2010

2010

மாகாண சபை தேர்தல்களுக்கு விநியோகிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டைகளை ஜனாதிபதி தேர்தலில் பயன்படுத்த முடியும்

election_box.jpgமாகாண சபைத் தேர்தல்களுக்காக விநியோகிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டைகளை மீள வழங்காது வைத்திருக்கும் வாக்காளர்கள் அவற்றை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் பயன்படுத்த முடி யும் எனத் தேர்தல்கள் தலைமையகம் அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு ள்ளது.

2007 ஆம் ஆண்டு முதல் மாகாண சபைத் தேர்தல்களுக்காகத் தேர்தல்கள் தலைமையகம் தற்காலிக அடையாள அட்டைகளை வாக்காளர்களுக்கு விநியோகித்தது. எனினும் அந்த அடையாள அட்டைகளைத் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம்

மீள ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான வாக்காளர்கள் அந்தத் தற்காலிக அட்டைகளை மீள ஒப்படைக்காது தம்மிடமே வைத்துள்ளனர்.

இந்நிலையில், கிழக்கு மாகாணத்தைத் தவிர்ந்த வாக்காளர்கள் மீள ஒப்படைக்காமல் வைத்திருக்கும் தற்காலிக அடையாள அட்டைகளை இந்த ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்த தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலதிக ஆணையாளர்கள் உதவி ஆணையாளர்கள் ஆகியோர் பங்குபற்றிய கூட்டத்தில் தேர்தல்கள் ஆணையாளர் இந்த முடிவை அறிவித்ததாக மேலதிக ஆணையாளர் டபிள்யூ. பீ. சுமணசிறி தெரிவித்தார்.

தேர்தல்கள் தலைமையகம் விநியோகிக்கும் தற்காலிக அட்டைகளைப் பெற்றுக்கொள்வத ற்காக விண்ணப்பிக்கும் கால அவகாசம் கடந்த 15 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது. எனினும் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் வழங்கும் தற்காலிக அட்டைகளைப் பெறுவதற்கு எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விண்ணபிக்க முடியும் என்று மேலதிக ஆணையாளர் சுமணசிறி தெரிவித்தார்.

தேர்தல்கள் தலைமையகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதால் ஜனாதிபதித் தேர்தலில் அடையாள அட்டையின்றி வாக்களிக்க முடியாது என எந்த வாக்காளரும் ஆதங்கப்பட வேண்டியதில்லை என்றும் மேலதிக ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு வாக்காளர்கள் தமது ஆளடையாளத்தை நிரூபிப்பதற்காக தேசிய அடையாள அட்டையைத் தம்முடன் கொண்டு செல்ல வேண்டும். அது இல்லாதவர்கள், காலாவதியாகாத கடவுச் சீட்டு, காலாவதியாகாத சாரதி அனுமதிப்பத்திரம், ஓய்வூதிய அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை, ஆட்பதிவுத் திணைக்களம் வழங்கும் மத குருமார்களுக்கான அடையாள அட்டை, தற்காலிக அட்டை அல்லது தேர்தல்கள் தலைமையகம் வழங்கும் தற்காலிக அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவதொன்றைப் பயன்படுத்தி வாக்களிக்க முடியும் என்றும் தேர்தல்கள் தலைமையகம் அறிவித்துள்ளது.

த.தே.கூட்டமைப்பு நா. உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் காயம்

chandrakanth-chandranehru.jpgதமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன், இன்று தமது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததன் காரணமாக காயமடைந்து அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் திருக்கோவிலில் உள்ள அவரது வீட்டில் இடம்பெற்றுள்ளது.
 
பாதுகாப்புக்காக அவர் தம்வசம் வைத்திருந்த கைத்துப்பாக்கி வெடித்தமையால் அவரது தொடையில் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

கிங்ஸ் லெவன் அணியின் தலைவராக சங்கக்கார

kumar.jpgஐ.பி.எல்., அணிகளுள் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமைப் பொறுப்பிலிருந்து இந்தி யாவின் யுவராஜ் சிங் நீக்கப்பட்டார்.

புதிய தலைவராக இலங்கையின் சங்கக்கார தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்தியன் பிரிமியர் லீக் சார்பில் (ஐ.பி.எல்.) 3 வது “டுவென்டி-20” கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 12 முதல் ஏப். 25 ஆம் திகதி வரை இந்தியாவில் நடக்க உள்ளது.  இத்தொடரில் பங்கேற்கும் 8 அணிகளுள் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ஒன்று. கடந்த 2 தொடர்களில் இந்த அணியின் தலைவராக யுவராஜ் சிங் செயல்பட்டார்.

ஆனால் இந்த முறை தலைமைப் பொறுப்பிலிருந்து யுவராஜ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அணியின் புதிய தலைவராக இலங்கை அணி வீரர் சங்கக்கார தெரிவு செய்யப் பட்டுள்ளார். இது குறித்து அணியின் தலைமை நிர்வாக அதிகாரி அனில் ஸ்ரீவத்சவா கூறுகையில்,

“யுவராஜ் சிங்கிற்கு பதில் 3 வது ஐ.பி.எல். தொடரில் சங்கக்கார அணியை வழிநடத்துவார். இதன் மூலம் அணியின் பலம் அதிகரிக்கும் என நம்புகிறோம். கடந்த இரண்டு தொடர்களில் அணியின் தலைவராக யுவராஜ் சிங் சிறப்பாக செயல்பட்டார். அவரது தலைமையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலாவது முறை அரையிறுதி வரை முன்னேறி அசத்தியது.

அணியின் தலைமைப் பதவியிலிருந்து அவரை நீக்குவதால், அவர் மீது நம்பிக்கை இல்லை என்று அர்த்தம் இல்லை. அணியில் அவருக்கு என தனி இடம் உண்டு” என்றார். இது குறித்து சங்கக்கார கூறியதாவது, கடந்த இரண்டு தொடர்களில் யுவராஜ் சிங்கின் தலைமையில் விளையாடியது மகிழ்ச்சி அளித்தது.

அவர் மிகச் சிறந்த தலைவர் தவிர எனது நல்ல நண்பர். அணி நிர்வாகத்தின் புதிய முடிவு குறித்து அவரிடம் பேசினேன். அதற்குப் பின் தான் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக முடிவு செய்தேன்.

இதனால் எந்தப் பிரச்சினையும் ஏற்பட வாய்ப்பில்லை. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் முக்கிய வீரர் யுவராஜ். ஆட்டத்தின் போக்கை அவரால் எந்த சமயத் திலும் மாற்ற முடியும் இவ்வாறு சங்கக்கார கூறினார்.

தலைமைப் பொறுப்பிலிருந்து யுவராஜ் நீக்கப்பட்டது குறித்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் டாம் மூடி கூறுகையில்,

“யுவராஜ் துடுப்பாட்டத்தில் முழுக் கவனம் செலுத்த வேண்டும் என அணி நிர்வாகம் விரும்புகிறது. தலைமைப் பொறுப்பு அவரது செயல்பாடுகளுக்குப் பாதிப்பாக அமைந்துவிடக் கூடாது.

