மட்டக்களப்பு மஞ்சத்தொடுவாய் தெற்கு கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, ‘குவைத் சிட்டி’ என்ற வீட்டுத்திட்டத்தில் வசித்துவரும் 43 குடும்பங்களை அங்கிருந்து வெளியேறுமாறு மண்முனை வடக்குப் பிரதேசச்செயலர் திருமதி கலாமதி
பத்மராஜாவால் கடிதங்கள் முலம் சம்பந்தப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட வீடுகள் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாவின் முயற்சியினால் குவைத் நாட்டின் உதவியுடன், அமைக்கப்பட்டு மக்களுக்கு கையளிக்கப்பட்டவையாகும். ஆனால், இதில் குடியிருக்கும் 27 குடும்பங்கள் தவிர்ந்த ஏனையோர் உண்மையில் சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களல்ல என நீதிமன்றில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. அந்த வீடுகளில் வசிப்பவர்கள் சுனாமியினால் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள்தானா என ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றினாலும் கோரப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் காத்தான்குடி பிரதேசச்செயலர் அங்குள்ள 70 வீடுகளில் வசிப்பவர்களில் 27 பேர் மட்டுமே சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என அறிக்கை சமர்ப்பித்திருந்தார். இதன் பின்னர் குறித்த 27 வீடுகளில் வசிப்பவர்கள் தவிர்ந்த ஏனைய 43 வீடுகளில் வசிப்பவர்களும், வீடுகளை விட்டு வெளியேறுமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளது. எனினும், தாங்கள் வீடுகளை விட்டு வெளியேறப்போவதில்லை எனவும், இது தொடர்பாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவிற்கு தாங்கள் அறிவித்துள்ளதாகவும் மேற்படி குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.