August

August

நாலாயிரம் குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிப்பு

flood1111.jpgநாட்டின் பல பிரதேசங்களில் நேற்று முன்தினம் முதல் பரவலாகப் பெய்துவரும் மழை காரணமாக சுமார் நாலாயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இம்மழை காரணமாக இரத்தினபுரி, களுத்துறை, காலி, கேகாலை, கம்பஹா மாவட்டங்களின் வெவ்வேறு பிரதேசங்களில் தாழ்நிலங்கள் நீரில் மூழ்கி வெள்ள நிலைமையை ஏற்பட்டுள்ளன. சில பிரதேசங்களில் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதால் பயணிகள் பஸ் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்திருப்பதுடன் அவ்வப் பிரதேச மக்களின் இயல்பு வாழ்வும் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட இணைப்பாளர்கள் நேற்றுத் தெரிவித்தனர்.

இம்மழை காரணமாக ஏற்பட்டிருக்கும் வெள்ள நிலைமையால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கவென உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். இதேவேளை இம்மழை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் கேகாலை மாவட்டத்தின் ஓரிரு இடங்களிலும் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

இம்மண்சரிவுகள் காரணமாக உயிரிழப்புக்கள் ஏற்படவில்லை. என்றாலும் சில இடங்களில் வாகனப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருந்ததாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இரத்தினபுரி மாவட்ட இணைப்பாளர் லெப்டினன்ட் கேர்ணல் எஸ். எம். பி. பி. அபேரட்ன குறிப்பிட்டார்.

வளிமண்டலத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாகவே நாட்டின் பல பிரதேசங்களில் மழை பெய்து வருகின்றது. இது தென்மேல் பருவப் பெயர்ச்சி மழை வீழ்ச்சி அல்ல என்று வானிலை அவதான நிலைய வானிலையாளர் பி. டி. ஆனந்த பெரேரா கூறினார்.

நேற்றுக் காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவுப்படி பொலட்டகமவிலேயே அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்றும் அவர் கூறினார். மழை வீழ்ச்சி தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், பொலட்டகம 200.5 மி.மீ, குக்குலேகங்கை 182 மி. மீ, கெனியன் 143 மி.மீ, கினிதும 101.5 மி.மீ, இரத்தினபுரி 127 மி.மீ, நேபொட 127 மி.மீ. நோட்டன் 90 மி.மீ, லக்ஷபான 84 மி.மீ என்றபடி மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதே காலநிலை அடுத்துவரும் ஓரிரு தினங்களுக்குத் தொடர முடியும். இம்மழைக் காலநிலை காரணமாக மேல், தென், தென்மேற்கு, தென் கிழக்கு, வடக்கு, கிழக்கு கடற்பரப்புக்களிலும் மழை பெய்ய முடியும். இச்சந்தர்ப்பங்களில் கடலில் கொந்தளிப்பு நிலை ஏற்படலாம். அதனால் வடபகுதி கடலில் இந்த நாட்களில் முன்னெச்சரிக்கையோடு மீன்பிடித்தலில் ஈடுபடுவது அவசியம் என்றார்.

இதேநேரம் இரத்தினபுரி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளர் மேலும் கூறுகையில், இரத்தினபுரி கலவான வீதியின் பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டன. இதனால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெகோ இயந்திரங்களைக் கொண்டு வாகனப் போக்குவரத்துக்கென மண்மேடுகள் அப்புறப்படுத்தப்பட்டன. கலவான பொத்துபிட்டிய வீதியிலும் வடக்கு கினிமலே, கனேகல்லையிலும் மண்சரிவு ஏற்பட்டது.