வீரர்களுக்கும் அணி நிர்வாகத்துக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அனைவரும் இணைந்து சிறப்பாக தயாராகி வருகிறோம். அணி நிர்வாகத்தின் முடிவை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டுள்ளார் யுவராஜ்” என்றார்.

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் இன்று

sania-mirza.jpgஅவுஸ் திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் முதல் சுற்று இந்தியாவின் சானியா மிர்சாவுக்கு சவாலானதாக அமைந்துள்ளது. ஆண்டின் முதல் கிராண்ஸ்லாம் தொடரான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் இன்று மெல்போர்னில் நடக்கிறது. இதில் உலகின் முன்னணி வீரர்கள் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஸ்பெயினின் ராபெல் நடால் மற்றும் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், டினரா சபினா (ரஷ்யா), இவானோவிச் (செர்பியா) போன்ற வீராங்கனைகளும் பங்கேற்க உள்ளனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, கடந்த ஆண்டு இரண்டாம் சுற்று வரை முன்னேறினார்.

இம்முறை இவருக்கு முதல் சுற்று போட்டி, கடினமானதாக இருக்கும் என தெரிகிறது. தர வரிசையில் 56வது இடத்தில் இருக்கும் இவர், 26வது இடத்தில் உள்ள பிரான்சின் அரவானே ரேசாயை சந்திக்கிறார். இதற்கு முன் இருவரும் மூன்று முறை மோதியுள்ளனர். இதில் இருவரும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளனர்.

இலங்கையில் சனாதிபதி தேர்தலை முன்னிறுத்தி…. : தேடகம் (கனடா)

Thedakam_Logoதமிழ் மக்களின் போரின் ரணங்கள் ஆற முன்னர் அவர்களை தேர்தல் சூழ்ந்துள்ளது. தடுப்புமுகாம்களுக்குள்ளும், கூரை பிடுங்கிய வீட்டுக்குள்ளும் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் இவர்களை நாடி வாக்குகள் கேட்டு வேட்பாளர்கள் வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். இலங்கை அரசியல் வரலாற்றில் முக்கிய இரு கட்சிகளும் தங்களின் சிங்கள பேரினவாத மேலாதிக்க போக்கை இன்று வரை கைவிடத் தயாராய் இல்லை. 50 வருடங்களுக்கு மேலான தமிழர்களின் ஜனநாயகக் கோரிக்கைக்கு எந்தவொரு தீர்வையும் எட்ட முடியாத நிலையிலேயே இக் கட்சிகள் இருந்து வருகிறார்கள். இலங்கையை மிகவும் மோசமான அரசியல் – பொருளாதார நிலைக்குள் தள்ளிய பொறுப்பு இந்த இரு கட்சிகளையுமே சாரும்.

இந்தியாவும், மேற்குலகும் தங்கள் மேலாதிக்கப் போக்கை நிலை நிறுத்துவதற்கு பிரயத்தனங்களை எடுத்த வண்ணமே உள்ளன. மேற்கில் புலம்பெயர்ந்த தமிழர்களை தமது நலன்களுக்காக பயன்படுத்துவதில் மேற்குலகம் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருகிறது. இந்தத் தேர்தலில் புலம்பெயர்ந்த சமூகத்தின் ஊடாக ஒரு பொது அரசியல் போக்கை இலங்கைத் தமிழர்கள் மத்தியில் உருவாக்குவதில் மேற்குலகு அக்கறை கொண்டுள்ளது. ஏற்கனவே ஒற்றைத் தன்மையுடன் செயற்படும் மேற்கு தமிழ் ஊடகங்கள் மற்றும் மேற்கு ஊடகங்களும் நேரடியாகவும், மறைமுகமாகவும் மேற்கின் அரசியல் நலனுக்காக செயற்பட்டு வருகின்றன. இன்னுமொரு பக்கம் இந்திய அழுத்தம் தமிழ் அரசியல் கட்சிகளுக்கூடாக நடந்த வண்ணமே உள்ளது. இலங்கைத் தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு கௌரவமான தீர்வை எட்டுவதை நோக்கமாகக் கொள்ளாது தமது நலன் சார்ந்தவர்களை ஆட்சியில் இருத்துவதற்கே இவர்கள் பிரயத்தனம் செய்து வருகிறார்கள். இவற்றை மீறி தமிழ் தேசிய இனத்துக்கான கௌரவமான தீர்வை முன்னிறுத்தி அதற்காய் தொடர்ச்சியான அரசியல் அடித்தளத்தை நிறுவுவதே தமிழர்களுக்கான அரசியலாய் இருக்க முடியும்.

50 வருடங்களுக்கு மேலாக இழுபடும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ன? என்பதை இத் தேர்தலுக்கான பகிரங்க விவாதத்திற்குரிய பொருளாக தமிழ்த் தலைமைகள் நிறுத்தியிருக்க வேண்டும். இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை முன்வைக்குமாறு பிரதான கட்சிகளுக்கு அரசியல் அழுத்தத்தை கொடுத்திருக்க வேண்டும். இன்றைய அரசியல் சூழலில் இத் தேர்தலை சிறுபான்மை தேசிய இனங்கள் தம்வயப்படுத்தியிருக்க வேண்டும். சிறுபான்மை தேசிய இனங்களின் ஜனநாயக் கோரிக்கையை முதன்மை பிரச்சினையாக்கியிருக்க வேண்டும். அதன் ஊடாக சிறுபான்மை தேசிய இனங்களின் நலன் சார்ந்த ஒரு பொது அரசியல் போக்கை உருவாக்கியிருக்க வேண்டும். தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காய் குரல் கொடுக்கும் சக்திகளை ஒருங்கிணைக்கும் அரசியல் அடித்தளத்தை மேற்கொண்டிருக்க வேண்டும்.

கடந்த 50 வருடகால அரசியல் போராட்டமும், கடந்த 30 வருட கால ஆயுதப் போராட்டமும் தமிழ் மக்கள் மீது ஒரு நிர்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த அரசியல் நிர்ப்பந்தத்தை புரிந்து செயற்படுவதற்கான அரசியல் விவாதத்தையும், அரசியல் அறிவூட்டலையும் ஏற்படுத்தவேண்டிய கடப்பாடு அனைத்து அரசியல் அபிலாசை கொண்டவர்களுக்கும் உண்டு. இலங்கைத் தமிழர்களின் அரசியல் என்பது, தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, விடுதலைப் புலிகள் என்பவற்றின் தலைமைகள் காட்டும் இடத்தில் புள்ளடி போட மட்டுமேயானதாக மட்டுப்படுத்தப்பட்டே வந்துள்ளது. இலங்கை தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து சுதந்திரமான விவாத தளத்தையோ, ஆய்வுகளையோ தமிழ் தலைமைகள் ஊக்கப்படுத்தவில்லை. தமிழ் அரசியல் என்பது மேட்டுக்குடிகளினதும், ஆதிக்க சக்திகளிதும் பேரங்களுக்கு ஒத்துழைப்பு நல்கும் சாதனமாகவே கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. அரசியல் தன்னுணர்வு கொண்ட ஒரு தமிழ் சமூகம் உருவாவதற்கு இவர்கள் முட்டுக்கட்டை போட்ட வண்ணமே வந்துள்ளனர். இந்த நிலைமையே மலையகத் தமிழர்கள் மத்தியிலும், முஸ்லிம் மக்கள் மத்தியிலும் தொடர்கிறது. இதன் தொடர்ச்சியாகவே புலம்பெயர்ந்த நாடுகளில் இடம்பெறும் அரசியல் நடவடிக்கைகளையும் பார்க்கக்கூடியதாய் உள்ளது.

