2022

2022

ரஷ்யாவை கட்டுப்படுத்த உக்ரைனுக்கும் – சீனாவை கட்டுப்படுத்த தாய்வானுக்கும் அமெரிக்க ஆயுத உதவி !

சீனாவுக்கு ஆசிய நாடுகள் தரும் ஆதரவை அபகரிக்க அமொிக்கா முயற்சிப்பதாக சீனாவின் பாதுகாப்பு மந்திரி வெய் ஃபெங்க் குற்றம் சாட்டி உள்ளாா்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,

பன்முகத்தன்மை என்ற போா்வையில் அமெரிக்கா தனது நாட்டின் நலன்களை பிற நாடுகளின் மீது திணிக்கிறது. எந்த நாடும் தன் விருப்பத்தை மற்ற நாடுகள் மீது திணிக்கக்கூடாது, பிற நாடுகளை கொடுமைப்படுத்த கூடாது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவை எதிா்ப்பதற்காக, இந்தோ-பசிபிக் என்ற பெயரில் ஒரு சிறிய அமைப்பை அமெரிக்கா உருவாக்கும் முயற்சி, ஆசிய நாடுகள் சீனாவுக்கு தரும் ஆதரவை பறிக்கும் முயற்சியே ஆகும்.

இது மற்றவர்களைக் கட்டுப்படுத்தவும் மோதலையும் உருவாக்குவதற்கான ஒரு உத்தியாகும். சீனா தனது ராணுவத்தை விரைவாக நவீனப்படுத்தி வருகிறது. சமீபத்தில் சீனா, சாலமன் தீவுகளுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொண்டது. இது பசிபிக் கடற்பகுதியில் சீன கடற்படை தளம் உருவாகலாம் என்ற அச்சத்தை அமெரிக்கா உருவாக்கி, தென் சீனக் கடல் பகுதிகளில் போர்க் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அமெரிக்கா நிறுத்துகிறது. இது எங்கள் பிராந்திய விவகாரங்களில் தலையிடுவதாகும். பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் நாடுகளுடன் சீனாவிற்கு கடல்சாா்ந்த பிரச்சினை உள்ளது. இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகள் தங்கள் கடல் சாா்ந்த பிரச்சினைகளை தாங்களாகவே தீா்த்து கொள்ள வேண்டும். தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்தவே சீனாவை எதிர்க்கும் போர்வையில் தைவானுக்கு ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இவ்வாறு சீனா பாதுகாப்பு மந்திரி கூறினார்.

இதே நேரம் ரஷ்யாவை கட்டுப்படுத்தவே உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆயுதங்களை வழங்குவதாகவும் போர் முடிவடையாது நீண்டு கொண்டு செல்வதற்கு அமெரிக்காவும் அதனுடைய நேட்டோ நாடுகளுமே காரணம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் குற்றஞ்சாட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.

களவாடப்படும் தமிழர் நிலங்கள் – வாய் பேச்சோடு நிற்கும் தமிழ்தேசிய கட்சிகளின் தலைவர்கள் !

இலங்கையில் பௌத்த – சிங்கள பேரினவாதம் ஏதொவொரு வகையில் தன்னுடைய ஆதிக்க கரங்களை சிறுபான்மை மக்கள் மீது அழுத்திபிடித்து்ககொண்டு தான்  இருக்கிறது என்பதை குருந்தூர் மலை மீது அமைக்கப்பட்டு வரும் பௌத்த விகாரை அமைப்பு நடவடிக்கைகள் மிகத்தெளிவாக படம்பிடித்துக்காட்டியுள்ளன.

May be an image of 3 people and outdoors

இங்கு இரண்டு விதமான விடயங்கள் அலசப்பட வேண்டியவை.

01. குருந்தூர்மலை, திருகோணமலை, நெடுங்கேணி வெடுக்குநாரி மலை என பல இடங்களில் உள்ள தமிழர் வழிபாட்டு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற இந்த நிலையில் இதற்கு எதிராக செயற்பட வேண்டியவர்கள் மிகுந்த அமைதியுடன் இருப்பதை தான் இங்கு நாம் கேள்விக்குட்படுத்த வேண்டியுள்ளது.

தேர்தல் காலங்களில் மட்டும் மழைக்காலத்து ஈசல்கள் போல போலித்தேசியம் பேசிவிட்டு காணாமலேயே போய்விடுகிறார்கள் இந்த தமிழ்தேசியம் பேசும் அரசியல்வாதிகள். ஜனாதிபதிக்கு அறிவுரை கூறுமளவுக்கு – எதிர்க்ட்சிகளை இணைத்து பிரேரணை கொண்டுவரும் அளவுக்கு தெளிவாக சட்டங்கள் தெரிந்த பல சட்டத்தரணிகள் வட-கிழக்கு தமிழ்தேசிய கட்சிகளில் அங்கத்தவர்களாயுள்ளனர். இருந்தும் என்ன பயன்..? தமிழர் நிலங்களில் தொடரும் இந்த நில அபகரிப்பு பிரச்சினைகளுக்கு எதிராக ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. மேற்கொள்ள முயற்சிக்கவும் இல்லை. பிரச்சினை பூதாகரமாக உள்ள போது மட்டும் மக்களோடு மக்களாக வந்து கொடி பிடித்து விட்டு சென்று விடுவதாக தான் பாராளுமன்ற அரசியல்வாதிகளின் நிலையும் காணப்படுகின்றது.

இதற்காக தான் இவர்களை நாம் பாராளுமன்றம் அனுப்பினோமா என மக்களும் கேள்வி கேட்பதில்லை. அவர்களும் மக்களுக்காக – தமக்கு வாக்களித்த மக்களின் உரிமைக்காய் எந்த கஷ்டமும் பட்டதாக தெரியவில்லை. பட்டதும் இல்லை.

