2010

2010

பான் கீ மூனின் செயற்பாட்டுக்கு அணிசேரா இயக்கம் கண்டனம்

un-secretary-general.jpgஇலங் கையில் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக தமக்கு அறிவுறுத்துவதற்காக நிபுணர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் எடுத்து வரும் நடவடிக்கையை அணிசாரா இயக்கம் கண்டித்துள்ளது.

நியூயோர்க்கில் உள்ள அணிசேரா இயக்க கூட்டிணைப்பு பணியகத்தின் தலைமைத்துவம் இந்த விடயம் தொடர்பாக கடிதம் ஒன்றை ஐ.நா செயலாளர் நாயகத்துக்கு அனுப்பியுள்ளது. இந்த கடிதத்திலேயே தனது கண்டனத்தை அணிசேரா இயக்கம் தெரிவித்துள்ளது அவ்வாறான நிபுணர்கள் குழுவை நியமிக்கும் விடயம் இலங்கையில் உள்ள நிலையை கருத்திற் கொள்ளாமலும் இலங்கை அரசுடன் கலந்தாலோசிக்காமலும் எடுக்கப்படுவதாக அணி சாரா இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட விடயம் தன்னிச்சையாக விசாரிப்பதற்காக உள்நாட்டிலேயே குழுவொன்றை நியமிக்கும் தனது நோக்கத்தை ஜனாதிபதி ராஜபக்ஷ ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட உரிமையில்லை என்று அணி சாரா இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

சில குறிப்பிட்ட நாடுகளை மட்டும் இலக்கு வைத்து செயற்படுவது ஐ.நா. அமைப்பின் ஸ்தாபக கொள்கை மற்றும் அதன் சாசனத்துக்கு முரணானது என்று அணிசாரா இயக்கத்தின் கூட்டிணைப்பு பணியகம் கூறியுள்ளது.

ஐ.நா. செயலாளர் நாயகத்தின் இந்த நடவடிக்கையானது இலங்கையில் தற்போது இடம்பெறும் ஒருங்கிணைப்பை பலப்படுத்தும் முயற்சிகள் மற்றும் தேசிய ஒற்றுமைக்கு நன்மையை விட தீமையையே ஏற்படுத்தக் கூடும். எனவே இலங்கை அதன் உள்நாட்டு நடைமுறையை பூரணப்படுத்திக் கொள்ள அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று அணி சாரா இயக்கம் கூறியுள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் கட்சி தலைவர்களுடன் இன்று சந்திப்பு

election_cast_ballots.jpgபாராளு மன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல்கள் ஆணையாளருக்கும் கட்சித் தலைவர்களுக்குமிடையிலான முதலாவது கூட்டம் இன்று பிற்பகல் தேர்தல் திணைக்களத்தில் நடைபெற உள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் சுமணசிறி கூறினார்.

இந்தக் கூட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் 24 அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் பங்கு பற்ற உள்ளனர். தேர்தல் ஏற்பாடுகள், பாதுகாப்பு ஒழுங்குகள் தேர்தல் முறைகேடுகளை தடுப்பது, வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை தருவிப்பது உட்பட பல விடயங்கள் ஆராயப்படும்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பகுதியில் 12 கிராமங்களில் 19ம் திகதி மீள்குடியேற்றம்

Buses_on_Election_Duty_25thJan10கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட 12 கிராமங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இம்மாதம் 19ஆம் திகதி மீளக் குடியமர்த்தப்பட உள்ளனர். இதற்கான சகல ஒழுங்குகளையும் கிளிநொச்சி அரச அதிபர் திருமதி நா. கேதீஸ்வரன் மேற்கொண்டுள்ளார்.