பழிக்கு பழி, பொங்கலுக்கு விடிவு என்னும் கற்பனை அரசியலை தலைமேற் கொண்டு வந்த எமக்கு குறுகியகால பலன்களுக்காய் அடிபணியும் அரசியல் முடிபுகளையே எடுக்கக்கூடியதாய் உள்ளது. இன்றும் தமிழர்கள் அரசியல் அடித்தளமற்று குறுகிய நலன்களுக்கு தம்மை பயன்படுத்தும் தலைமைகளை நம்பி ஏமாறும் நிலை தொடர்கிறது. அதனால்தான் இன்றைய சனாதிபதித் தேர்தலில் தமிழர்கள், தம்மை கொன்றவர்களை ஆதரிக்கும் ஒரு அவல நிலைக்குள் தள்ளி விடப்பட்டுள்ளார்கள்.

தமிழர்களுக்கான அரசியல் விதியை தமிழர்கள் நிர்ணயிக்கவும், இலங்கையின் தேசிய இனங்களுக்கான ஜனநாயகத்தை வலியுறுத்தும் அனைத்து தரப்பும் ஒன்றினைந்து செயற்படுடவும் வேண்டிய காலமிது. வெறுமனமே ஒரு சனாதிபதியை தெரிவு செய்வது என்பது இலங்கைத் தமிழ் மக்களின் நோக்கமாயிருக்க முடியாது. இலங்கையின் தேசிய இனங்கள் கௌரவமாக வாழ வழிவகுக்கும் ஒரு தீர்வைத் தரக்கூடிய அரசியல் மாற்றமே தமிழர்களின் நோக்கமாய் இருக்க வேண்டும். அத்தகைய மாற்றத்தை இலங்கை அரசியலில் ஏற்படுத்தக்கூடிய அரசியல் களத்தை உருவாக்குவதில் தமிழ் தலைமைகளும், தமிழ் மக்களும் உன்னிப்பாய் செயற்பட வேண்டும். அதுவே தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்கக்கூடிய சனநாயக வழிமுறையாய் அமையும்.

தமிழர் வகைதுறைவள நிலையம் (தேடகம்)
ரொரன்டோ. கனடா
சனவரி 14. 2010

அனுர பிரியதர்ஷன யாப்பா கட்சித்தாவல் ஒரு வதந்தியே

anu.jpgஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டோ, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விட்டோ ஒருபோதும் நான் விலகிச் செல்லப் போவதில்லை என அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.  ஊடகத்துறை அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா நேற்று முன்தினம் குளியாப்பிட் டியவில் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினார். இச்செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ போன்ற ஜனநாயகத் தலைவர் ஒருவரை விட்டு ஏகாதிபத்திய தலைவரின் தலைமையின் கீழ் இயங்கும் ஒரு அரசியல் கட்சியின் நீரோட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கட்சியின் சிரேஷ்ட உபதலைவர்களுள் ஒருவராக கட்சிக்குள்ளும்,  கட்சியின் தலைவரிடம் வரவேற்கும் நன்மதிப்பும், இருக்கிறது என சுட்டிக்காட்டிய அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா தான் வேறு அரசியல் நீரோட்டத்தில் கலக்கப் போவ தாக பரவியுள்ள வதந்திகளில் உண்மை யில்லை என்றும் அவற்றை தான் வன்மை யாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

புனர்வாழ்வு முகாம்களிலிருந்த 566 பேர் நேற்று பெற்றோரிடம் ஒப்படைப்பு

படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுள் மேலும் 566 பேர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

வவுனியா காமினி மகா வித்தியாலயம், பம்பைமடு உட்பட வவுனியாவிலுள்ள புனர்வாழ்வு முகாம்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட இவர்கள் 566 பேரும், வவுனியா மாவட்ட நீதிமன்றத்தின் அருகே பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

புலிகளினால் பலாத்காரமாக சிறுவர் படையணிக்கு சேர்க்கப்பட்டிருந்த சிறுவர் சிறுமியர்களில் சிலரும், புலிகள் இயக்கத்தில் மிகவும் அடி மட்டத்தில் செயலாற்றிக் கொண்டிருந்தவர்களில் சிலருமே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோன்று பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமிலிருந்தும் சுமார் 1000 பேர் அண்மையில் விடுதலை செய்யப்பட்டனர்.

சரணடைந்த முன்னாள் புலி உறுப்பினர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படும் அரசின் திட்டத்திற்கமைய எதிர்வரும் காலங்களில் மேலும் சிலரும் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

ஹெய்ட்டி பூகம்பத்தில் மரணித்தோர் எண்ணிக்கை 2 இலட்சமாக உயர்வு

haiti-earthquake02.jpgஹெய்ட்டி பூகம்பத்தில் மரணித்தோரின் எண்ணிக்கை இரண்டு இலட்சமாக உயர்ந்துள்ளது.

இது குறித்து ஹெய்ட்டி உள்துறை அமைச்சர் பால் அந்தோனி கூறும் போது, மரணித்தோரின் எண்ணிக்கை 2 இலட்சத்தை தாண்டியுள்ளது. மீட்கப்பட்ட 40 ஆயிரம் உடல்களை கூட்டம் கூட்டமாக பல்வேறு இடங்களில் புதைத்து இருக்கிறோம்’ என்றார்.

மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே வீடுகளை இழந்தவர்களுக்கு போதிய உணவு மற்றும் தண்ணீரும் கிடைக்கவில்லை. இதனால் அங்கு கலவரம் வெடித்துள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் தொடர்பாக மஹிந்த சிந்தனை – 02

mahihda-cintanaya.jpgசில தினங்களுக்கு முன்பு ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ச தனது தேர்தல் விஞ்ஞாபனமாக மஹிந்த சிந்தனை 02ஐ வெளியிட்டார். அதில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த கருத்துக்கள் கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

மாகாண சபை

மாகாண சபை முறை சம்பந்தப்பட்ட தேர்தல் முறையையும் பிரதேச சபை மற்றும் மாவட்ட விகிதாசாரத்தை அடிப்படையாகக் கொண்ட கலப்பு முறையையும் உருவாக்குகின்ற முன்மொழிவொன்றையும் முன்வைக்கின்றேன். அதுவரை எவ்வித தாமதமுமின்றி 13 வது திருத்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபையை மீண்டும் இயங்க வைப்பேன்.

