இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபது 20 சர்வதேச போட்டி ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் பாகிஸ்தான் அணிக்கு அதிரடி ஆட்டக்காரர் ஷஹீட் அப்ரிடி தலைவராக செயல்படவுள்ளார்.
அத்துடன் அண்மையில் நடந்த இருபது20 உலகக் கிண்ணத்தில் சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான் அணி, கடைசியக நடந்த இலங்கையுடனான ஒருநாள் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளிலும் இலகு வெற்றியீட்டியது. எனவே, இன்றைய தினம் பாகிஸ்தான் அணி இலங்கைக்கு கடும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறத்தில் சங்கக்கார தலைமையிலான இலங்கை அணி இருபது 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்த பழியை தீர்ப்பதற்கு இன்று முயற்சிக்கும். நடந்து முடிந்த பாகிஸ்தானுடனான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை கைப்பற்றிய இலங்கை அணி இருபது20 போட்டியையும் இலகுவில் விட்டுக்கொடுக்காது என்பது நிச்சயம்.
இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இதுவரை 5 இருபது 20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் பாகிஸ்தான் 3 போட்டிகளிலும் இலங்கை 2 போட்டிகளிலும் வெற்றியீட்டியுள்ளன.
சனத் ஜயசூரியவுடன் ஆரம்ப துடுப்பட்ட வீரராக மஹேல உடவத்த களமிறங்க வாய்ப்பு உள்ளதாக தெரியவருகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரே இருபது20 போட்டியாக நடைபெறும் ஆட்டம் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.