2022

2022

பாகிஸ்தான் உலகத்திலேயே மிகவும் ஆபத்தான நாடு – பைடன் கருத்தால் பரபரப்பு !

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பாகிஸ்தானுக்கு எதிராக பேசியது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஜனநாயக கட்சியின் பிரச்சாரக் குழு வரவேற்பு நிகழச்சியில் ஜோ பைடன் இவ்வாறு பேசியிருக்கிறார்.

ரஷியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்படுத்தி உள்ள சவால்கள் குறித்து பேசும்போது, பாகிஸ்தான் குறித்து பைடன் பேசினார். தன்னுடைய பார்வையில் பாகிஸ்தான் நாடு, உலகத்திலேயே மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்று எனவும், எந்தவிதமான ஒருங்கிணைப்பும் இல்லாமல் அணு ஆயுதம் வைத்துக்கொண்டிருக்கும் நாடு எனவும் தெரிவித்தார். அமெரிக்காவுடனான உறவை மேம்படுத்துவதற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், பைடன் இவ்வாறு கூறியிருப்பது பாகிஸ்தான் அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கொள்கை வெளியிடப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு பைடனின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன. 48 பக்கங்கள் கொண்ட இந்த பாதுகாப்பு கொள்கை அறிக்கையில் பாகிஸ்தானைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ஓய்வூதியம் பெறும் 690,000 பேர் !

சுமார் 690,000 பேர் ஓய்வூதியம் பெறுவோர் இலங்கையில் உள்ளதுடன்,அதற்காக அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் 24,200 மில்லியன் ரூபாவை ஓய்வூதியத்திற்காக செலவிடுகிறது எனவும் எனினும் எவ்வாறான பொருளாதார சிரமங்கள் அல்லது பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஏ.ஜகத் டி.டயஸ் தெரிவித்துள்ளார்.

ஓய்வு பெற்ற பின்னர், கொழும்பு மாளிகாவத்தையில் உள்ள ஓய்வூதிய திணைக்களத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளையும் ஓய்வூதிய பராமரிப்பு பியச மாவட்ட அலுவலகத்தில் மேற்கொள்ள முடியும் என பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

ஒக்டோபர் 8ஆம் திகதி தேசிய ஓய்வூதிய தினத்துடன் இணைந்து ஓய்வூதியத் திணைக்களத்தை மாவட்ட மட்டத்திற்கு பரவலாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனவே, குருநாகல் மாவட்ட செயலகத்தின் கீழ் தளத்தில் ஒக்டோபர் 12 ஆம் திகதி குருநாகல் ஓய்வூதிய மாவட்ட அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டது என ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

சில ஓய்வூதியதாரர்களின் வெளிநாட்டுப் பயணம், தவறுகள், மோசடிகள் அல்லது பிற குறைபாடுகள் காரணமாக அவர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. விசாரணைகள் மற்றும் விசாரணைகள் முடிந்தவுடன் பணம் செலுத்தப்படும். வருடாந்தம் சுமார் 28,000 ஊழியர்கள் ஓய்வு பெறுகின்றனர். அவர்களில் 8,000 முதல் 9,000 பேர் முப்படைகளை சேர்ந்தவர்களாவர்.

ஓய்வூதியத் துறைக்கு தனிப்பட்ட கோப்புகளை அனுப்ப நிறுவனங்களுக்கு 90 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 40 முதல் 50 சதவீதம் பேர் ஓய்வு பெறும் திகதிக்கு முன் கொடுக்கப்பட்ட மூன்று மாதங்களை பயன்படுத்துகின்றனர். வலயக் கல்வி அலுவலகங்கள் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் ஏனைய அரச நிறுவனங்கள் தமது பணியாளர்கள் ஓய்வு பெற்ற பின்னரே தனிப்பட்ட கோப்புகளை அனுப்புகின்றன. ஓய்வூதியத் துறையிடம் சுமார் 300 முதல் 400 கோப்புகள் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“இந்த விண்ணப்பங்களை நாங்கள் மூன்று நிலைகளில் சமாளித்து விரைவில் ஓய்வூதியம் வழங்கும் வகையில் செயற்படுவோம். துரதிர்ஷ்டவசமாக, பிற அலுவலகங்களில் இருந்து எங்களுக்கு ஆதரவில்லை. நாம் ஒரு கையால் கைதட்ட முடியாது.

