2022

2022

ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – உயிரிழப்பு 920ஆக உயர்வு !

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் நகரில் இருந்து 44 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 51 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

 

இது ரிக்டர் அளவில் 6.1 புள்ளியாக பதிவானது என்று அமெரிக்க நிலநடுக்கவியல் துறை தெரிவித்து இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் பக்டிகா மாகாணத்தில் வீடுகள் பயங்கரமாக குலுங்கின. அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் நில நடுக்கத்தை உணர்ந்ததும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். ஆனால் சக்திவாய்ந்த நில நடுக்கத்தால் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன.

 

இதன் இடிபாடுகளில் பொதுமக்கள் சிக்கி கொண்டனர். அதேபோல் கோஸ்ட், நங்காஹார் மாகாணங்களிலும் வீடுகள் இடிந்தன. இதையும் படியுங்கள்: உக்ரைன் கார்கிவில் ரஷிய ஷெல் தாக்குதலில் 15 பேர் பலி- ஆளுநர் ஒலெக் சினெகுபோவ் தகவல் இந்தநிலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 255 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசின் செய்தி நிறுவனம் தெரி வித்திருந்தது. இது தற்போது 920ஆக உயர்ந்துள்ளது. இதில் பக்டிகா மாகாணத்தில் மட்டும் 100க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். 250 பேர் காயம் அடைந்துள்ளனர். கோஸ்ட், நங்காஹார் மாகாணங்களில் பலர் உயிரிழந்து உள்ளனர். ஏராளமான வீடுகள் இடிந்துள்ளதாகவும் அதில் பலர் சிக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

“இன்றைய உணவுக்கு அரிசி இல்லாவிட்டால் இதிலிருந்து எடுத்து கொள்ளுங்கள்.” – யாழில் கடை முதலாளியின் நெகிழ்ச்சியான செயல் !

இலங்கையில் நாளுக்கு நாள் உணவு தொடர்பான நெருக்கடி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.  சில இடங்களில் தற்கொலை செய்து கொள்ளுமளவுக்கு உணவு பிரச்சினை தலைதூக்க ஆரம்பித்துள்ளது. ஆகஸ்ட் மாதமளவில் இலங்கை இதை விட பாரிய உணவு நெருக்கடியை சந்திக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் உணவு சேமிப்பு தொடர்பில் இலங்கை மக்கள் அவதானம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.

 

இந்த கடினமான நேரங்களில் சில சில மனிதர்கள் இன்னொருவரினை புரிந்து கொள்வதே கடினமான விடயம் என்ற நிலை இருக்கையில் அடுத்தவருக்காக உதவிக்கரம் நீட்டுவது எல்லாம் பாராட்டப்பட வேண்டியவை.

 

பொருட்களின் விலை நாளுக்கு உயர்கிறதோ இல்லையோ – பல கடை முதலாளிகள் தங்களுடைய உழைப்புக்காக பொருட்களின் விலையை மலையளவுக்கு உயர்த்தி விற்பனை செய்கின்றனர். இவர்களுக்குள் சிலரிடம் இன்னமும் மனிதாபிமானம் உயிரப்புடன் உள்ளது என்பதை காட்டுவது போல சாவகச்சேரி – பாலையடி பகுதியில் கடைவைத்துள்ள முதலாளி ஒருவர் செய்த செயல்தான் இன்றைய சமூக வலைத்தளங்களில் பாராட்டப்பட்டிருந்ததது.

 

May be an image of outdoors

கடைமுதலாளி ஒருவர் தன்து கடையின் முன்னால் அரிசியை ஒரு பெரலில் வைத்துவிட்டு “இன்றைய உணவுக்கு அரிசி இல்லாமல் வருந்தும் உறவுகள் இதிலிருந்து எடுத்து கொள்ளுங்கள்.” என ஒரு அறிவிப்பையும் பலகையில்  விடுத்துள்ளார்.

சமகால பொருளாதார நிலையில் அடுத்தவனை பற்றியே சிந்திக்காது ஓடிக்கொண்டிருக்கும் பலருக்குள் குறித்த கடைமுதலாளியின் செயல் பலராலும் பாராட்ப்பட்டுக்கொண்டிருக்கிறது.

முன்னைநாள் பிரபல செய்திவாசிப்பாளர் – இன்று சமோசா விற்கும் நிலை !

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி அமைந்த பின்னர் ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எதுவுமே எடுக்கப்படாததால் அங்குள்ள மக்கள் வறுமையில் சிக்கியுள்ளனர். அதற்கு சாட்சியாக இணையத்தில் வெளியாகியுள்ளது ஒரு புகைப்படம்.

அதில், ஆப்கான் தொலைக்காட்சிகளில் செய்தியாளராக, செய்தி வாசிப்பாளராக இருந்த நபர் வறுமையின் காரணமாக தற்போது தெருவோரத்தில் சமோசா விற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்துள்ள நிலையில், அன்றாடம் அதன் கோர முகத்தைக் காண்பதாகக் கூறுகின்றனர் அந்நாட்டு மக்கள்.

சாலைகளில் பொதுமக்கள் கொலை செய்யப்படுகின்றனர். தலிபான்களின் கெடுபிடி ஒருபுறம் வறுமை மறுபுறம் என மக்கள் சொல்ல இயலாத துயரங்களில் சிக்கித் தவிக்கின்றனர். இந்நிலையில் தான், ஆப்கனின் முன்னாள் அரசுப் பணியாளரான கபீர் ஹக்மால் தனது டுவிட்டர் பக்கத்தில் வேதனை தரும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அத்துடன் அவர், “தலிபான் ஆட்சியில் ஒரு பத்திரிகையாளரின் வாழ்க்கை. மூஸா முகமதி பல ஆண்டுகளாக பல்வேறு ஆப்கன் தொலைக்காட்சி நிறுவனங்களில் செய்தியாளராக, செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர். ஆனால் இப்போது அவருக்கு வேலை இல்லை. வருமானம் இல்லை. குடும்பத்தைக் காப்பாற்ற உணவுப் பண்டங்களை விற்பனை செய்கிறர். ஆப்கானில் ஜனநாயக அரசு வீழ்ந்த பின்னர் மக்கள் வறுமையில் வாடுகின்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.

செய்தி – மாலை மலர் (நன்றி)

முட்டாள்களிடம் சிக்கித்தவிக்கும் இலங்கையர்கள் – பெற்றோல் வரிசைகளில் முடங்கும் நாட்டின் ஊழியப்படை !

