2010

2010

யாழில் பெற்றோல், டீசல் விலை குறைப்பு

sri-lanka-petroleum.jpgஅமைச்சரவை தீர்மானத்தின்படி இன்றிலிருந்து யாழில் பெற்றோல் மற்றும் டீசலின் விலை குறைக்கப்படவுள்ளது. இதன்படி பெற்றோல் ரூபா 2.40 த்தாலும் . டீசல் மற்றும் மண்னெண்ணை ரூபா 1.90 த்தாலும் விலை குறைக்கப்படவுள்ளது.

வைகோ, நெடுமாறன் கைது

yko_03.jpgசென்னை யில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகத்தை மூடக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா பாண்டியன், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழநெடுமாறன், பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன், புதிய பார்வை இதுழாசிரியர் மா நடராசன் உட்பட ஏராளமானோரை தமிழ் நாடு பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படுகின்றமையைக் கண்டித்தும், ஐ.நா நிபுணர் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க மறுக்கும் மஹிந்த அரசுக்கு தமிழகத்தில் தூதரகம் இயங்கக் கூடாது என்று தெரிவித்தும் இலங்கை அரசுக்கு எதிராக சென்னை மைலாப்பூர் பகுதியில் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

அசின் அரசியல் – அரசியல்ரீதியில் சரியா? (Political Correctness) – அசினின் யாழ்-வன்னி விஜயமும் நடிகர் சங்கத்தின் U turn உம்

Sarathkumar_ActorAsin_Actressஇலங்கையில் இடம்பெற்ற இந்திய திரைப்பட விழாவில் ஆரம்பமான தமிழக சினிமாச் சலசலப்பு இன்னமும் ஓயவில்லை. திரைப்பட விழாவின் பின் வன்னி மக்களின் அவலங்களுக்கு உதவும் – மக்கள் உறவைப் பலப்படுத்தும் முயற்சியில் இறங்கிய தென்னிந்திய திரைப்பட நடிகை அசின், சல்மன்கான் ஆகியோர் தங்கள் முயற்சிகளில் குறிப்பிடத்தக்க வெற்றியைக் கண்டுள்ளனர். அவர்கள் விஜயம் செய்த பகுதிகளில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் அவர்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளனர்.

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராதராவி தங்கள் தீர்மானத்தை மீறி இலங்கை சென்றதற்காக அசினுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து இருந்தார். இலங்கையில் தமிழர்களின் நிலைக்கு இலங்கை அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், படப்பிடிப்புக்காக திரைப் படவிழாவிற்காக நடிகர் நடிகைகள் இலங்கை செல்ல வேண்டாம் என்றும் தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு கேட்டுக்கொண்டது. இந்த வேண்டுகோளை ஏற்று தமிழ் நடிகர் நடிகைகள் படப்பிடிப்புக்காக இலங்கைக்கு செல்லவில்லை.

ஆனால் தென்னிந்திய நடிகையும் தமிழ் திரையுலகில் முன்னணிக் கதாநாயகியுமான அசின் இதனையும் மீறி திரைப்பட விழாவில் கலந்து கொண்டதுடன் ‘ரெடி’ என்ற ஹிந்திப்படத்தின் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டுள்ளார். தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை வன்மையாக மறுத்துள்ள அசின் அதற்காக அஞ்சப் போவதில்லை என்றும் தெரிவித்து உள்ளார்.

வவுனியா யாழ்ப்பாணத்தில் நலத்திட்டங்களை முன்னெடுக்கும் நடிகை அசின் யாழ்ப்பாணத்தில் கண் சிகிச்சை முகாமை நடத்தி உள்ளதுடன் பாதிக்கப்பட்ட பெண் பிள்ளைகளையும் தத்தெடுக்கப் போவதாக அறிவித்து உள்ளார்.

தனது யாழ் விஜயம் பற்றி அளித்துள்ள பேட்டியில் வன்னி யாழ்ப்பாண மக்கள் தன்னைப் பரிவோடு அக்கா என்று அழைத்ததாகவும் விஜய் அண்ணாவையும் சுரியா அண்ணாவையும் வரச்சொல்லிக் கேட்டதாகவும் அசின் தெரிவித்துள்ளார்.