தனிப்பட்ட கோப்புகளை பராமரிக்கும் ஏனைய அனைத்து அலுவலகங்களும் ஒரு நல்ல சேவையை வழங்க ஒத்துழைக்க வேண்டும். அந்த ஆதரவை வழங்கினால், ஓய்வூதியதாரர்கள் இது தொடர்பாக விண்ணப்பங்களை சமர்ப்பித்த அடுத்த மாதம் முதல் ஓய்வூதியம் வழங்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சீனாவில் மீண்டும் ஒரு நாடு, ஒரு தலைவர் முறை !

சீனாவில் ஆட்சியில் உள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு விரைவில் நடக்க உள்ளது. இதில், ஒரு நாடு, ஒரு தலைவர் என்ற பழைய முறைக்கு மீண்டும் மாறும் முறை அமலாக உள்ளது.

நம் அண்டை நாடான சீனாவின் அதிபராக, 2012ல் பதவியேற்றார் ஷீ ஜிங்பிங். சீனாவில் ஒரு கட்சி ஆட்சி முறையே உள்ளது. அதாவது சீன கம்யூனிஸ்ட் கட்சியே ஆட்சி புரிந்து வருகிறது. அதிபர் பதவியில் இருப்பவர், இரண்டு முறை ஐந்தாண்டுகள் பதவியைத் தொடர முடியும் என்ற நடைமுறை உள்ளது. அதாவது, 10 ஆண்டுகள் பதவியில் இருக்கலாம். இதன்படி, ஜிங்பிங் சீன அதிபர் பதவியில், 10 ஆண்டுகளை விரைவில் நிறைவு செய்ய உள்ளார்.

இந்நிலையில், அவர் அதிபர் பதவியை ஏற்றதும், கட்சியின் தலைவர், ராணுவத்தின் தலைமைப் பொறுப்பு ஆகியவற்றையும் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டார். சீனாவில் அசைக்க முடியாத தலைவராக ஜிங்பிங் மாறியுள்ளார். தன் வாழ்நாள் முழுதும் அதிபர் பதவியில் இருக்கும் வகையில், கட்சியில் சட்டம் திருத்தம் செய்வதற்கான முயற்சியிலும் அவர் ஈடுபட்டார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனரான மா சேதுங் தான், 1976ல் அவர் இறக்கும் வரை அதிபராகவும், கட்சித் தலைவராகவும் மிக நீண்ட காலம் இருந்தார். அதன் பிறகு அதிபராக பொறுப்பேற்ற டெங்க் ஜியோபிங் ஆட்சியின்போது தான், 10 ஆண்டுகள் மட்டுமே பதவி என்ற கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. தற்போது மீண்டும் மா சேதுங் காலத்துக்கு சீனா செல்ல உள்ளது. கட்சியின் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் மாநாடு, வரும், 16ம் திகதி நடக்க உள்ளது.

இதில் கட்சியின் நிர்வாகிகள் சேர்த்து, வாழ்நாள் முழுதும் ஜிங்பிங் அதிபராக தொடரும் முடிவை எடுக்க உள்ளனர். இதற்கேற்ப, கட்சி நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், தன் ஆதரவாளர்களை மட்டுமே ஜிங்பிங் நிறுத்தினார். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட, 2,296 பேர் இணைந்து, ஜிங்பிங் அதிபராக தொடரும் தீர்மானத்தை நிறைவேற்ற உள்ளனர்.

பாகிஸ்தானில் ஒவ்வொருநாளும் 12 பெண்கள் பலாத்காரம் – நான்கு ஆண்டுகளில் 21,900 பெண்கள் பாலியல் பலாத்காரம் !

பாகிஸ்தான் நாட்டில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துளள்து. கௌவுரவக் கொலைகள் அதிக அளவில் நடைபெறும் பாகிஸ்தானில், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமைகளை சர்வே எடுத்துக்காட்டுவதாக கூறப்பட்டுள்ளது.

சாமா தொலைக்காட்சியின் புலனாய்வு பிரிவு நடத்திய கணக்கெடுப்பில் இந்த தகவல் வெளியாகியிருக்கிறது. பஞ்சாப் மாகாணத்தின் உள்துறை மற்றும் மனித உரிமைகள் அமைச்சகத்திடம் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், கற்பழிப்பு வழக்குகள் அதிகரித்தாலும், தண்டனை விகிதம் 0.2 சதவிகிதம் என மோசமாகவே உள்ளது.