இந்த அரசியல்வாதிகள் பிரச்சினைகளை வளர்க்கவே விரும்புகின்றனர் .தமிழர் பகுதிகளில் இன முரண்பாடு தொடர்பான பிரச்சினைகள் எரிந்து கொண்டிருப்பதை இந்த தமிழ்தேசிய தலைவர்கள் விரும்புகிறார்களா என்ற கேள்வி எழுகிறது. அப்போது தானே இதை வைத்து – இந்த நிலத்தை மீட்டுத்தருவதாக கூறி ஓட்டு சேர்க்க முடியும்.

கிட்டத்தட்ட இந்தியாவின் அயோத்தியில் உள்ள மசூதியையும் – ராமர் கோயிலையும் வைத்து நூற்றாண்டை தொடரும் மதப்பிரச்சினையை எவ்வாறு அரசியல்வாதிகள் தூண்டி குளிர்காய்கிறார்களோ அதே போலத்தான் நம்மவர்களும் செய்கிறார்களோ என்ற அச்சமும் ஏற்படுகிறது. இந்த மனநிலையில் தான் தமிழ்தலைவர்கள் உள்ளார்கள் என்றால் உண்மையிலேயே இவர்கள் தூக்கி வீசப்பட வேண்டும். வீசப்பட வேண்டியவர்கள்.

02.இன்று விகாரை அமைப்பு நடவடிக்கைகள் முனைப்பாக நடைபெற்றுவரும் குருந்தூர் மலை பகுதியானது தொல்லியல் பகுதியாக அறிவிக்கப்ப்படிருந்தததுடன் அங்கு எந்த புனரமைப்பு பணிகளையும் மேற்கொள்ள முடியாது என நீதிமன்றம் முன்னதாக உத்தரவு பிறப்பிருந்த நிலையில் சத்தமேயில்லாமல் அரச ஆதரவுடனும் – இராணுவ பாதுகாப்புடனும் விகாரை அமைப்பு பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அப்படியானால் நாட்டில் ஒவ்வொரு மக்களுக்கு ஒவ்வொரு சட்டம். பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு ஒரு சட்டம்..? சிறுபான்மை மக்களுக்கு ஒரு சட்டம்..?

இன்று அப்பகுதி இளைஞர்களும் பல பகுதிகளிலிரு்து சென்ற இளைஞர்களும் – மக்களும் கூடியதால் தற்காலிகமாகவிகாரை அமைப்பு பணி நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் தற்காலிகம் தான் இது. விகாரை இன்னும் வளரும் என்பதில் துளியும் ஐயமில்லை.

அண்மையில் செய்தி ஒன்றைக்காண கிடைத்ததது. ‘ பதுளை வெல்லவாய கிராம பகுதி ஒன்றில் பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாதமையால் தாய் ஒருவர் விஷம் கொண்ட விதைகளை உட்கொண்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.” என்றதாக அந்த செய்தி நீண்டு கொண்டு சென்றது.

 

அது சரி இதற்கும் விகாரை அமைப்புக்கும் என்ன சம்பந்தம்..?

இந்த பொருளாதார நெருக்கடி – உணவுப்பற்றாக்குறை – எரிபொருள் நெருக்கடி என பல பிரச்சினைகள் உள்ள இந்த நாட்டில் இன ஒற்றுமையுடன் நாட்டின் இனங்களை இணைத்துக்கொண்டு பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகர வேண்டிய இந்த காலத்தில் கூட நாட்டின் அரசியல் தலைவர்களும் – மதத்தலைவர்களும் புதிய ஒரு அரசியல் பிரச்சினையை இந்த விகாரையை வைத்து முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றனர்.

இப்படியாக இனங்களுக்கிடையிலான பிரச்சினைகளை மேலும் முனைப்படைய செய்து கொண்டு தான் புலம்பெயர்ந்த தமிழர்களை அழைத்து பொருளாதாரத்தை மீட்க வழி தேடுகிறார்கள்.

இன மதப்பிரச்சினைகளை வைத்துக்ககொண்டுதான் நாட்டை முன்னேற்ற சிங்களவர்களுடன் தமிழர்களும் இணைய வேண்டும் என்கிறார்கள்.

இதே நிலை தொடருமாயின் இந்தியாவின் அயோத்தி எத்தனை உயிர்களை காவு வாங்கியதோ..? அதே போல இங்கேயும் மீண்டும் கலவரங்கள் வெடிக்க வாய்ப்புள்ளது.

சிங்களவர்களுக்கும் – தமிழர்களுக்கும் ஏன் பிரச்சினை.? என்ன பிரச்சினை..? என்ற கோணத்தில் அணுகி இன ஒற்றுமையை ஏற்படுத்தும் வரை – இன ஒ்றறுமையை ஏற்படுத்த முன்வரும் வரை இந்த நாட்டுக்கு அந்த கௌதமபுத்தரால் கூட விடிவு கொடுக்க முடியாது என்பதே நிதர்சனம்.