கடந்த இரு தினங்களாக இலங்கையின் பல பகுதிகளிலும் எரிபொருளுக்கான வரிசை, உணவுக்கான வரிசை, என பார்க்கும் இடமெங்கும் வரிசைகளே தொடர்கின்றன. பல இடங்களில் எரிபொருளுக்காக நின்ற இளைஞர் குழுக்களிடையே மோதல்கள்.அரச அதிகாரிகள் தொடங்கி தனியார்துறை ஊழியர்கள் என அனைவரும் பெற்றோல் செட்களில் கிடையாக கிடக்கின்றனர். நேற்றைய தினம் பெற்றோலுக்காக நான் சுமார் 12 மணிநேரங்களுக்கு மேலாக காத்திருந்தும் பெற்றோல் இல்லை. வந்த பெற்றோலும் பணம் உள்ளோருக்கும் – அதிகார வர்க்கத்துக்கும் போய் விட்டதாக வரிசையில் நின்றவர்கள் பேசிக்கொண்டார்கள்.
தலைமன்னாரில் நாள் முழுக்க மண்ணெண்ணெய்க்காக காத்து நின்ற மக்களுக்கு அதனை கொடுக்காமல் வசதிபடைத்தவர்களுக்கு மட்டும் பின்புறமாக கொடுத்திருக்கிறார் பெற்றோல் செட் முகாமையாளர்.
மூவர் வரிசையில் நின்றே உயிரிழப்பு.
கடந்த இரு நாட்களில் பெற்றோல் செட்களில் பல மணிநேரம் வரிசையில் நின்றதால் மூவர் வரை மரணம். அதிலும் நேற்று ஒரு வீடியோவை காணக்கிடைத்தது. தந்தை பெற்றோலுக்காக ஆட்டோவுடன் காத்துக் கொண்டிருக்கிறார். மகன் பெற்றோலுக்காக மோட்டார்சைக்கிளுடன் காத்துக்கொண்டிருக்கிறார். நீண்ட காத்திருப்பு முடிவில் ஆட்டோவில் காத்திருந்த தந்தை இறந்துவிட்டார். இது தெரியாத மகன் அப்பா அப்பா என் தட்டியெழுப்பியும் அவர் எழவில்லை. இறந்தவரின் தலை கீழே விழ மகன் உடைந்து போய் அழுதுகொண்டே கீழே உட்கார்ந்து விடுகிறார். இந்த வீடியோவை பார்த்தது முதல் அவ்வளவு வேதனையாக இருந்தது. https://www.facebook.com/permalink.php?story_fbid=pfbid0EUUPndwrY5aPi5YxADHTHX9yTQek8fR8h2mFD3FhSLXBnZuEB5RCRZy58rRk7bAGl&id=100006710538212
உண்மையில் நாம் மிக நெருக்கடியான சூழலை நெருங்கிகொண்டிருக்கிறோம் என்பதையே கடந்த இரண்டு நாட்கள் தெளிவாக எனக்கு காட்டியுள்ளன.
மருத்துவமனைகளுக்கு செல்ல பெற்றோல் இல்லை. பாடசாலைகளுக்கு செல்ல பெற்றோல் இல்லை. பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளன. இப்படியாக நாட்டினுடைய நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே இருக்கிறது.
கடந்த பல தினங்களாக இலங்கையின் பெட்ரோல் செட்களில் லட்சக்கணக்கானவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே அங்கு இலங்கை மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை விட நாளாந்தம் தொழிலுக்குச் செல்ல வேண்டிய தொழிலாளர்கள் தொழிலுக்குச் செல்லாது காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே வெளிப்படையான உண்மை. இத்தனை ஆயிரம் தொழிலாளர்கள் பெட்ரோல் செட்களில் மட்டுமே காத்துக்கொண்டிருந்த நாட்டினுடைய நாளாந்த வருமானம் என்னவென்பதை அரசாங்கம் நினைத்திருக்கவில்லை.  இது தொடர்பில் எந்த ஒரு ஆக்கபூர்வமான கருத்தையும் கூட இதுவரையில் அரசாங்கம் வெளியிட்டு இருக்கவில்லை.  அரசாங்கமும் அது சார்ந்த அதிகாரிகளும் இது தொடர்பில் எந்த ஒரு கவனமும் எடுக்காது இன்னமும் கடன் வாங்குவது தொடர்பில் மட்டுமே அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மையிலேயே இந்த நிலைக்கு யார் காரணம்..?
ஒரு படிப்பறிவில்லாத சாதாரண நாட்கூலி வேலை செய்பவர்கள் கூட தங்களிடம் எவ்வளவு பணம் உள்ளது. இந்த மாதத்துக்கான செலவுக்கு எவ்வளவு தேவைப்படும். வரவு எவ்வளவு..? செலவு எவ்வளவு..? மேலதிக செலவை எவ்வாறு கட்டுப்படுத்துவது..? மேலதிக செலவை ஈடு செய்ய என்னென்ன வழிகளில் உழைக்க வேண்டும். கையில் உள்ள பணத்தை மாதம் முடிவுவரை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் பல கோணங்களில் சிந்தித்து தன்னுடைய குடும்பத்தை கொண்டு நடத்திக் கொண்டிருக்கின்றார். இந்தத் திட்டமிடல்கள் ஓரளவுக்கேனும் இருப்பதாலேயே இந்தப் பொருளாதார நெருக்கடி காலத்திலும் கூட  சாதாரண குடும்பங்கள் ஓரளவேனும் தாக்கப்பிடிக்கின்றன.
ஒரு சாதாரண பிரஜையிடம் – இந்த நாட்டின் சாதாரண கூலித் தொழிலாளியிடம் இருக்கக்கூடிய இந்த திட்டமிடல் இலங்கை அரசாங்கத்திடம் இல்லாமையை இன்றைய பிரச்சனைக்கான ஒட்டுமொத்த காரணமாகும்.
பிரச்சினைகளுக்கான காரணம் அரசியல்வாதிகளே !
சந்தேகத்திற்கு இடமற்ற வகையில் இன்று பொருளாதார நெருக்கடி சார்ந்து நாம் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் பொறுப்பற்ற அரசியல் தலைவர்களே.! இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக பதவியில் உள்ள ஒவ்வொரு அரசியல் தலைவர்களும் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள்.
மக்களின் உளவியல் நிலை மனோநிலை பற்றி கிஞ்சித்தும் யோசனை இல்லாத அளவிற்கு தற்போதைய அரசாங்கத்தின் பதில்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. நேற்றைய தினம் ஊடகங்களுக்கு உரையாற்றிய எரிசக்தி அமைச்சர் “21ஆம் திகதியுடன் பெற்றோல் கையிருப்பு முடிந்துவிடும் அதற்குப் பிறகு இந்த நாட்டில் பெட்ரோல் இருக்காது.” எனக் குறிப்பிடுகின்றார். இவ்வளவு முட்டாள்தனமான ஒரு அறிவிப்பு இது. மக்களை கொஞ்சம் புரிந்துகொள்ள முடியாத அதிகார வர்க்கத்தின் ஒரு குரலாகத் தான் இதைப் பார்க்க முடிகிறது.
 பெட்ரோல் 21ஆம் திகதியுடன் முடிவடைந்த விடுகிறது என ஒரு அமைச்சர் அறிவித்தால் பாவம் சாதாரண மக்கள் என்ன செய்வார்கள்..! வேறு வழியில்லை.  இரவு பகலாக காத்திருந்தேனும் அந்த பெட்ரோலை பெற்றுவிட வேண்டும் என்பதே அவர்களின் உடைய ஒரே நோக்கமாக இருக்கும். இன்று பெட்ரோல் செட்களின் நிரம்பி வழியும் இந்த கூட்டத்திற்கு இந்த அமைச்சரின் அறிவிப்பே காரணம்.
அடுத்ததாக ரணில் விக்கிரமசிங்க. நாட்டின் அறிவு தொடர்பாக அழிவு தொடர்பில் ஆருடம் கூற பதவியேற்றுக் கொண்ட ஜோசியர் போலவே அவரைக் காண முடிகின்றது. “இலங்கையில் இன்னும் மூன்று மாதங்களில் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் – எல்லாப் பொருட்களின் கையிருப்பு முடிந்துவிட்டது – கடனுதவி கிடைக்க பல மாதங்கள் செல்லும்.” என மக்களை மேலும் விரக்தியின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் கருத்துக்களையே அவர் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இந்த சூழலில் மக்களை தெரியப்படுத்த வேண்டியது ஒரு நாட்டின் பிரதமர் என்ற நிலை எவ்வளவு கனதியான பொறுப்பில் உள்ளார் ரணில். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு மக்களை இன்னும் நெருக்கடிக்குள் தள்ளுவதை இந்த அரசினுடைய நோக்கம் போல தோன்றுகிறது. இவ்வளவு நாள் ராஜபக்சக்கள் விலகி விட்டால் நாடு செழித்து விடும் என போர்க்கொடி தூக்கி கொண்டிருந்த கோட்டகோகம போராட்டக்காரர்களுக்கு ரணில் விக்கிரமசிங்க வந்ததும் என்னவாயிற்று என்பதே தெரியவில்லை.