கரைச்சி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கனகபுரம், உதய நகர் கிழக்கு, மேற்கு, உருத்திரபுரம் கிழக்கு, திருநகர் வடக்கு, தெற்கு, பெரிய பரந்தன், ஜெயந்தி நகர், ஆனந்தபுரம், விவேகானந்த நகர், கணேச புரம், கிளிநகரம் மேற்குப் பகுதி ஆகிய கிரா மங்களைச் சேர்ந்தவர்கள் இம்மாதம் 19ஆம் திகதி மீள் குடியமர்த்தப்பட உள்ளார்கள்.

பொன்சேகாவுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க இரு இராணுவ நீதிமன்றங்கள்

sarath_fonseka-02.jpgமுன்னாள் இராணுவ தளபதியும், பாதுகாப்பு படைகளின் முன்னாள் பிரதம அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்கவென மூவர் கொண்ட இரண்டு இராணுவ நீதிமன்றங்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் பரிந்துரைக்கு அமைய முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த இரு இராணுவ நீதிமன்றங்களை நியமித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். எதிர்வரும் 16ம், 17ம் திகதிகளில் கடற்படைத் தலைமையகத்தில் இந்த நீதிமன்றங்களின் ஆரம்ப அமர்வுகள் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சரத் பொன்சேகாவுக்கு எதிராக ஏழு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் இந்த ஏழு குற்றச்சாட்டுகளும் இரண்டு வகைகளில் இரு நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இராணுவ சட்டதிட்டங்களுக்கு அமைய நியமிக்கப்பட்டுள்ள நீதிமன்றங்கள் இரண்டிற்கும் மேஜர் ஜெனரல் தரங்களைச் சேர்ந்த மூவர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், கடற்படையின் ரியர் அட்மிரல் தரத்தை சேர்ந்த ஒருவர் நீதிபதி, அட்வகேட் ஜெனரலாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

சரத் பொன்சேகா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைக்காக நியமிக்கப்பட்ட இராணுவ நீதிமன்றங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்றுப் பிற்பகல் நடைபெற்றது. தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் இராணுவப் பேச்சாளர் மேலும் விபரிக்கையில்,

சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய சாட்சியங்களின் தொகுப்பு இராணுவத் தளபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அதனை ஆராய்ந்த அவர் இராணுவ நீதிமன்றத்தை நியமிக்குமாறு முப்படைகளின் தளபதியான ஜனாதிபதியிடம் பரிந்துரைத்தார்.

இதற்கமைய, இரண்டு இராணுவ நீதிமன்றங்களை நியமித்த ஜனாதிபதி மூவர் அடங்கிய குழுமத்தை நியமித்துள்ளார். இதன்படி, இந்த குழுமத்தின் தலைவராக மேஜர் ஜெனரல் எச்.எல் வீரதுங்கவும், உறுப்பினர்களாக மேஜர் ஜெனரல் ஏ.எல்.ஆர். விஜேதுங்க, மேஜர் ஜெனரல் டி.ஆர்.ஏ.பி. ஜயதிலக்க ஆகியோரும், இந்த நீதிமன்றத்தின் நீதிபதி அட்வகேட்டாக கடற்படையைச் சேர்ந்த ரியர் அட்மிரல் டபிள்யூ. டபிள்யூ. ஜே.எஸ். பெர்னாண்டோவும் நியமிக்கப்பட்டுள்ளார் என்றார்.

ஒரே குழுமமே இரண்டு நீதிமன்றங்களிலும் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது. இதன்படி பின்வரும் இரு பிரதான வகைகளில் விசாரிக்கப்படும்

(1) சேவையில் இருந்து கொண்டு அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டமை;

(2) இராணுவத்திற்கான கொள்வனவு மற்றும் இராணுவ நடைமுறையை மீறியமை;

மேற்படி இரண்டு வகையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

சரத் பொன்சேகாவுக்கு எதிராக ஏழு குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் முதலாவது வகையின் கீழ் மூன்று குற்றச்சாட்டுகளும் இரண்டாவது வகையின் கீழ் நான்கு குற்றச்சாட்டுகள் என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 16ம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் நடைபெறவுள்ள முதலாவது நீதிமன்றின் முதலாவது அமர்வின் போது சேவையில் இருந்து கொண்டு அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டார். என்ற வகையில் விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளது.

