2010

2010

நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக சாட்சியமளிக்க 3 மனித உரிமை அமைப்புகள் மறுப்பு

சர்வதேச விசாரணைக்கு வலியுத்தல் நியூயோர்க்: கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை 3 சர்வதேச முன்னணி அமைப்புகள் ஏற்றுக்கொள்ளமாட்டாதென தெரிவித்துள்ளன.மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச நெருக்கடிக்குழு,  சர்வதேச மன்னிப்புச்சபை ஆகிய மூன்று அமைப்புகளும் கூட்டாக இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு எழுதிய கடிதத்தில் அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கடிதம் நேற்று முன்தினம் புதன்கிழமை வெளியிடப்பட்டிருப்பதாக ரிலீப் வெப் இணையத்தளம் தெரிவித்திருக்கிறது.போர்க் குற்றங்கள் தொடர்பான முன்னேற்றகரமான பதிலளிக்கும் கடப்பாட்டுக்கான ஆற்றலைக் குறைந்தளவிலேயே இந்த ஆணைக்குழு கொண்டிருப்பதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையில் அரசியல் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறும் தன்மை என்பவற்றை முன்னெடுப்பதற்கான உண்மையானதும் நம்பகரமானதுமான முயற்சிகளை மேற்கொள்ளும் போது ஆணைக்குழு முன் தோன்றுவதற்கான வாய்ப்பு கிடைப்பதை வரவேற்பதாகவும் ஆனால், ஆணைக்குழுவானது சர்வதேச தரத்தின் ஆகக்குறைந்தளவு மட்டத்தைக்கூட நிறைவேற்றுவதாக இல்லையெனவும் அந்த மூன்று அமைப்புகளும் குறிப்பிட்டுள்ளன.

லண்டன் தமிழர் தகவல் நடுவம் யாருக்குத் தகவல்கள்’ கொடுக்கின்றது? : ஆர்.வி. குமார்

tic_logoதகவல் நடுவங்கள் என்பது, மக்களுக்கான பல தகவல்களை, அரசியல் சார்பன்றி, சாதி, சமய, பிராந்திய வேறுபாடுகளுக்கும் கட்சிக் கருத்து வேறுபாடுகளுக்கும் அப்பாலிருந்து கொடுப்பதாகும். இந்தத் தகவல் நடுவங்கள் பொது மக்களின் கல்வி கலாச்சார வளர்ச்சிகளுக்கும் கேந்திரமாகவும் செயற்படுவதுண்டு. அத்தோடு இந்த நடுவங்கள், தங்கள் மக்களின் வாழ்க்கை வழிமுறைகள், பண்பாடு கலாச்சாரங்கள், சமுதாயத்தில் நடக்கும் பொருளாதார விருத்தி வேலைகள், மக்களால் முன்னெடுக்கப்படும் சமய விழாக்கள், நெறிகள் போன்று பற்பல விடயங்களை மற்ற இனத்தார் வந்து அறிவதற்கும் ஆராய்ச்சி செய்வதற்கும் தேவையான ஆவணங்களைப் பராமரிக்கும் முக்கிய கேந்திரமாகவும் பணிபுரிய எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் லண்டனில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் தமிழர் தகவல் நடுவம், தமிழர்களுக்குத் தேவையான தகவல்களைச் சரியன விதத்திற் கொடுக்காமல், வேறு விடயங்களில் தன்னைப் பிணைத்துக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாத் தன்னை ஒரு இரகசிய ஸ்தாபனமாக்கிக் கொண்டு வருவதாக எண்ணத் தோண்றுகிறது. இங்கு நடக்கும் கூட்டங்கள் ஒரு குறிப்பிட்டவர்களுக்காக மட்டும் நடத்தப்படுகிறதா என்ற சந்தேகமும் வந்திருக்கிறது. தமிழர் தகவல் நடுவம் என்பது பல்தரப்பட்ட தமிழர்களின் பங்களிப்பையும் ஒன்று கூடல்களையும் உதாசீனம் செய்தால் இந்தத் தகவல் நடுவம் யாரால் கட்டுப்படுத்தப்படுகிறது, யாரின் இலாபத்திற்காகப் பணி புரிகிறது என்பதைக் கேட்கத் தமிழர்களுக்கு உரிமையுண்டு.

ஓருகாலத்தில் தமிழ்த் தேசியத்தின் மத்திய கேந்திரமாக இயங்கிய இந்த ஸ்தாபனம், 2009ம் ஆண்டு முடிந்த போரின் பின் ஏற்பட்ட புலிகளின் பிரிவுகளின் எதிரொலியாக இன்று மிகவும் தூரத்தில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. உலகத் தமிழர்பேரவை, நாடு கடந்த ஈழத்தினர் அவர்களின் பிரதமர் என்போர் லண்டன் தமிழர் தகவல் நடுவத்தைக் கணக்கெடுப்பதில்லை என்றே தெரிகின்றது. புலிகளின் ஒருபிரிவு, ஏதோ ஒரு குழப்பத்தை (பேராட்டம்?) இலங்கையில் உண்டாக்கி அதனால் தமிழ் மக்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் விடயங்களைக் காய்நகர்த்துவது பலருக்குத் தெரியும். புலம் பெயர்ந்த மக்களிடமிருந்து போருக்காக அவர்கள் சேர்த்த தொகையின் ஒருசிறு பகுதியை இலங்கையில் வாழும் ஏழைத் தமிழர்களுக்குக் கொடுக்கத் தயாரில்லை. அப்படியிருக்கம் போது, பிரிந்த புலிகளின் லண்டன் ‘கோஷ்டியின்’ குரல் மட்டும் ஓங்கி ஒலிக்கின்றது. (இலங்கையில் இன்னுமொரு ஆயதப்போராட்டம் எப்போது வரும் என்ற கேள்வி அன்று கேட்கப்பட்டது).

ஜனநாயக (???) முறையில் கடல் கடந்த தமிழர்களின் பிரதமரானவர்களைக் கொண்டிருக்கும் ஒரு கூட்டமும், எப்படியும் ஏதோ ஒரு மோசடி செய்து, தாங்கள் வைத்திருக்கும் பணத்தைச் சுருட்டிக்கொள்ளும் இன்னொரு புலிக் கூட்டமும் எங்கெங்கே பயணிக்கிறது? இலங்கைத் தமிழரின் எதிர்கால அழிவுக்கு யார் யாருடன் தொடர்புகளை (மேற்கத்திய அழிவு சக்திகள்) ஏற்படுத்துகிறது? அதில் தமிழர் தகவல் நடுவத்தின் பங்கென்ன என்பதை ஆராய்வது தவிர்க்க முடியாத முக்கிய விடயமாகும்.

இலங்கை ஜனாதிபதியின் ஐக்கிய நாடுகளின் பயணம், உருத்திரகுமாரின் தமிழ்ப் பிரதமர் பிரகடனம், தகவல் நடுவத்தின் இரகசிய கூட்டங்கள் என்பன தற்செயலாக நடப்பவையா? அல்லது ‘ஏதோ ஒரு சக்தி’ செய்யும் மாய விளையாட்டுக்களா? இந்த இரு புலிக் கோஷ்டியும் போராற் துயர்படும் தமிழ் மக்களுக்கு ஒருநேர உணவோ ஒரு முழுத் துணியோ இதுவரை கொடுக்கவில்லை. தமிழரின் பெயரில் பல மகாநாடுகளை ஒழுங்கு செய்த தகவல் நடுவம், தமிழ் மக்களுக்கு உதவுவதற்காகப் பணம் கேட்க ஒரு கூட்டத்தையும் ஒழுங்கு செய்தது கிடையாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித உதவியையும் புரிந்ததாக அறிய முடியவில்லை. அந்த நிலையில், போராற் துன்புறம் மக்களின் மீள்வாழ்வுக்குப் புலம் பெயர்ந்த மக்களின் பங்கு என்ற வெற்று வார்த்தைகளைத் தமிழர் தகவல் நடுவம் அள்ளிக்கொட்டுவதே வெட்கம்.

தமிழர் தகவல் நடுவத்தில், இலங்கையிலிருந்து அவ்வப்போது லண்டனுக்கு வரும், கல்வி கலாச்சாரப் பிரமுகர்களை வைத்துச்சில கருத்தரங்கங்கள் நடப்பதுண்டு. தகவல் நடுவத்திற்குப் பேச்சாளராக வரும் அத்தனைபேரும் இலங்கை அரசை வழிக்குக் கொண்டுவர வெளிநாட்டாரின் ‘உதவியை’ நாடவேண்டிய அவசியத்தை வலியுறுத்துவார்கள். இங்கு வந்த எந்தப் பிரமுகர்களும் ஒரு நாட்டுக்குள்ளே எவ்வாறு வேலை செய்து எங்கள் மக்களுக்கு உதவ முடியும் என்பது பற்றி ஆராய்வதில்லை. தமிழர் தகவல் நடுவம் இலங்கை அரசை வசைபாடி புலிகளைக் காப்பாற்றுவதிலேயே கடந்த முப்பது வருடங்களைச் செலவளித்திருக்கிறதே தவிர, சாதாரண தமிழ் மக்களுக்கு உதவ எந்த முயற்சியும் செய்தது கிடையாது.

02.10.2010 அன்று தமிழர் தகவல் நடுவத்தில் ‘யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் வாழ்வை மீள்கட்டமைப்பதிலும் மீள நம்பிக்கையூட்டுதலிலும் புலம்பெயர்ந்தவர்களின் பாத்திரம்’ என்ற தலைப்பில் ஒரு கலந்துரையாடல் நடந்தது. அந்தக் கூட்டத்துக்குத் தமிழ் தகவல் நடுவக் கூட்டங்களுக்கு வழக்கமாக வரும் பலருக்கு அழைப்புக் கொடுபடவில்லை. வழமைபோல் தமிழ்த் தேசியத்தைப் பிரதிபடுத்தும் பலரும் அதனுடன் உடன்படாத சிலரும் வந்திருந்தனர்.

நேற்று, இன்று, நாளைக்கு என்று எப்படிப் பார்த்தாலும் எப்போதும் இலங்கையிலுள்ள பெரும்பான்மையான மக்களான சிங்களவர்ளாற் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் ஆட்சிக்கு வருவார்கள். சிறுபான்மையான நாங்கள் இதை உணர்ந்து கொண்டு எங்கள் உரிமையை ஜனநாயக வழியில்பெற முயற்சிக்க வேண்டும். என்றும் இல்லாத அளவுக்கு, இன்று பல வாழ்க்கைத் தேவைகளை எதிர்பார்த்து எங்கள் மக்கள் இலங்கையில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு, லண்டனில் முன்னெடுக்கப்படும் நாடுகடந்த, கடல்கடந்த தமிழீத்தினாலும் முரண்பாட்டு அரசியல் மகாநாடுகளால் ஒரு பிரயோசனமும் கிடையாது. லண்டனில் வாழத்தேவையான  ஊதியத்தைத் தமிழரின் சோகத்தை வைத்து முகாரிபாடிச் சேர்த்தவர்கள் பலநூறாகும். வாழ்க்கைக்குத் தேவையான பணத்தைச் சேர்க்கப் படிப்புத் தேவைப்படுபவர்கள் பெரும்பாலோனோர். தங்கள் சொந்த இனத்தையே முதலீடாக்கியவர்கள் நாங்கள். இப்படியாக உழைப்பில் பலவடிவங்கள் பரிணமிக்கும். அதில் ஒன்றுதான் இந்த தமிழர் தகவல் நடுவத்தின் ஒன்று கூடல்கள் என்றால் அதனை மறுத்துரைப்பதும் கடினமானதே.

முதலைக் கண்ணீர்!

அன்று (02.10.10) தமிழர் தகவல் நடுவக் கூட்டத்தை ஆரம்பித்து வைத்தத் தமிழத் தகவல் நடுவ முதல்வர் திரு வரதகுமார் அவர்கள் தன் ஆரம்பவுரையில், ‘இன்று இலங்கையில் இருக்கும் பொதுமக்கள் சபைகள் – சிட்டிசன் கொமிட்டிஸ் – அங்கிருக்கும் அரசியல் நிலையால் பெரும்பாலும் செயலிழந்திருக்கின்றன. சிவில் சொசைய்ட்டிகள் மக்களுக்காகக் குரல் கொடுக்காவிட்டால் மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றங்களைக் காண முடியாது.

நாங்கள்  இலங்கையிலிருந்து சில மூத்த அறிஞர்களை இவ்விடயம் பற்றிப் பேச அழைத்திருக்கிருந்தோம். கடந்த சில நாட்களாக அவர்கள் பலர் சேர்ந்து பல ஆய்வுகளை நடத்தி, அவர்கள் அங்கு மக்களின் வாழ்க்கையை முன்னேறாமல் தடுக்கும் சில விடயங்களை அடையாளம் கண்டு, அவற்றை நிவர்த்தி செய்யச் சில சிபாரிசுகளை முன்வைத்திருக்கிறார்கள். இலங்கையிலிருந்த இந்த அறிஞர்களும் இலங்கையின் ஜனநாயக வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்களும் சந்தித்துக் கொள்ளக்கூடிய கருத்தரங்கங்களையும் ஏற்பாடு செய்திருந்தோம்’ என்று சொன்னாhர்.

வரதகுமார் குறிப்பிட்ட ‘ஆய்வுக் கூட்டங்கள்’ பற்றிய விடயம் இங்கிலாந்து வாழ் தமிழர்களுக்கோ இலங்கையிலுள்ள தமிழ்பேசும் மக்களுக்கோ அவர்களின் தலைவர்களுக்கோ எதுவும் தெரியாது என்பதும் இது பற்றி எதுவுமே அவர்களுக்கு அறிவிக்கப்படவில்லை என்பதும் தெரிந்தது.

தமிழ் மக்களுக்கான தலைவர்களுடன் இரகசிய கூட்டத்தை கடந்த வருடம் சுவிட்சர்லாந்தில் நடத்தியவர் இன்று அவர்களுக்கே தெரியாமல் இன்னுமொரு கூட்டம் வைப்பது தமிழ்த் தலைவர்களுக்குக் குழி பறிப்பதற்கா என்ற கேள்வியை இலங்கையிலுள்ள அத்தலைவர்களே விசாரித்தும் வருகின்றனர்.

கூட்டத்துக்குத் தரப்பட்டிருந்த தலையங்கத்துக்கும் அதுவரை அங்கு இரகசியமாக நடைபெற்று முடிந்த ஆய்வுகளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது போலிருந்தது. இலங்கையில் பொதுமக்கள் அமைப்புக்களை வலிமைப்படுத்தி அதன் மூலம் இலங்கைத் தமிழருக்கு உதவி செய்ய இலங்கை அறிஞர்கள் ஏன் வேலை மெனக்கெட்டு லண்டனுக்கு வரவேண்டும் இரகசியமாகக் கலந்துரையாடல்களை வைக்க வேண்டும் என்பது புரியாத விடயமாகும்.
 
புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் எப்படியான உதவிகளை இலங்கையில் வாடும் தமிழருக்குச் செய்யலாம் என்று கலந்துரையாட கூடியிருப்பதற்கும் அதற்கு சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ‘இரகசிய’ கலந்துரையாடலுக்கும் பெரிய தொடர்பில்லை. ஏதோ ஒரு சாட்டுக்கு இந்தக் கூட்டத்தை வைத்து மழுப்பப் பார்க்கிறார் என்பது முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் மூலம் தெரியவந்தது. புலம்பெயர்ந்த மக்கள் என்ற வார்த்தையைப் பாவித்து அவர்களுக்கு உசுப்பேத்த எடுத்த முயற்சி சுவிஸில் சரிவரவில்லை.

அத்துடன், அனுதாபத்துடன் புலம்பெயர் தமிழர் நாட்டில் வாடும் மக்களுக்கு உதவ வேண்டும் என்று சொன்ன திரு வரதகுமர் அவர்களுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர் பல நாடுகளிருந்தும் பல தடவைகள் ‘யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நல்லிணக்கக் குழு’க்களாகப் போயிருந்தது தெரியும். ஆனால் இதுவரையும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்த நல்லிணக்கக் குழுக்கள் செய்யும் பணிகள் பற்றிய தகவல்களைச் சொல்ல தகவல் நிலையத்தில் ஒரு கருத்தரங்கு வைக்கச் சொல்லிப் பல தடவைகள் கேட்டும் கேளாச் செவியனாக இருந்துள்ளார். அண்மையில் இணையத் தளங்களில் இதுபற்றி எழுதப்பட்டுமிருக்கிறது. அவர்களுடன் சம்பந்தப் பட்டவர்களால் தொடங்கப்பட்டு இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவி செய்யும் ஸ்தாபனங்கள் நபர்கள் பற்றியும் இவருக்குத் தெரியும். இருந்தும் அங்கு தமிழருக்கு உதவி செய்ய யாருமே முன்வராத பாணியில் தகவல் நடுவம் ஒரு அபிப்பிராயத்தைத் தொடந்து செய்து கொண்டிருக்கிறது. அத்துடன் ஒரு காலத்தில் புலியின் மிகப் பெரிய ஆதரவாளராக இருந்தவர்கள்கூட இன்று இலங்கையில் அல்லற்படும் தமிழர்களுக்கப் பல வித்தில் உதவுகிறார்கள் இவர்களையழைத்து, இலங்கையில் என்ன நடக்கிறது என்று ஒரு கருத்தரங்கம் வைத்ததே கிடையாது.

பெரும்பாலான தமிழர்களுக்கு அறிவிக்காமல், நடந்த இரகசியக் கருத்தரங்குக்கு அழைத்த பிரமுர்களில் சந்திரகாசன் (தமிழத் தேசியத்தின் தலைவர் செல்வநாயத்தின் தனயன்), மனித உரிமைவாதி சரவணமுத்து பாக்கியசோதி (கொழும்பு), ராஜன் பிலிப்(கனடா) என்போர் 2ம் திகதி தமிழர்களுடன் லண்டனில் நடந்த சந்திப்புக்கு முன்னரே பயணமாகிவிட்டார்கள்.

2ம் திகதி கூட்டத்திற்கு வந்திருந்தோர்  பேராசிரியர் சீலன் கதிர்காமர், பேராசிரியர் சித்தம்பலம், முக்கியமான (பழைய) தமிழ்த்  தேசியவாதி (அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்த இந்திய வெளிநாட்டுத் தூதுவர் நிருபமாவிடம் கேள்விகேட்டதால் பிரமுகரானவர்), பேராசிரியர் கணேஸ், பேராசிசியர் மூக்கையா (மலைநாட்டின் பிரச்சினைகளை முன்வைத்தார்.)

அன்று நடந்த கூட்டத்தில், பேராசிரியர் சீலன் கதிர்காமர், தமிழர் தகவல் நடுவம் பல அறிஞர்களுடன் நடத்திய ஆய்வுகளின் (இரகசியமாக) சாராம்சத்தைக் கருத்தரங்கில் முன்வைத்தார். போராசிரியர் சீலன் கதிர்காமர் அவர்கள், தங்களின் ஆய்வில் அடையாளம் காணப்பட்ட, இலங்கைத் தமிழ் மக்களுக்காகச் செய்ய வேண்டிய முக்கியமான பத்து அம்சங்களை விளக்கினார். இந்தப் பத்து விடயங்களும் பல தடவை இலங்கையில் பல தூதுக் குழுக்களாலும் இந்திய, பிரிட்டிஷ்  அரச தரப்புக்களாலும் இலங்கை அரச தரப்புக்கு எடுத்தச் சொல்லப்பட்ட விடயங்கள் என்பது தகவல் நடுவ முதல்வருக்கு நன்றாகத் தெரியும். முப்பது வருடப் போரால் பொருளாதார ரீதியில் மிகவும் பின் தள்ளப்பட்டிருந்த இலங்கை அரசால், இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் இருந்த 300,000 மேற்பட்ட தமிழர்களின் மீள் குடியேற்றத்தைச் செய்ய பல காலம் எடுக்கும் என்று தெரிந்தவர்கள், தென்னிந்திய முதல்வாரின் மகளும் இலங்கைத் தமிழரின் துயரைத் துடைக்க மிகவும் அக்கறை கொண்டவருமான கனிமொழியின் மூலம் இந்திய அரசின் உதவியை நாடியதும் தெரியும். அதன்பின் போராற் துன்பப்பட்ட மக்களுக்கான மீள் குடியேற்ற விடயங்களில் நடக்கும் மாற்றங்களையும் அந்த நடவடிக்கைகளில் இந்தியா உட்படப் பலநாடுகளின் ஈடுபாடும், திரு வரதகுமார் தெரியாமலில்லை.

போரசிரியர் கதிர்காமரோ அல்லது வந்திருந்த மற்ற அறிஞர்களோ, போரால் அல்லலுறும் மக்களின் விடயத்தில் இதுவரை எந்த வித்திலும் ஈடுபட்டதாக எந்த தடையமும் கிடையாது. அவர்கள் தங்கள் வாழ்நாளில் மிகவும் படித்த பேராசிரியர்களாக இருந்திருக்கலாம் ஆனால், இன்று சட்டென்று பொதுவேலைகளில் ‘குதிக்கும்’ வயது வலிமையோ அல்லது அரசியல் வலிமையோ அற்றவர்கள்.

திரு கதிர்காமர் அவர்கள் பேசும்போது, லண்டனில் 1998ல் நடந்த கூட்டத்தின்பின் எந்த மகாநாடுகளிலும் தான் கலந்து கொள்ளவில்லை என்றார். பொதுவுடமைவாதியும் புலிகளின் பிரசார பீரங்கியுமாயிருந்த டாக்டர் விக்கிரமசிங்கவின் நண்பர் என்று தன்னை அறிமுகப் படுத்தினார். அவர் தனது பேச்சில்  தமிழர்கள் தங்கள்  பிரச்சினைக்கு ஆசிய நாடுகளின் உதவியை நாட வேண்டும், முக்கியமாகச் சீனாவின் உதவியை நாடவேண்டும் என்று சொன்னார். தங்களின் ஆய்வில் இலங்கைக்குத் தேவையான 5-6 வருடத் திட்டத்தை வைத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், (முடிந்தவரை அவரினுரை தரப்பட்டிருக்கிறது);

”18வது சீர்திருத்தச் சட்டத்தினால் யாருக்கும் நன்மையில்லை, எங்களது ஆய்வின் முதலாவது விடயமாக, நிலப் பிரச்சினையயைப் பார்க்கிறோம். அதிலும் அகதிகளாக இருப்பவர்களின் நிலையும் இத்தோடு சம்பந்தப்படுகிறது. 2014 – 15 க்கிடையில் பெரிய மாற்றங்களை உண்டாக்க வேண்டும், எங்கள் ஆய்வில் தமிழ் மக்களின் விழிப்புணர்வை முன்னெடுக்கும் விடயங்கள் பற்றியும் முக்கியமாகக் கலந்துரையாடினோம். எங்களின் பிரச்சினைகளைச் சிங்கள மக்கள் பாராளுமன்றவாதிகள், முக்கியமாக ஜேவிபியுடன் பேசவேண்டும் வெளிநாட்டு அரசாங்ககங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும். தமிழ்த் தகவல் நடுவத்துடன் சேர்ந்து இந்தியாவை நாட வேண்டும்.

கல்வித் தரம் உயர்த்தப்பட வேண்டும், வெளிநாட்டிலுள்ள தமிழர்கள் தங்கள் திறமைகளை எங்கள் மக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். மக்கள் பகுதியிலிருந்து இராணுவத்தை அகற்ற வேண்டும், அவசரகால சட்டத்தை எடுக்க வேண்டும், பலகாலமாகச் சிறையிலிருக்கும் தமிழர்கள் விடுவிக்கப்பட வேண்டும், மிக மிக முக்கியமாக சிறையிலிருப்பவர்களின் பெயர் பட்டியல் உடனடியாக வெளியிடப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.

மலையகப் பேராசிரியரான மூக்கையா அவர்கள் இந்திய வம்சாவழித் தமிழர்கள் தமிழ்ப் பாராளுமன்றவாதிகளின் உதவியுடன் பிராஜாவுரிமையை இழந்த காலத்திலிருந்து இன்று வரை இலங்கை அரசாங்கத்தால் எடுக்கப்படும் பல சட்டதிட்டங்களாலும் பாதிக்கப்படுவதை விளக்கிக் கூறினார்.

புலம்பெயர்ந்த அரசியற் தலைமை!

வந்திருந்த பேராசிரியர்களில், பேராசிரியர் சித்தம்பலம்;, ‘இலங்கையில், தமிழ்ப் பகுத்களில் அபிவிருத்தி என்ற பெயரில் நடக்கும் விடயங்கள் பேசப்படுகின்றன, ஆனால் தமிழர்களுக்கான அரசியலுரிமை பற்றி எந்தப் பேச்சும் கிடையாது. தமிழ்பேசும் மக்கள் அத்தனைபேரும் ஒன்றுபட்டு எங்கள் உரிமைக்குப் போராட வேண்டும்’’ என்று குறிப்பிட்டார். ‘இதுவரை பல முறைகள் பல தலைவர்களால் அரசியல்த் தீர்வுகள் வைக்கப்பட்டன. இன்று நாங்கள் இருக்கும் நிலையில் வடக்கு கிழக்கை இணைத்துக் கேட்க முடியாது ஆனால் பிராந்திய ஆட்சி பற்றிப் பேசினால் சிங்களத் தலைவர்களே ஆதரவு தருவார்கள். இன்று அங்கு நடைபெறும் அரசியலில் தமிழரின் பங்கு ஒன்றுமில்லை. அங்கிருக்கும் தமிழ் அரசியல் கட்சிகள் வலிமையற்றவை. அரசியலுக்குத் தேவையான அறிவோ அனுபவமோ அற்றவர்கள் பதவிகளில் இருக்கிறார்கள். புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து தமிழருக்கான ஒரு நல்ல தலைமை உருவாக வேண்டும்’ என்பதுபோன்ற கருத்துக்களை முன்வைத்தார்.

பேராசிரியர். கணேஸ் பேசும்போது ‘ராஜபக்சா அரசு தமிழர்களுக்கு ஒன்றும் தரப்போவதில்லை தமிழ்பேசும் மக்கள் தங்கள் போராட்டத்தை இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் உதவியுடன் முன்னெடுக்க வேண்டும்’ என்றார். (சீனா புலிகளுக்கு நிறைய ஆயதங்களை விற்ற அதே காலகட்டத்தில் சிங்கள அரசுக்கும் பெருவாரியான உதவிகளைச் செய்வதும் இவர்களுக்குத் தெரியும்.)

இந்தியா, இலங்கைத் தமிழருக்குத் தூக்கிக்கொடுத்த ஈழத்தைத் தூக்கி எறிந்து விட்டுத் தமிழரின் பரமவைரியாகத் தமிழத் தேசியத்தால் கருதப்படும் சிங்களவருடன் சேர்ந்து இந்தியரைத் துரத்திய பெருமையையும் ரஜிவ் காந்தியைப் புலிகள் கொலைசெய்ததால் இனி ஒருநாளும் இந்திய மத்திய அரசின் இலங்கைத் தமிழருக்குக் கிடைக்காது என்பதையும் ஏன் இந்தப் பேராசிரியர்கள் உள்வாங்க மறுக்கிறார்கள்?

இதுவரை இலங்கையில் நடந்த போராட்டங்கள் பற்றி இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் தெரியாதா? இவர்கள் என்ன கருத்தைப் பின்னணியாக வைத்தக்கொண்டு மேற்கண்ட கருத்துக்களைச் சொல்கிறார்கள் என்பதற்கு அவர்கள் பல நாட்கள் இரகசியமாக நடத்திய ஆய்வுகளின் உரையாடல்கள் காரணிகளாக இருக்கலாம். மூன்றாவது நாடொன்றின்  ஈடுபாட்டையும் சிலர் உறுத்திச் சொன்னார்கள். மகாநாட்டுக்கு வந்திருந்த அறிஞர்கள் இதுபற்றி, தமிழருக்கு உதவும் நாட்டுப் பிரதிநிதிகளுடன் பேசியதாக திரு வரதகுமார் கூட்டத்தின் ஆரம்பத்தில் சொல்லியிருந்தார். இவர்கள் யாரைச் சந்தித்தார்கள் என்பது சொல்லப்படவில்லை – இரகசியம். அதுவரை நடந்த ஆய்வுகள் பற்றித் தகவல் நடுவத்தின் அறிக்கையும் வரவில்லை. அறிக்கையை உடனடியாக எழுத யாருமில்லை என்றும் சொல்லப்படலாம்

முப்பது வருடங்களாகத் தொடர்ந்து இயங்கும் இந்த ஸ்தாபனத்தில் தகவல் நடுவ முகவரைத் தவிர யாரும் முழு நேர ஊழியராக நியமிக்கப்படவில்லை. இலங்கையில் பல வருடங்களாகத் தனது பதவியாளரை வைத்திருக்கும் தகவல் நடுவத்திற்கு ஏன் லண்டனில் ஒரு காரியதரிசியை நியமிக்கத் தயக்கமாக இருக்கிறது என்பது புரியாத பல விடயங்களில் ஒன்றாகும்.

வருடா வருடம் பல்லாயிரக்கணக்கான மானியத்தை பல ஸ்தாபனங்களிலிருந்த பெற்று மகாநாடுகளை தகவல் நடுவம் நடத்துகிறது. இதனால் யாருக்கு என்ன பயன் என்று எந்த ஆவணங்களும் பிரசுரிக்கப்படவில்லை. அடிக்கடி பாக்கியசோதி சரவணமுத்து போன்றவர்களை அழைத்து ஒன்று கூடல் வைப்பது என்பதன் காரணம், உலகறிந்த என்ஜிஓ நபரான பாக்கியசோதியின் பெயரைப் பயன்படுத்தி தகவல் நிலையம் பெறும் வருடாவருட மானியத்தை உயர்த்திக்கொள்ளவா என்பதும் தொடரும் கேள்விகளில் ஒன்று.

