2010

2010

வடக்கு கிழக்கில் போரினால் 89 ஆயிரம் விதவைகள்!- பிரதி அமைச்சர்

Hizbullah M.L.A.Mவடக்கு கிழக்கில் யுத்தத்தினால் 89 ஆயிரம் பெண்கள் தங்கள் கணவரை இழந்து விதவைகளாகியுள்ளதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். அண்மையில் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கிழக்கில் 49 ஆயிரம் பெண்களும், வடக்கில் 40 ஆயிரம் பெண்களும் கணவரை இழந்துள்ளனர் என அவர் குறிப்பட்டுள்ளார்.

இதில் 25ஆயிரம் பெண்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவ்வாறு கணவரை இழந்த பெண்களில் 12ஆயிரம் பேர் 40 வயதிற்கும் குறைந்தவர்கள், 8ஆயிரம் பேர் குறைந்த பட்சம் மூன்று குழந்தைகளுடன் உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கரைச்சி பிரதேசசபை செயலாளர் பணியிலிருந்து இடைநிறுத்தம்.

கிளிநொச்சி மாவட்டம் கரைச்சிப் பிரதேசசபை செயலாளர் பே. குலேந்திரன் என்பவர் நேற்று வியாழக்கிழமை முதல் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியின் உத்தரவின் பேரிலேயே அவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாக நடவடிக்கைகளை துஸ்பிரயோகம் செய்தார் என்கிற குற்றச்சாட்டிலேயே அவர் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விடயம் தொடர்பாக வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பி.ஜோன்சன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

இது இவ்வாறிருக்க, போருக்குப்பின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்கள் பெருமளவில் மீள்குடியேற்றப்பட்டுள்ள நிலையில் மக்கள் தங்களின் பல்வேறு தேவைகளுக்காக அரசநிறுவனங்கள், திணைக்களங்களுக்க நாளாந்தம் செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளதால் அவ்வாறு செல்லும் போது  அவர்கள் அதிகாரிகளாலும், ஊழியர்களாலும் அலைக்கழிக்கப்படுவதாகவும் சில விடயங்களுக்காக சிலருக்கு இலஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

யாழ். மாவட்டத்தில் வெள்ள அனர்த்தங்களைத் தடுக்க அரச அதிபர் முன்கூட்டியே நடவடிக்கை!

Jaffna_Floodயாழ். மாவட்டத்தில் வெள்ள அபாயங்களைத் தடுப்பதற்கு யாழ். அரசஅதிபர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். ஏதிர்வரும் மாதங்களில் கடும்மழை பெய்ய விருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், யாழ். மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படக்கூடிய இடங்களை அடையாளம் கண்டு அறிக்கையிடுமாறு அவர் பிரதேசச் செயலர்களை பணித்துள்ளார்.

Jaffna_Floodவெள்ள பாதிப்புக்களிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கில் முன்கூட்டியே நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

வெள்ளப் பாதிப்புகளுக்குள்ளாகுமென எதிர்பார்க்கப்படுகின்ற கிராமசேவையாளர் பிரிவு, கிராமம், அவற்றின் சனத்தொகை, மக்கள் இடம்பெயர வேண்டி ஏற்பட்டால் அவர்களைத் தங்க வைக்க வேண்டிய இடங்கள், அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய வசதிகள் என்பன குறித்த விபரங்கள் திரட்டப்பட்டு அறிக்கைகள் தயாரிக்குமாறு அரசாங்க அதிபரால் கோரப்பட்டுள்ளது.

வயாவிளான் மகாவித்தியாலயம் ஜனவரிக்குப் பின்னரே பழைய இடத்தில் இயங்கும்.

