2010

2010

மக்களும் நாமே! அரசாங்கமும் நாமே! : யாழ் வட்டுக்கோட்டை – துணைவி (சங்கரத்தை) மாதர் சங்கத்தில் ஒரு சந்திப்பு

Sangarathai_Mathar_Sangamதுணைவி (சங்கரத்தை) மாதர் சங்கம்
கலந்துரையாடல் மினிட்ஸ் (Minutes)
இடம்:  துணைவி-சங்கரத்தை அபிவிருத்தி மையம்
திகதி: நேரம் – 10 புரட்டாசி 2010 – மாலை 3.30

நோக்கம்:

துணவி – சங்கரத்தை வளர்ச்சியையும் மக்களின் எதிர்பார்ப்பையும் ஒன்றுகூட்டல்.

பொது அடிப்படையின் விளக்கம்

நாம் செய்யும் வேலைக்கு உடல், மனம், உள்ளம் /ஆன்மா போல மூன்று வகையான விளைவுகள் உண்டு. அவை
1. பணம் பொருள் சம்பந்தமான விளைவுகள் (Money)
2. மனிதர்/மக்கள் சம்பந்தமான விளைவுகள (People)
3. சொந்தம் /ஈடுபாடு (Ownership)
இவற்றில் முதலாவது ரகம் வெளிப்படையாக தெரியும் விளைவுகள். (Objective Outcomes)
இரண்டாவது ரகம் – பதவியும் நல்லெண்ணமும்
மூன்றாவது – நாம் அதுவாகி அமைப்பை நாமே இயக்கிறோம்.

காசும் பதவியும் மற்றவர்களது கையில் இருந்து வரும். ஆனால் சொந்தம் எங்களது கட்டுப்பாட்டில் எங்களுக்குள் இருந்து எங்களை இயக்குகிறது.

ஆகவே நாம் உண்மையாக வேலை செய்தால் கண்ணுக்குத் தெரியும் பணமும் பதவியும் கிடைக்காவிட்டாலும்கூட ஈடுபாடு வளர்ந்து சொந்தமாகி, நாம் அதுவாகி முழுமையை உணர்கிறோம். சுதந்திரமாக செயற்படுகிறோம். சொந்தம் உள்ள எல்லாரும் இயற்கையாக ஒருவராகிறோம்.

அந்த அடிப்படையில், மக்களும் நாமே அரசாங்கமும் நாமே.

நடந்தது:

வருகை தந்திருந்த மாதர்கள் இரண்டாகப் பிரிந்து ஒரு குழு மக்கள் என்றும், மற்றப் பகுதி அரசாங்கம் என்றும் பதவி எடுத்தோம்.
மக்கள் பகுதி தங்கள் பிரச்சனைகளைச் சொல்ல, அரசாங்கப் பகுதி தமக்குத் தெரிந்த ஆலோசணைகளை பகிர்ந்தார்கள்
(i)வேலை பற்றாக் குறை
(ii)வேலைப் பயிற்சி பற்றாக் குறை
(iii)அரசாங்க வேலைகளிலும் தொழிற் பயிற்சியிலும் சம சந்தர்ப்பம் தெரியாத அவநம்பிக்கை. இது லஞ்சம் காரணமாகவும் இருக்கலாமோ என்ற சந்தேகம்
(iv)அடிப்படை வீட்டு வசதிகள் இல்லாமை
(v)இளம் பெண்களுக்கு வேண்டிய பாதுகாப்புகள்

வேலை பற்றாக் குறை:

Sangarathai_Mathar_Sangamஎங்கள் சுற்றாடலில் உள்ள வேலை வாய்ப்புகளை எப்படி அடையாளம் கண்டு அவற்றை பாவிக்க வேலை இல்லாதவர்கள் ஊக்கம் எடுப்பதுடன் மாதர் சங்கம் மூலம் தங்கள் விண்ணப்பங்களை நல்ல தராதரத்தில் தயாரிக்க ஊக்கமெடுக்கலாம் என்று ஆராய்ந்தோம்.

எங்கள் சுற்றாடலில் வேலை வாய்ப்புகள் போதிய அளவு இல்லாவிட்டால் நாம் வேலை வாய்ப்புகள் இருக்கும் இடங்களை நாடிப் போக வேண்டும் என்று ஆராய்ந்தோம்.

ஒரு பெண் தான் தோட்டவேலை செய்வதாகவும் அதற்கு தனக்கு கிடைக்கும் கூலி ஒரு நாளைக்கு ரூபா 150 மட்டுமே என்றார். கிடைக்கும் வருமானம் வீட்டுச் செலவிற்கு போதாது என்றார். எமது கேள்விக்கு அவர் சொன்னார் முன்பு அதைவிட கூடுதலாக உழைக்கவில்லை என்று. அப்படியென்றால் அவர் வேறு வேலை செய்பவர்களுடனோ அல்லது வேறு இடத்தில் அதே வேலை செய்பவர்களுடனோ தன்னை ஒப்பிட்டு பார்க்கிறார் என்று கூறியதை ஏற்றுக் கொண்டார். மனம்தான் அவரது கவலைக்கு முக்கிய காரணம் என்று ஆராய்ந்தோம்.

சிலர் கூடிய ஊதியத்திற்காக, வேலைசெய்ய தொடங்கமுன் அதற்குரிய படிப்பும் பயிற்சியும் அவர்கள் கற்று வந்தால்தான் வேலை கிடைக்கும் என்ற நிபந்தனை இருந்தால் அவர்களுக்கு கூடிய கூலி கிடைப்பது நியாயம் என்று ஒத்துக் கொண்டார். அது கஞ்சிக்கு உப்பில்லை என அழுபவரின் கஷ்டமும் பாலுக்கு சீனி இல்லை என்று அழுபவரின் நோவும் ஒன்றே என்ற தத்துவத்தின் அடிப்படையில் பார்த்தால் நாம் எமது இயற்கையான சூழ்நிலையில் இருந்தால் இப்படியான நோ, மாயை என்பது தெரியும் என்று கதைத்தோம். இறுதியில் நாம் எமது மனத்துடன் மட்டுமே வாழ வேண்டும் என்பதால் இந்த மனப்பக்குவம் எமக்கு நிம்மதியான வாழ்க்கையை காட்டும் என்றோம்.

வேலைப் பயிற்சி பற்றாக் குறை:

தற்போதைய சூழ்நிலையில் இருக்கும் வேலைகள் கிடைக்க தேவையான பயிற்சிகளைப் பெறுவதற்கு மாதர் சங்கம் மூலம் உதவ மாதர் சங்கத்தில் ஒரு குழு அமைத்து அவர்களுக்கு வேண்டிய பயிற்சியை கொடுக்க வேண்டும் என முடிவு செய்தோம்.

ஒரே மாதிரியான தொழிலில் ஈடுபட்டவர்கள் ஒன்றுகூடி தங்கள் அனுபவங்களைப் பகிர்வதுடன் பொதுவான அமைப்பின்மூலம் பொது நம்பிக்கையை வளர்த்து பலன்பெற ஊக்குவித்தோம்.

Sangarathai_MS_Nurseஇளம்பெண் ஒருவர் தாதி பயிற்சிக்கு இடம் கிடைக்கவில்லை என்றாலும் அந்த அனுபவம் தனக்கு திருப்தியாக உள்ளது என்று சொன்னதை நல்ல வழி என்று மெச்சினோம். அந்த அனுபவம் அடுத்த முயற்சிக்கு உதவும் என்று ஊக்குவித்தோம். அதாவது, உண்மையாக எமக்கு இயலுமானதை நாம் செய்யும்போது, அந்த முயற்சி நிச்சயமாக பலனளிக்கும். இதில் அதி உயர்ந்த பலன் சொந்தம்/பங்களிப்பு. அது சுதந்திரமாக இயக்கும் சக்தி. எங்கும் எப்பவும் வேலை செய்யும்.

இந்த அடிப்படையில், நாம் செய்யும் உண்மையான ஒவ்வொரு வேலைக்கும் பலனுண்டு.

