August

August

“விடுதலைப் புலிகளின் கதியே மாவோயிஸ்ட்டுகளுக்கு ஏற்படும்’

அரசியல் கருத்தொருமைப்பாட்டை மாவோயிஸ்ட்டுகள் தொடர்ந்தும் கேலிக்கூத்தாக்குவார்களேயானால் இலங்கையின் விடுதலைப் புலிகள் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஆகியோரின் தலைவிதியே மாவோயிஸ்ட்டுகளுக்கும் ஏற்படுமென்றும் நேபாள காங்கிரஸ் தலைவரும் 22 கட்சி கூட்டணியின் தலைவருமான கிரிஜா பிரசாத் கொய்ராலா தெரிவித்திருக்கிறார்.

நேபாளத்தின் முன்னாள் மன்னர் கயநேந்திராவின் நிலைமையே தற்போது நேபாளத்தின் மாவோயிஸ்ட்டுகளின் தலைமைத்துவத்திற்கு ஏற்பட்டுள்ளது. காத்மண்டுவில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் 2 ஆவது தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கிரிஜா பிரசாத் கொய்ராலா மேற்கண்ட கருத்தை தெரிவித்திருக்கிறார்.

2008 ஜனவரி 2 இல் பிரசண்டாவின் ஒலிப்பதிவு நாடா பகிரங்கமாக வெளியிடப்பட்டது. அதன்மூலம் மாவோயிஸ்ட்டுகள் தொடர்பாக எமது சர்வதேச நண்பர்கள் கொண்டிருந்த இணக்கப்பாட்டை மாற்றிக்கொண்டனர். நாங்கள் கருத்தொருமைப்பாட்டு அரசியலில் இணைந்து கொள்ளுமாறு மாவோயிஸ்ட்டுகளைத் தொடர்ந்து கேட்டு வருகிறோம். அவர்கள் இதுவரை அதனை நிராகரித்துள்ளனர். இவ்வாறு தொடர்ந்து செய்வார்களேயானால், துரதிர்ஷ்டவசமாக அவர்களின் தலைவிதி இலங்கை தமிழ்க் கிளர்ச்சியாளர்களின் நிலைமையை ஒத்ததாக அமையும்.

மாவோயிஸ்ட்டுகளோடு கருத்தொருமைப்பாடு , ஒத்துழைப்பு, ஐக்கியம் என்பனவற்றை உள்ளடக்கிய அரசியலைக் கொண்டுவருவதற்கு நான் காலத்திற்கு காலம் முக்கியமான பங்களிப்பை வழங்கியிருந்தேன். பிரசண்டாவுடன் ஒவ்வொரு சந்திப்புகளின் போதும் அவருக்கு நம்பிக்கை ஏற்படுத்த முயற்சித்து வந்தேன். அவரின் இரட்டைத் தனமான பேச்சும் இரட்டைத்தனமான தன்மையும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. கருத்தொருமைப்பாட்டு அரசியலை உடைப்பதாக அது உள்ளது என்று கிரிஜா பிரசாத் கொய்ராலா கூறியதாக நேபாள ரெலிகிராப் பத்திரிகை தெரிவித்துள்ளது.

குவைத்: திருமண பந்தலில் தீ-41 பேர் பலி

குவைத்தின் ஜஹ்ரா மாவட்டத்தில் ஒரு திருமண பந்தலில் ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் பலரது நிலைமை மோசமாக உள்ளது.

திருமண விருந்து நிகழ்ச்சிக்காக பெண்களுக்கு என தனியாக அமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான பந்தலில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியாயினர்.

தீ பரவியதும் அங்கிருந்த கூட்டத்தினர் தப்பிக்க முயன்றதால் ஏற்பட்ட நெரிசலில் பலரும் கீழே விழுந்து மிதிபட்டு மயங்கினர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பலியாகிவிட்டனர்.

