August

August

மலேசியத் தூதரகம் முன் யேர்மன் தமிழர்கள் போராட்டம்

மலேசியா அரசு இலங்கை அரசுடன் இணைந்து மேற்கொண்ட ஐனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கையைக் கண்டித்தும். வவுனியாத் தடுப்பு முகாம்களில் உள்ள தமிழ் மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரியும் யேர்மனி பேர்லின் நகரில் அமைந்துள்ள மலேசியத் தூதரகம் மற்றும் பிராங்போட் நகரில் அமைந்துள்ள மலேசியத் துணைத் தூதரகம் என்பவற்றை நோக்கி யேர்மனி வாழ் தமிழ் மக்களால் கண்டன ஊர்வலங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது

பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இவ் ஊர்வலங்களில் மலேசிய நாட்டின் நடவடிக்கையைக் கண்டித்து பாதாதைகள் தமிழ்மக்களால் தாங்கிச் செல்லப்பட்டது.

வன்னிப் பகுதியில் கையடக்கத் தொலைபேசி வலையமைப்பு

teli00000.jpgஇலங் கையின் மிகப்பெரிய கையடக்கத் தொலைபேசி வலையமைப்பாளர்களான டயலொக் நிறுவனத்தினர், முதன்முறையாக வன்னி நிலப்பரப்பில் தமது வலையமைப்பை ஆரம்பித்துள்ளதாகக் கூறியுள்ளனர்.  இவர்கள் கூற்றுப்படி, கிட்டத்தட்ட 10 மில்லியன் டொலர்கள் செலவில் 60 நிலையங்கள் வன்னி நிலப்பரப்பில் அமைக்கப்படவுள்ளன. ஆனால், அங்குள்ள ராணுவத்தினரில் நூற்றுக்கணக்கானவர்களுக்குத் தான் முதலில் இணைப்புகள் வழங்கப்படவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்ட பின்னர் மேலதிக தொலைத்தொடர்பு கோபுரங்கள் கட்டுவதற்கு அரசு அனுமதியளிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது கிளிநொச்சி, ஆனையிறவு, பூநகிரி, மாங்குளம், துணுக்காய் ஆகிய இடங்களில் டயலொக் கோபுரங்கள் வந்துள்ளன.

38 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்திச் செல்ல முற்பட்ட நபர் கைது – கட்டுநாயக்கா விமான நிலையத்தில் சம்பவம்

police_man.jpgசட்ட விரோதமான முறையில் இந்தியாவுக்கு 38இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு தொகைத் தங்கத்தை கடத்திச் செல்ல முற்பட்ட சந்தேக நபரொருவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

குறித்த நபர் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து விமான நிலைய சுங்கப் பிரிவினர் நடத்திய சோதனை நடவடிக்கைகளின் போதே அவரது பயணப் பையினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மேற்படி தங்கம் கைப்பற்றப்பட்டது என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் கூறியதாவது கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து சென்னை நோக்கிப் புறப்படவிருந்த விமானத்திலேயே மேற்படி சந்தேக நபர் பயணிக்கவிருந்தார். இந்நிலையில் இன்று காலை விமான நிலையத்துக்கு வந்த அவர் சந்தேகத்துக்கிடமான முறையில் செயற்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவர் தொடர்பில் அவதானம் செலுத்திய விமான நிலைய சுங்கப் பிரிவினர் அவரை அழைத்து நடத்திய சோதனை நடவடிக்கைகளின் போதே மேற்படி தொகை தங்கம் கைப்பற்றப்பட்டது. 

தனக்கு அன்பளிப்பாக வழங்கிய நகைகளை ஏழைக்கு வழங்கிய பொலிஸ் அதிகாரி

தென் பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் டீ.டபிள்யூ. பிரதாப் சிங்க ஓய்வுபெற்றுச் செல்வதையிட்டு தென் பிராந்திய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் காலியில் பிரிவுசார நிகழ்வை நடத்தினார்கள்.
38 வருடகாலம் பொலிஸ் சேவையில் அவர் ஆற்றிய பணிகளை பலரும் பாராட்டினார்கள். நிகழ்வின் முடிவில் அவருக்கு 3 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜயந்த குலதிலக அதனை அவருக்கு வழங்கினார்.  இவற்றை பெற்றுக்கொண்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரதாப்சிங்க, அதற்கு நன்றி தெரிவித்ததுடன் அந்தப் பகுதியில் வறுமையில் வாழும் வீடில்லாத ஒரு குடும்பத்துக்கு அவற்றை வழங்குமாறும், அதன்மூலம் அக்குடும்பம் புதிய வீடு ஒன்றை பெற முடியுமென்றும் கூறினார்.