சம சந்தர்ப்பம்:

வேலை பெறுவதற்கும், வேலைப்பயிற்சிக்கு இடம் பெறுவதற்கும் லஞ்சம் ஒரு முக்கிய தடையாக உள்ளது என்ற கருத்தை ஒரு இளம் பெண் முன் வைத்தார். அதற்கு பதில் அளிக்கையில் நாம் கூறியது –
நாம் முதலில் எங்களில் என்ன திருத்தம் செய்ய முடியும் என்று பார்த்தால் அது எங்களது வைராக்கியத்தை பலப்படுத்தும். மற்றவர்களில் குறை கண்டால் அந்தக் குறையை நாம் திருத்தக்கூடியதாக இருக்க வேண்டும் அல்லது அதனால் எங்களுக்கு வந்த இழப்பிற்கு / நோவிற்கு எங்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும். இரண்டும் இல்லாமல், குற்றம் காண வேண்டிய பதவி பொறுப்பும் இல்லாமல் குறை கண்டால் அது எங்கள் மனத்தில் தோல்வி மனப்பான்மையை வளர்க்கும் சாத்திய கூறுகள் அதிகம். அத்துடன் எங்களால் உணர்வுமூலம் திருத்தக்கூடியவர்கள் மட்டுமே எங்கள் சொந்தம். மற்றோர் பிறத்தியர். அவர்களுடன் நாம் பொது நியதிப்படி உண்மையாக நடந்ததை (Facts) வைத்து சரி பிழை கணிக்க வேண்டும். இந்த லஞ்சக் குற்றச்சாட்டு எவ்வகை?

இன்னுமொரு இளம்பெண் இவ்விஷயமாக சொன்னார் – லஞ்சம் வாங்குவது உண்டென்றாலும் – மக்கள் திறமை மூலம் மட்டுமே அந்த சந்தர்ப்பங்களைப் பாவித்தால் அது எங்களைத் தாக்காது என்று. லஞ்சம் வேலை விஷயத்தில் பிழை போல – நிவாரணம் எடுத்து அதற்காக நாம் எம்மால் இயலுமானதை பொது நலனுக்கு செய்யாவிட்டால், அதுவும் லஞ்சம்தான். ஏனெனில், நிவாரணம் பொது நலனில் அதிக ஈடுபாடு உள்ளவர்களின் பிரதிபலிப்பு.

நிவாரணத்தை ஏற்றுக் கொள்பவர்கள் நிவாரணம் கொடுப்பவர்களில் நம்பிக்கை வைத்திருந்தால் அவர்கள் ஒரு குடும்பத்தை / சமூகத்தைச் சார்ந்தவர்களாகிறார்கள். ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர்கள் உணர்வால் பிணைக்கப்பட்டவர்கள். ஆகவே உணர்வுடன் நிவாரணம் ஏற்றுக் கொள்பவர்கள் நிவாரணம் கொடுப்பவர்களுடன் இணைகிறார்கள். அதேபோல் நிவாரணம் கொடுப்பவர்களும் நிவாரணம் கொடுக்கப்படுபவர்களும் தங்களில் ஒரு பகுதி என்ற உணர்வுடன் மட்டுமே கொடுத்தால் நிவாரணம் பெறுபவர்களது கஷ்டம் நிவாரணம் கொடுப்பவர்கள் பட்ட கஷ்டம் ஆகிறது. இருவர் ஒருவர் ஆகின்றனர்

முதலில் உணர்வு இல்லாவிட்டாலும் அறிவுமுலம் யோசித்து, பொதுக் கொள்கை அடிப்படையில் கணித்து செயல்படும்பொழுது கொடுக்கும்/கிடைக்கும் காசு/பொருள் இரண்டாம்பட்சமாகி கொடுப்பவர் முதலாம்பட்சமாகத் தொடங்க நம்பிக்கை உருவாகிறது. நம்பிக்கை உணர்வாகிறது. உணர்வு இருபக்கத்தையும் ஒருவராக்கி ஒருவர் மற்றவருக்கு கடனாளியாகாமல் பாதுகாக்கும். கொடுப்பவர் பதவி போன்ற பலனுக்காகவும் வாங்குபவர் பணம்போன்ற பலனுக்காகவும் ஏற்றுக் கொண்டால் அது ஏற்ற தாழ்வை வளர்த்து கெடுதலை உருவாக்கும். ஒருவிதமான தாக்கம் இன்னொருவிதமான தாக்கமாக உருமாறும். அது சமுக வளர்ச்சியின் எதிரி.

