2010

2010

6 -1/2 கோடி ரூபாயில் 52 உழவு இயந்திரங்கள் – வடபகுதி மக்களுக்கு வழங்கவென இன்று இந்தியாவினால் இலங்கைக்கு அன்பளிப்பு

வட மாகாண விவசாய நடவடிக்கைகளுக்கென சுமார் ஆறரை கோடி ரூபா பெறுமதியான 52 உழவு இயந்திரங்களை இந்திய அரசாங்கம் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்குகின்றன. வட மாகாணத்துக்கான ஜனாதிபதி விசேட செயலணியின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷவிடம் 52 உழவு இயந்திரங்களையும் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்த் உத்தியோகபூர்வமாக கையளிக்கவுள்ளார்.

கொழும்பு காலி முகத்திடலில் இன்று மாலை 4.00 மணிக்கு நடைபெறவுள்ள இந்நிகழ்வில் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர். இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள இந்த உழவு இயந்திரங்களை இலங்கை அரசின் சார்பில் பொறுப்பேற்கும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ வடமாகாண ஆளுநரிடம் கையளிக்கவுள்ளார்.

றிசானாவுக்கு விடுதலை வேண்டி மூதூரில் கண்ணீர் மல்க பிரார்த்தனை

muthur.jpgசவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் றிசானா நபீக்கிற்கு விடுதலை வேண்டி மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று (31) மாபெரும் பிரார்த்தனை, ஸலாதுல் ஹாஜா தொழுகை, பிரசார நிகழ்வும் காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.

மூதூர் பிரதேசத்தில் வாழும் மக்கள் றிசானா நபீக்கின் விடுதலைக்காக ஒன்று கூடிய மைதானத்தில் பாடசாலை மாணவர்கள், மத்ரஸா மாணவர்கள், சமய, சமூக தலைவர்கள், பொது மக்கள் என எல்லோரும் மைதானத்தினுள் அமர்ந்திருந்தனர். ஆரம்பமாக அஷ்ஷேஹ் எம்.எம். முனாஸ் (ரஸாதி)யினால் சொற்பொழிவு நிகழ்த்தப் பட்டது. இதனை அடுத்து தனித்தனியாக ஸலாதுல் ஹாஜா தொழுகையில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டு தொழுதனர். இதேவேளை, எழுதப் பட்டிருந்த சுலோ கங்களில் இரு புனித தலங்களின் பணி யாளரே எங்கள் ஏழைச் சகோதரி றிசானா நபீக்கை உங்கள் பெரும் தன்மையினால் மன்னியுங்கள்.

“அன்புத் தாயே எங்களது சகோதரியை மன்னியுங்கள் அல்லாஹ் உங்களுக்கு ஈருலகிலும் அருள் புரியட்டும்” என்றும் எழுதப்பட்டிருந்தன. அல்லாஹ்விடமே இந்த நிலையை வேண்டுகின்றோம். மன்னிக்கும் பனப்பான்மை கொண்ட மனங்களே மன்னித்து விடுங்கள்; விடுதலை செய்யுங்கள் எனவும் சிறுவர்கள் முதல் கூடிய மக்கள் இறைவனிடம் அழுது பிரார்த்தனை செய்தனர். மக்கள் ஒன்றுகூடி றிசானா நபீக்கின் விடுதலைக்காக கண்ணீர் மல்கி அழுது புலம்பிய காட்சி மக்கள் எல்லோரையும் மனம் உருகச் செய்தது.

இதேவேளை, சவூதி தூதரகம், சவூதி மன்னர் மற்றும் பணிப்பெண்ணாக பணிபுரிந்த குடும்பத்தார்கள் உள்ளிட்ட வர்களுக்கான கையெழுத்து விடுதலைக்கான மகஜர்களையும் அனுப்புவதற்கான நடவடிக்கை இடம்பெற்றன.