இலங்கையிலிருந்து அவ்வப்போது ஒரு சிலர் லண்டன் தகவல் நடுவம் சார்பில் வெளிநாட்டார் உதவியுடன் இலங்கையிலிருந்து வெளிநாடுவர உதவி செய்யப்படுகிறது என்றும் அதனால் சிலர் நன்றிக்கடனுக்காக தகவல் நிலையம் பற்றித் தெரிந்தும் தெரியாமலிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
 
முப்பது வருடங்களாகத் தகவல் நடுவத்தில் ஒரு நிரந்தர காரியதரிசி இல்லாததால் அவ்வப்போது சில ‘இளம்தலைமுறை'(?)யினர் ‘வாலண்ட்டியஸாக’ வந்து ஏதோ செய்வார்கள். பொது மக்கள் நெருங்க முடியாத ‘தகவல்களைக் கொண்டிருப்பதாலோ என்னவோ அங்கு என்ன நடக்கிறது என்பது ஒரு துப்பறியும் கதை மாதியே இருக்கிறது. அங்கு வேலை செய்வோர் ஓருத்தருக்கு ஒருத்தர் விசுவாசமான – இரகசியமான ஒரு ‘குடும்பம்’ மாதிரியான சூழ்நிலையில் தகவல் நடுவம் இயங்குவது புலிகளின் புலனாய்வுத்துறை என்ற பாணியிலேயே.

தகவல் நடுவத்திற்கு உதவிக்குச் செல்பவர்கள் இந்தத் தகவல் நடுவம் தமிழரின் முன்னேற்றத்துக்காக உழைப்பதாகத்தான் நினைக்கிறார்கள். ஆனால் அங்கு என்ன நடக்கிறது? யாருக்காக நடக்கிறது இதுவரை நடந்த விடயங்களால் என்ன பிரயோசனம் வந்தது  போன்ற தகவல்களைத் தகவல் நடுவ முகவர்  தனக்குள்ளேயே அடக்கி வைத்துக்கொண்டுள்ளது.

அன்றைய கூட்டத்துக்கு வந்திருந்த அறிஞர்களும் தகவல் நடுவ முகவரும் தங்களின் முக்கிய கோரிக்கைகளாகத் தமிழ்ப் பகுதிகளிலிருந்து இராணுவம் அகற்றப்பட வேண்டும், சிறையில் இருக்கும் போராளிகள் விடுவிக்கப்பட வேண்டும், அவர்களின் பெயர்ப்பட்டியல் உடனடியாக வெளிவர வேண்டும் என்பவையாகும். இவை அத்தனையும் நல்ல கோரிக்கைகள்தான், அரசாங்கமும் அடிக்கடி கொஞ்சப்பேரை விடுதலை செய்கிறது. ஆனாலும்;;;;; தகவல் நடுவத்தார், உள்ளிருக்கம் பேராளிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர்களின் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்றும் ஏன் இப்படிப் பதறுகிறார்கள் என்றும் யோசிக்க வேண்டியிருக்கிறது.

இராணுவத்தை அகற்றிவிட்டு, போராளிகளை வெளிக்கொணர்ந்து தூண்டிவிட்டு இன்னுமொரு பயங்கரவாதத்தை முன்னெடுக்கப் போகிறார்களா? கடந்த ஆண்டு போர் முடிய முதல் ஐக்கிய நாடுகள் படையை இலங்கையில் இறக்க வேண்டும் என்று தகவல் நடுவம் பிரச்சாரம் செய்தது. அப்படி ஒரு படைபோனால் சிங்களவர்கள் ஆயதமெடுப்பார்கள் என்று தெரியும். இப்போது, பட்டினியான அகதிகளுக்குச் சாப்பாடு போடாமல், தற்கொலைதாரிகளாகப் போராட்டத்தில் பயிற்சி பெற்ற  போராளிகளை வெளிக்கொண்டுவரக் கோருகிறார்கள். ஏன்?

தங்களுக்குப் பிடிக்காத அரசுகளுக்கத் தலையிடி கொடுக்க அந்த நாடுகளில் பிரச்சினைகளை உண்டாக்குவது மேற்கு நாடுகளின் ஒரு பெரிய ‘ஜனநாயகப் பணியாகும்’. இதனால் மேற்கு நாடுகளின் முக்கிய விற்பனையான ஆயத விற்பனையைக் கூட்டுவார்கள். ஓரு கட்டத்தில் அரசுக்கு எதிராகப் போராடுபவர்களை ‘விடுதலைப் போராளிகள்’ என்று போற்றி மேற்கு நாட்டில் ஒரு மாயையை உண்டாக்குவார்கள். ஆப்கானிஸ்தானில் தலிபான்களை முன்னெடுக்க அமெரிக்கா செய்த பணிகள் இதற்கு உதாரணம்!

மேற்கு நாடுகளின் இந்த மனித உரிமை விடயத்தை ஆழமாகத் தெரிந்து கொள்ளாத, பாதிக்கப்பட்ட நாடுகளின் பொது மக்கள், ஸ்தாபனங்கள், இவர்களின் ‘மனித உரிமைக்குரலின் இரக்கத்தை’ உண்மையென்று நம்புவார்கள். ஆயதத் தயாரிப்பாளர்களும் விற்பனையாளர்களும் தங்கள் வியாபாரிகளை ‘’மனித உரிமைவாதிகள்’ என்ற பெயரில் பாதிக்கப்படும் நாடுகளுக்குப் பல போர்வைகளிற் செல்வார்கள். ஏன்.ஜி.ஓ. என்ற பெயரில், தங்களுக்குக் குழல் ஊதும் ஒரு கோஷ்டியை உருவாக்குவார்கள். அவர்கள் பல நாடுகளுக்குச் செல்லவும் மகாநாடுகளிற் பங்கு பற்றவும், தங்களின் நாட்டைப் பற்றித் திட்டித் தீர்க்கவும் நல்ல சம்பளம் கொடுப்பார்கள். அந்தச் சமூகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்க உண்மையாகக் குரல் கொடுப்பவர்களைத் தங்களின் ஊது குழல்களால் தாக்கித் தள்ளுவார்கள் (புலிகளிடம் வாங்கிக் கட்டியவர்களுக்கு இது புரியும்)

ஏற்றுமதிகளுக்குப் பெரிதாக ஒன்றமில்லாமல் பணம் படைக்கத் தங்கள்  நவீன ஆயதத்தையே நம்பியிருக்கும் மேற்கு நாடுகளுக்கு இலங்கையில் போர் முடிவு பெற்றது பெரிய ஒரு அடியாகும். எப்படியும் ஒரு பிரச்சினையை உண்டாக்க அவர்கள் தயங்க மாட்டார்கள். சரத் பொன்சேகாவை ஆதரித்தால் சிங்களவர் தங்களுக்குள் அடிபடுவார்கள் என்று புத்தியுள்ள தமிழர்கள் சொன்னார்கள். பொன்சேகாவை ஆதரித்தவர்கள் நினைத்தார்கள். சிங்கள இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதைப் பார்க்க ஆவலுடன் காத்திருந்தார்கள். 1971, 89ம் ஆண்டுகளில் ஜேவிபி யின் ஆயுதப் புரட்சியை மனதில் வைத்துக்கொண்டு, சரத் பொன்சேகாவின் ஜனாதிபதியாகும் சந்தர்ப்பத்தை வைத்து, ஆயுதம் விற்கலாம் என்று போட்ட கணக்கும் பிழைத்து விட்டது. அதற்கான முற்கட்டமாக சுவிட்சர்லாந்தில்’ இரகசியமாக’ நடந்த கூட்டத்தில் தமிழ்த் தலைவர்களுக்கு, மேற்கு நாட்டு எஜமான்கள்  சொன்னபடி அவர்கள் நடந்தும் பொன்சேகாவால் வெல்ல முடியவில்லை.

இப்படியான இரகசியக் கூட்டங்களுக்குப் பின்னாலிருக்கும் பாரதூரமான விளைவுகளைத் தமிழர்கள் உணர வேண்டும். ‘யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மீள்வாழ்க்கை…..’ என்ற பெரிய வார்த்தைகளுக்குப் பின்னாலிருக்கும் பயங்கரங்களைத் தமிழ்பேசம் மக்களுக்குத் தெரியப்படுத்த புத்தி ஜீவிகள் முன்வர வேண்டும். இந்தக் கூட்டங்களுக்குத் தொடர்ந்தும் பொருளாதார உதவி செய்யும் ஸ்தாபனங்களின் உள்ளுணர்வை நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும். இலங்கையின் துன்பத்தில் இலாபம் காணும் நாடுகளை அடையாளம் காண வேண்டும். அமெரிக்கப் படைகள் 133 நாடுகளில் தளங்களை வைத்திருக்கிறது. அவர்களின் ஆயுதங்களை வாங்கப் பல நாடுகளை ‘வியாபார’ ஒப்பந்தங்கள் மூலம் அவர்களின் ஆயுதங்களை வாங்க நிர்ப்பந்திக்கப் படுவதுண்டாம். இன்று பொருளாதாரத்தில் பின்னடையும் மேற்கு நாடுகளுக்கு ஆயுத விற்பனை உடனடியாகத் தேவைப்படுகிறது. அதற்குப் பலியாவது அப்பாவி இலங்கை மக்களா?

தமிழருக்கு உதவி செய்யும் நாட்டுப் பிரதிநிதிகளுடன் வந்திருந்த அறிஞர்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால் அந்த ‘நல்ல’ மனிதர்கள் பற்றிய விடயங்கள் என் இரகசியமாகவிருக்க வேண்டும்? உருரத்திர குமார் கூட்டத்தால் ஓரம் கட்டப்பட்ட வரதகுமார் இன்ற யாருடன் துணை சேர்ந்திருக்கிறார். ஐரிவி இல் பேட்டி கொடுத்த பிரமுகர்களுக்கு ஐரிவி யாரால் நடத்தப்படுகிறது என்று தெரியாதா?

இதுபற்றிய – அதாவது லண்டன் தமிழர் தகவல் நடுவத்தால் தொடரப்படும் இரகசியக் கலந்துரையாடல்களைப் பற்றிய சில கேள்விகளை முதலில் வைக்க வேண்டும், தமிழர்களுக்குத் தகவல்கள் தருவதற்காக இயங்குவதாகச் சொல்லப்படும் ஒரு ஸ்தாபனம் ஏன் பல விடயங்களை இரகசியமாக நடத்துகிறது என்ற கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும். மக்களுக்காச் சேவை செய்வதாகச் சொல்லும் அமைப்புக்கள் மக்களை இருட்டில் வைப்பது ஏன் என்ற கேள்விக்கு தமிழர் தகவல் நடுவகம் பதில் சொல்ல வேண்டும்.

இலங்கை நாணய மதிப்பின்படி ஒரு சில கோடிகள் செலவழித்து சுவிட்சர்லாந்தில் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. இதற்காக இலங்கையிலுள்ள தமிழ் முஸ்லிம் பாராளுமன்றவாதிகள் அழைக்கப்பட்டார்கள். அந்தக் கூட்டத்தைப் பற்றிய விடயம் இரகசியமாக கசிந்தபோது, இலங்கையிலுள்ள பலர் தமிழ்த் தலைவர்களைத் தொடர்பு கொண்டார்கள். இராஜபக்சா சகோதரர்களைப் பதவியிலிருந்து தூக்கியெறிய, வெளிநாட்டுச் சக்திகள் பணம் கொடுத்துத் தமிழ்த் தலைவர்களை விலைக்கு வாங்கி அவர்கள் சரத் பொன்சோகவுக்கு வாக்களிக்கச் செய்யப் பண்ணப்போவதாக வதந்திகள் உலவின.

பிரித்தானிய அரசியற் துப்பறியும் கதைகளில் மிகவும் பிரசித்தகான கதைகளின் பின்னணியில் வெளியாகும் ஜேம்ஸ் படங்களில் அதி வீரனான ஜேம்ஸ் பொண்ட், பிரிட்டனுக்குப் பிடிக்காத நாடுகளின் தலைவர்களை மாற்றப் பல சாகசங்கள் செய்வார். சாகசங்ளின் மகிமையால் வெல்வார். திரு வரதகுமார் ஜேம்ஸ்பொண்டாக மாறி இலங்கை அரசைத்  தூக்கியெறிய எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறுவது சொஞ்சம் கஷ்டமான விடயமே. குழந்தைகளுக்குத்தான் ஜேம்ஸ் பொண்ட் படம் சரியானது, யதார்த்த விடயங்களுக்கல்ல.

கடந்த வருடம் சுவிட்சர்லாந்தில் இலங்கைத் தமிழ் தலைவர்களை அழைத்து வைக்கப்படவிருந்த கூட்டம்  பற்றிய நிகழ்ச்சிநிரல்கூட, கூட்டத்திற்கு, இலங்கையிலிருந்து அழைக்கப்பட்ட தமிழ்த் தலைவர்களுக்கு கொடுக்கப்படவில்லை. தமிழ்த் தலைர்கள் மேற்கு நாட்டு மேடைக்கு வந்தபோது, ஓரு வெள்ளையினத்தவர் தலைவர் தலைமையில் கூட்டம் ஆரம்பமாகவிருந்ததைக் கண்டார்கள். ”கூட்டத்துக்குரிய நிகழ்ச்சி நிரல் எங்கே?, தமிழ்த் தலைவர்களுடன் பேசுவதற்கு ஏன் ஒரு அன்னியன் தலைமை தாங்க வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானனந்தா கேள்விகள் கேட்டதும், அந்தக் கேள்வியின் ஆத்திரத் தொனியில் அல்லாடிப்போன தகவல் நடுவ முகவர் வரத குமார் ஏதோ ஒரு வகையில் கூட்டத்தை நடத்தியதும் வெளிவந்தது. கூட்டத்திற்குச் சமுகம் தந்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டணியின் சம்பந்தர் பட்டாளம் இலங்கையில நடந்த ஜனாதிபதி தேர்தலில், தமிழ் இனத்தின் பகைவனாக, ‘தமிழர்கள் இலங்கை மண்ணின் மைந்தர்கள் அல்லர் அவர்கள் இந்நாட்டுக்கு வந்தேறு குடிகள், அவர்கள் தங்களுக்கு என்று எதையும் கேட்க உரிமை கிடையாது, சிங்களவர் கொடுப்பதை வாங்கிக் கொள்ள வேண்டும்’ என்று கிண்டலடித்த சரத் பொன்சேகாவுக்காக வாக்குக் கேட்டது.
 
அப்படியான சிங்களத் தலைவர்களைத் தூக்கிப் பிடிக்கும் தமிழர் தகவல் நடுவம் அண்மையில் தங்கள் ‘மீட்சி’ பத்திரிகையில் இதுவரை தமிழர்களுக்குத் துரோகம் செய்த அரசியலைக் கண்டித்து எழுதியிருந்தது. அதே துரோகத்தை யார் தொடர்கிறார்கள் என்பதை உணராமற் தமிழர்கள் இருக்கிறார்கள் என்று நினைப்பது மிகவும் தான்தோன்றித் தனமாகும். நேரத்துக்கு நேரம் தனது கொள்கைகளையும் கணிப்புகளையும் மாற்றிக்கொள்ளும் தமிழர் தகவல் நடுவம் யாருக்காக வேலைசெய்கிறது என்ற கேள்வி கேட்கப்படுவது தவிர்க்க முடியாதது.

தகவல் நடத்தும் பல கூட்டங்களின் தொடர்பாக எதிர்வரும் 23ம் திகதி, ‘போருக்குப் பின் இலங்கையில், பெண்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள்’ என்ற பெயரில் இன்னுமொரு கருத்தரங்கு நடக்கிறது. இக்கூட்டத்திற்கு அகில உலக என்.ஜி.ஓ ஸ்தானங்களின் உதவியுடன் இலங்கையிலிருந்து யார் பேச்சாளராக வரப்போகிறார்கள் என்பதும் இதுவரை இரகசியமாகவே இருக்கிறது.

Related Articles:

தமிழர் தகவல் நடுவம் திறந்த கொள்கையையும் வெளிப்படைத் தன்மையையும் கடைப்பிடிக்க வேண்டும்! : த ஜெயபாலன்

சூரிச் மாநாடு மாநாடு பற்றிய மேலதிக வாசிப்பிற்கு:

லண்டனில்? சூரிச்சில்? இரகசிய மாநாடு??

தமிழ் பேசும் கட்சிகளின் மாநாட்டின் திரைக்குப் பின்னால்: த ஜெயபாலன்

தமிழ் பேசும் கட்சிகளின் திசைமாறிய மாநாடு : த ஜெயபாலன்

நடந்தது என்ன? சூரிச் மாநாடும் எழுந்த விமர்சனங்களும்! : மீட்சி

சிலி சுரங்கத்தினுள் சிக்கிய 33 பேரும் வெற்றிகரமாக மீட்பு – 33 எண் அதிர்ஷ்டமென அறிவிப்பு

13.jpgசிலியில் 69 நாட்கள் சுரங்கத்திற்குள் சிக்கியோரை மீட்கும் பணிகள் முற்றாக நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி நேற்றுக்காலை ஆறுமணிக்கு சுரங்கத்திலிருந்து 33 வது நபரும் வெளியே மீட்கப்பட்டார். சுரங்க வேலைகளிலீடுபட்டிருந்தபோது திடீரென மண்சரிவு ஏற்பட்டதையடுத்து இந்த 33 பேரும் சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டனர். எழுநூறு மீற்றர் ஆழத்தில் 69 நாட்களாக இவர்கள் சுரங்கத்துக்குள் கிடந்தனர்.

ஆரம்பத்தில் சிறிய துளையிட்டு உணவு மருந்துப் பொருட்கள் அனுப்பப்பட்டன. பின்னர் ஒளி ஒலி கருவிகள் அனுப்பப்பட்டு உறவினர்கள் தொடர்பினை ஏற்படுத்தினர். இந்த முயற்சியும் வெற்றி பெறவே இவர்களை வெளியே எடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

மணித்தியாலத்திற்கு ஒருவரென ஒருவர் பின் ஒருவராக 33 பேரும் மீட்கப்பட்டனர். இந்த 33 என்ற எண் ஒரு அதிர்ஷ்ட எண் என சிலி அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இந்த 33 பேரையும் மீட்க 33 நாட்கள் கடுமையான முயற்சிகள் முடுக்கி விடப்பட்டன. வெளியே எடுப்பதற்கென துளையிடப்பட்டவிட்டம் 66 செ. மீற்றர். இது 33ன் இருமடங்கு. வெளியேற்றும் நடவடிக்கை முடிந்த திகதி 2010.10.13. இதன் கூட்டுத்தொகையும் 33. இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட வயதும் 33. எனவே 33 ஒரு அதிஷ்ட எண் என மீட்புப் பணியிலீடுபட்ட கம்பனியின் அதிகாரிகள் தெரிவித்தனர். நாங்கள் 33 பேரும் உயிருடன் உள்ளோம் என எழுதி அனுப்பப்பட்ட இலத்தீன் எழுத்துக்களின் கூட்டுத் தொகையும் 33 ஆகவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டோர் அனைவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக் கப்பட்டனர். 33 என்ற இலக்கத்தை சிலி அரசாங்கம் அதிஷ்ட எண்ணாக அறிவித்துள்ளது.

யாழ். கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஹதுருசிங்கவுக்கு சர்வதேச சமாதான விருது

haturusinha.jpgயாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்கவுக்கு சர்வதேச சமாதான விருது வழங்கப்பட்டுள்ளது. குஸி சர்வதேச சமாதான விருது என்ற அமைப்பு பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் வைத்து எதிர்வரும் 24ம் திகதி இந்த உயர் விருதை வழங்கவுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள அப்பாவி தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் மற்றும் இலங்கையின் தேசிய ஒற்றுமைக்காக ஆற்றிவரும் பங்களிப்பாகவும் இந்த சர்வதேச சமாதான விருது வழங்கப்படவுள்ளதாக யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உலகில் பல்வேறு துறைகளுக்காக சேவையாற்றிய 19 பேர் இந்த அமைப்பினால் வெவ்வேறு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்படவுள்ளதாக தெரிவித்த அவர், சமாதானத்திற்கான விருது உலகிலேயே இம்முறை மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்கவுக்கே வழங்கப்படவுள்ள என்றும் மேற்படி விருது ஆசியாவின் நோபல் பரிசுக்கு சமமானதாக கருதப்படுவதாகவும் தெரிவித்தார்.

யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளை தளபதியாக ஜனவரி மாதம் பொறுப்பேற்றுக்கொண்ட மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க பிலிப்பைன்ஸ் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் (2008-2009) தேசிய பாதுகாப்பு நிர்வாகத் துறைக்கான முதுமாணி கற்கையைக் கற்றதுடன் இந்த கற்கை நெறியை கற்ற உலக நாடுகளின் இராணுவ உயர் அதிகாரிகள் மத்தியில் தங்கப்பதக்கத்தை வென்றார். 1980ம் ஆண்டு செப்டெம்பர் 16ம் திகதி இலங்கை இராணுவத்தில் கெடட் அதிகாரியாக இணைந்துக்கொண்ட இவர் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பல்வேறு முக்கிய பயிற்சிகளை பெற்றுள்ளார்.

இலங்கை இராணுவத்தின் புமபூமி, வடமராட்சி நடவடிக்கை, இராணுவ நீண்டகால சேவை, தேசபுத்ர, ரிவிரச நடவடிக்கை, வடக்கு, கிழக்கு நடவடிக்கை, 60 வது சுதந்திர தினம், இராணுவத்தின் 50வது ஆண்டு மற்றும் ரணசூர ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

ஐ.தே.க எம்.பி ரஞ்சன் ராமநாயக்க கைது! ஏமாற்றி பணமோசடி செய்ததாக ஆசிரியை குற்றச்சாட்டு

ranjan1.jpgஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கோட்டே பிரதேசத்தில் வைத்து நேற்றுப் பிற்பகல் சி. ஐ. டி. யினரால் கைது செய்யப்பட்ட இவர், கண்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியை ஒருவரை திருமணம் செய்வதாக கூறி, பத்து இலட்சம் ரூபா வரை அவரிடமிருந்து மோசடியாக பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இரகசிய பொலிஸார் இவரை கைது செய்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். குறித்த ஆசிரியை தன்னிடம் பெற்ற பணத்தை தருமாறு திரும்ப திரும்ப கேட்ட போதெல்லாம் இவர் அந்த ஆசிரியையை ஏமாற்றி வந்துள்ளார்.

இதேவேளை, பணத்தை திருப்பித் தருமாறு கேட்ட ஆசிரியையை ரஞ்சன் ராமநாயக்க அச்சுறுத்தியதால், அந்த ஆசிரியை ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக நீதிமன்றில் வழக் குத் தாக்கல் செய்துள்ளார். மேற்படி குற்றச்சாட்டு தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இதன் போது ரஞ்சன் ராமநாயக்கவினால் நீதிமன்றில் முன்பிணை கோரி தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றத்தி னால் நிராகரிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

ஏரிஎன் இல் நகைச்சீட்டு: பணம் இன்னமும் வழங்கப்படவில்லை!

ATN_Jewelersகட்டப்பட்ட நகைச்சீட்டு முடிவடைந்து பல மாதங்களாகிய நிலையிலும் சீட்டுப் பிடித்தவர்கள் தங்கள் பணத்திற்காக இன்னமும் காத்திருக்கின்றனர். பலருக்கு சில ஆயிரம் பவுண்கள் வரை இன்னமும் கொடுக்கப்படாமல் உள்ளதாகத் லண்டன் குரலுக்குத் தெரியவருகிறது. சிலருக்கு தவணையிடப்பட்டு வழங்கிய காசோலைகளும் அவர்களது வங்கிக் கணக்கில் பணமின்றி திரும்பி உள்ளது. பாதிக்கப்பட்ட சிலருக்கு சில நூறு பவுண்கள் வழங்கப்பட்டும் உள்ளது.

2008 ஓகஸ்ட்டில் ஆரம்பிக்கப்பட்டு 2009ல் முடிவடைந்த சீட்டுக்களின் கொடுப்பனவுகளும் அதற்கு முன்னான கொடுப்பனவுகளும் இன்னமும் செலுத்தப்படாமல் உள்ளது. இதற்கிடையே நகைச்சீட்டைப் பிடித்த ஏரிஎன் ஜீவலர்ஸ் மூடப்பட்டு ஏரிஎன் சொப் எனப் பெயர் மாற்றப்பட்டு உள்ளது. அதுவும் இன்னமும் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது.

இச்செய்தி லண்டன் குரல் இதழ் 34ல் வெளியாகியது. ஏரிஎன் ஜீவலர்ஸ் நகைக்கடையில் நகைச்சீட்டு கட்டியவர்கள் ஆயிரக்கணக்கான பவுண் சேமிப்பை இழந்தனர்!!! இதனையடுத்து இத்தகவல் வழங்கியதாக தாங்கள் சந்தேகப்பட்ட சிலரை ஏரிஎன் ஜீவலர்ஸ் மிரட்டியதுடன் லண்டன் குரல் பத்திரிகை ஆசிரியருக்கு எதிராக அநாமதேய துண்டுப் பிரசுரம் ஒன்றையும் வெளியிட்டனர்.
இம்மிரட்டல்கள் தொடர்பாக சிங்போட் பொலிஸ் நிலையத்தில் குற்றப் பதிவு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

‘தமிழ் கட்சிகளின் புரிந்தணர்வை நோக்கிய நகர்வை வரவேற்கின்றோம்!!!’ அறிக்கை – ஆவணி 02 புரிந்துணர்வுக் குழு (லண்டன்)

Paul_and_Sangareeஆவணி 02 புரிந்தணர்வுக் குழு (லண்டன்) இலங்கையில் தமிழ் கட்சிகளிடையே ஏற்பட்டு வருகின்ற உடனபாட்டை வரவேற்று செய்திக் குறிப்பை வெளியிட்டு உள்ளது.

‘‘தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை கருத்தில் எடுத்து தமிழ் அரசியல் கட்சிகள் ஒரு புரிந்துணர்வுக்கு வருவதற்கு மேற்கொண்டுள்ள முயற்சிகளை வரவேற்கின்றோம். இந்த முன்னெடுப்பு தமிழ் மக்களுடைய அரசியல் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நம்பிக்கையை மேலும் பலப்படுத்தும் வகையில் தமிழ் கட்சிகள் தமிழ் மக்களுடைய பொதுப் பிரச்சினையில் இறுக்கமாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும் என்பது புலம்பெயர்ந்த வாழ்கின்ற எமது எதிர்பார்ப்பு.

கடந்த கால்நூற்றாண்டுக்கும் மேற்பட்ட ஆயுதப் போராட்டம் தமிழ் மக்களுக்கு அவர்களின் உரிமைகளை வென்றெடுக்கத் தவறிவிட்டது. மாறாக அவலங்களும் அழிவுகளுமே மிஞ்சியுள்ளன. இப்போது தமிழ் மக்கள் மிகவும் கீழான நிலையை அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள் சிதறுண்டு இருப்பது தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளை தொடர்ந்தும் இழப்பதற்கே வழிகோலும். இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் தமிழ் கட்சிகளிடையே ஒரு புரிந்தணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது உணர்வுபூர்வமாக ஏற்பட்டுள்ளதாகவே நாம் நம்புகின்றோம்.

கட்சிகளிடையே உள்ள அரசியல் வேற்றுமைகள் இருப்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். ஆனால் தங்கள் தேர்தல் முரண்பாடுகள் வேற்றுமைகளுக்கு அப்பால் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் இழக்கப்படுவதைத் தடுக்கவும் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கவும் குறைந்தபட்ச புரிந்துணர்வு உடன்பாட்டுக்கு தமிழ் கட்சிகள் வரவேண்டும்’’ என்று அச்செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தமிழ் மக்களிடையே புரிந்துணர்வை எட்டுவதற்கு, ஆவணி 02 புரிந்தணர்வுக் குழு வினால் உருவாக்கப்பட்ட ‘குறைந்தபட்ச புரிந்தணர்விற்கான முன்மொழிவுகள்’ ஈபிடிபி தலைவர் தேவானந்தா, தவிகூ தலைவர் வி ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் சித்தார்த்தன் ஆகியோருக்கு இலங்கை சென்றிருந்த நியூஹாம் கவுன்சிலர் போல் சத்தியநேசனால் நேரடியாக கையளிக்கப்பட்டது.

ஆவணி 02 புரிந்துணர்வுக் குழுவின் அறிக்கையைப் பெற்றுக்கொண்ட கட்சித் தலைவர்கள் தாம் பொதுவேலைத திட்டத்தில் உறுதியாக இருப்பதாக கவுன்சிலர் போல் சத்தியநேசனிடம் தெரிவித்துள்ளனர். மேலும் தங்கள் முயற்சியால் உருவாக்கப்பட்டு உள்ள தமிழரங்கத்திற்கு மூத்தகட்சித் தலைவரான வி ஆனந்தசங்கரி அவர்களே தலைமை தாங்கலாம் என்றும் தலைமை விடயத்தில் தான் தலையிடப் போவதில்லை எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தன்னிடம் தெரிவித்ததாக கவுன்சிலர் சத்தியநேசன் தெரிவித்தார். த சிர்த்தார்த்தன், வி ஆனந்தசங்கரி ஆகியோரும் தமிழரங்கம் தொடர்பாக நம்பிக்கை வெளியிட்டதாகவும் கவுன்சிலர் சத்தியநேசன் தெரிவித்தார்.

Student Visa மோசடி பல்லாயிரம் பவுண் பணத்தையும் இழந்து கல்வி வாழ்வையும் தொலைக்கும் இலங்கை – இந்திய மாணவர்கள்!

UK_Student_Visa_Advertலண்டன் கல்லூரிகளில் பெரும் தொகைப் பணத்தைக் கட்டி வரும் நூற்றுக் கணக்கான மாணவர்கள் லண்டன் வந்திறங்கியதும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர். இவர்கள் படிக்க வந்த கல்லூரிகள் உள்துறை அமைச்சின் விதிமுறைகளுக்கு அமையாததால் மூடப்பட்ட நிலையில் கட்டிய பணம் இழக்கப்படுகிறது.

2006ல் London Reading Collegeக்கு 3 ஆண்டுகள் பட்டப்படிப்பான Business Managment படிப்பதற்கு 3000 பவுண்வரை கட்டி விசா பெற்றுவந்த எஸ் கணேஸ்வரன் 2007ல் இரண்டாவது ஆண்டுக்கு வந்த போது அக்கல்லூரி உள்துறை அமைச்சின் தரப்பட்டியலில் இருந்த நீக்கப்பட்டது. அதனால் அம்மாணவன் London School of Business and Computing என்ற மற்றுமொரு கலலூரியில் மேலும் ஒரு 3000 பவுணைக் கட்டித் தன் படிப்பைத் தொடர்ந்தார். அதுவும் நீடிக்கவில்லை. 2008ல் அக்கல்லூரியும் தரப்படிட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இன்னுமொரு கல்லூரிக்குப் இன்னுமொரு 3000 பவுண் கட்டி விசாவைப் புதுப்பிக்க முடியாத மாணவன் ஊரில் பட்டுவந்த கடனை அடைக்க முடியாது உள்துறை அமைச்சுக்கு ஒழித்து சட்டத்திற்குப் புறம்பாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளார்.

