06

06

புலிகளின் கட்டளைத் தளம் அழிப்பு

mi24_2601.jpgமுல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள புலிகளின் பிரதான தொலைத் தொடர்பு நிலையம் மற்றும் புலி முக்கியஸ்தர்களின் கட்டளைத்தளம் ஆகியவற்றை விமானப் படையினர் தாக்கியழித்துள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

விமானப்படைக்குச் சொந்தமான ஜெட் ரகதாக்குதல் விமானங்களால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் வெற்றியளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். புதுக்குடியிப்புக்கு வடகிழக்கே 1.5 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள கட்டளைத் தளம் மற்றும் புதுக்குடியிருப்புச் சந்திக்கு வடக்கே 1.5 கிலோ மீற்றர் தொலைவில் அமைக்கப்பட்டிருந்த தொலைத் தொடர்புத் தளம் ஆகியவற்றை இலக்குவைத்தே நேற்றுக்காலை 10.10 மணியளவில் இந்த விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள புலிகளின் பல்வேறு இலக்குகள் மீது நேற்று முன்தினம் கடுமையான தாக்குதல்களை விமானப்படையினர் நடத்தியுள்ளனர்.13 தடவைகள் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் வெற்றியளித்துள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

புலிகளின் பிடியில் எஞ்சியுள்ள பிரதேசங்களை முழுமையாக விடுவிக்கும் நோக்குடன் பல முனைகளில் முன்னேறிவரும் இராணுவத்தின் 58, 59வது படைப் பிரிவினருக்கும், நான்காவது செயலணிக்கும் உதவியாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் விமானப் படைப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்

போரை உடனே நிறுத்துங்கள் இலங்கை அரசுக்கு இந்தியா வேண்டுகோள் ஆயுதங்களை கைவிட புலிகளுக்கு கோரிக்கை

p-chidambaram.jpgஅப்பாவி தமிழர்களின் உயிரை பாதுகாக்க இரு தரப்பினரும் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும். அதோடு விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கைவிட வேண்டும் என்று இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியது வருமாறு:

இலங்கையில் நடந்து வரும் போரில் ஏற்படும் உயிர் இழப்புகள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை அடைந்துள்ளது. இலங்கை அரசு புதிதாக தாக்குதலை ஆரம்பித்து இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை தரவில்லை. இலங்கை அரசு உடனடியாக தாக்குதலை நிறுத்த வேண்டும். அதே நேரத்தில் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கைவிட வேண்டும். இவை இரண்டும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். இரு கைகளையும் இணைத்தால் தான் கைதட்ட முடியும்.

விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் எங்களுக்கு தொடர்பு கிடையாது. இந்தியாவில் அது தடை செய்யப்பட்ட இயக்கம். இலங்கை அரசையும் நாங்கள் ஒரு குறிப்பிட்ட அளவுக்குத் தான் வற்புறுத்த முடியும்.

எனினும் சண்டையை நிறுத்தி விட்டு பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்று இரு தரப்பினரையும் மீண்டும் ஒரு முறை கேட்டுக் கொள்கிறோம். இலங்கை நிலவரம் மத்திய அரசுக்கு பெரும் கவலையை தருகிறது. வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர மேனனும் கொழும்புச் சென்றனர்.

இதன் விளைவாக இலங்கை அரசை 48 மணி நேரம் போர் நிறுத்தம் செய்ய வைக்க எங்களால் முடிந்தது. ஆனால் விடுதலைப் புலிகளிடம் இருந்து எந்த பதிலும் வராதது எங்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. இன்று வரை அவர்கள் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.இவ்வாறு ப. சிதம்பரம் கூறினார்.

கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த ப. சிதம்பரம், விடுதலைப்புலிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவுவதை தடுக்க எல்லா நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. நடைமுறை கொள்கைக்கு ஏற்ப அகதிகள் நடத்தப்படுவார்கள். தமிழ்நாட்டில் சில கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்து வருவது அரசுக்குத் தெரியும், இந்த விஷயத்தில் மத்திய அரசும், மாநில அரசும் முடிந்ததை செய்திருக்கிறது. எங்கள் தகுதிக்கு உட்பட்டு என்ன முடியுமோ, அதை தொடர்ந்து செய்வோம் என்று சிதம்பரம் உறுதி அளித்தார்.