அல்லது நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் பொலிஸ் குடும்பத்தினருக்கு அதனை வழங்குமாறும் கூறினார்.  காலி நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பொலிஸ் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

அங்குலானை கொலைச்சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவும் விசாரணை

angulana.jpgஅங்கு லானையில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பான விசேட விசாரணை ஒன்று மனித உரிமை ஆணைக்குழுவினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  இச்சம்பவம் தொடர்பாக ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களை தொடர்ந்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பிரதிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அங்குலானையில் கொலைசெய்யப்பட்ட இரு இளைஞர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டனரா என்பது குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.  இதற்காக சிரேஷ்ட விசாரணை அதிகாரிகள் அங்குலானைக்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மடுமாதா உற்சவத்தில் அமைச்சர்கள் உட்பட இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

madhush_2.jpgமடு தேவாலய உற்சவம் இன்று சனிக்கிழமை அதிகாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகி காலை 9 மணிக்கு இடம்பெறும் திருசொரூபபவனியுடன் நிறைவுபெறவுள்ளதாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் வணபிதா விக்டர் சோசை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;  உற்சவம் கொழும்பு புதிய அதிமேற் ராணியார் பேரருள் திரு மல்கம் ரஞ்சித் தலைமையில் நடைபெறவுள்ளது. அவருடன் இணைந்து யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் மற்றும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆகியோர் மேற்கொள்ளவுள்ளனர்.

விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பேர் நேற்று வெள்ளிக்கிழமை வரை வந்துள்ளனர். இவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுமார் 200 குடும்பங்கள் ஆலய விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், ஏனையவர்கள் தங்குவதற்கு கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு நற்கருணை விழா இளைப்பாறிய கொழும்பு அதிமேற்ராணியார் பேரருள் திரு ஒஸ்வேல்ட் கோமிஸ் தலைமையில் நடைபெற்றது.  இதில் அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ பிரதியமைச்சர்களான சரத் குணரட்ன மற்றும் நியோமல் பெரேரா ஆகியோர் கலந்துகொண்டனர் என்றார்.

புலிகளின் புதிய தலைவராக நோர்வேயிலுள்ள தமிழர்? செய்தி உண்மையானால் கைது செய்து ஒப்படைக்க ஒஸ்லோவை கோருவோம் -கோஹண

lttelogoவிடுதலைப் புலிகளின் புதிய தலைவராக நோர்வேயிலுள்ள தமிழர் ஒருவரை நியமிக்கும் சாத்தியம் குறித்து ஆராயப்படுவதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கும் நிலையில், அந்தச் செய்தி உண்மையானால் அவரைக் கைதுசெய்து தங்களிடம் ஒப்படைக்குமாறு நோர்வேயிடம் இலங்கை கோரிக்கை விடுக்கும் என வெளிவிவகாரச் செயலாளர் கலாநிதி பாலித கோஹண கூறியுள்ளார்.

வெஸ்ற்லான் பகுதியைச் சேர்ந்தவரான தமிழர் ஒருவர் விடுதலைப்புலிகளின் புதிய தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக அப்ரென் போஸ்ரன்  பத்திரிகை தெரிவித்துள்ளது.

“இது மிகவும் அதிர்ச்சியானதாகும்’ என்று வெளிவிவகாரச் செயலாளர் பாலித கோஹண கூறியுள்ளார். கெரில்லாக் குழுவான விடுதலைப்புலிகளின் புதிய தலைவராக நோர்வேயிலுள்ள தமிழர் ஒருவர் நியமிக்கப்படும் சாத்தியம் குறித்து அவருக்கு கூறப்பட்டபோதே அவர் இதனை தெரிவித்ததாக நோர்வே செய்திச்சேவை தெரிவித்திருக்கிறது.

விடுதலைப்புலிகளின் தலைமைத்துவத்திற்கான முன்னணி வேட்பாளர்களின் ஒருவராக தமிழ் வெஸ்ற்லான் பகுதியைச் சேர்ந்தவர் ஒருவர் குறிப்பிடப்பட்டிருப்பதை கேள்வியுற்று தான் மிகவும் அதிர்ச்சியடைந்ததாக அவர் கூறுகிறார். “”விடுதலைப்புலிகள் அமைப்பு ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகளில் பயங்கரவாத அமைப்பாக தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நோர்வேயில் தடைசெய்யப்படவில்லை. உலகின் அநேகமான ஜனநாய நாடுகளில் பயங்கரவாத அமைப்பான புலிகள் தடைசெய்யப்பட்டுள்ளன’. இந்நிலையில், நோர்வே போன்ற நாட்டில் அந்தத் தலைவர்களில் ஒருவர் சுதந்திரமாக நடமாடுகிறார் என்பதைக் கேட்பது அசாதாரணமான விடயமாகும்’ என அப்ரென் போஸ்ரனுக்கு கோஹண கூறியுள்ளார்.