இவர் படிக்க வந்த இரு கல்லூரிகளில் மட்டும் 200 இலங்கை இந்திய மாணவர்கள் வரை கற்றுக்கொண்டிருந்தனர். உள்துறை அமைச்சின்  தரப்பட்டியல் இறக்கத்தினால் 50ற்கும் மேற்பட்ட கல்லூரிகளில் படிக்க வந்த பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் இருந்து 1000 பவுண் கட்டி CECOS College க்கு கணணித் தொழில்நுட்பம் கற்க ஓகஸ்ட் 31 09ல் லண்டன் வந்தார் எஸ் ஹரிகரன். வந்து 7 நாட்களில் செப்ரம்பர் 7 09ல் அவர் படிக்க வந்த கல்லூரி உள்துறை அமைச்சால் மூடப்பட்டது. கட்டிய பணத்தை இழந்தார். இதே கல்லூரிக்கு வர 3500 பவுண்களை கட்டிய ஹரியின் மூன்று நண்பர்களுக்கு கல்லூரி மூடப்பட்டது, தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டதால் விசா  வழங்கப்படவில்லை. ஆனால் பயண ஏற்பாட்டை மேற்கொண்ட முகவர் அவர்கள் கட்டிய தொகையின் 50 வீதத்தையே பலத்த போராட்டத்தின் பின் மீளக்கையளித்தார்.

மாணவருக்கான விசா உத்தியைப் பயன்படுத்தி பல கல்லூரிகள் லண்டனிலும் புறநகர்ப் பகுதிகளிலும் முளைத்துள்ளன. குறைந்த கட்டணத்தை காட்டி மாணவர்களைக் கவரும் இக்கல்லூரிகள் அப்பாவி மாணவர்களின் வாழ்க்கையை சீரழிக்கின்றன.

மேலும் மாணவர்கள் தங்கள் விசாவைப் புதுப்பிக்கும் போது 350 பவுண்களை உள்துறை அமைச்சு அறவிடுகிறது. குறிப்பிட்ட கல்லூரிக்கு விசா மறுக்கப்பட்டால் கட்டணத்தையும் இழக்கின்றனர். இன்னொரு கல்லூரிக்கு விண்ணப்பித்து விசாவைப் புதுப்பிக்க மீண்டும் 350 பவுண்கள் செலுத்த வேண்டும். தெற்காசிய நாடுகளின் மத்திய தர உயர் மத்தியதர குடும்பங்களில் இருந்து வரும் இம்மாணவர்கள் பலர் தங்கள் இளமைக் கல்வி வாழ்வைத் தொலைக்கின்றனர்.

இவ்வாறான மோசடியான கல்லூரிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு அரசு அனுமதிப்பதன் மூலம் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.

கனடாவில் வெயிடப்படும் ஐ. தி. சம்பந்தனின் “கறுப்பு யூலை – 83” நூல் வெளியீட்டு விழா

itsampanthan-book.jpgஉலக நாடுகளையே உலுக்கிய ஸ்ரீலங்கா அரசு அரங்கேற்றிய தமிழர் படுகொலைகள் பற்றிய தரவுகள் அடங்கிய “கறுப்பு யூலை – 83” நூல் வெளியீட்டு விழா ஸ்காபரோவில் இடம்பெற இருக்கிறது.

அப்பாவித் தமிழர்கள் உயிரோடு பெட்றோல் ஊற்றித் தீக்கிரையாக்கப்பட்டதும் கத்தி, வாள், கோடரி போன்றவற்றால் வெட்டிக் கொலை செய்ப்பட்டதும் தமிழ்ப் பெண்கள் மானபங்கப்படுத்தப் பட்டதும் ஆகிய தரவுகளுடன் “சுடரொளி” ஆசிரியர் ஐ. தி. சம்பந்தன் அவர்களால் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. சம்பவங்களை நேரில் பார்த்த சாட்சிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட சோகமான தரவுகளை இந்நூல் பதிவுசெய்துள்ளது.

பேரினவாத அரசின் பக்க பலத்துடன் பெரும்பான்மைச் சிங்கள இனம் தமிழர்கள்மீது காலத்திற்கு காலம் நிகழ்த்திவரும் இனப் படுகொலைகளை அம்பலப் படுத்தும் வரலாற்றுப் பதிவாக வெளிவந்திருக்கும் “கறுப்பு யூலை – 83” நூலின் வெளியீட்டுக்கான ஏற்பாடுகளை கனடாவில் உள்ள போரால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைகளுக்குமான நடுவம் மேற்கொண்டுள்ளது.

500 பக்கங்கள் கொண்ட இந்நூல் ஆங்கிலம் – தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெளிவந்துள்ளது.

தேசியத்தை நேசிக்கும் உணர்வாளர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!

இடம்: 733 Birchmount Road, Scarborough (Birchmount/Eglinton)

காலம் – ஒக்தோபர் 17 (ஞாயிறறுக்கிழமை) 2010

நேரம் – மாலை 6.00 மணி

‘எங்களுக்காகக் குரல் கொடுத்தவர்களுக்கு ஆதரவளிக்கவில்லை. இப்ப எங்களுக்கு குரல்கொடுக்க யாரும் இல்லை’ வீ சங்கரி தவிகூ – நேர்காணல் : த ஜெயபாலன்

Anandasangaree_VAnandasangaree_VAnandasangaree_V‘தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேசியம், சுயநிர்ணயம் என்று இரண்டு கோசம் வைத்திருக்கிறார்கள். தேசியம் சுயநிர்ணயம் தமிழீழம் எங்களுக்கு சாத்தியப்படாது. மே 18க்கு முன்னும் மே 18க்கு பின்னும் அரசியல் தீர்வு விடயத்தில் நான் ஒரே முடிவிலேயே உள்ளேன்.’ என்று தேசம்நெற் க்கு வழங்கிய நேர்காணலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ ஆனந்தசங்கரி தெரிவித்தார். ‘எங்களுக்காகக் (தமிழர்களுக்கு) குரல் கொடுத்து வந்தவர்களுக்கு ஆதரவளிக்கவில்லை. இப்ப எங்களுக்கு (தமிழர்களுக்கு) குரல்கொடுக்க யாரும் இல்லை’ என்றும் அவர் தெரிவித்தார்.

ஒக்ரோபர் 12ல் லண்டன் வந்துள்ள தவிகூ இன் தலைவர் வீ ஆனந்தசங்கரியை அரசியல் ஆர்வலர்கள் வி சிவலிங்கம், கவுன்சிலர் போல் சத்தியநேசன், எஸ் அரவிந்தன், எஸ் தயா, த ஜெயபாலன் ஆகியோர் நேற்று – ஒக்ரோபர் 13ல் சந்தித்தனர். தற்போதைய நிலவரங்கள் பற்றிய கலந்துரையாடலில் இலங்கை அரசின் தன்னிச்சையான போக்குகளை வீ ஆனந்தசங்கரி கடுமையாகக் கண்டித்தார்.

இச்சந்திப்பில் பல்வேறு விடயங்களும் உரையாடப்பட்டது. தற்போது யாழ் வந்துள்ள சிங்கள – தமிழ் குடும்பங்கள் பற்றித் தெரிவிக்கையில் அவர்களை திருப்பி அனுப்பும்படி கோருவது நியாயமற்றது எனத் தெரிவித்த வீ ஆனந்தசங்கரி இந்தக் காலகட்டத்தில் அவர்களை யாழ்ப்பாணம் கொண்டு வந்து கலங்கிய குட்டையில் மீன்பிடிக்க முற்படும் போக்கு எனக் கண்டித்தார்.

யாழ் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவு பற்றி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்துக் கேட்டதாகவும் அதற்கு பேராசிரியர் ரட்ன ஜீவன் ஃகூல் அவர்களே பொருத்தமானவர் என்ற கருத்தை தான் வெளியிட்டதாகவும் தெரிவித்த வீ ஆனந்தசங்கரி தகுதியும் நேர்மையும் சிறந்த அனுபவமும் கொண்ட பேராசிரியர் ஃகூலே அப்பதவிக்குப் பொருத்தமானவர் எனத் தெரிவித்தார்.

தற்போதைய நாடுகடந்த அரசாங்கத்தின் முதற் பிரதம மந்திரி பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், ‘இதுவொரு விசர்க்கூத்து’ என்று தெரிவித்தார்.

அண்மையில் லண்டனில் இலங்கையில் இருந்து சிலர் வந்து கலந்துகொண்ட கூட்டம் (தமிழர் தகவல் நடுவம் ஏற்பாடு செய்த கூட்டம்) ஒன்று நடந்தமை பற்றியும் விசாரித்துக் கொண்ட வீ ஆனந்தசங்கரி. பெரும்செலவில் நடத்தப்படும் இச்சந்திப்புக்களின் நோக்கம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.

இச்சந்திப்பின் போது தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவான தமிழரங்கத்தை மேலும் பலப்படுத்துகின்ற நடவடிக்கைகளில் வீ ஆனந்தசங்கரி முக்கிய பாத்திரத்தை எடுக்க வேண்டுமென அவருக்கு வலியுறுத்தப்பட்டது. எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென அறிவித்த வீ ஆனந்தசங்கரி தமிழ் அரங்கத்தின் தலைமைக்குப் பொருத்தமானவர் என்றும் அவருடைய வயதும் நீண்ட அரசியல் அனுபவமும் தமிழ் அரங்கத்தை மேலும் பலமான அமைப்பாக உருவாக்க உதவவேண்டும் எனவும் வலியுறுத்திச் சொல்லப்பட்டது.

._._._._._.

தவிகூ தலைவர் வி ஆனந்தசங்கரி உடனான நேர்காணல்

Anandasangare_06Sep10\Anandasangaree_V_and_Jeyabalan_Tதேசம்: மே 18க்கு முன்பிருந்த அரசியல் நிலையும் மே 18க்குப் பின்னான அரசியல் நிலையையும் எவ்வாறு மதிப்பிடுகின்றீர்கள்.

சங்கரி: பாரிய மாற்றம் இடம்பெற்றுள்ளது. அரசு பொறுப்பற்ற விதத்தில் செயற்படுகிறது. நான் முன்வைத்த இந்திய முறையிலான தீர்வு பற்றி பேசும் போது ஜனாதிபதி ‘இந்தியமுறை பற்றி எவ்வளவும் பேசுங்கோ ஆனால் சமஸ்டி பற்றி பேச வேண்டாம்’ என்றார். ஆனால் இப்ப அந்தக் கதையே இல்லை. 13 திருத்தம் பற்றிக் கதையே இல்லை. யுத்தம் முடிவடைந்து ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டது குறிப்பிடப்படும் படியாக எதுவும் நடக்கவில்லை. எத்தனை ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர்? மீள்குடியேற்றம் என்று என்ன செய்கிறார்கள்? வன்னியில் மீட்கப்பட்ட மக்களின் நகைகளுக்கு என்ன நடந்தது?

சிலர் விடுதலைப் புலிகள் பரவாயில்லை என்று சொல்கிற அளவிற்கு நிலைமை உள்ளது. அதனால் விடுதலைப் புலிகள் சரியென்பதல்ல. நிலைமை மோசமாக சென்று கொண்டுள்ளது.

தேசம்: தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாது போனால் தமிழ் மக்களுக்கு மோசமான ஒரு நிலையே ஏற்படும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் எப்போதுமே கூறிவந்துள்ளனர். இன்றும் அத்துருப்புச் சீட்டையே அவர்கள் தங்கள் பிரதான அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர். அவ்வாறான ஒரு உணர்வையே நீங்கள் இப்போது வெளிப்படுத்துகிறீர்கள். அப்படியாயின் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான உங்கள் அரசியல் தவறானது என உணர்கிறீர்களா?

சங்கரி: அப்படியல்ல. நான் தான் இந்த நிலையேற்படும் என்பதை முன்கூட்டியே சொல்லி நேரத்துடனேயே சில விசயங்களை ஒத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னனான். நான் எப்படிக் குற்றவாளியாக முடியும். நான் சொன்னது தான் இப்ப நடக்கிறது. நான் வே பிரபாகரனுக்கு எழுதிய ஒரு கடிதத்தை படித்து அதன்படி செய்திருந்தாலே இதைத் தவிர்த்திருக்கலாம். ஒரு நாட்டுடன் ஒரு இயக்கம் போராடுகிறது என்றால் அது முழு உலகத்துடனும் தான் போராடுகிறது. அரசாங்கங்களுக்கு இடையே பல வேறுபாடுகள் இருந்தாலும் பயங்கரவாதம் என்றவுடனே எல்லாரும் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்கிறார்கள். உலகத்தில் உள்ள எல்லா நாடுகளுடனும் பகையை ஏற்படுத்தியவர்கள் விடுதலைப் புலிகள். இப்படிச் செய்ய வேண்டாம் என்று நான் சொல்லி இருக்கிறன். அப்ப ஏன் என்னுடைய சொல்லைக் கேட்கவில்லை.

இப்ப சுகமாக வெளிநாட்டில் இருந்து கொண்டு நாடுகடந்த ஈழம் கடல்கடந்த ஈழம் என்று கதைவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். 40 000 மக்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். இன்னும் 40 000 மக்களை கொல்வதற்கா. இனி மக்கள் இவர்களை விடுவார்களா?

இந்த சர்வதேச அரசாங்கங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஏதாவது எச்சரிக்கை வழங்குகிறார்களா? இல்லையே.

பிரபாகரனுக்கு விழுந்ததே கடைச்சி சூடு அதற்குப் பிறகு இன்று வரைக்கும் துப்பாக்கிச் சூடு இடம்பெறவில்லை.

புலிகளோடு இருந்தவர்களே இப்போது அரசாங்கத்தோடு சேர்ந்துள்ளார்கள்.

தேசம்: இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் காலம் காலமாக ஆட்சிக்கு வந்த அரசுகள் பற்றி தமிழ் மக்கள் தெளிவாகவே உணர்ந்துள்ளனர். அதனால் தான் அவர்கள் தமிழ் அரசியல் தலைமைமைகளின் பின் நின்றனர். அதனால் இலங்கை அரசு மீது பழிபோட்டுவிட்டு தமிழ் அரசியல் தலைமைகள் தப்பித்துக் கொள்ளமுடியாது. தமிழ் அரசியல் தலைமைகள் தங்கள் அரசியலை வேறு ஏதாவது விதமாக கையாண்டு இருந்தால் இன்று ஏற்பட்டுள்ள நிலைமையில் மாற்றம் எற்பட்டு இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்களா?