இராணுவ சட்டத்தின் 124 வது பிரிவின் கீழ் ஒரு குற்றச்சாட்டு, 102/1வது பிரிவின் கீழ் இரண்டு குற்றச்சாட்டுகளுமாக மொத்தம் மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள இரண்டாவது நீதிமன்றின் முதலாவது அமர்வின் இராணுவ சட்டத்திட்டங்களை மீறியும், ஆலோசனைகளை கருத்திற் கொள்ளாமலும் கொள்வனவு செய்த நடவடிக்கையில் ஈடுபடல் என்ற வகையில் விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளன.

இராணுவ சட்டத்தின் 109 (ரி) பிரிவின் கீழ் நான்கு குற்றச்சாட்டுகள் தொடர்பில் இங்கு விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

தற்போது நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழுமத்திற்கே ஆட்சேபனை தெரிவிக்கும் பட்சத்தில் நியமிக்கவென மேலதிகமாக மேலும் நால்வர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சகல நீதிமன்ற அமர்வுகளும் ஒலி, ஒளி பதிவுகள் செய்யப்படும் என்றும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

ஐ.ம.சு.மு அரசின் அமைச்சரவையில் பாரிய மாற்றம்: எண்ணிக்கையும் குறையும் – சுசில் பிரேம் ஜயந்த

spj.jpgதேர்தலின் பின்னர் பெரும்பான்மை பலத்துடன் உருவாக்கப்படும் ஐ.ம.சு. முன்னணி அரசின் கீழ் அமைச்சரவையில் பாரிய மாற்றங்கள் செய்யப்படுவதுடன் அமைச்சுக்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைக்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார். தற்போது 80 அமைச்சுக்களாக இருக்கும் அனைத்து அமைச்சுக்களும் ஒருங்கிணை க்கப்பட்டு சுமார் 35 அமைச்சுக்களாகக் குறைக்கப்படும்.

உதாரணமாக கல்வித் துறையில் மூன்று அமைச்சுக்கள் வெவ்வேறு துறை களுக்கு உண்டு. இனிவரும் அரசின் கீழ் பலம்வாய்ந்த அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரே அமைச்சின் கீழ் கல்வித் துறை சார்ந்த அனைத்து பிரிவுகளும் உள்ளடங்கும் விதத்தில் நியமிக்கப்படுவதுடன் மூன்று பிரதி அமைச்சுப் பொறுப்புக்களும் வழங்கப்படலாம் என்றும் அமைச்சர் சுசில் தெரிவித்தார்.

கொழும்பு புதிய நகர மண்டபத்தில் பல்கலைக்கழக சமூகத்தினரை சந்தித்து உரையாடியபோதே அமைச்சர் இத்தகவலைத் தெரிவித்தார்.

“நடைபெறவுள்ள தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு நிச்சயமாக வெற்றிபெறும். இது பற்றி எமக்கு எவ் வித சந்தேகமும் இல்லை. எமது நோக்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதே. எதிர்க்கட்சியினர் இப்போதே தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை கொடுக்க வேண்டாம் எனக் கூறுகிறார். அதாவது 150 ஆசனங்களைக் கொடுக் வேண்டாம் என்கிறார். அதாவது 149 ஆசனங்களை வழங்குமாறு தானே கூறுகிறார். இதனூடாக எதிர்க்கட்சித் தலைவர் தோல்வியை இப்போதே ஒப்புக்கொண்டிருக்கிறார்.

மூண்றிலிரண்டு பெரும்பான்மை ஏன் தேவைப்படுகிறது? என்பது பற்றியும் அமைச்சர் விளக்கமளித்தார்.

