2010

2010

இலங்கை சமூக சேவகி ஜன்சிலாவுக்கு அமெரிக்க அரசின் துணிச்சல் விருது

majeed.jpgஅமெரிக்க அரசின் இராஜாங்க துறையால் தெரிவு செய்யப்பட்ட அனைத் துலக அளவில் 2010 ஆம் ஆண்டின் துணிச்சல் மிகுந்த பெண்களுக்கான விருதைப் பெறப்போகும் பத்து பேரில் இலங்கையைச் சேர்ந்த பெண் சமூக சேவகி ஜன்சிலா மஜீத்தும் ஒருவர்.

20 வருடங்களாக இடம் பெயர்ந்து வாழும் இவர் உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழ்பவர்களுக்கான சமூக சேவையில் ஈடுபட்டுள்ளார். அமெரிக்க அரசின் இராஜாங்க துறை செயலாளர் ஹிலரி கிளிண்டன் திங்கட்கிழமை அறிவித்த விருது பெறுபவர்களுக்கான பட்டியலில் ஜன்சிலா மஜித்தின் பெயர் இடம் பெற்றுள்ளது.

எதிர்வரும் 10 திகதியன்று அமெரிக்க அரசின் இராஜாங்க துறை சார்பில் நடைபெறும் விழாவில் அறிவிக்கப்பட்ட பத்து பேருக்கும் ஹிலரி கிளிண்டன் விருது அளித்து கெளரவிப்பார். அரசு துறையால் வெளியிடப்பட்டுள்ள விபரங்களில் மஜீத் புத்தளம் பகுதியில் உள்ள சமுதாய சேவைகள் மையத்தின் நிர்வாக காப்பாளர் என்றும் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியைச் சார்ந்தவர்களுக்கு தன் சொந்த செலவில் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றார்.  மஜீத்தின் முக்கிய நோக்கம் அவர் வசிக்கும் பகுதியில் உள்ள முஸ்லிம் மற்றும் தமிழ் சமுதாயத்தினரிடையே நல்லுறவை ஏற்படுத்துவதாகும்.

தேர்தலை கண்காணிக்க 75 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் – ஆசிய, ஐரோப்பிய பிரதிநிதிகளை வரவழைக்க ஏற்பாடு

பொதுத் தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தவென 75 வெளிநாட்டுப் பிரதிநிதிகளை பெப்ரல் அமைப்பும், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான மத்திய நிலையமும் வரவழைக்க விருக்கின்றது.

இந்த இரு நிறுவனங்களும் இம் மாத பிற்பகுதியில் இவர்களை இலங்கைக்கு வரவழைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.

எதிர்வரும் 8 ம் திகதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் வெளிநாட்டுப் பிரதிநிதிகளை வரவழைத்து ஈடுபடுத்த மேற்படி இரு நிறுவனங்களுக்கும் தேர்தல் ஆணையாளர் அனுமதி வழங்கியுள்ளார்.

எதிர்வரும் 25 ஆம் திகதிக்குப் பின்னர் இவர்கள் இலங்கைக்கு வருகை தருவார்கள். பெப்ரல் அமைப்பின் இணைப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார். இதன்படி, பெப்ரல் அமைப்பு 50 கண் காணிப்பாளர்களையும் தேர்தல் வன்முறையைக் கண்காணிக்கும் மத்திய நிலையம் 25 கண்காணிப்பாளர்களையும் வர வழைக்கவுள்ளது.

பெப்ரல் அமைப்பானது ஜப்பான், மலேசியா, தாய்லாந்து, இந்தோனேஷியா உட்பட ஆசிய நாடகளிலிருந்தே கண்காணி ப்பாளர்களை வரவழைப்பதாகத் தெரிவித் ததுடன் தேர்தல் வன்முறையைக் கண் காணிக்கும் மத்திய நிலையமானது ஆசிய – ஐரோப்பிய நாடுகளிலிருந்து கண்காணிப்பாளர்களை வரவழைக்கவுள்ளதாகவும் தெரிவித்தது.

இதேவேளை, தேர்தல் காலங்களில் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடபடுவோர் தொடர்பில் கவனஞ் செலுத்துவதுடன் அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் கட்சித் தலைவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் பெப்ரல் அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது.