குருவிட்ட பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கரங்கொட கிராம சேவகர் பிரிவில் கரங்கொட குடியேற்றத்தில் ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்கு மண்சரிவு ஏற்பட்டது. இம்மண் சரிவு 75 அடிகள் வரை கீழ் நோக்கி ஏற்பட்டிருக்கிறது. இம்மண்சரிவு காரணமாக உயிரிழப்புக்கள் ஏற்படவில்லை. ஆனால் வீடொன்று மூடுண்டுள்ளது. இப்பிரதேசத்தில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

இம்மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள நிலையால் கலவான பிரதேச செயலகப் பிரிவில் 259 குடும்பங்களும் அயகம பிரதேச செயலகப் பிரிவில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்களும் குருவிட்ட பிரதேச செயலகப் பிரிவில் 1636 குடும்பங்களும் எலபாத்த பிரதேச செயலகப் பிரிவில் பத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

இவ்வெள்ள நிலையினால் கலவான பிரதேச செயலகப் பிரிவில் சுமார் 30 வீடுகள் சிறுசேதங்களுக்கு உள்ளாகியுள்ளன என்றார். இதேவேளை அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் கே. பி. ஏ. தர்மரட்ன குறிப்பிடுகையில், களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவரப் பிரதேச செயலகப் பிரிவில் பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் இருநூறுக்கும் மேற்பட்ட வீடுகள் சிறு சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. ஐநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர மற்றும் புளத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவுகளிலும், காலி மாவட்டத்தின் நெலுவ, தவளம எல்பிட்டிய, பத்தேகம பிரதேசங்களிலும் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் பல பிரதேசங்களுக்கான வழமையான பயணிகள் வாகனப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது.  கம்பஹா மாவட்டத்திலும் அதிக மழை பெய்து வருவதால் களனி கங்கை பியகமவிலும் அத்தகலு ஓயா கம்பஹா பிரதேசத்திலும் பெருக்கக் கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இம்மாதம் 23ஆம் திகதி 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை

examination_departmentsss.jpgஇவ் வருடத்தின்  5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் சனிக்கிழமை நடாத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக  பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் பிள்ளைகளுக்கு பெற்றோர் சாதகமான சுழலை ஏற்படுத்திக்கொடுக்குமாறும்,  பிள்ளைகளைக் கட்டாயப்படுத்தாது வினாப்பத்திரத்திற்கு அவர்கள் சுயமாக விடையளிப்பதற்கு தயார் செய்யுமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்வருடம் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு 3 லட்சம்  மாணர்கள் தோற்றவுள்ளனர் எனவும்  ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். 

டெக் 115 கண்காடசியில் தொழிற் சந்தை!

piyasena_gamage.jpgகொழும்பு மருதானை தொழில் நுட்பக் கல்லூரியில் நாளை 19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள டெக் 115 கண்காட்சி ஊடாக தொழில் சந்தை ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழில் மற்றும் தொழில் நுட்ப பயிற்சி அமைச்சர் பியசேன கமகே 19 ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் 2;30 க்கு இந்தக் கண்காட்சியை வைபவ ரீதியாக திறந்து வைக்க உள்ளார்.

இந்தக் கண்காட்சியும் தொழில் சந்தையும் தினமும் காலை 10.00 மணி முதல் இரவு 9.00 மணிவரை நடைபெற உள்ளது.

மீள்குடியேற்றம் தொடர்பாக ஆராயும் உயர்மட்ட மாநாடு நாளை

இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்களை துரிதமாக சொந்த இடங்களில் மீள் குடியேற்றுவது தொடர்பாக ஆராயும் உயர்மட்ட மாநாடு நாளை (19) மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெறும்.

இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்ற மேற்கொள்ளப்படும் நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்தும் இங்கு ஆராயப்படவுள்ளதோடு வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்தும் இங்கு கவனிக்கப்பட உள்ளதாக பிரதி மாவட்ட செயலாளர் திருஞானசம்பந்தர் கூறினார்.

இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் சுமார் 2,52,000 பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை 180 நாட்களுக்குள் மீள்குடியேற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்திய அணியில் மீண்டும் ட்ராவிட் – முதல் போட்டி இலங்கையில்

dravide-2222.jpgபிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ராகுல் ட்ராவிட் இரண்டு வருட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். ராகுல் டிராவிட். இலங்கையில் நடக்க உள்ள முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மற்றும் சாம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடர்களில் விளையாட உள்ளார். காயம் காரணமாக முன்னணி வீரர் செவாக், அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இரண்டு மாத ஓய்வுக்குப் பின்,  இந்திய கிரிக்கெட் அணி எதிர்வரும் செப். 8 ஆம் திகதி இலங்கையில் நடக்க உள்ள முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது. அதற்குப் பின் செப். 22 ஆம் திகதி தென் ஆப்ரிக்காவில் ஆரம்பிக்க உள்ள சாம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது.  இந்த இரு தொடர்களுக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி,  நேற்று தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் தலைமையில் சென்னையில் தேர்வு செய்யப் பட்டது. இந்திய கேப்டன் தோனி மற்றும் பலர் தேர்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அணியின் அதிரடி துவக்க வீரர் செவாக்,  தோள்பட்டை காயத்தால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வருகிறார். தற்போது இதற்கு சிகிச்சை பெற்று வரும் செவாக்,  முழு உடற்தகுதி பெறவில்லை. இதனால் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். செவாக் இல்லாத நிலையில்,  இந்திய அணியின் துடுப்பாட்டத்தை  பலப்படுத்தும் நோக்கில்,  முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டுக்கு அணியில் இடம் அளிக்கப்பட்டு உள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இந்திய ஒரு நாள் அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார் டிராவிட். இவர் கடைசியாக கடந்த 2007 ம் ஆண்டு இந்தியாவில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடியிருந்தார். அதற்குப் பின் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்று வந்த டிராவிட்,  தற்போது மீண்டும் ஒரு நாள் போட்டிகளில் காலடி வைக்க உள்ளார். 

படுக்கையில் இணங்க மறுக்கும் மனைவியை பட்டினிபோட கணவனுக்கு அனுமதி – ஆப்கானிஸ்தானில் புதிய சட்டம்

ஆப்கானிஸ்தானில், கணவன் உடலுறவுக்கு அழைக்கும்போது மறுக்கும் மனைவியை அக்கணவன் பட்டினிபோடுவதற்கு அனுமதிக்கின்ற ஒரு புதிய சட்டம் அரசிதழில் (வர்த்தமானி) பிரசுரமாகியுள்ளதன் மூலம் தற்போது அமலுக்கு வந்துள்ளது.

ஆப்கானிஸ்தானிலே சிறுபான்மை இனமாக உள்ள ஷியா மக்களின் குடும்ப வாழ்க்கை சம்பந்தமானது இந்த புதிய சட்டம்.

இந்த ஆண்டில் முன்னதாக இதற்கான மசோதா விவாதத்துக்கு வந்தபோது சர்வதேச அளவில் எதிர்ப்பு உணர்வலைகள் தோன்றியிருந்தன. அதனால் மசோதாவை அதிபர் கர்சாய் விலக்கிக்கொள்ள வேண்டி வந்திருந்தது.

ஆனால் தற்போது அமலுக்கு வந்துள்ள இம்மசோதாவின் மாற்று வடிவமும் பெண்களை பெருமளவில் ஒடுக்குவதாகவே அமைந்திருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

சில நாட்களில் ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், பழமைவாத ஷியா மக்களின் ஆதரவை பெற வேண்டும் என்பதற்காக ஆப்கானியப் பெண்களை விலைகொடுத்துவிட்டார் அதிபர் ஹமீத் கர்சாய் என்று விமர்சகர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

வவுனியா இடம்பெயர்ந்தோர் முகாம் மழை-வெள்ளப் பாதிப்பு தொடர்பில் ஐ.நா. கவலை

flood.jpgவட இலங்கை போரினால் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள வவுனியா மனிக் ஃபாம் முகாமில் கடுமையான மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள 1925 வரையிலான கூடாரங்கள் சேதமடைந்தும் நிர்மூலமாகியும் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித நேய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் கூறியுள்ளது.

