சில தினங்களுக்கு முன்பு ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ச தனது தேர்தல் விஞ்ஞாபனமாக மஹிந்த சிந்தனை 02ஐ வெளியிட்டார். அதில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த கருத்துக்கள் கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
மாகாண சபை
மாகாண சபை முறை சம்பந்தப்பட்ட தேர்தல் முறையையும் பிரதேச சபை மற்றும் மாவட்ட விகிதாசாரத்தை அடிப்படையாகக் கொண்ட கலப்பு முறையையும் உருவாக்குகின்ற முன்மொழிவொன்றையும் முன்வைக்கின்றேன். அதுவரை எவ்வித தாமதமுமின்றி 13 வது திருத்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபையை மீண்டும் இயங்க வைப்பேன்.
வட மாகாணத்தின் நிலையான அபிவிருத்திக்காகவும் வடக்கு வாழ் மக்களின் வாழ்நிலையை மிக விரைவாக வளப்படுத்துவதற்குமாக செயற்படுத்தப்படுகின்ற வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தை மென்மேலும் பலப்படுத்தும் வகையில், மாகாண சபையில் மக்கள் பிரதிநிதிகளின் பூரண ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
செனற் சபை
நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எவ்விதத்திலும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தாத வகையிலும் பாராளுமன்றத்தின் அதியுயர் தன்மைக்கு பாதகம் ஏற்படாத வகையிலும் மாகாண சபைகளில் நிறைவேற்றப்படுகின்றன நியதி ஆக்கங்கள் மற்றும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுகின்ற சட்டங்கள் என்பவற்றை மேலும் அர்த்தபுஷ்டியுடன் கலந்துரையாடுவதற்கும், மத்திய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் அவர்களை ஆக்கமுடன் பங்கேற்கும்படி செய்வதற்காகவும் மதத் தலைவர்கள், தொழில் வாண்மையாளர்கள் போன்ற நேரடியாக வாக்குகளால் தெரிவு செய்யப்படாத பிரதிநிதிகளும் பாராளுமன்ற செயற்பாடுகளில் பங்களிப்பை செய்வதற்கு ஏற்றவாறு சகல அரசியல் கட்சிகளினதும், அமைப்புகளினதும் கருத்துக்களை கோரியதன் பின்னர் இரண்டாவது மந்திரி சபையொன்றை நிறுவுவதற்கு உத்தேசித்துள்ளேன்.
தேசிய சகவாழ்வுக்கு புதியதொரு பாதை
பெரும்பாலானோரின் இணக்கப்பாடு என்பவற்றையே அதன் அடிப்படையாகக் கருதுகின்றேன்.
கிழக்கின் உதயம்
* பாணமவிலிருந்து புல்மோட்டை வரை கிழக்கு கரையோரப் பாதையையும் கந்தளாய் சேருவிலப் பாதையையும் அவசர அவசரமாக உருவாக்குகின்றோம். கிழக்கு மாகாணத்தில் எஞ்சியுள்ள அனைத்து நெடுஞ்சாலைகளையும் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் பூர்த்தி செய்துநாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கிடையில் உள்ள பொருளாதார சமூக அரசியல் தொடர்புகளை மேம்படுத்துவேன்.
* மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து வடமத்திய மாகாணத்துக்கும் கொழும்புக்கும் துரித போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு மரதங்கடவெல, பொலன்னறுவை, திருகோணமலைப் பாதைகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன. திருகோணமலை மாவட்டத்தில் இறக்கண்டிப் பாலம் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ள அதேநேரத்தில் யான் ஓய பாலம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்துப் பாலங்களின் வேலைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
* அம்பாறை மாவட்டத்தில் அறுகம்குடாப் பாலம் திறக்கப்பட்டுள்ளதோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடிப் பாலமும் புதிய கல்லடிப் பாலமும் மக்களுடைய உரிமைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரதேசத்தில் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 59 புதிய நீர்வழங்கல் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு பிரதான நீர்த்தாங்கிகள் 12 அமைக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
* புதிதாக 164 பாடசாலைக் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் 327 கட்டடங்கள் புனரமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு பாடசாலையும் நவீன விஞ்ஞான ஆய்வுகூடத்தையும் கணனி நிலையத்தையும் கொண்டதாக அமைக்கப்படுகின்றது.
* சுகாதாரத் துறையின் அபிவிருத்திக்காக வைத்தியசாலைகளுக்காக புதிதாக 55 வார்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன. 445 வைத்தியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
* வாழ்வாதார அபிவிருத்திக்காக 80,000 ஏக்கர் வயல்கள் பயிரிடப்பட்டுள்ள அதேநேரம் 2500 வீட்டுத் தோட்டங்களும் 19 பழக் கிராமங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் தொடர்ந்தும் மேற்குறிப்பிட்ட பயிர்ச்செய்கையை மேம்படுத்தி புதிய சந்தை முறை ஒன்றை அறிமுகப்படுத்துவேன்.
* ஏற்றுமதி தயாரிப்புப் பிராந்தியம் ஒன்றை ஆரம்பிப்பேன்.
* வாழ்வாதார அபிவிருத்திக்காக புதிதாக 100,000 ஏக்கர் வயல்களின் பயிர் செய்ய வழி செய்வேன். 5,000 வீட்டுத் தோட்டங்களையும் 100 பழக் கிராமங்களையும் உருவாக்குவேன்.
* பால் உற்பத்தி செய்கின்ற தொழிலை மேம்படுத்துவதற்காக புதிதாக மூன்று மாதிரிப் பண்ணைகளை உருவாக்கியுள்துடன், பால் உற்பத்தி செய்கின்ற 100 கிராமங்களை அமைத்திருக்கிறேன்.
வடக்கின் வசந்தம்
* வடமாகாணத்தில் எந்த ஒரு இடத்துக்கும் சுதந்திரமாக போய்வருவதற்கு இருந்த தடைகளை நான் முழுமையாக நீக்கியுள்ளேன்.
* தற்போது நிலவும் பாதுகாப்பற்ற நிலைமைகளை கணக்கிலெடுத்து அதியுயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குவதற்கு படிப்படியாக நடவடிக்கை எடுப்பேன்.
* வடக்கில் உற்பத்தி செய்யப்படும் வெங்காயம், மிளகாய் உட்பட்ட விவசாய உற்பத்திகளுக்கு இலகுவான சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு, நாட்டில் ஏனைய பிரதேசங்களெங்கும் காணப்படும் பொருளாதார மையங்களுக்கு கொண்டு செல்வதற்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை சதொச ஊடாக ஏற்படுத்திக் கொடுப்பேன்.
* மதவாச்சி – மன்னார் பாதை, யாழ்ப்பாணம் – பருத்தித்துறைப் பாதை, யாழ்ப்பாணம் – மானிப்பாய் ஊடாக காரைநகர்ப் பாதை, முருங்கன் – சிலாபத் துறை, ஒட்டுசுட்டான் – நெடுங்கேணிப் பாதை மற்றும் வவுனியா – ஹொரவப்பொத்தான பாதை என்பவற்றை விரிவாக்கி அபிவிருத்தி செய்வேன்.
* யாழ்ப்பாணம் – கண்டி வீதி (ஏ-9), யாழ்ப்பாணம் – புத்தளம் வீதியை முன்னேற்றி அதிவேகப் பாதையாக மேம்படுத்துவேன்.
சங்குப்பிட்டிப் பாலத்தை உடனே அமைத்து யாழ்ப்பாணக் குடாநாட்டை மன்னார் மற்றும் புத்தளம் பிரதேசங்களோடு தொடர்புபடுத்துவேன். அத்துடன் யாழ்ப்பாணத் தீவுகளை மேம்படுத்தி நெடுஞ்சாலை முறைமையின் ஊடாக ஒன்றோடு ஒன்று இணைத்து யாழ்ப்பாணக் குடாநாட்டுடன் தொடர்புபடுத்துவேன்.
* யாழ். போதனா வைத்தியசாலையை முழுமையாக நவீனமயப்படுத்துவேன். அதற்கு இணையாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாங்குளம் உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் உள்ள வைத்தியசாலைகளையும் புனரமைப்பேன்.
* துரையப்பா விளையாட்டு மைதானத்தை நவீனமயப்படுத்துவேன்.