ராஜபக்ஷக்களுக்கு எதிராக நடந்த போராட்டங்களின் பின்னணியில் ரணில் உள்ளாரா..? என்ற சந்தேகங்களும் எழாமலில்லை.
உள்ளதே  உணவு பற்றாக்குறை – எரிபொருள் தட்டுப்பாடு – சமையல் வாயு இல்லை என பல பிரச்சினைகளால் நொந்து துவண்டு போயுள்ள மக்களுக்கு உளவியல் ஆற்றுப்படுத்தலின் தேவை அவ்வளவு அவசியமாக உள்ளது என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில்  உணவுத்தட்டுப்பாடு காரணமாக ஒரு சில தற்கொலைகள் நடந்தேறிவிட்டன. விரைந்து செயல்பட வேண்டிய ஒரு தேவை உள்ளது.
சரி என்னதான் தீர்வு..?
கடன்கள் தொடர்பில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய இறுதியான தருணத்தில் தற்போதைய தலைவர்கள் உள்ளனர். சர்வதேசத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய கடன்கள் மட்டுமே நாட்டை முன்னேற்றும் என்ற ஒரு மாய பிம்பத்தை இலங்கையின் அரசியல் தலைவர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர். சரி வாங்க கூடிய கடன்கள் பற்றிய தெளிவு புரிதலாவது உள்ளதா எனக் கேட்டால் அதுவும் இல்லை. கடந்த காலங்களில் இலங்கை சர்வதேசநாணயநிதியம் உள்ளிட்ட அமைப்புகளிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்கள் பெரும்பாலும் சலுகையற்ற கடன்களாகவே காணப்படுகின்றன. இந்த சலுகையற்ற கடன்களுக்கு வட்டி வீதமும் அதிகமாகும்.  மேலும் இந்த சர்வதேச அமைப்புகளிடமிருந்து நாம் பெறக்கூடிய கடன்கள் கூட தற்காலிகமாக ஏதேனும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியனவே தவிர பெரிதான மாற்றங்களை தரமாட்டாது. ஏனெனில் கடன்கள் அவ்வளவு அதிகரித்துள்ளது. சர்வதேச அமைப்புக்களிடமிருந்து பெறப்படும் கடன்கள் எங்களுடைய எதிர்கால தலைமுறையை முழுமையாக மீண்டும் வெள்ளைக்கார நாடுகளுக்கு அடிமையாக்கிவிடும் என்பதே உண்மை.
எங்களுடைய தலைமுறையும் சரி எங்களுக்கு முன்னைய தலைமுறையினரும் சரி முழுமையாக கேள்வி பதில் வினா விடை அமைப்புக்கு பழக்கப்பட்டு விட்டோம். அடுத்த தலைமுறையினருக்கு வழங்கப்படக் கூடிய கல்வியில் பொருளியல் சார்ந்த விஷயங்கள் அடிப்படையிலிருந்தே கற்பிக்கபடுதல் வேண்டும். பொருளாதாரத் திட்டங்கள் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு தெளிவான விளக்கங்கள் வழங்கப்படுதல் வேண்டும். அப்போது மட்டுமே அந்த மாணவர்கள் பின்னாட்களில் வாக்காளர்களாக மாறுகின்ற போது அல்லது அரசியல் தலைவர்களாக மாறுகின்ற போது நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் சிந்திக்க கூடிய பக்குவத்தை உருவாக்க முடியும். தேவையே இல்லாமல் யாரோ அரசன் மூன்று திருமணங்களை செய்து கொண்டார் – ஒரு அரசிக்கு 15 திருமணங்கள் நடந்தன என்றெல்லாம் மாணவர்களுக்கு கற்பித்து கொண்டிருக்கக்கூடிய பாடத்திட்டங்களுக்கு பதிலாக தொழில் வாய்ப்புகள் உடன் கூடிய கல்வி முறையை வழங்க முன்வரவேண்டும். விவசாயக் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும். பாடசாலை மாணவர்களுக்கு தற் சார்பு பொருளாதாரத்தின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட வேண்டும்.   இப்படியாக கல்வித்துறையில் ஏற்படக்கூடிய மாற்றம் இலங்கையின் எதிர்கால பொருளாதாரத் திட்டங்களுக்கு சிறப்பான அத்திவாரமாக அமைய வேண்டும் என்பது எதிர் வரக்கூடிய அரசாங்கங்கள் தெளிவாக செயற்பட வேண்டும்.
இனவாதம் சார்ந்த பிரச்சினைகளை கைவிட்டுவிட்டு ஒற்றுமையோடு அனைத்து இனத்தவர்களும் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற இணைவது காலத்தின் கட்டாயமாகிள்ளது. மலேசியா,  சிங்கப்பூர் , குவைத் போன்ற நாடுகளின் பொருளாதார முறைமைகளை நமக்கு முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த நாடுகளில் எல்லாம் ஆட்சி மொழியாகவும் மதமாகவும் பிரதானமான ஒரு மதமும் மொழியும் செல்வாக்கு செலுத்துகின்ற போதிலும்கூட எல்லா இனத்தவர்களையும் இணைத்துக்கொண்டு பயணப்படக்கூடிய பொருளாதார கட்டமைப்பு ஒன்றை காணமுடிகின்றது. இதுவே இன்றைய கால இலங்கைக்கும் அத்தியாவசியமானது.
மக்கள் பற்றி கிஞ்சித்தும் சிந்திக்காத அரசியல் தலைவர்களை இனிமேல் சரி மக்கள் தெரிவு செய்யாமல் இருப்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இனவாத அரசியலை பேசிப்பேசியே இந்த நாட்டை இந்த நிலைக்குக் கொண்டு வந்து விட்டனர் இந்த அரசியல் தலைவர்கள்.
வடக்கு- கிழக்கில் உள்ள  தமிழ்தேசிய கட்சிகளின்  தலைவர்கள் கூட – பாராளுமன்ற உறுப்பினர்களும் தான் புலம்பெயர்ந்த தேசத்தில் உள்ள தமிழர்களிடம் நாட்டை அளியுங்கள் அவர்கள் இலங்கையை மீட்டுத் தருவார்கள் என்றெல்லாம் இன்னமும் பழைய புலி அரசியலை பேசிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இந்த தமிழ் தேசிய தலைவர்களுக்கு பயங்கரவாத தடைச்சட்டம் நீங்க கூடாது அதில் நீங்குவதில் இவர்களுக்கு இம்மியளவும் உடன்பாடு இல்லை. நுனி நாக்கில் தேனும் அடி நாக்கில் விஷமும் போல இந்த தமிழ் தலைவர்களின் உடைய நகர்வுகள் அமைகின்றன. பயங்கரவாத தடைச்சட்டம் இருந்தாலே வெளிநாட்டில் பலருக்கு குடியுரிமை கிடைக்கும். அவ்வாறு வெளிநாட்டில் குடியேறியோர் இங்குள்ள அரசியல் தலைவர்களுக்கு பண உதவி தொடங்கி அனைத்து விதமான உதவிகளையும் வழங்குவர். இப்படியாக இவர்கள் பேசக்கூடிய தமிழ் தேசியத்திற்கு பின்னாலேயே நூற்றுக்கணக்கான சுயநல அரசியல் புதைந்து போய் உள்ளது. இவற்றை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இது தமிழர்களுக்கு ராஜபக்சக்கள் செய்த கொடுமைகளை இலங்கை அனுபவிக்கிறது என்றெல்லாம் கடந்துவிட முடியாது. ஏனெனில் இங்கு எங்களுடைய தலைமுறையினரும் – எங்களுடைய பெரியவர்களும் – எங்களுடைய எதிர்கால சிறுவர்களும் கூட நடுத்தெருவில் தான் எரிபொருளுக்காகவும் பெற்றோலுக்காகவும் காத்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே ஒன்றாய் இணைந்து நாட்டை முன்னேற்றுவதற்கு என்னென்ன வழிகள் உள்ளன என்பது பற்றி சிந்திப்பதே இன்றைய காலத்தின் ஆகப்பெரிய தேவையாகும்.

மனித உரிமையும் ஜனநாயகமும் தனிச்சொத்துடமை என்கிறாரா பாண்டிபஜார் போராளி ராகவன்? இலக்கிய விமர்சகர் வாகீசன்

திரு.சின்னையா ராஜேஸ்குமார்(ராகவன்) அவர்களுக்கு,
‘தேசம்நெட்’ இதழில் வெளியாகியிருந்த ‘தோற்றுப் போனவர்களின் கதைகள்: ‘தோற்றுத்தான் போவோமா…’ தொகுப்பு மலர் மீதான ஒரு பார்வை – வாகீசன்’ என்ற எனது கட்டுரைக்கு எதிர்வினை ஆற்றியிருந்த தாங்கள் என்னை நோக்கி “எனது பெயரைக் கூடக் குறிப்பிட திராணியற்று என்னை பாண்டிபஜார் போராளி என்று கூறி என் மீது அவதூறு பரப்புகிறார்” என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அனைவரும் அறிவார்கள் கடந்த 2 வருடங்களாக தாங்களும் தங்களது இலண்டன் இலக்கியவாதியாகிய ஒரு நண்பரும் சேர்ந்து எனக்கு ‘தோழர் உஉ’ என்ற பட்டத்தை வழங்கி (நான் ‘உண்மைகள் உறங்குவதில்லை’ என்ற கட்டுரையொன்றினை எழுதியபடியால்) அந்தப் பெயரிலேயே என்னை நோக்கி செய்த அவதூறுகள் கொஞ்சநஞ்சமல்ல. இதற்குரிய Screenshot எல்லாம் என்னிடம் ஆதாரமாக உண்டு, வேண்டுமானால் பதிவிடத்தாயார். அப்போதெல்லாம் உங்களுக்கு எனது பெயரைக் குறிப்பிட திராணி இருக்கவில்லையா ??? எவ்வளவு கேவலமாக எல்லாம் என்னை விழித்திருந்தீர்கள். விஷப்பாம்பு என்றீர்கள். விஷக்கிருமி என்றீர்கள். ஒரு மனநோயாளி, சிகிச்சை அளிக்கப்பட வேண்டியவர் என்றீர்கள். அவதூறு என்பது உங்கள் போன்றவர்களுக்கு எல்லாம் இரத்தத்தில் ஊறிப் போன விடயம்.
நிற்க, இலண்டன் வந்த சபாலிங்கத்தை நீங்கள் சந்திக்க மறுத்ததாக நான் கூறிய விடயத்தை மறுத்த நீங்கள் “சபாலிங்கத்தை நான் சந்திக்க மறுத்ததாக அப்பட்டமான பொய் ஒன்றை உதிர்த்திருக்கிறார். சபாலிங்கம் எனக்கு சிறு வயதிலே பழக்கமானவர். எனது ஊர்க்காரரை தான் திருமணம் செய்து கொண்டார். அவரும் புஸ்பராஜாவும் லண்டன் வந்து என்னை சந்தித்து உரையாடினர். அது பற்றி ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியங்கள் புத்தகத்தில் புஸ்பராஜா படத்துடன் பதிவு செய்துள்ளார்.” என்று ஒரு அப்பட்டமான பொய்யினைக் கூறி புஸ்பராஜாவின் ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ என்ற புத்தககத்தில் இருந்து ஏதோ இரண்டு பக்கங்களை Photocopy செய்து பதிவேற்றி மக்களை எல்லாம் முட்டாள் ஆக்கியிருக்கிறீர்கள். ஒரு சாதாரண முகநூல் வாசகன் இதையெல்லாம் check பண்ணி பார்க்க மாட்டான் என்று தங்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் இப்படி ஒரு மாபெரும் மோசடியைச் செய்துள்ளீர்கள்.
இப்போது நான் குறிப்பிடுகிறேன். எனது கையில் உள்ள ‘ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்’ என்ற நூலில் (இது 2ம் பதிப்பு) 590 ம் பக்கத்தில் (இந்தப் புத்தகத்தின் 1வது பதிப்பில் 560ம் பக்கம்) உங்களைச் சந்தித்தது பற்றி புஷ்பராஜா பின்வருமாறு குறிப்பிடுகிறார்
“—அதன் பின்பு 1993 ம் ஆண்டு நவம்பரில் லண்டனில் சந்தித்தேன். நீண்ட காலத்திற்கு பின் சந்தித்ததால் பல விடயங்கள் பேச வேண்டி இருந்தது. இருவரும் நீண்ட நேரமாகப் பேசினோம்—-“. இதில் சபாலிங்கம் குறித்தோ அல்லது சபாலிங்கத்துடன் அவர் உங்களை வந்து சந்தித்தது குறித்தோ எந்தத் தகவலும் இல்லை. இப்போது பகிரங்கமாக உங்களிடம் நான் ஒரு வேண்டுகோளை வைக்கின்றேன். நீங்கள் கூறியபடி சபாலிங்கத்துடன் வந்து உங்களைச் சந்தித்ததை புஷ்பராஜா தனது புத்தகத்தில் எழுதியுள்ளார் என்றால் அது நீங்கள் வைத்திருக்கும் புத்தகத்தில் எத்தனையாவது பக்கத்தில் உள்ளது என்ன கூறியிருந்தார் என்று பகிரங்கமாக தெரிவிக்க முடியுமா ??? முப்பது வருடங்களாக மக்களை ஏமாற்றியது போதும். நிறுத்திவிடுங்கள். இனியாவது தயவு செய்து மனந்திரும்புங்கள்.
._._._._._.
அசோக் யோகன் கண்ணமுத்துவின் பதிவில் இருந்து…
 
நண்பர் சபாலிங்கம் தமிழிழ விடுதலைப்புலிகள் தொடர்பாக ஒரு ஆவணம் எழுத எண்ணி, பல தரப்பினரை சந்தித்து உரையாடிக் கொண்டிருந்த காலம் அது. சபாலிங்கம் புலிகளால் 1994 ஆண்டு படுகொலை செய்யப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர், இவ் ஆவண முயற்சி தொடர்பாக இராகவனை சந்தித்து உரையாட லண்டன் சென்றிருந்தார். இரண்டு நாள் தங்கியிருந்து இராகவனோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முயன்றும், அவரால் முடியவில்லை. இராகவன் பக்கத்திலிருந்து எந்த தொடர்புகளும் அவருக்கு கிடைக்கவில்லை. மிகுந்த ஏமாற்றதோடும், இராகவன் மீது கடுங்கோபத்தோடும் பிரான்சிக்கு திரும்பியிருந்தார்.
 
இந் நிகழ்வு சபாலிங்கத்தின் மிக நெருங்கிய நண்பர்களுக்கு தெரிந்திருந்தது. லண்டனில் இருக்கும் அவரின் நெருங்கிய நண்பர்களுக்கும் இது தெரியும். இச் சம்பவம் எனக்கும் சபாலிங்கம் ஊடாக தெரிந்திருந்தது.
இராகவனோடு எனக்கு தொடர்பு ஏற்பட்ட காலத்தில் இச் சம்பவம் தொடர்பாக கேட்டிருந்தேன். சபாலிங்கம் லண்டன் வந்து, புலிகளின் ஆதரவாளர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்ததன் காரணமாக, சபாலிங்கத்தை தான் சந்திக்கவிரும்பவில்லையென்று என்று கூறினார்.
2007ம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற நண்பர் சபாலிங்கம் அவர்களின் நினைவுக் கூட்டத்திற்கு தலைமை தாங்க இராகவன் அவர்களை அழைத்திருந்தோம். அவர் மீது மரியாதை கலந்திருந்த காலகட்டம்.
 
இந்த தலைமை தாங்கல் தொடர்பாக சபாலிங்கத்தின் மிக நெருங்கிய நண்பர்கள் அதிருப்தியும், என் மீது கடும் விமர்சனங்களையும் கொண்டிருந்தனர்.
வாசன் இப் பிரச்சனையை எழுதிய போது, இராகவன் சபாலிங்கத்தை சந்திக்க விரும்பான்மைக்கான காரணத்தை (என்னிடம் சொன்னதை) சொல்லி இருக்கலாம். ஆனால், இதை மறைத்து, சபாலிங்கத்தை சந்தித்ததாக பொய் ஒன்றை கூறுகின்றார். தவறுகளை ஏற்றுக்கொள்வதில் ஏன் நமக்கு இத்தனை பொய்மை , கபடம், மோசடி .. ?
 
