2022

2022

முதியவரை 8 சிறுமிகள் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் !

முதியவரை 8 சிறுமிகள் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் கனடாவில் நிகழ்ந்துள்ளது.

கொலை செய்த சிறுமிகளுக்கும் இறந்த முதியவருக்கும் சமூக வலைதளம் மூலம் தொடர்பு ஏற்பட்டுள்ளது. டொரன்டோ ரெயில் நிலையம் அருகே முதியவரும், சிறுமிகளும் சந்தித்த நிலையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகி இறுதியில் சிறுமிகள் ஆத்திரத்தில் கத்தியால் அந்த 59 வயது முதியவரை குத்திக்கொலை செய்துள்ளனர்.

கொலையில் சம்பந்தப்பட்டுள்ள சிறுமிகள் 13 மற்றும் 16 வயதினரே ஆவர். 8 சிறுமிகளையும் கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்கலைகழகங்களில் பெண்கள் கல்வி கற்க தடை – தலிபான்கள் உத்தரவு !

ஆப்கானிஸ்தானில் ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆட்சி செய்துவரும் தலிபான்கள் அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக, அந்த நாட்டின் பெண்கள் பாலின பாகுபாட்டால் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஆறாம் வகுப்பு மேல் கல்வி கற்க தடை, ஆண்கள் துணையின்றி விமானங்களில் பயணிக்க தடை, பொது இடங்களில் ஆடை கட்டுப்பாடு, பொழுதுபோக்கு பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் செல்ல தடை என பெண்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தலிபான்கள் இடைக்கால தடை விதித்துள்ளனர். அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் இந்த உத்தரவு செல்லும். அடுத்த உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

ஹிட்லரின் நாசி வதைக்கூடத்தில் 10500 பேர் கொல்லப்பட்ட வழக்கு – குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட 97 வயது மூதாட்டி !

ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் அரசியல் மற்றும் இராணுவ கைதிகளை அடைத்து வைப்பதற்காக பிரத்யேகமாக சிறைச்சாலைகள் உருவாக்கப்பட்டன. இந்த சிறைச்சாலைகள் சித்ரவதை கூட்ங்களாக செயல்பட்டன. நாசி கான்சன்ட்ரேசன் கேம்ப் என அழைக்கப்பட்ட இந்த சித்ரவதை கூடங்களில் ஆயிரக்கணக்கான கைதிகள் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.

நாஜி வதை முகாமில் ஆயிரக்கணக்கானோரை கொன்ற வழக்கில் 97 வயது மூதாட்டி  குற்றவாளி என அறிவிப்பு | 97-Year-Old Woman Convicted For Role In Murder Of  Thousands At Nazi Camp

இந்த நாசி வதைக்கூடங்கள் தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வதைக்கூடங்களில் பணியாற்றி கைதிகளின் கொலைக்கு காரணமாக இருந்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில், நாசி வதைக்கூடத்தில் 10500 பேர் கொல்லப்பட்ட வழக்கில், 97 வயது நிரம்பிய மூதாட்டி ஒருவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

நாசி வதை முகாமில் செயலாளராக பணியாற்றிய இம்கார்டு பர்ச்னர் என்ற அந்த மூதாட்டி, 11,412 பேரின் கொலைகளுக்கு உதவியதாக முதலில் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இறுதி விசாரணையில் 10500 பேரின் கொலைக்கு காரணமாக இருந்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு 2 ஆண்டுகள் இடைநிறுத்தப்பட்ட சிறை தண்டனை வழங்கி இட்ஸேஹோவில் உள்ள மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றங்கள் நடந்தபோது அவரது வயது 18 வயது என்பதால், சிறார் சட்டத்தின் கீழ் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பர்ச்னர் கடந்த 1943 முதல் 1945 வரை ஸ்டட்ஹாப் வதை முகாமில் வேலை செய்துள்ளார். இந்த வதை முகாமில் சுமார் 65,000 பேர் பட்டினி மற்றும் நோயினால் இறந்தனர். அவர்களில் போர்க் கைதிகள் மற்றும் நாஜிகளின் அழிப்பு பிரச்சாரத்தில் சிக்கிய யூதர்களும் அடங்குவர்.

கட்டார் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் பிரான்ஸ் தோல்வி – பிரான்ஸ் முழுவதும் கலவரம் !