தோற்றுப் போனவர்களின் கதைகள்: ‘தோற்றுத்தான் போவோமா…’ தொகுப்பு மலர் மீதான ஒரு பார்வை – வாகீசன்

‘தோற்றுத்தான் போவோமா….’ புகலிட தொகுப்பு மலரினை மீண்டுமொருமுறை மீள் வாசிப்புக்குட்படுத்தினேன். இது பிரான்சின் தலைநகர் பாரிசில் 1995 ம் ஆண்டு ஒரு மேதினத்திலன்று விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட தோழர் சபாலிங்கம் நினைவாக, சுமார் 5 வருடங்கள் கழித்து 1999 ம் ஆண்டு பிரான்சில் இருந்து சபாலிங்கம் நண்பர்கள் வட்டத்தினால் வெளியிடப்பட்டிருந்தது. புலிகளின் வரலாற்றில் ஒரு கறை படிந்த அத்தியாயமாக ஒரு கறுப்புப் பக்கமாக இன்றும் விளங்குகின்ற தோழர் சபாலிங்கத்தின் படுகொலை ஆனது அன்று புகலிட சமூகத்தில் பெரும் அதிர்ச்சியினையும் திகைப்பினையும் ஏற்படுத்தியிருந்த விடயம் நாம் அறிந்ததே. இந்த படுகொலையினால் அன்று இங்கு புகலிடத்தில் மனித உரிமைகளை முன்னிறுத்தி தீவிரமாக செயற்பட்டு வந்த புலி எதிப்பாளர்களின் செயற்பாடுகளில் ஒரு தடுமாற்றமும் பயப்பிராந்தியும் ஏற்பட்டிருந்தது. ஆயினும் சுமார் 5 வருடங்கள் கழித்து தற்கொலைக்கு ஒப்பான ஒரு செயலாக இம்மலர் வெளியீட்டினை நிகழ்த்திய ‘சபாலிங்கம் நண்பர்கள் வட்டம்’ அமைப்பினரின் இப்பணியினையும் இதன் பின் உள்ள அர்ப்பணிப்பையும் துணிச்சலினையும் நாம் மறுக்கமுடியாது.

அனைத்து அராஜகங்களுக்கும் வன்முறைகளுக்கும் எதிராகவும் மனித உரிமைகளுக்கு ஆதரவாகவும் வெளியிடப்பட்ட இத்தொகுப்பு மலரில் ஈழம், புகலிடம், தமிழகம் என்ற பரப்பில் இருந்த பல்வேறு விதமான படைப்பாளிகளினதும் சமூக செயற்பாட்டாளர்களினதும் படைப்புக்கள் வெளியாகியிருந்தன. இந்நூலின் முன்னுரையில் வெளியீட்டாளர்கள் ‘இது வெறும் புலிகளுக்கு எதிரான குரல் அல்ல. பல்வேறு விதமான அரச அடக்குமுறைகள், பெண்களின் மீதான வன்முறை, குழந்தைகளின் மீதான அடக்குமுறை, என அனைத்து மனித நேயமற்ற செயல்களுக்கு எதிராகவும் எமது குரல் ஒலிக்கின்றது’ என்று அழுத்தம் திருத்தமாக கூறுகின்றனர்.

‘காலம் தாழ்த்திய ஒரு அஞ்சலி’ என்று இதன் ஆரம்பப் பக்கங்களிலேயே சமுத்திரன் ஒரு பதிவினை எழுதுகிறார். உண்மைதான். இது ஒரு காலந்தாழ்த்திய அஞ்சலிதான். நாம் ஏற்கனவே மேலே கூறியபடி இம்மலரானது சபாலிங்கம் படுகொலை செய்யப்பட்டு 5 வருடங்கள் கழித்து மிகவும் தாமதமாகவே வெளியிடப்பட்டிருகின்றது. ஆயினும் மிகவும் காத்திரமாகவும் சிறப்பாகவும் செம்மையாகவும் வெளிவந்திருக்கின்றது.

அழகலிங்கம் எழுதிய ‘அராயகமும் மார்க்சியமும்’ தி. உமாகாந்தனின் ‘சரியும் சர்வாதிகார சாம்ராஜ்ஜியங்கள்’ போன்ற காத்திரமான கட்டுரைகள் இம்மலரை சிறப்பிக்கின்றன. ‘சிந்தனை: அக்கினிக்குஞ்சு’ என்ற தலைப்பில் பேராசிரியர் மு.நித்தியானந்தன் சிந்தனைக்கு அஞ்சும் மனிதர்கள் குறித்தும் அச்சமும் பீதியும் கொண்டு மாற்றுக் கருத்துக்களை கண்காணிக்கும் மனிதர்கள் குறித்தும் எழுதி ராஜினி திரணகமவின் படுகொலையுடன் தொடர்பு படுத்தி ஒரு சிறப்பான கட்டுரையினை எழுதுகிறார். ‘புலம் பெயர்ந்தது தமிழர்கள் மட்டுமல்ல, வன்முறைகளும்தான்…’ என்ற கட்டுரையில் அழகு குணசீலன் இதுவரை காலமும் புலம்பெயர் தேசங்களில் இடம்பெற்ற அராஜகங்கள், வன்முறைகள், படுகொலைகள், மாற்றுச் சஞ்சிகைகள், பத்திரிகைகள், மீதான தடைகள் பற்றியும் தேடகம் எரிப்பும் குறித்தும் ஒரு அட்டவணையுடன் கூடிய விரிவான கட்டுரை ஒன்றினை எழுதுகிறார். அசோக் யோகன் கண்னமுத்து ‘துடைப்பானின் குறிப்புக்கள்’ என்ற தனது பதிவில் தேசியவாத உணர்வுகள் எப்படி தேசியவெறியாக உருமாறி, அது எவ்வகையில் மற்றவர்களின் மீது மேலாண்மை செலுத்துகின்றது என்பதினை விளக்கி, எமது தேசிய இனப்பிரச்சினைகளின் தீர்வாக மார்க்சிய வழிப்பட்ட அணுகுமுறையினை ஆராய்கின்றார். ‘காலுடைந்த சிவில் சமூகமும் தமிழ் புத்திஜீவிகளும்’ என்ற கட்டுரையில் இன்றய தமிழ் சமூகத்தில் உள்ள புத்திஜீவிகளின் போலித்தனங்கள் குறித்து ஸ்பார்ட்டகஸ்தாசன் விரிவான கட்டுரை ஒன்றினை சேரன், சி.புஷ்பராஜா, சமுத்திரன், தமிழரசன், செ.கணேசலிங்கன், சுவிஸ் ரஞ்சி, ப.வி.சிறிரங்கன், ஜோர்ஜ் குருசேவ், முதலானோரின் அரசியல் கட்டுரைகளுடன் அருந்ததி, சேரன், இளைய அப்துல்லாஹ், நா.விச்வநாதன், தமயந்தி திருமாவளவன், சி.சிவசேகரம், சோலைக்கிளி, உமா, இளைய அப்துல்லாஹ், றஞ்சனி, அ.ஜ.கான், முத்துலிங்கம், செல்வம் அருளாந்தம், இந்திரன் போன்றவர்களது கவிதைகளும் தமயந்தி, உமா, தயாநிதி, ரவீந்திரன், நிருபா, சந்துஷ், நா.கண்ணன் ஆகியோர்களின் சிறுகதைகளும் இம்மலரில் இடம் பிடித்துள்ளன.