இந்த விடயம் குறித்து முழுமையாக தாம் ஆராய்வார் என்றும் நோர்வே அதிகாரிகளுடன் இது தொடர்பாக தொடர்புகொள்வது இயற்கையான விடயம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையானால் நிச்சயமாக அவரை இலங்கைக்கு கையளிக்குமாறு நாம் கோரிக்கை விடுப்போம் என்று கோஹண கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகளின் எஞ்சியிருக்கும் தலைவர்களை பிடிப்பதற்கு ஏனைய நாடுகள் ஏற்கெனவே அதிகளவு ஒத்துழைப்பை வெளிப்படுத்தியுள்ளன என்று கோஹண கூறியுள்ளார்.

கடந்தவாரம் விடுதலைப்புலிகளின் தலைவர் குமரன் பத்மநாதன் அல்லது கே.பி. கைதுசெய்யப்பட்டு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார். அவர் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதனை கோஹண உறுதிப்படுத்தி இருக்கவில்லை.

அவரும் ஏனைய தலைவர்களும் எமக்கு அதிகளவிலான தகவல்களை வழங்கியுள்ளனர் என்பதை என்னால் கூறமுடியும் என்று கோஹண தெரிவித்திருக்கிறார்.

புதிய கிரிகார்

விடுதலைப்புலிகளின் தலைவர் பற்றிய இந்த விவகாரமானது புதிய கிரிகார் வழக்கு விடயத்தைப் போன்ற முடிவை எட்டக்கூடும் என்று ஒஸ்லோ பல்கலைக்கழகத்தின் சட்ட வல்லுநரான ஜீயர் அல்வ்ரெய்ன் கூறுகிறார். நோர்வே மண்ணில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு திட்டமிடும் ஆட்களை அதிகாரிகள் கண்டுபிடித்தால் அவர்கள் தொடர்பாக அவர்களின் சொந்த நாட்டிற்கு வெளிப்படுத்துவது இல்லை. அதாவது, அவர்கள் மரணதண்டனை அல்லது சித்திரவதை அபாயத்தை எதிர்நோக்குவார்களாக இருந்தால் அவர்கள் பற்றி சம்பந்தப்பட்ட நாட்டிற்கு நோர்வே தெரியப்படுத்துவதில்லை. வேறு நாடுகள் அவர்களை ஏற்றுக்கொள்ளுமாக இருந்தால் அங்கு அனுப்புவதும் சாத்தியமற்றதாகும். இதன் விளைவாக இந்த ஆட்கள் நோர்வேயிலேயே வசிக்க வேண்டும். இது முல்லா கிரிகாருக்கு சம்பவித்த விடயமாகும் என்று ஜீயர் அல்வ்ரெய்ன் கூறியுள்ளார். தமது நாடுகளில் உள்ள அரசியல் நிலைவரங்களில் சம்பந்தப்படுவதற்கு அரசியல் அகதிகளுக்கு அழுத்தங்களை நோர்வே அதிகாரிகள் கொடுப்பதில்லை என்றும் அல்வ்ரெய்ன் தெரிவித்திருக்கிறார். ஆனால், அகதிகள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு திட்டமிடுவது முற்றிலும் வேறுபட்ட விடயம் என்றும் அல்வ்ரெய்ன் கூறியுள்ளார்.

மேற்குறிப்பிட்ட தமிழர் நோர்வேயின் மேற்குக் கரைப்பகுதியில் வசிப்பவர் எனவும் அவர் விடுதலைப்புலிகளின் இராணுவப் பிரிவின் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவர் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. அவர் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குப் பின்னர் தலைவராகும் சாத்தியம் இருப்பதாக பல வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. நோர்வேயானது இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான சமாதான நடவடிக்கைகளின் போது மத்தியஸ்தராக பங்காற்றி வந்தது. கடந்த மேயில் இலங்கைக்கும் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்தது.

