விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கையிலீடுபட்டதாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட நபர்களை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான அனுமதியைக் கோரி கடந்த செவ்வாய் கிழமை கொழும்பு பிரதம நீதிமன்றுக்கு அறிக்கையொன்றை பொலிஸார் சமர்ப்பித்துள்ளனர்.
கடவுச்சீட்டுக்களில் போலியான விசாவை ஒட்டியே புலி உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பபட்டுள்ளதாகவும், இவ்விடயத்தில் மேலும் பலருக்கு தொடர்பிருக்கலாம் எனவும் இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் அறிக்கை தொடர்பாக கவனம் செலுத்திய நீதவான் சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிப்பதற்கான அனுமதியை பொலிஸாருக்கு வழங்கியுள்ளார். அத்துடன் விசாரணையின் முன்னேற்றங்கள் குறித்து நீதிமன்றிற்கு அறியத் தரவேண்டும் எனவும் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.