ஐ. நா. செயலாளர் நாயகம் ஜனாதிபதி மஹிந்தவுடன் தொலைபேசியில் உரையாடல்

mahi-raja.jpgஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்கீ மூன் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் உரையாடினார். கண்டி ஜனாதிபதி மாளிகையில் அரசியல் கூட்டமொன்றில் இருக்கும்போது ஐ. நா. செயலாளர் நாயகம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியதாக அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் ஜனாதிபதி கூறினார். அப்பாவி தமிழ் மக்கள் முல்லைத்தீவில் புலிகளினால் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை மனிதாபிமான அடிப்படையில் மீட்டெடுப்பதே எமது குறிக்கோளாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐ. நா. பொதுச் செயலாளரிடம் தெரிவித்ததாக ஜனாதிபதியே அங்கு கூறினார்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் ஜனாதிபதி உரை நிகழ்த்தும் பொழுதே ஐ. நா. செயலாளரிடம் இருந்து அவசர தொலைபேசி அழைப்பு வந்ததும் தமது உரையை இடையில் நிறுத்திக் கொண்டு தொலைபேசியில் ஜனாதிபதி அவருடன் பேசினார். முல்லைத்தீவில் இப்பொழுது புலிகளின் பிடியில் சிக்கி இருக்கும் அப்பாவி தமிழ் மக்கள் பற்றி ஐ. நா. செயலாளர் பான்கீ மூன் பிரஸ்தாபித்த பொழுதே ஜனாதிபதி மேற்கண்ட தகவலை அவரிடம் தெரிவித்ததாக ஜனாதிபதி கூடியிருந்த மக்கள் முன்னிலையில் தெரிவித்தார்.

எந்த வகையிலும் படையினர் முல்லைத்தீவில் புலிகளினால் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு தொல்லைகளைக் கொடுக்கவில்லை எனவும் அரசாங்கம் விடுக்கும் எத்தகைய மனிதாபிமான ஆலோசனைகளையும் புலிகள் தட்டிக் கழித்து வருவதாலேயே இவ்வித சொல்லொண்ணா கஷ்டங்களை பொதுமக்கள் அனுபவித்து வருகிறார்கள் என்ற விபரத்தையும் தாம் ஐ. நா. செயலாளரிடம் தெரிவித்ததாக ஜனாதிபதி மேலும் அங்கு தெரிவித்தார்.

14 வயதுச் சிறுமியை வெடிகுண்டுகளால் அலங்கரித்து இராணுவ வீரர்கள் முன்பாக அனுப்பி தற்கொலையை உண்டு பண்ணிய புலிகளின் சம்பவம் பற்றியும் ஜனாதிபதி மேலும் அங்கு தெரிவித்தார். எந்த வகையிலும் வடக்கில் வாழும் தமிழ்மக்களுக்கு எவ்வித துன்பங்களையும் தொல்லைகளையும் படையினர் உண்டு பண்ணவில்லை எனவும் ஐ. நா. செயலாளரிடம் தெரிவித்த ஜனாதிபதி, புலிகளிடம் இருந்து அப்பாவி மக்களை மீட்பதே எமது நோக்கமாகும் எனவும் தெரிவித்ததாக ஜனாதிபதி மேலும் சொன்னார்.

அரசு ஐ. சி. ஆர். சியிடம் விடுத்த வேண்டுகோளுக்கு ஏற்பவே புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரி இடமாற்றப்பட்டது

nimal-siripala.jpgமுல்லைத் தீவு, புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அரசாங்கம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் விடுத்த வேண்டுகோளையடுத்து அங்கிருந்து 4 கிலோ மீற்றர் தொலைவிற்கு ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சபையில் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரியை தளமாக வைத்துக் கொண்டே புலிகள் அங்கிருந்து மோட்டார் தாக்குதலை நடத்தி வந்தது தெளிவாகியது. இதனையடுத்து ஆஸ்பத்திரியை வேறு இடத்திற்கு கொண்டு செல்லுமாறு அமைச்சின் செயலாளர் ஊடாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் தெரிவித்தோம். இப்போது அங்கு ஆஸ்பத்திரி இல்லை. அங்கு ஆட்கள் இருந்தால் அது புலிகளே என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இராணுவ வெற்றிகளை அரசியலாக்கிக் கொள்வதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டுகிறது. கடந்த ஆண்டுகளில் இருந்த இராணுவமே இன்றும் இருக்கிறது. அதே ஆயுதங்களே இன்றும் இருக்கிறது. எனினும் இவற்றுக்கு தலைமைத்துவம் வழங்கக் கூடிய சிறந்த தலைமை இன்று இருக்கிறது. பல கஷ்டங்களுக்கு மத்தியிலும் மக்கள் எமக்கு ஆதரவை வழங்கியிருக்கிறார்கள். பொறுமையுடன் எமக்கு ஆதரவு வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

காதலர் தினத்தை கொண்டாடும் காதலருக்கு கட்டாய திருமணம்

muthalik.jpgபெப்ரவரி 14ஆம் திகதி உலக காதலர் தினமாகும். இந்தியாவில் இந்த காதலர் தினத்தை கொண்டாடும் ஜோடிகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைப்போம் என்று ராம்சேனா அமைப்பு அறிவித்துள்ளது.