சங்கரி: நிச்சயமாக தமிழ் அரசியல் தலைமைகள் தங்கள் அரசியலை வித்தியாசமாகக் கையாண்டு இருக்க முடியும். தமிழ் ஊடகங்கள் தமிழ் அரசியல் தலைமை என்று யாரை ஏற்கிறார்கள். அவர்கள் என்னை தமிழ் அரசியல் தலைவர் என்று ஏற்கிறதில்லை. காலம்காலமாக என்னைப் பற்றி விசமேற்றி உள்ளனர். ஆர் சம்பந்தன் மா வை சேனாதிராஜா சுரேஸ் பிரேமச்சந்திரன் செல்வம் அடைக்கலநாதன் இவர்கள் தான் தமிழ் தலைவர்கள். இதில் என்னைக் குற்றம் சொல்ல முடியாது.

அவர்கள் தேசியம், சுயநிர்ணயம் என்று இரண்டு கோசம் வைத்திருக்கிறார்கள். அதைவிட்டு எல்லோருடனும் பேசி ஒரு தீர்வுக்கு வர எப்போதாவது முன் வந்திரக்கிறார்களா? நான் கடந்த ஏழு வருடங்களாக இந்தியன் முறை என்ற ஒரு தீர்வை முன் வைத்து அதற்காக தனித்துப் போராடி வருகிறேன். இதற்கு மேலான ஒரு தீர்வு இலங்கையில் வர போவதில்லை. நான் ஜனாதிபதி எதிர்க்கட்சி மற்றைய கட்சிகளோடு பேசி வந்துள்ளேன். மே 18க்கு முன்னும் மே 18க்கு பின்னும் நான் இதையே வலியுறுத்தி வருகிறேன்.

ஆகக் கூடிய அளவு இந்தியா அழுத்தம் கொடுக்கக் கூடியது இந்திய மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வு. அதனையே நான் முன்வைத்துள்ளேன். அதற்கு மேல் அதிகாரப் பகிர்வை வழங்க இந்தியாவும் முன்வராது. நாங்கள் உலக நாடுகளுடனும் அயல்நாடான இந்தியாவுடன் அனுசரித்துமே எமது பிரச்சினைக்குத் தீர்வைப் பெறமுடியும். தேசியம் சுயநிர்ணயம் தமிழீழம் எங்களுக்கு சாத்தியப்படாது.

தேசம்: இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எவ்விதமான தீர்வையுமே வழங்கப்போவதில்லை என்பதனாலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழக் கோரிகையை முன்வைத்தனர் என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் அழுத்தமான வாதம். இலங்கை அரசு இந்தியன் முறை யிலான தீர்வையும் அங்கிகரிக்கப் போவதில்லை என்பதே அவர்களுடைய நிலைப்பாடாக உள்ளது.

Anandasangaree_Vசங்கரி: இலங்கை அரசு எதையுமே தராது என்பது புலிகளுடைய வாதம். இலங்கை அரசு எதையுமே தராது என்றவர்கள் தானே இந்த ரிஎன்ஏ. இந்த வருடம் ஜனவரி தினக்குரலில் ஆர் சம்பந்தன் தெரிவித்து இருப்பதைப் பாருங்கள். கல்முனை என்று நினைக்கிறேன், ‘‘இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டு உள்ளது. அப்படியான ஒரு தீர்வை  நாங்கள் ஏற்கத் தயாராய் இருக்கிறோம்’’ என்று கூறி இருக்கிறார். ஆனால் இதனையே ஆனந்தசங்கரியும் கூறி வருகிறார் என்றதைச் சொல்ல ஆர் சம்பந்தன் தயாரில்லை. அதற்கு முன்னர் தினக்குரலில் முன்பக்கத் தலைப்பிலும் ரிஎன்ஏ இந்தியா மாநிலங்களுக்கு ஒப்பான தீர்வுக்கு தயாராய் இருப்பதாக வெளிவந்தது. அதில் ஜனாதிபதியும் இதனைத் தெரிவித்து இருந்ததாக ஆர் சம்பந்தன் கூறி இருந்தார்.

ஜனாதிபதி சொல்லி இருந்தார் என்றால் அப்போதே அதனையேன் ஏற்கவில்லை. ஏன் இப்பொது தான் உங்களுக்கு ஞானம் பிறந்ததா? நீங்கள் பெரும்தன்மையாக இருந்திருந்தால் தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமையேற்பட வேண்டும் எண்ணி இருந்தால் ஆனந்தசங்கரியும் இதனையே சொல்லி வருகிறார் என்பதை குறிப்பிட்டு இருக்க வேண்டும். ஆனால் அதற்காகவே சங்கரி குரல் எழுப்பி வருவதை ஆர் சம்பந்தன் இருட்டடிப்புச் செய்தார். இதுதான் சம்பந்தர் தமிழ் மக்களுக்குச் செய்யும் அரசியல் சாணக்கியம்.

ஜனாதிபதித் தேர்தலில் இந்திய மாநிலமுறையை ஆதரித்த நீங்கள், பாராளுமன்றத் தேர்தலில் அதைப்பற்றிக் கதைகவே இல்லை. பாராளுமன்ற தேர்தல் காலத்தில் சம்பந்தர் எப்படி பிரச்சாரம் செய்கிறார். ‘ஆனந்தசங்கரியும் உதயசூரியனும் அரசாங்கத்தின் ஏவல் பேய்கள்’ என்கிறார். சங்கரி கேட்கின்ற இந்திய முறையைத் தான் நீங்களும் மீண்டும் தேர்தல் முடிந்த பின் கேட்கிறீர்கள். ஆனால் ‘சங்கரி அரசாங்கத்தின் ஆள்’ என்று பிரச்சாரம். இது சம்பந்தரின் சாணக்கியமா? அல்லது தமிழ் மக்களுக்குச் செய்கின்ற துரோகமா?

பாராளுமன்றத் தேர்தலுக்கு நான் இந்தியன் முறை என்பதை வைத்து போட்டியிடுகிறேன். ஆனால் சம்பந்தர் தேசியம், சுயநிர்ணயம் என்ற அடிப்படையில் போட்டியிடுகின்றார். ஆனால் தேர்தல் முடிந்ததும் இந்திய மாநில முறைக்கு ஆதரவாக பேசுகிறார்.

தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைக்கு ஏனைய கட்சிகளுடன் ஒன்றுபட்டு தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு தயாரில்லை.

தேசம்: நீங்கள் எவ்வாறான ஒரு குற்றச்சாட்டை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது வைத்திருந்த போதும் தமிழ் மக்களின் அரசியல் அங்கீகாரத்தைப் பெற்ற கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பே உள்ளனர். அதிகப்படியான ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட ஒரே தமிழ்க் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பே.

சங்கரி: தமிழ் மக்கள் விடுகின்ற பிழை என்னவென்றால் நீங்கள் சொன்ன கூற்றை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அது உண்மையில்லை. ஜனாதிபதித் தேர்தலில் சரத்பொன்சேகாவை ஆதரிக்கும்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரச்சாரம் செய்தது. இந்தியாவுக்கு டெல்லிக்குச் சென்றுவிட்டு வந்து தங்களுக்கு ஏதோ சமிஞ்சை கிடைத்துள்ளது. நீங்கள் பொன்சேகாவுக்கு வோட் போடுங்கள் என்று பிரச்சாரம் செய்தனர். சரத் பொன்சேகாவுக்கு யாழ்ப்பாணத்தில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் வாக்குகள் கிடைத்தது. தாங்கள் சொல்லித்தான் அந்த வோட் விழுந்ததாகவும் கூறினார்கள். அப்படி என்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கி ஒரு லட்சத்து 13 ஆயிரம் வாக்குகளுடன் ஆரம்பித்தது. பாராளுமன்றத் தேர்தலில் புலம்பெயர்ந்த தமிழர்கள் தேசியத்தை ஆதரிக்கும் ஊடகங்கள் டிபிஎஸ் ஜெயராஜ் கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்கும்படி தெரிவித்தனர். ஆனால் என்ன நடந்தது. தமிழரசுக் கட்சி (தமிழ் தேசியக் கூட்டமைப்பு) யாழ்ப்பாணத்தில் 65 ஆயிரம் வாக்குகளையே பெற்றனர். எனக்கு மட்டும் தான் விழவில்லை. பலரும் எனக்கு எதிராக மேற்கொண்ட சதிப் பிரச்சாரம் தான். டக்ளஸ் தேவானந்தாவின் கட்சிக்கு 45 ஆயிரம் வாக்குகள் விழுந்திருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியில் கேட்ட பெண் மணிக்கும் வாக்குகள் வீழ்ந்துள்ளது. ஆகவே 22 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு இத்தேர்தல் பெரும் தோலிவியே.

தேசம்: நீங்கள் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாக குரல்கொடுத்து வருகின்றீர்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஜனநாயக விரோதப் போக்கிற்கு எதிராகவும் தற்போது அரசாங்கத்தினுடைய ஜனநாயக விரோதப் போக்கிற்கு எதிராகவும் குரல்கொடுக்கின்றீர்கள். எவ்வாறானாலும் நீண்ட அரசியல் வரலாற்றைக் கொண்ட நீங்கள் கடந்த தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டு உள்ளீர்கள். உங்கள் உள்ளுணர்வு என்ன சொல்கின்றது.

சங்கரி: என்னுடைய உள்ளுணர்வு நான் ஏமாந்த மக்களால் நிராகரிக்கப்பட்டு உள்ளேன் என்கிறது. மக்கள் என்னை நிராகரிக்கவில்லை. ஏமாந்த மக்கள் என்னை நிராகரித்துள்ளனர்.

‘ஆனந்தசங்கரி அரசாங்கத்தின் ஆள்’ என்று பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனந்தசங்கரி என்ன மந்திரிப்பதவி எடுத்தேனா? மந்திரிப் பதவி எடுக்கின்ற தகுதி எனக்கில்லையா? ஜனாதிபதி ‘அடுத்த கவனர் பகுதி உங்களுக்குத் தான்’ என்று சொன்ன போது அது தமிழ் மக்களுக்கு எப்படி உதவும் என்று தான் நான் கேட்டனான். நான் எந்த நன்மையையும் அரசாங்கத்திடம் இருந்து பெறவில்லை. எனக்கு கிடைத்த பரிசுப் பணத்தை என்ன செய்தேன் என்று கேட்கிறார்கள். அதனை வைத்துத் தான் நான் கட்சி நடத்தினேன்.

நான் புலிகளுடைய போக்குக்கு எதிரானவன். நான் புலிகளை ஆரம்பத்தில் விமர்சிக்கவில்லை. யுத்த நிறுத்தம் கையெழுத்திட்ட பின் பிரபாகரனை இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. வெண்ணை ‘திரண்டு வரும்போது தாளியை உடைக்க வேண்டாம்’ என்று நான் அதனைக் கண்டித்தனான். நான் பிரபாகரனுக்கு எழுதியது ‘இதை இதைச் செய்ய வேண்டாம் இதை இதைச் செய்யுங்கோ என்று.’ என்ன நடந்தது?

இந்த ரிஎன்ஏ க்கு கிடைத்த 22 ஆசனங்களும் பிரபாகரன் போட்ட பிச்சை. ‘அந்தத் தலைவர் நல்லாக இருந்தவர். எங்களுக்கு பாராளுமன்ற ஆசனம் பெற்றுத் தந்தவர்’ என்று ஒருநாள் அந்தாளுக்கு அஞ்சலி செலுத்தினார்களா? இல்லை. அடுத்த நாளே தாங்கள் சமஸ்டிக்கு ரெடி என்றார்கள். இதனை சுடரொளியில் வித்தியாதரன் சுட்டிக்காட்டி இருந்தார். ‘ஆனந்தசங்கரி பிரபாகரன் இருக்கும் போதும் சரி இல்லையென்று ஆனபோதும் சரி தனது இந்தியன் முறையில் உறுதியாக உள்ளார். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரபாகரன் இல்லையென்று ஆனபோது தங்கள் நிலைப்பாட்டை மாற்றி விட்டது’ என்று அவர் தனது ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக்காட்டி இருந்தார்.

தேசம்: மந்திரி பதவி கவனர் பதவி என்பவற்றை நீங்கள் எடுக்கவில்லை என்று கூறி இருந்தீர்கள். இப்போது அவ்வாறான ஒரு பதவியை நீங்கள் பெற்றிருந்தால் தமிழ் மக்களுக்கு பயனுள்ள வகையில் ஏதாவது செய்திருக்கலாம் என நினைக்கிறீர்களா?

சங்கரி: நான் அப்பதவிகைள் எடுக்காமைக்காக சந்தோசப்படுகிறேன். பதவி எடுத்திருந்தால் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு நானும் பொறுப்பாகி இருப்பேன்.

தேசம்: நீங்கள் பதவியை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என்று கூறுகிறீர்கள். ஆனால் வன்னி மக்களின் அபிவிருத்திக்கான பொறுப்பை உங்களிடம் தர வேண்டும் என்ற கோரிக்கையை நீங்கள் அரசாங்கத்திடம் வைத்திருந்தீர்கள் அல்லவா?

சங்கரி: அது வேறு. இது வேறு. வன்னி மக்களின் அபிவிருத்தியில் தெற்கில் இருந்து முடிவு எடுப்பவர்களுக்கு அப்பகுதியின் சூழல் தெரியாது. ஜனாதிபதி ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச சில விடயங்களை முன்னெடுக்கிறார். ஆனால் அவருக்கு அந்தப் பிரதேசத்துடன் எவ்வித அனுபவமும் இல்லை. அதனால் அப்பிரதேசத்தில் 1959ல் இருந்து வாழ்ந்தவன் நான். அப்பகுதி பற்றி நன்கு அறிந்தவன்.

தேசம்: நீங்கள் சொல்வது சரி. அதனைச் செய்வதற்கு அப்பொறுப்பு அப்பதவி உங்களுக்கு அவசியமல்லவா?

சங்கரி: பொறுப்போ பதவியோ வேண்டாம். சம்பளமும் வேண்டாம். அப்பகுதி பற்றிய அறிவும் அனுபவமுடைய என்னை ஆலோசகராக நியமிக்கவே கேட்டேன். வடபகுதி அபிவிருத்திக்கென 19 பேர் கொண்ட குழுவை அமைத்திருக்கிறார்கள். அதில் ஒரு முஸலீம் 18 சிங்களவர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் எத்தனை பேருக்கு கிளிநொச்சி தெரியும். அதனால் அபிவிருத்தித் திட்டங்களும் அதில் பயன்படுத்தப்படும் நிதியும் மக்களுக்கு முழுமையான பயனைத் தரவில்லை.

உதாரணமாக இரணைமடு குளம் 25 000 – 30 000 ஏக்கருக்கு தண்ணீர் கொடுக்கிறது. யாழ்பாணத்தில் தண்ணீர் இல்லாத இடம்என்று எங்காவது கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? ஓரிரு கிராமங்கள் இருந்தால் தண்ணீர் பவுசரில் கொண்டு செல்லலாம். 60 கோடி செலவில் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் குடி தண்ணீர் கொண்டு வரப் போகின்றார்களாம். யாருடைய ஆலோசனை?