2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை நாட்டில் 21,900 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக, புதிதாக சேகரிக்கப்பட்டு தொகுக்கப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது, நாடு முழுவதும் தினமும் சுமார் 12 பெண்கள் அல்லது ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டுள்ளதை இந்த புள்ளிவிவரம் காட்டுகிறது.

பாகிஸ்தானில் அதிகரித்து வரும் கவுரவ கொலைகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா. சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் வலியுறுத்தின. பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையத்தின் தரவுகளின்படி, கடந்த 4 ஆண்டுகளில் 1,957 கௌரவக் கொலைகள் பதிவாகியிருப்பதாக தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா.பொதுச் சபையில் ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம் !

உக்ரைனில் புகுந்து கடந்த 8 மாதங்களாக போர் நடத்தி வரும் ரஷ்யப் படைகள் கைப்பற்றிய டானட்ஸ்க், லூகன்ஸ்க், ஸ்பெரெசியா, கெர்சன் ஆகிய 4 பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டதாக அந்நாட்டு ஜனாதிபதி புதின் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

ரஷியாவின் இந்த நடவடிக்கைக்கு ஐ.நா தலைவர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஐ.நா.பொதுச் சபையில் நேற்று ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தீர்மானத்திற்கு ஆதரவாக 143 நாடுகளும் எதிராக 5 நாடுகளும் வாக்களித்தன. இலங்கை உட்பட 35 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன.

ஆங் சான் சூகிக்கு 26 ஆண்டுகள் சிறை !

மியான்மரின் இராணுவ ஆட்சியை எதிர்த்து பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தியவர் ஆங் சான் சூகி. மியான்மரில் கடந்த 2020 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி ஆட்சியை பிடித்தது.

என்றாலும் தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி கடந்த ஆண்டு பிப்ரவரியில் இராணுவம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. ஆங் சான் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

அவர் மீது ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியைத் தூண்டியது, கொரோனா விதிகளை மீறியது, அலுவலக ரீதியான சட்டங்களை மீறியது, ஊழல் முறைகேடுகள் என வழக்குகள் தொடரப்பட்டன.

இது தொடர்பான விசாரணை மியான்மர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த டிசம்பரில் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம், பிறகு பல்வேறு வழக்குகளில் 17 ஆண்டுகள் வரை தண்டனையை நீடித்தது.

தொடர்ந்து, தேர்தல் முறைகேடு வழக்கில் ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சூகிக்கு இதுவரை 11 வழக்குகளில் 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்மீது மேலும் பல்வேறு வழக்குகள் உள்ளன.

இந்நிலையில், சூகி மீதான வேறு வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. இதில், இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டது. இதில் இரண்டு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆங் சான் சூகிக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத்தண்டனை 26 ஆக நீடித்துள்ளது.

நாங்கள் காணாமலாக்கப்பட்டோரையே கேட்கிறோம். உங்கள் 200,000/- ரூபாயை அல்ல – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் கண்டனம் !

காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு பதிவாளர் தலைமையதிபதியால் வழங்கப்படும் காணாமல் போனமைக்கான சான்றிதழை அடிப்படையாகக் கொண்டு காணாமல் போன ஆளொருவரின் நெருங்கிய உறவினருக்கு 100,000/= ரூபா தொகையை செலுத்துவதற்காக 2022.03.14 அன்று இடம்பெற்ற அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனாலும் காணாமல் போனமைக்கான சான்றிதழை (Certificate of Absence) பெற்றுக் கொள்வதற்கு நீண்டகாலம் எடுக்கின்றமை, செலுத்தப்படுகின்ற 100,000/= ரூபா தொகை போதுமானதாக இன்மை போன்ற விடயங்களை கருத்தில் கொண்டு, குறித்த ஆளொருவர் காணாமல் போயுள்ளமையை இழப்பீட்டு அலுவலகத்தால் உறுதிப்படுத்தப்பட்டிருப்பின் காணாமல் போனமைக்கான சான்றிதழைப் (Certificate of Absence) பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையை நீக்குவதற்கும், செலுத்தப்படுகின்ற தொகையை 200,000/- ரூபா வரைக்கும் அதிகரிப்பதற்கும் நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த நிலையில், அரசின் இந்த நிலைப்பாட்டிற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் கண்டனங்களை வெளியிட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் இரணப்பாளர் ம.ஈஸ்வரி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கின் உறவினர்களை தேடும் போராட்டம் எட்டு மாவட்டங்களிலும் நடைபெற்று வருகின்றது சர்வதேச விசாரணை தேவை என்பதை வலியுறுத்தித்தான் போராட்டத்தினை மேற்கொண்டுவருகின்றோம் தொடர்ச்சியான தேடலில் இருந்து வந்த நாம்  இலங்கைக்கு அழுத்தம் கொடுத்துவந்தோம் எங்கள் கோரிக்கைக்கு எவரும் செவிமடுக்கவில்லை என்றுதான் 5 ஆண்டுகள் வீதியில் இறங்கி போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றோம்.