நடிகை ஆசினுடைய யாழ்ப்பாண விஜயமும் அவர் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஏற்படுத்திய உறவும் தென்னிந்திய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முடிவில் யூ ரேன் – U Turn எடுக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது. இது இலங்கை அரசின் மக்கள் தொடர்பு – மக்கள் உறவு விடயத்தில் அதற்கு சாதகமாக அமைந்துள்ளது. இலங்கை அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பவர்கள் இன்னமும் பழைய பஞ்சாங்க போராட்ட முறைகளையே கைக்கொள்வதால் அவர்களுக்கு இலங்கை அரசின் அரசியல் நகர்வை எதிர்கொள்வதில் இவ்வாறான சிரமங்கள் ஏற்பட்டு விடுகின்றது

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிடுவது பற்றி நடிகர் சங்கம் கூடி ஆராயவுள்ளதாக அதன் தலைவர் சரத்குமார் தெரிவித்து உள்ளார். ‘நடிகர் நடிகைகள் அனைவரும் இலங்கை செல்வது பற்றி நடிகர் சங்க செயற்குழுவில் ஆலோசித்து முடிவு செய்யப்படும்’ என்று அவர் கூறியுள்ளார்.  அவர் மேலும் தெரிவிக்கையில் ‘இலங்கையில் நடந்த சர்வதேச பட விழாவுக்கு செல்லக்கூடாது என்று தான் தடை விதிக்கப்பட்டது.’ என்றும் ‘அசின் தொழில்ரீதியாகத்தான் இலங்கை சென்றுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கும் முடிவை மறுபரிசீலனை செய்வோம்’ என்றும் அறிவித்துள்ளார்.

நடிகை அசினுடைய இலங்கை விஜயம் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள போதும் புலம்பெயர் நாடுகளில் அதற்கு கடுமையான எதிர்ப்பு இருந்து கொண்டே உள்ளது. மேலும் அரசியல் ரீதியாக இப்பயணம் சரியானதா என்ற விவாதமும் இதற்கு மேலாக எழுப்பப்படுகின்றது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரை அவர்கள் அரசியல் ரீதியாக இதன் சரி பிழைகளை ஆராயும் நிலையில் இல்லை. அரசியல் ரீதியாக சரி என்று முன்னெடுக்கப்பட்ட முடிவுகளே அவர்களை இந்நிலைக்குத் தள்ளியும் இருந்தது.

நடிகை அசினுடைய இலங்கை விஜயமோ அல்லது தமிழக நடிகர் நடிகைகளின் இலங்கை விஜயமோ இலங்கைத் தமிழர்களின் புரையோடிப் போயுள்ள பிரச்சினைக்குத் தீர்வாக அமையப் போவதில்லை. ஆனால் அவை அம்மக்களுக்கு ஒரு கொஞ்சநேர சந்தோசத்தை அளிக்கும். சிறு ஆறுதலைக் கொடுக்கும். அது அரசியல் ரீதியில் தவறா சரியா என்பதை விவாதிக்கும் அடிப்படைச் செழிப்பு அவர்களிடம் இல்லை.

வவுனியாவில் எரிபொருள் விநியோக உப நிலையம் – வடபகுதி மக்களுக்கு விமோசனம்

sri-lanka-petroleum.jpgவவுனியாவுக்கு வடக்கே எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்வதற்கான எரிபொருள் விநியோக உப நிலையம் நேற்று வவுனியாவில் திறந்துவைக்கப்பட்டது. இதுவரை காலமும் அனுராதபுரத்திலிருந்தே எரிபொருள் விநியோகம் பெளசர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இப்போது ரயில் மூலம் வட பகுதிக்கான எரிபொருள் விநியோகமும் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பெற்றோலியத் துறை அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த நேற்று வவுனியாவில் எரிபொருள் விநியோக உப நிலையத்தை திறந்து வைத்தார். அத்துடன் வன்னி மாவட்டத்தில் 13 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறந்து வைக்கும் திட்டத்தின் கீழ் எட்டாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை அமைச்சர் சுசில் கிளிநொச்சி நகரில் திறந்துவைத்தார்.

பெளஸர்கள் மூலம் எரிபொருள் வட பகுதிக்கு கொண்டு செல்வதால் போக்குவரத்துச் செலவுடனேயே வடபகுதி மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ரயில்கள் மூலம் எரிபொருட்களை வட பகுதிக்கு கொண்டு செல்வதன் ஊடாக செலவினம் குறைக்கப்படுவதுடன் அந்த செலவினத் தொகையை நிவாரணமாக வடபகுதி மக்களுக்கே பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் அமைச்சர் சுசில் தெரிவித்தார்.

