சட்ட விரோதமான முறையில் இந்தியாவுக்கு 38இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு தொகைத் தங்கத்தை கடத்திச் செல்ல முற்பட்ட சந்தேக நபரொருவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
குறித்த நபர் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து விமான நிலைய சுங்கப் பிரிவினர் நடத்திய சோதனை நடவடிக்கைகளின் போதே அவரது பயணப் பையினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மேற்படி தங்கம் கைப்பற்றப்பட்டது என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் கூறியதாவது கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து சென்னை நோக்கிப் புறப்படவிருந்த விமானத்திலேயே மேற்படி சந்தேக நபர் பயணிக்கவிருந்தார். இந்நிலையில் இன்று காலை விமான நிலையத்துக்கு வந்த அவர் சந்தேகத்துக்கிடமான முறையில் செயற்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவர் தொடர்பில் அவதானம் செலுத்திய விமான நிலைய சுங்கப் பிரிவினர் அவரை அழைத்து நடத்திய சோதனை நடவடிக்கைகளின் போதே மேற்படி தொகை தங்கம் கைப்பற்றப்பட்டது.