Vayavilaan_Mahavidyalayamஉயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த வயாவிளான் மகாவித்தியாலயம் கடந்த செவ்வாய் கிழமை படையினரால் பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்படும் வைபவம் இடம்பெற்றிருந்த போதும் அப்பாடசாலைக் கட்டடங்களை புனரமைக்க வேண்டியிருப்பதால் அடுத்த வருடம் ஜனவரி மாதமே அது முழுமையாக கையளிக்கப்படும் என படைத்தரப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Vayavilaan_Mahavidyalayamகடந்த செவ்வாய் கிழமை வயாவிழான் பாடசாலை கையளிக்கப்படும் நிகழ்வு பெரியளவில் நடத்தப்பட்டது.  அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர். மாணவர்கள் உட்பட்ட பாடசாலை சமூகத்தினர், வடமாகாண ஆளுநர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும், அதிகாரிகள் பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். பாடசாலைத் தளபாடங்களும் அங்கு கொண்டு செல்லப்பட்டிருந்தன. எனினும் அடுத்த நாளே அப்பாடசாலை உரும்பிராயிலுள்ள அதன் தற்காலிக கட்டடத்தில் மீண்டும் இயங்குகின்றது.

 பாடசாலைக் கட்டடங்கள் புனரமைக்கப்பட வேண்டியிருந்தால் அவற்றைப் புனரமைத்து விட்டு ஜனவரி மாதமே அதனை ஆரமப்பிக்கும் நிகழ்வையும் நடத்தியிருக்கலாமே என அப்பாடசாலையின் பெற்றோர், மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

நீதிமன்றத்தை நாட ஜ.தே.கூ. முடிவு

இராணுவ நீதிமன்றத்தினால் குற்றவாளியாக காணப்பட்டவர் பாராளுமன்ற உறுப்புரிமையை இழக்க வேண்டி வரும் என்ற ஏற்பாடுகள் அரசியலமைப்பில் இல்லாமையால், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்புரிமையை பாதுகாத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடப்போவதாக அவர்தலைமை வகிக்கும் ஜனநாயக தேசியக் கூட்டணி தெரிவித்துள்ளது.

நாவல சோலிஸ் ஹோட்டலில் நேற்றுவியாழக்கிழமை நடைபெற்ற ஜனநாயக தேசிய கூட்டணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் அக் கட்சியின் பொதுச் செயலாளர் விஜித ஹேரத் எம்.பி.இது பற்றிய கருத்துக்களை வெளியிட்டார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்;

“இரண்டாவது இராணுவ நீதிமன்ற தீர்ப்புக்கு கையெழுத்திட்டு சரத் பொன்சேகாவுக்கு 30 மாத (இரண்டரை வருடங்கள்) கடூழியச் சிறைத் தண்டனையை ஜனாதிபதி உறுதி செய்துள்ளார். நாம் இந்த இராணுவ நீதிமன்றத்தையும், அதன் தீர்ப்பையும் ஏற்க தயாராக இல்லை. ஏனெனில் இது பக்கச் சார்பான தீர்ப்பு. நாம் ஏற்கனவே சரத் பொன்சேகாவுக்கு எதிரான முதலாவது இராணுவ நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு அக்டோபர் 8 ஆம் திகதி விசாரிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் இந்த இரண்டாவது இராணுவ நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும் விரைவில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்யவுள்ளோம். இராணுவ சட்டத்தின் 79 ஆவது சரத்தானது இராணுவ நீதிமன்ற தீர்ப்பை ஆட்சேபித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் செல்ல உரிமை இருப்பதாக விதைந்துரைக்கிறது. அதன் பிரகாரமே நாம் மேன்முறையீட்டு நீதிமன்றம் செல்கிறோம்.

இதேநேரம், சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்புரிமையைப் பொறுத்த வரையில், சிவில் நீதிமன்றத்தில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க முடியாதென அரசியலமைப்பில் கூறப்படுகிறது. எனினும் இராணுவ நீதிமன்றத்தினால் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவரது பாராளுமன்ற உரிமை பறிபோகும் என்று எங்கும் கூறப்படவில்லை. அந்த வகையில் நாம் இந்த இராணுவ நீதிமன்றத் தீர்ப்பை சிவில் சட்டத்தின் கீழ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆட்சேபனைக்குட்படுத்தி சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்புரிமையைப் பாதுகாத்துக்கொள்ளக் கூடிய தீர்ப்பொன்றை விரைவில் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறோம். நாம் இவ்விடயத்தில் அதிகபட்ச நீதிமன்ற நடவடிக்கைகளை எடுப்போம். சரத் பொன்சேகாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக இன, மத, குல பேதங்களின்றி அனைத்து மக்களும் அணிதிரள வேண்டும் என்றார்.

புனர்வாழ்வு பெற்ற 402 பேர் பெற்றோரிடம் நேற்று ஒப்படைப்பு

வவுனியா புனர்வாழ்வு நிலையங்களில் இருந்த விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளில் 151 பெண்கள் உள்ளிட்ட 402 பேர் நேற்று வியாழக்கிழமை காலை உறவினர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.யூ. குணசேகர, பிரதி அமைச்சர் விஜயமுனிசொய்ஸா, வன்னி பாதுகாப்புப்படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன, வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் கே. டி. தல்பதாது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

யுத்த காலத்தில் வன்னிப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா வந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு விசேட புனர்வாழ்வு அளிக்கப்படும். அவர்கள் சமூகத்தில் இணைந்து கொள்வதற்கு விடுவிக்கப் பட்டுள்ளனர் என பிரிகேடியர் ரணசிங்க தெரிவித்தார்.

2011 நவம்பர் 22இல் வரவு-செலவுதிட்டம்

2011 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 22 ஆம் திகதி நிதி அமைச்சர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, 2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, முதலாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 22 ஆம் திகதி நடைபெறும். இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 22 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. குழு நிலை விவாதம் நவம்பர் மாதம் 29ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடத்தப்பட உள்ளது. குழுநிலை விவாதத்திற்கான திகதி குறித்து கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை பூர்த்தி செய்யும் வகையில் 2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான உத்தேச மதிப்பீட்டு ஆலோசனைகளை முன்வைக்குமாறு சகல அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

சம்பிரதாய வரவு செலவுத் திட்டம் தயாரிக்கும், அதனை நடைமுறைப்படுத்தும் கட்டமைப்பிலிருந்து விலகி 2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனைகளை முன்வைக்குமாறும் அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இது தவிர நாடு பூராவும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பொருளாதார உட்கட்டமைப்பு வளங்கள் மற்றும் கைத்தொழிற்துறை அபிவிருத்தி உள்ளிட்ட சகல செயற் திட்டங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் அடுத்த நிதியாண்டிற்கான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி திறைசேரி அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். இதனடிப்படையில் 2011 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அயோத்தி நிலம் 3 தரப்புக்கு சொந்தம்: அலகாபாத் நீதிமன்று பரபரப்பு தீர்ப்பு

அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி பகுதியில் அமைந்துள்ள இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் நேற்று அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச் தீர்ப்பு வழங்கியது. அயோத்தி நிலம் மூன்று தரப்பினருக்கு சொந்தம் என்றும், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய 3 மாதகால அவகாசம் உள்ளது என்றும் அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் சர்ச்சைக்குரிய நிலம் 2.5 ஏக்கரை மூன்றாக பிரிக்கப்படும் வரை தற்போதயை நிலை தொடரும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் குறித்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள், சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள ராமர் சிலைகள் தற்போதைக்கு அகற்றப்படாது என்று தெரிவித்துள்ளதாக சட்டத்தரணி ரவிசங்கர் தெரிவித்துள்ளார். ராமர் சிலைகள் அமைந்துள்ள பகுதியே இந்துக்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மூன்றில் ஒரு பங்கு நிலம் பாபர் மசூதி கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். மற்றொரு பகுதி நிர்மோகி அகாரா அமைப்புக்கு தர வேண்டும். எஞ்சிய இன்னொரு பகுதி புதிதாக அமைக்கப்படும் அறக்கட்டளைக்கு தரப்பட வேண்டும்.

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் மாலை 5 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார்.அப்போது அயோத்தி வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு யாருக்கும் வெற்றியல்ல தோல்வியுமல்ல என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அயோத்தி வழக்கில் அலகாபாத் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை என்றும், அயோத்தி வழக்கில் அலகாபாத் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்போவதாகவும் பாபர் மசூதி கமிட்டி தெரிவித்துள்ளது.