1989 களில் வவுனியாவில் இயங்கிவந்த எரிபொருள் விநியோக நிலையம் கடந்த காலங்களில் கவனிப்பாரற்ற நிலையில் இருந்தது. வவுனியா குட்செட் வீதியில் ரயில் நிலையத்தை அண்டிய பகுதியிலமைந்துள்ள மேற்படி விநியோக உப நிலையம் மீண்டும் நேற்று முதல் இயங்க ஆரம்பித்துள்ளது. இதேவேளை கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் புதிய எரிபொருள் நிலையங்களை அமைத்து வருகிறது.

மீண்டும் இன்று (14ம் திகதி, எரிபொருள் நிரப்பிச் செல்லும் சரக்கு ரயில் வவுனியா நோக்கி புறப்படவுள்ளது. அனுராதபுரம் எரிபொருள் விநியோக உப நிலையத்திலிருந்தும் வவுனியா உப நிலையத்திற்கும் எரிபொருள் அனுப்பப்படவுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உகண்டா குண்டு வெடிப்பில் கொட்டாஞ்சேனை ராமராஜா கிருஷ்ணராஜா (50) பலி

உகண்டா குண்டுவெடிப்பில் சிக்கி உயிரிழந்த இலங்கையரின் சடலத்தை இலங்கைக்கு எடுத்து வருவதற்கான நடவடிக்கைகளை வெளி விவகார அமைச்சு கென்னிய உயர் ஸ்தானிகராலயத்துடன் இணைந்து மேற்கொண்டு வருவதாக அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித் தார்.

கொழும்பு 13, சென். பெனடிக் மாவத்தையைச் சேர்ந்த ராமராஜா கிருஷ்ணராஜா (50) எனும் குடும்பஸ்தரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர் 2008ஆம் ஆண்டு முதல் உகண்டாவிலுள்ள இந்திய கம்பனியொன்றில் விற்பனைப் பிரதிநிதியாக கடமையாற்றி வந்துள்ளார். இக்குண்டு வெடிப்புகளில் 74 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்புக்கு வெளியில் முதன்முறையாக கிளிநொச்சியில் இன்று அமைச்சரவைக் கூட்டம்

p.jpgஅரசாங் கத்தின் அமைச்சரவைக் கூட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில் கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக கொழும்புக்கு வெளியில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. கிளிநொச்சி படைத் தலைமையகத்தில் அமைச்சரவை கூடவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் கூறியது.

கொழும்புக்கு வெளியில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் அமைச்சரவைக் கூட்டங்களை நடாத்த அமைச்சரவை தீர்மானித்திருந்தது. இதன் பிரகாரம் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் கிளிநொச்சியில் நடத்தப்படுகிறது. அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் பிரதேச அபிவிருத்தி தொடர்பான மீளாய்வுக் கூட்டம் நடைபெறும். மீள்குடியேற்றப்பட்ட மக்களையும் ஜனாதிபதி சந்தித்து பேச உள்ளார். இன்று மாலை இரணைமடுவில் ஜனாதிபதி தலைமையில் பொதுக் கூட்டமொன்றும் நடாத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் கூறியது.
இதனை குறிக்கும் வகையில் பல அபிவிருத்தித் திட்டங்களும் அங்கு தொடங்கிவைக்கப்பட்டுள்ளன.

கே பி யின் தற்போதைய நிலையைக் காட்டும் புதிய படம்!

Kumaran_Pathmanathan_New_Photoகே பி என்று அறியப்பட்ட குமரன் பத்மநாதனுடைய புதிய படம் ஒன்று இணையங்களில் உலாவருகின்றது. விடுதலைப் புலிகளின் அதிமுக்கிய நபரான இவரது உண்மைத் தோற்றம் கடந்த பல ஆண்டுகளாக அறியப்படாத இரகசியமாகவே பேணப்பட்டது. விடுதலைப் புலிகளின் ஆரம்ப காலங்களில் எடுக்கப்பட்ட படங்களால் மட்டுமே இவர் அறியப்பட்டு வந்தார்.

Kumaran_Pathmanathan_New_Photoதமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளராக அறிவிக்கப்பட்ட போது ஒரு படம் வெளியிடப்பட்டு இருந்த போதும் அது கே பியின் உண்மைத் தோற்றத்தை வெளிப்படுத்தி இருக்கவில்லை. அதன்பின் இலங்கை அரசால் கைதுசெய்யப்பட்ட பின் வெளியிடப்பட்ட படமே பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.

தற்போது கே பி யின் புதியபடம் ஒன்று இணையங்களில் உலாவவிடப்பட்டு உள்ளது. கைத்தொலைபேசியுடனும் சிரித்த முகத்துடனும் சந்தோசமான மனநிலையுடன் இவர் காணப்படுகின்றார். இப்படம் இலங்கை அரசினால் வெளியிடப்பட்ட படமா அல்லது கே பி க்கு எதிரானவர்களால் கே பி இலங்கை அரசின் ஆதரவில் மகிழ்ச்சியாக உள்ளார் என்பதை வெளிப்படுத்த அனுமதியற்று எடுக்கப்பட்ட படமா என்பது தெரியவில்லை.

அமிர்தலிங்கம். யோகேஸ்வரன் ஆகியோரது 21வது நினைவுநாள் இன்று நினைவு கூரப்பட்டது.

Amirthalingam_A_TULFதமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான திரு.அ.அமிர்தலிங்கம் அவர்களினதும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான திரு.வெ.யோகேஸ்வரன் அவர்களினதும் 21வது நினைவு தினம் இன்று தமிழர் விடுதலைக்கூட்டணியின் யாழ்.மாவட்டத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

கூட்டணியின் யாழ். மாநகரசபை உறுப்பினர் இரா.சங்கையா தலைமையில்  இன்று முற்பகல் 10.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்ற இந்நிகழ்வில் ஈகைச்சுடரை கூட்டணியின் முன்னால் உடுவில் கிராமசபை தலைவர் ச.முத்துலிங்கம்.  கூட்டணியின் முத்த உறுப்பினர்களில் ஒருவரான த.பூலோகரட்ணம் ஆகியோர் ஏற்றினர்.  அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகியோரது உருவப்படங்களுக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலத்தப்பட்டது.

தொடர்ந்து நினைவுரைகள் இரா.சங்கையா தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் செ.முத்துலிங்கம், முன்னாள் மாநகரசபை உறுப்பினர் செ. விஜயரத்தினம், ச.முத்துலிங்கம், திருஞானசம்பந்தர் ஆகியோர் நினைவுரைகள் நிகழ்த்த நன்றியுரையினை தமிழர் விடுதலைக்கூட்டணியின் ஊடகச்செயலாளர் த.கஜன் நிகழ்த்தினார். தமிழர் விடுதலைக்கூட்டணியின் ஆதரவாளர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

”தர்சிகாவின் மரணம் குறித்த உண்மை நிலை தெரிவது அத்தியாவசியமானது.” ஈ.பி.டி.பி அறிக்கை!

மருத்துவமாது தர்சிகாவின் மரணம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு உண்மைகள் வெளிவரவேண்டும் என ஈ.பி.டி.பி. கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 ‘வேலணை மத்திய மருந்தகத்தில் குடும்பநல உத்தியோகத்தராகப் பணியாற்றி கடந்த 10ஆம் திகதி மரணமடைந்த கைதடி தெற்கைச் செர்ந்த தர்சிகா என்ற பெண்ணின் மரணம் தொடர்பர்க மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் நிலவுகின்றன. இது தொடர்பாக ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவோடு பல்வேறு தரப்பினர் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில் இம்மரணம் தொடர்பான விசாரணைகள் தற்போது ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. இவ்விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு மக்கள் மத்தயில் நிலவுகின்ற சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும். குறித்த மரணம் தெர்டர்பாக மக்கள் மத்தியில் சந்தேகம் நிலவுவதால் தீவப்பகுதி உட்பட யாழ்.குடாநாட்டில் ஒருவித பதற்ற நிலை உருவாகி வருகின்றது. எனவே, விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு உண்மை நிலை பொதுமக்களுக்கு தெரிய வேண்டியது அத்தியாவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை, தர்சிகாவின் இறுதிக் கிரிகைகள் நேற்று கைதடி தெற்கிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. யாழ் மாவட்ட குடும்ப நல சுகாதார சேவைகள் ஊழியர்கள் அனைவரும் கறுப்புப்பட்டி அணிந்து தர்சிகாவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பிரேத ஊர்வலம் கைதடிச் சந்தியை அடைந்தபோது, சந்தியில் நின்று அரை மணிநேரம் வரையில் மக்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்துக்கள் சில நிமிடங்கள் தடைப்பட்டன.

பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியுமென இஸ்லாம் வலியுறுத்து – அமைச்சர் பீரிஸ்

gl.jpgஇனங்களுக் கிடையில் புரிந்துணர்வு, நல்லெண்ணம் ஏற்படுவதன் மூலம் சமாதானத்தைக் கட்டியெழுப்ப முடியும். கருத்துக்களை பரிமாறி பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கூறினார். கொழும்பு சினமன் லேக் சைட் ஹோட்டலில் நேற்று முன்தினம் (11) நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய கருத்தரங்கினை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜம்மியதுல் இஷாஅதுல் அஹ்லுஸ் ஸ¤ன்னா அமைப்பு ஏற்பாடு செய்த இக் கருத்தரங்கிற்கு மேல் மாகாண ஆளுனர் அலவி மெளலானா தலைமை வகித்தார்..இந்தியா, மாலைதீவு, பாகிஸ்தான், கட்டார், எகிப்து, சவூதி அரேபியா, யமன், லிபியா உட்பட பல இஸ்லாமிய நாடுகளில் மார்க்க அறிஞர்கள் இலங்கையின் பல பாகங்களையும் சேர்ந்த 700 க்கும் மேற்பட்ட உலமாக்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் உட்பட அரசியல் பிரமுகர்கள், முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் பங்குபற்றிய இக் கருத்தரங்கில் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தொடர்ந்து உரையாற்றும் போது; தற்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் 7.1 ஆக காணப்படுகின்றது. நாட்டில் தற்போது அமைதியான சூழ்நிலை காணப்படுவதன் காரணமாக இந்த வளர்ச்சி வீதம் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

நாட்டில் சமாதானத்தை உறுதிப்படுத்து வதன் மூலம் எமக்கிடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். இனங்களுக்கிடையில் பரஸ்பர புரிந்துணர்வும் நல்லுறவும் ஏற்படுவதன் மூலமாக நாட்டில் சமாதானத்தை இலகு வாக கட்டியெழுப்பலாம். இனங்களுக் கிடையே முரண்பாடுகளை கலைப்பதற்கு ஒவ்வொருவரிடமும் நல்லெண்ணத்தை கட்டியெழுப்ப வேண்டும்.

ஆயுதக் கலாசாரமும், போராட்டங்களும் உலகில் சமாதானத்திற்கு தடையாக உள்ளது. சமய விழுமியங்களின் அடிப்படையில் செயல்பட்டால் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்துக் கொள்ள முடியும். இன்றைய கால கட்டத்தில் இது போன்றதொரு உலக சமாதான மாநாடு இலங்கையில் நடைபெறுவது மிகப் பொருத்தமானது. மூன்று தசாப்த கால யுத்தத்திற்குப் பின்னர் நாட்டில் அமைதியான சூழ்நிலையில் சமாதானத்தை வலியுறுத்தும் இந்த மாநாடு எமது நாட்டிற்கு மிகவும் அவசியமானதொன்றாகும்.

இஸ்லாம் சாந்தி சமாதானத்தை வலியுறுத்துகிறது. புனித அல்குர்ஆனும், இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாக்கும் உலகில் முழுமையாக பின்பற்றப்படுமேயானால் எந்தப் பிரச்சினைகளுக்கும் வழி ஏற்படாது. புனித அல்குர்ஆனையும், அல்ஹதீஸையும் முழுமையாக படிக்கும் ஒரு மனிதன் ஒரு போதும் வழிதவற மாட்டான் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உண்டு.

எமக்கிடையேயான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணமுடியும் என்பதை புனித இஸ்லாம் வலியுறத் துகின்றது. அதற்காகவே ‘சூறா’ அமைப்பு முறை இஸ்லாம் சமயத்தில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. அயல் வீட்டாரை நேசிக்கும் பண்பும் நட்புறவும் மனித சமுதாயத்தை மேம்பாடடைய செய்யும். அயலாரை நேசிக்கும் இஸ்லாத்தின் உயரிய பண்பை கற்றுக்கொண்ட எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எமது அயல் நாடான மாலைதீவில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்கு சுமுகமான தீர்வை பெற்றுக்கொடுத்தார்.

இது எம் அனைவரிற்கும் சிறந்ததொரு முன்னு தாரணமாகும். இந்த வழியில் பயணித்து அனைத்து தரப்புக்களும் ஒன்றுபட்டு புரிந்துணர்வுடன் செயல்பட முடிந்தால் எமது நாட்டிலும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வை பெற்று சமாதானத்தை எட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த சமாதான மாநாட்டில் பங்குபற்ற வருகைதந்துள்ள இஸ்லாமிய நாடுகளின் அறிஞர்களை இலங்கை அரசு சார்பில் வரவேற்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். இந்த மகாநாட்டினை சிறப்பாக ஒழுங்கு செய்தமை குறித்து நன்றி தெரிவிக்கின்றேன் என்றார்.