July

July

சீகிரிய நூதனசாலை இன்று ஜனாதிபதியால் திறந்து வைப்பு – கலாசார மரபுரிமைகள் அமைச்சு தகவல்

tourism.jpgசீகிரியாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நூதனசாலை இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்படவுள்ளதாக கலாசார மரபுரிமைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 480 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த நூதனசாலையை இயற்கை வளங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் முற்றிலும் இயற்கைச் சூழலில் அமைக்கப்பட்டுள்ள ஆசியாவின் முதலாவது அரும்பொருட்காட்சியமாகக் குறிப்பிட முடியும். இன்று நடைபெறவுள்ள இந்த நூதனசாலைத் திறப்பு விழாவில் ஜப்பானின் பிரதிப் பிரதமர், அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் துறைசார் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. 

சானியா மிர்சா சாம்பியன் பட்டம் வென்றார்

sania-mirza.jpgஇந்தியா வின் டெனிஸ் தாரகையான சானியா மிர்சா ஐ.டி.எப்,சாலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவுக்கான  சாம்பியன் பட்டத்தை  வென்றுள்ளார்.

அமெரிக்காவின் லெக்சிங்டன் நகரில் ஐ.டி.எப்.,  சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடைபெற்றது.  இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில்;  இந்திய வீராங்கனை சானியா மிர்சா, பிரான்சின் ஜூலி காயினைத் தோட்கடித்தார்.

முதல் செட்டை கடுமையான போராட்டத்திற்கு பின்பு சானியா 7-5 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் தனது அசத்தல் ஆட்டத்தை தொடர்ந்த சானியா 6-4 என சுலபமாக கைப்பற்றினார். இதையடுத்து சானியா 7-5, 6-4 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். 

நாணய நிதியம் வழங்கவுள்ள கடனில் முதல் தவணை இன்று கிடைக்கிறது

cb-kab.jpgசர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்குவதாக வாக்குறுதியளித்திருந்த 2.6 பில்லியன் டொலர் கடனின் முதல் தவணையாக 322 மில்லியன் டொலர்கள் இன்று (28) இலங்கை மத்திய வங்கிக்கு கிடைக்கவிருப்பதாக அதன் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நேற்றுத் தெரிவித்தார்.

ஏழு தவணைகளில் வழங்கப்படவிருக்கும் இக்கடன் தொகையின் மூன்று தவணைகளை இவ்வருடத்துக்குள் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கியில் நேற்று மாலை நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டிலேயே அதன் ஆளுநர் மேற்கண்டவாறு கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகையை இலங்கை பெற்றுக் கொள்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தின் உறுதியையும் ஸ்திரத்தன்மையையும் தொடர்ந்தும் பேண முடிவதுடன் ஏனைய நாடுகளுக்கும் சர்வதேச நிதி நிறுவனங்களுக்கும் இலங்கை மீது அதி கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு இது ஊன்றுகோலாக அமைவதாகவும் ஆளுநர் கூறினார்.

வெளிநாடுகளிலிருந்து கடன் உதவியை பெற்றுக்கொள்வதற்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டில் முதலீடு செய்வதற்கும் உலக வங்கி உள்ளிட்ட பாரிய நிதி நிறுவனங்களிலிருந்து நிதியுதவிகளை பெறுவதற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி சாதகமாக அமைவதுடன் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏனைய உலக நாடுகளுக்கு தெளிவாக விளக்கிக் கூறவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் கடந்த வருடம் சிறப்பாகவிருந்ததாக அறிவித்திருக்கும் பட்சத்தில் எதற்காக தற்போது சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெற வேண்டுமென்ற ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் ஆளுநர் கூறியதாவது:-

கடந்த வருடத்தின் பொருளாதார வளர்ச்சி வீதத்தை பார்க்கையில் கடன்பெற வேண்டியது அவசியமில்லை. இருப்பினும் தவிர்க்க முடியாத வகையில் உலகின் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் எமக்கும் ஏற்பட்டுள்ளது.  அதனை ஈடு செய்யும் வகையிலும் ஏனைய நாடுகளிடமிருந்து தொடர்ந்தும் கடனுதவியை பெற்றுக்கொள்ளும் நோக்கிலுமே சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ‘கோட்டா முறை’ மூலம் 1. 9 பில்லியன் டொலர்களை கடனாகப் பெறுவதற்காக 300 பங்குகளையே முதலில் கோரியிருந்தோம். எமது கோரிக்கை தொடர்பாக ஆராய்ந்த நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு விரும்பினால் மேலும் 100 பங்குகளுக்கு கோரிக்கை விடுக்க முடியுமெனக் கூறியது.