நாங்கள் இராணுவத்திடம் கையளித்தவர்கள் வீடுகளில் வந்து எங்கள் கண்முன்னால் கொண்டு சென்று போனவர்கள் வெள்ளைவானில் வைத்து கடத்தப்பட்டவர்கள்,கடலில் வைத்து கைதுசெய்யப்பட்டவர்கள் என எங்களுக்கு முன்னால் நடந்தவற்றைத்தான் சாட்சியமாக நாங்கள் நின்று தேடலில் ஈடுபட்டு வருகின்றோம் கையளிக்கப்பட்ட சின்னஞ்சிறுவர்கள் உட்பட கையளித்தவர்களை தேடிக்கொண்டிருக்கின்றோம்.

எமது தொடர்போராட்டதிற்கு ஈடுகொடுக்கமுடியாத இலங்கை அரசாங்கம் முன்னால் ஜனாதிபதி கோட்டபாஜறாஜபக்ச அவர்கள் இருக்கும் போதும் இதனைத்தான் கொண்டுவந்தவர் எங்களை முறியடித்து போராட்டத்தினை நிறுத்தினால் எந்த பிரச்சினையும் வராது என்று.

இப்போது இருக்கும் ஜனாதிபதியும் அவர்களுடன் சேர்ந்து எங்களை பந்தடித்துக்கொண்டிருக்கின்றார்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகிடைக்கவேண்டும் என்று தேடிக்கொண்டிருக்கும் வேளையில் நேற்று(10.10.22 அன்று அறிவித்துள்ளர்கள்.

இது ஜெனீவாவில் இலங்கை தொடர்பில் வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது அந்த வாக்கெடுப்பிற்கு ஓரு கண்துடைப்பாகவும் எமது உறவுகளை ஏமாத்தும் விதமாகவும் தாங்கள் ஒரு குற்றமும் செய்யவில்லை என்பதற்காகவும் தான் இந்த இரண்டு இலட்சத்தினை கொடுத்து ஏமாற்றவுள்ளார்கள்.

எங்களின் உயிர் அவர்களின் இரண்டு இலட்சத்திற்கு பெறுமதியா? இது எந்த மூலைக்கு காணும் பணத்தினை கொடுத்து உயிரினை இல்லாமல் செய்யும் அரசாங்கத்தின் இந்த செயலினை வன்மையாக கண்டிக்கின்றோம்.

கையில் ஒப்படைக்கப்பட்டவர்களைத்தான் நாங்கள் தேடிக்கொண்டிருக்கின்றோம் இறந்தவர்களை நாங்கள் தேடவில்லை ஒட்டு மொத்தமாக எட்டு மாவட்டங்களிலும் நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம் குற்றம் புரிந்தவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் கொண்டுசென்று நீதிமன்றில் நிறுத்தி அதன் பின்னர் என்ன தீன்வு என்பi த நாங்கள் முடிவெடுப்போம் அது மட்டு நாங்கள் தொடர்ச்சியாக போராட்டத்தினை முன்னெடுப்போம் நிதிகளை கொடுத்து உறவுகளை இல்லாமல் செய்யும் செயலினை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இந்த நிதிகளை அரசின் தேவைகளுக்கு பயன்படுத்துங்கள் எங்கள் உயிர்களை எங்கள் கையில் தருவதற்கான சாட்சியங்களாக நாங்கள் இருக்கின்றோம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நீதியினை பெற்று தண்டனையினை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பததான் எங்கள் ஆசை இதற்காக எல்லோரும் தொடர்ந்து போராடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த பாடசாலை அதிபர் கைது !

