2022

2022

விண்வெளியில் நெற் செய்கை – வியக்கவைத்த சீனா !

விண்வெளியின் சுற்று வட்ட பாதையில் நிரந்தர விண்வெளி நிலையம் ஒன்றை அமைக்கும் திட்டத்துடன் சீனா பணியாற்றி வருகிறது. இந்நிலையில், கட்டுமான பணி நிறைவடையாத சீன விண்வெளி நிலையத்தில், பூஜ்ய புவியீர்ப்பு விசை கொண்ட வென்சியான் என்ற ஆய்வகத்தில் விதைகளை கொண்டு நெற்பயிர்களை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இதற்கான பணிகள் கடந்த ஜூலையில் தொடங்கின. இதற்காக இரு வகை செடிகளின் விதைகளை அவர்கள் பயன்படுத்தி உள்ளனர்.

தாலே கிரஸ் மற்றும் அரிசி வகை செடியை உற்பத்தி செய்யும் பணியானது தொடங்கியது. இதில், தாலே கிரஸ் 4 இலைகளை உற்பத்தி செய்தது. இந்த செடியானது, நம்மூரில் உள்ள முட்டைகோஸ் போன்ற பசுமையான இலைகளை கொண்ட காய்கறிகளை ஒத்தது. ஆனால், அரிசி விதையானது 30 செ.மீ. உயரத்திற்கு வளர்ந்து விஞ்ஞானிகளை ஆச்சரியமடைய செய்துள்ளது. விண்வெளியில் கதிரியக்கங்கள் அதிக அளவில் இருக்கும். இந்த சூழலில், தாவரங்கள் எப்படி நடந்து கொள்கின்றன என்பது பற்றி புரிந்து கொள்வதற்காக சீன விஞ்ஞானிகள் வாழ்க்கை அறிவியல் பரிசோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபற்றி சீன அறிவியல் அகாடெமியின் ஆராய்ச்சியாளர் ஜெங் ஹுகியாங் கூறும்போது, விண்வெளியில் தலா இரு தாவரங்களின் வாழ்க்கை சுழற்சி பற்றி இரண்டு பரிசோதனைகள் வழியே பகுப்பாய்வு செய்யப்படும். அவற்றை வளர்க்க நுண்ணிய ஈர்ப்பு விசை கொண்ட சுற்றுச்சூழல் அமைப்பினை எப்படி பயன்படுத்தலாம் என்றும் உற்பத்தி திறனை அதிகரிப்பது பற்றியும் அறியப்படும் என கூறியுள்ளார்.

பூமி போன்ற சூழலை ஒத்த, செயற்கை சுற்றுச்சூழலை கொண்டு மட்டுமே இந்த பயிர்களை வளர்க்க முடியும். செடிகளின் வளர்ச்சியை ஒப்பிட்டு, விண்வெளியில் தகவமைத்து கொள்ளும் வகையிலான கூடுதல் பயிர்களை ஆய்வின் வழியே நாம் கண்டறிய முடியும் என அவர் கூறியுள்ளார். விண்வெளியில் தாவர விதைகள் பரிசோதனையில் சீனா ஈடுபடுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு ஜூலையில், விண்வெளியில் இருந்து திருப்பி கொண்டு வந்த விதைகளை வைத்து முதல் தொகுதி அரிசியை அறுவடை செய்தது.

சொர்க்கத்தில் இருந்து வந்த அரிசி என பெயரிடப்பட்ட இந்த வகை அரிசிக்கான 40 கிராம் விதைகள், 7.6 லட்சம் கி.மீ. தொலைவுக்கு நிலவுக்கு கொண்டு செல்லப்பட்டு பின்பு பூமிக்கு திரும்பி கொண்டு வரப்பட்டது. அதிக கதிரியக்கங்கள், புவியீர்ப்பு விசையற்ற சூழல் போன்ற சுற்றுச்சூழலில் விண்வெளியில் சீன விஞ்ஞானிகள் அரிசியை உற்பத்தி செய்து இருப்பது விஞ்ஞான வளர்ச்சியின் அடுத்த நிலையாக உற்று நோக்கப்படுகிறது.

பாக்.முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு – கைதுக்கும் வாய்ப்பு !

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான்கான், இஸ்லாமாபாத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவரது உதவியாளர் ஷாபாஸ் கில் கைது செய்யப்பட்டது குறித்தும் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு குறித்தும் கண்டம் தெரிவித்த இம்ரான், இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் நீதிபதி மீதும் வழக்குப் பதிவு செய்யப் போவதாகவும் மிரட்டல் விடுத்தார்.

