2010

2010

வட மாகாணத்தில் ரூ.190 கோடியில் சுகாதார திட்டம்

cc.jpgவட மாகாண சுகாதாரத்துறை மேம்பாட்டுக்கென 19 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் பாரிய வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

இத்திட்டத்தின் மூலம் வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் சேவையாற்றும் பொருட்டு 1250 கிராமிய சுகாதார உதவியாளர்கள் புதிதாக நியமிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். எய்ட்ஸ், காசம், மலேரியா ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் உலகளாவிய நிதியம் (மிபிதிஹிணி) என்ற திட்டத்தின் ஊடாக இதற்காக 19 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த நிதி ஐந்து முக்கிய திட்டங்களில் செலவு செய்யப்படவுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் வி. ரவீந்திரன் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் மூலம் வட பகுதியிலுள்ள 25 வைத்தியசாலை கள் புதிதாக நிர்மாணிக்கப்பட வுள்ளதுடன், ஆளணி பற்றாக்குறை, உட்கட்டமைப்பு வசதிகள், தேவையான உபகரணங்கள் பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். “வரும் முன் காப்போம்” என்ற வேலைத் திட்டத்தின் கீழ் மருத்துவ உதவியாளர்களுடன் இணைந்து சேவை யாற்றும் பொருட்டு 1250 கிராமிய சுகா தார உதவியாளர்கள் புதிதாக சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். இவர்களில் முதற்கட்டமாக 570 பேருக்கு நவம்பர் மாதத்தில் நியமனம் வழங்கப்படவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐந்து அம்சங்கள் உள்ளடக்கப்பட்ட இந்த வேலைத் திட்டத்தின் முதலாவது அம்சத்தின் கீழ் 175 மருத்துவ மாதுகளும், 50 பொது சுகாதார அதிகாரிகளும் நியமிக்கப்படவுள்ளனர். அத்துடன் இவர்களுக்குத் தேவையான சகல பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளது. இரண்டாவது அம்சத்தின் கீழ் வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலுள்ள 25 வைத்தியசாலைகள் புதிதாக நிர்மாணிக்க புனரமைக்கப்படவுள்ளது. அத்துடன் எட்டு சுகாதார அதிகாரிகள் அலுவலகம், 12 விடுதிகள், ஐந்து மலேரியா தடுப்பு அலுவலகம், இரண்டு இருதய சிகிச்சை பிரிவு, ஆகியன நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் 8 கெப் வண்டிகளும் வழங்கப்படவுள்ளன.

மூன்றாவது அம்சத்தின் கீழ் 56 மருத்துவ பரிசோதனை நிலையங்களை அமைப்பதற்கு அல்லது விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளன. சுமார் 85 மருத்துவ ஆய்வுக் கூட உதவியாளர்கள், தொழில் நுட்பவியலாளர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டு, பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன என்றார்.

நான்காவது அம்சத்தின் கீழ் உபகரணங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பாக சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

வட மாகாண சுகாதாரத்துறையை மேம்படுத்துவதற்குத் தேவையான சகல வசதிகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதுடன் நிதி ஒதுக்கீடுளையும் செய்துள்ளது என்று ஆளுநர் சுட்டிக்காட்டினார்

ஐ.சி.சி. தரவரிசை பட்டியலில் சங்கக்காரவுக்கு முதலிடம்

sangakkara.jpgஐ.சி.சி. டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன் அவர் நான்காவது இடத்தில் இருந்தார்.

2002 டிசம்பரில் ஹாமில்டனில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்குப் பிறகு தற்போது தான் முதன் முறையாக 3வது இடத்திற்கு சச்சின் முன்னேறியுள்ளார்.

இதுபோல், வி.வி.எஸ். லட்சு மண் 4 இடங்கள் முன்னேறி 8 வது இடத்தைக் கைப்பற்றியுளார். இலங்கை வீரர் குமார சங்கக்கார முதல் இடத்திலும், ஷேவாக் இரண் டாமிடத்திலும் உள்ளனர். ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியல் நேற்று துபாயில் வெளியிடப் பட்டது.

நாடுமுழுவதும் 2066 கிராமசேவகர் வெற்றிடங்கள். போட்டிப் பரீட்சை மூலம் நிரப்ப முடிவு

sena.jpgநாட்டில் 2066 கிராம உத்தியோக த்தர்களுக்கு வெற்றிடங்கள் உள்ளன. அவற்றை துரிதமாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் டி. டபிள்யூ. ஜோன் செனவிரட்ன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட எம். பி. தயாசிறி ஜயசேகரவின் வாய்மூல விடைக்கான வினாவுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அமைச்சர் தொடர்ந்தும் கூறுகையில்: நாடெங்கிலும் 2066 கிராம உத்தியோகத்தர் பதவி வெற்றிடங்கள் நிரப்பப்படும்.

பரீட்சைகள் ஆணையாளர் திணைக்களத்தின் ஊடாக இப் போட்டிப் பரீட்சைகள் நடாத்தப்படும். கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தாய்மொழி மற்றும் கணிதம் உட்பட ஆறு பாடங்களில் திறமைச் சித்தியையும், கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் மூன்று பாடங்களில் சித்தியையும் பெற்றிருப்பவர்கள் இப்போட்டிப் பரீட்சைக்குத் தோற்றும் தகுதி பெற்றவர்களாவர்.

எல்.ரீ.ரீ.ஈ. முக்கிய சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்படமாட்டார்கள் – பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு

பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள எல்.ரீ.ரீ.ஈ. முக்கிய சந்தேக நபர்கள் எவருமே விடுதலை செய்யப்பட மாட்டார்களென பொலிஸ் தலைமையகம் நேற்று அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்புக் கவுன்ஸில் இதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தது.

இது தொடர்பாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: நேற்று கூடிய தேசிய பாதுகாப்பு கவுன்ஸிலில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் மீதான சாட்சியங்களுக்கேற்ப வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. ஆதாரங்கள் உள்ள பயங்கரவாத சந்தேக நபர்கள் எவருமே விடுதலை செய்யப்படமாட்டார்கள்.

இதேவேளை, போதுமான சாட்சியங்கள் இல்லாத சந்தேக நபர்களை விடுதலை செய்வது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொமன்வெல்த் விளையாட்டு – அவுஸ்திரேலியா பதக்க பட்டியலில் முதலிடம்

commonwealt_logo.jpgகொமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு நேற்று மட்டும் இதுவரை 5 தங்கப் பதக்கங்கள் கிடைத்திருக்கின்றன. துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் ககன் நரங், அனீஷா சையத், ஓம்கார் சிங் ஆகியோர் நேற்று தங்கப் பதக்கங்களை வென்றனர். மகளிர் வலுதூக்கும் போட்டியில் ரேணு பாலா சானு தங்கப் பதக்கம் வென்றார். மேலும் மல்யுத்தப் போட்டியில் ரஜீந்தர் தங்கப் பதக்கம் வென்றார்.

இதன் மூலம் இந்தியா பெற்றிருக்கும் தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்திருக்கின்து. நேற்றுக் காலையில் நடந்த 10 மீட்டர் ஏர் ரைஃபில் இறுதிப் போட்டியில் 103.6 புள்ளிகள் பெற்று நரங் தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் 2008ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் நிகழ்த்திய சாதனையை அவரே முறியடித்தார். ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற அபிநவ் பிந்த்ரா, இந்தப் போட்டியில் 103 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் பெற்றார். ஏற்கெனவே நேற்று நடந்த போட்டியில் இவர்கள் இருவருமே சேர்ந்து இந்தியாவுக்குத் தங்கப் பதக்கம் பெற்றுத் தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், துப்பாக்கி சுடும் போட்டியின் 25 மீ. பிரிவில் இந்திய வீராங்கனை அனீஷா சையதும் 50 மீ. பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஓம்கார் சிங்கும் தங்கம் வென்றனர். மகளிர் வலுதூக்கும் போட்டியின் 58 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை ரேணு பாலா சானு தங்கப் பதக்கம் வென்றார்.

மல்யுத்தம் 55 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் ரஜீந்தர் தங்கப் பதக்கம் வென்றார். இத்துடன் இந்தியா பெற்றிருக்கும் தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்திருக்கிறது.

போதி மாதவா? : நோர்வே நக்கீரா

Budha_in_Jaffnaபோதி மாதவா?

வன்னிவானத்தை இருள் கவ்வியது
ஈழத்தமிழர் வாழ்வு போல்

வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன
வெளிநாடுகளில் இருந்து
தருவிக்கப்பட்ட இடியும் மின்னலும்

சிவப்புக் கௌபோய் (cowboy)படம் எடுக்க
சீன இந்திய நடிகர்கள்

குறும்பார்வைக் குறையால்
வன்னிமந்தைகள் புலிகளாக
கண்ணீர்கள் வரிகளாக
மேய்போரே மந்தையை மேய்ந்தபோதும்
உருப்பெருக்கு வில்லைதேடி அலைந்தார்கள்
புவியியலாளர்கள்.