மங்களூர் ஓட்டலில் மது குடித்து, நடனமாடிய இளம்பெண்கள், இளைஞர்கள் மீது ராம்சேனா அமைப்பினர் சமீபத்தில் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்த அமைப்பின் தலைவர் பிரமோத் முதாலிக் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த பிரச்னையால் ராம்சேனா பிரபலமாகி விட்டது.

இந்த நிலையில், பெங்களூரில் முதாலிக் நேற்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின் விபரம் வருமாறு:

காதலர் தின கொண்டாட்டம் மேல்நாட்டு கலாசாரம். அதை இந்தியாவில் திணிக்க முயற்சிக்கிறார்கள். அது நமது பாரம்பரியத்தை அழிக்கும் வகையில் உள்ளது. எனவே, காதலர் தின கொண்டாட்டத்துக்கு அரசு தடை விதிக்க வேண்டும். இது தொடர்பாக முதல்வர், ஆளுநரிடம் மனு அளிக்கப்படும். இந்தியாவில் மட்டுமே குடும்ப அமைப்பு மிகவும் வலுவாக உள்ளது. அன்பையும், காதலையும் பகிர்ந்து கொள்வதற்கு அது நல்ல அடித்தளத்தை கொடுத்துள்ளது. அதனால், பொது இடத்தில் காதலை பரிமாறிக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை.

எனவே, காதலர் தினமான வரும் 14ம் தேதி ராம்சேனா அமைப்பினர் ரகசிய கேமராவுடன் நகரம் முழுவதும் வலம் வருவார்கள். அப்போது காதல் தினத்தை கொண்டாடும் காதல் ஜோடிகள் கிடைத்தால், அவர்களை அருகில் உள்ள பதிவாளர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து வைப்போம். இவ்வாறு முதாலிக் கூறினார்.

வன்னியில் காயமடைந்து வந்த 41நோயாளர் மன்னாருக்கு மாற்றம்

injured.jpgவவுனியா பொது வைத்தியசாலையில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதினால் வன்னியில் காயமடைந்து வவுனியா கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட 41 நோயாளர்களும் 19 உதவியாளர்களும் புதன்கிழமை மாலை பதினொரு அம்புலன்ஸ் வண்டிகள் மூலம் மன்னார் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனரென வைத்தியசாலை அத்தியட்சகர் தெரிவித்தார்.

வன்னியிலிருந்து மேலும் ஒரு தொகுதி காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சையின் பொருட்டு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலமாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுவரப் படவுள்ளனரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

காயத்திற்குள்ளாகி சுகமடைந்து வருபவர்களை பூவரசன்குளம் வைத்தியசாலைக்கு மாற்றும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் காயமடைந்து வைத்தியசாலையில் உள்ள ஒவ்வொரு நோயாளர்களுக்கும் தமது அமைச்சு நிதியிலிருந்து தலா ஐயாயிரம் ரூபா வழங்கப்படுமென மீள் குடியேற்ற அமைச்சர் அறிவித்துள்ளார்.

வவுனியா பொது வைத்தியாலையில் களஞ்சியப்பிரிவில் போதியளவு மருந்து வகைகள் கையிருப்பில் உள்ளதாகவும் எதுவிததட்டுப்பாடும் கிடையாதெனவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அவசரகால சட்டம் நிறைவேற்றம்

parliament2301.jpgஅவசர காலச்சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணை நேற்று பாராளுமன்றத்தில் 54 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது.

பிரேரணைக்கு ஆதரவாக 64 வாக்குகளும், பிரேணைக்கு எதிராக 10 வாக்குகளும் கிடைத்தன.சபையிலிருந்த 10 தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐ. தே. க. சபையில் இருக்கவில்லை. ஜே. வி. பி. பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தது. இ. தொ. கா., மலையக மக்கள் முன்னணி, மேலக மக்கள் முன்னணி சபையில் இருக்கவில்லை

புலிகளின் பிடியிலிருந்து பொதுமக்களை விடுவிக்க சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கவேண்டும் -லக்ஷ்மன் யாப்பா

yappa.jpgஅரச கட்டுப்பாடற்ற வன்னிப்பகுதியிலுள்ள மக்களை விடுதலைப்புலிகள் தமது பிடியிலிருந்து விடுவித்து சுதந்திரமாக வாழ்வதற்கு சர்வதேச சமூகமும் பொது அமைப்புகளும் அழுத்தம் கொடுக்க முன்வரவேண்டுமென்று ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது;