அடிப்படை வீட்டு வசதிகள்:

இந்த நிவாரண கொடுக்கல்-வாங்கல் பிரச்சனை எங்கள் துணைவி-சங்கரத்தையிலும் நடந்தபடியால் பலர் வீடு இருந்தும் இல்லாத மன நிலையில் உள்ளனர். மேலும், கொடுப்பவர்களது உணர்வு பற்றாமையால், வீடுகளில் தண்ணீர் மலசலகூட வசதிகள் முன்போடப் படவில்லை.

நிவாரணம் கொடுப்பவர்களது அடிமட்ட வீட்டின் தன்மைகளும் நிவாரணம் வாங்குபவர்களின் அடிமட்ட வீட்டின் தன்மைகளும் ஒன்றாக இருந்திருந்தால் இந்தப் பிரச்சனை வந்திருக்காது. உருவங்கள் வேறாக இருக்கலாம் – ஒன்று கல் வீடு, மற்றது ஓலைக் குடுசை-. ஆனால் சுத்தம் ஒரு தராதரமாக இருக்க முடியும். அடிப்படை கலாச்சாரத்துடன் எடுக்காவிட்டால், பீத்தல் பறங்கி மாதிரி, கொச்சைத் தமிழ்போல அங்குமில்லாமல் இங்குமில்லாமல் அமையும்.

ஆகவே குடும்ப வீட்டின் நல்ல தன்மைகளை முதலில் வளம்படுத்த முடிவு செய்தோம். அதில் முன்னேற்றம் காட்டுபவர்களுக்கும் அதற்காக நிவாரணம் கொடுப்பவர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.

வறுமையை மாத்திரம் பார்த்துக் கணக்கிட்டால், ஏற்கனவே இன, சாதி அடிப்படையில் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் இன்னும் தங்களைத் தாழ்த்திக் கொள்ளும் சாத்தியம் அதிகம் உண்டு. அப்படியல்லாமல் உருவத்தில் சமத்துவத்தை காட்டப் பார்ப்பவர்கள் முயற்சியை பின்போடப் பார்ப்பார்கள்.

பால் குடித்துப் பழகியவர் கஞ்சி குடித்து உப்பு காணுமா? என்றும் பார்க்கலாம், கஞ்சி குடித்துப் பழகியவர் திறமையால் உழைத்து பால் வாங்கி சீனி காணுமா? என்றும் பார்க்கலாம். முதலாம் ரகத்தவர் ஒறுத்தல்/தியாக மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பர். இரண்டாம் ரகத்தவர் உழைப்பை முன் போடுபவர்களாக இருப்பர்.

பாதுகாப்பு:

குடும்பத்தில் மனோ பலமும் உடல் பலமும் கொண்டவர்கள் பலம் குறைந்தவர்களை பாதுகாக்கும் பண்பு வளரவேண்டும். அது சமூக மட்டத்திலும் அப்ப நடக்க மாதர் சங்கம் போன்ற அமைப்புகள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு அதிகாரிகள் உதவ வேண்டும். சமீபத்தில் சில பெண்கள் தம்மை வேலைக்கு என்று கூப்பிட்டு விபசாரம் செய்யப் போகிறார்கள் என்று தாம் பயம் கொண்டதாக கூறினார்கள். முறைப்படி வேலைக்கு விண்ணப்பித்திருந்தால் இப்படியான பயங்களில் இருந்து பாதுகாக்கப்படுவர் என்று முடிவு செய்தோம்.

தீர்மானங்கள்:

மேற்கூறிய வகையில் எங்களை வழம்படுத்த ஈடுபாடுள்ளவர்களுடன் சேர்ந்து முயற்சிக்க முடிவு செய்துள்ளோம்.

அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மத்தியில் சிந்தனை மாற்றம் வேண்டும்

president.jpgபொரு ளாதார அபிவிருத்திக்கான இலக்கை வெற்றிகொள்வதற்கு மக்களின் சேவகர்களாக அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் மாறுவதுடன் அதற்கான சிந்தனை மாற்றம் அவர்களிடம் பிறக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். சமூக ரீதியான மாற்றமொன்றிற்காக சகல தரப்பினரதும் அர்ப்பணிப்பு அவசிய மெனத் தெரிவித்த ஜனாதிபதி; ஆசியாவின் உன்னத நாடாக இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு அது உறுதுணையாகும் எனவும் குறிப்பிட்டார்.

பொருளாதார அபிவிருத்தியுடன் உயர் பண்புள்ள சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு மக்களிடையே சிறந்த மனப்பான்மையை விருத்தி செய்வதற்கான அரசாங்கத்தின் புதிய வேலைத் திட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பொருளாதார அபிவிருத்தியுடன் சமூக அபிவிருத்தியையும் கட்டியெழுப்புவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது :- பிரதமர் டி. எம். ஜயரட்ன பிரதமர் செயலகத்தினூடாக ஆரம்பித்துள்ள சிந்தனை மாற்றத்திற்கான இவ்வேலைத் திட்டத்தை பாராட்டுவதுடன் நாடளாவிய ரீதியில் இதனை முன்னெடுத்துச் செல்வதற்கான தலைமைத்துவத்தையும் அவரே வழங்குவதும் சிறப்பம்சமாகும்.

கொழும்பு நகரில் குப்பை கூளங்களை அழிக்க முடியுமா என்ற பிரச்சினைக்கு தற்போது தீர்வு ஏற்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் நாம் கொண்டு சென்ற சிந்தனை மாற்றத்தின் காரணமாக மக்கள் தற்போது வீதிகளில் குப்பை கூளங்களை போடுவதில்லை. அவர்கள் தற்போது பழக்கப்பட்டு விட்டனர். நாட்டில் ஒழுக்கம் மற்றும் சட்டங்களை மதிக்காது செயற்பட இடமளிக்க முடியாது. சட்டம் சகலருக்கும் சமமானது. அதற்கான மதிப்பினை சகலரும் வழங்க வேண்டும்.

சமூக சிந்தனை மாற்றமொன்றை எம்மால் மேற்கொள்ள முடியும். முன்னர் அரச அதிகாரிகள் மக்களுக்கு அனுப்பும் கடிதத்தில் தம்மை மக்கள் சேவகராகவே இனங்காட்டி வந்தனர். இன்று அமைச்சர்களிடையோ அதிகாரிகளிடையோ அப்பழக்கம் இல்லாது அருகிவிட்டது. 12 இலட்சம் அரச ஊழியர்கள் மத்தியில் சிந்தனை மாற்றம் ஏற்பட்டால் நாடு முன்னேறும். தற்போது முழு நாட்டிலும் அபிவிருத்திச் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த நாம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். தனிநபர் வருமானத்தை இரண்டு மடங்காக்க எம்மால் முடிந்துள்ளது.

அதனை மேலும் இரண்டு மடங்குகளாக் குவதே எமது இலக்கு. சமூக ரீதியான மாற்றம் தேவை. அதற்கு சகலரதும் அர்ப்பணிப்பு மிகவும் அவசியம். குடும்பம், பாடசாலை மட்டத்திலிருந்து இது ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றார்.

வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கு பாதுகாப்பு. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஏற்பாடு

வெளி நாடுகளில் தொழில் புரியும் பல்வேறு துறைசார்ந்தவர்களையும் இணையத்தினூடாக தொடர்பினை ஏற்படுத்தி புலம்பெயர்ந்து தொழில் புரியும் இலங்கையர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு கடந்த 19ஆம் திகதி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்க, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை வரலாற்றில் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த தாம் தயாராகிவருவதாக தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வெளிநாடுகளில்தொழில் புரியும் இலங்கையர்களை இணையத்தினூடாக ஒன்றிணைத்துப் பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலுள்ள தொழில் முகவர்கள் இலங்கைத் தூதரகங்கள், இலங்கையிலுள்ள வேலைவாய்ப்பு முகவர்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் என்பன இந்தத் திட்டத்தின் மூலம் இணைய வலையமைப்புக்குள் உள்ளடக்கப்படவுள்ளன.