கட்சித் தலைவர்கள், செயலர்களுக்கு பாதுகாப்பு வழங்க ஏற்பாடு – பொலிஸ் மா அதிபருக்கு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தல்

தமக்கு உயிராபத்து அச்சுறுத்தல் இருப் பதாகக் குறிப்பிட்டு பாதுகாப்புக் கோரும் கட்சிகளின் தலைவர்களுக்கும், செயலாளர்களுக்கும் பாதுகாப்பு வழங்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது விடயமாக பொலிஸ் மா அதிபருக்கு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தேசியப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையப் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல நேற்றுத் தெரிவித்தார்.

தமக்கு உயிராபத்து அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிட்டு கட்சிகளின் தலைவர்களும், செயலாளர்களும் பொலிஸ மா அதிபரிடம் பாதுகாப்பு கோரும் பட்சத்தில் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

இப்படியானவர்கள் முன்வைக்கும் காரணங்களில் விசேட கவனம் செலுத்தப்படும் என்றும் அதனடிப்படையில் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

எதிரணியைச் சேர்ந்த முன்னாள் எம். பிக்கள் சிலர் தமக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கும்படி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தெஹிவளையில் வெள்ளைப்புலிகள்

wite-tig.jpgபென்தெரா டைக்ரிஸ் டைகர்ஸ் (Panthera Tigris Tigers) எனப்படும் இவ்வெள்ளைப் புலிகள் சியங் ஜிவ் சவாரி பூங்காவிலிருந்து தெஹிவளை மிருகக் காட்சிச்சாலைக்கு எடுத்து வரப்பட்டுள்ளன.

உலகில் மிக அரிதாகக் காணப்படும் இந்த இனப் புலிகள் முதல் முறையாக நம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பொதுமக்கள் நேற்று முதல் புலிகளை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.

வெள்ளைப் புலிகள் கோலாலம்பூரினூடாக இலங்கைக்கு கடந்த 27ஆம் திகதி கொண்டுவரப்பட்டதாக விலங்கியல் பூங்காவுக்கான பணிப்பாளர் அனந்த லொக்குரன முக்க தெரிவித்தார்.

மிருகங்களை பரிமாறிக்கொள்ளும் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கும் இப்புலிகளுக்கு விரைவில் இலங்கைப் பெயர்கள் வழங்கப்படவுள்ளன. இதில் ஆண்புலி மூன்றரை வயதினையும் பெண் புலி மூன்று வயதும் இரண்டு மாதங்களும் நிறைந்தன.

இவை ‘பெங்கல்’ புலிகள் எனவும் அழைக்கப்படும். இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் வெள்ளைப் புலிகளின் வாசஸ்தலமாக கருதப்படுகின்றன.

புலிகளின் பரம்பரையலகில் ஏற்ப ட்ட மாறுபட்ட தன்மையே இவை வெள்ளை நிறமாக தோன்றுவதற்கு காரணமாகியுள்ளது. இரண்டு மீற்றர் நீளம் கொண்ட இப்புலிகள் சுமார் 180-285 கிலோ கிராம் வரை நிறைகொண்டவையாக இருக்கின்றன.

உலகில் மூவாயிரம் வெள்ளைப் புலிகளே இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை மூன்று கிலோ கிராம் நிறைகொண்ட இறைச்சியினை ஒரு வேளை உணவாக உட்கொள்ளும் என தெஹிவளை மிருகக்காட்சிச்சாலை அதிகாரியொருவர் கூறினார்.

தனுன திலகரட்ணவின் வங்கி பெட்டகங்களுக்கு ரூ. 71/2 கோடி பணத்தை ஏற்றி வந்த கறுப்புநிற ‘டிபெஃண்டர்’ சிக்கியது

defender1.jpgஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரட்னவின் தாயாரான அசோக திலகரட்னவின் தனியார் வங்கி பெட்டகங்களில் காணப்பட்ட 7 1/2 கோடி ரூபா உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் இரகசிய பொலிஸார், குறிப்பிட்ட பணத்தை வங்கிக்கு எடுத்து வந்ததாக கூறப்படும் கறுப்பு நிற டிபென்டர் வாகனமொன்றை கைப்பற்றியுள்ளனர்.

