகளைப் பார்க்க இவர்களுக்கு விடுதலைப் புலிகளையோ பிரபாகரனையோ விமர்சிக்க எந்த ஒரு தார்மீக நியாயம் இருக்கிறதா தெரியவில்லை. ஏனென்றால் கிட்டத்தட்ட அதே போக்கைத் தான் கடைப்பிடிக்கினம் பிறகும்.

அசோக்: அதிகாரம் கிடைத்தால் புளொட்டும் ஒன்றுதான் புலிகளும் ஒன்றுதான். புளொட் தத்துவார்த்த கோட்பாட்டோடு கொலை செய்திருப்பார்கள். புலிகள் தத்துவார்த்த கோட்பாடற்று கொலை செய்திருப்பார்கள். எங்களுக்கு முலாம் பூசுவதற்கு ஒரு தத்துவார்த்த கோட்பாடு இருந்தது தானே சில நேரம் கொலைகளை செய்து போட்டு தத்துவ முலாம் பூசியிருப்போம்.

தேசம்: ஆனால் சங்கிலியன் செய்த படுகொலைக்கு நீங்கள் எப்படி அந்த தத்துவக் கோட்பாட்டை பாவிக்கிறது?

அசோக்: அதுதான் முகுந்தனின் சாணக்கியம். தோழர் சந்ததியாரை கொலை செய்து விட்டு இந்தியாவுக்கு எதிரான ஆள் என்று ரோவிடம் போட்டுக் கொடுத்தார். உண்மையில் முகுந்தன் தொடர்பாக ஒரு நேர்மையான விமர்சனம் வைப்போமானால் அவரை மாத்திரம் குற்றம் சுமத்த முடியாது. முகுந்தன் விசுவாசிகளாக இருந்த பலர் இந்த கொலைகளை நியாயப்படுத்த முகுந்தனுக்கு உதவினாங்க. உதாரணமான டெல்லியிருந்து ரோவுக்கும் புளொட்டிக்கும் டபுல் ஏஜென்சியாக இருந்தவர்கள் முக்கியமானவர்கள். புளொட்டின் அழிவுக்கு இவர்களும் ஒரு காரணம். பிறகு இது பற்றி கதைப்பம்.

தேசம்: இந்த மாநாட்டை சொல்லுங்கள். நீங்கள் போய் எத்தனை நாளில் மாநாடு நடந்தது? அல்லது நீங்கள் போக உங்களுக்கான வரவேற்பு…

அசோக்: வரவேற்பு பெரிய சந்தோசமாக இல்லை. நாங்கள் போய் மன்னாரில் இருந்து வேதாரணியத்துக்கு போறோம். அங்கிருந்து ஒரத்தநாட்டிக்கு போறம். அங்க போன உடனே தளத்தில் இருந்து வந்த 17 பேருக்கும் மத்திய குழு உறுப்பினர்களுக்குமான பாதுகாப்பு ஏற்பாடு ஒன்று செய்யப்பட்டிருந்தது. அது வந்து ஒரத்த நாடு புளாட் ஆபீஸ் இருக்குக்கும் இடத்திலிருந்து ஏழெட்டு கிலோ மீட்டர் உள்ளுக்க இருக்கிற கிராமத்தில் நாங்க தங்குவதற்கு ஒரு இடம் ஒழுங்கு பண்ணி தந்தாங்க. அங்கு பஸ் போக்குவரத்து ஒன்றுமில்லை. ஒரு நாளைக்கு ஒன்று வரும். அந்த கிராமத்தில வீடொன்று எடுத்து எங்களை தங்க வைத்து, எங்களுக்கு பாதுகாப்பு என்ற போர்வையில் கடும் கண்காணிப்பு.

தேசம்: யார் உங்களுக்கு பாதுகாப்பு தந்தது…

அசோக்: அது சங்கிலி ஆட்கள்தான் போட்டது. ஆனால் எங்களுக்கு தெரியும் அது எங்களுக்கான ஒரு பொறி , எங்களை கண்காணிக்க உளவுத் துறையால் போடப்பட்டது என்று. அங்க இருந்து ஒவ்வொரு குரூப்பா ஐந்து பேர் ஆறு பேர் சேர்ந்து முகாம்களுக்கு போவதற்கான அனுமதி கேட்டனாங்கள். முதல்லில் முகுந்தன் அனுமதி தரவில்லை. பிறகு சில நாட்களுக்கு பிறகு அனுமதி தந்தார். தள செயற்குழுவும் நாங்களும் போய் முகாம்களை பார்வையிடலாம் என. முகாம்களுக்கு போய் முகாம்களை பார்வையிட்டு நாங்கள் தளத்தில் இருந்து வந்திருக்கிறோம் என்று தளத்தில் நடந்த மாநாட்டு பிரச்சனை எல்லாம் சொல்லி, இங்கே ஒரு தள மாநாட்டுக்கான ஆயத்தங்களை செய்ய வேண்டும் என்று சொல்லி விளங்கப்படுத்துகிறோம். தோழர்கள் எங்களின் கருத்துக்களுக்கு மிகுந்த ஆதரவு காட்டினாங்க…

தேசம்: அதற்கு உமாமகேஸ்வரன் அனுமதி கொடுத்தவரா?