வட மாகாணத்தின் நிலையான அபிவிருத்திக்காகவும் வடக்கு வாழ் மக்களின் வாழ்நிலையை மிக விரைவாக வளப்படுத்துவதற்குமாக செயற்படுத்தப்படுகின்ற வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தை மென்மேலும் பலப்படுத்தும் வகையில், மாகாண சபையில் மக்கள் பிரதிநிதிகளின் பூரண ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

செனற் சபை

நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எவ்விதத்திலும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தாத வகையிலும் பாராளுமன்றத்தின் அதியுயர் தன்மைக்கு பாதகம் ஏற்படாத வகையிலும் மாகாண சபைகளில் நிறைவேற்றப்படுகின்றன நியதி ஆக்கங்கள் மற்றும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுகின்ற சட்டங்கள் என்பவற்றை மேலும் அர்த்தபுஷ்டியுடன் கலந்துரையாடுவதற்கும்,  மத்திய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் அவர்களை ஆக்கமுடன் பங்கேற்கும்படி செய்வதற்காகவும் மதத் தலைவர்கள், தொழில் வாண்மையாளர்கள் போன்ற நேரடியாக வாக்குகளால் தெரிவு செய்யப்படாத பிரதிநிதிகளும் பாராளுமன்ற செயற்பாடுகளில் பங்களிப்பை செய்வதற்கு ஏற்றவாறு சகல அரசியல் கட்சிகளினதும், அமைப்புகளினதும் கருத்துக்களை கோரியதன் பின்னர் இரண்டாவது மந்திரி சபையொன்றை நிறுவுவதற்கு உத்தேசித்துள்ளேன்.

தேசிய சகவாழ்வுக்கு புதியதொரு பாதை

பெரும்பாலானோரின் இணக்கப்பாடு என்பவற்றையே அதன் அடிப்படையாகக் கருதுகின்றேன்.

கிழக்கின் உதயம்

* பாணமவிலிருந்து புல்மோட்டை வரை கிழக்கு கரையோரப் பாதையையும் கந்தளாய் சேருவிலப் பாதையையும் அவசர அவசரமாக உருவாக்குகின்றோம். கிழக்கு மாகாணத்தில் எஞ்சியுள்ள அனைத்து நெடுஞ்சாலைகளையும் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் பூர்த்தி செய்துநாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கிடையில் உள்ள பொருளாதார சமூக அரசியல் தொடர்புகளை மேம்படுத்துவேன்.

* மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து வடமத்திய மாகாணத்துக்கும் கொழும்புக்கும் துரித போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு மரதங்கடவெல, பொலன்னறுவை, திருகோணமலைப் பாதைகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன. திருகோணமலை மாவட்டத்தில் இறக்கண்டிப் பாலம் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ள அதேநேரத்தில் யான் ஓய பாலம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்துப் பாலங்களின் வேலைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

* அம்பாறை மாவட்டத்தில் அறுகம்குடாப் பாலம் திறக்கப்பட்டுள்ளதோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடிப் பாலமும் புதிய கல்லடிப் பாலமும் மக்களுடைய உரிமைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரதேசத்தில் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 59 புதிய நீர்வழங்கல் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு பிரதான நீர்த்தாங்கிகள் 12 அமைக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

* புதிதாக 164 பாடசாலைக் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் 327 கட்டடங்கள் புனரமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு பாடசாலையும் நவீன விஞ்ஞான ஆய்வுகூடத்தையும் கணனி நிலையத்தையும் கொண்டதாக அமைக்கப்படுகின்றது.

* சுகாதாரத் துறையின் அபிவிருத்திக்காக வைத்தியசாலைகளுக்காக புதிதாக 55 வார்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன. 445 வைத்தியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

* வாழ்வாதார அபிவிருத்திக்காக 80,000 ஏக்கர் வயல்கள் பயிரிடப்பட்டுள்ள அதேநேரம் 2500 வீட்டுத் தோட்டங்களும் 19 பழக் கிராமங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் தொடர்ந்தும் மேற்குறிப்பிட்ட பயிர்ச்செய்கையை மேம்படுத்தி புதிய சந்தை முறை ஒன்றை அறிமுகப்படுத்துவேன்.

* ஏற்றுமதி தயாரிப்புப் பிராந்தியம் ஒன்றை ஆரம்பிப்பேன்.

* வாழ்வாதார அபிவிருத்திக்காக புதிதாக 100,000 ஏக்கர் வயல்களின் பயிர் செய்ய வழி செய்வேன். 5,000 வீட்டுத் தோட்டங்களையும் 100 பழக் கிராமங்களையும் உருவாக்குவேன்.

* பால் உற்பத்தி செய்கின்ற தொழிலை மேம்படுத்துவதற்காக புதிதாக மூன்று மாதிரிப் பண்ணைகளை உருவாக்கியுள்துடன், பால் உற்பத்தி செய்கின்ற 100 கிராமங்களை அமைத்திருக்கிறேன்.

வடக்கின் வசந்தம்

* வடமாகாணத்தில் எந்த ஒரு இடத்துக்கும் சுதந்திரமாக போய்வருவதற்கு இருந்த தடைகளை நான் முழுமையாக நீக்கியுள்ளேன்.

* தற்போது நிலவும் பாதுகாப்பற்ற நிலைமைகளை கணக்கிலெடுத்து அதியுயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குவதற்கு படிப்படியாக நடவடிக்கை எடுப்பேன்.

* வடக்கில் உற்பத்தி செய்யப்படும் வெங்காயம், மிளகாய் உட்பட்ட விவசாய உற்பத்திகளுக்கு இலகுவான சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு, நாட்டில் ஏனைய பிரதேசங்களெங்கும் காணப்படும் பொருளாதார மையங்களுக்கு கொண்டு செல்வதற்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை சதொச ஊடாக ஏற்படுத்திக் கொடுப்பேன்.

* மதவாச்சி – மன்னார் பாதை, யாழ்ப்பாணம் – பருத்தித்துறைப் பாதை, யாழ்ப்பாணம் – மானிப்பாய் ஊடாக காரைநகர்ப் பாதை, முருங்கன் – சிலாபத் துறை, ஒட்டுசுட்டான் – நெடுங்கேணிப் பாதை மற்றும் வவுனியா – ஹொரவப்பொத்தான பாதை என்பவற்றை விரிவாக்கி அபிவிருத்தி செய்வேன்.

* யாழ்ப்பாணம் – கண்டி வீதி (ஏ-9), யாழ்ப்பாணம் – புத்தளம் வீதியை முன்னேற்றி அதிவேகப் பாதையாக மேம்படுத்துவேன்.

சங்குப்பிட்டிப் பாலத்தை உடனே அமைத்து யாழ்ப்பாணக் குடாநாட்டை மன்னார் மற்றும் புத்தளம் பிரதேசங்களோடு தொடர்புபடுத்துவேன். அத்துடன் யாழ்ப்பாணத் தீவுகளை மேம்படுத்தி நெடுஞ்சாலை முறைமையின் ஊடாக ஒன்றோடு ஒன்று இணைத்து யாழ்ப்பாணக் குடாநாட்டுடன் தொடர்புபடுத்துவேன்.

* யாழ். போதனா வைத்தியசாலையை முழுமையாக நவீனமயப்படுத்துவேன்.  அதற்கு இணையாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாங்குளம் உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் உள்ள வைத்தியசாலைகளையும் புனரமைப்பேன்.

* துரையப்பா விளையாட்டு மைதானத்தை நவீனமயப்படுத்துவேன்.

* சுதந்திரத்தின் அடையாள நகரமாக மாங்குளம் நகரத்தை அபிவிருத்தி செய்து மார்ச் மாதம் மக்களுக்கு உரித்தாக்குவேன்.

* யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு புதிதாக பொறியியல் பீடமொன்றை அமைத்துக் கொடுப்பேன். தொழில்நுட்பக் கல்லூரிக்கான விடுதி வசதிகளை விரிவாக்குவேன்.

* வடமாகாணத்தில் நெற் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உயர் வருமானங்களுக்கு வகை செய்யக்கூடியதான நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய பாரிய அரிசி ஆலைகள் இரண்டை நிறுவுவேன்.

* வடமாகாணத்தில் விவசாய எழுச்சிக்கு ஏற்புடையதாக விவசாய பீடம் ஒன்றை கிளிநொச்சி பிரதேசத்தில் நிறுவுவேன்.

* யாழ்ப்பாண மாவட்டத்துக்குத் தேவையான குடிநீர்த் தேவையை நிறைவேற்றுவதற்காக யாழ்ப்பாண நீர் வழங்கல் திட்டத்தை மார்ச் மாதத்தில் நடைமுறைப்படுத்துவேன்.

* தலைமன்னார் – மதவாச்சி – ஓமந்தை புகையிரதப் பாதையை 2011 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்வேன்.

2012 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தை தெற்காசியாவில் அதிசிறந்த நகரமாக மாற்றுவேன்.

* கடந்த காலத்தில் விரும்பியோ விரும்பாமலோ தவறான வழியில் இட்டுச் செல்லப்பட்டு ஆயுதக் கலாசாரத்துக்குள் தமது வாழ்க்கையின் இளமைக் காலத்தைப் பறிகொடுத்துவிட்ட இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும், அவர்களின் சமூகக் கலாசார அடையாளங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், ஏற்றுக்கொள்ளப்பட்ட புனர்வாழ்வுத் தராதரங்களின் அடிப்படையில் ஒரு வருட காலத்துக்குள் புனர்வாழ்வளித்து அவர்களது பெற்றோர்களிடம் கையளிப்பேன்.
வடக்கிலும் கிழக்கிலும் சகோதர மக்கள் மீண்டும் தத்தம் கிராமங்களுக்கு

‘வடக்கின் வசந்தம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள வவுனியாவின் நலன்புரி கிராமங்களில் இருந்த வவுனியா, மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களுக்குரிய அனைவரையும் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த பெருந் தொகையானோரையும் மீளக் குடியமர்த்தியுள்ளோம்.

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மாத்திரமே இன்னும் குடியமர்த்தப்பட வேண்டியவர்களாக உள்ளனர். நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்படுகின்ற விரைவுக்கேற்ப அவர்கள் அனைவரையும் படிப்படியாக தாமதமின்றி குடியமர்த்துவேன்.

1990ம் ஆண்டு வட மாகாணத்திலிருந்து புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் அனைவரையும் அவர்களுடைய சொந்தப் பிரதேசத்தில் மீள் குடியேற்றம் செய்யக்கூடியதாக வீடமைப்பு, வாழ்வாதாரம், உட்பட சகல உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான விடயங்களில் உரிய கவனம் எடுக்கப்பட்டு முழுமையான கருத்திட்டம் வரையப்பட்டு அது அமுல் செய்யப்படும்.

வீடுகளைக் கட்டுவதற்கு
* மீளக்குடியமர்த்துகின்ற ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தற்காலிக வாழிடங்களை அமைத்துக் கொள்வதற்காக தற்போது வழங்கப்படுகின்ற 50,000 ரூபாவுக்கு மேலதிகமாக மேலும் 50,000 ரூபா பெறுமதியான பொருட்களையும் பெற்றுக் கொடுப்பேன்.

* சேதமடைந்துள்ள வீடுகளை மீள் அமைத்துக் கொள்வதற்காக 350,000 ரூபா பணத்தை நீண்டகால அடிப்படையின் கீழ் வழங்குவேன்.

* வீடுகளைத் திருத்துவதற்காக ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவு வழங்குவேன்.

* ஒவ்வொரு வீட்டிற்கும் மலசலகூட வசதிகள் அமைத்துக் கொள்வதற்கு உதவிகள் வழங்குவேன்.

விவசாய ஊக்குவிப்பு
* சகல விவசாயக் குடும்பங்களுக்கும் தற்போது கொடுக்கப்பட்டு வருகின்ற விவசாய உபகரணங்கள், மீளக்குடியமர்த்தப்படும் சகல குடும்பங்களுக்கும் வழங்கப்படும்.

* சகல விவசாயக் குடும்பங்களுக்கும் தற்போது வழங்கப்படுகின்ற விதைநெல், உர வகைகள், ஒவ்வொரு போகத்தின் போதும் இலவசமாக வழங்கப்படும்.

* நெல் விவசாயிகள் சங்கம் ஒவ்வொன்றுக்கும் தண்ணீர்ப் பம்பி ஒன்றும் டிரக்டர் ஒன்றும் இலவசமாக வழங்கப்படும்.

மீன்பிடித் தொழில்
* ஒவ்வொரு மீனவத் தொழிலாளருக்கும் தேவையான மீன்பிடி உபகரணப் பொதி ஒன்று வழங்கப்படும்.

* மீன்வளத் திட்டமிடல் நிலையங்கள் இரண்டை மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் நிறுவுவேன்.

கால்நடை அபிவிருத்தி
* கோழி வளர்ப்புக்கு தேவையான குஞ்சுகள் மற்றும் அதற்குத் தேவையான உபகரணங்கள் அனைத்தையும் இலவசமாக வழங்குவேன்.

* பால் உற்பத்தியின் மேம்பாட்டுக்காக பால் உற்பத்தியாளர் கிராமங்களை நிறுவுவேன். பால் உற்பத்தித் தொழிற்சாலையொன்றை வவுனியாவில் ஆரம்பிப்பேன்.

* சுயதொழிலில் ஈடுபட விரும்பும் ஒவ்வொருவருக்கும் அதற்கு அவசியமான உபகரணப் பொதியொன்றை இலவசமாக வழங்குவேன்.

ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலிருந்து…  

ஜனாதிபதி தேர்தல்: எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்? : (ஈ.பி.ஆர்.எல்.எவ்_பத்மநாபா)

SF_PostersMR_Postersதமிழ் பேசும் மக்களே!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்  நாம் புத்திபூர்வமாகவும் தீர்க்கதரிசனமாகவும் நடந்துகொள்ள வேண்டும். மேலும் மேலும் துன்பங்களுக்கும், இன்னல்களுக்கும் ஆளாகாதவாறும் எமது வாழ்வில் ஒளியை ஏற்றி வைக்குமாறும் நாம் செயற்பட வேண்டும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் நிதானமான சிந்தனையுடனும் எதிர்காலம் பற்றிய கரிசனையுடனும் வாக்களிக்க வேண்டுமென்ற அபிப்பிராயத்தையே தமிழ் புத்திஜீவிகளும் ஆன்மீக தலைவர்களும் ஆசிரியர்களும் உயர் கல்வி மாணவர்களும் கொண்டிருக்கிறார்கள். அதனையே ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினராகிய நாமும் தமிழ் வாக்காளர்களுக்கு வலியுறுத்த விரும்புகிறோம்.

தேர்தலைப் பகிஷ்கரிப்பதோ அல்லது தமிழ் வேட்பாளர் ஒருவரை ஆதரிப்பதோ தமிழர்களுக்க உரிய புத்திபூர்வமான நடவடிக்கையாகாது என்பதே தமிழ் அறிவார்ந்தோரில் பெரும்பாலானோரின் கருத்தாகும். அதுவே எமது கருத்துமாகும்.

விபரிக்க முடியாத துன்பங்களையும் வேதனைகளையும், இழப்புக்களையும் சுமந்து நிற்கும் எம் மக்கள் எழுந்து நிற்பதற்கு, எம் மக்களின் வாழ்வில் விடியல் பிறப்பதற்கு நாம் செயற்பட வேண்டும் என்று இவர்கள் கேட்டிருந்தார்கள்.

பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பொறுப்புணர்ச்சி உள்ள அரசியல் கட்சி என்ற வகையில் மக்களின் உடனடித் தேவைகளுடனும் நீண்டகால அபிலாஷைகளுடன் இணைந்து செல்லவே விரும்புகிறது.

எமது மக்களுக்கு நன்மை பயக்கும் ஜனநாயக சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் அரசியல் அதிகாரப்பகிர்வும், சமூக பொருளாதார அபிவிருத்தியும் ஆகிய விடயங்களை கருத்திற்கெடுத்தே செயற்பட வேண்டியிருக்கிறது.

பொறுப்பற்ற நிராகரிப்பு அரசியலை நாம் மேற்கொள்ள முடியாது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை பொறுத்தவரை அவர் 40 வருடம் அரசியல்வாதியாக செயற்பட்டிருக்கிறார்.

1980 களின் இறுதிப் பகுதியில் இலங்கையில் மோசமான மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்த போது உள்ளுரிலும், சர்வதேச அரங்கிலும் மனித உரிமைகளுக்காக உறுதியுடன் குரல் கொடுத்தவர்.
எமது பிரதேசங்களையும் இந்த நாட்டையும் பீடித்திருந்த வன்முறைக் கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்தவர்.

அனைத்துக் கட்சிகளையும் இணைத்து அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கு இலங்கையை பல்லினங்களின் நாடாக நிர்மாணிப்பதற்கும் முயற்சிகளை மேற்கொண்டவர். 

எனினும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தால் இணைக்கப்பட்டு 20 வருடங்கள் நடைமுறையில் இருந்த  இணைந்த வடக்கு கிழக்கை ஜே.வி.பி நீதிமன்றம் வரை சென்று பிரிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டது. அவசரகாலச் சட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கு நீதி மன்றத்தால் பிரிக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் ஊடாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் மாத்திரமே அதனை மேற்கொள்ள முடியும்.

கிழக்கு மாகாணசபை செயற்படுவதாக இருப்பினும் 13வது திருத்தத்தின் கீழான அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்படவில்லை. குறிப்பாக பொலிஸ் அதிகாரம், நிலத்தின் மீதான அதிகாரங்கள், நிதி அதிகாரங்கள் இன்றுவரை வழங்கப்படவில்லை என்பதே யதார்த்தம். 13வது திருத்தச்சட்டத்திற்கும் கூடுதலான அதிகாரப்பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை. இந்த நாட்டின் தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும் அதிகாரப்பகிர்வினூடாக ஜனநாயகத்தை விரும்பும் சிங்கள மக்கள் மத்தியிலும் அந்த நிலைப்பாடே காணப்படுகிறது. எமது பிராந்தியத்தின் பிரதான ஜனநாயக நாடும் இலங்கையின் நண்பனுமான இந்தியாவும் அதனையே வலியுறுத்துகிறது.

எதிர்க்கட்சி கூட்டணியின் வேட்பாளர் சரத் பொன்சேகா அவர்கள் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இராணுவ ஜெனராலாக இருந்து மிகத் திறமையாகச் செயலாற்றியவர். இப்போது வடக்கு கிழக்கு இணைப்பு, உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்கி அங்கு மீண்டும் தமிழ் மக்கள் குடியேறி வாழச் செய்வார் எனவும் வடக்கு கிழக்கை மீண்டும் இணைப்பார் எனவும் தமக்கு வாக்குறுதி அளித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு பிரிவினர் தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது அவர் அவ்வாறு கூறவில்லை என்றும் கிழக்கை கைப்பற்றி வடக்கு கிழக்கை பிரிப்பதற்கு வழிவகுத்தது தானே என்றும் தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசியல் அதிகாரப் பகிர்வு பற்றியோ, உயர்பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீளக்குடியமர்த்தல் பற்றியோ, சிறுபான்மை சமூகங்கள் பற்றியோ தமிழ் பேசும் மக்கள் பற்றியோ ஒரு வார்த்தையும் இடம்பெறவில்லை. இன்று இதனை பகிரங்கமாக தெரிவிக்காத நிலையில் நாளை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பாக உறுதியாக செயற்படுவார் என நாம் எதனையும் உறுதியாக கூறிவிட முடியாதுள்ளது.

இப்போது அரசாங்கம் உயர்பாதுகாப்பு வலயங்களை நீக்கி அங்கிருந்த மக்கள் மீள அவ்விடங்களில் குடியேறும் வழி வகைகளைச் செய்ய ஆரம்பித்திருக்கிறது. அவ்வேலைத்திட்டங்கள் விரைவுபடுத்தப்பட்டு முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டுமென்று கோருகின்றோம்.