எவ்வளவு நிதியை நாம் கையிருப்பில் வைத்துக்கொள்கிறோமோ அது சந்தர்ப்பத்துக்கு கைகொடுக்கும் என்பதனை உலகப் பொருளாதார நெருக்கடியின்போது நாம் நன்கு கற்றுக்கொண்டோம். தற்போது ஒரு வருடத்துக்கான அபிவிருத்தியை மட்டும் நோக்காக கொண்டு நாம் செயற்படவில்லை.

ஒரு தசாப்தத்தையே இலக்கு வைத்து செயற்படுகின்றோம். இலங்கையின் பொருளாதாரத்தில் புதிய யுகத்தை ஏற்படுத்துவதற்காக 400 பங்குகளுக்கு கோரிக்கை விடுத்ததற்கு அமைவாகவே நாணய நிதியம் 2.6 பில்லியன் டொலர் கடன் தொகையை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.

நான்கு வருடங்களுக்குள் அதாவது 2012 ஆம் ஆண்டுக்குள் இக்கடன் தொகை திருப்பி செலுத்தப்பட வேண்டும். சேவைக்காக வருடந்தோறும் 0.3 சதவீத வட்டியும் 300 பங்குகளுக்கு ஒரு சதவீத வட்டியும் மேலதிக பங்குகளுக்கு 2 சதவீத வட்டி வீதமும் செலுத்தப்பட வேண்டுமெனவும் அவர் கூறினார்.

இதேவேளை கடந்த 2003 ஆம் ஆண்டு இலங்கை நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக்கொண்ட உடன்படிக்கைக்கு அமைவாக ஸ்ரீலங்கா டெலிகொம் தனியாருக்கு விற்க வேண்டி ஏற்பட்டது. இலங்கை காப்புறுதி நிறுவனத்தை தனியார்மயப்படுத்தல் உள்ளிட்ட பல நிபந்தனைகளை அமுல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் இம்முறை எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் கடன் உதவி கிடைக்கப்பெற்றிருப்பதை நினைத்து நாம் பெருமைப்பட்டுக் கொள்கிறோம் எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் நாணய நிதியம் மத்திய வங்கிக்கே இக்கடன் தொகையை வழங்கியிருப்பதுடன் அரசாங்கத்துக்கு இல்லையென வலியுறுத்திய ஆளுநர் இந்நிதி வடக்கு மற்றும் கிழக்கின் அபிவிருத்தியில் நேரடி பங்களிப்புச் செலுத்தாது எனவும் குறிப்பிட்டார்.

இவ்வருடம் 213 டெங்கு நோயாளிகள் மரணம்

mosquitfora.jpgஇவ் வருடம் நாடு முழுவதிலும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 213 நோயாளிகள் 26-07-2009 வரை மரணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  அத்துடன் இந்நோயினால் பீடிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 19ஆயிரத்து 500 ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி, கம்பளை, மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களிலேயே அதிகமானோர்  டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்பிரதேசங்களில் நோய் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகள் கடந்த வராம் தீவிரப்படுத்தப்பட்டன. இந்த நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

மடு உற்சவத்துக்கு முன்னர் வீதி புனரமைப்பு – பஸில் ராஜபக்ஷ நடவடிக்கை

basil-raja.jpgமடு உற்சவத்துக்கு முன்னர் மடு தேவாலயத்துக்குச் செல்கின்ற வீதி முற்றாகப் புனரமைக்கப்பட வேண்டும் என வடக்கின் வசந்தம் செயற்திட்டத்தின் தலைவரான ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகர் பாராளுமன்ற உறுப்பினர் பஸில் ராஜபக்ஷ புனரமைப்பு நடவடிக்கைகளை மேறகொள்ளும் உத்தியோகத்தர்களைக் கேட்டுள்ளார்.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி மடு உற்சவம் இடம்பெற உள்ளது. வடக்கின் வசந்தம் திட்டத்தின் 180 நாட்கள் துரித அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பஸில் ராஜபக்ஷவின் கணகாணிப்பல் மடு தேவாலயம் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.