 

இதையடுதது பொதுக் கூட்டத்தில் நீதிபதி மற்றும் காவல்துறை அதிகாரிகளை மிரட்டியதாக இம்ரான் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில், பாகிஸ்தானின் ஊடக ஒழுங்குமுறை ஆணையம் இம்ரான்கானின் பொதுக் கூட்டப் பேச்சை உள்ளூர் ஊடகங்கள் ஒளிபரப்ப தடை விதித்துள்ளது இம்ரான்கான் பேச்சை விமர்சித்துள்ள பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா, இராணுவம் உள்பட பிற அமைப்புகளை குறி வைக்கும் போக்கின் தொடர்ச்சியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இம்ரான் கானின் வீட்டிற்கு செல்லும் சாலையில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரை கைது செய்ய ஷாபாஸ் ஷெரிப் அரசு திட்டமிட்டுள்ளதாக, பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சித் துணைத் தலைவர் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்காக 800 மில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுத உதவி – அமெரிக்கா அறிவிப்பு !

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஐந்து மாதங்களுக்கு மேலாகிறது. இந்த போரில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்யா ராணுவத்தின் தாக்குதலுக்கு உக்ரைனும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், உக்ரைனுக்கு கூடுதலாக 800 மில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுத உதவிகளை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த இராணுவ உதவியில் ஹைமார்ஸ் ஏவுகணைகள், பீரங்கி மற்றும் கண்ணிவெடி அகற்றும் உபகரணங்கள், டொவ் ஏவுகணைகள் அடங்கும். இந்த தொகுப்பில் கணிசமான அளவு கூடுதல் வெடிமருந்துகள், ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் இதுவரை உக்ரைனுக்கு 19 இராணுவ தொகுப்புகள் அடங்கிய உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது.

இதே நேரம் உக்ரைனுடனான போரை அமெரிக்க உள்ளிட்ட நாடுகளே ஆயுத உதவிகளை வழங்கி தொடர்ந்தும் பூதாகரமாக்கி வருகின்றன என ரஷ்யா குற்றஞ்சாட்டிவருவதும் குறிப்பிடத்தக்கது.

மக்களே அதிகமாக குடியுங்கள் – ஊக்குவிக்கும் ஜப்பான் அரசு – காரணம் என்ன..?

ஜப்பானில் கொரோனா பெருந்தொற்றால், கடந்த 2 ஆண்டுகளாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். இதனால், அந்நாட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பொருளாதார வீழ்ச்சியும் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், அந்நாட்டு தேசிய வரி கழகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2020-ம் ஆண்டில் குடிமக்கள் குறைந்த அளவே மதுபானம் குடித்துள்ளனர் என தெரிவித்து உள்ளது.

 

கடந்த 1995-ம் ஆண்டில் குடிமக்கள் குடித்த மதுபானம் நூறு லிட்டர் என்ற அளவில் இருந்தது. ஆனால், இது 75 லிட்டராக குறைந்துள்ளது என ஒப்பீட்டு அளவையும் தெரிவித்து உள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர், ஜப்பானில் மக்கள் தொகை விகிதமும் குறைந்துள்ளது. இதனால், மக்கள் தொகையை அதிகரிக்க செய்யும் நோக்குடனும் மற்றும் ஜப்பானின் பொருளாதாரம் மேம்படுவதற்காகவும் அரசு புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. இதற்காக சேக் விவா என்ற பெயரில் ஜப்பானின் தேசிய வரி கழகம் பிரசாரம் ஒன்றை தொடங்கி உள்ளது. மதுபானங்களின் தேவையை அதிகரிக்க உதவி புரியும் யுக்திகளுடன் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் வரும்படியும் அந்த கழகம் தனது நாட்டு குடிமக்களை கேட்டு கொண்டுள்ளது. இதன்படி போட்டி ஒன்று நடத்தப்படும்.

இதில், 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட மக்கள் அனைவரும் பங்கேற்கலாம். அவர்கள் மதுபானம் குடிப்பதற்கான வரவேற்கத்தக்க புதிய யுக்திகளை பற்றிய விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். சேக், சோச்சு, பீர், விஸ்கி, ஒயின் உள்ளிட்ட மதுபானங்களின் தேவையை அதிகரிக்க செய்வது மற்றும் வெவ்வேறு சுவைகளை பற்றியும், புதிய வாழ்வியல் வழிகளை பற்றியும் தெரிவிக்கும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. இந்த போட்டியின் இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவோர் செப்டம்பர் 27-ந்தேதி தேர்வு செய்யப்படுவார்கள். அதற்கு அடுத்த சுற்று அக்டோபரில் நடைபெறும். அதன் முடிவுகள் டோக்கியோ நகரில் வருகிற நவம்பர் 10-ந்தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெர்மனியின் பனிப்பாறைகள் 50 வருடங்களில் காணாமல் போய் விடும் !

அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில், ஜெர்மனியின் பனிப்பாறைகள் சமீப காலமாகவே கடினமான சூழலை எதிர்கொண்டு வருகின்றன. அதிலும் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள 3 ஆயிரம் பனிப்பாறைகளில் பெரும்பாலானவை அடுத்த 50 வருடங்களில் காணாமல் போய் விடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மன் நாட்டின் மிக உயரமான ஜக்ஸ்பைட்ஸ் மலையின் உச்சியில் அமைந்துள்ள பனிப்பாறையான “ஷ்னீஃபெர்னர்”, சமீப ஆண்டுகளாக மற்ற பனிப்பாறைகளைப் போலவே அதிகமாக உருகி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் அந்த பனிப்பாறை தனது பெரும்பான்மையான பகுதியை இழந்துள்ளது. இந்த ஆண்டில் நிலவி வரும் அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த மழைப்பொழிவு ஆகியவை பனிப்பாறைகள் உருகுவதை துரிதப்படுத்தியுள்ளன. பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வைக் குறைப்பது ஆல்பைன் பனிப்பாறைகள் உருகுவதை கொஞ்சம் குறைக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இலங்கை அதன் வரலாற்றில் மிக மோசமான சமூக-பொருளாதார நெருக்கடியின் மத்தியில் – ஐ.நா கவலை !

இலங்கையின் பொருளாதார நெருக்கடி நாட்டின் சுகாதார கட்டமைப்பினை வீழ்ச்சியின் இறுதிக் கட்டத்திற்கு இட்டுச்சென்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இலங்கை அதன் வரலாற்றில் மிக மோசமான சமூக-பொருளாதார நெருக்கடியின் மத்தியில் உள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இந்த நிலமை கர்ப்பிணிப் பெண்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் உபகரணங்கள், மருந்து பற்றாக்குறை என்பன காரணமாக நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியினால் கர்ப்பிணிப் பெண்கள் போஷாக்கற்ற உணவு மற்றும் உணவுத் தட்டுப்பாட்டால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

குறைவடையும் ரஷ்ய சனத்தொகை – 10பிள்ளைகளை பெறும் தாய்மாருக்கு ரொக்கப்பரிசு என அறிவித்த புடின் !

ரஷ்ய நாட்டில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இது தொடர்பில் அந்த நாட்டின் ஜனாதிபதி விளாடிமிர் புடின்  கவலை தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அங்கு 10 குழந்தைகளையோ அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான குழந்தைகளையோ பெற்றெடுத்து வளர்க்கிற தாய்மார்களுக்கு அன்னை நாயகி என்ற சோவியத் கால பட்டம் வழங்கப்படும், அத்துடன் 10-வது பிறந்த குழந்தைக்கு 1 வயது ஆனவுடன் 1 மில்லியன் ரூபிள்  ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். இதற்கான உத்தரவில் புதின் கையெழுத்து போட்டிருக்கிறார்.

இந்த உத்தரவு புதிதல்ல. இரண்டாம் உலகப்போரின்போது பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டதால், 1944-ம் ஆண்டு சோவியத் தலைவர் ஸ்டாலின் அறிமுகப்படுத்திய திட்டம் தான் இது. பனிப்போரைத் தொடர்ந்து 1991-ம் ஆண்டு, சோவியத் யூனியன் உடைந்தபின்னர் இந்த திட்டம் கைவிடப்பட்டது. இப்போது அதை எடுத்து தூசி தட்டி மீண்டும் புதின் அமல்படுத்தி உள்ளார். ரஷியாவின் மக்கள் தொகை தொடர்ந்து பல 10 ஆண்டுகளாக சரிந்து வருகிறது. 2022-ம் ஆண்டின் தொடக்கத்தில் சுமார் 4 லட்சம் சரிவுக்கு பின்னர் 14.5 கோடிகளாக குறைந்தது. சோவியத் யூனியன் உடைந்த பிறகு, கடுமையான பொருளாதாரம், சமூகச்சூழலால் 1990-களில் இருந்து மக்கள் தொகை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்தது. 2000-ம் ஆண்டு ரஷிய ஜனாதிபதியாக விளாடிமிர் புடின்  பதவி ஏற்ற பின்னர் மக்கள் தொகை சார்ந்த பிரச்சினைகளை நாடு எதிர்கொண்டது.