இன்று தீவிரமான புலி எதிர்ப்பாளர்களாக இருந்து புலிகளிற்கு எதிராக தமது உரத்த குரல்களை படைப்புக்களாக பதிவு செய்து வருகின்ற பலரது படைப்புக்கள் எதுவும் இதில் இடம் பெறாதது, இவர்கள் புலிகளின் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்த அழிவிற்கு பின்பாகவே தீவிரமான புலி எதிப்பாளர்களாக மாறி புலிகளிற்கு எதிராக கம்பு சுத்தப் பழகி இருக்கின்றார்கள் என்ற உண்மையினையும் எமக்கு எடுத்துச் சொல்கின்றது. முக்கியமாக இன்று சிங்கள இனவாத அரசின் ஒத்தோடியாக மாறி, இலங்கை அரசின் அனைத்து அராஜகங்களுக்கும் செயல்களுக்கும் ஒத்து ஊதுகின்ற பாண்டி பஜார் போராளி அன்று சபாலிங்கம் இலண்டன் வந்து அவரைச் சந்திக்க விரும்பியபோது அவரைச் சந்திக்க மறுத்ததும் இதனை சபாலிங்கம் பாரிசில் தனது தோழர்களிடம் வேதனையுடன் பகிர்ந்து கொண்டதும் எமது புகலிட வரலாற்றில் நாம் மறைக்க முடியாத உண்மைகள்.

இம்மலரானது உண்மையில் ஒரு இரண்டு தசாப்தகால ஈழ-புகலிட சமூக, பண்பாட்டு அரசியல் களங்களின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தினை வெளிப்படையாகப் பேசி நிற்கின்றது என்றே நாம் கருதுகின்றோம். சேரன் ‘காற்றை எதிர்த்து ஒரு காலடி’ என்ற ஒரு விரிவான கட்டுரையினை எழுதியிருக்கின்றார். அதில் அவர் இங்கு புகலிடத்தில் வெளியாகி இருந்த சிறுசஞ்சிகைகள் தவிர்ந்த அன்றைய அனைத்துப் பத்திரிகைகளும் புலிகளின் எதேச்சதிகாரங்கள், அராஜகங்கள் போன்றவற்றை எப்படி ஆதரித்து நின்றன என்பதினை தெளிவாக விளக்குகிறார்.

இதே வேளை இங்கு வெளியாகியிருந்த பெரும்பாலான சஞ்சிகைகள் அனைத்துமே புலி எதிர்ப்பாளர்களினாலேயே வெளி வந்திருந்தன என்பதுவும் நாம் மறுக்க முடியாத உண்மை. புலிகள் தமது இராணுவ வெற்றிகள் மூலமும் அர்ப்பணிப்புக்கள் தியாகங்கள் மூலமும் கட்டிக் காத்து வந்த பிம்பங்களை கட்டவிழ்ப்பதில் இவர்கள் மிக வெற்றிகரமாகச் செயற்பட்டார்கள் என்பதும் அதனை இவர்கள் இறுதிவரை சாதித்துக் காட்டினார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. அத்துடன் புலிகளின் ஜனநாயக விரோத செயற்பாடுகளிற்கு எதிராக குரல் கொடுத்த இவர்களது பல்வகை அமைப்புக்களிலும் கூட ஜனநாயக விரோதப் பண்புகளே கோலோச்சி இருந்தது என்பதுவும் வரலாறு இன்று எமக்குக் காட்டி நிற்கும் உண்மைகள். இவர்கள் புலிகளின் பிம்பங்களை சிதைப்பதற்காக அவர்களிக்கு எதிராக பல்வேறு பிம்பங்களை சிருஷ்டித்தார்கள். ஆனால் அந்த பிம்பங்களின் பின்னால் உள்ள அதிர்ச்சிகரமான முகத்திலறையும் உண்மைகள் இப்போது ஒவ்வொன்றாக வெளி வந்து இன்று அந்த பிம்பங்களும் ஒவ்வொன்றாகச் சிதைவடையும் போது எமது அறிவு ஜீவிகளின் ஒரு 3௦ வருட கால ஏமாற்று வேலைகளும் பித்தலாட்டங்களும் எம்மை அதிர்ச்சியடைய வைக்கின்றன.

தோழர் சபாலிங்கத்திற்கு அர்ப்பணம் செய்யப்படுள்ள இந்த அஞ்சலி மலரில் சபாலிங்கம் குறித்ததான எந்த விபரங்களோ அல்லது அவரது வாழ்க்கை வரலாறுகளோ இதில் இணைக்கப்படாதது கொஞ்சம் ஏமாற்றத்தினை அளிப்பதினை இங்கு அவசியம் குறிப்பிட்டேயாக வேண்டும்.