இராகவன் தன்மீது வைக்கப்படும் நேர்மையான – உண்மையான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலை அற்றவராகவே, புலிகளின் காலத்திலிருந்து இற்றைவரை தன் வாழ்வை தொடர்கின்றார்.
விமர்சனங்கள் வைப்பவர்களை மனநோயாளிகள் என்றும் அவதூறாளர்கள் என்றும் பட்டம் சூட்டி மகிழ்வது அவரின் உளவியல் மனப்பாங்காக இருக்கின்றது. இப் பட்டங்களை எனக்கும் அவர் அடிக்கடி தாராளமாக வழங்கி மனமகிழ்வு கொள்ளும் ஒரு மனநிலையை தொடர்ச்சியாக பேணுகிறார்.
இராகவன் அவர்களுக்கு ஒரு தாழ்வான வேண்டுகோள்; நாங்கள் இவ்வாறு முரண்பட்டு கொண்டிருப்பதை விடுத்து, நாம் எல்லோரும் சுயவிமர்சனங்களோடும், உண்மையோடும்- நேர்மையோடும் , பொது வெளி ஒன்றில் அனைத்து முரண்பாடுகளையும் பேசி உரையாடும் தளம் ஒன்றை உருவாக்குவோம். இவ் உரையாடலில் நானும் கலந்துகொள்ள விரும்புகிறேன். நீங்களும் அவசியம் வரவேண்டுமென விரும்புகின்றேன்.

அம்மை புண்களை சித்தரிக்க ஆப்பிரிக்க நோயாளிகளின் புகைப்படங்கள் – உலக சுகாதார நிறுவனம் விசனம் !

ஆப்ரிக்காவில் காணப்பட்ட குரங்கம்மை நோய் இன்று உலகம் முழுவதும் பரவிக்கொண்டே இருக்கிறது. இந்த நோய் இதுவரை 39 நாடுகளில் இந்த நோய் தாக்கியுள்ளது.

உலகளவில் 3,100க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். 72 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 29 உயிரியலாளர்கள் மற்றும் பிற ஆராய்ச்சியாளர்கள் கொண்ட குழு, கடந்த வாரம் குரங்கு அம்மை நோய்க்கு புதிய பெயர் சூட்ட வேண்டும் என பொது அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து அவர்கள் அளித்த விளக்கத்தில், “குரங்கு அம்மை வைரஸ் பரவல், ஆப்பிரிக்காவுடன் தெளிவான தொடர்பு இல்லாமல் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் பிரதான ஊடகங்களில், அம்மை புண்களை சித்தரிக்க ஆப்பிரிக்க நோயாளிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்துவது பாகுபாடு மற்றும் களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது என கூறியுள்ளனர். இதையடுத்து உலக சுகாதார நிறுவனம், நிபுணர்களுடன் இணைந்து, குரங்கு அம்மை வைரஸின் பெயர்களை மாற்றுவது மற்றும் அது ஏற்படுத்தும் நோயின் பெயரை மாற்றுவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக அந்த அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்தார். இதனையடுத்து, இந்த வைரஸ் தொற்று விரைவில் புதுப்பெயரில் அழைக்கப்படும் எனத் எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வாதிகாரம் ஒழியட்டும் கியூபாவில் மக்கள் போராட்டம் – அமெரிக்காவின் சதி என்கிறார் கியூப ஜனாதிபதி !

கியூபா அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றதற்காக 381 பேருக்கு  25 ஆண்டுகள் சிறைத்  தண்டனை விதித்துள்ளது. இவர்களில் 297 பேர் தேசத் துரோகம், பொதுக் குழப்பம், தாக்குதல் அல்லது கொள்ளை போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர்.

கம்யூனிஸ்ட் நாடான கியூபாவில் சுதந்திரம் வேண்டும். சர்வாதிகாரம் ஒழியட்டும்”, “விடுதலை வேண்டும்” “எங்களுக்குப் பயமில்லை. எங்களுக்கு மாற்றம் தேவை. சர்வாதிகாரம் இனி எங்களுக்கு வேண்டாம்,”  என கோஷமிட்டே நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், விலைவாசி உயர்வு மற்றும் உணவு மற்றும் மருந்து பற்றாக்குறையை சுட்டிக்காட்டி இந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

தண்டனை விதிக்கப்பட்டவர்களில் “16 முதல் 18 வயதுடைய 16 இளைஞர்களும்” அடங்குவர் என்று அனைத்தின் அரச தரப்பு சட்டத்தரணி கூறியுள்ளார்.

மிகவும் அரிதான போராட்டத்தையடுத்து, கியூபா அதிபர் மிகுயேல் டையாஸ்-கேனல் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். போராட்டங்களுக்கு அமெரிக்காவே காரணம் என அவர் குற்றம்சாட்டினார்.

1962-ஆம் ஆண்டில் இருந்து கியூபா மீது அமெரிக்கா விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகளை, “பொருளாதாரத்தை முடக்கும் கொள்கை” என்று அவர் சாடினார். நாட்டை வீழ்த்துவதற்காக அமெரிக்கா அமர்த்திய கூலிப்படையினர்தான் இந்தப் போராட்டக்காரர்கள் என்று கூறிய அவர், தனது ஆதரவாளர்கள் வீதிக்கு வந்து கியூப புரட்சியைப் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

“புரட்சியாளர்களே! நீங்கள் வீதிக்கு வந்து போராட உங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று அவர் அறிவித்தார்.

அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் – மேலும் இருவர் பலி !

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. சமீபத்தில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்க பள்ளியில் வாலிபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 மாணவர்கள் உள்பட 22 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து துப்பாக்கி கலாசாரத்துக்கு முடிவு கட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க அரசு ஆயத்தமாகி வருகிறது. ஆனாலும் அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடந்தபடியே இருக்கிறது.

இந்த நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியானார்கள். லாஸ் ஏஞ்சல்சின் பாய்ல் ஹைட்ஸ் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் விருந்து நிகழ்ச்சி நடந்தது. அங்கு திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தது தெரிய வந்தது.

படுகாயம் அடைந்த 5 பேரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்தும், துப்பாக்கியால் சுட்டவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

“நீங்கள் குப்பையை வீசினாலும் நாம் பழங்களையே வீசுவோம்.”- சிங்கள பேரினவாதிகளுக்கு செயலால் அடி கொடுத்த வைத்தியர் ஷாபி !

ஏப்ரல்21 சஹ்ரான் குழுவினரின் தாக்குதலின் பின்னர் அதிகம் பேசப்பட்ட பெயர்களில் ஒன்று ஷாபி ஷிஹாப்தீன். சஹ்ரான் தாக்குதலை அடுத்து இலங்கையின் பல பகுதிகளிலும் முஸ்லீம்கள் மீதான வன்முறைகளும் – அடக்குமுறைகளும் அரங்கேறின.

வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீன் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவாரா? வெளிவந்த  தகவல் - ஐபிசி தமிழ்

இந்த நாட்களில் சிங்கள மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலமான திவயின பத்திரிகை “வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் சிங்கள தாய்மாரை இலக்கு வைத்து கருத்தடை நடவடிக்கைகளை மேற்கொண்டார்.சுமார் 4000 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மே 2019 23 திகதி ” என மிகப்பெரிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

 

இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புணர்வு காட்டுத்தீ போல இலங்கையில் – குறிப்பாக தென்னிலங்கையில் எரிந்து கொண்டிருந்த நிலையில் ஊடகங்களும் – தீவிர சிங்கள அரசியல் கட்சிகளும் இதனை தங்களது ஆதாயத்துக்காக பயன்படுத்திக்கொண்டன.