கண்வில்லைகள் போதாது என்று
வானவில்லைகள்

விலையுயர்ந்த வில்லைகளுக்குக் கூட
மனிதவிலைகள் தெரியவில்லை

உருப்பெருக்க வில்லைகள் ஐ.நாவிடம் இருந்தும்
கண்டுபிடிக்க முடிந்ததா மரணம்தரும் வைரசுக்களை.

வானமே வெடிகுண்டானது
அவதார புரிசர்களுக்கே
அடைக்கலம் தேவைப்பட்டது.

தலைகள் எல்லாம் கணனிகொண்டு
கொலைக்களங்கள் திரிந்தன.

கொம்பியூட்டர் கண்களில்
மக்கள் மறைந்தனர்
கணனியில் வைரசாம்

புதிய கணனியில்
புலத்துப் பணத்தில்
பணவீழம் அமைக்க
இன்றும் பலவைரசுகள்

அகதியாடு நனைகிறது என
ஓலமிடுகின்றன ஓநாய்கள்
நிலத்திலும் புலத்திலும்.

உதிரவெள்ளம் ஓடி அடங்க
பிணக்குவியல்களில் புழுக்கள் கிளம்ப
நிசப்தத்தின் மத்தியில் ஒரு நித்திய புருசன்
பிணங்களில் இருந்து பிரிந்து எழுந்தான்

உதிரம் வடியும் கண்களோடு
மனிதம் நிமிர்ந்த மார்புகளோடு
மேய்பனாக புத்தன்
விசுபரூபத்தில் போதிமாதவனாய்

மாயவனான மாதவன் கண்டு ஆதவன் அலற
சுடுகலன்கள் அனைத்தும் சுருண்டு போயின.

நிஸ்டையின் விரல்களை
நீட்டீயே காட்டி
வடக்கு கிழக்கு பிணங்களின் குவியல்
தெற்குத்திசையில் பசி பட்டிணியின் அவியல்
இதுவா தர்மம்!!
இதுவா நீதி!!!
இதுவா மனிதம்!!!!

மீண்டும் மறைந்தான்
உறைந்தது உலகம்
அறைபட்டது ஆத்மா.

விஸ்வமாக வளர்ந்த அசரீரி
அஸ்திரமாக நின்றது சமநீதி

”உலகம் எங்கணும் எல்லைகள் இல்லை
எல்லை உரிமை எவனுக்குமில்லை
மாதவ மனதில் சூனியம் இல்லை
வானம் பூமியில் வஞ்சகம் இல்லை
மனித மனங்களில் வஞ்சம் இருந்தால்
மீண்டும் வருவேன்
எரிக்கும் ஆதவனாக
சுழலும் சூறாவளியாக
சுனாமியாக.
அடங்காது போனால் கல்கியாக

எல்லா உடமையும் அனைவற்குமாகுக
பொல்லா மனநோய்கள் அணைந்து போகுக
வேதனம் என்பது வாழ்வுக்கானபின்
சீர்-தனம் எதற்கு சீர்கெட்ட மனிதா?

விகாரைகள் கட்டி
மனித விகாரம் எதற்கு
மனிதா (ஆ)லயம் கட்டு
ஆத்மா இலயிக்கும்

அரசு நடத்த அரசமரம் எதற்கு
அன்பை வளர்த்து அகிலத்தை ஆள்
ஆணவம் அழித்து கல்கியைக் கொல்

மனிதத்தின் மடியில் உலகம் உருள
அன்பின் அடியில் அடங்கும் அகிலம்”

மாதவனோடு
நோர்வே நக்கீரா
2.10.2010

“வடக்கு கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பதன் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும்” –மாவை சேனாதிராஜா

வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டிருப்பதால் இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றை காண்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணந்திருப்பது அவசியம் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

நேற்று செவ்வாய் கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மாகாணசபைகள் திருத்தச்சட்ட வரைவு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்படி வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு கடந்த 18 வருடங்களாக இணைந்த மாகாணங்களாகவே அவை நிர்வகிக்கப்பட்டு வந்தன. வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்போது பிரிக்கப்பட்டுள்ள நிலையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. எனவே, இம்மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்பட்டு அவற்றிற்கு பொலிஸ், மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். இதன் மூலமே தீர்வினைக்காண முடியும் என மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.

