வயது வந்தோருக்கு மட்டும் திரைப்படங்கள் நாட்டின் திரையரங்குகளில் திரையிடப்படுவது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு கையடக்கத் தொலைபேசிகளைத் கொண்டு செல்வது, பாடசாலையினுள்ளே உபயோகிப்பது, சிறுவர்களை தொலைக்காட்சி விளம்பரங்களில் தவறாக உபயோகிப்பது போன்ற நடவடிக்கைகளுக்கும் அரசாங்கம் தடை விதித்துள்ளது.
அமைச்சரவை அனுமதியுடன் இதனைக் காத்திரமாக நடைமுறைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் இது தொடர்பில் விடயங்களை ஆராய்ந்து உரிய சட்டங்களை இயற்ற கல்விமான்கள், நீதித்துறை சார்ந்தோர் உள்ளிட்ட விசேட குழுவொன்றையும் நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
சீகிரியா வதுல ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலாசார மரபுரிமை அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன இத்தீர்மானங்களை அறிவித்தார். இதன்படி, தேசிய, சர்வதேச வயதுவந்தோருக்கான திரைப்படங்களை திரையிடத் தடை விதிப்பதுடன் மீறி செயற்படுவோருக்கெதிராக கடும் சட்ட நடவடிக்கைகள், தண்டனைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. தணிக்கைச் சபையின் அனுமதியின்றி இத்தகைய திரைப்படங்கள் இனி திரையிடப்பட இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, கையடக்கத் தொலைபேசியில் சமூகத்தைச் சீர்குலைக்கும் தகவல்கள், விடயங்கள், பொய்ப் பிரசாரங்களை வெளியிடுவதும் தடை செய்யப்பட்டுள்ளன. அத்துடன் சிறுவர்களை சமூக, மேம்பாட்டு க்குப் பொருந்தாத விளம்பரங்களுக்கு ஈடுபடுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேற்படி விடயங்கள் தொடர்பான சட்டங்களில் திருத்தம் கொண்டு வந்து அதனைக் கடுமையானதாக நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அத்துடன் நாட்டில் இயங்கும் சர்வதேச பாடசாலைகள் நாட்டின் கொள்கைத் திட்டங்களுக்கு அமைய செயற்பட வேண்டியதும் முக்கியமென அமைச்சர் தெரிவித்தார்.
தணிக்கைச் சபையின் நடவடிக்கைகளை மேலும் விரிவாக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. சமூகத்தைச் சீர்குலைக்கும் வகையிலான விடயங்கள், விளம்பரங்களை ஊடகங்களில் வெளியிடுவது மற்றும் விற்பனை செய்வது தம்வசம் வைத்திருப்பது போன்ற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.