 

பௌத்த பிக்குகள் பலரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பெரிதான விசாரணைகள் எதுவுமற்ற நிலையில் உடனடியாக வைத்தியர் ஷாபியை  கைது செய்ததது காவல்துறை. வெறும் வதந்திகளை வைத்து மட்டுமே அந்த ஷாபி  மீதான குற்றச்சாட்டுக்கள் அரங்கேறின. ஷாபி ஷிஹாப்தீன் தீவிரவாத கொள்கைகளை உடைய முஸ்லீம் குழுக்களுடனும் தொடர்பில் இருந்ததாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதற்கிடையில் ஷாபி ஷிஹாப்தீனின் வீட்டின் மீது மிலேச்சத்தனமான தாக்குதல்கள் நடாத்தப்பட்டதுடன் அவருடைய குடும்பத்தினரும் மானபங்கப்படுத்தப்பட்டிருந்தனர். இதனை வைத்து மிகப்பெரிய அரசியல் அரங்கேறிக்ககொண்டிருந்ததது. 2019 – மே – 24 பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதானார் ஷாபி. தொடர்ந்து பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

எனினும் ஷாபியிடம் சிகிச்சை பெற்ற பல சிங்கள பெண்கள் கருத்தரித்ததுடன் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் ஷாபி நிரபராதி எ்னபதை வெளிப்படுத்தின. தொடர்ந்து ஷாபி விடுதலையானார்.

கைது தவறானது என்ற முடிவுக்கு வந்ததுடன் பெருமளவிலான பெண்களுக்கு தெரியாமல் கட்டாய கருத்தடை செய்யப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட விசேட வைத்தியர் வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீனை மீள அழைக்க தீர்மானிக்கப்பட்டது.

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்கில் ஷாபி குற்றமற்றவர் என தீர்ப்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றம் இந்த முடிவை எடுத்தது.

அதன்படி, அந்தக் காலக்கட்டத்தில் அவருக்கு வழங்கப்படாத சம்பளம் மற்றும் பிற கொடுப்பனவுகள் அனைத்தையும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகிய இரு நீதியரசர்கள் அடங்கிய ஆயம் முன்னிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை சுகாதார அமைச்சு ஏற்றுக்கொண்டது.

சேவையிலிருந்து கட்டாய விடுப்புக் காலத்திற்கான நிலுவைத் தொகைகள், கொடுப்பனவுகள், இடைக்கால கொடுப்பனவுகள் மற்றும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுகள் அனைத்தையும் மனுதாரர் வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீனுக்கு செலுத்த முடியும் என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு முன்னர் அறிவித்திருந்தார்.

அதன்படி, வைத்தியர் ஷாஃபிக்கு நிலுவைத் தொகை சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டது.

வைத்தியர் ஷாபி பணி இடைநிறுத்தப்பட்ட காலப்பகுதிக்குரிய, நிலுவை வேதனம் மற்றும் கொடுப்பனவுகளை ஜூலை 10ஆம் திகதிக்கு முன்னர் மீளச் செலுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் சுகாதார அமைச்சுக்கு உத்தரவிட்டது.

அதன்படி, அவருக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள நிலுவை மற்றும் கொடுப்பனவுகளாக 26 இலட்சத்து 75 ஆயிரத்து 816 ரூபா 48 சதத்தை (2,675,816.48) வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்தது.

அதற்கான காசோலையை வைத்தியர் ஷாபி பெற்றுக்கொண்டதுடன், நிலுவையில் உள்ள சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை சுகாதார அமைச்சிடம் திருப்பி வழங்க முடிவு செய்துள்ளார்.

Dr-Shafi-Shihabdeen-Returns-His-Salary-Arreary-to-Purchase-Medicines

தற்போது நாட்டில் கடும் நெருக்கடியில் உள்ள மருந்துகளை வாங்குவதற்கு தேவையான பணமாக தமது சம்பள நிலுவையை சேர்த்துக்கொள்ளுமாறு கோரி வழங்கியுள்ளார்.

 

உண்மையிலலேயே இன்று வரை ஷாபி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டைமுன்வைத்த திவயின பத்திரிகை நிறுவனமோ, அல்லது வதந்திகளை மட்டுமே வைத்து ஷாபியை கைது செய்த குருணாகல் பொலிஸ் பிரிவோ அவரிடம் மன்னிப்பு கேட்டதாக தெரியவில்லை. வைத்தியர் ஷாபி மேற்கொண்ட மருத்துவப்பணி குருணாகல் பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த காலத்தில் இவ்வாறான ஒரு அவப்பெயரை சந்தித்த ஷாபி மீதும் அவருடைய குடும்பத்தனர் மீதும் பாடசாலை செல்லும் பிள்ளைகள் மீதும் மிக இலகுவாக குற்றஞ்சுமத்தி ஒரு மனிதரின் சமூக அந்தஸ்தை கிழித்தெறிந்ததது இந்த சிங்கள பேரினவாதம்.

 

ஆனால் இவை தொடர்பில் பெரிதாக அலட்டிக்கொள்ளாத வைத்தியர்ஷாபி எந்த வைத்தியசாலை நிர்வாகத்தால் குற்றவாளியாக்கப்பட்டாரோ – அவமானப்படுத்தப்பட்டாரோ அதற்கே தன்னுடைய ஊதியப்பணமான 2.6மில்லியன் ரூபாவை வழங்கி இனவாதிகளுக்கு சவுக்கடி கொடுத்துள்ளார்.

2ம் உலகப்போர் முடிந்ததை தொடர்ந்து ஜேர்மனி கிழக்கு ஜேர்மனி – மேற்கு ஜேர்மனி என இரண்டாக பிளவுபட்டது. அது வரை ஒற்றுமையுடள் வாழ்ந்த மக்கள் ரஷ்ய சார்பு – அமெரிக்க சார்பு என இருகூறாக்கப்பட்டனர். இதனை நினைவுபடுத்த பேர்ளினில் கிழக்கு – மேற்கு ஜேர்மனியை பிரிக்கும் வகையில் சுவர் எழுப்பப்பட்டது. ஒரு பகுதி மக்கள் இன்னொரு பகுதி மக்கள் மீது தமது வெறுப்பை காட்ட குப்பைகளை கொண்டு சென்று மதிலின் மறுபக்கமாக வீசிக்கொண்டேயிருந்தனர். எனினும் மற்ற பகுதி மக்கள் குப்பைகளை வீசாது பழங்களையும் – நறுமணபபொருட்களையும் கொண்டு போய் வீசினார்களாம்.

நமக்கு அவர்கள் குப்பையை வீசினாலும் நாம் பழங்களை வீசுவோம் என பெரிய விடயத்தை சிங்கள பேரினவாதிகளுக்கு  தனது செயல் மூலம் ஷாபி வெளிப்படுத்தியுள்ளார்.

 

 

 

லண்டன் சைவ மாநாடு ஒரு பார்வை

ஒரு சமூகம் புலம்பெயர்ந்து செல்லும் போது அந்த சமூகத்தினுடைய கலாச்சார பாரம்பரியங்களையும் அது சுமந்தே செல்கின்றது. ஒருவருடைய அடையாளம் என்பது இந்த சமய, கலாச்சார விழுமியங்களும் இணைந்தது தான். புலம்பெயர்ந்த தமிழர்கள் எங்கே தங்கள் அடையாளத்தை இழந்து அடையாளமற்ற மனிதர்களாக உலகில் உருவாகிவிடுவமோ என்ற அச்சத்தில் புலம்பெயர்ந்த மண்ணில் தங்கள் சமய, கலாச்சார விழுமியங்களை இறுக்கிப் பிடித்தனர். இது தங்கள் அடையாளத்தை இழந்துவிடுவோம் என்ற அச்ச உணர்வினால் உந்தப்பட்டதன் விளைவு. ஆயிரத்து தொளாயிரத்து எண்பதுக்களில் பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் பிரித்தானியாவில் தங்களுக்கான வழிபாட்டுத்தலங்களை நிறுவ முயன்றனர்.