நிர்வாக சேவை நேர்முகப் பரீட்சைக்கு சிங்களமொழி மூலம் 257 பேர் தெரிவு-தமிழ்மொழி மூலம் எவரும் தெரிவாகவில்லை

இலங்கை நிர்வாக சேவை 2009 ஆம் ஆண்டுக்குரிய திறந்த போட்டிப் பரீட்சைக்குரிய பெறுபேறுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட நிலையில் நேர்முகப்பரீட்சைக்கு சிங்கள மொழிமூலம் 257 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ள அதேநேரம் தமிழ் மொழிமூலம் எவருமே தெரிவு செய்யப்படவில்லை.

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் நுழைவாயில் அறிவித்தல் பலகையில் எழுத்துப் பரீட்சைக்கான முடிவுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் இலங்கை நிர்வாக சேவை 2009 ஆம் ஆண்டுக்குரிய திறந்த போட்டிப்பரீட்சையின் எழுத்துப்பரீட்சையில் பெறப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்க தகுதியுடையோரென 257 பேரது பெயர், விபரம், சுட்டிலக்கம், பரீட்சைக்கு தோற்றிய மொழி போன்ற விபரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த 257 பேரில் தமிழ் மொழிமூலம் தோற்றிய ஒருவரேனும் இல்லையெனத் தெரிவிக்கப்படுவதுடன் இது குறித்து தமிழ் மொழி மூலம்பரீட்சைக்கு தோற்றிய பலரும் விசனம் தெரிவித்துள்ளனர். கடந்த வருடமும் இலங்கை நிர்வாக சேவையின் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கு தெரிவான 32 பேரும் தற்போது உள்ளகப் பயிற்சியை பெற்று வருகின்றனர்.இதில் கூட 32 பேரும் சிங்கள மொழி மூலம் தெரிவானவர்களேயாவர்.தமிழ் மொழிமூலம் பரீட்சைக்கு தோற்றிய எவருமே தெரிவாகவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

70 கைபேசிகளை உடலில் ஒட்டிவந்த இலங்கைப் பெண் சென்னையில் கைது

கொழும்பில் இருந்து சென்னைக்கு உடலில் கையடக்கத் தொலைபேசிகளை மறைத்து கடத்தி வந்த இலங்கை பெண்ணை இந்திய சுங்க பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு கொழும்பில் இருந்து சென்ற விமானப் பயணிகளை இந்திய சுங்க பிரிவு அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது இலங்கையை சேர்ந்த ரீஸ்வியா (வயது 20) என்ற பெண்ணின் உடைகள் சந்தேகப்படும்படியாக இருந்ததால் அவரை இந்திய சுங்க பிரிவு பெண் அதிகாரிகள் தனியறைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது உடல் முழுவதும் கையடக்க தொலைபேசிகளை வைத்து செலோ டேப் மூலம் ஒட்டி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவரது உடலில் இருந்து 70 கையடக்கத் தொலைபேசிகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மேலும் அவருடைய பொதியில் இருந்து உயர்ரக 3 செய்மதி கையடக்க தொலைபேசிகளையும் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பில் இந்திய விமான நிலைய சுங்க பிரிவு அதிகாரி பெரியசாமி கூறியதாவது;

இலங்கை பெண் 3 செய்மதி கையடக்க தொலைபேசிகளை கடத்தி வந்து உள்ளார். இது தீவிரவாதிகள் பயன்படுத்துவதாகும். இந்த கையடக்க தொலைபேசிகளை யாருக்காக கடத்தி வரப்பட்டது.

இதன் பின்னணியில் உள்ளவர்கள் பற்றி விசாரணை நடத்த தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. கடந்த 27ஆம் திகதி புறநகர் பொலிஸார் ரூபாய் 2 கோடி இந்திய மதிப்புள்ள நவரத்தின கற்களை பிடித்தாக கூறி எங்களிடம் ஒப்படைத்தனர். இந்த கற்களின் மதிப்பு ரூபாய் 49 இலட்சம் இந்திய மதிப்பு தான் என்பது தெரிய வந்துள்ளது