இந்த கறுப்பு நிற டிபென்டர் வாகனம் தனுன திலகரட்னவினால் அவரது நெருங்கிய நண்பரொருவரின் பெயரில் 2008 பெப்ரவரி 14 ஆம் திகதி இராணுவ ஏல விற்பனையின் போது வாங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. வாகனம் வாங்கப்பட்ட அந்த தினத்தில் ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ தளபதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இராணுவ ஏல விற்பனையின் போது இந்த கறுப்பு டிபென்டர் வாகனம் எவ்வாறு வாங்கப்பட்டது என்பது தொடர்பாக விசேட ரகசிய பொலிஸ் குழுவொன்று விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

இதேவேளை 7 1/2 கோடி ரூபா நிதி தொடர்பாக தனுன திலகரட்னவின் தாயாரான அசோக திலகரட்ன கல்கிசை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது அவரை பிணையில் செல்ல மேலதிக மாவட்ட நீதிபதி அனுமதி வழங்கினார்.

அத்துடன் குறிப்பிட்ட பணம் வைக்கப்பட்டிருந்த வங்கிப் பெட்டகங்கள் இருந்த தனியார் வங்கியின் முகாமையாளர் தற்போது நடைபெற்றுவரும் விசாரணைகளில் இரகசிய பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ரகசிய பொலிஸார் அனுமதி கோரினர். நீதிபதி அதற்கு அனுமதி வழங்கினார்.

தனியார் வங்கியின் பெட்டகங்களில் இருந்து கைப்பற்றபட்ட மேற்படி பணம் தொடர்பாக அந்நிய செலாவணி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் விசாரணைகள் நடைபெறுவதாகவும் இந்த பணம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதா என்பது பற்றியும் விசாரிக்கப்படுவதாக ரகசிய பொலிஸாரின் சார்பாக வாதாடிய இன்ஸ்பெக்டர் மொஹான் மாசிம்புலா தெரிவித்தார்.

வங்கிப் பெட்டகங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் சம்பந்தமான பல போலி ஆவணங்கள் பற்றி விசாரிக்கப்பட்டு வரும் அதேவேளை இந்த பணம் தேர்தலுக்கு செலவிடப்பட்ட பணத்தில் மீதான பணம் என்பது பற்றி விசாரிக்கப் படுவதாகவும் ரகசிய பொலிஸார் நீதிமன்றத்தில் கூறினர்.

வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கம் வழங்கும் பணிகள் நேற்றுடன் நிறைவு

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கம் வழங்கும் பணிகள் நேற்று (2) நிறைவடை ந்ததாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. வேட்பாளர்களுக்கு விருப்பு இலக்கம் வழங்கும் பணிகள் நேற்று முன்தினம் ஆரம்பமாகின. கட்சி சார்பாக வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் கட்சி செயலாளர் களுக்கும் சுயேச்சைக் குழுக்களுக்கான இலக்கங்கள் குழுத் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமணசிறி கூறினார்.

இதேவேளை இம்முறை தேர்தலில் போட்டியிடும் 7620 வேட்பாளர்களின் பெயர், விருப்பு இலக்கங்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (2) நள்ளிரவு வெளியாக ஏற்பாடாகியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம் (1) 18 மாவட்டங்களுக்கான விருப்பு இலக்கங்கள் வழங்கப்பட்டதோடு நேற்று யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, குருணாகல், கொழும்பு ஆகிய மாவட்டங்களுக்கான விருப்பு இலக்கங்கள் வழங்கப்பட்டன. இது தவிர மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளினூடாகவும் விருப்பு இலக்கங்கள் வழங்கப்பட்டன.

தமக்கு விருப்பமான அல்லது முதலாவது இலக்கத்தை பெறுவதற்காக பல வேட்பாளர்கள் தமது பெயர்களை மாற்றியிருந்ததாகவும் இதனால் விருப்பு இலக்கம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் சுமணசிறி தெரிவித்தார்.

இதேவேளை இம்முறை தேர்தலில் 301 சுயேச்சைக் குழுக்களும் 336 அரசியல் கட்சிகளும் போட்டியிடுகின்றன. சில மாவட்டங்களில் அதிகமான சுயேச்சைக் குழுக்களும் கட்சிகளும் போட்டியிடுவதால் வாக்குச் சீட்டு மிக நீளமாக இருக்கும் எனவும் அதனால் கூடுதலான வாக்குப் பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் கைதான இலங்கை மீனவர்களில் 46 பேர் விடுதலை ஏனையோரை விடுவிக்க இந்திய அரசுடன் பேச்சு

images.jpgஇந்தியப் பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீன வர்களில் 46 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 140 பேரை விடுவிப்பது தொடர்பில் இந்திய அரசுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னை மற்றும் விசாகபட்டிண அதிகாரிகளுடன் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா ஏனையோரை விடுவிப்பது தொடர்பில் நேரடிப் பேச்சுவார்த்தைகளை மேற் கொண்டார். இது தொடர்பில் அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவிக்கையில் :-