கட்டார் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினா வெற்றிபெற்றதை அடுத்து பிரான்ஸ் முழுவதும் கலவரம் வெடித்துள்ளது.

பிரான்ஸ் அணி பெனால்டி முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றிவாய்ப்பை இழந்த நிலையில், பரிஸ், நைஸ் மற்றும் லியான் நகரங்களில் ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் தெருக்களில் குவிந்தனர்.

பரிஸ் நகரில் அமைந்துள்ள பிரபலமான Champs-Elysees பகுதியில் கலகத் தடுப்பு காவல்துறையினருக்கும் கால்பந்து ரசிகர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

இதனிடையே, லியான் பகுதியில் கலவரம் வெடித்ததை அடுத்து கலகத் தடுப்பு காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தேசியைக் கொடிய போர்த்தியபடி கற்கள், போத்தல்கள் மற்றும் பட்டாசுகளை காவல்துறையினர் மீது கால்பந்து ரசிகர்கள் வீசியுள்ளனர். சில பகுதிகளில் கூட்டத்தை கலைக்க நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலவரத்தில் ஈடுபட்ட பலர் கைதாகியுள்ளனர்.

புதன்கிழமை, மொராக்கோவுக்கு எதிரான உலகக் கோப்பை வெற்றியைத் தொடர்ந்து பிரான்ஸ் முழுவதும் வன்முறை மோதல்கள் வெடித்ததில் 14 வயது சிறுவன் கொல்லப்பட்டார்.

பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவானதைத் தொடர்ந்து பரிஸ் நகர தெருக்களில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.

இதேபோன்று, பிரஸ்ஸல்ஸில் ரசிகர்கள் தெருவில் தீ வைத்து, பட்டாசுகளை வீசியதைத் தொடர்ந்து, காவல்துறையினர் கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 495 பேர் பலி – ட்வீட் செய்த ஒஸ்கார் விருது நடிகை கைது !

ஈரானில் ஹிஜாப் விவகாரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தை வெளிநாட்டு சதி என குற்றம் சாட்டிய ஈரான் இரும்புக்கரம் கொண்டு போராட்டத்தை ஒடுக்கியது.

அரசுக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 495 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே போராட்டத்தில் கலவரம் செய்ததாக 18, 200 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது கோர்ட்டில் ரகசிய விசாரணை நடத்தி ஈரான் அரசு கடுமையான தண்டனை விதித்து வருகிறது. இதில் 2 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பொது இடத்தில் அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஈரான் அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு சர்வதேச அளவில் கடும் கண்டனம் எழுந்தன. இதற்கிடையே, ஈரானிய நடிகை தரானே அலிதூஸ்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஈரானின் அரசு போராட்டக்காரர்களுக்கு தூக்கு தண்டனை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வீடியோ பதிவுகளை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், போதுமான ஆதாரங்கள் இல்லாமல் ஈரான் அரசுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் நடிகை தரானே அலிதூஸ்தி வீடியோ வெளியிட்டதாகக் கூறி அவரை அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டது. நடிகை தரானே அலிதூஸ்தி ஈரானின் பிரபல நடிகை ஆவார். அவர் நடித்த ‘தி சேல்ஸ்மேன்’ திரைப்படம் ஒஸ்கார் விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

“எங்களிடமும் அணுகுண்டு உள்ளது. எப்படி பதிலளிக்க வேண்டும் என எங்களுக்கும் தெரியும்.”- பாகிஸ்தான்

“எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு தெரியும். பாகிஸ்தானிடம் அணு குண்டு உள்ளது என்பதை இந்தியா மறந்துவிடக்கூடாது.” என பாகிஸ்தான் மக்கள் கட்சி மந்திரி ஷஷியா மரி தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்காவில் நடந்த ஐ.நா. சபையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் பூட்டோ சர்தாரி, காஷ்மீர் தொடர்பாக ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்தியா நிறைவேற்ற வேண்டும்’ என்று கூறினார்.

அவருக்கு அவையில் பதிலடி கொடுத்த இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்,

“ஒசாமா பின்லேடனுக்கு உறைவிடம் கொடுதவர்கள், அண்டை நாட்டு நாடாளுமன்றத்தை தாக்கியவர்கள் நம்பகத்தன்மை குறித்து இந்த சபையில் பிரசாரம் செய்ய வேண்டாம்’ என்றார். இந்த கூட்டத்தொடர் முடிந்த பின்னரும் இந்திய – பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரிகளின் கருத்துக்கள் பேசுபொருளானது. இதனை தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரின் கருத்துக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி பூட்டோ,

“ஒசாமா பின்லேடன் இறந்துவிட்டார். ஆனால், குஜராத் கசாப்புக்கடைக்காரர் வாழ்கிறார். அவர் இந்தியாவின் பிரதமராக (மோடி) உள்ளார். அவர் (பிரதமர் மோடி) இந்த நாட்டிற்குள் (அமெரிக்கா) நுழைய தடைவிதிக்கப்பட்டது.  பிரதமரும் (மோடி), வெளியுறவுத்துறை மந்திரியும் (ஜெய்சங்கர்) ஹிட்லரின் நாசி கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள்’ என்றார்.

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, விரக்தியின் விளிம்பில் இருந்துகொண்டு பிலாவல் பூட்டோ சர்தாரி பேசி இருக்கிறார். பயங்கரவாதத்தை தனது அரசின் கொள்கையாகக் கொண்டிருக்கும் நாட்டைச் சேர்ந்த அவரின் பேச்சு, பயங்கரவாதிகளுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும்.பிலாவல் பூட்டோ சர்தாரியின் நாகரிகமற்ற பேச்சு, அந்த நாட்டுக்கு மேலும் ஒரு தாழ்வு’ என்று தெரிவித்திருந்ததது.

அதேவேளை, பிரதமர் மோடி குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்த கருத்துக்கு இந்தியாவில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. பாகிஸ்தான் கொடியை எரித்து பாஜகவினர் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், எங்களிடம் அணு குண்டு உள்ளது என்பதை இந்தியா மறந்துவிட வேண்டாம் என்று பாகிஸ்தான் மந்திரி மிரட்டல் விடுத்துள்ளார். பாகிஸ்தான் மக்கள் கட்சி மந்திரி ஷஷியா மரி லாகூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு தெரியும். பாகிஸ்தானிடம் அணு குண்டு உள்ளது என்பதை இந்தியா மறந்துவிடக்கூடாது. எங்கள் அணு ஆயுத நிலைப்பாடு அமைதியாக இருப்பதற்கு அல்ல. தேவை ஏற்பட்டால் நாங்கள் பின்வாங்கப்போவதில்லை. தாக்கப்படும்போது பாகிஸ்தான் அமர்ந்திருக்காது. சமபலத்துடன் பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும். இஸ்லாமிய மதத்தினரை பயங்கரவாதத்துடன் இந்தியா தொடர்புபடுத்துகிறது’ என்றார்.

எந்தக்கழகத்திலும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களுக்கு இடமில்லை – விளையாட்டுத்துறை அமைச்சர் உத்தரவு !

விளையாட்டுச் சட்டத்தில் பல புதிய விதிமுறைகளை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள எந்தவொரு விளையாட்டுக் கழகத்திலும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் பதவிகளை வகிக்க முடியாத வகையில் விளையாட்டுச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும், விளையாட்டுக் கழகங்களின் எந்தவொரு அதிகாரி அல்லது குழு உறுப்பினரின் அதிகபட்ச வயதை 70 ஆக மாற்றவும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

விளையாட்டுச் சட்டத்தின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி அவர் இந்த திருத்தங்களை கொண்டுவந்துள்ளார்.

 

விரைவில் நீக்கப்படுகிறது உலகலாவிய கொரோனா அவசரநிலை – உலக சுகாதார அமைப்பு

சீனாவின் வூகான் மாகாணத்தில் 2019-ம் ஆண்டின் இறுதியில் முதன் முதலாக கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டது.

தற்போது அந்த பாதிப்புகளில் இருந்து சர்வதேச நாடுகள் படிப்படியாக மீண்டு வருகின்றன. இதுவரை உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் சுமார் 66 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலுக்கு இன்னும் சர்வதேச சுகாதார அவசரநிலை தேவைப்படுகிறதா..? என்பதை தீர்மானிக்க உலக சுகாதார அமைப்பு சார்பில் சில மாதங்களுக்கு ஒருமுறை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது.

அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் எதனோம் பேசுகையில்,

2023-ம் ஆண்டில் நாம் சந்திக்க வேண்டிய சவால்கள் நிறைய இருப்பதாகவும், எதிர்காலத்தில் கொரோனா போன்ற நோய்த்தொற்று பரவல்களை எதிர்கொள்ள தயார்நிலையில் இருக்கவேண்டும் என்பதே நாம் கற்க வேண்டிய பாடம் என்றும் கூறினார்.

கடந்த வாரம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகியுள்ள நிலையில், வரும் 2023-ம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் பரவலை உலகளாவிய அவசரநிலையாக கருதவேண்டிய அவசியம் இருக்காது என டெட்ரோஸ் அதனோம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதேசமயம், கொரோனா வைரசின் தோற்றத்தை நன்கு புரிந்துகொள்வதற்காக, நாங்கள் கேட்டுள்ள தரவுகளை பகிர்ந்துகொள்ளவும், ஆய்வுகளை மேற்கொள்ளவும் சீனாவிடம் தொடர்ந்து கூறிவருவதாக டெட்ரோஸ் கூறினார்.

வெளிநாட்டு தொழிலாளா்களுக்கு எதிராக மனித உரிமை மீறல் – கட்டாரிடம் லஞ்சம் பெற்ற ஐரோப்பிய பாராளுமன்றத்தின் பெண் தலைவர் கைது !

மத்திய வளைகுடா நாடுகளில் ஒன்றான கட்டாரில் வெளிநாட்டு தொழிலாளா்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் ஐரோப்பிய கூட்டமைப்பு தங்களுக்கு ஆதரவான அரசில் முடிவுகளை எடுப்பதற்கு கட்டார் பணபலத்தை பயன்படுத்தி வருவதாக நீண்ட காலமாகவே குற்றம் சாட்டப்பட்டு வந்தது.

Eva Kylie, Vice President of the Council of Europe, was arrested. Qatari  cash hidden ~ News Directory 3

ஆனால் கட்டார் அரசு இதை திட்டவட்டமாக மறுக்கிறது. இந்த நிலையில் கட்டார் நாட்டிடம் லஞ்சம் பெற்றதாக கூறி ஐரோப்பிய பாராளுமன்றத்தின் பெண் தலைவரான எவா காயிலியை பெல்ஜியம் போலீசார் கைது செய்தனர். எவா காயிலி உள்பட 4 பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்கள் மீது சட்டவிரோத பண பரிவா்த்தனை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் இது தொடர்பாக ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீடு உள்பட 16 இடங்களில் போலீசார் சோதனை நடத்தி சுமாா் 6 லட்சம் யுரோ பறிமுதல் செய்தனர். அதன் தொடர்ச்சியாக நேற்று பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் உள்ள ஐரோப்பிய பாராளுமன்ற அலுவலகங்களில் போலீசார் சோதனை நடத்தினர். இதனிடையே லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கிரீஸ் நாட்டை சேர்ந்த எவா காயிலி ஐரோப்பிய பாராளுமன்ற துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

நிலவுக்கு மனிதனை அனுப்பும் நாசாவின் “ஆர்டெமிஸ்“ திட்டம் – பூமியை வந்தடைந்தது ‘ஓரியன்’ விண்கலம் !

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா 2025-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மீண்டும் மனிதரை அனுப்ப ‘ஆர்டெமிஸ்’ என்கிற திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்ல ‘ஓரியன்’ என்கிற விண்கலத்தை நாசா உருவாக்கியுள்ளது.

சோதனை முயற்சியாக ஆளில்லா ஓரியன் விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப நாசா திட்டமிட்ட நிலையில், ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளால் அந்த முயற்சி பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. அதைதொடர்ந்து, கடந்த மாதம் 16-ந் திகதி ‘ஆர்டெமிஸ்-1’ ராக்கெட் மூலம் ‘ஓரியன்’ விண்கலம் வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பப்பட்டது.

பின்னர் ரொக்கெட்டில் இருந்து பிரிந்த ‘ஓரியன்’ விண்கலம் நிலவை நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டது. 6 நாட்கள் பயணத்துக்கு பின் ‘ஓரியன்’ விண்கலம் நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடைந்தது. சுமார் 26 நாட்கள் நிலவின் சுற்றுவப்பட்டப்பாதையில் சுற்றி வந்த ‘ஓரியன்’ விண்கலம் தனது பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் பூமிக்கு புறப்பட்டது. பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்த விண்கலம் பசிபிக் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பாக தரையிறங்கியது.