தென் பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் டீ.டபிள்யூ. பிரதாப் சிங்க ஓய்வுபெற்றுச் செல்வதையிட்டு தென் பிராந்திய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் காலியில் பிரிவுசார நிகழ்வை நடத்தினார்கள்.
38 வருடகாலம் பொலிஸ் சேவையில் அவர் ஆற்றிய பணிகளை பலரும் பாராட்டினார்கள். நிகழ்வின் முடிவில் அவருக்கு 3 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜயந்த குலதிலக அதனை அவருக்கு வழங்கினார். இவற்றை பெற்றுக்கொண்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரதாப்சிங்க, அதற்கு நன்றி தெரிவித்ததுடன் அந்தப் பகுதியில் வறுமையில் வாழும் வீடில்லாத ஒரு குடும்பத்துக்கு அவற்றை வழங்குமாறும், அதன்மூலம் அக்குடும்பம் புதிய வீடு ஒன்றை பெற முடியுமென்றும் கூறினார்.
அல்லது நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் பொலிஸ் குடும்பத்தினருக்கு அதனை வழங்குமாறும் கூறினார். காலி நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பொலிஸ் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.