வவுனியாவில் எரிபொருள் விநியோக உப நிலையம் – வடபகுதி மக்களுக்கு விமோசனம்

sri-lanka-petroleum.jpgவவுனியாவுக்கு வடக்கே எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்வதற்கான எரிபொருள் விநியோக உப நிலையம் நேற்று வவுனியாவில் திறந்துவைக்கப்பட்டது. இதுவரை காலமும் அனுராதபுரத்திலிருந்தே எரிபொருள் விநியோகம் பெளசர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இப்போது ரயில் மூலம் வட பகுதிக்கான எரிபொருள் விநியோகமும் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பெற்றோலியத் துறை அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த நேற்று வவுனியாவில் எரிபொருள் விநியோக உப நிலையத்தை திறந்து வைத்தார். அத்துடன் வன்னி மாவட்டத்தில் 13 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறந்து வைக்கும் திட்டத்தின் கீழ் எட்டாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை அமைச்சர் சுசில் கிளிநொச்சி நகரில் திறந்துவைத்தார்.

பெளஸர்கள் மூலம் எரிபொருள் வட பகுதிக்கு கொண்டு செல்வதால் போக்குவரத்துச் செலவுடனேயே வடபகுதி மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ரயில்கள் மூலம் எரிபொருட்களை வட பகுதிக்கு கொண்டு செல்வதன் ஊடாக செலவினம் குறைக்கப்படுவதுடன் அந்த செலவினத் தொகையை நிவாரணமாக வடபகுதி மக்களுக்கே பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் அமைச்சர் சுசில் தெரிவித்தார்.

1989 களில் வவுனியாவில் இயங்கிவந்த எரிபொருள் விநியோக நிலையம் கடந்த காலங்களில் கவனிப்பாரற்ற நிலையில் இருந்தது. வவுனியா குட்செட் வீதியில் ரயில் நிலையத்தை அண்டிய பகுதியிலமைந்துள்ள மேற்படி விநியோக உப நிலையம் மீண்டும் நேற்று முதல் இயங்க ஆரம்பித்துள்ளது. இதேவேளை கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் புதிய எரிபொருள் நிலையங்களை அமைத்து வருகிறது.

மீண்டும் இன்று (14ம் திகதி, எரிபொருள் நிரப்பிச் செல்லும் சரக்கு ரயில் வவுனியா நோக்கி புறப்படவுள்ளது. அனுராதபுரம் எரிபொருள் விநியோக உப நிலையத்திலிருந்தும் வவுனியா உப நிலையத்திற்கும் எரிபொருள் அனுப்பப்படவுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *