முல்லைத் தீவு, புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அரசாங்கம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் விடுத்த வேண்டுகோளையடுத்து அங்கிருந்து 4 கிலோ மீற்றர் தொலைவிற்கு ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சபையில் தெரிவித்தார்.
புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரியை தளமாக வைத்துக் கொண்டே புலிகள் அங்கிருந்து மோட்டார் தாக்குதலை நடத்தி வந்தது தெளிவாகியது. இதனையடுத்து ஆஸ்பத்திரியை வேறு இடத்திற்கு கொண்டு செல்லுமாறு அமைச்சின் செயலாளர் ஊடாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் தெரிவித்தோம். இப்போது அங்கு ஆஸ்பத்திரி இல்லை. அங்கு ஆட்கள் இருந்தால் அது புலிகளே என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இராணுவ வெற்றிகளை அரசியலாக்கிக் கொள்வதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டுகிறது. கடந்த ஆண்டுகளில் இருந்த இராணுவமே இன்றும் இருக்கிறது. அதே ஆயுதங்களே இன்றும் இருக்கிறது. எனினும் இவற்றுக்கு தலைமைத்துவம் வழங்கக் கூடிய சிறந்த தலைமை இன்று இருக்கிறது. பல கஷ்டங்களுக்கு மத்தியிலும் மக்கள் எமக்கு ஆதரவை வழங்கியிருக்கிறார்கள். பொறுமையுடன் எமக்கு ஆதரவு வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.