மேலும் அவர் உரையாற்றுகையில், வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்ட முறை தவறானது என்றுதான் உச்ச நீதிமன்றம் கூறியதே தவிர அவற்றைப் பிரிக்கும்படி உத்தரவிடவில்லை அரசாங்கமே இம்மாகாணங்களைப் பிரித்தது. வடக்கு கிழக்கில் வாழ்ந்து யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் காணிகளை இராணுவம் கைப்பற்றி முகாம்களை அமைத்து வருகின்றது. வடக்கு கிழக்கு மாகாண சபைக்கு அதிகாரம் இல்லாததாலேயே இந்த நில ஆக்கிரமிப்பு நடைபெறுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கில் 120 பாடசாலைகளை தரமுயர்த்தலில் இணைத்துக் கொள்ளுமாறு வடமாகாண ஆளுநர் கல்வி அமைச்சிடம் கோரிக்கை.

இலங்கையில் கிராமப்புறங்களில் அமைந்துள்ள ஆயிரம் பாடசாலைகளை தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகளை கல்வியமைச்சு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், வடக்கில் 120 பாடசாலைகளை அதற்காக தெரிவு செய்யுமாறு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி கல்வியமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆயிரம் கிராமப்புற பாடசாலைகளைத் தெரிவு செய்து அவற்றை நவீன முறையில் புனரமைத்து தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகள் கல்வியமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வருகின் நிலையில், வடக்கில் 90 பாடசாலைகளைத் தெரிவு செய்து அவற்றைத் தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் 120 பாடசாலைகளை இதற்காக தெரிவு செய்யுமாறு வடமாகாண ஆளுநர் கல்வியமைச்சிடம் கேட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளைத் தரமுயர்த்தும் திட்டத்தில் தெரிவு செய்யப்பட வேண்டிய பாடசாலைகளின் விபரம் தொடர்பாக ஆராயும் கூட்டம் ஒன்று எதிர்வரும் 10ஆம், 11ஆம் திகதிகளில் வவுனியாவில் நடைபெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வன்னியில் மணலுக்கு திடீர் தட்டுப்பாடு. வீடமைப்புப் பணிகள் பாதிப்பு.

வன்னியில் திடீரென மணலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வீடமைப்புப்பணிகள் பாதிப்படைந்துள்ளன. கடந்த காலங்களிலும், மீள் குடியேற்றம் மேற்கொள்ளப்பட்ட பின்னரும் வன்னியில் மணலுக்கு பெரிதாகத் தட்டுப்பாடு ஏற்படவில்லை. ஒரு உளவு இயந்திரத்தில் ஏற்றப்படும் மணலை சுமார் 2500 ரூபாவிற்கு பொதுமக்கள் கொள்வனவு செய்யக்கூடியதாக இருந்தது. ஆனால் கடந்த சில தினங்களாக திடீரென மணலுக்கு தட்டுப்பாடு எற்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் தற்போது வீடமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில், மணலுக்கு எற்படுத்தப்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக இப்பணிகளில் தடை எற்பட்டுள்ளதாக வீடமைப்பு பயனாளிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

யாழ்.குடாநாட்டில் இடம்பெறுவது போல் மணலுக்கான அனுமதி நடைமுறைகளை வன்னியிலும் கொண்டுவரும் நோக்கிலேயே மணலுக்கான தடையும், தட்டுப்பாடும் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

சரத்பொன்சேகாவின் விடுதலைக்காக வீதிகளில் இறங்கிப் பேராடுவதில் பயனில்லை. அமைச்சர் சுசில் பிறேம்ஜயந்த.

சரத்பொன்சேகாவை விடுவிக்குமாறு கோரி வீதிகளில் இறங்கிப் போராடுவதில் எவ்வித பயனும் எற்படப் போவதில்லை என அமைச்சர் சுசில் பிறேம்ஜயந்த தெரிவித்துள்ளார். சரத்பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டுமானால் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவரை விடுதலை செய்யும்படி ஜனாதிபதியிடமே மேன்முறையீடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது ஜனாதிபதி நீதிமன்ற வழிமுறைகளின்படி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார். இதனை விடுத்து எதிர்க்கட்சியினர் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்துவதிலும், கையெழுத்து வேட்டை நடத்தவதிலும் எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு நேற்று செவ்வாய்கிழமை உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சரத்பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரி ஐக்கிய தேசியக்கட்சி, ஜே.வி.பி ஆகியன மக்களைத் திரட்டி பல்வேறு போராட்டங்களை நடத்தப் போவதாக அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.