கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது தனது அமர்வுகளை மூடிய அறைக்குள்ளேயே நடத்தவுள்ளது.ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் கடந்த வாரம் அமைக்கப்பட்ட முன்னாள் சட்ட மா அதிபர் சி.ஆர்.டி.சில்வா தலைமையிலான இந்த நல்லிணக்க ஆணைக்குழுவானது அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள், ஆயுதப்படை அதிகாரிகள் என அதிகளவு எண்ணிக்கையானவர்களை நேர்காணவுள்ள நிலையில், அந்த அமர்வுகளைப் பார்வையிட,பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அமர்வுகளுக்கான ஏற்பாடுகள் இல்லை. “மூடிய அறைக்குள்ளேயே சகல பதிவுகளையும் நாம் மேற்கொள்வோம்” என்று சி.ஆர்.டி.சில்வா தெரிவித்திருக்கிறார்.
2002 பெப்ரவரி 21 இல் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை தோல்வியடைந்ததற்கான காரணங்கள் மற்றும் மேயில் போர் முடிவு வரையிலான நிகழ்வுகள் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நல்லிணக்க ஆணைக்குழு உறுப்பினர்களை கேட்டுள்ளõர்.
மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பான எந்தவொரு விசாரணையையும் மேற்கொள்ளுமாறு பணிக்கிறேன். பகிரங்கமாக நடத்தப்படமாட்டாது என்ற தீர்மானத்தை நீங்கள் மேற்கொள்ளக்கூடும் என்று இந்த அறிவித்தல் மூலம் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி கூறியுள்ளார்.
தனது அறிவித்தல் மூலம் அமர்வுகளின் தன்மையை ஆணைக்குழு தீர்மானித்துக்கொள்வதற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளதாகத் தென்படுகிறது.இதேவேளை, ஆணைக்குழுவானது எவரிடம் நேர்காணலை மேற்கொள்ளப்போகின்றது என்பது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள சி.ஆர்.டி.சில்வா பலர்
ஆணைக்குழு முன் ஆஜராக ஆர்வம் கொண்டிருப்பார்கள்” என்று தான் கருதுவதாகத் தெரிவித்துள்ளார். “ஜனாதிபதியின் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்த காலப்பகுதியில் இடம்பெற்ற விடயங்களுடன் தொடர்புபட்டவர்கள் குறித்து மட்டுமே நாம் பரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் 2002 பெப்ரவரி 22 இல் நிரந்தர யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தது. விசாரணைக்குக் கடந்த 7 ஆண்டுகள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டது ஏன் என்று கேட்கப்பட்டபோது, “இது அரசின் கொள்கை சம்பந்தப்பட்ட விடயம். என்னால் பதில் கூற முடியாது” என்று சி.ஆர்.டி.சில்வா கூறியுள்ளார்.
இந்த வருடம் நவம்பர் 15 இற்கு முன்னர் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை கையாள்வது குறித்து அரசுக்கு ஏற்பட்டுள்ள சர்வதேச மட்டத்திலான அழுத்தங்களையடுத்தா இந்த உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது என்று சி.ஆர்.டி.சில்வாவிடம் கேட்கப்பட்டபோது, “ஆணைக்குழுவானது இவையாவற்றையும் உள்ளடக்க வேண்டியிருக்கிறது என்று கூறியுள்ளார்.