மட்டக்களப்பில் வெற்றுக்காணியில் மனித எச்சங்கள் மீட்பு

skel-2222.jpgமட்டக் களப்பு கல்லடி நீர்ப்பாசன திணைக்களத்திற்கு எதிரேயுள்ள வெற்று காணியில் புதைக்கப்பட்ட நிலையில் மனித எச்சங்கள் நேற்று மாலை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இக் காணியில் வழமை போல் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் உர பையொன்று நிலத்திற்குள் புதைக்கப்பட்டிருப்பதை கண்டு அயலவர்களுக்கு தெரிவித்ததையடுத்து அந்த உரப் பைக்குள் மனித எச்சங்கள் இருப்பது அவதானிக்கப்பட்டது.

இது தொடர்பாக காத்தான்குடி பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிசாரால் மனித எச்சங்களைக் கொண்ட குறிப்பிட்ட உரப் பை தோண்டியெடுக்கப்பட்டது.

ஏற்கனவே கடந்த காலங்களில் மட்டக்களப்பு பிரதேசத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களில் ஒருவருடைய மனிய எச்சங்களாக இவை இருக்கலாம் என பொது மக்கள் மத்தியில் சந்தேகங்கள் நிலவுகின்றன.

உயர்தரப் பரீட்சை நிறைவடையும் வரை மீள் குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட மாட்டாது: சுசில் பிரேமஜயந்த

susil_premajayant000.jpgஉயர்தரப் பரீட்சைகள் நிறைவடையும் வரையில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட மாட்டாதென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நிறைவடைந்ததன் பின்னர் இடம்பெயர் மக்களை மீளக் குடியேற்றும் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இடம்பெயர் முகாம்களில் தங்கியிருக்கும் பாடசாலை மாணவர்களுக்காக விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மீள் குடியேற்ற நடவடிக்கைகளுக்காக இவர்களை வேறும் இடங்களுக்கு அழைத்துச் சென்றால் பரீட்சை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்கவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு கறுவாத்தோட்டத்தில் இரு பெண்களின் சடலங்கள்

கொழும்பு- கறுவாத்தோட் டம் பகுதியில் இரண்டு இளம் பெண்களின் சடலங்களை நேற்றுக் காலை (15) பொலிஸார் மீட்டுள்ளனர். பெளத்தாலோக மாவத்தையில் உள்ள வாகனத் தரிப்பிடத்தை அண்மித்த கழிவுக்கான் பகுதியிலிருந்து சடலங்கள் மீட்கப்பட்டதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து கறுவாத்தோட் டம் பொலிஸார் சடலங்களை மீட்டுள்ளனர். இரண்டு பெண் களும் சுமார் 20 வயது மதிக்கத்தக்கவர்களாக இருப்பதாகப் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். இவ்விருவரும் வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டுக் கொண்டு வந்து போடப்பட்டார்களா, அல்லது வாகனத் தரிப்பிடப் பகுதியில் கொல்லப்பட்டார்களா என்பதைப்பற்றித் தகல் வெளியாகவில்லை.

இந்தக் கொலைக்கான காரணத்தைக் கண்டறியவும், சந்தேக நபர்களைக் கைது செய்யவும் கறுவாத்தோட்ட பொலிஸார் புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே டாக்டர் பட்டங்களை வழங்க முடியும்

000doctorate.jpgஉயர் கல்வி அமைச்சு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே டாக்டர் பட்டங்களை வழங்க முடியும் என உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதுவரை காலமும் டாக்டர் பட்டங்களை வழங்கி வந்த பத்து நிறுவனங்களுக்கு டாக்டர் பட்டங்களை வழங்கக் கூடாது என தடை விதிக்கப்படவுள்ளது.
 
இந்த விடயம் குறித்து ஆராய்வதற்கு பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் தலைமையில் பாராளுமன்ற உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உபகுழுவின் பரிந்துரைகளுக்கு அமைய போலி டாக்டர் பட்டங்களை வழங்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
 
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் மட்டுமே டாக்டர் பட்டங்களை வழங்க முடியும் என்ற வகையில் சட்டம் உருவாக்கப்படவுள்ளது.