இந்த வலையமைப்பானது மேலும் விரிவாக்கப்பட்டு பொறுப்புக் கூறவேண்டிய சகல நிறுவனங்களுக்கும் இடையே தகவல் பரிமாற்ற முறை ஊடாக தகவல் வழங்கவும் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளிநாடுகளிலுள்ள தொழில் வழங்குநர் தமக்குத் தேவையான தொழிலாளி பற்றி அந்நாட்டிலுள்ள வேலைவாய்ப்பு முகவருக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் அந்நாட்டிலுள்ள வேலைவாய்ப்பு முகவரகம் இணைய வலையமைப்பினூடாக அந்நாட்டு இலங்கை தூதரகத்திற்கு அதுபற்றி அறிவிக்கும்.

பின்னர் இலங்கைத் தூதரகம் அதுதொடர்பாக ஆராய்ந்து தொழில் அனுமதியினைப் பெற்றுக்கொடுப்பதுடன், இது பற்றிய தகவலினை இணையத்தினூடாக இலங்கையிலுள்ள வேலைவாய்ப்பு முகவருக்கும், இலங்கை பணியகத்திற்கும் அனுப்பி வைக்கும்.

அத்துடன் குறித்த சேவை வழங்குநரின் வருமானம், அடையாள அட்டை இலக்கம் தொலைபேசி இலக்கம் என்பவற்றுடன் வேலை செய்யும் வீட்டிலுள்ள குடும்பத்தின் தகவல்களையும் இணையமயப்படுத்தல் வேண்டும். இந்த முறைமூலம் தற்போது இடைத்தரகர்கள் மூலம் மேற்கொள்ளப்படும் மோசடிகளைத் தவிர்க்க முடியுமெனவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

முஸ்லிம் சேவையை தனி அலைவரிசையாக மாற்ற நடவடிக்கை – அஸ்வர் எம்.பி. தெரிவிப்பு

aswar.jpgவானொலிக்கு வருமானத்தை அதிக மாக ஈட்டிக்கொடுக்கும் “முஸ்லிம் சேவை”யை தனி அலைவரிசையாக மாற்ற ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தலைவர் ஹட்சன் சமரசிங்க விருப்பம் தெரிவித்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற கவுன்சில் உறுப்பினருமான ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்.

இலங்கையில் மட்டுமன்றி தமிழகத்திலும் முஸ்லிம் இல்லங்கள் தோறும் இலங்கை வானொலி முஸ்லிம் சேவை பிரபல்யம் பெற்றுள்ளது. குறிப்பாக முஸ்லிம் பெண்கள் இந்த சேவையை விரும்பிக் கேட்கி ன்றனர். எனவே, முஸ்லிம்களுக்கென தனி அலைவரிசை உருவாக்கப்படுவது உண்மையில் வரவேற்கத்தக்கதென்றும் அஸ்வர் எம்.பி. தெரிவித்தார்.

இந்த யோசனை பற்றிய மகஜர் ஒன்றும் தலைவர் ஹட்சனிடம் கையளிக்கப்பட்டது.

பிரிட்டிஷ் பிரதிநிதிகள் செட்டிகுளம் விஜயம்

பொதுநலவாய சங்கத்தின் பிரிட்டிஷ் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் நேற்று வியாழன் பகல் செட்டிகுளத்திற்கு விஜயம் செய்தனர். இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள நிவாரண கிராமத்திற்கு விஜயம் செய்து அவர்களுடைய வாழ்க்கை நிலைகுறித்து கேட்டறிந்தனர்.

மாவட்ட சிவில் நிர்வாக சிரேஷ்ட அதிகாரிகளும் பாதுகாப்பு படைகளின் சிரேஷ்ட அதிகாரிகளும் இம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து பிரதிநிதிகள் குழுவினருக்கு விளக்கினார்கள். மாவட்ட அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் இவர்களை செட்டிகுளம் கதிர்காமர் நிவாரண கிராமத்தில் சந்தித்து உரையாடினாரென தெரிவிக்கப்படுகின்றது.