பல்வேறு காரணங்களுக்காக கடந்த 2009ம் ஆண்டு மாத்திரம் இலங்கை மீன வர்கள் 700 பேரை இந்தியப் பாதுகாப்புப் படையினர் தடுத்து வைத்திருந்தனர். அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா சென்னையிலுள்ள இலங்கைத் தூதுவருடன் மேற் கொண்ட பேச்சுவார்த்தைகளையடுத்து அம் மீனவர்களை கட்டங் கட்டமாக விடுவித்து இலங்கைக்கு அழைத்துவர முடிந்துள்ளது.

இறுதியாக கடந்த 24ம் திகதி 24 பேரும், 27 ம் திகதி 22 பேரும் விடுவிக்கப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். விசாகபட்டணத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 28 இலங்கை மீனவர்களை அங்குள்ள நீதிமன்றம் விடு தலை செய்திருக்கிறது. எனினும் அவர்களின் படகை மீட்பதற்கான வழக்கு அடுத்த ஏப்ரல் மாதத்திலேயே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இதனால் தமது படகையும் மீட்டெத்துக் கொண்டே வருவதற்காக 28 மீனவர்களும் அங்கு தங்கியுள்ளனர்.

இவர்கள் அவசரமாக இலங்கைக்கு வர விரும்பினால் அவர்களை விமான மூலம் அழைத்து வருவதற்கான நடவடிக் கைகளை அமைச்சு மேற்கொள்ளும்.

ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடர்; சட்ட மா அதிபர் தலைமையிலான குழு ஜெனீவா பயணம்

ஐ.நா. மனித உரிமை கவுன்ஸில் கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் தலைமையிலான குழு ஜெனீவா சென்றுள்ளது.

ஐ. நா. மனித உரிமை கவுன்ஸிலின் 13 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 26ஆம் திகதி வரை இடம்பெறுகிறது.

மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இந்த கூட்டத் தொடரில் பங்குபற்றவில்லை. தேர்தல் பணிகள் காரணமாகவே அவர் ஜெனீவா செல்லவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இக்கூட்டத் தொடரின்போது இலங்கையில் மனித உரிமை மறுக்கப் படுவதாக எந்தக் கருத்தும் தெரிவிக் கப்பட்டால் அமைச்சருக்கு பதிலாக சட்ட மா அதிபரும் அவரது குழுவினரும் உரிய வகையில் பதிலளிப்பார்கள் என்று மனித உரிமைகள் அமைச்சு வட்டாரம் கூறியுள்ளது.

தபால் மூல வாக்களிப்பு 25 ஆம் மற்றும் 26 ஆம் திகதிகளில்

parliament.jpgபொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 25 ஆம் மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கா தெரிவித்துள்ளார். இதேவேளை, இம்முறை தேர்தல் பணிகளில் சுமார் 3 லட்சம் அரச ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது கடந்த ஜனாதிபதித் தேர்தலை விட 50 ஆயிரம் அதிகம்

படகில் தீ: கடலில் தத்தளித்த 12 வெளிநாட்டவர் மீட்பு

படகில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக காலி கடற்பரப்பில் தத்தளித்த 12 வெளி நாட்டவர்களை காலி கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். இந்தோனேசியாவுக்குச் சொந்தமான மேற்படி படகில் இலங்கைக் கடலில் வைத்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

படகிலிருந்தவர்கள் கடலில் தத்தளிப்பதை அவதானித்த காலி மீன் பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கடற்படையினரின் உதவியுடன் இவர்களை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட வெளிநாட்டவர்க ளிடையே ஒரு தாய்லாந்து நாட்டவரும் 11 இந்தோனேசிய நாட்டவர்களும் அடங்குவதாக பொலிஸார் கூறினர். மீட்கப்பட்ட வெளிநாட்டவர்கள் நேற்று (2) காலி துறைமுக பொலிஸில் ஒப்படைக்கப்பட்டனர்.