அரச கட்டுப்பாடற்ற வன்னிப்பகுதியிலுள்ள மக்களை விடுதலைப்புலிகள் தமது பிடியிலிருந்து விடுவித்து சுதந்திரமாக வாழ்வதற்கு சர்வதேச சமூகமும் பொது அமைப்புகளும் அழுத்தம் கொடுக்க முன்வரவேண்டுமென்று ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது;
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல யுத்தம் மற்றும் ஊடகம் மீதான தாக்குதல் குறித்து விமர்சித்துள்ளார். யுத்தத்தை வெற்றிகரமாக கொண்டு நடத்துவது தொடர்பில் அவர் தெரிவித்த கருத்தினை நாம் வரவேற்கும் அதேவேளை, ஊடகவியலாளர் மீதான தாக்குதல் தொடர்பில் அரசுக்கு தொடர்பிருப்பதாக தெரிவித்தமையை ஏற்கமுடியாது. இவ்வாறு அவர் கருத்து தெரிவித்தமை வேதனையளிக்கின்றது. அரசாங்கம் யுத்தத்தில் வெற்றிபெற்று செல்கின்ற நிலையில் இதனை அரசு செய்யவேண்டிய எந்த அவசியமுமில்லை. இதன் சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளது. ஜனாதிபதி இந்த விசாரணைகள் குறித்து அடிக்கடி கேட்டுவருகிறார்.
சிரச ஊடகம் மீதான தாக்குதல் தொடர்பில் ஐந்து பொலிஸ் குழுக்களை அரசு விசாரணைக்கு நியமித்துள்ளது. அதுபோல் சண்டேலீடர் பத்திரிகை பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளின் விபரம் தெரியவந்துள்ளதுடன் ரிவிர ஆசிரியர் உபாலி தென்னக்கோன் மீதான தாக்குதல் பற்றி விபரம் வெளியாகியுள்ளது.
அரச கட்டுப்பாடற்ற வன்னிப்பகுதியில் 1,13,000 பேர் உள்ளதாக முல்லைத்தீவு அரச அதிபர் தெரிவித்துள்ளார். உண்மையில் 1,50,000 பேருக்குட்பட்டவர்களே அங்குள்ளனர். அவர்கள் அரச கட்டுப்பாட்டுப்பகுதிக்கு வரும் பட்சத்தில் தேவையானவற்றை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தயாராகவுள்ளது. இவர்களை மீளக்குடியேற்றுவது முதல் ஏனைய அடிப்படை வசதிகளுக்கு அரசு 300 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. அம்மக்களுக்கு தேவையானவற்றை செய்ய அரசு காத்திருக்கின்ற நிலையில் அவர்களின் வெளியேற்றத்தை விடுதலைப்புலிகள் தடுத்து வருகின்றனர். இந்நிலையில் அம்மக்களின் வெளியேற்றத்துக்கு சர்வதேசமும் பொது அமைப்புகளும் விடுதலைப்புலிகளுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டுமென்றார்.