மகாவலி பிரதேச மக்களின் பிரச்சினை: ஒரு இலட்சம் காணி உறுதிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை

nimal.jpgமகாவலி பிரதேசத்தில் வாழும் மக்கள் எதிர்நோக்கியுள்ள காணி உறுதிப்பத்திர பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்காக ஒரு இலட்சம் காணி உறுதிகளை வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதாக நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் இற்றை வரையும் 40 ஆயிரம் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டு ள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:- மகாவலி பிரதேசங்களில் குடியிருக்கும் மக்கள் காணி உறுதிப் பத்திரங்கள் தொடர்பாகப் பெரும் பிரச்சினைக்கு நீண்ட காலமாக முகம் கொடுத்து வந்தார்கள். இப்பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் வகையில் மகாவலி பிரதேசத்தில் வாழ்பவர்களுக்காக ஒரு இலட்சம் காணி உறுதிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளேன் இத்திட்டத்தின் கீழ் இற்றைவரையும் 40 ஆயிரம் காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. காணி அமைச்சின் ‘பிம்சவிய’ திட்டத்தின் ஊடாக இத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றேன்.

காணி உறுதி வழங்கும் நடவடிக்கை தாமதமடைவதற்கு நில அளவையாளர்கள் பற்றாக்குறையே பிரதான காரணமாகும். இப்பிரச்சினையை துரித கதியில் தீர்த்து வைக்கவே நடவடிக்கை எடுத்து வருகின்றேன். அதேநேரம், மகாவலி பிரதேசங்களில் சட்ட விரோதமாகக் குடியேறியுள்ளவர்களை வெளியேற்றவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றன.

மொரகஹகந்த நீரப்பாசனத் திட்டத்தின் கீழ் 88 ஆயிரம் ஹெக்டேயர் நிலம் அபிவிருத்தி செய்யப்படவிருக்கின்றது. இது பராக்கிரம சமுத்திரத்தை விடவும் நான்கு மடங்கு பெரிய அபிவிருத்தித் திட்டமாகும். இத்திட்டம் காரணமாக இருப்பிடங்களை இழந்துள்ள 1581 குடும்பங்களை மீளக்குடியமர்த்தவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இத்திட்டம் காரணமாக இருப்பிடத்தையும், விவசாய நிலத்தையும் இழப்பவர்களுக்கு மாற்று இடத்தில் இருப்பிடமும், விவசாய நிலமும் வழங்கப்படும்.

மொரகஹகந்த நீர்ப்பாசனத் திட்டம் மக்களுக்கும், வனஜீவராசிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெடுக்கப்படுகின்றது. இத்திட்டத்திற்கு குவைத் நிதியமும், ஜய்க்கா நிறுவனமும் நிதியுதவி வழங்குகின்றன.என்றார்.

யாழ்.குடாநாட்டில் மீண்டும் சுங்க அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளன.

யாழ்.குடாநாட்டில் 30 வருடங்களுக்கு முன்னர் இயங்கிய சுங்க அலுவலகங்களை மீண்டும், இயங்கச்செய்ய சுங்கத்திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னர் யாழ்ப்பாணத்தில் ஐந்து இடங்களில் சுங்க அலுவலகங்கள் இயங்கியதாகவும், அவற்றையே மீண்டும் இயக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் சுங்கத்துறைப் பணிப்பாளர் நாயகம் திருமதி சுதர்மா கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஊர்காவற்றுறை ஆகிய இடங்களிலேயே முன்னர் சுங்க அலுவலகங்கள் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்திற்கான சுங்க அலுவலகம் ஜனவரி மாதத்தில்
யாழ்.தபாலகக்கட்டடத்தில் திறந்து வைக்கத் தீர்மானித்துள்ளதாகவும், அதன் பின்னர் காங்கேசன்துறை அலுவலகம் திறக்கப்படும் எனவும் தெரிவித்துள்ள சுங்கப்பணிப்பளர் நாயகம் யாழ்ப்பாணத்தில் 30 வருடங்களுக்குப் பின்னர் சுங்க
அலுவலகம் திறக்கப்படுவதற்கான முதலாவது சந்தர்ப்பம் இது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். குடாநாட்டில் மக்களது வாழ்க்கை சுமுக நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், அவர்களுக்குத் தேவையான வசதி வாய்ப்புக்களை வழங்கும் நோக்கத்துடனேயே சுங்க அலுவலகங்களை மீண்டும் நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வடக்கில் 2000 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளதாக தெரிவிப்பு.

