சர்வதேச விசாரணைக்கு வலியுத்தல் நியூயோர்க்: கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை 3 சர்வதேச முன்னணி அமைப்புகள் ஏற்றுக்கொள்ளமாட்டாதென தெரிவித்துள்ளன.மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச நெருக்கடிக்குழு, சர்வதேச மன்னிப்புச்சபை ஆகிய மூன்று அமைப்புகளும் கூட்டாக இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு எழுதிய கடிதத்தில் அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கடிதம் நேற்று முன்தினம் புதன்கிழமை வெளியிடப்பட்டிருப்பதாக ரிலீப் வெப் இணையத்தளம் தெரிவித்திருக்கிறது.போர்க் குற்றங்கள் தொடர்பான முன்னேற்றகரமான பதிலளிக்கும் கடப்பாட்டுக்கான ஆற்றலைக் குறைந்தளவிலேயே இந்த ஆணைக்குழு கொண்டிருப்பதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையில் அரசியல் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறும் தன்மை என்பவற்றை முன்னெடுப்பதற்கான உண்மையானதும் நம்பகரமானதுமான முயற்சிகளை மேற்கொள்ளும் போது ஆணைக்குழு முன் தோன்றுவதற்கான வாய்ப்பு கிடைப்பதை வரவேற்பதாகவும் ஆனால், ஆணைக்குழுவானது சர்வதேச தரத்தின் ஆகக்குறைந்தளவு மட்டத்தைக்கூட நிறைவேற்றுவதாக இல்லையெனவும் அந்த மூன்று அமைப்புகளும் குறிப்பிட்டுள்ளன.