பேருவளை, மஹகொடை பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தற்பொழுது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
பேருவளை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் தற்பொழுது பூரண அமைதி நிலவுவதாகவும் அந்தப் பிரதேசத்திற்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் இணைந்து தொடர்ந்தும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மஹகொடை மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை 131 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, களுத்துறை மேலதிக நீதவான் சாந்தினி டயஸ் முன்னிலையில் நேற்று 103 பேர் சந்தேகத்தின் பேரில் ஆஜர் செய்யப்பட்டனர். இவர்களை எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த 103 பேரும் சட்டத்தரணி பி. மானமடு மூலமாக பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர். நீதிமன்றத்தில் இடம் பெறவுள்ள அடையாள அணிவகுப்புக்கு இவர்களை உட்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார். ஏற்கனவே சந்தே கத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 28 சந்தேக நபர்களும் ஆகஸ்ட் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட் டுள்ளனர். இவர்களது உடைகளை அரச பகுப்பாய்வு பிரிவுக்கு அனுப்பி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.