வடக்குப் பிரதேசத்தில் 2000 சதுர கிலோ மீற்றர் பரப்பளவிலான பிரதேசத்தில் இன்னும் கண்ணி வெடிகளை அகற்ற வேண்டியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் உபய மெதவல தெரிவித்துள்ளார்.

யுத்தம் நடைபெற்ற பிரதேசத்தில் 1800 சதுர கிலோ மீற்றர் பரப்பளவிலான பகுதிகளில் தற்போது கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளன. வடக்கில் இதுவரை, 3,14,850 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. அதனை விட அதிகமான அளவு கண்ணி வெடிகள் எதிர்காலத்தில் அகற்றப்பட வேண்டியிருக்கும் எனவும் வன்னியின் வயல், நிலங்கள் மற்றும் காட்டுப் பிரதேசங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்படவுள்ளதாகவும், கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பிரதேசங்கள் பொதுமக்களின் குடியிருப்புக்களாக இருந்த பிரதேசங்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ‘குவைத்சிட்டி’ வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் 43 குடும்பங்களை வெளியேறுமாறு உத்தரவு.

மட்டக்களப்பு மஞ்சத்தொடுவாய் தெற்கு கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, ‘குவைத் சிட்டி’ என்ற வீட்டுத்திட்டத்தில் வசித்துவரும் 43 குடும்பங்களை அங்கிருந்து வெளியேறுமாறு மண்முனை வடக்குப் பிரதேசச்செயலர் திருமதி கலாமதி
பத்மராஜாவால் கடிதங்கள் முலம் சம்பந்தப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட வீடுகள் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாவின் முயற்சியினால் குவைத் நாட்டின் உதவியுடன், அமைக்கப்பட்டு மக்களுக்கு கையளிக்கப்பட்டவையாகும். ஆனால், இதில் குடியிருக்கும் 27 குடும்பங்கள் தவிர்ந்த ஏனையோர் உண்மையில் சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களல்ல என நீதிமன்றில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. அந்த வீடுகளில் வசிப்பவர்கள் சுனாமியினால் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள்தானா என ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றினாலும் கோரப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் காத்தான்குடி பிரதேசச்செயலர் அங்குள்ள 70 வீடுகளில் வசிப்பவர்களில் 27 பேர் மட்டுமே சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என அறிக்கை சமர்ப்பித்திருந்தார். இதன் பின்னர் குறித்த 27 வீடுகளில் வசிப்பவர்கள் தவிர்ந்த ஏனைய 43 வீடுகளில் வசிப்பவர்களும், வீடுகளை விட்டு வெளியேறுமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளது. எனினும், தாங்கள் வீடுகளை விட்டு வெளியேறப்போவதில்லை எனவும், இது தொடர்பாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவிற்கு தாங்கள் அறிவித்துள்ளதாகவும் மேற்படி குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் விடுதலைப்புலிகளை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிய நால்வர் கைது.

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கையிலீடுபட்டதாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட நபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான அனுமதியைக் கோரி கடந்த செவ்வாய் கிழமை கொழும்பு பிரதம நீதிமன்றுக்கு அறிக்கையொன்றை பொலிஸார் சமர்ப்பித்துள்ளனர்.

கடவுச்சீட்டுக்களில் போலியான விசாவை ஒட்டியே புலி உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பபட்டுள்ளதாகவும், இவ்விடயத்தில் மேலும் பலருக்கு தொடர்பிருக்கலாம் எனவும் இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் அறிக்கை தொடர்பாக கவனம் செலுத்திய நீதவான் சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிப்பதற்கான அனுமதியை பொலிஸாருக்கு வழங்கியுள்ளார். அத்துடன் விசாரணையின் முன்னேற்றங்கள் குறித்து நீதிமன்றிற்கு அறியத் தரவேண்டும் எனவும் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.