டில்லியிலிருந்து சுமார் 550 கி.மீ. தொலைவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது அயோத்தி நகர். அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி பகுதியில் அமைந்துள்ள சுமார் இரண்டரை ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பதில் இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகளுக்கு இடையே சிக்கல் நீடித்து வருகிறது.

அயோத்தி விவகாரம் தொடர்பாக அனைத்து வழக்குகளும் இணைக்கப்பட்டு அவற்றை விசாரிக்க அலகாபாத் உயர் நீதிமன்ற சிறப்பு பெஞ்ச் அமைக்கப்பட்டது. 60 ஆண்டுகளாக நீடித்து வரும் வழக்கில் அலகாபாத் மேல் நீதிமன்று லக்னோ பெஞ்ச் தனது விசாரணையை நிறைவு செய்து 24.09.2010 அன்று தீர்ப்பு என்று அறிவித்தது.

அலகாபாத் மேல் நீதிமன்று லக்னோ பெஞ்ச் தீர்ப்பு வழங்குவதை ஒத்திவைக்க வேண்டும் என்றும், நீதிமன்றத்துக்கு வெளியே சமாதானமாக செல்ல முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் திரிபாதி என்ற ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வழக்கு தொடர்ந்தார். திரிபாதியின் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தீர்ப்பை ஒத்திவைக்கக் கோரிய மனுவை விசாரிப்பதற்காக தீர்ப்பு வெளியிட ஒரு வாரம் தடை விதித்தது.

இந்தத் தடை உத்தரவை 28.09.2010 அன்று விலக்கிக் கொண்டதோடு ஒத்திவைக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அயோத்தி வழக்கில் 30.09.2010 அன்று பிற்பகல் 3.30 மணி அளவில் தீர்ப்பு வழங்கப்படுமென அலகாபாத் மேல்நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரி ஹரிசங்கர் துபே கூறினார். 30.09.2010 அன்று பிற்பகல் 3.30 மணி அளவில் நீதிபதிகள் எஸ்.யு.கான், சுதிர் அகர்வால், டி.வி. சர்மா ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்ச் தீர்ப்பை அறிவித்தது.

தமிழர் தகவல் நடுவம் திறந்த கொள்கையையும் வெளிப்படைத் தன்மையையும் கடைப்பிடிக்க வேண்டும்! : த ஜெயபாலன்

Varathakumar_V_TICtic_logoஎனது மனதின் வேதனை ஒன்றை இங்கு நான் கூறியாக வேண்டும். இது எனது வேதனை மட்டுமல்ல இலங்கை வாழ்மக்களின்பால் மானசீகமாகவே அக்கறை கொண்டவர்களின் வேதனையும் தான். கடந்த 30 ஆண்டுகளின் அவலங்களுக்கும் தேக்கத்திற்கும் பின்னரும் எந்த அரசியல் நடவடிக்கைகள் இந்த இழிநிலைக்கு எமது நாட்டை இட்டுச் சென்றனவோ, அதே பாதையில்த்தான் இப்போதும் செல்வதுபோல் தெரிகிறது. அதே ஓட்டை விழுந்த கப்பலில்தான் அரசியல் பயணங்கள் தொடர்வதுபோல் தெரிகிறது. அப்படியானால் எம் இனிய மக்களுக்கு என்றுமே விமோசனம் இல்லையா? என கேட்கத் தோன்றுகிறது? இந்த நிலைமையை இந்த நிகழ்ச்சி (சுவிஸில் இடம்பெற்ற தமிழ் பேசும் கட்சிகளின் மாநாடு.) ஓரளவாவது மாற்றியமைக்க வேண்டும். வாயளவில் அல்லாது செயலளவில் ஒற்றுமையும் புரிந்துணர்வும் வேண்டும். ஒரு புதிய பரிணாமம், ஒரு புதிய பாதை திறக்கப்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும். போர் முடிவுற்ற சூழ்நிலையில் நாம் சரியாகப் பயணிக்க வேண்டும் என்பதே இலங்கை மக்கள் அனைவரது சுபீட்சத்திலும் அக்கறை கொண்டவர்களின் ஆதங்கமாகும்.