யுத்தத்திற்கு பின்னர் தமிழ்த் தலைமைத்துவம் வெளிநாடுகளில் சிதறுண்டு காணப்படுகிறது. 1976 இல் பிறந்தவரான இந்தத்தமிழர் நோர்வேயிலுள்ள தமிழர் அமைப்பின் இராணுவப் பிரிவைச் சேர்ந்தவரென கூறப்படுகிறது. இவர் நோர்வேயிலுள்ள தமிழர்களுக்கு பெயர் குறிப்பிடாத தலைவர் எனவும் அமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பாக செயல்பட்டவர் எனவும் இப்போது அமைப்புக்கு தலைமைதாங்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுவதாகவும் அப்ரென் போஸ்ரன் பத்திரிகை தெரிவித்திருக்கிறது. பிரபாகரனின் மரணத்தின் பின்னர் புலிகளின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர் கைதானதன் பின்னர் இந்த நடவடிக்கை இடம்பெறுவதாக கூறப்படுகிறது. நோர்வேத் தமிழரான இந்த மனிதர் 2005 தொடக்கம் நோர்வேயிலிருந்து இயங்கி வருவதாகவும் கே.பி.யின் வன்முறையற்ற பாதைக்கு எதிரான அணியை சேர்ந்தவர் எனவும் கூறப்படுகிறது.

இவர் மிகவும் ஆபத்தான மனிதர் என்று இந்தியாவின் புகழ்பெற்ற பாதுகாப்பு ஆய்வாளர் ராகுல் கே போன்ஸ்லே கூறியுள்ளார்.

நோர்வேயில் சுதந்திரமாக வெளிநாட்டு அமைப்பொன்றின் தலைவர் இயங்கினால் அது நோர்வேக்கு துரதிர்ஷ்டமான விடயம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சொல்ஹெய்ம் உறுதிப்படுத்துகிறார்

இதேவேளை, நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் முன்னர் சமாதான அனுசரணையாளராக செயற்பட்டவருமான எரிக் சொல்ஹெய்ம் கூறுகையில்;

நாங்கள் அறிக்கைகளை பதிவு செய்துள்ளோம். எது உண்மை, எது பொய் என்பது பற்றி எமக்கு சிறிதளவே தெரியும் என்று அவர் கூறியதாக அப்ரென் போஸ்ரன் பத்திரிகை தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகள் தொடர்ந்தும் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டால் சர்வதேச ரீதியாக அது தொடர்பாக சகிப்புத்தன்மை ஏற்படாது என்று சொல்ஹெய்ம் கூறியுள்ளார்.

அவர் மிதவாத கொள்கையுடையவர். அஹிம் சாவழியில் செல்பவர். விடுதலைப்புலிகள் எந்தப் பாதையை இப்போது தேர்ந்தெடுக்கப்போகின்றனர் என்பது பற்றி இப்போது எமக்கு தெரியாது என்று நோர்வே அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்ததாக அப்ரென் போஸ்ரன் கூறியுள்ளது.

தரக்குறைவான பிரசாரம்

இது இவ்வாறிருக்க, விடுதலைப்புலிகளின் புதிய தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுபவரின் மனைவி தனது கணவருக்கு விடுதலைப்புலிகளின் நடவடிக்கையுடன் தொடர்பிருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார். 2005 இல் திருமணம் செய்த அவர்களுக்கு பிள்ளையொன்று உள்ளது. 2004 இல் விடுதலைப்புலிகளின் தூதுக்குழு நோர்வேக்கு வருகைதந்தபோது அவரும் (கணவரும்) வந்ததாக அப்பெண் கூறியுள்ளார். ஆனால், புதிய தலைவராக அவர் நியமிக்கப்படும் சாத்தியத்தை வதந்திகள் என்று அவர் நிராகரித்திருக்கிறார்.

“”தரக்குறைவான பிரசாரத்தினால் எமக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. பலர் ஏன் அவருடைய பெயரை குறிப்பிடுகிறார்கள் என்று எனக்கு தெரியாது. எனது கணவர் அரசியல் ரீதியாக செயல்படுபவர் அல்ல’ என்று அவர் தெரிவித்திருக்கிறார். தனது கணவர் புலிகளின் தலைவர் என கூறுபவர்கள் பற்றி பொலிஸார் தெரிவிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். பொலிஸ் பாதுகாப்புத்துறை இது தொடர்பாக அப்ரென் போஸ்ரனுக்கு கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாக அப்பத்திரிகை கூறியுள்ளது.

