இலங்கை யிலிருந்து நீதிபதிகளை பிஜி அரசாங்கம் பணிக்கு அமர்த்தி வருகிறது. பிஜியின் பிரதம நீதியரசர் அன்டனி கேட்ஸ் தற்போது கொழும்பிலிருந்து நீதிபதிகளை ஆட்சேர்ப்பு செய்து வருகிறார்.
பொதுநலவாய உறுப்பு நாடுகளிடமிருந்து தகுதிவாய்ந்த நீதிபதிகளை நியமிக்க பிஜி எதிர்பார்த்திருப்பதாக அந்நாட்டின் சட்டமா அதிபர் ஐ ஆர்ஸ் செய்யத் கயூம் பிஜி லைவ் ஊடகத்திற்குத் தெரிவித்திருக்கிறார்.
அடுத்த வரும் ஏப்ரல் மாதம் நீதித்துறையில் மாற்றங்களை மேற்கொள்ள பிஜி அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகவும் இலங்கையும் பிஜியும் ஒரே மாதிரியான நீதிமுறைகளைக் கொண்டவை என்றும் அதனால் இலங்கையிலிருந்து நீதித்துறை அதிகாரிகளை ஆட்சேர்ப்புச் செய்ய விருப்பியதாகவும் பிஜியின் பிரதம நீதியரசர் கேட்ஸ் கூறியுள்ளார். கடந்த வாரம் இலங்கையின் பிரதம நீதியரசர் அசோகா டி சில்வா, சட்டமா அதிபர் மொகான் பீரிஸ் ஆகியோரைச் சந்தித்து தனது ஆட்சேர்ப்பு பணி தொடர்பாக கேட்ஸ் கலந்துரையாடி உள்ளார். நேர்முகப் பரீட்சைகள் கடந்த புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றதாக கேட்ஸ் கூறியுள்ளார். 2 வருட பணிக்காக விடுமுறை வழங்குவதில் நீதித் சேவைகள் ஆணைக்குழுவிற்குப் பிரச்சினைகள் இல்லையென்று நீதியமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார்.
விடுமுறை விவகாரம் தொடர்பாக பிரதம நீதியரசர் மற்றும் நீதியமைச்சரின் செயலாளர் ஆகியோருடன் கேட்ஸ் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இலங்கையானது சுயாதீனமான நீதித்துறையைக் கொண்டிருப்பதாகவும் அதிக உயர்மட்டக் கொள்கைக் கருத்தை இலங்கை கொண்டிருப்பதாகவும் இதன் மூலம் பிஜி அரசாங்கம் நன்மைகள் பெறமுடியும் என்றும் கேட்ஸ் கூறியுள்ளார். புத்திக்கூர்மை, நேர்மை உடைய உள்ளூர் சட்ட அதிகாரிகளின் சேவைகளைப் பெறுவதன் மூலம் பிஜிக்குப் பயன்கிடைக்கும் என அவர் தெரிவித்திருக்கிறார்.
நீதிபதிகள் நீதிபதிகளாகவே செயற்பட வேண்டுமென்பது மிகவும் முக்கியமான விடயமாகும். அவர்களுக்கு ஏனைய கட்டளைகள் அவசியமில்லை. அவர்கள் சரியான விடயத்தையே செய்வது அவசியமாகும். உலகளாவிய ரீதியில் சில நீதிபதிகள் எப்போதும் இருதலைக்கொல்லி எறும்பின் நிலையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. புத்திஜீவித்தனமான நேர்மை, திறமை என்பனவற்றுடன் இருப்பதற்கு அவர்கள் நெருக்கடியான நிலைமையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றும் கேட்ஸ் கூறியுள்ளார்.