வரதகுமார் – நிறைவேற்று செயலர். தமிழர் தகவல் நடுவம் மீட்சி: இதழ் 13, நவம்பர் 2009

”Role of Diaspora in renewing hope and rebuilding lives of the war affected communities in Sri Lanka: Some thoughts and Action. – இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் வாழ்வை மீள்கட்டமைப்பதிலும், மீள நம்பிக்கையூட்டுவதிலும் புலம்பெயர்ந்தவர்களின் பாத்திரம்: சில சிந்தனைகளும் செயற்பாடுகளும்” என்ற தலைப்பிலான சந்திப்பு ஒன்றினை தமிழர் தகவல் நடுவம் ஒக்ரோபர் 02 2010ல் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வில் இலங்கையில் இருந்து தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழ் சமூகங்களைச் சேர்ந்த கல்வியியலாளர்களும் மனித உரிமைவாதிகளும் கலந்துகொள்கின்றனர். இவர்கள் செப்ரம்பர் 25 2010 முதல் ”Post-war challenges facing Tamil speaking peoples of Sri Lanka. – இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் போருக்குப் பின் எதிர்கொள்ளும் சவால்கள்” என்ற தலைப்பில் பலசுற்று கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட தகவலுடன் இந்த அழைப்பை விடுத்துள்ள தமிழர் தகவல் நடுவம் இதனை தாங்கள் மேற்கொள்ளளும் பல்வேறு முன்முயற்சிகளில் ஒன்று என்று மட்டும் குறிப்பிட்டு உள்ளது. தமிழர் தகவல் நடுவம் கடந்த காலங்களில் பல்வேறு அரசியல் சந்திப்புக்களையும் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டு வந்தபோதும் மே 18 2009ற்குப் பின் முரண்பட்ட அரசியல் சக்திகளையும் உள்வாங்கி செயற்பட வேண்டியதன் தேவையை வலியுறுத்தி வருகின்றது. இதுவிடயத்தில் பல்வேறு முன்முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும் அவை காத்திரமான பலனை அளிக்கவில்லை என்பதே உண்மை. ஆனாலும் உரையாடுவதும் விவாதிப்பதும் ஆரோக்கியமானதே. அதற்கான தளத்தை தமிழர் தகவல் நடுவம் பேணி வருகின்றது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் இருந்து தமிழர் தகவல் நடுவம் அதனுடன் தன்னையும் பின்னிப் பிணைத்து வந்துள்ளது. அதனால் தமிழர் தகவல் நடுவம் பற்றிய ஆய்வும் மதிப்பீடும் அவசியமானது. ஆனால் இக்கட்டுரையானது தமிழர் தகவல் நடுவத்தின் அண்மைக் காலத்தைய சில நடவடிக்கைகளை மட்டுமே கவனத்திற்கொள்கிறது.

செப்ரம்பர் 25, 2010 முதல் நடாதத்தப்படுகின்ற சந்திப்பு தமிழர் தகவல் நடுவத்தின் பல்வேறு முன்முயற்சிகளில் ஒன்றல்ல. இது குறிப்பாக சூரிச் இல் 2009 நவம்பர் 19 முதல் 22 வரை நடைபெற்ற தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் சந்திப்பின் தொடர்ச்சியே. அக்கூட்டத்தின் மறைமுகமான நிகழ்ச்சி நிரல் மேற்கத்தைய அரசுகளின் ‘ரெஜீம் சேன்ஜ்’யை மையப்படுத்தியே இருந்தது. ராஜபக்ச சகோதரர்களின் ஆட்சியை மாற்றியமைப்பதன் பின்னணியில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்காக தமிழ்பேசும் சமூகங்களை ஒருகட்டமைப்பினுள் கொண்டு வந்து ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் ராஜபக்ச ஆட்சிக்கு எதிராக நிறுத்த முற்பட்டனர். ஆனால் தமிழ்பேசும் சமூகங்களின் பிரதிநிதிகளை குறைந்தபட்ச புரிந்துணர்வு ஒன்றுக்கு கொண்டு வந்து அரசியல் தீர்வுக்கு அழுத்தம் கொடுப்பது என்பது வெளிப்படையான நிகழ்ச்சி நிரலாக தமிழர் தகவல் நடுவத்தினால் முன்வைக்கப்பட்டது.

இந்த மாநாட்டுக்கு ஏற்பட்ட 100 000 பவுண் வரையான செலவையும் – ”இதனை நடாத்துவதற்கான பெரும்பாலான செலவினை சுவிஸ் அரசாங்கமும், IWGயும், Essex பல்கலைக்கழகத்தின் மனித உரிமை மையமும் பகிர்ந்து கொண்டன” என வி வரதகுமார் தங்கள் உத்தியோகபூர்வ ஏடான மீட்சியில் தெரிவித்து இருந்தார். International Working Group on Sri Lanka என்ற அமைப்பே இம்மாநாட்டை ஒழுங்கு செய்வதாகவும்  Initative on Conflict Prevention through Quiet Diplomacy, தமிழர் தகவல் நடுவம் ஆகியனவே இம்மாநாட்டின் ஏற்பாடுகளைச் செய்வதாக அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

சூரிச் மாநாடு மாநாடு பற்றிய மேலதிக வாசிப்பிற்கு:

லண்டனில்? சூரிச்சில்? இரகசிய மாநாடு??

தமிழ் பேசும் கட்சிகளின் மாநாட்டின் திரைக்குப் பின்னால்: த ஜெயபாலன்

தமிழ் பேசும் கட்சிகளின் திசைமாறிய மாநாடு : த ஜெயபாலன்

நடந்தது என்ன? சூரிச் மாநாடும் எழுந்த விமர்சனங்களும்! : மீட்சி

கடந்த ஆண்டு நவம்பர் 19 முதல் 22 வரை நடைபெற்ற சூரிச் மாநாடு பற்றி வி வரதகுமார் வருமாறு தெரிவித்து இருந்தார். ”பங்குபெற்றோர் யாவரும் ஒரு நியாயமான, நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றிக்காக ஒற்றுமையுடனும், ஒன்றுபட்ட நோக்குடனும் உழைப்பது என உறுதி பூண்டனர். தம்மிடையே பேசி முக்கியமான விளக்கங்களைப் பெற்று ஒரு பொது நோக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர். அத்துடன் தமிழ் பேசும் மக்கள் ஒரு சமாதானமான செழிப்பான சமூகமாக உருவாவதற்குத் தேவையான அவர்களது உரிமைகளை பெறவதற்காகத் தொடர்ந்தும் இப்டியான கலந்துரையாடலில் பங்கெடுத்துக் கொள்வதெனத் தீர்மானம் எடுத்துக் கொண்டனர்.”

ஆனால் அடுத்த ஒரு ஆண்டுக்குள் அவ்வாறான ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்துள்ள தமிழர் தகவல் நடுவம் முன்னைய சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ்பேசும் சமூகங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகளுக்கு இவ்வாறான ஒரு கலந்துரையாடல் இடம்பெறுவதை அறிவிக்கவில்லை. இதுதொடர்பாக இலங்கையில் உள்ள தமிழ்பேசும் சமூகங்களின் அரசியல் கட்சிகளோடு தேசம்நெற் தொடர்புகொண்ட போது அவர்கள் இதுபற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை.

இப்போதைய கலந்துரையாடல் ‘Post-war challenges facing Tamil speaking peoples of Sri Lanka.-  இலங்கைத் தமிழ்பேசும் மக்கள் போருக்குப் பின் எதிர்கொள்ளும் சவால்கள்’ என்ற அடிப்படையில் இடம்பெற்றுள்ளது. இக்கலந்துரையாடலுக்கு இலங்கையில் இருந்தும் இலங்கைக்கு வெளியே இருந்தும் கல்வியியலாளர்களும் மனித உரிமைவாதிகளும் அழைக்கப்பட்டு உள்ளனர். சந்திரஹாசன், பாக்கியசோதி சரவணமுத்து, சீலன் கதிர்காமர், ராஜன் பிலிப்ஸ், பேராசிரியர் சிற்றம்பலம் உட்பட இன்னும் சிலரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ள வந்துள்ளர். இவர்கள் பெரும்பாலும் மனித உரிமைகள் அமைப்புகள் உட்பட்ட அரசுசாரா பொது அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். இக்கலந்துரையாடலும் முன்னைய சூரிச் மாநாடு போன்று பெரும் நிதிப் பங்களிப்பின்றி மேற்கொண்டிருக்க முடியாதாகையால் தமிழர் தகவல் நடுவம் இச்சந்திப்பின் பின்னணியில் உள்ளவர்களை வெளிப்படுத்துவதன் மூலம் மட்டுமே இச்சந்திப்புக்களின் உண்மையான நோக்கங்களை தமிழ் மக்கள் அறிந்துகொள்ள முடியும்.