அடுத்த மாதம் முதல் ஓமந்தை வரை ரயில் சேவை

sri-lanka-railway.jpgயாழ் தேவி ரயில் சேவை அடுத்த மாதம் முதல் ஓமந்தை வரை நீடிக்கப்படுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்தது. தாண்டிக்குளத்தில் இருந்து ஓமந்தை வரையான 10 கிலோ மீட்டர் தூர ரயில் பாதையை மீளமைக்கும் பணிகள் பெருமளவு முடிவடைந்துள்ளதாக பதில் ரயில்வே பொது முகாமையாளர் சந்ரதிலக கூறினார். 200 மீட்டர் நீளமான ஓமந்தை ரயில் நிலையத்தின் முதலாம் கட்டப் பணிகள் இம்மாத இறுதிக்குள் பூர்த்தி செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

யுத்த சூழ்நிலை காரணமாக வடபகுதிக்கான ரயில் சேவைகள் பல வருடங்களாக தடைப்பட்டன.

ஜனாதிபதியின் பணிப்புரையையடுத்து வவுனியாவில் இருந்து தாண்டிக்குளம் வரையான ரயில்பாதை துரிதமாக மீளமைக்கப்பட்டதோடு அடுத்த மாதம் முதல் தாண்டிக்குளத்தில் இருந்து ஓமந்தை வரையில் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

400 மில்லியன் ரூபா செலவில் ரயில் பாதைகள் மீளமைக்கப்பட்டு வருவதோடு ஓமந்தை ரயில் பாதையை மீளமைக்க 3.6 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. பிரதியமைச்சர் லயனல் பிரேமசிறி மன்றம் ரயில் நிலையத்தை நிர்மாணிக்கும் பணியை பொறுப்பேற்றுள்ளது.

உலகத் தமிழர் பேரவை அறிக்கை

அன்புள்ள தமிழ் உடன்பிறப்புகளே,
“ஒன்றாய்ச் சேர்தல் தொடக்கம்: ஒன்றாய் இருத்தல் முன்னேற்றம்: ஒன்றாய்ச் செயற்படுதலே வெற்றி” இம்மடல் தங்கள் கைகளை நலமாக வந்தடையுமென நம்புகின்றேன். தலைவர் ஹென்றி போர்ட் அவர்களது மேலே தரப்பட்டுள்ள கூற்றை எண்ணிப் பார்க்கத் தமிழராகிய எமக்கு இப்பொழுதுள்ள நிலையிலும் சிறந்த நிலையொன்று இருக்க முடியாதென நான் நம்புகின்றேன்.

பெப்புரவரி 24 – 2010 அன்று இலண்டனிலுள்ள ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் வெற்றிமிகு தொடக்க மாநாட்டை அடுத்து இம்மடலைத் தங்களுக்கு வரைவதில் பேருவகை அடைகின்றேன். அதேவேளை சிறீலங்காவில் வாழும் எம் உடன்பிறப்புகள் பலரது பெரும் கவலைக்குரிய நேரத்தில் இதை எழுதுகின்றேன் என்பதையும் அறிவேன்.

இப்பொழுது நிலவுகின்ற மனித அவலநிலை மற்றும் அரசியல் நிலை பற்றிப் பொதுவாகவும் தமிழர் எதிர்நோக்கியுள்ள நாடாளுமன்றத் தேர்தலைப் பற்றிக் குறிப்பாகவும் புதிதாக உருவாக்கப்பட்ட உலகத் தமிழர் பேரவையின் கருத்துக்களைக் கீழே தர முயற்சிக்கின்றேன். பாரிஸ் கூட்டத்தில் 14 நாடுகள் கூட்டாக வரைந்த உ.த. பேரவையின் நோக்கம் குறிக்கோள் ஆகியவற்றில் கூறப்பட்டதற்கு அமைய சிறீலங்காவில் உயிர் பிழைத்து வாழும் தமிழரது மாந்தநேய மற்றும் அரசியல் தேவைகளைத் திறமையாக நிறைவுசெய்ய நாட்டு அடிப்படையிலும் பன்னாட்டு அடிப்படையிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழரை ஒன்று திரட்டி நாம் செயற்படுவோம்.