* சுதந்திரத்தின் அடையாள நகரமாக மாங்குளம் நகரத்தை அபிவிருத்தி செய்து மார்ச் மாதம் மக்களுக்கு உரித்தாக்குவேன்.
* யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு புதிதாக பொறியியல் பீடமொன்றை அமைத்துக் கொடுப்பேன். தொழில்நுட்பக் கல்லூரிக்கான விடுதி வசதிகளை விரிவாக்குவேன்.
* வடமாகாணத்தில் நெற் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உயர் வருமானங்களுக்கு வகை செய்யக்கூடியதான நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய பாரிய அரிசி ஆலைகள் இரண்டை நிறுவுவேன்.
* வடமாகாணத்தில் விவசாய எழுச்சிக்கு ஏற்புடையதாக விவசாய பீடம் ஒன்றை கிளிநொச்சி பிரதேசத்தில் நிறுவுவேன்.
* யாழ்ப்பாண மாவட்டத்துக்குத் தேவையான குடிநீர்த் தேவையை நிறைவேற்றுவதற்காக யாழ்ப்பாண நீர் வழங்கல் திட்டத்தை மார்ச் மாதத்தில் நடைமுறைப்படுத்துவேன்.
* தலைமன்னார் – மதவாச்சி – ஓமந்தை புகையிரதப் பாதையை 2011 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்வேன்.
2012 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தை தெற்காசியாவில் அதிசிறந்த நகரமாக மாற்றுவேன்.
* கடந்த காலத்தில் விரும்பியோ விரும்பாமலோ தவறான வழியில் இட்டுச் செல்லப்பட்டு ஆயுதக் கலாசாரத்துக்குள் தமது வாழ்க்கையின் இளமைக் காலத்தைப் பறிகொடுத்துவிட்ட இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும், அவர்களின் சமூகக் கலாசார அடையாளங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், ஏற்றுக்கொள்ளப்பட்ட புனர்வாழ்வுத் தராதரங்களின் அடிப்படையில் ஒரு வருட காலத்துக்குள் புனர்வாழ்வளித்து அவர்களது பெற்றோர்களிடம் கையளிப்பேன்.
வடக்கிலும் கிழக்கிலும் சகோதர மக்கள் மீண்டும் தத்தம் கிராமங்களுக்கு
‘வடக்கின் வசந்தம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள வவுனியாவின் நலன்புரி கிராமங்களில் இருந்த வவுனியா, மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களுக்குரிய அனைவரையும் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த பெருந் தொகையானோரையும் மீளக் குடியமர்த்தியுள்ளோம்.
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மாத்திரமே இன்னும் குடியமர்த்தப்பட வேண்டியவர்களாக உள்ளனர். நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்படுகின்ற விரைவுக்கேற்ப அவர்கள் அனைவரையும் படிப்படியாக தாமதமின்றி குடியமர்த்துவேன்.
1990ம் ஆண்டு வட மாகாணத்திலிருந்து புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் அனைவரையும் அவர்களுடைய சொந்தப் பிரதேசத்தில் மீள் குடியேற்றம் செய்யக்கூடியதாக வீடமைப்பு, வாழ்வாதாரம், உட்பட சகல உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான விடயங்களில் உரிய கவனம் எடுக்கப்பட்டு முழுமையான கருத்திட்டம் வரையப்பட்டு அது அமுல் செய்யப்படும்.
வீடுகளைக் கட்டுவதற்கு
* மீளக்குடியமர்த்துகின்ற ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தற்காலிக வாழிடங்களை அமைத்துக் கொள்வதற்காக தற்போது வழங்கப்படுகின்ற 50,000 ரூபாவுக்கு மேலதிகமாக மேலும் 50,000 ரூபா பெறுமதியான பொருட்களையும் பெற்றுக் கொடுப்பேன்.
* சேதமடைந்துள்ள வீடுகளை மீள் அமைத்துக் கொள்வதற்காக 350,000 ரூபா பணத்தை நீண்டகால அடிப்படையின் கீழ் வழங்குவேன்.
* வீடுகளைத் திருத்துவதற்காக ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவு வழங்குவேன்.
* ஒவ்வொரு வீட்டிற்கும் மலசலகூட வசதிகள் அமைத்துக் கொள்வதற்கு உதவிகள் வழங்குவேன்.
