கிளிநொச்சி மாவட்டம் கரைச்சிப் பிரதேசசபை செயலாளர் பே. குலேந்திரன் என்பவர் நேற்று வியாழக்கிழமை முதல் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியின் உத்தரவின் பேரிலேயே அவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாக நடவடிக்கைகளை துஸ்பிரயோகம் செய்தார் என்கிற குற்றச்சாட்டிலேயே அவர் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விடயம் தொடர்பாக வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பி.ஜோன்சன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.
இது இவ்வாறிருக்க, போருக்குப்பின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்கள் பெருமளவில் மீள்குடியேற்றப்பட்டுள்ள நிலையில் மக்கள் தங்களின் பல்வேறு தேவைகளுக்காக அரசநிறுவனங்கள், திணைக்களங்களுக்க நாளாந்தம் செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளதால் அவ்வாறு செல்லும் போது அவர்கள் அதிகாரிகளாலும், ஊழியர்களாலும் அலைக்கழிக்கப்படுவதாகவும் சில விடயங்களுக்காக சிலருக்கு இலஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.