மட்டக்களப்பு நகர் பகுதியில் 19 வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த பாடசாலை அதிபர் ஒருவரை நேற்று (10) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கா.பொ.த உயர் தரத்தில் கற்றுவரும் மாணவி ஒருவர் பாடசாலை ஒன்றில் விடுதியில் இருந்து கொண்டு வேறு ஒரு பாடசாலையில் கல்வி கற்றுவருகின்றார்.

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 21 ம் திகதி விடுதி அமைந்துள்ள பாடசாலை அதிபர் மாணவியை தனது காரியாலயத்திற்கு வரவழைத்து அந்த மாணவி மீது பாலியால் சேட்டை விட முயற்சித்துள்ளதையடுத்து அங்கிருந்து மாணவி தப்பி ஓடியுள்ளார்.

இந்த சம்பவத்தை அறிந்த 4 பேர் கொண்ட குழுவினர் கடந்த மாதம் 4 ம் திகதி பாடசாலைக்குள் சென்று தாம் சிஜடி என தெரிவித்து அதிபரை தாக்கியதுடன் அவரை தாக்கிய போது வீடியோ எடுத்துள்ளனர்.

இந்த அதிபர் மீது தாக்குதல் நடாத்திய வீடியோ வெளியாகியதையடுத்து இதனை அறிந்த பாதிக்கப்பட்ட மாணவி சம்பவதினமான நேற்று திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு மட்டு பொலிஸ் நிலையத்தில் அதிபருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் அதிபரை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து கைது செய்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

2022ம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மூன்று பொருளாதார வல்லுநர்களுக்கு !

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்த சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி 2022ம் ஆண்டிற்கு மருத்துவம், இயற்பியல் உள்ளிட்ட துறைகளுக்கான நோபல் பரிசுகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இன்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மூன்று பொருளாதார வல்லுநர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பென் பெர்னாக், டக்லஸ் டைமண்ட், ஃபிலிப் ஹெச்.டிப்விக் ஆகிய மூன்று பொருளாதார வல்லுநர்களுக்கு நோபல் பரிசு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடிகள் குறித்து ஆய்வுக்காக மூன்று பேருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

ஈரானில் பூதாகரமாகும் ஹிஜாப் விவகாரம் – அரச தொலைக்காட்சியை முடக்கிய டிஜிட்டல் போராட்டக்காரர்கள் !

ஈரான் நாட்டில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால் கடுமையான தண்டனை உண்டு. இந்நிலையில் குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரை சேர்ந்த 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் கடந்த 13ம் திகதி தலைநகர் தெஹ்ரானுக்கு சென்றுள்ளார். அப்போது தலைப்பகுதியை ஹிஜாப்பால் முழுமையாக மறைக்கவில்லை என கூறி அவரை போலீசார் தாக்கியதில் படுகாயமடைந்து இறந்தார். உயிரிழந்த மாஷா அமினிக்கு ஆதரவாக போலீசாரை கண்டித்து அந்நாட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த போராட்டத்தை ஆதரித்து வரும் டிஜிட்டல் போராட்டக்காரர்கள், ஈரான் அரசின் டிவியின் நேரடி ஒளிபரப்பை சில நிமிடங்கள் முடக்கினர். அந்நாட்டு நேரப்படி இரவு 9 மணியளவில், ஈரான் மதத்தலைவர் அயத்துல்லா அலி காமெனி கலந்து கொண்ட கூட்டம் நேரடி ஒளிபரப்பு செய்த போது, சில நிமிடங்கள் முடக்கப்பட்டது. ஈடலட் இ அலி என்ற அமைப்பு இந்த முடக்கத்திற்கு பொறுப்பேற்றுள்ளது. அப்போது, உயிரிழந்த அமினியின் படமும், போராட்டத்தில் உயிரிழந்த 3 பெண்களின் படமும் சில நிமிடங்கள் திரையில் காட்டப்பட்டன. தொடர்ந்து எங்களது இளைஞர்களின் ரத்தம் உங்களின் கைகளில் உள்ளது. எங்களுடன் சேர்ந்து போராட வாருங்கள். அயதுல்லா காமெனெய், ஈரானை காலி செய்துவிட்டு வேறு நாட்டிற்கு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது போன்ற வாசகங்களும் காட்டப்பட்டன.

அரசுக்கு எதிரான புரட்சி குழுக்கள், டிவி ஒளிபரப்பை சில நிமிடங்கள் முடக்கியதை அந்நாட்டு செய்தி நிறுவனங்களும் உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகிவருகிறது. இது குறித்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.