அதிகாரப்பகிர்வுக்கு எதிராகவும், எமது அண்டை நாடான இந்தியாவுக்கு விரோதமாகவும் செயற்பட்டுவரும் ஜே.வி.பி எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் பிரதான பங்குதாரர் என்பதையும் நாம் மனம் கொள்ள வேண்டியுள்ளது. அத்துடன் ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் பொன்சேகாவின் முதுகில் ஏறி தான் அதிகாரத்தைப் பிடிக்கும் எண்ணத்துடனேயே அவருக்கு ஆதரவளிக்கிறார். சரத் பொன்சேகாவுக்கு என்று ஒரு அரசியற் பின்னணியோ அல்லது ஒரு கட்சிப்பின்னணியோ இல்லாதிருக்கிறார். இந்நிலையில் பொன்சேகா அவர்கள் தமது வாக்குறுதிப்படி எவ்வளவு தூரம் செயல்படுவார் என்பதே எமது கேள்வி. இது ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி பின்னர் நீ யாரோ நான் யாரோ என அவர் ஆக்கி விடுவாரோ என்பதே எமது கவலை.

இப்போது பலதும் பத்தும் கூறும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களும் எல்லாம் பிழைத்ததன் பின்னர் எல்லா சிங்களத் தலைவர்களும் இப்படித்தான் என்று சுலபமாகக் கூறி தாம் மக்களை பிழையாக வழி நடத்தியதற்கான பொறுப்பைக் கை கழுவி விட்டு அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் எப்படி வெல்வது என்பதை நோக்கி மக்களுக்கு உணர்ச்சி ஊசி அடிக்கத் தொடங்கி விடுவார்கள்.

புலிகளை ஏக பிரதிநிதிகள் என்று ஏற்றுக்கொண்டே  தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் இப்போது அரசாங்கம்தான் அவர்களை ஏகபிரதிநிதிகளாக  ஏற்றுக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியது. நாங்கள் அவ்வாறு கூறவில்லையென்று திரு.சம்பந்தன் அவர்கள் தெரிவிக்கின்றார்.

புலிகளால் உருவாக்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பு இப்போது பல்வேறு பிரிவுகளாக உள்ளது.. சிவநாதன் கிஷோர் தலைமையில் ஒரு பிரிவினர் ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கின்றனர். பொன்னம்பலத்தின் பேரன் கஜேந்திர குமார் தலைமையில் ஒரு பிரிவினர் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பகிஷ்கரிக்க வேண்டுமென்கின்றனர். சிவாஜிலிங்கம் தன்னை வேட்பாளராக நிறுத்தியுள்ளார். சிறீகாந்தா, செல்வம் ஆகியோர் அவருக்கு ஆதரவளிக்கின்றனர். சம்பந்தன் சேனாதிராஜா மற்றம் சுரேஷ் பிரிவினர் சரத் பொன்சேகா தமிழ் மக்களின் அபிலாஷைகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் பொன்சேகாவும், ஜே.வி.பி யும் ஊடகங்களுக்கு தெரிவித்துவரும் கருத்துக்கள் எதிர்மாறானவையாக இருக்கின்றன. பொன்சேகாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் காணப்படும் பத்து விடயங்களைத் தவிர வேறு எதுவும் கூட்டமைப்பினருடன் பேசப்படவில்லையென ஜே.வி.பி யின் பேச்சாளர் அனுரகுமார திசாநாயக்கா தெரிவித்துள்ளார்.

கடந்த ஏழு எட்டு மாதங்களாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் வைக்கப்பட்டிருந்த 3,50,000 இற்கு மேற்பட்ட மக்களின் பிரச்சினைகளே கவலை அளிப்பதாக அமைந்திருந்தன. இந்த மக்கள் எல்லாவற்றையும் இழந்தவர்கள். உறவுகளை இழந்தவர்கள், பிள்ளைகள், இரண்டுவருட கல்வியை இழந்தவர்கள். தற்போது அவர்கள் படிப்படியாக தமது சொந்த ஊர்களுக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். 2,50,000 இற்கு மேற்பட்ட மக்கள் வரை ஊர்திரும்பியிருக்கிறார்கள். அவர்களுக்குரிய வீட்டுவசதிகள், வீதிகள், தொழில்வசதிகள், கல்வி, போன்ற விடயங்களில் அரசாங்கம் கூடுதலான அக்கறை செலுத்த வேண்டும் என்றே கோருகின்றோம். 

பாதுகாப்பு வலயங்களால் ஒரு லட்சத்துக்க மேற்பட்டோர் பத்தாண்டுகளுக்கு மேலாக அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். புலிகளால் துரத்தப்பட்ட முஸ்லிம் மக்கள் ஒரு லட்சம் பேரளவில் உள்ளனர். இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் புகுந்தோர் ஒரு லட்சத்துக்கு மேல் உள்ளனர். இருபத்தைந்து வருட யுத்தத்தால் வருமானம் உழைப்போரை இழந்து விதவைகளையும் அனாதைகளையும் கொண்டு நிற்கும் குடும்பங்கள் பல்லாயிரம். இவர்கள் அனைவருக்கும் உரிய பொருளாதார சமூக வாழ்வை மீளளிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் அனைத்தும் போதிய அளவில் அளிக்கப்பட வேண்டும். இந்த மக்களின் வாழ்வில் புதிய வெளிச்சம் வருவதற்கான அரசியல் பொருளாதாரக் கதவுகள் பல முனைகளிலும் திறக்கப்பட வேண்டும்.

இடம்பெயர்ந்த மக்களின் பிள்ளைகளில் பலர் சிறப்பு முகாம்களில் வாழ்வது அவர்களின் பரவலான கவலையாகும். பலாத்காரமாக யுத்தப் பயிற்சிக்கு பிடித்துச் செல்லப்பட்டவர்களே இதில் அதிகமானோர். அவர்களை துரிதமாக விடுவிப்பதற்கான செயற்பாடுகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ள போதிலும் இன்னும் வேகமாக அவை நடைபெற வேண்டும். பிள்ளைகளை பெற்றோரிடம் நேரடியாக கையளிக்கும் நடவடிக்கையை ஜனாதிபதி ஆரம்பித்துள்ளார். அது இன்னமும் வேகமாகவும் முறையாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோருகின்றோம்.

ஏ-9 பாதை தற்போது 24 மணிநேரமும் திறந்திருக்கிறது. எமது வெறிச்சோடிய நகரங்களில் மீண்டும் உயிர்ப்பு, மானிட செயற்பாடுகள் களைகட்டத் தொடங்கியுள்ளன். முட்கம்பிகளாகவும், இருளாகவும் காணப்பட்ட எமது நகரங்களில் பஸ்நிலையங்களும், கடைத்தெருக்களும் சினிமாத் தியேட்டர்களும் இரவு நேரங்களிலும் உயிரோட்டம் உடையவையாக காணப்படுகின்றன.
ஊரடங்கு உத்தரவு யாழ்ப்பாணத்தில் முற்றுமுழுதாகவே தளர்த்தப்பட்டு விட்டது.
தென்னிலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கு கெடுபிடிகளாக இருந்த பொலிஸ் பதிவு முறைகள், பாஸ் முறைகள் நீக்கப்பட்டுள்ளன.