விவசாய ஊக்குவிப்பு
* சகல விவசாயக் குடும்பங்களுக்கும் தற்போது கொடுக்கப்பட்டு வருகின்ற விவசாய உபகரணங்கள், மீளக்குடியமர்த்தப்படும் சகல குடும்பங்களுக்கும் வழங்கப்படும்.
* சகல விவசாயக் குடும்பங்களுக்கும் தற்போது வழங்கப்படுகின்ற விதைநெல், உர வகைகள், ஒவ்வொரு போகத்தின் போதும் இலவசமாக வழங்கப்படும்.
* நெல் விவசாயிகள் சங்கம் ஒவ்வொன்றுக்கும் தண்ணீர்ப் பம்பி ஒன்றும் டிரக்டர் ஒன்றும் இலவசமாக வழங்கப்படும்.
மீன்பிடித் தொழில்
* ஒவ்வொரு மீனவத் தொழிலாளருக்கும் தேவையான மீன்பிடி உபகரணப் பொதி ஒன்று வழங்கப்படும்.
* மீன்வளத் திட்டமிடல் நிலையங்கள் இரண்டை மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் நிறுவுவேன்.
கால்நடை அபிவிருத்தி
* கோழி வளர்ப்புக்கு தேவையான குஞ்சுகள் மற்றும் அதற்குத் தேவையான உபகரணங்கள் அனைத்தையும் இலவசமாக வழங்குவேன்.
* பால் உற்பத்தியின் மேம்பாட்டுக்காக பால் உற்பத்தியாளர் கிராமங்களை நிறுவுவேன். பால் உற்பத்தித் தொழிற்சாலையொன்றை வவுனியாவில் ஆரம்பிப்பேன்.
* சுயதொழிலில் ஈடுபட விரும்பும் ஒவ்வொருவருக்கும் அதற்கு அவசியமான உபகரணப் பொதியொன்றை இலவசமாக வழங்குவேன்.
ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலிருந்து…
மாயா
மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படும் ஈழத் தமிழர்கள்!
1948 ஆம் ஆண்டு முதல் ஆட்சிக்கு வந்த சிங்களப் பேரினவாதக் கட்சிகள் எங்கள் தமிழ் இனத்தை ஒப்பந்தங்கள் மூலம் ஏமாற்றியதையும், இராணுவப் பலத்தைப் பயன்படுத்தி எங்கள் இனத்தை அழித்து அடிமைப்படுத்தியதையும் இலங்கைத் தமிழர்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். தலைமையையும், மக்கள் பலத்தையும் இழந்த காலகட்டத்தில், தமிழ் இனம் சிதைந்து வாழும் இன்றைய நிலையினை பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டியில் எஞ்சிய தமிழ் மக்களின் வாக்குகள் மூலம் பதவியைப் பிடிக்க படு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர் தமிழின அழிப்பாளர்கள்.
ராஜபக்ச மற்றும் பொன்சேகா இருவரில் யார் குறைந்த அளவு தமிழர்களைக் கொலை செய்தனர் என்று கண்டுபிடிக்க முடியாத அளவு பாதகம் செய்த இந்த நபர்களில் ஒருவரை நல்லவர் என்று சொல்கின்றனர் எங்கள் எம்.பி.க்கள்.
இறுதியில் நாங்கள் கேட்டதை ஏற்றுக்கொண்டு விட்டார் பொன்சேகா என்று ஆர்ப்பரித்தனர். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள். இருந்தாலும் நாங்கள் சொல்வதை தமிழ்மக்கள் நம்புவார்களா என்ற ஐய்யப்பாடு இவர்களுக்குத் தோன்றியது. எப்படியாவது தமிழ் மக்கள் நம்பும் அளவுக்கு ஏதாவது செய்தாக வேண்டும். நீண்ட யோசனைக்குப் பிறகு கண்டுபிடித்தனர் ஒரு அருமையான திட்டம் ஒன்றினை!