உல்லாசப் பயணிகளுக்கு மிகவும் பாதுகாப்பான நாடு இலங்கை

lanka.jpgஉல்லாசப் பயணிகள் செல்வதற்கு மிகவும் பாதுகாப்பான நாடாக இலங்கை மாறியுள்ளதென ஐரோப்பிய ஒன்றியம், பெல்ஜியம் மற்றும் லக்ஸம்பேர்க்குக்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார். பெல்ஜியத்திலிருந்து இலங்கைக்குச் செல்லும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை இந்த வருடம் செப்டம்பரில் 82.8 வீதம் அதிகரித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகலிருந்து செல்லும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை 50 வீதத்தாலும், ஏனைய உலக நாடுகளிலிருந்து இலங்கை சென்ற உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை 44 வீதத்தாலும் அதிகரித்துள்ளது என பெல்ஜியத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஆரியசிங்க தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், உல்லாசப் பயணத்றையை மேலும் அபிவிருத்தி செய்ய பெல்ஜியத்திலிருந்து இலங்கைக்கு நேரடியான விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனக் கூறினார்.

வடமராட்சிக் கிழக்கில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள மீனவர்களுக்கு அரசசார்பற்ற நிறுவனங்கள் உதவி.

வடமராட்சிக் கிழக்கில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள நிலையில், அப்பிரதேச கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்கள் உதவிபுரியம் என்றும், அதற்கு பல நிறுவனங்கள் முன்வந்தள்ளன எனவும் கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் கே.தர்மலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடமராட்சி கிழக்கிலுள்ள பத்து கிராமசேவையாளர் பிரிவுகளிலுள்ள 915 குடும்பங்களுக்கு யு.என்.டி.பி, சோஆ, போரூட், பாஸிக், சேவ் த சில்ட்ரன் ஆகிய நிறுவனங்கள் உதவி வழங்க முன்வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிறுவனங்களின் செயற்திட்டத்திற்கு ஜனாதிபதி விசேட செயலணியின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாஸிக் நிறுவனம் 202 மீன்பிடி வலைகளையும், 85 படகுகளையும், 85 வெளியிணைப்பு இயந்திரங்களையும், 70 கட்டுமரங்களையும் வழங்க முன்வந்துள்ளது. போரூட் நிறுவனம் 342 மீன்பிடி வலைகளை வழங்க முன்வந்துள்ளது. சோஆ நிறுவனம் 100 தெப்பங்களையும், அதற்கான மீன்பிடி வலைகளையும் வழங்க முன்வந்தள்ளது. இதே போன்று ஏனைய நிறுவனங்களும் உதவிகளை வழங்க முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கபபட்டுள்ளது.

நல்லூரில் கட்டப்படவிருக்கும் விடுதி ஆடம்பரவிடுதியாக இல்லாமல் யாத்திரிகர் மடம் போல் அமையுமாம்.

நல்லூரில் உல்லாச ஹோட்டல் ஒன்றை கட்டுவிருப்பது தொடர்பாக பல சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று சனிக்கிழமை ஹோட்டல் கட்டவிருக்கும் நிர்வாகத்தினருக்கும் இந்து அமைப்புக்களின் ஒன்றியத்திற்குமிடையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. இக்கலந்துரையாடலின் போது குறித்த ஹோட்டல் கட்டடம் உல்லாச விடுதியாக இல்லாது ஒரு யாத்திரிகர் மடம் போன்ற வடிவத்தில் கட்டுவதற்கு ஹோட்டல் நிர்வாகத்தினர் இணங்கியுள்ளதாக இந்து அமைப்புக்களின் ஒன்றியத்தின் செயலாளர் சு.பரமநாதன் தெரிவித்துள்ளார்.