தாயகத்தில் வீடுகளில் சாமியறை என்றொன்னு இருக்கும். ஆனால் புலம்பெயர் தேசத்தில் சாமிக்கு ஒரு அறையை ஒதுக்க பொருளாதாரம் இடம்கொடாது. சாமிக்கு ஒதுக்கும் அறையை வாடகைக்கு விட்டால் நாலு காசு வரும் என்ற நிலையே புலம்பெயர் தேசத்தில் உள்ளது. அதனால் பெரும்பாலும் படிகளுக்கு கீழே, அல்லது கொரிடோரில் ஒரு தட்டை அடித்து அதில் சாமியை வைத்துவிடுவார்கள். ஆரம்பநாட்களில் வானில் சாமிப்படத்தை கொண்டுவந்து வானை வடக்கு நோக்கி ரிவேர்ஸ் பண்ணிவிட்டு பூசைகள் நடத்திய கதைகளும் உண்டு. மோபைல் கோயில்கள். காலங்கள் உருண்டோட வருமானம் போதாததாலட கிறிஸ்தவ தேவாலங்கள் தமது கட்டிடங்களை விற்க ஆரம்பித்தன. தவறணைகளும் நட்டத்தில் ஓட ஆரம்பித்ததால் அவற்றை விற்க ஆரம்பித்தன. ஒன்றோடு ஒன்று முற்றிலும் முரண்பட்ட இந்த சமூக நிறுவனங்களுக்கு மக்கள் கூடுவதற்கான அனுமதி இருப்பதால் அவற்றை வாங்கி கோயில்களைக் கட்டுவது ஒரு ரென்ட்டாகி விட்டது. இவ்வாறு கோயில்கள் உருவாகி லண்டனில் தற்சமயம் நாற்பது கோயில்கள் வரை உள்ளன. அவற்றில் ஈஸ்ற்ஹாம் முருகன் கோயில், ஈஸ்ற்ஹாம் மகாலட்சுமி கோயில் இரண்டும் மட்டும் இலங்கைத் தமிழர்களின் கட்டுப்பாட்டில் இல்லை.

ஈஸ்ற்ஹாம் முருகன் கோயில் தவிர்ந்த ஏனைய தமிழ் கோயில்களில் சாமி வெளிவீதி சுற்றுவதற்கே இடமில்லை. திருவிழா காலங்களில் மட்டும் உள்ளுராட்சிமன்றில் அனுமதி பெற்று சாமி வீதிக்கு வரும். இவ்வாலயங்கள் அனைத்தும் திருவிழாக்களை எப்படியாவது செய்துவிடுவார்கள். இல்லையேல் ஆலயத்தினது வருமானமும் கௌரவமும் பாதிக்கப்படும். இந்த நாற்பது ஆலயங்களுமே பெரும்பாலும் திட்டமிடல் இல்லாமல் வாய்க்கின்ற இடத்தை எடுத்து கோயிலாக்கப்பட்டுள்ளது. அதனால் இவ்வாலயங்கள் குடிமனையான இடங்களிலேயே உள்ளன. அதலால் இவ்வாலங்களில் பெரும்தொகையானவர்கள் கூடுவதற்கான வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டே இருக்கும். மேலும் குடியிருப்பாளர்களுக்கும் இவ்வாலயங்களுக்கும் இடையே முரண்பாடுகள் அடிக்கடி ஏற்படும். தங்கள் பகுதிகளில் கார் நிறுத்துவதில் நெருக்கடி, அதீத சனநடமாட்டம், சத்தம் என குற்றச்சாட்டுகள் எழும்.

இப்பின்னணியில் லண்டன் திருக்கோயில்களின் ஒன்றியம் தனது 22வது வருடாந்த மாநாட்டை நடாத்த வழமை போல் யூன் 18, 19ம் திகதிகளில் ஏற்பாடு செய்துள்ளது. அரசியல் வாதிகள், நடிகர்கள், பாடகர்கள், தேவாரம் திருவாசகம் பாடுபவர்கள், சொற்பொழிவாளர்கள் என்று ஒரு பல்சுவை மசாலா நிகழ்வாக அது இடம்பெறும். ஆனால் கடந்த 22 ஆண்டுகளில் லண்டன் ஆலயங்கள் குறிப்பிடத்தக்கதாக எதையும் சாதித்து இருக்கின்றனவா என்றால் . இவ்வாலயங்கள் இருக்கின்றது என்பதனைக் உறுதிப்படுத்துவதற்காகவும் தாங்களும் இவ்வாறானதொரு நிகழ்ச்சியை நாடாத்துகின்றோம் என்று காட்டுவதற்கு அப்பால் இவ்வாலயங்கள் என்ன செய்கின்றன என்பது அவ்வாலயங்களின் நிர்வாகத்திற்கே வெளிச்சம்.

தனித்தனி ஆலயங்களாக ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம், வோல்தம்ஸ்ரோ கற்பக விநாயகர் ஆலயம் என்பன தாயக உறவுகளுக்கு கணிசமான உதவிகளை மேற்கொண்டு வருகின்றன. மற்றும்படி ஏனைய ஆலயங்கள் அவ்வாறான உதவிகளைப் பெயரளவில் மட்டுமே மேற்கொள்கின்றன. இவ்வுதவிகள் கூட தாயகத்தின் வாழ்நிலை முன்னேற்றத்தில் மாற்றங்களைக் கொண்டு வருகின்றதா என்றால் அதுவும் கேள்விக்குறியே.

வெறும் பேச்சுக்காக தமிழும் சைவமும் ஒன்றென்று முழங்கும் திருக்கோயில்கள் ஒன்றியம் தமிழுக்கோ சைவத்துக்கோ கடந்த கால்நூற்றாண்டில் என்ன செய்தார்கள் என்ற மதிப்பீட்டைச் செய்ய வேண்டும். ஒரு சுப்பர்மாக்கற் நடத்துவது போலவே லண்டனில் உள்ள இந்த ஆலயங்கள் செயற்படுகின்றன.

இவர்களுடைய வருடாந்த நிகழ்வு கூட ஒரு கலை நிகழ்ச்சி என்பதற்கு அப்பால் செல்வதில்லை. புலம்பெயர் மண்ணில் தமிழையோ சைவத்தையோ எப்படி வழக்கப் போகின்றனர் என்ற எந்தத் திட்டமிடலும் சிந்தனையும் இல்லை. அதற்கான பார்வையும் இவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

லண்டனில் உள்ள ஆலயங்கள் அவைகள் தனிநபர்களுடைய ஆலயங்களாக இருந்தாலென்ன பொது ஆலயங்களாக இருந்தாலென்ன அவற்றிடம் தூரநோக்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஏதோ கோயிலை நடத்துகிறோம் திருவிழாச் செய்கின்றோம் என்பதோடு சரி. அடுத்த தலைமுறைக்கு எமது வரலாற்றை எவ்வாறு கைமாற்றப் போகின்றோம் என்பது பற்றி அவர்களிடம் எவ்வித சிந்தனையும் இல்லை. இன்று வரையும் தமிழுக்கும் சைவத்துக்குமான ஒரு ஆவணக்காப்பகமோ ஆய்வு நிறுவனமோ கிடையாது.

ஆலயங்கள், புலம்பெயர்ந்த அடுத்த தலைமுறையினர் மத்தியில் தமிழ் மற்றும் சைவம் பற்றிய எவ்வித விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தவில்லை. இது விடயமாக நூலகவியலாளர் என் செல்வராஜா பலரையும் அணுகி இருந்தார். தனது கருத்துக்களையும் தெரியப்படுத்தி இருந்தார். அவர் ஒரு தனி மனிதனாக 20,000க்கும் அதிகமான இலங்கைத் தமிழ் நூல்களைத் தொகுத்து தனது சொந்த முயற்சியிலும் உழைப்பிலும் அவற்றை வெளியிட்டுவிருகின்றார். நாற்பது ஆண்டுகளுக்கு முன் தீக்கிரையான யாழ்ப்பாணப் பொது நூலகம் எப்போது தீக்கிரையானது என்பதே திரிபுபடுத்தப்பட்ட நிலையில் 1981 மே 31இல் தீக்கிரையான யாழ்ப்பாணப் பொது நூலகத்தின் வரலாற்றை தனி மனிதனாக தமிழிலும் ஆங்கிலத்திலும் தொகுத்து வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு ஆலயமும் ஒரு நூலகத்தை வைத்திருக்காவிட்டாலும் இந்தத் திருக்கோயில்கள் ஒன்றியம் ஒரு ஆவணக்காப்பகத்தை உருவாக்கி தமிழினதும் சைவத்தினதும் வரலாற்றை பாதுகாக்க வேண்டும். மேலும் அடுத்த தலைமுறையினருக்கு எமது வரலாற்றை கைமாற்றுவதற்கான காத்திரமான ஆய்வு செய்யப்பட்ட தரமான நூல்கள் கொண்டுவரப்பட வேண்டும். ஆனால் அதற்கான எவ்வித முயற்சிகளிலும் இத்திருக்கோயில்கள் ஒன்றியம் ஈடுபடவில்லை.