இம்மலர் வெளிவந்து இன்று 20 வருடங்களாகின்றன. வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது ஏமாற்றமும் சோகமும்தான் எஞ்சுகின்றது. இந்த தொகுப்பில் தமது படைப்புகளை வெளிக்கொணர்ந்த தி.உமா காந்தன், திருமாவளவன், சி.புஷ்பராஜா, செ.கணேசலிங்கன் போன்றோர் இன்று உயிருடன் இல்லை. தோழர் அ.ஜ.கான் மிக அண்மையில்தான் தமிழகத்தில் கோவிட் 19 தொற்றுக்குள்ளாகி மரணமடைந்து, எம்மையெல்லாம் துயரத்தில் ஆழ்த்தி இருந்தார். இதில் எம்மை அதிக துயரத்திலும் வேதனையிலும் ஆழ்ந்தும் விடயம், அன்று இந்த இதழில் தமது படைப்புக்கள் மூலம் அதிகாரத்திற்கு எதிராகவும், படுகொலைகள், வன்முறைகள் என்பவற்றிட்கெதிராகவும் தமது உரத்த குரல்களை பதிவு செய்த பலரும், இன்று இலங்கை பேரினவாத சிங்கள அரசின் ஆதரவாளர்களாக மாறி இலங்கை அரசின் அராஜகங்களையும் படுகொலைகளை நியாயப்படுத்தும் மனிதர்களாக மாறியுள்ளமைதான். இவர்கள் இன்றும் சிங்கள பேரினவாத அரசு ஈழப்போரின் இறுதியில் நிகழ்த்திய இனப்படுகொலையை அது இனப்படுகொலை இல்லை என்று மறுதலிப்பவர்களாகவும், அந்த அரசின் அனைத்து வகை செயற்பாடுகளிற்கும் ஆதரவளிப்பவர்களாகவும் மாறியுள்ளமை உண்மையில் எம்மை திகைப்பில் ஆழ்த்தும் விடயங்களாகும்.

இதற்குமப்பால் இவர்களில் பெரும்பாலோர் மற்றவர்களின் மாற்றுக் கருத்துக்களுக்கு சிறிதேனும் மதிப்பளிக்காதவர்களாக, ஜனநாயகம், பேச்சு சுதந்திரம் குறித்து எந்தவித அக்கறையுமற்றவர்களாக, தம் மீதான சிறு அளவு விமர்சனங்களை கூட ஏற்றுக் கொள்ளாதவர்களாக, மற்றவர்களின் மீது வசை பாடுபவர்களாக, அந்த வசைகளை பாடுவதற்காக எந்த எல்லைகளையும் மீறுபவர்களாக தொடர்ந்தும் இருந்து வருவது எமக்கு தொடர்ந்தும் வேதனையளிக்கும் விடயங்களாகும். இவர்களது இன்றைய இத்தகைய செயல்கள் இவர்களது அன்றைய செயற்பாடுகளை சந்தேகக் கண் கொண்டு பார்க்க வைக்கின்றது. இவையாவும் இன்று எம்மை இவர்களது அன்றைய எழுத்தக்களை மீண்டும் ஒரு மறுவாசிப்பிற்கு உட்படுத்தப் பட வேண்டிய அவசியத்தினை எம்மிடம் வலியுறுதி நிற்கின்றது. இதற்குமப்பால் இவர்களில் சிலர் இன்று புலி ஆதரவாளர்களாக, அனுதாபிகளாக மாறியிருப்பதுவும் கூட வரலாற்றின் ஒரு முரண்நகையே.

முடிவாக, ‘தோற்றுத்தான் போவோமா…’ என்று அறைகூவல் இட்டு பல தசாப்த காலங்களாக அராஜகங்களுக்கும் வன்முறைகளுக்கும் எதிராகவும் மனித உரிமைகளிற்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வந்த இவர்கள், இறுதி யுத்தத்தில் புலிகள் தோற்கடிக்கப்படுவதற்கு முன்பாகவே தம்மளவில் தாமே தோற்றுப் போயிருந்தது எமது வரலாற்றின் ஒரு துயர சம்பவமே.

தோல்விகளின் வரலாறுகளையே தொடர்ந்தும் எழுதுவதுதான் எமது தலையெழுத்தா என்ன ???

கட்டாய மரண தண்டனையை இரத்து செய்கிறது மலேசிய அரசாங்கம் !

கட்டாய மரண தண்டனையை இரத்து செய்ய ஒப்புக்கொண்டதாக மலேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில், கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றங்களுக்கு மரண தண்டனை கட்டாயமாக உள்ளது.

2018ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த ஒரு சீர்திருத்தக் கூட்டணி மரண தண்டனையை முற்றிலுமாக ரத்து செய்வதாக அறிவித்தது, ஆனால் அரசியல் போட்டியாளர்கள் மற்றும் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களின் எதிர்ப்பால் திட்டம் ஸ்தம்பித்தது.

அப்போதிருந்து, மரண தண்டனை கட்டாயமாக இருக்கும் சந்தர்ப்பங்களில் மட்டுமே அதை குறைக்க வேண்டும் என்ற நீர்த்துப்போன திட்டம் முன்வைக்கப்பட்டது. ஆனால், தற்போது கட்டாய மரண தண்டனையை இரத்து செய்ய அமைச்சரவை ஒப்புக்கொண்டதாக சட்ட அமைச்சர் வான் ஜுனைடி துவாங்கு ஜாபர் தெரிவித்தார்.

மரண தண்டனைக்கு பதிலாக என்ன தண்டனைகளை வழங்கலாம் என்பது குறித்து மேலும் ஆய்வு நடத்தப்படும் என கூறினார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட முடிவு, அனைத்துத் தரப்பினரின் உரிமைகளும் பாதுகாக்கப்படுவதையும் உத்தரவாதப்படுத்தப்படுவதையும் உறுதி செய்வதில் அரசாங்கத்தின் முன்னுரிமையைக் காட்டுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணதண்டனை கட்டாயமாக இருக்கும் குற்றங்களுக்கு, நீதிபதியின் விருப்பப்படி மரண தண்டனை வழங்கக்கூடிய பல குற்றங்களும் உள்ளன.

மாற்றங்களைச் செய்வதற்கு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும், மேலும் வான் ஜுனைடி ஒரு காலக்கெடுவை வழங்காமல் சிறிது நேரம் எடுக்கும் என கூறினார். இந்த செயல்முறை மக்கள் கற்பனை செய்வது போல் எளிதானது அல்ல என்று அவர் மேலும் கூறினார்.

அறிவிப்பை வரவேற்கும் அதே வேளையில், பிரச்சாரகர்களும் எச்சரிக்கையை வெளிப்படுத்தினர். ‘கட்டாய மரண தண்டனையை ஒழிப்பதாக மலேசியாவின் பொது அறிவிப்பு ஒரு முக்கியமான முன்னோக்கிய படியாகும்’ என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் துணை ஆசிய இயக்குனர் பில் ராபர்ட்சன் கூறினார்.

ஆனால் அனைவரும் உற்சாகப்படுத்தத் தொடங்கும் முன், இந்த உறுதிமொழியை நடைமுறைப்படுத்த மலேசியா உண்மையான சட்டத் திருத்தங்களை நிறைவேற்றுவதை நாம் பார்க்க வேண்டும் எனவும் தொடர்ந்து வந்த மலேசிய அரசாங்கங்கள் மனித உரிமைகள் குறித்து அதிகம் வாக்குறுதி அளித்தாலும் இறுதியில் மிகக் குறைவாகவே வழங்குகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மலேசியாவில் மேலும் 22 குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்கு சட்டத்தில் ஒப்புதல் இருந்தது. இந்நிலையில், கட்டாய மரண தண்டனை அங்கு இரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த மரண தண்டனையை எதிர்கொள்பவர்களில் பெரும்பாலானவர்கள் போதைப்பொருள் குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இறந்த மகனின் உடலை எடுக்க லஞ்சம் கேட்ட அரசு மருத்துவமனை – பிச்சை எடுத்த தந்தை!

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் இறந்து போன மகனின் உடலை எடுத்துச் செல்ல அரசு மருத்துவமனை பணம் கேட்டதால் பிச்சை எடுக்கும் தந்தையின் அதிர்ச்சி காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சமஸ்டிபூரைச் சேர்ந்தவர் மகேஷ் தாக்குர். இவரது மகன் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போனதாக கூறப்பட்டது.
இந்நிலையில், சதார் அரசு மருத்துவமனையில் மகனின் உடல் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

உடலை வாங்க தனது மனைவியுடன் அவர் சென்றுள்ளார். ஆனால், அங்கிருந்த ஊழியர்கள் உடலை தர வேண்டுமானால் 50 ஆயிரம் ரூபாய் கேட்டதாக கூறப்படுகின்றது.

இதனால் வேதனையடைந்த தம்பதி இலஞ்சம் கொடுக்க தெரு தெருவாக பிச்சை எடுத்துள்ளனர். இதனை அருகில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த அதிர்ச்சி காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கிழக்கு உக்ரைனில் இரு பிரித்தானியர்களுக்கு மரண தண்டனை! திடீர் திருப்புமுனை!!!

இன்று யூன் 9, முன்னாள் பிரித்தானியா இராணுவ வீரர் ஒருவர் உட்பட பிரித்தானியர் இருவருக்கு ரஷ்ய ஆதரவோடு இயங்கும் டொனேஸ்க் படைகள் மரண தண்டனை விதித்துள்ளன. பிரித்தானியர்கள் இருவருக்கும் மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த ஒருவருக்குமாக மூவருக்கு பயங்கரவாதிகள் எனக் குற்றம்சாட்டி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. ரஷ்ய படையெடுப்பிற்கு முன்னதாகவே 2018இல் பிரித்தானியர்கள் இருவரும் உக்ரைன் இராணுவத்தில் இணைந்துகொண்டதாக சொல்லப்படுகிறது. பிரித்தானியாவில் இருந்து உக்ரைன் இராணுவத்தில் இணைந்த மற்றையவர் எய்டன் அஸ்லின், பெட்போர்ட்செயரைச் சார்ந்தவர். இவரும் மொரோக்கோ நாட்டு பின்னணியை உடையவர்.

மரியோபோலில் சரணடைந்த பல நூற்றுக்கணக்கான ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களில் இவர்கள் மூவரும் அடங்குகின்றனர். டொனேஸ்க் படைகள், சரணடைந்த உக்கிரைன் படைகளை சர்வதேச விதிமுறைகளுக்கு அமைய யுத்தக்கைதிகளாக நடத்துவோம் எனத் தெரிவித்துள்ளனர். ஆனால் பிரித்தானியர்கள் இருவரும் மொரோக்கோ நாட்டைச் சேர்ந்தவரும் நாடுவிட்டு நாடுவந்த கூலிப்படைப் பயங்கரவாதிகள் என்றும் அவர்களுக்கு சர்வதேசச் சட்டங்கள் பொருந்தாது என்று குறிப்பிட்டுமே மரண தண்டனை அழிக்கப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அதற்கான காnணொலியும் வெளியிடப்பட்டுள்ளது.

இன்றைய சம்பவம் நடப்பதற்கு இருவாரங்களுக்கு முன் ரஷ்ய ராங்கர் படையைச் சேர்ந்த ஒருவர் தங்களால் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் அப்பாவி உக்ரைனியர்களைக் கொன்றதாக ஒப்புக்கொண்ட காணொலியை உக்ரைன் மற்றும் பிரித்தானிய நேட்டொ அணி நாடுகள் தொடர்ச்சியாக வெளியிட்டன. குறிப்பிட்ட ரஷ்ய படை வீரருக்கு எதிராக யுத்தக் குற்றங்கள் சுமத்தப்பட்டு அவர் தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்டு வந்தார். அதே பாணியில் பிரித்தானியாவுக்கு ஒரு பாடம் புகட்டுவதற்காகவும் யுத்தக்கைதிகளை பரிமாறுவதற்காகவும் இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.

ரஷ்யாவுக்கும் நேட்டோ நாடுகளுக்கும் இடையே நடக்கின்ற யுத்தத்தில் ஒரு நாளைக்கு 250 பேர் கொல்லப்படுவதாக மதிப்பிடப்படுகின்றது. பிரித்தானியாவில் இருந்தும் சில நூறுபேர்கள் உக்ரைன் இராணுவத்துடன் இணைந்துகொண்டுள்ளனர். யுத்தத்தின் ஆரம்ப நாட்களில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் லிஸ் ரஸ் உக்ரைன் இராணுவத்துடன் சென்று போராடும் பிரித்தானியர்களை ஊக்கப்படுத்தியும் வரவேற்றும் இருந்தார். உக்ரைன் இராணுவத்துடன் இணைந்துகொண்ட சில நூறு பிரித்தானியர்களில் இதுவரை 20 பிரித்தானியர் கொல்லப்பட்டு இருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இரு பிரித்தானியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனை பிரித்தானிய அரசை மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாக்கும். ஏற்கனவே பிரித்தானிய அரசு ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாகின்றது. “பிரித்தானிய பிரஜைகளுக்கு ஏதாவது நடந்தால் …” என்றெல்லாம் தொனிகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் ரஷ்யாவுக்கோ “தலைக்கு மேலால் தண்ணி போய்விட்டது. இனி சான் ஏறினாள் என்ன முழம் ஏறியால் என்ன?” என்ற நிலையே. மேலும் ரஷ்யா ஒடிசா துறைமுகத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் தானிய ஏற்றுமதி முற்றாகத் தடைப்பட்டுள்ளது. தற்போது இவை இரண்டையும் ரஷ்யா தனக்கு சார்பாகப் பயன்படுத்தி யுத்தக் குற்றவாளிகளை பரிமாறுவது, ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை தளர்த்துவது போன்ற பேரம் பேசலுக்கு தயாராகலாம்.

புற்றுநோயை 100சதவீதம் குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடித்து அமெரிக்க மருத்துவர்கள் !

அமெரிக்காவின் மேன் ஹட்டானில் உள்ள நினைவு புற்றுநோய் மையம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது 100 சதவீதம் குணப்படுத்த புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மருந்தை வைத்து நடத்தப்பட்ட சோதனையில் கீமோ தெரபி மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவற்றை வழங்காமல் கண்டுபிடிக்கப்பட்ட புதிய மருந்தை கொடுத்து நோயாளிகளை 100% புற்று நோயிலிருந்து முற்றிலும் குணமடைய வைத்துள்ளனர்.

இந்த மருந்து மொத்தம் 18 குடல் புற்று நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் முற்றிலும் நோயிலிருந்து குணம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் புற்றுநோயை கண்டறிவதற்கான அனைத்து சோதனைகளும் 18 குடல் புற்று நோயாளிகளுக்கு மேற்கொள்ளபட்டு புற்றுநோய் உடலில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வங்கிகளிலுள்ள மக்களின் பணத்தை கையகப்படுத்துகிறதா அரசாங்கம்..?

“பொதுமக்கள் வங்கி கட்டமைப்பில் இருந்து விலகிச் செல்வதாக இருந்தால் நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும்.” என இலங்கை வங்கியின் வடபிராந்திய உதவி பொது முகாமையாளர் வ.சிவானந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கை வங்கியின் யாழ்.பேருந்து நிலைய கிளை திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தற்போது நாடு பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவில் இருந்தாலும், அதனை ஒரு சவாலாக எதிர்கொண்டு மக்களுடைய நம்பிக்கை, எங்களுடைய பங்களிப்பு எல்லாவற்றையும் சேர்த்து இந்த நாட்டினை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.

அதற்கு வங்கி கட்டமைப்பு என்பது பொருளாதார கட்டமைப்பில் இன்றியமையாத ஒன்றாகும். வங்கி கட்டமைப்பு என்பது இல்லாவிட்டால் நாட்டினுடைய பொருளாதாரத்தினை சமன் செய்ய முடியாது.

தற்போது மக்கள் பலருடைய எண்ணங்கள் வங்கிகளில் உள்ள காசுகளை அரசாங்கம் எடுத்துவிடக் கூடும் என்று பலவிதமாக யோசிக்கிறார்கள். நாளுக்கு நாள் வாடிக்கையாளர்கள் எம்மிடம் கேட்ட வண்ணம் இருக்கின்றார்கள். உண்மையாகவே அது பொய்யான விடயமாகும். வங்கி கட்டமைப்பை சீராக பாதுகாக்க வேண்டியதும் தொடர்ந்தும் செயற்பாட்டில் வைத்திருக்க வேண்டியதும் வாடிக்கையாளர்கள் பொதுமக்களின் பங்களிப்பு தான் மிக முக்கியமானது.