பயங்கரவாத நடவடிக்கைகளால் மடு தேவாலயம் சேதமடைந்ததுடன் அதன் புனரமைப்புப் பணிகள் அனைத்தும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டன. தேவாலயத்துக்கு அன்மித்த பகுதிகளில் புதைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகளை அரசாங்கம் இராணுவத்தின் உதவியுடன் அப்புரப்படுத்தி உள்ளது. தற்போது தேவாலயத்துக்குச் செல்லும் வீதியையும் பனரமைத்து பக்தர்களுக்கு சிரமமின்றி மடு யாத்திரையை மேற்கொள்ள வசதி செய்து கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மடு தேவாலயத்துக்குப் பிரவேசிக்கினற வீதியின் 10.6 கிலோ மீற்றர் தூரத்தைப் புனரமைக்க 124.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

பேருவளை பதற்றம் தணிவு; பொலிஸ், இராணுவம் கடும் பாதுகாப்பு

beruwela.jpgபேருவளை, மஹகொடை பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தற்பொழுது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

பேருவளை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் தற்பொழுது பூரண அமைதி நிலவுவதாகவும் அந்தப் பிரதேசத்திற்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் இணைந்து தொடர்ந்தும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மஹகொடை மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை 131 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, களுத்துறை மேலதிக நீதவான் சாந்தினி டயஸ் முன்னிலையில் நேற்று 103 பேர் சந்தேகத்தின் பேரில் ஆஜர் செய்யப்பட்டனர். இவர்களை எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்த 103 பேரும் சட்டத்தரணி பி. மானமடு மூலமாக பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர். நீதிமன்றத்தில் இடம் பெறவுள்ள அடையாள அணிவகுப்புக்கு இவர்களை உட்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார். ஏற்கனவே சந்தே கத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 28 சந்தேக நபர்களும் ஆகஸ்ட் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட் டுள்ளனர். இவர்களது உடைகளை அரச பகுப்பாய்வு பிரிவுக்கு அனுப்பி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

களனி பல்கலைக்கழகம் 30 ஆம் திகதி மீண்டும் ஆரம்பம்

university-of-sri.jpgதற்காலி கமாக மூடப்பட்டுள்ள களனி பல்கலைக்கழகம் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளது. இரு மாணவர்கள் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட இப்பல்கலைக்கழகத்தை எதிர் வரும் 30 ஆம் திகதி மீண்டும் திறப்பதற்கு அதன் உப வேந்தர் பேராசிரியர் சரத் அமுனுகம தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழகத்தின் ஊடகப்பிரிவு அறிவிக்கின்றுது.

விடுதி மாணவர்கள் அனைவரும் எதிர்வரும் 29 ஆம் திகதி புதன்கிழமை மாலை 5.00 மணிக்கு முன்னர் விடுதிகளுக்கு சமூகமளிக்க வேண்டும் என மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வந்தோருக்கு மட்டும் – திரைப்படங்களை திரையிடுவது உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை

images-teli.jpgவயது வந்தோருக்கு மட்டும் திரைப்படங்கள் நாட்டின் திரையரங்குகளில் திரையிடப்படுவது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு கையடக்கத் தொலைபேசிகளைத் கொண்டு செல்வது, பாடசாலையினுள்ளே உபயோகிப்பது, சிறுவர்களை தொலைக்காட்சி விளம்பரங்களில் தவறாக உபயோகிப்பது போன்ற நடவடிக்கைகளுக்கும் அரசாங்கம் தடை விதித்துள்ளது.

அமைச்சரவை அனுமதியுடன் இதனைக் காத்திரமாக நடைமுறைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் இது தொடர்பில் விடயங்களை ஆராய்ந்து உரிய சட்டங்களை இயற்ற கல்விமான்கள், நீதித்துறை சார்ந்தோர் உள்ளிட்ட விசேட குழுவொன்றையும் நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