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல யுத்தம் மற்றும் ஊடகம் மீதான தாக்குதல் குறித்து விமர்சித்துள்ளார். யுத்தத்தை வெற்றிகரமாக கொண்டு நடத்துவது தொடர்பில் அவர் தெரிவித்த கருத்தினை நாம் வரவேற்கும் அதேவேளை, ஊடகவியலாளர் மீதான தாக்குதல் தொடர்பில் அரசுக்கு தொடர்பிருப்பதாக தெரிவித்தமையை ஏற்கமுடியாது. இவ்வாறு அவர் கருத்து தெரிவித்தமை வேதனையளிக்கின்றது. அரசாங்கம் யுத்தத்தில் வெற்றிபெற்று செல்கின்ற நிலையில் இதனை அரசு செய்யவேண்டிய எந்த அவசியமுமில்லை. இதன் சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளது. ஜனாதிபதி இந்த விசாரணைகள் குறித்து அடிக்கடி கேட்டுவருகிறார்.

சிரச ஊடகம் மீதான தாக்குதல் தொடர்பில் ஐந்து பொலிஸ் குழுக்களை அரசு விசாரணைக்கு நியமித்துள்ளது. அதுபோல் சண்டேலீடர் பத்திரிகை பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளின் விபரம் தெரியவந்துள்ளதுடன் ரிவிர ஆசிரியர் உபாலி தென்னக்கோன் மீதான தாக்குதல் பற்றி விபரம் வெளியாகியுள்ளது.

அரச கட்டுப்பாடற்ற வன்னிப்பகுதியில் 1,13,000 பேர் உள்ளதாக முல்லைத்தீவு அரச அதிபர் தெரிவித்துள்ளார். உண்மையில் 1,50,000 பேருக்குட்பட்டவர்களே அங்குள்ளனர். அவர்கள் அரச கட்டுப்பாட்டுப்பகுதிக்கு வரும் பட்சத்தில் தேவையானவற்றை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தயாராகவுள்ளது. இவர்களை மீளக்குடியேற்றுவது முதல் ஏனைய அடிப்படை வசதிகளுக்கு அரசு 300 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. அம்மக்களுக்கு தேவையானவற்றை செய்ய அரசு காத்திருக்கின்ற நிலையில் அவர்களின் வெளியேற்றத்தை விடுதலைப்புலிகள் தடுத்து வருகின்றனர். இந்நிலையில் அம்மக்களின் வெளியேற்றத்துக்கு சர்வதேசமும் பொது அமைப்புகளும் விடுதலைப்புலிகளுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டுமென்றார்.

மேல் மாகாண சபை: வேட்புமனு ஏற்பு – 19 முதல் 26 வரை

dayananda_dissanayake_1.jpgமேல் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 19 ஆம் திகதியிலிருந்து 26 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் வேட்பு மனுக்கள் குறிப்பிட்ட திகதி களில் ஏற்றுக் கொள்ளப் படும். 26 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் வேட்பு மனுக்கள் ஏற்பு நிறைவுபெறும். சுயேச்சையாகப் போட்டியிடுவோர் கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலம் 25 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவு பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுயேச்சை வேட்பாளரும் தலா 2000 ரூபா கட்டுப்பணம் செலுத்த வேண்டும்.

பொதுமக்களின் தரிசனத்திற்கு புத்தரின் தந்தம்

புத்தபெருமானின் புனித தந்தம் இன்று 6ம் திகதி முதல் 16ம் திகதி வரை கண்டி தலதாமாளிகை யில் காட்சிக்கு வைக்கப் படவுள்ளது. இதனையிட்டு கண்டி பொதுச்சந்தையிலுள்ள இறைச்சிக் கடைகளும், மதுபானக் கடைகளும் பூட்டப்படவு ள்ளன.

புனித தந்தத்தைப் பொது மக்கள் தரிசனத்திற்குத் திறந்து வைக்கப்படுவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தலதாமாளிகை தியவதன நிலமே நிலங்க தெல பண்டார தெரிவித்தார். இதன் ஏற்பாடுகள் குறித்து கண்டி கச்சேரியில் நடைபெற்ற குழுக் கூட்டத்திலேயே இதனை தெரிவித்தார்.

இறுதியாக ஐந்து வருடத்திற்கு முன்னர் 2003ல் காட்சிக்கு வைக்கப்பட்டது. நாட்டின் சுபீட்சத்திற்காகவும், சமாதானம் ஏற்பட்டு ஜனநாயகம் ஏற்படவும், 25 வருடகால யுத்தம் நீங்கவும் வேண்டியே இத்தரிசனத்தினை ஏற்பாடு செய்வதாகவும், மல்வத்த, அஸ்கிரிய பெளத்த பீடங்களின் மாநாயக்க தேரோக்களின் பூரண ஆசீர்வாதத்துடன் இத்தரிசனம் ஒழுங்குபடுத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்