ஆகவே வங்கி கட்டமைப்பு பற்றி நீங்கள் தவறான வதந்திகளை ஏற்படுத்த வேண்டாம். இப்போது சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்களை நாள் தோறும் பரப்பி வருகிறார்கள்.

அதனால் சாதாரண மக்கள் அதனை பார்த்து குழம்பி விடுகின்றனர். நாங்கள் ஒரு அரசாங்க வங்கி. உங்களுடைய பணத்திற்கான பாதுகாப்புகள் 100 வீதம் 200 வீதம் இருக்கும்.

மக்கள் வங்கி கட்டமைப்புடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த நாட்டுக்கு பொருளாதார ரீதியில் விடிவு இல்லை. அவ்வாறு பொதுமக்கள் வங்கி கட்டமைப்பில் இருந்து விலகிச் செல்வதாக இருந்தால் நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்றார்

குறைவடைய ஆரம்பித்துள்ள கொரோனா தொற்று – ஆனால் முடியவில்லை – உலக சுகாதார அமைப்பு !

உலக அளவில், மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா தவிர பிற பகுதிகளில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்புகள் மற்றும் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வழக்குகள் 12 சதவீதம் குறைந்து 30 லட்சத்துக்கு அதிகமாகவும், கொரோனா மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 22 சதவீதம் குறைந்து ஏறக்குறைய 7,600 ஆகவும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டெட்ரோஸ் எதோனம் கெப்ரிசியஸ் கூறியதாவது:

கடந்த ஜனவரியில் உச்சத்தைத் தொட்ட கொரோனா தொற்று தற்போது சரிவைச் சந்தித்து வருகிறது. இது மிகவும் ஊக்கமளிக்கும் ஒரு போக்காகும். இருப்பினும், தொற்றுநோய் இன்னும் முடிவடையவில்லை. பல நாடுகள் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கைவிட்டு கொரோனாவுடன் வாழ முயற்சித்தாலும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இன்னும் 68 நாடுகளில் 40 சதவீத மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. தொற்றுநோய் முடிந்துவிட்டது என்ற கருத்து புரிந்துகொள்ளத் தக்கது. ஆனால் தவறானது. உருமாறிய, ஆபத்தான வைரஸ் எந்த நேரத்திலும் வெளிப்படலாம். ஏராளமான மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என தெரிவித்தார்.

வீட்டில் கஞ்சா வளர்க்கலாம் – கஞ்சா செடிகளையும் வழங்கி வைக்கிறது அரசாங்கம் !

தாய்லாந்தில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்கிய பிறகு, தாய்லாந்தில் உள்ளவர்கள் இப்போது வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்து அந்த பயிரை விற்கலாம் என அறிவிக்கப்பட்டள்ளது.

தென்கிழக்கு ஆசியாவில், கடுமையான போதைப்பொருள் சட்டங்களுக்கு பெயர் பெற்ற நாடு தாய்லாந்த , அத்தகைய நடவடிக்கையை முதன்முதலில் முன்னெடுத்த நாடாக மாறியுள்ளது. எனினும், பொழுதுபோக்கு பயன்பாடு இன்னும் தடைசெய்யப்பட்டுள்ளது.

உள்ளூர் கஞ்சா வர்த்தகத்தை வளர்ப்பது விவசாயம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தும் என்று அரசாங்கம் நம்புகிறது. இது குடிமக்களுக்கு ஒரு மில்லியன் கஞ்சா நாற்றுகளை வழங்குவதை ஊக்குவிக்கிறது.

‘கஞ்சா மற்றும் கஞ்சா தொழிற்துறை மூலம் மக்கள் மற்றும் அரசாங்கம் வருமானம் ஈட்ட இது ஒரு வாய்ப்பு’ என்று துணைப் பிரதமரும் சுகாதார அமைச்சருமான அனுடின் சார்ன்விரகுல் கடந்த மாதம் தனது சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டார்.

உணவகங்களில் சாப்பிடுபவர்கள் கஞ்சா கலந்த உணவுகள் மற்றும் பானங்களை பெற்றுக்கொள்ளலாம்.முக்கியமாக உணவு தயாரிப்புகளில் டெட்ராஹைட்ரோகன்னாபினோல் (THC) 0.2 சதவீதம் குறைவாக இருக்க வேண்டும்.

குடும்பங்கள் அதிகாரிகளிடம் பதிவுசெய்தால், ஆறு கஞ்சா பானை செடிகளை வீட்டில் வளர்க்க முடியும். மேலும் நிறுவனங்களும் அனுமதியுடன் ஆலையை தொடரலாம்.

நாடு முழுவதும் உள்ள சுகாதார சேவை நிலையங்கள், கஞ்சாவை ஒரு சிகிச்சையாக மிகவும் சுதந்திரமாக வழங்க முடியும். 2018ஆம் ஆண்டில் மருத்துவ கஞ்சா பயன்பாட்டை சட்டப்பூர்வமாக்கிய ஆசியாவிலேயே தாய்லாந்து முதல் இடத்தில் உள்ளது.

இருப்பினும், தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மருந்தைப் பயன்படுத்துவது இன்னும் சட்டவிரோதமானது. பொது இடங்களில் புகைபிடிப்பதற்கு எதிராக அதிகாரிகள் மக்களை எச்சரித்துள்ளனர். இது பொதுத் தொல்லையாகக் கருதப்படுவதாகவும், குற்றவாளிகள் கைது செய்யப்படும் அபாயம் இருப்பதாகவும் கூறினர்.

இத்திட்டத்தின் கீழ், கஞ்சா தொடர்பான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட சுமார் 4,000 கைதிகளை விடுதலை செய்வதையும் இலக்காகக் கொண்டிருப்பதாக அரசாங்கம் கூறுகிறது.