நன்றி ; தினக்குரல்

பாடசாலை மாணவர்களுக்கு சுழல் பந்து வீச்சு பயிற்சி முகாம் நேற்று திருமலையில் ஆரம்பிப்பு – முரளிதரன் பயிற்சி வழங்கினார்

murali.jpgகிழக்கு மாகாணத்தில் திறமைவாய்ந்த புதிய கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் நோக்குடன் மற்றும் சிறப்பாக பந்து வீசுவது தொர்பான யுக்தியை கற்றுக் கொடுக்கும் முகமாக நேற்று திருகோணமலை ஏகாம்பரம் விளையாட்டரங்கில் உலகப் புகழ்பெற்ற சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனால் சுழற் பந்துவீச்சு பயிற்சி முகாமொன்று நடத்தப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 20 பாடசாலைகளின் 13 வயதுக்கும் 19 வயதுக்கும் உட்பட்ட 150 பாடசாலை மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

இதற்கான ஒழுங்கை செலிங்கோ லைஃப் நிறுவனம் சமூக நலத்திட்டங்களில் ஒன்றாக இந்தத்திட்டத்தை நடத்தியது. திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை அணியின் முன்னணி விளையாட்டு வீரர் ஒருவரால் நடத்தப்பட்ட முதலாவது பயிற்சி முகாம் இதுவாகும்.

இந்நிகழ்வில் முரளியின் முதலாவது பயிற்றுவிப்பாளரான சுனில் பெர்னாண்டோ மற்றும் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பியால் விஜேதுங்க ஆகியோர் உதவியாகப் பணிபுரிந்தனர். இந்நிகழ்வில் செலிங்கோ லைஃப் பிரதித் தலைவர் ஆர். ரெங்கநாதன், பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆனந்த ஹெட்டியாராச்சி, நகர சபைத் தலைவர் கெளரி முகுந்தன் மற்றும் ஆயிரக் கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் இதில் கலந்துகொண்டனர்.

பன்றிக் காய்ச்சல் காரணமாக ஹஜ் கடமைக்கு புதிய கட்டுப்பாடு

haji.jpgஉலக நாடுகளில் பன்றிக் காய்ச்சல் பரவி வருவதால் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு வருகை தரும் யாத்திரிகர் தொடர்பில் சவூதி அரேபிய அரசாங்கம் புதிய அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது.

அதன்படி 12 வயதுக்குக் குறைவானவர்களும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் கர்ப்பிணித் தாய்மாரும் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்வது ஏற்றதாகும் என சவூதி அரேபிய அரசாங்கம் அறிவித்துள்ளதாக முஸ்லிம் சமய கலாசார திணைக்களப் பணிப்பாளர் வை. எல். எம். நவவி தெரிவித்தார்.

உலகின் பல்வேறு பகுதிகளிலும் பரவிவரும் புதிய இன்புலுவன்சா ஏ (எச்-1, என்-1) வைரஸ் காய்ச்சல் காரணமாகவே சவூதி அரேபிய சுகாதார அமைச்சு புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் இது கட்டுப்பாடோ தடையோ அல்ல எனவும் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

இது தவிர இருதய நோயாளிகள்,  சிறுநீரக கோளாறு உடையோர், நீரிளிவு நோயாளிகள் போன்றோரும் ஹஜ் கடமையை நிறைவேற்ற வருவதை தவிர்க்குமாறும் சவூதி அரேபியா அரசு அறிவித்துள்ளது. சவூதி அரேபிய அரசாங்கத்தின் புதிய அறிவுறுத்தல்கள் குறித்து இலங்கையிலுள்ள சகல ஹஜ் முகவர் நிலையங்களையும் அழைத்து அறிவூட்ட உள்ளதாகவும் நவவி கூறினார்.

இதேவேளை இந்த வருடம் சர்வதேச கடவுச் சீட்டு உள்ளவர்களுக்கு மாத்திரம் ஹஜ் யாத்திரிகை செல்ல அனுமதி வழங்கவும் சவூதி அரேபியா அரசு தீர்மானித்துள்ளது. முன்னர் மத்திய கிழக்கு கடவுச்சீட்டு மற்றும் ஹஜ்ஜுக்கான விசேட கடவுச் சீட்டு உள்ளவர்களுக்கும் ஹஜ் யாத்திரை செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

உலக பட்மிண்டன் காலிறுதிப் போட்டிகளுக்கு தகுதிபெறும் முதல் இந்தியப் பெண்

sainaafp222.jpgஉலக பட்மிண்டன் சாம்பியன் போட்டிகளின் கால் இறுதிக்கு தகுதிபெற்றுள்ள முதலாவது இந்தியப் பெண் என்ற பெருமையை சைனா நெஃவால் என்ற வீராங்கனை பெற்றிருக்கிறார்.

19 வயதான இந்த இந்திய யுவதி, வட இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவராவார். பல்கேரிய நாட்டுப் பெண்ணுடன் விளையாடி வெற்றிபெற்ற அவர் கால் இறுதியை எட்டியிருக்கிறார். சீன நாட்டின் வாங் லின்னுடன் இனி அவர் போட்டியிடவுள்ளார்