வவுனியா பொது வைத்தியசாலையில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதினால் வன்னியில் காயமடைந்து வவுனியா கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட 41 நோயாளர்களும் 19 உதவியாளர்களும் புதன்கிழமை மாலை பதினொரு அம்புலன்ஸ் வண்டிகள் மூலம் மன்னார் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனரென வைத்தியசாலை அத்தியட்சகர் தெரிவித்தார்.
வன்னியிலிருந்து மேலும் ஒரு தொகுதி காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சையின் பொருட்டு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலமாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுவரப் படவுள்ளனரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
காயத்திற்குள்ளாகி சுகமடைந்து வருபவர்களை பூவரசன்குளம் வைத்தியசாலைக்கு மாற்றும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் காயமடைந்து வைத்தியசாலையில் உள்ள ஒவ்வொரு நோயாளர்களுக்கும் தமது அமைச்சு நிதியிலிருந்து தலா ஐயாயிரம் ரூபா வழங்கப்படுமென மீள் குடியேற்ற அமைச்சர் அறிவித்துள்ளார்.
வவுனியா பொது வைத்தியாலையில் களஞ்சியப்பிரிவில் போதியளவு மருந்து வகைகள் கையிருப்பில் உள்ளதாகவும் எதுவிததட்டுப்பாடும் கிடையாதெனவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.