மக்கள் தொகையை பெருக்குவதற்கு மேற்கொண்ட முந்தைய முயற்சிகள் வெற்றி பெறவில்லை. 2018-ம் ஆண்டு மக்கள் தொகை 14.7 கோடியாக இருந்தது. இது உக்ரைனின் அங்கமாக இருந்த கிரிமியாவை சேர்த்த பிறகுதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த இணைப்பு சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்படாத நிலையில், 85 ஆயிரம் குறைந்தது. 2021-ம் ஆண்டில் கொரோனா தொற்று, உக்ரைன் மீதான தற்போதைய போர் ஆகியவை அந்த நாட்டின் மக்கள் தொகை வீழ்ச்சிக்கு வழிவகுத்தபோது, அந்த நாட்டின் மக்கள் தொகை வீழ்ச்சியின் விகிதம் கிட்டத்தட்ட 2 மடங்காக அதிகரித்துள்ளதாம். இந்த நிலையில்தான் ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புடின்  10 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுத்து வளர்க்கிற தாய்மார்களை கவுரவித்து ரொக்கப்பரிசு வழங்கும் சோவியத் கால திட்டத்தை மறுபடியும் அமல்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“சர்வதேச நாணய நிதியத்தை சமாளிக்க இலங்கைக்கு உதவிய ஒரே நாடு இந்தியா“ – நினைவுபடுத்துகிறார் எஸ் ஜெய்சங்கர் !

பிராந்தியம் முக்கியத்துவம் பெறுவதால், பல நாடுகள் இந்திய பெருங்கடலில் தங்கள் செல்வாக்கை விரிவுபடுத்த முயற்சிக்கின்றன என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட சீன ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான ‘யுவான் வாங் 5’ தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எனினும், இந்தியப் பெருங்கடல், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மற்றொரு விசேட அம்சமாக மாறாது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தியா தனது தேசிய நலன்களை கவனித்துக்கொள்ள வேண்டும், ஆனால் பிராந்தியத்தில் தனித்துவத்தை கோர முடியாது. இந்தியாவின் அண்டை நாடுகள் கலாசார ரீதியாக ஒன்றுப்பட்டுள்ளதுடன், பொருளாதார ரீதியாகவும் பிணைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் சர்வதேச நாணய நிதியத்தை சமாளிப்பதற்கு முன்வருவதற்கு உதவிய ஒரே அண்டை நாடு இந்தியா என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தில் 17 இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு !

தாய்லாந்தின் தென்பகுதியில் உள்ள பல இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இன்று (17) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தாய்லாந்து காவல்துறையினரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தாய்லாந்தின் தென் பகுதியில் பட்டணி, நாராதிவத், யால ஆகிய நகரங்களில் உள்ள 17 இடங்களில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த குண்டு வெடிப்புகள் மற்றும் தீவைப்புச் சம்பவங்களில் மூன்று பேர் காயமடைந்துள்ளதுடன் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இந்த குண்டு வெடிப்பு தாக்குதல்கள் பெரும்பாலும் சிறிய கடைகள் மற்றும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் இடம்பெறுள்ளன. நேற்று (16) இரவு சந்தேக நபர் ஒருவர் யால, யஹா மாவட்டங்களில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையம் மற்றும் வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் நுழைந்து கறுப்பு பை ஒன்றை அங்கு வைத்து விட்டு சென்றுள்ளார்.

அத்துடன், மரணிக்க விரும்பவில்லை என்றால், அங்கிருந்து வெளியேறுமாறு ஊழியர்களுக்கு எச்சரித்துள்ளதாக தாய்லாந்து காவல்துறையினர் கூறியுள்ளனர்.

மேலும், ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறிய 10 விநாடிகளுக்குப் பின்னர் குண்டு வெடித்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் இந்தியாவின் அதானி குழுமத்திற்கு !

500 மில்லியன் டொலர் முதலீட்டிற்கு இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்திற்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மன்னாரில் 286 மெகாவாட் மற்றும் பூனேரியில் 234 மெகாவாட் காற்றாலை மின் திட்டங்களுக்கு அதானி பசுமை சக்திக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர தெரிவித்துள்ளார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அமைச்சர், இலங்கை மின்சார சபை மற்றும் நிலையான அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

மின்சார சபை சட்டத் திருத்தங்கள் காரணமாக தாமதமான 46 திட்டங்களில் 21 திட்டங்களுக்கு அடுத்த வாரம் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் என அமைச்சர் விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் 26 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முன்மொழிவுகளுக்கு தற்காலிக அனுமதி அளிக்கப்பட்ட ஆர்வங்களின் வெளிப்பாட்டில் இருந்து அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏனைய திட்டங்களும் 30 நாட்களுக்குள் மதிப்பீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.