“சமஷ்டி, 13 ” தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினையல்ல – அமைச்சர் சந்திரசேகர் !
சமஷ்டியை தருவதற்காக நான் யாழ்ப்பாணத்திற்கு வரவில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருக்கிறார் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அநுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு வந்த போதே நான் இங்கு வருவது உங்களுக்கு 13ஐ தருவதற்கோ, ஈழத்தை தருவதற்கோ, சமஷ்டியை தருவதற்கோ இல்லை என்று மிகத் தெளிவாக குறிப்பிட்டார். தமிழர்கள் ஏராளமான பிரச்சினைகளால் ஒடுக்கப்பட்டிருக்கின்றார்கள். அந்தப் பிரச்சினைகளை மக்களோடு உரையாடுவதன் மூலமாக தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம். 15 வருடமாக இருக்கின்ற கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு எங்களுடைய அரசாங்கம் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும். ஆனால் இந்த வெற்றியில் பங்குகொள்ள சிலர் விரும்புகின்றனர்” என்றார்.