அதுதான் இந்திய விஜயம். இதில் குறிப்பிடத்தக்க அறிவிப்பு ஒன்றினை நினைவுப்படுத்த விரும்புகிறோம். சரத் பொன்சேகாவைச் சந்தித்துவிட்டு வெளியே வந்த திரு. சம்பந்தன் அவர்களும் திரு. சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களும் பின்வறுமாறு தெரிவித்தனர். “பிறநாடுகளின் தலையீடு இல்லாமல் நாங்களே தமிழினத்துக்கான பிர்சசினைகளை நாங்களே பேசித் தீர்த்துக்கொள்வோம்” என்பதுதான் அந்த அறிவிப்பு.
இந்த அறிவிப்பினை வெளியிட்ட பின்னர்தான் யோசித்தனர், இந்த அறிவிப்பினை தமிழ்மக்கள் நம்புவார்களா என்று. பலதரப்பட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு இந்தியா எங்களை ஆதரிக்கிறது என்று கூறினால்தான் தமிழ் மக்கள் எங்களை நம்புவார்கள், நாங்கள் சொல்லும் நபருக்கு வாக்குகள் போடுவார்கள். எனவே இந்தியாவுக்குப் போகிறோம் என்று அறிவித்தனர்.
அதனால், தாங்களாகவே வலியச் சென்று இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொண்டு நாங்கள் இந்தியா சென்று மத்திய அரசின் தலைவர்களைச் சந்திக்க வேண்டும் என்று தங்களது செயற்பாட்டை மறைத்துக் கோரிக்கை வைத்தனர்.
ஒரு தூதராலயம் அதன் அதிகாரிகள் வாயிலாக தனது நாட்டினை ஆட்சி செய்யும் அரசியல் தலைவர்களை சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்ய முடியாது. அதிகபட்சம் வெளிவிவகாரச் செயலாளரை மட்டுமே சந்திக்க ஏற்பாடு செய்யலாம் என்று தூதரகம் தெரிவித்தது. இந்திய தூதரகமும் இதனைத்தான் செய்தது. உடனே எங்களை இந்தியா அழைத்துள்ளது, நாம் இந்தியா செல்கிறோம் என்று செய்தி வெளியிட்டு டெல்கி சென்றனர். அங்கே தூதரக ஏற்பாட்டின்படி இவர்கள் வெளியுறவுத்துறைச் செயலர் நிருபமாராவ் அவர்களைச் சந்தித்து தாங்கள் கொண்டு சென்ற கோர்வையைக் கையளித்தனர். வழக்கம்போல் அவர் அதனைப் பெற்றுக் கொண்டு இவர்களை வழியனுப்பி வைத்தார்.
இவரைத் தவிர எந்த ஒரு ஆட்சித் தலைவர்களையும் சந்திக்கவில்லை. ஆனால் அமைச்சர்களையும், உயர் அதிகாரிகளையும் ஒரே நாளில் சந்தித்ததாக வெளிநாடுகளில் இயங்கி வரும் இணையத்தளங்களுக்குத் தகவல் கொடுத்துவிட்டுப் புறப்பட்டனர். உண்மையில் இவர்களை இந்தியா அழைத்திருந்தால், அப்படி இவர்கள் சந்தித்திருந்தால் டெல்கியிலேயெ பத்திரிகையாளர்களை அழைத்து பெரியதோர் பத்திரிகையாளர்கள்
மாநாடொன்றினை நடத்தி உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி தங்கள் நோக்கத்தை ஈழத் தமிழர்களுக்கு தெரியப்படுத்தியிருப்பார்கள். பதிலாக யாருக்கும் தெரியாமல் இரகசியமாகக் கிளம்பிவிட்டனர் விமானத்தில். எப்படியாவது இலங்கையில் தமிழர்களுக்கு செய்தி கிடைத்தால் போதும், இந்தியா எங்களை ஆதரிக்கிறது! பொன்சேகாவுடன் போட்ட ஒப்பந்தத்தை இந்தியா ஏற்றுக்கொண்டுவிட்டது! எனவே தமிழர்கள் எங்கள் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று தமிழர்களை ஏமாற்ற இந்திய விஜயம் அவர்களுக்கு உதவுகிறது.
எங்கள் இனத்தை மொத்தமாக அழிப்பதற்கு தலைமை ஏற்றுச் செயற்பட்ட அந்த இராணுவத் தலைவருக்கு வாக்களியுங்கள் என்று எங்கள் இனத்தைச் சேர்ந்த தலைவர்களே கோரிக்கை வைக்கும் கேவலமான ஓர் முன்னுதாரணம் உலகத்தில் எங்கும் நடைபெற்றதில்லை. இந்த வேண்டுகோளை எங்கள் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கணக்கிட்ட இவர்கள் இந்தியா எங்களை ஆதரிக்கிறது என்று எங்களின் மொத்த இனத்தையும் ஏமாற்ற முற்பட்டுள்ளனர்.
ஈழத்தில் வாழும் மக்கள் இந்தியாவை நம்புகின்றனர் இந்தியா ஆதரிக்குமானால்; இந்தியா அந்த ஒப்பந்தத்தினை நிறைவேற்றும் என்று மக்கள் நம்புகின்றனர். எனவேதான் இந்த ஏமாற்று வேலையை இவர்கள் துணிந்து செய்தனர். எம்.பி. பதவிகளும் சலுகைகளும் இவர்களை எப்படியெல்லாம் செயற்படத் தூண்டுகிறது என்பதை நாம் இதன் மூலம் கண்டு கொள்ளலாம். எப்படியாயினும் எம்.பி.க்கள் ஆகவேண்டும் என்று சிந்திக்கும் இவர்கள் மேலும் ஒரு லட்சம் தமிழர்களை சரத்பொன்சேகாவும் ராஜபக்சவும் படுகொலை செய்திருந்தாலும் கவலைபடாமல் தங்கள் பதவிகளை அடைய இந்த இரு கொலைகாரர்களையும் இவர்கள் நாடுவர் தங்கள் பதவிகளுக்காக!
கண்முன்னே எங்கள் மக்களை சிங்கள இராணுவமும் அரசியல்வாதிகளும் இணைந்து அழித்தனர், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தத் தலைவர்கள் யாராவது தங்கள் பதவிகளை இராஜினாமாச் செய்தார்களா? அப்போது கூட சிங்கள அரசின் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொண்டு உலகம் சுற்றிவந்தனர். இராஜினாமாச் செய்தால் தங்களுக்குக் கிடைக்கும் சம்பளமும் சலுகைகளும் இல்லாமல் போய்விடும் என்பதனால் ஒரு திருமகன் கூட தனது பதவியைத் துறக்கவில்லை, சூடு சொரணையற்ற தமிழ்த் தலைவர்கள்.
22 எம்.பி.க்கள் இருந்தும் எங்கள் மக்கள் அழிக்கப்பட்டார்கள். இவர்களால் எதையாவது செய்ய முடிந்ததா? புலிகளின் தலைவர் பிரபாகரன்தான் விடவில்லை என்று கூறுவது முற்றிலும் தவறானது. இவர்களது கையாலாகத் தனத்தை சுலபமாக விடுதலைப் புலிகளின் தலையில் போட்டனர் இந்த மூன்று முக்கியஸ்தர்களும்.
இப்போது மீண்டும் அடுத்தத் தேர்தலில் போட்டியிட்டு பதவிகள் அடைய திட்டமிடுகின்றனர். இந்தியா எங்களுடன்தான் இருக்கிறது ஆதலால் தமிழ் மக்கள் பயப்படத் தேவையில்லை என்ற பொய்த் தோற்றத்தினை ஏற்படுத்தி அரசியல் தந்திரம் செய்கின்றனராம் பெருந்தலைவர்கள்!
சரத்பொன்சேகா பதவியைப் பிடித்தால் அவரது ஆலோசகர், செயலாளர், பாதுகாப்புச் செயலாளர் என்று அத்தனை பேரையும் தனது பழைய நண்பர்களான இராணுவத் தலைவர்களைத்தான் நியமிப்பார். அருகில் இருக்கும் நாடு ஒன்றில் இராணுவத் தலைமை ஒன்று அந்த நாட்டை ஆட்சி செய்வதை இந்தியா வரவேற்காது. பாகிஸ்தானின் நீண்டகால அனுபவம் இந்தியாவுக்கு உண்டு. இலங்கைத் தேர்தலில் எந்த ஒரு நபரையும் இந்தியா ஆதரிக்கவில்லை என்பதுதான் உண்மையான நிலை. திரு. சம்பந்தன் அவர்களது குழுவினர் இப்போது காட்டியிருப்பது ஈழத் தமிழ் மக்களை ஏமாற்றும் வேலையே தவிர இந்தியா இவர்களை வலிந்து அழைக்கவும் இல்லை, ஆதரவு கொடுக்கவும் இல்லை.
