கட்டப்பட்ட நகைச்சீட்டு முடிவடைந்து பல மாதங்களாகிய நிலையிலும் சீட்டுப் பிடித்தவர்கள் தங்கள் பணத்திற்காக இன்னமும் காத்திருக்கின்றனர். பலருக்கு சில ஆயிரம் பவுண்கள் வரை இன்னமும் கொடுக்கப்படாமல் உள்ளதாகத் லண்டன் குரலுக்குத் தெரியவருகிறது. சிலருக்கு தவணையிடப்பட்டு வழங்கிய காசோலைகளும் அவர்களது வங்கிக் கணக்கில் பணமின்றி திரும்பி உள்ளது. பாதிக்கப்பட்ட சிலருக்கு சில நூறு பவுண்கள் வழங்கப்பட்டும் உள்ளது.
2008 ஓகஸ்ட்டில் ஆரம்பிக்கப்பட்டு 2009ல் முடிவடைந்த சீட்டுக்களின் கொடுப்பனவுகளும் அதற்கு முன்னான கொடுப்பனவுகளும் இன்னமும் செலுத்தப்படாமல் உள்ளது. இதற்கிடையே நகைச்சீட்டைப் பிடித்த ஏரிஎன் ஜீவலர்ஸ் மூடப்பட்டு ஏரிஎன் சொப் எனப் பெயர் மாற்றப்பட்டு உள்ளது. அதுவும் இன்னமும் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது.
இச்செய்தி லண்டன் குரல் இதழ் 34ல் வெளியாகியது. ஏரிஎன் ஜீவலர்ஸ் நகைக்கடையில் நகைச்சீட்டு கட்டியவர்கள் ஆயிரக்கணக்கான பவுண் சேமிப்பை இழந்தனர்!!! இதனையடுத்து இத்தகவல் வழங்கியதாக தாங்கள் சந்தேகப்பட்ட சிலரை ஏரிஎன் ஜீவலர்ஸ் மிரட்டியதுடன் லண்டன் குரல் பத்திரிகை ஆசிரியருக்கு எதிராக அநாமதேய துண்டுப் பிரசுரம் ஒன்றையும் வெளியிட்டனர்.
இம்மிரட்டல்கள் தொடர்பாக சிங்போட் பொலிஸ் நிலையத்தில் குற்றப் பதிவு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.