போரின் கடைசிக் கட்டத்தில் அப்பாவித் தமிழ் மக்களை பத்தாயிரக் கணக்கில் இரண்டகமாகக் கொடூரமான முறையில் கொன்று குவித்ததோடு குழந்தைகள் முதியோர் ஊனமுற்றோர் உட்பட 300 000 தமிழரை அனைத்துலக மனிதாபிமான உதவிகள் ஏதும் கிடைக்காத வகையிலும் செய்தி ஊடகங்கள் அணுகாத முறையிலும் மிக மோசமான நிலையில் வதைமுகாங்களில் தடுத்து வைத்துவிட்டுச் சிறீலங்கா அரசு இன்னமும் அம்மக்களது அவல நிலையை அனைத்துலகுக்கு மறைத்து வருகின்றது. அத்தோடு பாதிக்கப்பட்ட அம்மக்களுக்கு அனைத்துலக உதவி கிடைப்பதை வீம்புடன் தடுத்து வருகின்றது. முன்னர் வன்னி முகாங்களிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களில் ஓர் இலடச்த்திற்கு மேற்பட்டோர் வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் முதலிய இடங்களில் புதிய முகாங்களில் தகுந்த மறுசீரமைப்பு இன்றியும் அடிப்படை வாழ்க்கை வசதிகள் இன்றியும் மட்டுப்படுத்தப்பட்ட இடம்பெயர்வாற்றல் உடையவர்களாகவும் இன்னமும் உள்ளனர்.

சரணடைந்த இளைஞரில் ஆயிரக்கணக்கானோர் முறையான விசாரணையோ சட்டவியல் பிரதிநிதித்துவமோ அற்ற நிலையில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்துடன் கூடத் தொடர்பேதுமின்றி சிறைக்கூடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

போரானது 2009 மே 19 அன்றோடு முடிவுற்றுவிட்டது என அரசு அறிவித்ததோடு மறுசீரமைப்புப் பணிகள் மீள்கட்டுமானப் பணிகள் மீளிணக்கம் ஆகிய துறைகளில் தானெடுக்கும் முயற்சிகள் பற்றி அனைத்துலகச் சமூகத்திற்கு உறுதிமொழி வழங்கிவிட்டு அவற்றை நிறைவேற்ற மெய்யாக முயற்சிக்காது மாறாகத் தமிழர் தாயகத்தில் தென்னிலங்கையிலிருந்து சிங்கள பௌத்த மக்களைக் கொணர்ந்து குடியமர்த்தும் தன் வேலைத்திட்டத்தை வளர்ச்சித்திட்டம் என்ற போர்வையில் நிறைவேற்றி தமிழ் மக்களின் மொழி மற்றும் இறைநெறி அடையாளத்தை அழித்து வருகின்றது. இந்த இக்கட்டான நிலையில் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இத்தேர்தலில் தமிழர் அடியோடு ஆர்வமற்றவர்களாக உள்ளனர். இதனை அண்மையில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் தெளிவாகக் காட்டியுள்ளனர். இந்நிலையை இன்னுமிரு காரணிகள் மேலும் மோசமாக்கியுள்ளன. இவற்றுள் ஒன்று அரசில் தம் செல்வாக்கையும் பதவியையுமே வேண்டித் தமிழரது உண்மையான வேட்கைகளை வஞ்சனை செய்கின்ற அரசியல்வாதிகள் எம்மிடையே உள்ளனர் என்பதாகும். இவர்கள் மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு வன்முறையையும் ஊழல் வழிமுறைகளையும் கையாழுகின்றனர். அடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஏற்பட்டுவரும் பிளவுகளையும் சிதைவையும் பெரும் கவலையுடனும் ஏமாற்றத்துடனும் நாம் கண்டுவரும் நிலை. தமிழரது அடிப்படை வேட்கைகளை ஒரே குரலில் எடுத்தியம்புவதற்கான ஒற்றுமையை இது நலிவுபடுத்தி அடக்குமுறையாளரும் இரண்டகர்களும் தம் பணிகளை எளிதாகச் செய்ய வழிசெய்கின்றது.

எமது உடன்பிறப்புகள் அடிப்படை வாழ்க்கை வசதிகள் ஏதுமற்றுத் துன்புற்று, ஊழலையும் தமிழரது உண்மையான அடிப்படை உரிமைகள் பற்றிய குழப்பத்தையும் கலக்கத்தையும் எதிர்கொண்டுள்ள இவ்வேளையில் உலகத் தமிழர் பேரவையின் கீழ் ஒன்றுபட்டுள்ள புலம்பெயர்ந்த தமிழராகிய நாம் இலங்கைத் தீவில் உயிர்வாழ்வதற்கு இன்னமும் அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கும் எமது உடன்பிறப்புகளுக்கு எம் பரிவையும் கூட்டொருமையையும் முதற்கண் தெரிவித்துக் கொள்கின்றோம். அவர்களோடான எமது கூட்டொருமை, அக்கறை ஆகியவற்றின் சிறு அடையாளமாக வடகிழக்கில் இயங்குகின்ற நம்பகமிக்க அரசசார்பற்ற நிறுவனங்கள் ஊடாக உள் ஊரில் இடம்பெயர்ந்த, சிறப்பாக ஆதரவற்ற சிறுவர், கைம்பெண்கள் போன்றோருக்கு நிதியுதவி வழங்கும் பணியை ஏற்கனவே நாம் தொடங்கியுள்ளோம். மறுசீரமைப்பும் இயல்பு வாழ்க்கை நிலையும் பாதிக்கப்பட்ட அம்மக்களுக்கு வழங்கவேண்டிய பொறுப்பானது பாதிக்கப்பட்டோருக்குக்கான உதவி என்ற பெயரில் ஏராளமான நிதியுதவியைப் பெற்றுவரும் அரசுக்கே பெருமளவில் உரியதென்பதாலேயே சிறுஅடையாளமான உதவியெனக் குறிப்பிட்டுள்ளோம்.

பசி பட்டினியோடு அச்சமுற்றும் அச்சம் ஊட்டப்பட்டும் நாம் உள்ளோம். இன்றைய நிலையில் தமிழரது துயர துன்பங்களுக்கு முடிவு உண்டென்றால் அது எமது உண்மையான விடுதலையிலேயே தங்கியுள்ளது. எனவே இலங்கைத் தீவில் வாழுகின்ற எம் உடன்பிறப்புகளுக்கே எமது உண்மையான விடுதலைக்கான மூல அடிப்படைப் பொறுப்பு உள்ளது. ஆகையால் தம்வாக்குகளை இட்டு நாடாளுமன்றப் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும் போது தமிழரது விடுதலைக் குறிக்கோளுக்கு இரண்டகம் இழைக்கக்கூடிய பொய்யான அரசியல் தலைவர்களுக்கோ கட்சிகளுக்கோ ஆதரவு வழங்காது சிறீலங்காவிலும் வெளியேயும் வாழும் ஒட்டுமொத்தத் தமிழரது அடிப்படை வேட்கைகளில் பற்றுறுதியுடையோருக்கு ஆதரவு வழங்குமாறு நாம் பரிந்துரைத்து வலியுறுத்துகின்றோம்.

எமக்கு உள்ளார்ந்தமாக உள்ள தன்னாட்சி உரிமை, தமிழரது அடிப்படை வேட்கைகள், தமிழரது தேசியம், தாயகம், தன்னாட்சியுரிமை ஆகிய கோட்பாடுகளுக்குத் துணிவுடன் நிலைத்தியங்கக்கூடிய அரசியல் தலைவர்களையும் கட்சிகளையும் உலகத் தமிழர் பேரவையானது புலம்பெயர்ந்த தமிழரிடையுள்ள பல்வேறு வளங்களையும் திரட்டி ஆதரித்து அவர்களோடு சேர்ந்து பணியாற்றும்.