சிறுவர் போராளிகளை பெற்றோர் சந்திக்க அனுமதி

school-children000.jpgபுனர் வாழ்வு முகாம்களிலுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களின் சிறுவர் போராளிகளை பெற்றோர்கள் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அம்பேபுஸ்ஸ புனர்வாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள சிறுவர் போராளிகளையே பெற்றோர்கள் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொரகொட தெரிவித்தார்.

அத்துடன் இனம், மதம், அரசியல் என்ற வர்க்க வேறுபாடுகளை பொருட்படுத்தாது நாட்டின் அமைதிக்காக அனைவரும் பாடுபட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

கொக்காவிலில் – புதிய தொலைத்தொடர்பு கோபுரத்திற்கு அடிக்கல்

teli00000.jpgவடக்கில் தொலைத் தொடர்பு வசதிகள் மற்றும் ஒலி/ ஒளிபரப்புச் சேவைகளை மேம்படுத்தும் வகையில் கொக்காவில் தொலைத்தொடர்பு கோபுரத்தை மீண்டும் நிர்மா ணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன் முதற்கட்ட நடவடிக்கையாக முல்லைத்தீவு மாவ ட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கொக்காவில் பகுதியில் புதிய தொலைத்தொடர்பு கோபுர த்திற்கான அடிக்கல் நடப்படவுள்ளது.

எதிர்வரும் புதன்கிழமை இதற்கான அடிக்கல் நடும் விழா நடைபெறவுள்ளது. சுமார் 150 மில்லியன் ரூபா செலவில் 172 மீற்றர் உயரத்திற்கு இக்கோபுரம் கட்டப்படவுள்ளது.

கொக்காவில் தொலைத்தொடர்பு கோபுரம் 1990ஆம் ஆண்டு ஜுலை 11ஆம் திகதி புலிகள் தொலைத்தொடர்பு கோபுரத்தை தாக்கி இப்பகுதியை கைப்பற்றியிருந்தனர். வன்னி மனிதாபிமான நடவடிக்கையினூடாக படையினர் 2008ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் திகதி மீண்டும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இடம்பெயர் மக்களின் சட்ட ஆவணங்களை பெற விசேட திட்டம்

swatt3வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்குத் தேவையான தேசிய அடையாள அட்டைகள் மற்றும் சட்ட ஆவணங்களை பெற்றுக் கொடுக்க அரசியலமைப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு விசேட திட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டமும்ää அரசியலமைப்பு அலுவல்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சும் இணைந்து நீதி ‘நியாயத்தைச் சமமாக அணுகும் கருத் திட்டம்’ என்ற தொனிப்பொருளில் இதனை முன்னெடுக்கவுள்ளதாக சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் முதலாவது கட்டம் 2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2008இல் முடிவடைந்தது. இரண்டாவது கட்டம் இவ்வருடம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. 2012இல் இக்கருத் திட்டம் முடிவடையவுள்ளது.

யு. என். டி. பி.இன் நீதி நியாயத்தை சமமாக அணுகும் கருத்திட்டத்தின் கீழ் தேசிய அடையாள அட்டைகள்,  பிறப்பு, திருமண இறப்பு சான்றிதழ்கள் மற்றும் ஏனைய சட்ட ஆவணங்களை உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஷியாம்லால் ராஜபக்ஷ கொள்ளையர்களால் கொல்லப்பட்டிருக்கலாம் என்பது உண்மையல்ல

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உறவினரும் அம்பாந்தோட்டை மாவட்ட ஆளும் கட்சி எம்.பி.நிருபமா ராஜபக்ஷவின் சகோதரருமான ஷியாம்லால் ராஜபக்ஷவின் மரணம் திருட்டுச்சம்பவத்துடன் தொடர்புபட்டது என்பதை தான்சானியப் பொலிஸார் நிராகரித்துள்ளனர்.

