நாணய நிதியம் வழங்கவுள்ள கடனில் முதல் தவணை இன்று கிடைக்கிறது

cb-kab.jpgசர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்குவதாக வாக்குறுதியளித்திருந்த 2.6 பில்லியன் டொலர் கடனின் முதல் தவணையாக 322 மில்லியன் டொலர்கள் இன்று (28) இலங்கை மத்திய வங்கிக்கு கிடைக்கவிருப்பதாக அதன் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நேற்றுத் தெரிவித்தார்.

ஏழு தவணைகளில் வழங்கப்படவிருக்கும் இக்கடன் தொகையின் மூன்று தவணைகளை இவ்வருடத்துக்குள் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கியில் நேற்று மாலை நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டிலேயே அதன் ஆளுநர் மேற்கண்டவாறு கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகையை இலங்கை பெற்றுக் கொள்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தின் உறுதியையும் ஸ்திரத்தன்மையையும் தொடர்ந்தும் பேண முடிவதுடன் ஏனைய நாடுகளுக்கும் சர்வதேச நிதி நிறுவனங்களுக்கும் இலங்கை மீது அதி கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு இது ஊன்றுகோலாக அமைவதாகவும் ஆளுநர் கூறினார்.

வெளிநாடுகளிலிருந்து கடன் உதவியை பெற்றுக்கொள்வதற்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டில் முதலீடு செய்வதற்கும் உலக வங்கி உள்ளிட்ட பாரிய நிதி நிறுவனங்களிலிருந்து நிதியுதவிகளை பெறுவதற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி சாதகமாக அமைவதுடன் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏனைய உலக நாடுகளுக்கு தெளிவாக விளக்கிக் கூறவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் கடந்த வருடம் சிறப்பாகவிருந்ததாக அறிவித்திருக்கும் பட்சத்தில் எதற்காக தற்போது சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெற வேண்டுமென்ற ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் ஆளுநர் கூறியதாவது:-

கடந்த வருடத்தின் பொருளாதார வளர்ச்சி வீதத்தை பார்க்கையில் கடன்பெற வேண்டியது அவசியமில்லை. இருப்பினும் தவிர்க்க முடியாத வகையில் உலகின் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் எமக்கும் ஏற்பட்டுள்ளது.  அதனை ஈடு செய்யும் வகையிலும் ஏனைய நாடுகளிடமிருந்து தொடர்ந்தும் கடனுதவியை பெற்றுக்கொள்ளும் நோக்கிலுமே சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ‘கோட்டா முறை’ மூலம் 1. 9 பில்லியன் டொலர்களை கடனாகப் பெறுவதற்காக 300 பங்குகளையே முதலில் கோரியிருந்தோம். எமது கோரிக்கை தொடர்பாக ஆராய்ந்த நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு விரும்பினால் மேலும் 100 பங்குகளுக்கு கோரிக்கை விடுக்க முடியுமெனக் கூறியது.

எவ்வளவு நிதியை நாம் கையிருப்பில் வைத்துக்கொள்கிறோமோ அது சந்தர்ப்பத்துக்கு கைகொடுக்கும் என்பதனை உலகப் பொருளாதார நெருக்கடியின்போது நாம் நன்கு கற்றுக்கொண்டோம். தற்போது ஒரு வருடத்துக்கான அபிவிருத்தியை மட்டும் நோக்காக கொண்டு நாம் செயற்படவில்லை.

ஒரு தசாப்தத்தையே இலக்கு வைத்து செயற்படுகின்றோம். இலங்கையின் பொருளாதாரத்தில் புதிய யுகத்தை ஏற்படுத்துவதற்காக 400 பங்குகளுக்கு கோரிக்கை விடுத்ததற்கு அமைவாகவே நாணய நிதியம் 2.6 பில்லியன் டொலர் கடன் தொகையை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.

நான்கு வருடங்களுக்குள் அதாவது 2012 ஆம் ஆண்டுக்குள் இக்கடன் தொகை திருப்பி செலுத்தப்பட வேண்டும். சேவைக்காக வருடந்தோறும் 0.3 சதவீத வட்டியும் 300 பங்குகளுக்கு ஒரு சதவீத வட்டியும் மேலதிக பங்குகளுக்கு 2 சதவீத வட்டி வீதமும் செலுத்தப்பட வேண்டுமெனவும் அவர் கூறினார்.

இதேவேளை கடந்த 2003 ஆம் ஆண்டு இலங்கை நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக்கொண்ட உடன்படிக்கைக்கு அமைவாக ஸ்ரீலங்கா டெலிகொம் தனியாருக்கு விற்க வேண்டி ஏற்பட்டது. இலங்கை காப்புறுதி நிறுவனத்தை தனியார்மயப்படுத்தல் உள்ளிட்ட பல நிபந்தனைகளை அமுல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் இம்முறை எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் கடன் உதவி கிடைக்கப்பெற்றிருப்பதை நினைத்து நாம் பெருமைப்பட்டுக் கொள்கிறோம் எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் நாணய நிதியம் மத்திய வங்கிக்கே இக்கடன் தொகையை வழங்கியிருப்பதுடன் அரசாங்கத்துக்கு இல்லையென வலியுறுத்திய ஆளுநர் இந்நிதி வடக்கு மற்றும் கிழக்கின் அபிவிருத்தியில் நேரடி பங்களிப்புச் செலுத்தாது எனவும் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *