நிர்வாக சேவை நேர்முகப் பரீட்சைக்கு சிங்களமொழி மூலம் 257 பேர் தெரிவு-தமிழ்மொழி மூலம் எவரும் தெரிவாகவில்லை

இலங்கை நிர்வாக சேவை 2009 ஆம் ஆண்டுக்குரிய திறந்த போட்டிப் பரீட்சைக்குரிய பெறுபேறுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட நிலையில் நேர்முகப்பரீட்சைக்கு சிங்கள மொழிமூலம் 257 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ள அதேநேரம் தமிழ் மொழிமூலம் எவருமே தெரிவு செய்யப்படவில்லை.

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் நுழைவாயில் அறிவித்தல் பலகையில் எழுத்துப் பரீட்சைக்கான முடிவுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் இலங்கை நிர்வாக சேவை 2009 ஆம் ஆண்டுக்குரிய திறந்த போட்டிப்பரீட்சையின் எழுத்துப்பரீட்சையில் பெறப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்க தகுதியுடையோரென 257 பேரது பெயர், விபரம், சுட்டிலக்கம், பரீட்சைக்கு தோற்றிய மொழி போன்ற விபரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த 257 பேரில் தமிழ் மொழிமூலம் தோற்றிய ஒருவரேனும் இல்லையெனத் தெரிவிக்கப்படுவதுடன் இது குறித்து தமிழ் மொழி மூலம்பரீட்சைக்கு தோற்றிய பலரும் விசனம் தெரிவித்துள்ளனர். கடந்த வருடமும் இலங்கை நிர்வாக சேவையின் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கு தெரிவான 32 பேரும் தற்போது உள்ளகப் பயிற்சியை பெற்று வருகின்றனர்.இதில் கூட 32 பேரும் சிங்கள மொழி மூலம் தெரிவானவர்களேயாவர்.தமிழ் மொழிமூலம் பரீட்சைக்கு தோற்றிய எவருமே தெரிவாகவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *