2010

2010

புறக்கோட்டையில் இன்று அதிகாலை கிரனைட் தாக்குதல்

கொழும்பு, புறக்கோட்டை போதிராஜ மாவத்தையில் இன்று அதிகாலை இடம்பெற்ற கிரனைட் தாக்குதலில் ஒன்பது பேர் சிறுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாகப் பொலிஸ் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர். காயம் அடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

தென் கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதியாக கலாநிதி சபீனா இம்தியாஸ் நியமனம்

safeena_dean.gifதென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட பீடாதிபதியாக கலாநிதி சபீனா இம்தியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டத்தில் கலாநிதி பட்டம் பெற்ற முதல் முஸ்லிம் பெண்மணி மற்றும் முதல் முஸ்லிம் பெண் பீடாதிபதி என்ற பெருமை இவரையேசாரும்.

கலாநிதி சபீனா இம்தியாஸ் பீடாதிபதியாக நியமிக்கப்பட முன்னர் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முக்கிய பல பதவிகளில் பணியாற்றியுள்ளார். கல்முனையை பிறப்பிடமாக கொண்ட சபீனா இம்தியாஸ், கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மற்றும் பேராதனை பல்கலைக்கழம் என்பவற்றின் பழைய மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது

கடலுக்குள் புதிய நகரம்: 450 ஏக்கரில் நிர்மாணம்

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கடலை நிரப்பி 450 ஏக்கரில் புதிய நகரமொன்றை நிர்மாணிக்கும் பணிகள் இந்த வருட இறுதிக்குள் ஆரம்பிக்க உள்ளதாக துறைமுக அதிகார சபைத் தலைவர் பிரியந்த விக்ரம கூறினார். துறைமுக அதிகார சபையில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது;

கொழும்பு துறைமுகப் பகுதியில் 285 ஹெக்டயர் அளவு நிரப்பி விரிவுபடுத்தப்படுகிறது. இதனுடன் இணைந்ததாக கொழும்பு துறைமுகத்தில் இருந்து காலிமுகத்திடல் வரையான 450 ஏக்கர் பகுதி நிரப்பப்பட்டு புதிய நகரமொன்று உருவாக்கப்படும். கடலை நிரப்பி ஆரம்பக் கட்ட பணிகளை துறைமுக அதிகார சபை மேற்கொள்ளும்.

இதற்காக 350 மில்லியன் டொலர் செலவிடப்பட உள்ளது. திட்டமிட்ட முறையில் புதிய நகரம் நிர்மாணிக்கப்படும். இதன் மூலமாக கொழும்பு நகரின் நெரிசல் குறைவடையும். இது தவிர தெஹிவளையில் இருந்து கொள்ளுபிட்டிவரை கடலோரமாக நிர்மாணிக்கப்பட்டு வரும் பாதையை காலிமுகத்திடல் வரை நீடிக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார். இதன்படி காலி முகத்திடலில் இருந்து கொள்ளுபிட்டி வரையான கரையோரமும் நிரப்பப்படும்.

பாணின் விலை 4 ரூபாவினால் அதிகரிப்பு

பாணின் விலை நேற்று நள்ளிரவு முதல் 4 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக பேக்கரி உரிமையாளர் சங்கம் நேற்று தெரிவித்தது.

மேற்படி சங்கத்தின் நிறைவேற்றுக் குழு நேற்று கூடியபோதே இந்த தீர்மானத்தை எடுத்ததாக சங்கத்தின் செயலாளர் நிமல் பெரேரா தெரிவித்தார்.

கோதுமையின் இறக்குமதி தீர்வை, மீண்டும் அமுல்படுத்தப் பட்டுள்ளதையடுத்து மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள தாலேயே பாணின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாணின் விலை அதிகரிக்கப்பட்ட தைப் போன்றே கோதுமை மாவினால் தயாரிக்கப்படும் ஏனைய உணவு வகைகளின் விலையும் அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்

எம்.டரஸ்மனுக்கும் அரசிற்குமிடையே கருத்து முரண்பாடு

222.jpgஇலங் கையில் இடம்பெறும் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் 2008 ஆம் சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழுவில் அங்கம் வகித்தவரான எம்.டரஸ்மன் தற்போது இலங்கையின் யுத்தக் குற்றங்கள் தொடர்பான வல்லுனர் குழுவின் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது

சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழுவில் அங்கம்வகித்த போது அனுபவமிக்கவரான முன்னாள் சட்டமா அதிபர் எம்.டரஸ்மனுக்கும் இலங்கை அரசிற்குமிடையே பாரிய கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டமை குறிப்பிடதக்கது.

சல்மான்கான் நேற்று இலங்கை வருகை

salman.jpg‘ரெடி’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக பிரபல ஹிந்தித் திரைப்பட நடிகர் சல்மான் கான் நேற்று இலங்கை வந்து சேர்ந்தார். இப்படத்தில் சல்மான்கான் நடிக்கும் முதல்காட்சி நேற்றுக் கொழும்பில் படமாக்கப்பட்டது.

கொழும்பையும் அதனைச்சூழவு ள்ள பகுதிகளிலுமே ‘ரெடி’ திரைப் படத்தின் படப்பிடிப்பு இடம்பெற வுள்ளது. இத்திரைப்படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பு முழுவதும் இலங்கையிலேயே இடம்பெறவுள்ளது.

வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக கே.பி?

KP_Selvarajah_Pathmanathanநடைபெற வுள்ள வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக விடுதலைப்புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளரும், சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளராகவும் விளங்கிய கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் களமிறக்கப்படவுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் முன்னணியின் வேட்பாளராக இவர் நிறுத்தப்படவுள்ளதாகவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. இதற்காக கே.பி இற்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை கே.பி மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து இலங்கை வந்துள்ள 20 தமிழ் பிரதிநிதிகள் அடங்கிய குழு வடக்கிற்கு விஜயம் செய்துள்ளதாகவும், அரசாங்கம் இவர்களை சகல பாதுகாப்புகளோடு அழைத்துச் சென்றதாகவும் முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவின் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். அரசின் விமானமொன்றில் பலாலி படைமுகாமிற்குச் சென்ற இக்குழுவினர் பின்னர் கிளிநொச்சிக்கு சென்றதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இத்கவலை வெளியிட்டார்.

யாழ். சிமெந்து தொழிற்சாலை – உயர்மட்டக்குழு நாளை யாழ். வருகிறது.

KKS_Cement_Factoryகாங்கேசன் துறை சிமெந்து கூட்டுத்தாபனம், லங்கா சிமெந்து நிறுவனம் ஆகியவற்றின் தொழிற்சாலைகளை மீண்டும் இயங்கச் செய்வது குறித்து ஆராய உயர்மட்டக் குழுவொன்று நாளை (24-06-2010) யாழ்ப்பாணம் வரவுள்ளது. இவ்விரு நிறுவனங்களினதும் தலைவாராக நியமனம் பெற்றுள்ள தேசமானி எஸ.ஜே.பரணகம தலைமையில் கைத்தொழில்துறை அமைச்சின் செயலாளர்கள் மற்றும் உயர்அதிகாரிகள் நாளை வருகை தருகின்றனர். 

தொழில்சாலையின் செயற்பாடுகள் பற்றி விளக்கவதற்காக செய்தியாளர் சந்திப்பு ஒன்று நாளைக் காலை 9 மணிக்கு இணுவிலில் உள்ள லங்கா சிமெந்து நிறுவன அலவலகத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மடு ஆலயத் திருவிழா இன்று ஆரம்பமானது.

madu_churchவரலாற்றுச் சிறப்பு மிக்க புனித மடுமாதா ஆலையத் திருவிழா இன்று (June 23 2010) புதன் கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்று ஆரம்பமான இத்திருவிழா ஒன்பது நாட்கள் நடைபெற்று யூலை மாதம் 2ம் திகதி திருப்பலி ஒப்புக் கொடுப்புடன் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திருவிழாவிற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மடுஆலய பரிபாலன சபை தெரிவித்துள்ளது.

ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் நலன்கருதி தங்குமிடம், கழிவறை, குடிநீர், உணவு போன்றவற்றிற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆலயத்திற்கு வருகை தருவோர் மது பாவனையைத் தவிர்த்து புனிதம் பேணுமாறும் ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். 

வருடந்தோறும் நடைபெறும் மடு ஆலயத் திருவிழாவிற்கு இலங்கை முழுவதிலுமுள்ள கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி ஏனைய மதங்களைச் சேர்ந்தவர்களும் பல்லாயிரக் கணக்கில் வருகை புரிகின்றமை குறிப்பிடத்தக்கது.

செம்மொழி மாநாட்டில் மலையக ‘காமன் கூத்து’

நாளை (June 24 2010)  தமிழ் நாடு கோவையில் ஆரம்பமாகவுள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் இலங்கை மலையக மக்களின் பாரம்பரிய கலையான ‘காமன் கூத்து’ அரங்கேற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஹட்டன் தமிழ்ச்சங்கத் தலைவரும். கவிஞருமான சு.முரளிதரன் மேற்கொண்டுள்ளர்.  செம்மொழி மாநாட்டின் இலங்கைக் குழுத்தலைவரான பேராசிரியர் கா.சிவத்தம்பியின் வேண்டுகோளுக்கிணங்கவே காமன் கூத்துக் கலைஞர்கள்  அங்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலையத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர் இரா.பிரான்சிஸ் ஹெலன் நெறியாள்கையில் 14 பேர் கலைஞர்கள் அடங்கிய குழுவினர் இதற்காக தமிழகம் செல்கின்றனர்.