திரு. சேனாதிராசா அவர்களது வாக்குமூலத்திலேயே அது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நிருபமாராவ் அவர்கள் நாங்கள் சொல்லியவற்றை செவிமடுத்துக் கேட்டார் என்பதுதான் அந்த வாக்குமூலம். இவர்கள் இதற்கு முன்னர் பலதடவைகள் அவரைப் பார்த்துள்ளனர். இவர்கள் சொல்வதை அவர்கள் கேட்பார்கள். அவ்வளவுதான்! இவர்களது செயற்பாட்டை இந்தியா ஏற்றுக்கொண்டதில்லை.
எனவே வருங்காலங்களிலாவது ஈழத் தமிழர்கள் விளித்திருப்பது அவசியம். ராஜபக்சேயோ பொன்சேகாவோ இருவரில் யார் ஆட்சிக்கு வந்தாலும் சிறையில் இருக்கும் அப்பாவிகளையும் இளைஞர்களையும் சுமார் இரண்டாயிரம் பேர்வரை உடனே விடுவிப்பார்கள். இதனைவைத்தே மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் வாக்குக் கேட்பார்கள். பார்த்தீர்களா நாங்கள் கேட்டவற்றை உடனே செய்துவிட்டனர், “அவ்வளவு நல்லவங்களா இருக்கிறாங்கள் பார்த்தீர்களா” என்று வாக்குக் கேட்டு மீண்டும் எம்.பி. பதவிகளை அடைவார்கள் எங்கள் பாராளுமன்றத் தலைவர்கள்.
1948ஆம் ஆண்டு முதல் 60 ஆண்டு காலம் தமிழர்களை ஏமாற்றிய சிங்களத் தலைவர்களையும் தமிழ்த் தலைவர்களையும் பார்த்தவர்கள் ஈழத் தமிழர்கள். 60 ஆண்டு காலம் முடியாத ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை திரு. சம்பந்தன் அவர்களின் குழுவினர் தமிழ் இனத்தை மொத்தமாக அழிக்க நினைத்த சரத் பொன்சேகாவுடன் கூட்டுச் சேர்ந்து ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்த்துவிடுவேன் என்று கூறுவது ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் உள்ளது.
என்ன பாவம் செய்தனரோ ஈழத் தமிழர்கள்! வீழ்ச்சியிலும் பதவி பெறத் துடிக்கும் தலைவர்களைப் பெற! “பதவி என்ற போதை இவர்களை எதுவும் செய்யத் தூண்டும்” தமிழர்களை தமிழர்களே ஏமாற்றும் கலை மெய்சிலிர்க்க வைக்கிறது.
“தீப்பொறி” க்காக பருத்திவேந்தன். 17-01-2010
-” தலைவர் வழியில் தானைத் தலைவர்களும் . மக்கள் மந்தைகள் ஆகாமல் இருந்தால் சரி”
T sothilingam
புலிகள் முதலில் சிங்களமக்கள் பின்னர் முஸ்லீம்களை தமிரின் எதிரிகளாக்கினர் பின்னர் தமே அந்த தீயில் விழுந்து முள்ளிவாய்க்காலில் தமிழரின் சுயமரியாதையும் இழந்து போக வைத்தனர். இவர்களுடன் கூட்டுச்சேர்ந்தும் புலிகளின் அழிவின் பின்னர் தமது சுகபோக பாராளுமன்றக் கதிரைகளுக்காக தமிழர்களுக்கு துரோகம் செய்கின்றனர் இந்த ரிஎன்ஏ யினர் இவர்களின் துரோகத்தால் இனிமேல் தமிழர்க்கு என்ற பலம் இல்லாமல் செய்யப்படுகிறது .இந்த தேர்தலில் மகிந்தா/சரத்தை மக்கள் ஆதரிப்பதன் மூலம் இனிமேல் ரிஎன் ஏயின் வாக்குகள் கூட யுஎன்பி, சுக வினர்க்கு பிரிந்துபோகும் என்பதையும் மறந்து செயற்படுகின்றனர்.