நல்லூரில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் கட்டுவது தொடர்பாக அதன் நிர்வாகத்தினருக்கும் இந்து அமைப்புக்களின் ஒன்றியத்திற்குமிடையில் நேற்று சனிக்கிழமை நல்லை ஆதீனத்தில் வைத்து கலந்துரையாடல் நடைபெற்றது. புனித பிரதேசமான நல்லூரில் உல்லாச விடுதி கட்டுவதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து அதில் விவாதிக்கப்பட்டது. அதே வேளை, இவ்விடுதி அமைக்கப்படுமானால் நல்லூரின் சூழல் மாசடைவது குறித்தும். இவ்விடுதியை வேறு விசாலமான பகுதியில் கட்ட முடியும் என்பது குறித்தும் இந்து அமைப்புக்களின் ஒன்றியப்பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால், அந்த விடுதியை நல்லூரில் அமைப்பதால் யாழப்பாணத்தில் பல்வேறு அபிவிருத்திகள், தொழில் வாய்ப்புக்கள் ஏற்படும் என ஹோட்டல் அமைக்கவிருக்கும் நிர்வாகத்தினரால் கூறப்பட்டது.

கலந்துரையாடல்களின் முடிவில் நல்லூரில் கட்டப்படவுள்ள இந்த விடுதியில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது. அசைவ உணவுகள் சமைப்பதில்லை எனவும், அவ்விடுதி யாத்திரிகர் விடுதி போல் அமைக்கப்படும் எனவும், கழிவு நீரை அகற்றுவதற்காக நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் எனவும் முடிவெடுக்கப்பட்டதாக மேற்படி ஒன்றியத்தின் செயலாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் இதுவரை 20,200 குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளன.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்த 28,473 குடும்பங்களில் 20,200 குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 18ம் திகதி வரை இவர்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிபொருட்கள் அகற்றும் பணிகள் நிறைவடைந்ததும் ஏனையவர்களும் விரைவில் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவர் எனவும் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்னியில் சட்டவிரோத மதுபான விற்பனை.

வன்னியில் மீள் குடியேற்றப்பட்ட பகுதிகளில் கசிப்பு எனப்படும் கள்ளச் சாராயம் காய்ச்சும் தொழில்கள் நடைபெற்று வருகின்றமை பொலிஸாரினால் கண்பிடிக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்பவர்களும் பிடிக்கப்பட்டு வருகின்றனர்.

வன்னியில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மக்கள் மிள்குடியேற்றப்பட்டுள்ளதோடு அவர்களுக்கான உதவிப்பணம். மற்றும் வீடமைப்புப்பணிகள் என்பனவும் நடைபெற்று வரும் நிலையில் இச்சட்ட விரோத சாராயம் காச்சும் தொழிலினாலும், சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்பவர்களாலும் சமூகச் சீர்கேடுகள் ஏற்படத் தொடங்கியுள்ளமை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மதுபானங்களை சட்டபூர்வமாக விற்பனை செய்யும் வியாபார நிலையங்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வடமாகாண சபையை யாழ்ப்பாணத்தில் இயங்க வைக்க ஏற்பாடு

lanka.jpgவடக்கு மாகாண சபையை யாழ்ப்பாணத்தில் இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 தற்போது திருகோணமலையில் இயங்கும் மாகாண சபையைக் கிளிநொச்சிக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்கமைய மாகாண சபையின் சில திணைக்களங்கள் கிளிநொச்சிக்கு மாற்றப்பட்டிருந்த போதும் அனைத்து திணைக்களங்களையும் அவற்றின் அலுவலகங்களையும் கிளிநொச்சியில் இயங்கச் செய்வதற்குரிய போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் வடக்கு மாகாண சபையைக் கிளிநொச்சியில் இயங்க வைப்பதில் சிக்கலான நிலை தோன்றியது.

வடக்கின் தலைநகராக மாங்குளம் தெரிவு செய்யப்பட்டுள்ள போதிலும் அங்கு மாகாண சபையை இயங்க வைப்பதற்குரிய உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நீண்டகாலம் செல்லுமென்பதாலும் வடக்கு மாகாண சபைக்கு அடுத்த வருட முற்பகுதியில் தேர்தலை நடத்த அரசு உத்தேசித்துள்ளதால் தேர்தலின் பின் தொடர்ந்தும் மாகாண சபையைத் திருகோணமலையில் இயங்கவைக்க முடியாதென்பதாலும் தற்போதைக்கு மாகாண சபையை யாழ்ப்பாணத்தில் இயங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண சபை வட்டாரங்கள் தெரிவித்தன.