அப்பாவி தமிழர்களின் உயிரை பாதுகாக்க இரு தரப்பினரும் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும். அதோடு விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கைவிட வேண்டும் என்று இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியது வருமாறு:
இலங்கையில் நடந்து வரும் போரில் ஏற்படும் உயிர் இழப்புகள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை அடைந்துள்ளது. இலங்கை அரசு புதிதாக தாக்குதலை ஆரம்பித்து இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை தரவில்லை. இலங்கை அரசு உடனடியாக தாக்குதலை நிறுத்த வேண்டும். அதே நேரத்தில் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கைவிட வேண்டும். இவை இரண்டும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். இரு கைகளையும் இணைத்தால் தான் கைதட்ட முடியும்.
விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் எங்களுக்கு தொடர்பு கிடையாது. இந்தியாவில் அது தடை செய்யப்பட்ட இயக்கம். இலங்கை அரசையும் நாங்கள் ஒரு குறிப்பிட்ட அளவுக்குத் தான் வற்புறுத்த முடியும்.
எனினும் சண்டையை நிறுத்தி விட்டு பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்று இரு தரப்பினரையும் மீண்டும் ஒரு முறை கேட்டுக் கொள்கிறோம். இலங்கை நிலவரம் மத்திய அரசுக்கு பெரும் கவலையை தருகிறது. வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர மேனனும் கொழும்புச் சென்றனர்.
இதன் விளைவாக இலங்கை அரசை 48 மணி நேரம் போர் நிறுத்தம் செய்ய வைக்க எங்களால் முடிந்தது. ஆனால் விடுதலைப் புலிகளிடம் இருந்து எந்த பதிலும் வராதது எங்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. இன்று வரை அவர்கள் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.இவ்வாறு ப. சிதம்பரம் கூறினார்.
கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த ப. சிதம்பரம், விடுதலைப்புலிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவுவதை தடுக்க எல்லா நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. நடைமுறை கொள்கைக்கு ஏற்ப அகதிகள் நடத்தப்படுவார்கள். தமிழ்நாட்டில் சில கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்து வருவது அரசுக்குத் தெரியும், இந்த விஷயத்தில் மத்திய அரசும், மாநில அரசும் முடிந்ததை செய்திருக்கிறது. எங்கள் தகுதிக்கு உட்பட்டு என்ன முடியுமோ, அதை தொடர்ந்து செய்வோம் என்று சிதம்பரம் உறுதி அளித்தார்.