டிஎல்ஓ மென்டிஸ் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் இருந்தவர். அவர் முன்னர் கூறி இருந்தார் ‘யாழ்ப்பாணத்துக்கு ஒரு ஆறு உருவாக்க வேண்டும் என்று பொறியியலாளர் ஆறுமுகம் விரும்பி இருந்தார்’ என்று. அவருடைய திட்டம் தொண்டைமான் ஆற்றைப் மறித்து, மழைத் தண்ணீர் எல்லாம் தொண்டைமான் ஆற்றூடாகவே கடலைச் சென்றடைகிறது. மற்றறையது நாவற்குழியால் கடலைச் சென்றடைகிறது. இன்னொன்று சுண்டுக்குளத்தால் கடலைச் சென்றடைகிறது. வேறு வழியில் தண்ணீர் சென்றடைவதற்கு இடமில்லை. அப்ப இரணைமடுக் குளம் நிறைந்தால் அதன் தண்ணீரை ஆணையிறவு ஊடாக அனுப்பினால் அதனைத் தொண்டைமான் அறுவரை அனுப்பலாம். யாழ்;ப்பாணத் தீபகற்பத்தில் உள்ள உப்புத் தறையின் உவர்த் தன்மை படிப்படியாக குறையும். ஐந்தாறு வருடங்களில் அப்பகுதிகளில் உள்ள உவர்த்தன்மை படிப்படியாக இல்லாமல் போகும். அப்பகுதிக் கிணறுகளில் நன்னீர் கிடைக்கும் அப்பகுதிகளில் விவசாயம் செழிக்கும்.

அப்படி இருக்கையில் 60 கோடியில் பைப் தண்ணி எதற்கு. என்னுடைய குற்றச்சாட்டு என்னவென்றால் அப்பிரதேச மக்களுடைய அறிவை அரசாங்கம் பயன்படுத்தவில்லை. அரசாங்கம் எல்லாவற்றையும் வியாபார நோக்கில் பார்க்கக் கூடாது.

தேசம்: இன்றுள்ள இந்த நெருக்கடியான சூழலை தமிழ் அரசியல் தலைமைகள் எவ்வாறு கையாள முடியும் என நினைக்கிறீர்கள்?

Anandasangaree_Vசங்கரி: இந்த அரசினுடைய போக்கு மிகப் பிழையென எல்லோருக்கும் தெரிகிறது. அரசாங்கம் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கின்றது. அதனால் நாங்கள் குழம்பவில்லை என்று நாங்கள் காட்ட வேண்டும். நான் மந்திரியில்லை. நான் கவனர் இல்லை. நாங்கள் எல்லோரும் சமன் என்று உணர வேண்டும். எங்களுக்கு முக்கியமான பிரச்சினை ஒன்று இருக்கிறது. அதனைத் தீர்த்து வைக்க வேண்டும். இப்போது குடியேற்றம் செய்யப்படாது. அதனைச் செய்ய வேண்டிய காலத்தில் பார்க்கலாம். தங்கட காணி பூமியை விட்டுவிட்டு போனவர்கள் திரும்பி வரவேண்டும். அந்தக் காணிகளில் இப்ப கை வைக்கக்கூடாது. இப்ப காணி இல்லாதவர்களுக்கு எப்படி உறுதிகொடுக்க முடியும்?

தேசம்: தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் காணி அற்ற பலருக்கும் காணிகளைப் பிரித்து வழங்கி இருந்தார்கள். அந்நிலத்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்த அந்த மக்களிடம் தங்கள் நிலத்திற்கான சட்டப்படியான உரிமம் இல்லை. அவ்வாறானவர்களுக்கு உறுதி வழங்குவதில் என்ன தவறு?

சங்கரி: விடுதலைப் புலிகள் காணி இல்லாதவர்களுக்கு காணி கொடுத்தது ஒரு பக்கம். காணி நிலத்துடன் இருந்தவர்களை அவற்றைப் பறித்துக் கொண்டு விரட்டியும் உள்ளனர். அந்தக் காணிகளுக்கான உறுதியை இன்னொருவருக்கு வழங்கினால் பிரச்சினை மேலும் மோசமாகும் எல்லா.

நான் உறுதி கொடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. இப்ப அதற்கு அவசரம் இல்லை என்றுதான் சொல்கிறேன்.

தேசம்: இந்த உறுதிகள் தமிழர்களுக்கு வழங்கப்படுகிறதா? அல்லது தமிழர்கள் அல்லாதவர்களுக்கு வழங்கப்படுகிறதா?

சங்கரி: வேறு யாருக்காவது கொடுக்கிறது என்றால் இன்னம் மோசம் எல்லோ. எங்கள் காணி நிலம் பறிபோவது போல் எல்லோ.

முதலில் ஒரு குறிப்பிட்ட திகதிக்கு முன் எல்லோரையும் தங்கள் தங்கள் காணிகளில் இருக்கச் சொல்ல வேண்டும். அதன் பிறகு உறவுகள் சொந்தங்களின் காணிகள் இருந்தால் அதனையும் கிராமசேவகர் அரசாங்க அதிபர் மூலம் உறுதிப்படுத்த வேண்டும். காணிகளின் சொந்தக்காரர்களை உறுதிப்படுத்திய பின்னுள்ள அரச காணிகளை காணி அற்றவர்களை அழைத்து அவற்றை பகிர்ந்து உறுதி கொடுக்க முடியும். அதற்கு எவ்வளவு காலம் இருக்கு. சனங்கள் இன்னும் தங்கள் இடங்களுக்குப் போய் குடியிருக்கவே இல்லையே.

தேசம்: மே 18 2009ற்குப் பின் வடபகுதியில் எங்காவது குடியேற்றம் நடந்துள்ளதா?

சங்கரி: நான் அறிய இல்லை. ஆனால் இராணுவத்திற்காக மிக வேகமாக வீடுகள் கட்டப்படுகின்றது. அது குடியேற்றமாக அமையும் என்றே நம்புகிறேன். 15 000 வீடுகள் அமைக்கும் திட்டம் இருக்கிறது. இலங்கையின் தென்பகுதிகளுக்கும் நான் பயணம் செய்திருக்கிறேன். அங்கெல்லாம் நிறையக் காணிகள் உள்ளது. இப்ப எதற்காக வடக்கு கிழக்கில் குடியேற்ற அவசரப்பட வேண்டும்.

தேசம்: இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் தமிழ் மக்கள் இலங்கை அரசுடன் சாத்வீகமான முறையில் போராட்டங்களை நடாத்தி தாங்கள் இழந்த உரிமைகளைப் பெற முற்பட்டனர். பின்னர் ஆயுத வன்முறையிலும் இறங்கினர். ஆனால் இரண்டுமே தோல்வியிலேயே முடிவடைந்துள்ளது. இனிமேல் தமிழ் மக்கள் தமிழ் தலைமைகள் என்ன செய்யலாம் என நினைக்கிறீர்கள்?

சங்கரி: தமிழ் அரசியல் தலைமைகள் ஒன்றாக நின்று செயற்பட வேண்டும். அதற்கு சில விட்டுக்கொடுப்புகள் செய்யப்பட்டே ஆக வேண்டும். நாட்டைப் பிரிக்கச் சொல்லி கேட்கமாட்டம். ஆனால் குடியேற்றத்தை நிறுத்தச் சொல்லலாம். எனக்கு சிங்களவர்களும் முஸ்லிம்களும் பக்கத்தில் இருப்பது விருப்பம். ஆனால் அதனை அரசாங்கம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்திச் செய்யக் கூடாது. நாங்கள் துவசம் பேசவில்லை.

தேசம்: தமிழ் அரசியல் தலைமைகள் ஒன்றாக வரவேண்டும் என்று சொல்கிறீர்கள். நீங்கள் தமிழ் அரங்கத்தில் உங்களை இணைத்துக் கொண்டதன் மூலம் அந்த ஒற்றுமையை நோக்கி ஒருபடி முன் நகர்ந்து இருக்கிறீர்கள். இந்த தமிழ் அரங்கத்தின் எதிர்காலம் எப்படி அமையும் என நினைக்கிறீர்கள்?

சங்கரி: தமிழ் அரங்கத்தை நான் துவங்கியிருப்பன் ஆனால் தேர்தலுக்காக என்றெல்லாம் சொல்வார்கள் என்பதால் நான் துவங்கவில்லை. ஆனால் இனி எனக்கு தேர்தலில் நிற்கும் எண்ணம் இல்லை. ஒரு தரும் துவங்கவில்லை. டக்ளஸ் துவங்கினார். டக்ளஸ் துவங்கினார் என்பதற்காக நான் விட்டுவிட்டு ஓட இயலாது. டக்ளஸ் ஒரு நல்ல வேலையைச் செய்யும் போது நான் சென்றேன். ரெலிபோனில் அழைத்து அண்ணை வாங்கோ என்றார் நான் போனேன். ஒன்பது கட்சிகளைச் சேர்ந்த 15 பேர் இருந்தார்கள்.

முதல் நாளே நான் சொன்னான் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது என்றால் ஒரு சமயம் நீங்கள் எல்லோரும் சம்மதிப்பியல். ஆனால் பிரச்சினை எனக்கும் டக்ளஸ்க்கும் ஆகத்தான் இருக்கும். அவரும் ஒரு நிலைப்பாட்டை வைத்திருக்கிறார். நான் ஒரு நிலைப்பாட்டை வைத்திருக்கிறேன். நாங்களும் கூட விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும். அப்பதான் நாங்கள் எல்லோரும் சேர்ந்து இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண முடியும். அதற்கு எத்தனையோ தடைகளை டக்ளஸ் பாய வேண்டி இருக்கும். அப்ப டக்ளஸ் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டனான். ‘அப்படி ஒருநிலை வந்தால் தான் உங்களுடன் நிற்பேன்’ என்றார். அந்த உத்தரவாதத்தோடு நான் இருக்கிறேன்.

சம்பந்தர் தேர்தலுக்குப் பிறகு சொல்லி இருக்கிறார் ‘எல்லோரும் வாருங்கள்! நடந்ததை மறப்பம்!’ என்று. பிறகு அழைப்பு வரவில்லை அப்படியெல்லாம் சொன்னார்கள். ரிஎன்ஏ சரவணபவன் தாங்கள் தேசியத்துக்கா நிற்கிறம் என்றெல்லாம் சொன்னார். அதுக்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றெல்லாம் பார்த்துவிட்டுத்தான் நாங்கள் வருவம் என்றார்.

தேசம்: தமிழ் அரங்கம் உங்களுக்கு எவ்வளவு நம்பிக்கையானதாக உள்ளது.

சங்கரி: இக்கட்டான ஒரு பிரச்சினை வருகின்ற போது அரசாங்கத்துடன் நிற்கும் கட்சிகளுக்கு சற்று கடினமாக இருக்கும். அதையும் மீறி துணிந்து ஒரு நிலைப்பாட்டை எடுக்கக் கூடியவகையில் இருக்க வேண்டும். உதாரணத்திற்கு 5000 பேரை வடக்கில் குடியேற் முடிவெடுத்தால் தமிழ் அரங்கம் அதற்கு எதிராக இயங்க வேண்டி இருக்கும். அப்போது டக்ளஸ், பிள்ளையான் போன்றவர்கள் ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறேன்.

தேசம்: இதுவரை தமிழ் அரங்கத்தில் உறுதியான முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கிறதா?

சங்கரி: இதுவரை நான்கு கூட்டங்கள் நடந்தும் உறுதியான முடிவுகள் பற்றி பேசாததற்குக் காரணம் ரிஎன்ஏ வந்த சேராதது. இனி அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை. அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டி வந்தாலும் வரலாம்.

தேசம்: தமிழ் அரங்கம் என்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பு இல்லாத ஒரு அரங்கமாகத் தான் இருக்கப் போகின்றது?

சங்கரி: அது அவர்களுக்கு அரசாங்கத்துடன் நிற்பவர்கள் என்று எங்களைப் பற்றி பொய் பிரச்சாரங்கள் செய்வதற்கு வசதியாக அமைந்துள்ளது.

தேசம்: தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் அரங்கத்தில் இணைவதற்கான வாய்ப்பு….

சங்கரி: இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். அவர்கள் வர வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்குக் கஸ்டம். மக்களை கனகாலத்திற்கு ஏமாற்ற முடியாது.

தேசம்: தமிழ் அரங்கத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவானவர்கள் இருப்பதால் தான் அவர்களுடன் தங்களை அடையாளப்படுத்த முடியவில்லை என ததேகூ இன் யாழ் எம்பி சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறி இருக்கிறார்?

சங்கரி: அப்ப யாரை அடையாளப்படுத்தி எல்லோரும் வாருங்கள் ஒன்றுசேருவோம் என்று சம்பந்தர் கேட்டவர்.

தேசம்: வடமாகாண சபைக்கான தேர்தல் ஒன்று வந்தால் தமிழ் அரங்கத்தின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

சங்கரி: இப்ப இந்த தேர்தலுக்காகத்தான் இவர்கள் கூட்டுச் சேர்ந்தார்கள் என்ற கதையள் மறைமுகமாக வந்து இருக்கிறது. இதைப் பற்றி இன்னமும் இதுவரை பேசப்படவில்லை. நிச்சயமாக நான் கேட்கமாட்டேன்.

தேசம்: தமிழ் அரங்கத்தில் உள்ள எல்லோரும் இணைந்து ஒரே வேட்பாளர் பட்டியலை வழங்குவதற்கான வாய்ப்பு உள்ளதா?

சங்கரி: ஒரே குழுவாகத்தான் கேட்க வேண்டும். அப்படி இல்லை என்று யாராவது தனித்து வெளியே சென்று கேட்க முற்பட்டால் அவர்கள் பாடம் படிப்பார்கள். இந்த தமிழ் அரங்கத்தின் உருவாக்கத்திற்குப் பிறகு நான் எனக்கு மாறானவர்களையும் சந்தித்து இருக்கிறன். அவர்கள் இதை நல்ல முடிவு என்று தான் வரவேற்கிறார்கள். டக்ளஸ் க்கும் 3 ஆசனங்கள் கிடைத்திருக்கே. இப்ப யாரும் கள்ள வோட் என்று குற்றம்சாட்ட முடியாதே.

தேசம்: நீங்கள் ஒரு மூத்த அரசியல்வாதி, நீண்ட கால அரசியல் வரலாறு உண்டு என்று தமிழ் அரங்கம் முதலமைச்சருக்கான வேட்பாளராக உங்களை நியமிக்க முன்வந்தால் நீங்கள் அதனை ஏற்பீர்களா?

சங்கரி: அதைப்பற்றி இப்ப நான் ஒன்றும் சொல்ல முடியாது. இப்ப என்னுடைய நிலைப்பாடு இவற்றில் தலையிடுவதில்லை என்பதே.

தேசம்: அப்படியானால் நீங்கள் தமிழ் அரங்கத்தின் முடிவோடு தான் செயற்படுவீர்களா?

சங்கரி: தமிழ் அரங்கத்தில் பிளவுகள் வராதவரை நான் தமிழ் அரங்கத்தின் முடிவுடனேயே செயற்படுவேன். பிளவை ஏற்படுத்துவதற்கு நான் காரணமாக மாட்டேன்.

தேசம்: இதனை தமிழ் அரங்கம் பற்றி நம்பிக்கை உருவாகி உள்ளது என்று எடுக்கலாமா?

சங்கரி: ஓம்.

தேசம்: 1981 முதல் வட மாகாணத்தில் சனத்தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவில்லை. தற்போது வடமாகாணத்தில் முன்னைய மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் மூன்றில் ஒரு பங்கினரே வாழ்கின்றனர். 2011ல் வடமாகாணத்தின் சனத்தொகையும் கணக்கிடப்பட உள்ளது. இது வடமாகாண தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் அல்லவா?