இது குறித்து அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், கடந்த வார இறுதியில் பெய்த கடுமையான மழை காரணமாக மனிக் ஃபாம் முகாமின் 4ஆம் வட்டகை மற்றும் 2ஆம் வட்டகை பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய பிரிவுகளிலும் சில சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நடந்துகொண்டிருப்பதால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளிக்கூடங்களில் தஞ்சமடைவது சிரமாக இருப்பதாகவும், அதனால், தற்காலிக பயிற்சி நிலையங்களில் சிலர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் ஒருங்கிணைப்பு அலுவலக அறிக்கை கூறுகிறது.

இலங்கை நீதிபதிகளை பணிக்கமர்த்தும் பிஜி

court222.jpgஇலங்கை யிலிருந்து நீதிபதிகளை பிஜி அரசாங்கம் பணிக்கு அமர்த்தி வருகிறது.  பிஜியின் பிரதம நீதியரசர் அன்டனி கேட்ஸ் தற்போது கொழும்பிலிருந்து நீதிபதிகளை ஆட்சேர்ப்பு செய்து வருகிறார்.

பொதுநலவாய உறுப்பு நாடுகளிடமிருந்து தகுதிவாய்ந்த நீதிபதிகளை நியமிக்க பிஜி எதிர்பார்த்திருப்பதாக அந்நாட்டின் சட்டமா அதிபர் ஐ ஆர்ஸ் செய்யத் கயூம் பிஜி லைவ் ஊடகத்திற்குத் தெரிவித்திருக்கிறார்.

அடுத்த வரும் ஏப்ரல் மாதம் நீதித்துறையில் மாற்றங்களை மேற்கொள்ள பிஜி அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகவும் இலங்கையும் பிஜியும் ஒரே மாதிரியான நீதிமுறைகளைக் கொண்டவை என்றும் அதனால் இலங்கையிலிருந்து நீதித்துறை அதிகாரிகளை ஆட்சேர்ப்புச் செய்ய விருப்பியதாகவும் பிஜியின் பிரதம நீதியரசர் கேட்ஸ் கூறியுள்ளார். கடந்த வாரம் இலங்கையின் பிரதம நீதியரசர் அசோகா டி சில்வா, சட்டமா அதிபர் மொகான் பீரிஸ் ஆகியோரைச் சந்தித்து தனது ஆட்சேர்ப்பு பணி தொடர்பாக கேட்ஸ் கலந்துரையாடி உள்ளார். நேர்முகப் பரீட்சைகள் கடந்த புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றதாக கேட்ஸ் கூறியுள்ளார். 2 வருட பணிக்காக விடுமுறை வழங்குவதில் நீதித் சேவைகள் ஆணைக்குழுவிற்குப் பிரச்சினைகள் இல்லையென்று நீதியமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார்.

விடுமுறை விவகாரம் தொடர்பாக பிரதம நீதியரசர் மற்றும் நீதியமைச்சரின் செயலாளர் ஆகியோருடன் கேட்ஸ் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.  இலங்கையானது சுயாதீனமான நீதித்துறையைக் கொண்டிருப்பதாகவும் அதிக உயர்மட்டக் கொள்கைக் கருத்தை இலங்கை கொண்டிருப்பதாகவும் இதன் மூலம் பிஜி அரசாங்கம் நன்மைகள் பெறமுடியும் என்றும் கேட்ஸ் கூறியுள்ளார். புத்திக்கூர்மை, நேர்மை உடைய உள்ளூர் சட்ட அதிகாரிகளின் சேவைகளைப் பெறுவதன் மூலம் பிஜிக்குப் பயன்கிடைக்கும் என அவர் தெரிவித்திருக்கிறார்.