அசோக்: உமாமகேஸ்வரன் முகாம்களைப் பார்வையிட மட்டும்தான் அனுமதி கொடுத்தது. முகாம்கள் தொடர்பாக அதிருப்தி இருந்தது தானே. அப்போ முகுந்தன் சொல்லுச்சு உங்களுக்கு அதிருப்தி இருந்தால் நீங்கள் போய் பார்க்கலாம் அங்க எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என்று. முகுந்தன் எதிர்பாக்கல தளத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை இங்க போய் ஒரு பிரச்சாரமாக மேற்கொள்ளுவோம் என்று.

தேசம்: அது ஓரளவுக்கு எதிர்பார்க்கக் கூடியது தானே அவ்வளவு முட்டாள் இல்லை தானே முகுந்தன். ஒன்றில் அவர் சொல்லி இருக்க வேண்டும் நீங்கள் ஒருத்தரும் கதைக்கக் கூடாது என்று. அப்படி சொல்வதற்கு வாய்ப்பு இல்லை. அப்ப அவர் எதிர்பார்த்து தானே இருப்பார்.

அசோக்: எதிர்பார்த்தாரோ தெரியாது, ஆனால் அதற்குப் பிறகு முகாம்களுக்கு போவதற்கான தடை வந்துவிட்டது. அந்த நேரத்தில் ரகுமான் ஜான் ஆட்கள் வெளியேறிட்டார்கள் தானே. வெளியேறினதற்குப் பிறகு முகாங்களுக்குள் கதை பரவிட்டது இவங்க ஒரு குரூப் வெளியேறிவிட்டார்கள் என்று. அதற்கு பிறகு ராஜனோடு ஒரு குரூப் உடைந்து போய்விட்டது. தளப்பிரச்சனைகள் பற்றி தோழர்களுக்கு பெரிசாக தெரிந்திருக்கவில்லை.

தேசம்: பரந்தன் ராஜன்…

அசோக்: ஓம். ராஜன் பாலஸ்தீன பயிற்சி முடித்து வந்த பின் பின்தள நிலைமையை பார்த்து முகுந்தனோடு கடும் பிரச்சனை. முக்கிய பிரச்சினை என்று கேட்டால் காக்கா சிவனேஸ்வரன் என்று உடுவிலைச் சேர்ந்த தோழர் படுகொலை பற்றி …

தேசம்: அவர் எப்ப படுகொலை செய்யப்பட்டவர்?

அசோக்: சரியாக காலம் ஞாபகம் இல்லை. இந்த கொலை சந்ததியார் கொலைக்கு முன்னமே நடந்துவிட்டது.

அப்போ ராஜன் கடும் பிரச்சினை. ஏனென்றால் ராஜனுக்கு மிகத் தெரிந்த நெருங்கிய தோழர் அவர். பிறகு ராஜனுக்கும் முகுந்தனுக்கும் நிறைய முரண்பாடுகள் வருகிறது. ஒரு கட்டத்தில் ராஜன் வெளியேறி விடுகின்றார். காலப் போக்கில் ராஜனோடு நிறையதோழர்கள் வெளியேறிப் போயிற்றாங்க. நாங்கள் பின்தளம் போகும்போது ராஜனோடு 300-350 தோழர்கள் கேம்பிலிருந்து வெளியேறிவிட்டார்கள்.

மத்தியகுழு உறுப்பினர்களான ஆதவன், செந்தில், பாபுஜீ மற்ற முக்கிய தோழர்களும் குறிப்பா PLO ராஜா, PLO காளித் ஐயா, விஜி, மெக்கன்ரோ, சுரேஸ் போன்றவர்களும் ராஜனோடு சென்றுவிட்டார்கள். முகாம்களில் தோழர்கள் பெரும் குழப்பத்தோடுதான் இருந்தாங்க. புளொட்டை விட்டு முன்னரே வெளியேறி இருந்த டேவிட் ஐயா, சரோஜினிதேவி, சண்முகலிங்கம், யூலி, துளசி, தங்கராஜா தோழர் இவங்க எல்லோரும் ராஜனுக்கு சப்போர்ட்பண்ணிக் கொண்டிருந்தாங்க.

கல்வி மற்றும் தொழில்வாய்ப்புக்களுக்காக நாட்டின் கதவுகளை திறந்தது அவுஸ்திரேலியா !

கல்வி கற்றல் மற்றும் தற்காலிக தொழில் வாய்ப்புக்களுக்கான எதிர்பார்ப்புடன் உள்ளவர்களுக்கு தமது நாட்டிற்குள் வர அனுமதி வழங்கப்படும் என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

தமது நாட்டிற்குள் வருகைத் தரும் எதிர்பார்ப்புடன் உள்ள மாணவர்கள் மற்றும் தற்காலிக தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளவர்களுக்காக வழங்கப்படும் விஸா கட்டணத்திற்கு விசேட சலுகை வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் வேகமாக பரவிவரும் ஒமிக்ரோன் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள தொழிலாளர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்களை தமது நாட்டிற்குள் வருகைத் தருவதை ஊக்குவிப்பதும் இந்த நடவடிக்கையின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.