சங்கரி: நிச்சயமாகப் பாதிக்கும். ஆறு மாதங்களுக்கு மேலாக நீங்கள் குறிப்பிட்ட தொகுதியில் இல்லாவிட்டால் உங்களுக்கு அங்கு வாக்களிக்கும் உரிமை இருக்காது. இதனை அன்றே உணர்ந்து தான் நான் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கத்துக்கு இதனைச் சுட்டிக்காட்டி 1983 வாக்காளர் பதிவைப் பயன்படுத்தும்படி அன்றைய ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனாவிடம் கேட்டு அதனையே பயன்படுத்தச் செய்தோம்.

இன்றுவரை அந்த வாக்காளர் பதிவை வைத்து புதிய வாக்காளர்களையும் சேர்த்துக் கொண்டு வருகிறார்கள்.  மரணித்தவர்கள் நாட்டைவிட்டு வெளியேறியவர்கள் யாருடைய பதிவும் நீக்கப்படவில்லை. எனது அண்ணரின் பதிவு கிளிநொச்சியில் இருந்தது. அவர் இறந்து 10 வருடங்கள் ஆகியும் அப்பதிவு இன்னமும் நீக்கப்படவில்லை. 700 000 வாக்காளர் இருக்கின்றார்கள் என்பது இந்த அடிப்படையிலேயே.

தேசம்: சனத்தொகைக் கணக்கெடுப்பின் பின் என்ன நடக்கும்?

சங்கரி: அதில் ஒரு பெரும் ஆபத்து உள்ளது. நாங்கள் உறவோடு இருந்திருந்தால் அப்போது கேட்டது போன்று செய்திருக்கலாம். அப்போது அந்த உறவு இருந்தது. இப்போது கடினம். ஆனால் மக்கள் தொகைக்கு ஏற்ப ஆசனங்களைக் குறைக்க வேண்டாம் என்று கேட்கப் போகின்றோம்.

தேசம்: அப்படியானால் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை தொடர்ந்தும் இதே எண்ணிக்கையில் பேணுவதற்கான சட்டப் பாதுகாப்பு இல்லை.

சங்கரி: சட்டப் பாதுகாப்பில்லை. சட்டப்படி பார்த்தால் பிரதிநிதித்துவம் குறைய வேண்டும். அதனால் தான் நான் தொகுதிகளை மாற்ற வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைக்கிறேன்.

தேசம்: இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு இருந்தது. நீங்களும் இந்திய முறையிலான தீர்வையே முன்வைத்தம் இருக்கிறீர்கள். மேலும் இந்தியா 1987ல் இலங்கையுடன் ஒரு ஒப்பந்தத்தையும் செய்துகொண்டது. இன்று இந்தியாவின் நிலைப்பாடு எப்படி உள்ளது?

சங்கரி: இந்தியா நேரடியாக எதிலும் தலையிடாது. நாங்கள் தான் முடிவுக்கு வரவேண்டும். என்னுடைய இந்திய முறையிலான தீர்வை ஏற்றுக்கொண்டால், தமிழநாடு மூலமாக அவர்கள் இதனைக் கையாள்வார்கள். மற்றும்படி நேரடியாக அவர்கள் தலையிட மாட்டார்கள்.

தேசம்: தமிழ் அரங்கம் உங்கள் இந்திய முறையிலான தீர்வுடன் முரண்பட மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

சங்கரி: முரண்படுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. நான் மற்றையவர்களிலும் பார்க்க கூடுதலாகவே கேட்கிறேன்.

தேசம்: தமிழ் தேசியக் கூட்டமைப்பும் முரண்பட முடியாது?

சங்கரி: இனி முரண்பட முடியாது. ஏன் என்றால் ஏற்கனவே இந்திய முறையிலான தீர்வை ஏற்கத் தயார் என்று கூறிவிட்டார்கள்.

தேசம்: அப்படி என்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் கட்சிகள் எல்லாம் ஒன்றாக இக்கோரிக்கையை வைப்பதில் என்ன தடை உள்ளது.

சங்கரி: இதில் என்ன தடை என்றால் சிலருக்குள்ள தலைமை ஆசை. சம்பந்தர் கிழவனாகி விட்டார். நான் தான் அடுத்த தலைவர் என்று சுரேஸ் பிரேமச்சந்திரனின் எதிர்பார்ப்பு. நான் தானே கட்சியைத் துவங்கினனான் என்று மாவையின் எதிர்பார்ப்பு. சம்பந்தர் எதற்காக என்னை விட்டுச் சென்றவர். சம்பந்தன் சொன்னவர், ‘நானும் உன்னைப் போலத்தான் ஏகபிரதிநிதித்துவத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. நீ அதனை வெளிப்படையாயச் சொல்கிறாய். நான் அப்படிச் சொல்லேல்லை’ என்று. இப்ப இதைக் கதைப்பது சரியல்ல.

தேசம்: 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானம் முதல் இன்று வரையான அரசியல் போக்கு மிகப்பெரும் அழிவை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தி உள்ளது. வட்டுக்கொட்டைத் தீர்மானம் – தமிழீழக் கோரிக்கை மிகத் தவறான முடிவு என்பதை நீங்கள் சில ஆண்டுகளுக்கு முன் தேசம் சஞ்சிகைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்து இருந்தீர்கள்.

சங்கரி: தமிழீழக் கோரிக்கை என்றது மிகத்தவறான ஒரு அரசியல் முடிவு. ஜி ஜி பொன்னம்பலம் என்னுடைய அப்பாவின் நெருங்கிய நண்பர். என்னுடன் வாடா போடா என்று தான் கதைப்பார். எனக்கும் அவருக்கும் மிக நெருக்கம். வட்டுக்கோட்டைத் தீர்மானம் எடுத்தவுடன் மாநாடு முடிந்ததும் ஜி ஜி பொன்னம்பலத்திற்கு போய்ச் சொல்ல ‘என்னடா செய்து போட்டு வாறியல். இரத்த ஆறு ஓடப்போகுதடா’ என்றார். ஜீ ஜீ அவர்கள் 1976ம் ஆண்டு கூட்டத்திற்கு வரவில்லை. அவர் கருணாநிதியின் வழக்கை முடித்துக்கொண்டு மலேசியா சென்றிருந்தார். அவரையே கூட்டணியின் தலைவராகப் போட்டோம். அவர் வரும் போது பெரு வரவேற்பு அளிப்பதாகவே இருந்தது. ஆனால் அவர் உயிரற்ற உடலாகவே நாடுக்குத் திரும்பினார்.

தேசம்: உங்கள் அரசியல் வாழ்வின் ஆரம்பம் பற்றி சிலவற்றை பகிர்ந்துகொள்ளுங்கள்…..

சங்கரி: நான் பிறந்தது பருத்தித்துறை. வளர்ந்தது அச்சுவேலி. சமசமாஜக் கட்சியுடன் கொழும்புக்கு வந்துவிட்டேன். 1959 முனிசிபல் கவுன்சில் எலெக்சனில் என்னையும் நொமிநேற் பண்ணினார்கள். பிறகு சமசமாஜக் கட்சியின் யாழ்ப்பாணக் கிளை என்னை கிளிநொச்சித் தொகுதி வேட்பாளராகப் போடும்படி கேட்டது. அப்ப கட்சி என்னை கிளிநொச்சியில் நிறுத்த முடிவெடுத்தது. வேட்புமனுவை இறுதி நேரத்தில் தாக்கல் செய்தேன். அப்ப எனக்கு 24 வயது. அதற்குப் பிறகு வீட்டுக்குச் சென்றால் அம்மாவிடம் பேச்சு. தேர்தலில் நிற்க ஆசை என்றால் பருத்தித்துறையில் கோப்பாயில் நின்றிருக்கலாம் என்று அம்மா அடிக்காத குறை. பருத்தித்துறை என்றால் சின்ன இடம். பலரையும் தெரியும். வீரசிங்கம் என்ற அப்பாவி பெயருக்கே வோட்டு வந்திருக்கும். அப்ப கோப்பாயில் அப்பா கிங் மேக்கர். என்னுடைய மாமா பாலசிங்கம் தமிழரசுக் கட்சியில் நன்றார்.

கிளிநொச்சிக்கு சென்றால் யாரும் கிட்ட வருகிறார்கள் இல்லை. இருந்தாலும் சிறிது நாட்களுக்கு உள்ளாகவே ஓரளவு ஆதரவைத் திரட்டினோம். 1960 மார்ச் தேர்தலில் 2500 வாக்குகள் பெற்றேன். ஆயிரம் வாக்குகளால் தோல்வி அடைய வேண்டி வந்தது. ஒரு வாக்கால் கட்டுப்பணத்தையும் இழந்தேன். எட்டுப்பேர் கேட்டத்தில் வாக்குகள் பிளவுண்டது. பிறகு 1964ல் விலேஜ் கவுன்சிலில் செயர்மனாக வந்தன். 1960ற்கு பிறகு கிளிநொச்சியும் கொழும்பும் தான் யாழ்ப்பாணம் விட்டாச்சுது. தமிழரசுக் கட்சியின் கோட்டையான கிளிநொச்சித் தொகுதியில் 1970ல் தமிழ் காங்கிரஸில் நின்று வெற்றி பெற்றேன்.

தேசம்: உங்களுடைய அரசியல் அனுபவம்:

சங்கரி: என்னுடைய அரசியல் வாழ்க்கை இடதுசாரிக் கட்சியில் தான் துவங்கியது. நாங்கள் பெரியதொரு பிழைவிட்ட நாங்கள். அதே பிழையை இப்போதும் விடுறம். எங்களுடைய முதலாவது பிரதம மந்திரியாக வந்திருக்க வேண்டியவரே இடதுசாரியாகிய என் எம் பெரேரா தான். யுஎன்பி டி எஸ் செனநாயக்காவுக்கு பெரும்பான்மை இல்லை. அனைத்து தமிழ் கட்சிகளும் இடதுசாரிகளும் இணைந்திருந்தால் இடதுசாரி ஆட்சி அமைந்திருக்கும். அது கை கூடவில்லை. பிரஜாவுரிமைச்சட்டம் வரும்போது அதற்கு எதிராக வாக்களித்து சமசமாஜக்கட்சி தனது விசுவாசத்தை வெளிப்படுத்தி இருந்தது. அப்போது என்றாலும் இந்த தமிழ் சாதிக்கு அறிவு வந்திருக்க வேணும்.

1956ல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது அதனை எதிர்த்து தமிழுக்கும் சிங்களத்துக்கும் சம அந்தஸ்து கோரியவர் என் எம் பெரேரா. முதல் முதல் ஆயுத வன்முறை பயன்படுத்தப்பட்டது என் எம் பெரேராவிற்கு எதிராகவே. கொழும்பு நகரசபை மண்டபத்தில் அவருக்கு கைக்குண்டு வீசப்பட்டது. ஆனால் இடதுசாரிகள் இணைந்து நின்றும் தமிழ் கட்சிகள் அவற்றுக்கு ஆதரவளிக்கவில்லை. ஆட்சிக்கு வந்த எஸ் டபிள்யு ஆர் டி பண்டாரநாயக்கா தனிச்சிங்களச் சட்டத்தை அமுல்படுத்தினார். தமிழரசுக்கட்சி காலிமுகத்திடலில் உண்ணாவிரதம் இருந்தனர். அப்போதும் என்எம் பெரேராவுக்கு எதிராக பெரும் கோசங்கள் வைக்கப்பட்டது. அப்படி இருந்தும் என் எம் பெரேரா அங்கு வந்து உரையாற்றினார்.

அதற்குப் பின் 1960 அம் ஆண்டுத் தேர்தல். அதில் நானும் சமசமாஜக் கட்சியில் தேர்தலில் நின்றனான். அப்ப அ அமிர்தலிங்கம் வந்து என்ன பேசினவர். ‘அவனும் சிங்களவன். இவனும் சிங்களவன்;.’ இந்த வாய்க்கொழுப்பு தான் எங்கள் இனத்தின் கேடு. அப்போதாவது இடதுசாரிக்கு கட்சிகளுடன் தோழமை கொள்ளவில்லை. ஒரு ஆசனம் கூட வெல்லப்படவில்லை. தமிழர்களுக்கு குரல்கொடுத்ததாலேயே அழிந்த கட்சி அது. 1960இல் இலங்கையில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் ஆட்களைப் போட்டனர். ஒரு சீற்றும் வெல்லவில்லை. அப்படி இருந்தும் சம அந்தஸ்து கொள்கையை அவர்கள் விடவில்லை.

1965இலும் அவர்கள் தோல்வியையே தழுவினர். அப்போது தான் நானும் சமசமாஜக் கட்சியில் இருந்த நான் வெளியேறினேன். நான் பின்னர் மன்னிப்புக் கேட்டனான். உங்களுக்கு தந்த இன்ரவியூவிலும் அந்தத் தவறை ஏற்றுக்கொண்டனான். அந்த நேரம் இடதுசாரிக் கட்சிகள் எவ்வளவோ தியாகத்தைச் செய்தும் நாங்கள் அதற்கு மதிப்புக் கொடுக்கவில்லை. ‘நாங்கள் தமிழர்களுக்காகக் கதைத்து தோற்றுப்போகிறோம். தமிழர்கள் வெற்றி பெற்று யுஎன்பி உடன் போகிறார்கள்’ என்ற எண்ணம் சிங்கள இடதுசாரிகள் மத்தியில் எழுந்தது. இடதுசாரிகளில் சிலரையாவது நாங்கள் தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்பி இருந்தால் இவ்வளவு மோசமானநிலை வந்திருக்காது.

அப்போது நடந்த மே தின ஊர்வலத்தில் ‘அப்பிட்ட எப்பா மசாலாவடே. அப்பிட எப்பா கடல வடே’ என்று சில பேர் கோசம் போட்டுக் கொண்டு போனதைத் தொடர்ந்து நாங்கள் சிலபேர் கட்சியில் இருந்து விலகிவிட்டோம். அதை நாங்கள் ஒரு பெரிய குற்றமாக எடுத்திருக்கக் கூடாது. அதனை என் எம் பெரேரா சொல்லவில்லை. அங்கிருந்த யாரோ ஒரு சிலர் கோசம் போட்டதே. அது நான் விட்ட பெரிய தவறு. 1970க்களில் சமசமாஜக் கட்சிக்கு 18 சீட்டுக்கள் இருந்தது. கொம்யூனிஸ்ற் கட்சியையும் சேர்த்தால் 22 – 23 சீட் இருந்தது. இப்ப சமசமாஜக் கட்சி ஒன்று, கொம்யூனிஸ்ற் கட்சி ஒன்று. இது தான் நாங்கள் விட்ட பிழை. எங்களுக்காகக் குரல் கொடுத்து வந்தவர்களுக்கு ஆதரவளிக்கவில்லை. இப்ப எங்களுக்கு குரல்கொடுக்க யாரும் இல்லை.

(செப்ரம்பர் மாதம் லண்டன் வந்திருந்த போது வீ அனந்தசங்கரி தேசம்நெற் க்கு இந்நேர்காணலை வழங்கி இருந்தார். இந்நேர்காணல் செப்ரம்பர் 5ல் பதிவு செய்யப்பட்டது.)