நீதிபதிகள் நீதிபதிகளாகவே செயற்பட வேண்டுமென்பது மிகவும் முக்கியமான விடயமாகும். அவர்களுக்கு ஏனைய கட்டளைகள் அவசியமில்லை. அவர்கள் சரியான விடயத்தையே செய்வது அவசியமாகும். உலகளாவிய ரீதியில் சில நீதிபதிகள் எப்போதும் இருதலைக்கொல்லி எறும்பின் நிலையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. புத்திஜீவித்தனமான நேர்மை, திறமை என்பனவற்றுடன் இருப்பதற்கு அவர்கள் நெருக்கடியான நிலைமையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றும் கேட்ஸ் கூறியுள்ளார்.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்பு

எண்பது கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த-44 கிளேமோர் குண்டுகள், ஐயாயிரம் துப்பாக்கி ரவைகள் உட்பட பெருந்தொகையான வெடிபொருட்களை பாதுகாப்புப்படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் இராணுவத்தின் பல பிரிவுகள் தொடர்ந்தும் பாரிய தேடுதல்களை மேற்கொண்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இந்தப் பிரதேசங்களிலிருந்து கனரக ஆயுதங்களின் உபகரணங்களையும், பல்வேறு வகையான மோட்டார் குண்டுகளையும் படையினர் மீட்டுவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்திலிருந்து இராணுவத்தின் எட்டாவது அதிரடிப்படையினர் 1, 5, 7, 10, 15, 20 கிலோ எடைகளைக் கொண்ட 44 கிளேமோர்கள், கைக்குண்டுகள்-31, எம். பி. எம். ஜி. ரவைகள்- 4350, எம்-16ரக துப்பாக்கி ரவைகள்- 1000 மற்றும் மோட்டார் குண்டுகளையும் மீட்டெடுத்துள்ளனர்.

புதுக்குடியிருப்பின் கிழக்கிலிருந்து படல் துப்பாக்கி ரவைகள்-160, 82 மி. மீ.ரக மோட்டார் குண்டுகள்- 270,ரி.56 ரக துப்பாக்கிரவைகள்- 950, ஆர். பி. ஜி குண்டுகள் மற்றும் படகு இயந்திரம் ஒன்றையும் மீட்டெடுத்துள்ளனர்.

தமிழ் யுவதிகள் இருவரின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு பிரதியமைச்சர் பொலிஸாரிடம் வலியுறுத்தல்

girl2222.gifகொழும்பில் மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் இரு தமிழ் யுவதிகளின் மரணத்திற்கான காரணம் தொடர்பாக முழுமையாக விசாரணை செய்து உண்மை நிலையினை வெளிக் கொணர வேண்டும் என்று நீதி சட்ட மறுசீரமைப்பு பிரதியமைச்சர் வீ.புத்திரசிகாமணி கேட்டுள்ளார்.

இவ்விரு தமிழ் யுவதிகளின் மர்மமான மரணம் தொடர்பாக மேல் மாகாணப் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,

அப்பாவி தமிழ் யுவதிகள் உழைப்பதற்கென்று இப்படி வருகின்றபோது அவர்களது பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லாத நிலையில் இருப்பது கவலைக்குரியது. கறுவாக்காட்டு பொலிஸார் காலம் தாழ்த்தாது இவர்களது மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டறிய வேண்டும்.

வறுமைக்காக ஏழை பெற்றோர்கள் வீட்டு வேலைக்கு அனுப்பினார்கள். இப்படி மர்மமான மரணம் எமது இளைஞர், யுவதிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எந்தவித தராதரம் பார்க்காமல் மரணமான யுவதிகள் சேவை செய்த வீட்டின் உரிமையாளர்கள் பூரண விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

அச்சமின்றி வாழும் ஒரு சூழலை உருவாக்குவதில் பொலிஸாரின் பங்கு மிக முக்கியமானது. மலையக இளைஞர், யுவதிகள் ஆயிரக்கணக்கானோர் கொழும்பில் தொழில் நிமித்தம் வந்துள்ளனர்.

இத்தகைய கொடூர சம்பவங்களும் அவர்களது உடல்கள் கிடந்த இடங்களை பார்க்கும்போது அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஜீவராணி, சுமதி இருவரின் மரணத்தை விசாரிக்குமாறு அமைச்சர் பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கேட்டுள்ளார்.