அதேசமயம், மரணத்திற்கான உண்மையான காரணத்தை தீர்மானிப்பதற்காக பிரேத பரிசோதனை நடத்துவதற்காக டார் எஸ்சலாமிலிருந்து ஆருஷாவுக்கு டாக்டர்களை வரவழைப்பதற்கு தாங்கள் கோரிக்கை விடுத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக தான்சானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ருவாண்டாவிற்கான சர்வதேச குற்றவியல் நீதி மன்றில் வழக்கறிஞராக ஷியாம்லால் பணியாற்றி வந்தார். ஆருஷாவில் மர்மமான சூழ்நிலையில் இறந்த நிலையில் அவர் கண்டு பிடிக்கப்பட்டிருந்தார். அவருடைய வீட்டிலேயே அவர் இறந்தநிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தார். வீட்டில் திருட வந்த குழுவால் அவர் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படுவதாக அவருடைய குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

திருடர்களுடன் போராடியபோதே அவர் இறந்திருக்கலாமென அந்த வட்டாரங்கள் கூறியிருந்தன. ஆனால், ஆருஷாவிலுள்ள பொலிஸார் இதனை நிராகரித்துள்ளனர். கடந்த புதன் கிழமை ஷியாம்லால் தனது வீட்டிற்கு நண்பர்களை அழைத்திருந்ததாகவும் இரவு 11 மணிவரை அவர்களுடன் மதுபானம் அருந்தியதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

அவருடைய விருந்தினர்கள் சமுகமளித்திருந்த வேளையில் ராஜபக்ஷ நல்ல நிலையில் இருந்ததாக ஆருஷா பிராந்திய பொலிஸ் தளபதி பசிலியோ மாத்தேய் “திஸ்டே’க்கு கூறியுள்ளார்.கொள்ளையர்களால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்பது உண்மையல்ல என்றும் விருந்தினர்கள் உள்ளே வருவதற்காக வாசல் கேற்றை அவர் திறந்துவிட்டதாகவும் அதிக நேரம் வரை அவர்கள் மகிழ்ச்சியாக கதைத்தவாறும் பியர் அருந்தியவாறும் இருந்ததாக அவருடைய பாதுகாவலர் கூறியதாக மாத்தேய் தெரிவித்திருக்கிறார்.

மறுநாள் காலை தரையில் ஷியாம்லால் வீழ்ந்து கிடந்தபோது வீட்டில் பணிப்பெண் கண்டதாகவும் மூக்கிலிருந்து இரத்தம் ஓடியிருந்ததாகவும் பொலிஸார் கூறுகின்றனர். ஆருஷாவுக்கு வருமாறு டார் எஸ்சலாமிலுள்ள டாக்டர்களுக்கு நாம் கோரிக்கை விடுத்துள்ளோம். மரணத்திற்கான உண்மையான காரணத்தைத் தீர்மானிக்க பிரேத பரிசோதனை நடத்துமாறு நாம் கேட்டுள்ளோம் என்று பசிலியோ மாத்தேய் தெரிவித்துள்ளார்.  சம்பவம் நடந்த தினம் இரவில் ஷியாம்லாலின் வீட்டிற்கு வருகைதந்திருந்த விருந்தினர்கள் ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டுகொள்வதற்கு பொலிஸார் முயற்சி செய்து வருகின்றனர்.

ஆருஷாவை தலைமையாகக் கொண்ட ருவாண்டாவிற்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஷியாம்லாலும் அவரின் மனைவி பிரசாந்தியும் சட்டத்தரணிகளாகப் பணிபுரிந்தனர். 1994 ருவாண்டா இனப்படுகொலைகளில் சம்பந்தப்பட்டவர்களென சந்தேகிக்கப்படும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நீதிமன்றத்திலேயே இவர்கள் வழக்கறிஞர்களாக பணிபுரிகின்றனர்.