தமிழர் தகவல் நடுவம் எப்போதும் அரசு மற்றும் கட்சிகள் பொது அமைப்புகளிடம் திறந்த கொள்கையையும் வெளிப்படைத் தன்மையையும் வலியுறுத்தி வருகின்றது. ஆனால் இவற்றை தமிழர் தகவல் நடுவம் கடைப்பிடிப்பதில் எப்போதும் தயக்கம் காட்டியே வந்துள்ளது. சூரிச் மாநாட்டிலும் அதில் கலந்துகொண்ட கட்சிகள் தேசம்நெற் இணையத்தைப் பாரத்தே அம்மாநாடு பற்றிய உள் தகவல்களைத் தெரிந்துகொள்ள வேண்டி இருந்தது.

புலம்பெயர்ந்த மக்கள் இலங்கையின் அரசியல் நடவடிக்கைகளில் எழுந்தமானமாக நேரடியாக ஈடுபடுவதை எப்போதும் விமர்சிக்கும் தமிழர் தகவல் நடுவம், அங்குள்ள தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடாகவே புலம்பெயர்ந்த தமிழர்கள் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளது. புலம்பெயர்ந்த தமிழர்கள் நேரடியாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தமிழ் அரசியல் பிரதிநிதிகளை கீழ்மைப்படுத்தும் என்றும் தமிழர் தகவல் நடுவம் தெரிவித்து வந்துள்ளது. ஆனால் இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் முக்கிய சந்திப்பு ஒன்றினை மேற்கொள்ளும் தமிழர் தகவல் நடுவம் அது பற்றி எவ்விதமான விடயத்தையும் இதுதொடர்பாக மாநாட்டை மேற்கொண்ட தமிழ் கட்சிகளுக்கு அறிவிக்கவில்லை.

தமிழர் தகவல் நடுவம் பற்றிய சந்தேகப் பார்வையும் நம்பிக்கையின்மையும் ஏற்படுவதற்கு இவ்வாறான இறுக்கமான மூடிய வெளிப்படையற்ற நகர்வுகளே காரணமாக இருந்துள்ளது. அதனாலேயே சூரிச் மாநாட்டில் தமிழர் தகவல் நடுவத்தினால் குறிப்பாக எதனையும் சாதிக்க முடியவில்லை. இப்போது சூரிச் மாநாடு கிடப்பில் போடப்பட்டு லண்டன் மாநாடு. இதுவே கடந்த காலங்களில் தமிழர் தகவல் நடுவத்தின் செயற்பாட்டு போக்காக இருந்து வருகின்றது.

2009 மே 18க்குப் பின் தமிழர் தகவல் நடுவம் வேறு வேறு முயற்சிகளில் இறங்கியது. அதற்காக வேறு வேறு சந்திப்புக்களையும் ஏற்பாடு செய்தது. இந்த சந்திப்புக்களின் நோக்கங்களில் அரசியல் ரீதியான முரண்பட்ட நலன்களும் இருந்தது. அப்படி இருக்கையில் ஒரே குழுவில் செயற்பட்டவர்களுக்கு இடையேயே ஒளிவுமறைவுகள் மலிந்து காணப்பட்டது. அதனால் தமிழர் தகவல் நடுவத்தினை எல்லோரும் சந்தேகப் பார்வையுடன் பார்க்கின்ற நிலை உருவானது.

தமிழ் மக்களிடையே புரிந்தணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அரசியல் ரீதியாக முரண்பட்டவர்கள் அனைவரையும் அழைத்து ஒரு சந்திப்பு நடந்து கொண்டு இருக்கும்; அதே நேரம் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை மட்டும் அழைத்து மற்றும்மொரு சந்திப்பு தனியாக நடைபெறும். பின்னர் இவர்கள் அனைவருக்கும் எதுவும் தெரியாத வகையில் அரசசார்பற்ற அமைப்புகளை வரவழைத்து மற்றுமொரு சந்திப்பு நடைபெறும். தமிழர் தகவல் நடுவம் தன்னுடைய தேவைக்கும் வசதிக்கும் ஏற்ப தமிழ் அரசியல் ஆர்வலர்களை பிரித்தாளுகின்ற தந்திரத்தை நீண்ட நாட்களாகவே கொண்டுள்ளது. தமிழர் தகவல் நடுவத்தின் சில கூட்டங்களுக்கு தொடர்ச்சியாகச் செல்லும் ஒருவர் இதனை மிக இலகுவில் கண்டுகொள்ள முடியும். இது தமிழர் தகவல் நடுவத்தின் மிகப் பெரும் பலவீனமாகவும் தமிழர் தகவல் நடுவத்தினால் எதனையும் முழுமையாகச் சாதிக்க முடியாமல் போவதற்கான காரணமாகவும் உள்ளது.

இக்கட்டுரையில் ஆரம்பத்திலேயே வி வரதகுமாருடைய குறிப்பில் உள்ள ”கடந்த 30 ஆண்டுகளின் அவலங்களுக்கும் தேக்கத்திற்கும் பின்னரும் எந்த அரசியல் நடவடிக்கைகள் இந்த இழிநிலைக்கு எமது நாட்டை இட்டுச் சென்றனவோ, அதே பாதையில்த்தான் இப்போதும் செல்வதுபோல் தெரிகிறது. அதே ஓட்டை விழுந்த கப்பலில்தான் அரசியல் பயணங்கள் தொடர்வதுபோல் தெரிகிறது.” என்ற குறிப்பு தமிழர் தகவல் நடுவத்திற்கும் மிகப் பொருத்தமானதே. இந்த ஓட்டை வீழ்ந்த கப்பலில் சூரிச் என்றும் லண்டன் என்றும் வி வரதகுமார் நீண்ட காலம் பயணிக்க முடியாது. இந்தக் கப்பலை நம்பியே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உட்பட முக்கிய போராளிகள் காத்திருந்ததாக தன்னை வெளிப்படுத்த விரும்பாத முக்கிய அரசியல்வாதி ஒருவர் சூரிச் மாநாட்டில் சந்தித்த போது தேசம்நெற்க்கு தெரிவித்து இருந்தார். ஆகவே தமிழர் தகவல் நடுவத்தின் கடந்த 30 ஆண்டுகால அரசியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதில் உள்ள ஓட்டைகள் அடைக்க முடிந்தால் அடைக்கப்பட வேண்டும். முடியாத நிலையில் அக்கப்பல் மூழ்குவது தவிர்க்க முடியாதது.

ஜனாதிபதிக்கு நன்றி…- அனோமா பொன்சேகா

anoma-fonseka.jpgஇலங் கையில் 30 வருடகால தீவிரவாதத்தை முறியடித்த வெற்றி நாயகனுக்கு ஜனாதிபதி கொடுத்த பாரிய பரிசே கடூழிய சிறைதண்டனை எனவும், அதற்கு தான் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அனோமா பொன்சேக்கா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்பட்ட தண்டனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதெனவும், தீர்ப்பை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதிக்கு நன்றிகூறுவதாகவும் தீர்ப்பை ஏற்றுக் கொண்டதன் மூலம் ஜனாதிபதியின் சுயரூபம் நன்கு தெளிவாகியுள்ளதெனவும் அவர் கூறியுள்ளார்.  இந்த முடிவினால் தாம் தளர்ந்துவிடவில்லை. தொடர்ந்தும் போராடுவோம். இதுதான் ஆரம்பம் இந்த போராட்டத்தில் நாம் பின்வாங்கப்போவதில்லை.  உண்மையான இராணுவ வீரர்களிடம் இந்த தீர்ப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டாமென கேட்டுக்கொள்கிறோம் என அனோமா பொன்சேகா தெரிவித்தார்