சீகிரியா வதுல ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலாசார மரபுரிமை அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன இத்தீர்மானங்களை அறிவித்தார். இதன்படி, தேசிய, சர்வதேச வயதுவந்தோருக்கான திரைப்படங்களை திரையிடத் தடை விதிப்பதுடன் மீறி செயற்படுவோருக்கெதிராக கடும் சட்ட நடவடிக்கைகள், தண்டனைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. தணிக்கைச் சபையின் அனுமதியின்றி இத்தகைய திரைப்படங்கள் இனி திரையிடப்பட இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, கையடக்கத் தொலைபேசியில் சமூகத்தைச் சீர்குலைக்கும் தகவல்கள், விடயங்கள், பொய்ப் பிரசாரங்களை வெளியிடுவதும் தடை செய்யப்பட்டுள்ளன. அத்துடன் சிறுவர்களை சமூக, மேம்பாட்டு க்குப் பொருந்தாத விளம்பரங்களுக்கு ஈடுபடுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேற்படி விடயங்கள் தொடர்பான சட்டங்களில் திருத்தம் கொண்டு வந்து அதனைக் கடுமையானதாக நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அத்துடன் நாட்டில் இயங்கும் சர்வதேச பாடசாலைகள் நாட்டின் கொள்கைத் திட்டங்களுக்கு அமைய செயற்பட வேண்டியதும் முக்கியமென அமைச்சர் தெரிவித்தார்.

தணிக்கைச் சபையின் நடவடிக்கைகளை மேலும் விரிவாக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. சமூகத்தைச் சீர்குலைக்கும் வகையிலான விடயங்கள், விளம்பரங்களை ஊடகங்களில் வெளியிடுவது மற்றும் விற்பனை செய்வது தம்வசம் வைத்திருப்பது போன்ற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

முகாம்களிலிருந்து பல்கலைக்குத் தெரிவான மாணவர்களை பதிவு செய்ய நடவடிக்கை

university-of-sri.jpgவவுனியா முகாம்களிலிருந்து,  பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி நடைபெறுமென வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் ரஞ்சனி ஒஸ்வேர்ட் கூறினார். யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்திற்கு 173 தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் தெரிவாகியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை,  எதிர்வரும் 21ஆம் திகதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் சமரநாயக்கவும் மற்றும் அதிகாரிகளும் முகாம்களுக்குச் சென்று மாணவர்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்துகொள்ளவுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

19 இலங்கையர் சுமத்ராவில் கைது

_arrested.jpgசுமத்ரா வில் இலங்கையைச் சேர்ந்த 19 சட்ட விரோத குடியேற்ற வாசிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமத்ராவின் லொம்பொக் பகுதியில் அகதிகளுக்கான ஐ.நா.உயர்ஸ்தானிகராலயம் (யூ.என்.எச்.சி.ஆர்.) வழங்கியிருந்த இடத்திலிருந்து இவர்கள் தப்பியோடியதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக பெங்குளு பொலிஸாரை மேற்கோள்காட்டி அந்தாரா செய்திச் சேவை தெரிவித்தது.

சனிக்கிழமை இந்த 18 பேரும் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியிருக்கும் பெங்குளுநகர பொலிஸ் ஆணையாளர் மேலதிக விபரங்களை தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்க தமக்கு அதிகாரம் இல்லை என்றும் பெங்குளு பிராந்திய பொலிஸ் கட்டளைப் பிரிவே இதற்குப் பொறுப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.

சாடிங் செம்பகா பொலிஸ் பிரிவில் 7 குடியேற்ற வாசிகளிடம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். மகேந்திரன் வர்ணன் (25 வயது), சுப்பிரமணியம் (20 வயது), சோமசுந்தரம் விஜயா (28 வயது), ஆறுமுகன் சுசிகரன் (24 வயது), வேதனா ஜோகியம் ரெஜினோல்ட் (28 வயது), தியாகவடிவேல் பகீரதன் (28 வயது), குலசேகரம் ஸ்ரீஸ்வரா (39 வயது) ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

பெங்குளுவை பார்ப்பதற்காக அதாவது உல்லாசப் பயண நோக்கத்துடன் அங்கு சென்றதாக ஆறுமுகன் சுசிதரன் கூறியுள்ளார். இவர்களில் 5 பேர் தற்போது பெங்குளு பிராந்திய பொலிஸ் கட்டளைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஏனைய 5 பேர் பெங்குளு தென்பகுதியில் வைக்கப்பட்டுள்ளனர்.

பெங்குளுவுக்கு வருவதற்கு முன்னர் தாங்கள் ஜசார்த்தாவில் இருந்ததாக அவர்கள் பொலிஸாருக்கு கூறியுள்ளனர். யூ.என்.எச்.சி.ஆரின் ஆவணப் பத்திரங்களை வைத்திருந்ததால் பொலிஸார் அவர்களைக் கைது செய்துள்ளனர். கடவுச்சீட்டுகளுக்கு பதிலாக அவர்கள் யூ.என்.எச்.சி.ஆரின் பத்திரங்களையே வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.