வட இலங்கை போரினால் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள வவுனியா மனிக் ஃபாம் முகாமில் கடுமையான மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள 1925 வரையிலான கூடாரங்கள் சேதமடைந்தும் நிர்மூலமாகியும் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித நேய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் கூறியுள்ளது.
இது குறித்து அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், கடந்த வார இறுதியில் பெய்த கடுமையான மழை காரணமாக மனிக் ஃபாம் முகாமின் 4ஆம் வட்டகை மற்றும் 2ஆம் வட்டகை பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய பிரிவுகளிலும் சில சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நடந்துகொண்டிருப்பதால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளிக்கூடங்களில் தஞ்சமடைவது சிரமாக இருப்பதாகவும், அதனால், தற்காலிக பயிற்சி நிலையங்களில் சிலர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் ஒருங்கிணைப்பு அலுவலக அறிக்கை கூறுகிறது.