காணாமல் ஆக்கப்பட்டோர் இல்லை அரசு – மீட்டுத்தரக்கோரி சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனம் செய்து மக்கள் போராட அழைப்பு !
இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக நினைவு கூர்ந்து தமிழ் மக்களின் வலிகளையும் உணர்வுகளையும் சர்வதேசத்திற்கு மட்டுமல்ல அனுர அரசுக்கும் எடுத்துக்கூறுவதற்கு அணிதிரளுமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
கடந்த எட்டு ஆண்டுகளுக்கு அதிகமாக தொடரும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிவேண்டிய போராட்டத்தை முன்னெடுத்த உறவுகளின் அன்னையர்கள் 300 இற்கும் அதிகமானோர் தமது அபிலாசைகளை எட்டாது இறந்துள்ளனர் என தெரிவித்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம், நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் எமது மக்களுக்கு இன்னமும் அதன் பலாபலன்கள் கிடைக்கவில்லை. இவ்வாறான பின்னணியில் வரவுள்ள இலங்கையின் 77 ஆவது சுதந்திர நாளை கரி நாளாக அனுஸ்டிக்க அழைப்பு விடுக்கின்றோம் என தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ‘ வீரகேசரி ‘ நாளிழுக்கு வழங்கிய செவ்வியில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் “காணாமல் போனவர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா..? என வீரகேசரி வார இதழின் ஊடகவியலாளர் ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , அவர்கள் காணாமல் போனதில் இருந்து ஒன்றரை தசாப்தங்களுக்கு மேலாகிவிட்டதாகவும் , அவர்கள் திரும்பி வருவார்கள் என நம்ப முடியாது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இம்முறை தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவும் அது சார்ந்த வழக்குகளை விசாரிக்கவும் சட்டத்தின் முன் நிறுத்தவும் உறுதியளித்துள்ளோம் . காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என யாருக்கும் தெரியாது. பாதிக்கப்பட்ட மக்களின் உடல் காயங்களுக்கு மருந்து போடலாம் . ஆனால் உள்ளக்காயங்களுக்கு மருந்துபோட இயலாது. போர் முடிவடைந்து 15 வருடங்களாகிறது. எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இனியும் வருவார்கள் என நம்பமுடியாது என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்திருந்ததும் கவனிக்கத்தக்கது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது பிரச்சினையை சர்வதேச அரசுகளும் பயன்படுத்துவதாகவும், அதற்காகப் போராடுபவர்களுக்கு நிதியும் அரசியல் பின்னணியும் உள்ளதாகவும் பல்வேறு விமர்சனங்கள் உள்ளன.