இப்பொழுது முதுமையை எட்டும் இந்தத் திருக்கோயில்களின் உறுப்பினர்கள் தற்போது அவர்களது அந்திம காலத்தை நெருங்குகின்றனர். இவர்களுக்குப் பின் இவர்களுடைய வாரிசுகள் யாரும் இந்த காளாஞ்சிக் கெடுபிடிக்கு வரப்போவதில்லை. அடையாளம் இல்லாத சிலர் தங்களிடம் உள்ள டாம்பீகத்தை பறைசாற்ற கோயில்களுக்கு வருவார்களேயல்லாமல் அடுத்த தலைமுறையினரில் கோயில்களின் எதிர்காலம் கேள்விக்குறியே. ஏற்கனவே லண்டனுக்கு வெளியே உள்ள கோயில்கள் ஒன்றிரண்டு நாளாந்த செலவுகளை ஈடுசெய்ய முடியாமல் திண்டாடுகின்றன. மேலும் தற்போதைய விலைவாசி உயர்வு பொருளாதார வீழ்ச்சியும் ஆலயங்களின் வருமானத்தையும் கணிசமான அளவு பாதிக்கும்.

இந்நிலையில் வெளியில் இருந்து பல்லாயிரங்களைக் கொட்டி ஏற்பாடு செய்யப்படும் இந்த வருடாந்த நிகழ்வுகள் அது முடிந்த சில நிமிடங்களிலேயே அர்த்தமற்றதாகிவிடும். இந்நிகழ்வுகள் சைவத்தையும் தமிழையும் விஞ்ஞானபூர்வமாக ஆய்வுசெய்யும் மாநாடுகளாகவும் அம்மாநாட்டின் அறிக்கைகள் ஆவணங்களாகவும் கொண்டுவரப்பட்டு இருந்தால் இம்மாநாடுகள் மிகக் கனதியானவையாக இருந்திருக்கும்.

இத்திருக்கோயில்கள் ஒன்றியத்தால் அதனைப் பற்றிச் சிந்திப்பதற்கான வாய்ப்பே இல்லை. அதற்கு முக்கிய காரணம் இந்த ஆலயங்களில் ஆளுமை செலுத்துபவர்களிடம் அதற்கான அறிவுநிலையோ சிந்தனையோ கிடையாது. தலைப்பாகையைக் கட்டி காளாஞ்சி வாங்குவதற்கு அப்பால் அவர்கள் இதுவரை சிந்திக்கவில்லை.

இவர்களது குறுகிய சிந்தனைகளை வைத்து தங்களை சைவப் பெரியார்கள் எனச் சொல்லிக்கொள்ளும் ஆறுதிருமுருகன், கம்பவாருதி போன்றோர் வெளிநாடுகளுக்கும் வந்து வசூல் செய்துகொண்டு திரும்புகின்றனர். ஆறுதிருமுருகனின் திருவிளையாடல்கள் “யாழ் பல்கலைக்கழகம்: ஒரு பார்வை” என்ற நூலில் விரிவாக தொகுக்கப்பட்டு உள்ளது. புலம்பெயர்ந்த தமிழர்களை குறைத்து மதிப்பிட்டதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனே அடுத்த மாவீரர் உரையில் அவர்களைப் புகழ வேண்டியதாகிவிட்டது. அப்படியிருக்கு “வாராதே வரவல்லாய்” என்று கம்பவாருதி ஜெயராஜ் மல்லிகையில் எழுதிய கட்டுரைக்கு “வம்பவாரிசு ஆருக்கு வைக்கிறார் ஆப்பு”, “ஒரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சு” என்ற தலைப்பில் தேசம் சஞ்சிகையில் 2004இல் கட்டுரைகள் வெளிவந்தன. இவர்கள் சமூக மேம்பாட்டிற்காக தாயகத்தில் குறிப்பிடத்தக்க சேவைகள் எதனையும் வழங்கவில்லை.

சில மாதங்களுக்கு முன் ஜெயராஜ் சக்தி தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலிலும் புலம்பெயர்ந்தவர்களின் குடும்ப உறவுகள் மிகச் சிதைந்து இருப்பதாக கம்பவாருதி ஜெயராஜ் குறிப்பிடுகின்றார். அதில் உண்மையில்லாமல் இல்லை. ஆனால் ஜெயராஜ் வாழ்கின்ற தாயகத்தில் கல்வி மிகக்கீழ் நிலைக்குச் சென்றுள்ளது, இளவயதுத் திருமணங்கள் அதிகரித்து விட்டது, அதன் தொடர்ச்சியாக குடும்ப உறவுகள் சிதைந்து வருகின்றது, திருமணமாகாமலேயே குழந்தைகள் தாய்மை அடைகின்றனர், திருமணத்திற்கு அப்பாலான உறவுகளும் அதிகரித்து வருகின்றது. அப்படிப்பட்ட மண்ணில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களை ஊக்கப்படுத்தும் ஒரு உரைக்கு கம்பவாருதி ஜெயராஜ் குழவிற்கு ஒரு லட்சம் செலவாகும் என நிதி திரட்டப்பட்டது. இப்போது கிளிநொச்சியில் கலைக்கூடம் அமைக்கவும் நிதி திரட்டப்படுகின்றது. இதே போல் ஆறுதிருமுருகனும் அடிக்கடி அடிக்கல் நாட்டுகிறார் கட்டிடங்கள் கட்டுகின்றனர். ஆனால் அதனைப் பயன்படுத்த வேண்டிய இளைய தலைமுறை பற்றி இவர்களிடம் எவ்வித பார்வையும் இல்லை. அடிக்கல் நாட்டுவது, கட்டிடம் கட்டுவது, அதன் பின் அது தேடுவாரற்று கிடக்கும். இதுதான் அண்மைக்காலமாக நடைபெற்று வருகின்றது. புலத்தில் இருந்து வசூலிக்கப்படும், திரட்டப்படும் வழங்கப்படும் நிதி பெரும்பாலும் இதுவரை விழலுக்கு இறைத்த நீராகவே ஆனது. ஒரு வகையில் ஆறுதிருமுருகன், கம்பவாருதி ஜெயராஜ் போன்றவர்களை வளர்க்கவும் தாயகத்தில் சமூகச் சீரழிவிற்குமே புலம்பெயர் பணம் பெரும்பாலும் பயன்பட்டது.

பிரபல்யமானவர்கள் என்பதற்காக அவர்களுக்கு வாரி இறைப்பதினால் சமூகத்திற்கு எந்தப்பலனும் கிடைப்பதில்லை. ஆளுக்கொரு பிரபலத்தை கொண்டு திரிந்து எமது சமூகப் பிரச்சினையை தீர்க்க முடியாது. இவைகளையுணர்ந்து நீண்டகால நோக்கில் சிந்தித்துச் செயற்பட அனைவரும் முன்வர வேண்டும். தற்போது தங்கள் கடைசிக்காலத்திலாவது, தங்கள் பெயர் சொல்லும் வகையில் காலத்தால் அழியாமல் இருக்க தமிழுக்கும் சைவத்துக்கும் பிரித்தானியாவில் ஒரு ஆவணக்காப்பகத்தை அமைக்க இத்திருக்கோயில்களின் ஒன்றியம் முன்வரவேண்டும்.