உலகத் தமிழர் பேரவை பற்றிய கூடுதல் தகவல்களைக் கீழே தரப்பட்டுள்ள எமது இணையத் தளத்திலிருந்து அறிந்து கொள்ளுமாறு வேண்டுகின்றேன்.

www.Globaltamilforum.org

உங்கள் உண்மையான
வண. எஸ் ஜெ. இமானுவேல்
தலைவர் – உலகத் தமிழர் பேரவை
10 மார்ச் 2010

சரத் பொன்சேகாவுக்கு எதிரான வழக்கு 16 ஆம் 17 ஆம் திகதிகளில் விசாரணை.

sarath_fonseka-02.jpgஇராணுவச் சட்டங்களை மீறினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் பொன்சேகா மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் கடற்படைத் தலைமையகத்தில் அமைந்துள்ள இராணுவ நீதி மன்றில் நடைபெறவிருப்பதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

இராணுவச் சட்டத்தின் 124 ஆம் சரத்தின் கீழ் ஒரு குற்றச்சாட்டும் 102 ஆம் சரத்தின்; கீழ் இரு குற்றச்சாட்டுக்களும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இராணுவத்துக்கு உபகரணங்கள் கொள்வனவு செய்ததில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் ஊழல்கள் தொடர்பில் மேலும் நான்கு குற்றச்சாட்டுக்கள் இராணுவச் சட்டத்தின் 109 ஆவது சரத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

ஜான்சிலா மஜீதுக்கு விருது வழங்கினார் ஹிலரி கிளின்டன்

hillary_with-majeed.jpgதுணிச்சல் மிக்க பெண்களுக்கு வழங்கப்படும் சர்வதேச உயர் விருது இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் பெண்மணியான ஜான்சிலா மஜீதுக்கு நேற்று வழங்கப்பட்டது.

வொஷிங்டனிலுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நடைபெற்ற வைபவத்தில் அமெரிக்க இராஜங்கச் செயலாளர் ஹிலரி  கிளின்டன்  இந்த விருதை வழங்கினார். இந்த விருது வழங்கும் நிகழ்வில் அமெரிக்க முதற் பெண்மணி மிச்சேல் ஒபமா கலந்துகொண்டு உரையாற்றினார்.

வடக்கு, மற்றும் கிழக்குப் பகுதிகளில் 20 வருடகாலமாக இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் பணியாற்றியமைக்காகவே ஜான்சிலா மஜீதுக்கு சர்வதேச பெண்களுக்கான உயர் விருது கிடைத்துள்ளது.
 
சர்வதேச பெண்களுக்கான உயர் விருது சர்வதேச நாடுகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 10 பேருக்கு நேற்று வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஜீ.15 நாடுகளின் அடுத்த தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ?

he_the_president.jpgஜீ.15  நாடுகளின் அடுத்த தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளாரென அறிவிக்கப்படுகின்றது. ஜீ. 15 அமைப்பில் 17 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த நாடுகளின் உச்சி மாநாடு எதிர்வரும் மே மாதம் நடைபெறும்போது அதன் புதிய தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்படவுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

அல்ஜீரியா, ஆர்ஜன்டீனா, பிரேஸில், சிலி, எகிப்து, இந்தியா, இந்தோனேஷியா, ஈரான், ஜமெய்கா, கென்யா, மலேசியா, மெக்ஸிகோ, நைஜீரியா, செனகல், ஸ்ரீலங்கா, வெனிசுலா, மற்றும் ஸிம்பாப்வே ஆகிய 17 நாடுகள் இந்த ஜீ 15 அமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்றன.

இதன் தற்போதைய தலைமைத்துவத்தை ஈரான் வகிக்கின்றது. அடுத்த தலைமைத்துவத்துக்கு மிகப்பொருத்தமானவா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே என அந்நாடுகள் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.