இன்னும் பல காரியங்கள் நடந்தேறியாக வேண்டியிருக்கின்றன. எல்லாவற்றையும் ஆக்கிரமித்திருந்த ஆயுத வன்முறைக் கலாச்சாரம் முடிவுக்கு வந்திருப்பதால் அவசரகாலச்சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் ஆகியன இனி அவசியமற்றவை. அவை உடனடியாக நீக்கப்பட வேண்டும்
சோதனைச்சாவடிகள், மணல் மூட்டைகள், முட்கம்பி சுருள்கள் இனி எமது வீதிகளில் அவசியமற்றவை. அவை இல்லாத ஒருநிலை விரைவாக வேண்டும்.

தமிழ், முஸ்லீம், மலையக மக்கள் பங்குதாரர்களாக இருக்கக்கூடிய அதிகாரப் பகிர்வு அரசியல் முறைமையொன்றைக் கொண்டதாக இலங்கை அமைய வேண்டும்.

தமிழ், முஸ்லீம், சிங்கள மக்களுக்கு இடையேயான நல்லுறவுகள் பலப்படுத்தப்பட வேண்டும். ஒரு பல்லினங்களின் தேசமாக நாம் அனைவரும் இலங்கையர் என மானசீகமாக உணரக்கூடிய விதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தென்னாசியாவின் கண்ணீர்துளி என கடந்த 30 வருடங்களாக அழைக்கப்பட்ட இலங்கை இந்து சமுத்திரத்தின் முத்து என்ற பெயரை மீண்டும் பெற வேண்டும்.

மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பக்கத்தில் இருக்கும் இலங்கை அதனோடு பரஸ்பர நல்லுறவுடன் தனது ஜனநாயக பாராம்பரியங்களை பாதுகாத்துக் கொள்வதோடு அனைத்து மனித உரிமைகளையும் மதிப்பதாக விரிவாக்கப்படவும் வேண்டும்.

வறுமை, பிணி, அச்சம் நீங்கிய சமுதாயம் உருவாக்கப்பட வேண்டும். பலமான ஜனநாயக அடித்தளத்தில் எமது சமூக பொருளாதார நிர்மாணம் நடைபெற வேண்டும்.

ஆனால் நாடு பூராவும் இராணுவ உடையுடனும், தொப்பியுடன் எதிர்க்கட்சி பொது வேட்பாளர்pன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதன் பொருள் என்ன? இராணுவ பெருமிதம்தான் நாட்டின் எதிர்காலமா?

பாகிஸ்தான், பங்களாதேசம், மியான்மார் ஆகிய நாடுகளில் நிகழ்ந்த இராணுவ சதிப்புரட்சிகளையும் அந்நாடுகளில் ஜனநாயக சமூகத்தின் அடிப்படை அத்திவாரங்களே ஆட்டம் கண்டு போயிருப்பதை இலங்கையர்கள் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

40 வருடமாக படை அதிகாரியாக இருந்தவர்pன் இராணுவ மனோபாவமே இயல்பாக அவரின் சிந்தனையை தீர்மானிக்கும் என்பது கவனத்துக்குரியதொன்று. அவர் இப்போதும் கூட நாட்டுக்கும் நாட்டுமக்களுக்கும் என்ன நல்லவற்றைச் செய்யப் போகிறார் என்பதைவிட படைத்தரப்பினர், பாதுகாப்பு பற்றியே அதிகம் பேசுகிறார். சம்பள உயர்வு வேலைவாய்ப்புக்ள் பற்றி அவர் கூறுபவைகள் நடைமுறைக்குதவாத வாக்குறுதிகளாகவே காணப்படுகின்றன.

சிறுபான்மை சமூகங்கள் பெரும்பான்மை சமூகத்தை அண்டிப்பிழைக்க வேண்டும் என்று அவர் இராணுவ கமாண்டராக இருக்கும் போதே கூறியவர். இலங்கையின் சனத்தொகை பொருளாதாரம் இவற்றை கரிசனையில் கொள்ளாமல் படையினரின் தொகையை மூன்று லட்சமாக அதிகரிக்க வேண்டுமென்று கூறியவர். இப்போதும் அதே நிலைப்பாடுகளையே கொண்டுள்ளார்.

ஜனநாயக உணர்வு கொண்டவர்களுக்கு குடிமக்களின் ஆட்சி பற்றி நம்பிக்கை கொண்டவர்களுக்கு இது மிகவும் நெருடலான விடயமாகும்.

தமிழ் பேசும் மக்களின் தலைமைகள் மக்களின் எதிர்காலம் பற்றி தீர்க்க தரிசனத்துடன் சிந்திக்க வேண்டும்.

வரலாற்றில் தூரதிருஷ்டியும் சமூகப் பொறுப்புணர்வும் இல்லாமல் போனதன் விளைவு எத்தகைய விபரீதங்களை நாம் சந்திக்க வேண்டி நேர்ந்தது. மொத்த சமூகமுமே அழிவின் விளிம்பில் நிறுத்தப்பட வில்லையா? இழந்தவற்றைத்தான் ஈடு செய்ய முடியுமா?

இத்தனைக்கும் எமக்கு எத்தகைய சந்தர்ப்பங்கள் எல்லாம் வந்தன.
இந்தியாவின் அனுசரணையுடன் வடக்கு கிழக்கு இணைந்த அதிகாரப்பகிர்வு முறைமை
1990 களின் நடுப்பகுதியில்  சந்திரிகா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சமஷ்டி முறையிலான தீர்வு
2002 இல் ஒஸ்லோவில் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளால் பரிந்துரைக்கப்பட்ட கூட்டாட்சி முறை

தமிழ் மக்களால் நம்பப்பட்டவர்கள் எல்லாவற்றையும் நிராகரித்தார்கள்.
 
இந்த நிராகரிப்பு அரசியலே எமது சமூகத்திற்கு துன்பக் குழிகளையும் துயரக் குழிகளையம் தோண்டியது. தமிழ் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் புத்திசாலித்தனமாகவும், தீர்க்க தரிசனத்துடனும் நடந்துகொள்ள வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.

எமது மக்களுக்கு அச்சமில்லாத சுதந்திரமான அரசியல் பொருளாதார வாழ்வு வேண்டும்: இலங்கையில் ஆட்சி முறையில் தமிழர்களும் சகோதரமான பங்காளர்கள் என இருக்கும் நிலை ஏற்பட வேண்டும்:  தமிழ் மக்கள் தமக்கான சுபிட்சமான வாழ்வை தமது உழைப்பால் அடைவதற்கு இனவாத அரசியற் தடைகளற்ற ஓர் ஏற்பாடு உருவாக வேண்டும். இவற்றை சாத்தியமாக்க மஹிந்த ராஜபக்ஸவே தமிழ் மக்களின் தெரிவாக வேண்டும்

தமிழ் மக்களின் சுதந்திரமான வாழ்வுக்கும்,
தமிழ் மக்களின் அரசியல் பொருளாதார உரிமைகளுக்கும்
இன, மத, சாதி பேதங்களற்ற ஒரு சமதர்ம இலங்கைக்கும்
மக்கள் பங்களிப்புடன் தொடர்ந்து போராடுவோம். 

பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ்) ஜனவரி 2010, யாழ்ப்பாணம்